மறுநாள் காலையில் ஹாஸ்பிடலில் சூரியக் கதிர்களின் தீண்டலில் ஆஷிக் கண்விழிக்க, அவன் எதிரே இருந்த ஆதர்ஷ் முகத்தில் புன்னகை தளும்ப,
“குட் மார்னிங்டா.” என்று கூற,
“கு… ட்… மார்… னிங்.” என்று இழுத்தவாறு சோம்பலை முறித்து நிமிர்ந்து உட்கார்ந்தான் ஆஷிக்.
“சீக்கிரமா கண்முழிச்சுட்ட, பரவாயில்லையே?” என்று தன் கை கடிகாரத்தைப் பார்த்த ஆதர்ஷிடம், ஆஷிக் குறும்பு பார்வை தொனிக்க,
“என்னடா பண்றது, சூரியன் டார்லிங் என்னைக் கி… ஸ் பண்ணிடுச்சு.” என்று இதழோரம் புன்னகைத்தவனைக் கண்டு,
“மச்சான் சுள்ளுன்னு அடிக்கிற வெயிலை கூட இப்படி ரொமான்டிக்கா சொல்ல உன்னால தான்டா முடியும்.”
“நான் யாரு?”
“சரிங்க காதல் ரோமியோ, இப்போ எல்லாம் என்கிட்ட நிறைய விஷயத்தை மறைக்கிற போல?”
“நான் என்னை மறைக்கிறேன்?”
“ஜியாவுக்கும் உனக்கும் எல்லாம் சரியாகிட்டு போல?”
“என்னடா சொல்ற?”
“நடிக்காதடா.”
“சத்தியமா புரியல.”
“அவளுக்கு ஒன்னுனா நீ துடிக்கிற, ஜியாவும் உனக்கு ஒன்னுனா துடிக்கிறா. ராத்திரி முழுக்கத் தூங்காம உன்னையே பார்த்துக்கிட்டா, இதுக்கு என்ன அர்த்தம்?”
“என்ன சொல்ற? ராத்திரி தியா தான என்கூட இங்க தங்க போறதா நீ சொன்ன?”
“நீ வேற… நான் வரும் போது அவ நல்லா இந்த சோஃபால படுத்து போர்வைய போத்திகிட்டு தூங்கிட்டு இருந்தா. நான் வந்தது கூட மேடம்குத் தெரியாது. அப்போ ஜியாதான் உன் பக்கத்துலயே தூங்காம இருந்தா.”
“டேய் நீ வரும் பொழுது தானே அவளைப் பார்த்த, அப்போ எதேர்ச்சையா வந்திருப்பா. நாள் பூராவும் என்கூடச் சான்ஸே இல்லை. அவளுக்கு நான் வேண்டாம்டா, அப்படி இருக்கும் பொழுது எப்படி அவ எனக்காகத் தூங்காம இருந்திருப்பா?”
“இல்லை”
“எப்படி உறுதியா சொல்ற, ஜியாதான் என் கூட இருந்தான்னு?”
“எனக்கு ஜியாவையும் தெரியும், தியாவையும் தெரியும் அதான். சரி உனக்கும் ஜியாவுக்கும் எல்லாம் சரியாகிட்டா? அவ மேல உள்ள கோபம் எல்லாம் உனக்குப் போய்ட்டா? இல்லையா? ஜியா விஷயத்துல நீ என்ன முடிவு எடுக்கப்போற?”
“கோபமா… நானா… எதுக்குடா? எந்த விஷயத்துக்காக நான் கோபப்பட? எதுக்கு எல்லாம் நான் கோபப்பட? என்னை விட்டு போய் என் மனசை உடைச்சதுக்காகவா, இல்லை இப்போ மறுபடி வந்து என்னை உயிரோடு கொலை பண்ணிட்டு இருக்காளே அதுக்காகவா?”
“என்னடா சொல்ற?”
“ஆதர்ஷ், எனக்கு அவ மேல கோபம் இருந்தது உண்மைதான். ஆனா எப்போ அவளைப் பார்த்தேனோ ஒவ்வொரு நாளும் மறுபடியும் நாங்க சேர மாட்டோமானுதான் ஆசைப்படுறேன். எங்க ரெண்டு பேருக்கும் இடையில உள்ள பிரச்சனைய நான் சரி பண்ண முயற்சி பண்றேன். ஆனா, அவ என்னைத் துரோகி துரோகினு காயப்படுத்துறா. அவகிட்ட என்னைப் பத்தின உண்மையைச் சொல்லணும்னு எனக்குத் தோனலை. இதுக்காக ஏன் என்னைத் துரோகினு சொல்லி கஷ்டபடுத்துறானு தெரியலை.
எனக்கு என் அப்பாவை புடிக்காது, அதனால நான் அவகிட்ட அவரைப் பத்தி எதுவும் சொல்லல. வேணும்னே எதையும் மறைக்கலை. என் அப்பா எப்படி என்கிற விஷயத்தை வச்சுதான் அவ என்னை லவ் பண்ணுவாளா என்ன? இதுக்காக ஏன் என்னை துரோகினு சொல்றா? நியாயப்படி நான்தான் அவகிட்ட கோபப்படணும், ஆனா நான் கோபப்பட்டுச் சண்டை போட்டா எங்க மறுபடியும் என்னை விட்டுட்டு போயிருவாளோனு, பழசை எல்லாம் மறந்துட்டு அவகிட்ட நெருங்கி போனா, அவ என்னைக் காயப்படுத்திட்டே இருக்கா.” என்று கூறும் பொழுதே அவன் தொண்டைக்குழி அடைத்துக்கொள்ள, பெருகி வரும் கண்ணீரை வெளியிடாமல் அடைக்கிக்கொண்டு இறுக்கமாக அமர்ந்திருந்தான்.
நண்பனின் வலி புரியாமல் இல்லை, ஆனால் இதை விட நல்ல சந்தர்ப்பம் இனிமேல் அமையுமா என்று எண்ணினான் போல… தன் மனதில் உள்ளதை, “இப்போ உனக்கு அவ மேல கோபம் இல்லை?” கேட்டுவிட்ட ஆதர்ஷ் பதிலை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்க, நொடிகள் கழிய கழிய முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்தவனாய் ஆஷிக் தன் கண்களை இறுக்க மூடிக்கொள்ள, அதுவரைக்கும் அடங்கியிருந்த கண்ணீர் கண்களின் ஓரமாய் எட்டிப்பார்க்க, பெருமூச்சு விட்டவனாய் கண்ணீர் இமையின் விளிம்பைத் தொடும் பொழுதே, தன் விரலில் ஏந்தியவன் அசட்டு சிரிப்போடு அதைப் பார்த்து பெரு விரலால் சுண்டிவிட்டு,
“அவ மேலதான் எனக்கு கோ… பமே… வராதே…” என்றவனின் கண்முன் ஜியாவின் முகம் மின்னலை போல வெட்டி மறைய, இதழோரம் புன்சிரிப்பு வந்து ஒட்டிக்கொள்ள ஆதர்ஷைக் கண்ணோடு கண்பார்த்து,
“கண்ணை உருட்டி ஒரு பார்வை பார்ப்பா பாரேன்… மனசுல எவ்வளவு பாரம் இருந்தாலும் சட்டுனு மறைஞ்சி போயிரும். அப்புறம் எங்க கோபப்பட முடியும்? எங்க கண்ணை மூடினா, மறைஞ்சி போயிருவாளோனு இமை தட்டாம பார்த்துட்டு இருப்பேன்.
இந்த ஜென்மத்துல என்னால அவகிட்ட கோபப்பட முடியாது, அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால் அப்பவும் இப்படியே அவளை நான் உருக உருக காதலிக்கணும். அவ என்னை அலைய விடணும். அவ என்னை விட்டு விலகி விலகி போகும் பொழுது கஷ்டமாதான் இருக்கு, ஆனா எப்பவாவது அவளே என்னை நெருங்கிவருவா பாரேன், கொஞ்ச நேரம்தான் நெருங்கி இருப்பா, ஆனா அந்தக் கொஞ்ச நேரமும் எனக்குச் சொர்கம் தான்டா. அவ்வளவு லவ் எனக்குக் குடுப்பா, கொஞ்சம் கூடத் தெகட்டாது.”
“அப்புறம் என்னடா, ஏன் இன்னும் வெயிட் பண்ணிக்கிட்டு… நானே அவகிட்ட கேட்கிறேன்.”
“வேண்டாம்டா.”
“ஏன்டா?”
“அவளே வருவாடா, என் பக்கத்துல உள்ள நியாயத்தைப் புரிஞ்சிகிட்டு…” என்று கண்களில் நம்பிக்கை தொனிக்க ஆஷிக் ஆதர்ஷிடம் கூறிய மறுநொடி,
‘ஆமா நான் உனக்குத் தான்டா, எங்க போகப் போறேன்? உன்னைத் தேடி வருவேன்.’ என்பது போல ஜியா கதவைத் திறந்து கொண்டு வந்தாள்.
ஆஷிக் புன்னகை தளும்ப அவளையேப் பார்க்க, ஆனால் ஜியாவோ அவனை எட்டிக்கூடப் பார்க்காது உள்ளே வந்தாள்.
ஆஷிக்கை செக் செய்து, “ஹீ இஸ் கம்ப்ளீட்லி ஓகே. ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு நீங்க கிளம்பலாம், ஆனா ட்ரெஸ்ஸிங் கரெக்ட்டா பண்ணிடணும். மறுபடியும் இன்ஃபெக்சன் ஆகாம பார்த்துக்கோங்க.” என்று ஆதர்ஷிடம் கூறிக்கொண்டிருந்த நேரம் பார்த்து ஆதர்ஷிற்கு ஆஷிக்கின் வீட்டில் இருந்து கால் வர ஆஷிக்கிடம், “அம்மா பேசுறாங்கடா.” என்று ஃபோனை கொடுக்க,
“ஹலோ ம்மா!”
“டேய் என்னடா, உன் ஃபோன் என்னாச்சு? எவ்ளோ நேரம் ட்ரை பண்ணினேன் தெரியுமா, லைன் போகவே இல்லை.” என்று கூற, கோபத்தில் முன்தினம் இரவு, தான் அலைபேசியைத் தூக்கி எறிந்தது நினைவிற்கு வர ஜியாவைப் பார்த்தவாறு,
“அது உடைஞ்சி போச்சுமா.”
“எப்படிடா?”
“கை தவறி…”
“டேய் எதுவும் என்கிட்ட மறைக்கலையே? பிரச்சனை எதுவும் இல்லையே?” என்று ஹாஜரா கேட்க,
சலிப்புடன் “மா காலையிலே ஃபோன் பண்ணி என்கிட்ட குய்ஸ் கம்பெட்டிஷன் நடத்துறீங்களா என்ன? விளையாடுற மூட்ல நான் இல்லை, ஃபோன் உடைஞ்சி போச்சு ஓகே.”
“டேய் எப்போடா கிளம்புறீங்க?”
“வெள்ளிக்கிழமை நைட்மா.”
“சரி, வரும் போது ஜியாவையும் கூட்டிட்டு வா.”
“ஜியாவா?” என்றதும், ஜியா தன் புருவம் உயர்த்தி என்ன என்பதைப் போலப் பார்க்க,
“அவ உன்கூடத் தான வேலை செய்றா, ஆயிஷா சொன்னா. உனக்கு ஜியா தெரியும்ல, ஆயிஷா ஃப்ரண்டு. நம்ம வீட்டுக்கெல்லாம் கூட வருவாளேடா, உன்கிட்ட டவுட் கேட்க.” என்று வெகுளியாக ஹாஜரா கூறியதும் ஆஷிக்கிற்குச் சிரிப்பு வர, அதைக் கட்டுப்படுத்திக்கொண்டவன்,
“ஆமா தெரியும்.”
“ஆயிஷா சொல்ல சொன்னா, அவளையும் நீ வரும்போதே கூட்டிட்டு வந்திரு.”
“நான் கூப்பிட்டா வர மாட்டா, பக்கத்துலதான் இருக்கா, ஸ்பீக்கர்ல போடுறேன் நீங்களே சொல்லுங்க.” என்று ஸ்பீக்கரில் போட,
ஹாஜரா ஜியாவிடம், “ஜியா!”
“மா எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்க?”
“நல்லா இருக்கேன்மா.”
“ஆயிஷா என்கேஜ்மென்ட்க்கு கண்டிப்பா வந்திரு.”
“சரிமா.”
“ஆஷிக் கூடவே வந்திரு சரியா?”
“அது வந்துமா… ஞாயிற்றுக் கிழமை தானே என்கேஜ்மென்ட்?”
“என்னமா இது, ஆயிஷாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட் நீ, கரக்ட்டா ஞாயிற்றுக் கிழமை என்கேஜ்மென்ட் அன்னைக்கா வருவ? ஒரு நாளைக்கு முன்னாலே நீ வந்தா அவளுக்கு நல்லா இருக்கும்ல?”
“சரிமா.”
“நல்லதுமா, டேய் ஆஷிக் நீ, ஆதர்ஷ், தியா எல்லாரும் வரும் போது ஜியாவையும் பத்திரமா கூட்டிட்டு வாடா. அவகிட்ட கோபம் எதுவும் படாத சரியா?”
என்று ஹாஜரா கூறவும், ‘நான் கோபம் ம்ம்ம்… இவ என்னைக் கடிச்சு துப்பாம இருந்தா அதுவே போதும். அல்லாஹ்! என் கொடுமைய எங்க போய்ச் சொல்ல?’ என்று இறைவனை அழைத்தவன், ஜியாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, “ம்ம்…” என்று பதில் கூறினான்.
“டேய் ஆதர்ஷ்!”
“ம்மா…!”
“இவன் கரெக்ட் டைம்கு கிளம்ப மாட்டான், நீ பொறுப்பா கூட்டிட்டு வந்திரு.”
“சரிமா, நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துகிறேன்.”
“சரிபா வச்சிடுறேன்.” என்று அவர் ஃபோனை துண்டிக்க,
ஜியா அங்கிருந்து செல்ல போக அவளைத் தடுத்த ஆஷிக், “ஜியா அம்மா சொல்லிட்டாங்கனு இல்லை, உனக்கு வரணும்னு தோனுச்சுனா வா. அங்க நம்மளோட பழைய நினைவுகள் நிறையா இருக்கு, அது உனக்குக் கஷ்டத்தைக் குடுக்கும்னு எனக்குத் தெரியும். வெள்ளிக்கிழமை ஈவ்னிங் உன்னைப் பிக் அப் பண்ண வருவேன், வர்றதும் வராததும் உன் இஷ்டம். நீ வந்தா ஆயிஷா சந்தோஷப்படுவா…” என்றவன் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு அவளையேப் பார்க்க,
அவளது உள்ளம் வேறு எதையோ எதிர்பார்ப்பதை உணர்ந்தவன் மெலிதாய் புன்னகைத்து, “நானும்தான்!” என்று கூற,
ஜியாவோ பதில் பேசாமல் அங்கிருந்து செல்ல ஆஷிக், ஆதர்ஷைப் பார்த்து, “பார்த்தியாடா உனக்கு வரணும்னு தோனுச்சுனா வானு சொல்றேன். பேசாமா நிக்கிறா, வருவேன்னு சொன்னா அவ ஹைட்டு குறைஞ்சிருமா என்ன?” என்றவன், “சரி அது போகட்டும், எனக்குச் சந்தோஷம்னு சொல்றேன், எதுவும் பேசாட்டாலும் அட்லீஸ்ட் ஒரு ஸ்மைல் பண்ணலாம்ல? அழுத்தக்காரிடா…” என்று அவன் கூறவும் ஆதர்ஷ் புன்னகைக்க ஆஷிக், ஜியாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆஷிக் கூறியது போல ஜியாவிற்கு அங்கே வருவது சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கும். அவளது மனம் அவனோடு இணைந்ததும், இணைந்த மனம் முறிந்ததும் அங்கே தானே!
ஆதர்ஷ், ஆஷிக்கின் டிஸ்சார்ஜ்கு தேவையானவற்றைச் செய்துவிட்டு அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
***
