அத்தியாயம்- 2
தன் முன் நின்று இருந்தவரிடம் “உங்க முதலாளியை பார்க்கணும் சார்” என்று கேட்டுக் கொண்டு இருந்தாள் மெல்லிசை.
“ஏம்மா நானும் எத்தனை தடவை தான் சொல்றது. சாரை எல்லாம் இப்போ பார்க்க முடியாது. இங்க வேலையும் கிடையாதுனு. சொல்றதை கேட்க மாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி? சார் பார்த்தா என்னை தான் கத்துவாரு. முதல இங்க இருந்து கிளம்பு ம்மா” என்று அந்த நகை கடை மேலாளர் கூறி மெல்லிசையை வெளியே அனுப்ப முயன்றுக் கொண்டு இருந்தார்.
ஆனால் மெல்லிசையோ ஒரு அடி நகர்வேனா என்று பசை போட்டு ஒட்டி வைத்தது போல் தன் பாதங்கள் இரண்டையும் அப்படி இப்படி என்று நகற்றாமல் நின்று இருந்தவள் கெஞ்சும் குரலில்,
“சார் இங்க வந்தா வேலை கிடைக்கும்னு தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாரு சார். இதோ பாருங்க அவர் தான் இந்த லெட்டர் கூட கொடுத்தாரு. ப்ளீஸ் சார் என்னை ஒரே ஒரு முறை உங்க முதலாளியை பார்க்க விடுங்க. இல்லனா இந்த லெட்டராவது அவர் கிட்ட கொடுத்து என்ன சொல்றாருனு பாருங்க” என்று அழும் குரலில் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் மெல்லிசை.
“அட என்னம்மா உன் கிட்ட பெரும் ரோதனையா போச்சி” என்று திட்டியவருக்கே அவளை அப்படி பார்க்க பாவமாக இருக்க, சிறிது யோசித்தவர், “இங்க பாரும்மா காலையிலிருந்து கடை வாசல நிக்கிறனு ஹெல்ப் பண்றேன். ஆனா இப்போவே சொல்லிடுறேன் எங்க சாருக்கு இப்படி ரெக்கமெண்டேஷன்ல வேலை கேட்குறது எல்லாம் பிடிக்காது. இப்படி ரெக்கமெண்டேஷன்ல இருக்கிறவங்கள நாங்க உள்ள விட்டாவே சார் என்னை ஒரு காய்ச்சி காய்ச்சிடுவாரு. ஆனாலும் உன்னை பார்க்க ரொம்ப பாவமா இருக்கேனு இந்த லெட்டரை அவர் கிட்ட கொடுத்துட்டு வரேன். அவர் என்ன பதில் சொன்னாலும் அதை நீ ஏத்துக்கிட்டு இங்க இருந்து போயிடணும் சரியா?” என்று கேட்டவரை நோக்கி தன் இருக்கரத்தையும் குவித்து நன்றி சொன்னவள் விழிகள் கலங்க சரி என்று தலையை ஆட்டினாள்.
அவரும் சரி என்று மெல்லிசையை அங்கே இருக்கும் இருக்கையில் அமர வைத்து விட்டு அவள் கரத்திலிருந்த கடிதத்தை வாங்கிக் கொண்டு ஜீவானந்தம் அறையை நோக்கிச் செல்ல, அவள் நினைவோ பல வேதனையில் சுழன்றுக் கொண்டு இருந்தது.
காலையில் இந்த நகை கடை வாசலில் வந்து நின்றவளை நகை வாங்க வந்தவள் என்று அங்கே வரவேற்கும் இடத்தில் நின்று இருந்த அழகான பெண்மணி ஒருவர் நினைத்து இன்முகமாக வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று என்ன வேண்டும் என்று கேட்க,
“வேலை வேண்டும்” என்று பதில் சொன்னதை கேட்டு அப்பெண்ணின் உதட்டிலிருந்த புன்னகை சட்டென்று தடைப்பட புரியாத முகபாவனையோடு,
“நீங்க என்ன சொல்றீங்கனு புரியல மேடம். உங்களுக்கு என்ன மாதிரியான நகை வேண்டும் என்று கேட்டேன்” என்று மீண்டும் அப்பெண்மணி கேட்க,
கரகரப்பான குரலில் நிறுத்தி நிதானமாக “வேலை வேணும்னு நான் தெளிவாக தான் மேம் சொல்றேன்” என்றாள் மெல்லிசை.
அப்பொழுது தான் அவளை முழுமையாக ஆராய்ந்த வரவேற்பு பெண்மணி அங்கே பில் கவுண்டரில் நின்று இருந்தவரை நோக்கி,
“சார் இங்க வாங்க” என்று அழைத்தாள்.
அங்கே சக ஊழியரிடம் பேசிக் கொண்டு இருந்தவரோ அவர்களை நோக்கி வந்து “என்னம்மா” என்று வரவேற்பு பெண்ணை கேட்டவர் அப்பொழுது தான் அங்கே நின்று இருந்த மெல்லிசையை கண்டார்.
அவளை பார்த்ததுமே அவரின் புருவம் இடுங்க, “நீங்க லாஸ்ட் வீக் வந்த கஸ்டமர் தானே?” என்று யோசனையோடு அவர் கேட்க,
அவளும் ஆம் என்று தலையை ஆட்ட, “நல்லவேளைம்மா அதுக்கு அப்புறம் எங்க சார் நீங்க பண்ண பிரச்சனையை பத்தி பேசல. இல்லனா என் வேலையே போய் இருக்கும். ஆமா இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கீங்க நகை ஏதாவது பார்க்கணுமா?” என்று கேட்டார்.
அவளோ இல்லை என்று தலையை ஆட்டியவள் “உங்க முதலாளியை பார்க்கணும் சார். அவர் கிட்ட வேலை விசியமா பேசணும்” என்று மெலிந்த குரலில் சொன்னாள்.
அவரோ அவளை ஒரு மாதிரி பார்த்து, “இல்ல புரியல. நாங்க இப்போ வேலைக்கு யாரையும் எடுக்குறதா இல்லையே மேடம். எந்த ஒரு அட்வடைஸ்மெண்ட்டும் கொடுக்கலையே” என்று யோசனையாக சொல்ல,
“இல்ல சார் நான் ஒருத்தர் மூலமா இங்க வேலைக்கு சேர வந்து இருக்கேன்” என்று தன் கரத்திலிருந்த கடிதத்தை உயர்த்தி காட்டினாள்.
அவரோ அதை வாங்கி கூட படிக்காமல் ஏதோ காமெடி கேட்டது போல் சிரித்துக் கொண்டு “ரெக்கமெண்டேஷன்ல வேலையா? சும்மா காமெடி பண்ணாதீங்க மேடம். எங்க சாருக்கு இப்படி ரெக்கமண்டேஷன்ல வேலைக்கு வரவங்களை பார்த்தாவே பிடிக்காது. அவங்களை இந்த கடை வாசலை கூட மிதிக்க விட மாட்டாரு. அப்படி இருக்க நீங்க யாரோ கொடுத்தாங்கனு லெட்டர் எல்லாம் வாங்கிட்டு வேலைக் கேட்டு வந்து இருக்கீங்க. அது மட்டும் இல்ல மேடம் இங்கே இப்போ வேகன்சியும் இல்ல. அதனால உங்க டைமை வேஸ்ட் பண்ணாம போய் வேற வேலையை பாருங்க” என்று கூறிவிட்டு அவர் மற்ற வேலைகளை பார்க்கச் சென்று விட,
மெல்லிசைக்கு தான் இதை கேட்டு அதிர்ச்சியாகி போனது.
‘சிபாரிசுல வேலைக்கு எடுத்துக்க மாட்டாரா? அப்போ எதுக்காக அவரு அப்படி சொன்னாரு. என் பேரை சொன்னாவே உனக்கு தேவையான உதவியை அவன் செய்வான். இல்லனா இந்த லெட்டரை அவன் கிட்ட கொடுனு சொன்னாரே. ஆனா இங்க வந்தா எல்லாம் வேற மாதிரி சொல்றாங்களே’ என்று தன் யோசனையிலே நின்று இருந்தவளுக்கு கடைசி நம்பிக்கையும் கை நழுவி போனது போல் ஆகி விட்டது.
தளர்ந்து போய் நின்றவள் அங்கே இருந்து நகர போக, அப்பொழுது அவளை தாண்டி ஓடிச் சென்ற ஒரு குட்டியை நோக்கி “ஏய் லட்டு குட்டி எங்கே ஓடுறீங்க. அம்மா கிட்ட வாங்க அந்த ரூம் பக்கம் போனா இருட்டா இருக்கும். அப்புறம் பாப்பா பயந்துடுவீங்க தானே” என்று தன் ஐந்து வயது பெண் பிள்ளையை தூக்கி கொஞ்சியதை பார்த்த மெல்லிசை அப்படியே நிற்க,
அப்பிள்ளையோ “அம்மா இருட்டா இருந்தா கேண்டில் ஏத்திப்பேன். அப்போ பாப்பா பயப்பட மாட்டேன்ல” என்று தாயிக்கு சரி சமமாக பேச, “வாலு பொண்ணு” என்று தன் பிள்ளையோடு அங்கே இருந்து விலகிச் சென்றவர்களை அப்படியே நின்றபடி பார்த்துக் கொண்டு இருந்தாள் மெல்லிசை.
அவள் எண்ணங்களோ காலையில் தினதேதியை கிழித்த போது ‘இருளை நினைப்பதை விட்டு, மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்’ என்று இருந்த பழமொழி படித்தது நினைவு வர,
மனமோ ‘அதானே போகுற இடம் எல்லாம் இருளா இருக்குனு அப்படியே திரும்பி வந்துட்டா, விடியலை நோக்கி எப்படி போறது மெல்லிசை. யாரை பார்க்க வந்தமோ அவரை நேருக்கு நேர் பார்த்து பேசாம போனா எப்படி? என்ன நடந்தாலும் சரி அவரை பார்த்து பேசிடணும். நமக்கு இதை விட்டாலும் இப்போ வேற வழி இல்ல’ என்று முடிவு செய்தவள் அங்கேயே நின்று விட்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் நின்று இருந்தவளுக்கு மனதில் இருக்கும் அழுத்தத்தால் கால் வலி கூட பெரியதாக தெரியவில்லை அவளுக்கு. பில் போடுபவரோ அவள் இப்போ போய் விடுவாள் அப்போ போய் விடுவாள் என்று நினைத்தவருக்கே வியப்பு தான். இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் அப்படியே சிலை போல் நின்று இருந்தவளை கண்டு.
பின் மெல்லிசையை பார்க்க பாவமாக இருக்க, மேலாளருக்கு அழைத்து விஷயத்தை கூற, அந்த பக்கம் இருந்தவரோ,
“இடியட் அறிவு இல்ல. இதை டூ ஹவர்ஸ் கழிச்சி தான் சொல்லுவியா. நல்லவேளை இன்னிக்கு சார் லேட்டா வருவேனு சொன்னாரு. இல்லனா இந்நேரம் உன் கூட சேர்ந்து பொறுப்பு இல்லனு என் வேலையும் போய் இருக்கும்” என்று திட்டியவர் “அந்த பொண்ணை அழைச்சிட்டு என் கேபினுக்கு வா” என்று அழைப்பை வைத்தார்.
அவரும் திட்டு வாங்கிய கடுப்பில் “ச்சே பாவமேனு பார்த்தா இவளால நான் திட்டு வாங்கிட்டேன்” என்று புலம்பியவர் அடுத்த பில் கவுண்டரில் இருந்த நபரை அழைத்து “இங்கேயும் கொஞ்சம் நேரம் பார்த்துக்கோடா வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு மெல்லிசையிடம் மேனேஜர் அழைப்பதாக சொல்லி அவளை அந்த கடையின் மேலாளர் அறைக்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே வந்தவளை பார்த்து விட்டு உடன் வந்தவனை போக சொல்லியவர் “உள்ளே வாங்கம்மா என்ன வேணும் உங்களுக்கு. எதுக்காக இரண்டு மணி நேரம் ஒரே இடத்துல நின்னுட்டு இருந்தீங்க?” என்று கேட்டார்.
மெல்லிசையோ தன் கையிலிருந்த கடிதத்தை காட்டி உங்க முதலாளியை காண வேண்டும் என்று சொல்ல,
“இல்லம்மா இப்படி எல்லாம் நினைச்ச நேரத்துக்கு அவரை பார்க்க முடியாது. அது மட்டுமில்லை நாங்க வேலைக்கு இப்போ ஆளையும் எடுக்கல” என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் மெல்லிசை பிடிவாதமாக அங்கேயே நிற்க, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் தான் இனி எதுவாக இருந்தாலும் தங்கள் முதலாளியே பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்து மெல்லிசையின் கரத்திலிருந்த கடிதத்தை வாங்கிக் கொண்டுச் சென்றார்.
ஜீவானந்தமோ அப்பொழுது தான் கடைக்கு வந்து இருக்க, அவன் அறைக் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவருக்கு சங்கடமாகி போய் விட்டது.
அங்கே ஜீவானந்தம் மடியில் மோனிகா அமர்ந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டு இருக்க ஜீவானந்தமோ அவள் இருப்பக்க தோள்களை பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சியை கண்டு சங்கடப்பட்டவர்,
“மன்னிச்சிடுங்க சார்” என்று மீண்டும் வெளியேற போனவரை தடுத்த ஜீவானந்தம் வலுக்கட்டாயமாக தன் மடியில் அமர்ந்து இருந்த மோனிகாவை எழுப்பி தள்ளி நிறுத்தியவன்,
“நீ கிளம்புறீயா மோனிகா. எனக்கு வேலை இருக்கு” என்று பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.
மோனிகாவோ அங்கே நின்று இருந்த மேலாளரை கண்டு முறைத்து விட்டு “ஈவினிங் ஒரு நல்ல முடிவா சொல்லுவனு நினைக்கிறேன் ஜீவா” என்று கூறிவிட்டு மேலாளரை முறைத்துக் கொண்டே அங்கே இருந்து வெளியேறி இருந்தாள்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த மிகப் பெரிய மாளிகை போன்ற இல்லத்தின் முன் வாசலில் மாலையும் கழுத்துமாக, புதிய மஞ்சள் கயிறு கழுத்தில் தொங்க வந்து நின்ற ஜீவானந்தம் மற்றும் அவனின் மனைவி மெல்லிசையை கண்டு மோனிகா மட்டும் அல்லாமல் அவ்வீட்டினர் அனைவரும் புயல் தாக்கியது போல் மிகப் பெரிய அதிர்ச்சியில் நின்று இருந்தார்கள்.
