அத்தியாயம்- 3
“என்ன ஜீவா இதெல்லாம்? யாருடா இந்த பொண்ணு?” என்று ஆதங்கமாக கேட்டார் ஜீவானந்தத்தின் தாய் பூங்கோதை.
“அம்மா இப்படி தான் புதுசா கல்யாணம் ஆகி வந்தவங்களை வெளியவே நிக்க வச்சு கேள்வி கேட்பீங்களா? ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சி போய் பால் பழம் எல்லாம் தர மாட்டீங்களா?” என்று கேட்டவனை அங்கே அதிர்ச்சியில் நிற்கும் அனைவரும் கடுப்புடனும் இவன் என்ன பைத்தியமா என்பது போல் அவனை பார்க்க,
மெல்லிசையோ இந்த ரணகளத்திலும் இது எல்லாம் தேவையா என்பது போல் பார்த்து வைத்தாள்.
ஜீவானந்தமோ தன்னை திரும்பி பார்த்த மெல்லிசையை நோக்கி “பின்ன வேணாமா? அப்புறம் ஒரு நாள் தாலி கட்டிக்கிட்டு வந்தப்ப நம்மளை ஆரத்தி கூட சுத்தி அழைச்சிட்டு போகலையேனு நீ ஃபீல் பண்ண கூடாதுல” என்று கண் சிமிட்டி சொன்னவனை நோக்கி,
“நான் ஏன் ஃபீல் பண்ண போறேன்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் மெல்லிசை.
அங்கே நின்று இருந்தவர்களோ ‘இவனுக்கு இப்படி எல்லாம் பேச வருமா?’ என்று வாயை பிளக்க,
அவனோ குரலை செறுமிக் கொண்டு “அம்மா போய் ஆரத்தி எடுத்து வாங்க” என்று பிடிவாதமாக அதிலே இருக்க,
“ஜீவா இதெல்லாம்” என்று ஆரம்பித்த மோனிகாவை நோக்கி,
“மோனி நீ தானே ஈவினிங்க்குள்ள ஒரு முடிவு சொல்ல சொன்ன. அதுக்கு எதுக்கு ஈவினிங் வரை வெயிட் பண்ணிட்டு. அதான் அடுத்த இரண்டே மணி நேரத்துல உனக்கான பதில் மட்டும் இல்ல. இங்க இருக்கிற எல்லாருக்குமான விடையை… எப்படி” என்று அங்கே சுற்றி நின்று இருந்தவர்களை பார்வையாலே காட்டியவன் “விடை” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் எப்பொழுது விழி நீர் கீழே விழும் என்று பதற்றத்துடன் அமைதியாக நின்று இருந்த மெல்லிசையின் தோளை சுற்றி கரத்தை போட்டு அணைத்து “இது தான் என் முடிவு போதுமா?” என்று அதே அழுத்தத்துடன் கூறினான்.
அதை கேட்ட மோனிகாவோ “யூ சீட்டர்” என்று கத்தியவள் அங்கே பதைபதைபுடன் நின்று இருந்த தன் உடன் பிறந்த சகோதரி சங்கீதாவை பார்த்து விட்டு கோபமாக உள்ளே செல்ல, அவளின் கோபத்தை கண்டு சிறிது பயந்த சங்கீதாவோ “ஏய் மோனி நில்லுடி” என்று தங்கையின் பின்னால் ஓடினாள்.
“ஜீவா என்னப்பா இதெல்லாம்?” என்று அவன் தந்தை கோவிந்தராஜ் காட்டமாக கேட்டார்.
ஆனால் அவர் பிள்ளையோ “டாட் நீங்களுமா?” என்று சலித்துக் கொண்டவன் தன் அன்னையை பார்த்தான்.
அவன் பார்வையிலே என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தவர் என்ன பேசுவது என்று தெரியாமல் திரும்பி அவர் கணவரை பார்த்தார்.
அவரோ மகனையும் மகனின் அணைப்பில் அமைதியாக நின்று இருந்த அந்த வீட்டின் புதிய மருமகளையும் பார்த்து விட்டு தன் மனைவிக்கு கண்சாடை காட்டினார்.
அவரும் சரி என்பது போல் தலையை ஆட்டி விட்டு உள்ளே சென்று அடுத்த மூன்றே நிமிடத்தில் ஆரத்தியை கரைத்து எடுத்து வந்தவர் மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தியை எடுத்தார்.
பின் அங்கே வேலை செய்யும் பணிப்பெண்ணிடம் ஆரத்தி தட்டை கொடுத்து விட்டு இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.
தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்த மெல்லிசைக்கோ மேலும் அதிர்ச்சி.
அவ்வீடே சினிமா செட்டில் வரும் அரண்மனை போல் ஜொலிக்க, அதை கண்டு வாயை பிளந்தவள் திரும்பி ஜீவானந்தத்தை பார்த்தாள்.
அவனோ என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த, “இது நிஜமா உங்க வீடு தானா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
“ஏன் உனக்கு இந்த சந்தேகம்?” என்று கேட்டான் ஜீவானந்தம்.
“இல்ல இவ்வளவு பெரிய பணக்காரரா இருந்துட்டு உங்க கிட்ட உதவி கேட்டு வந்தவளை கல்யாணம் பண்ணி அழைச்சி வந்து இருக்கீங்களே அதான்” என்று அவள் இழுக்க,
“ஏன்னா எனக்கு என்னோட லட்சியத்தை அடைய யாரும் தடையா இருக்க கூடாது. அது மனைவியாக இருந்தாலும்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவன் “அம்மா” என்று அழைத்தான்.
அவன் எதற்காக அழைக்கிறான் என்று புரிந்த பூங்கோதை “வாம்மா வந்து பூஜை அறையில விளக்கு ஏத்து” என்று அவளை அழைக்க, அவளோ ஜீவானந்தத்தை பார்த்தாள்.
“போ” என்று அவளை முன்னே தள்ள, தயங்கிக் கொண்டே பூங்கோதை அருகில் வந்தவள் அங்கே ஒரு மினி கோவில் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு இருந்த பூஜை அறையை கண்டு தயக்கத்துடனே நின்று விட்டாள்.
தயங்கியவளின் கரத்தை பிடித்த பூங்கோதை “வாம்மா” என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவர் அவளை விளக்கேற்றி நன்றாக கடவுளை வணங்கிக்க சொன்னார்.
மெல்லிசையும் அதன் படி செய்ய, அவளை உரசிக் கொண்டு வந்து நின்றான் ஜீவானந்தம்.
அவனின் திடீர் உரசலில் பதறி பட்டென்று விழி திறந்து ஜீவாவை காண, அவனோ ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டான்.
அவள் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்ட, அப்பொழுது அவர்கள் முன் பூங்கோதை பூஜை தட்டை நீட்டியவர் “குங்குமத்தை எடுத்து உன் பொண்டாட்டிக்கு வைச்சு விடுடா” என்றார்.
அதை கேட்டு சட்டென்று ஜீவாவை அவள் திரும்பி சிறு அதிர்வுடன் காண, அவனோ எந்த ஒரு பதற்றமும் இன்றி “சரிம்மா” என்றவன் குங்குமத்தை எடுத்து மங்கையவளின் நெற்றி வகிட்டில் வைத்தவன் குங்கும துகள் அவள் விழிகளில் விழுந்து விடுமோ என்று எண்ணி அதை ஊதி வேறு விட்டான்.
அதை பார்த்த பூங்கோதை “வகுட்டுல வைக்குற குங்குமத்தை யாராவது ஊதி விடுவாங்களாடா?” என்று மகன் தோளில் அவர் தட்ட,
“கண்ணுல விழுந்தா எரியும்லம்மா” என்றான் ஜீவானந்தம்.
அங்கே மெல்லிசையின் இதயம் எரிந்துக் கொண்டு இருப்பது தெரியாமல்.
“அது நெற்றில விபூதி வச்சா தான்” என்று அவர் பேச வர,
“எதுவா இருந்தா என்ன? எங்க வச்சா என்ன? என் பொண்டாட்டிக்கு நான் ஊதி விடுறேன்” என்று பேச ஆரம்பித்தவனை “ஜீவா” தடுத்தார் கோவிந்தராஜ்.
“சொல்லுங்க டாட்” என்று ஜீவானந்தம் கேட்டுக் கொண்டே மெல்லிசையின் கரத்தை பிடித்து இழுக்காத குறையாக இழுத்தபடி அவர் அருகில் வந்தவன் “சொல்லுங்கப்பா” என்றான்.
“புது மருமகளை கீழே இருக்கிற ரூம்ல தங்க வை. அப்பா வந்ததும் என்ன ஏதுனு பேசி ஒரு முடிவு பண்ணுவோம்” என்று கோவிந்தராஜ் சொல்ல,
“இவள் ஒன்னும் கெஸ்ட் இல்லப்பா” என்று ஜீவா கூற வர,
“எனக்கும் தெரியுதுப்பா. உன்னோட மனைவினு. ஆனா அப்பாகிட்ட எதுவும் கலந்துக்காம நம்மளால எந்த முடிவுமே எடுக்க முடியாது” என்றவர் “கோதை அழைச்சிட்டு போ” என்றார்.
பூங்கோதையோ கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர் போல் “சரிங்க” என்று மெல்லிசை அருகில் வந்தவர் “வாம்மா” என்று அவளின் இடக்கரத்தை பிடித்து இழுக்க, வலக்கரமோ ஜீவாந்தத்தின் இடக்கரத்தில் பின்னிக் கொண்டு இருந்தது.
பின்னி பிணைந்து இருந்த கரத்தை பார்த்த மெல்லிசை அவன் கரத்திலிருந்து தன் கரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு பூங்கோதையுடன் தலையை குனிந்தபடி அவர் பாதச்சுவட்டை பின்தொடர்ந்தாள்.
போகும் அவளையே பார்த்தபடி நின்று இருந்த ஜீவானந்தத்திடம் “என் ரூமுக்கு வா” என்று சொல்லிவிட்டு கோவிந்தராஜ் செல்ல, கழுத்திலிருந்த மாலையை கழட்டி அங்கே நின்று இருந்த பணியாளிடம் கொடுத்து “என் ரூம்ல வச்சிடுங்க” என்று கூறிவிட்டு “சின்னம்மாவுக்கு ஜூஸ் போட்டு கொடுங்க” என்று சொல்லி விட்டு தந்தையின் அறையை நோக்கிச் சென்றான்.
பணிப்பெண்ணோ அவர்களின் சின்ன முதலாளி சொன்ன கட்டளையை நிறைவேற்ற பழச்சாறை போட ஆரம்பித்தார்.
தந்தையின் அறைக்குள் நுழைந்த ஜீவானந்தம் “என்னை மன்னிச்சிடுங்கப்பா. எனக்கு வேற வழி தெரியல” என்று உள்ளே நுழைந்ததும் அவன் மன்னிப்பு கேட்க,
“சோ இந்த வீட்டோட அடுத்த வாரிசா பதவி ஏத்துக்க அவசர அவசரமா யாருன்னே தெரியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற ரைட்?” என்று கேட்ட தந்தையிடம்,
இல்லை என்பது போல் தலையை ஆட்டியவன் “முதல சொன்னது சரி. பட் இரண்டாவதா சொன்னது தப்பு. யாருனு தெரியாத ஒருத்தி கழுத்து தாலி கட்ட உங்க பையன் ஒன்னும் முட்டாள் இல்லை” என்றான்.
மகனை ஆழமாக பார்த்த கோவிந்தராஜ்,
“யாருடா அந்த பொண்ணு?” என்று அழுத்தமாக கேட்டார்.
“மெல்லிசை” என்று மென்மையாக இவன் சொல்ல, மகனின் குரலில் தெரிந்த வித்தியாசத்தை உணர்ந்தவர்,
“எந்த ஊரு?” என்றார்.
“நம்ம ஊரு தான்”
“ஓ” என்றவர் “ஆளுங்க?” என்றார் அடுத்து.
“ஏன் தெரிஞ்சா தான் இந்த வீட்டு மருமகளா ஏத்துப்பீங்களா?” என்று தந்தையை புருவம் இடுங்க ஜீவா கேட்க,
“இங்க நான் ஏத்துக்குறதுல எதுவுமில்லை ஜீவா. உங்க தாத்தா அதான் என் அப்பா இந்த சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி அவர் ஏத்துக்கணும். அது தான் முக்கியம்” என்றார் கோபமாக.
“அதெல்லாம் தாத்தா ஏத்துப்பாரு. அவருக்கு மெல்லிசையை பிடிக்கும்” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போது,
“பிடிக்கிறது முக்கியம் இல்ல ஜீவா. இந்த குடும்பத்தோட அடுத்த வாரிசு மருமகளா உங்க தாத்தா அந்த பொண்ணை ஏத்துக்கணும். அது தான் முக்கியம்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் பூங்கோதை.
“கண்டிப்பா ஏத்துப்பாரும்மா” என்று நம்பிக்கையுடன் சொல்ல,
“எனக்கு என்னவோ அப்படி தோனல ஜீவா. இந்நேரம் விஷயம் உங்க தாத்தா காதுக்கு போய் சேர்ந்து இருக்கும்” என்று இங்கே இவர்கள் பேசிக் கொண்டு இருந்த அதே சமயம்,
பூங்கோதை சொன்னது போல் சக்ரா நகைமாளிகை (ஜீவல்லர்ஸ்) சாம்ராஜ்ஜியத்தின் அரசரான சக்கரவர்த்தி என்று அனைவராலும் அழைக்கப்படும் தயாளன் சக்கரவர்த்தி செவிகளில் இச்செய்தி சென்று அடைந்து இருந்தது.
