காதல் 28

காலை பொழுது புலர்ந்த வேளையில் என்றும் இல்லாது சீக்கிரமே எழுந்த ஆஷிக், கண்ணாடியின் முன்பு நின்றுகொண்டு தன் தலையை ஒப்பனை செய்து கொண்டிருக்க, 

“குட் மார்னிங் ஆஷிக்!” என்றவாறு உள்ளே நுழைந்த ஆதர்ஷைப் பார்த்து, “குட் மார்னிங்டா!” என்று தன் வேலையைத் தொடர்ந்து கொண்டே கூறினான் ஆஷிக். 

“டேய் எங்க கிளம்பிட்ட?” என்ற ஆதர்ஷிடம், ஆஷிக் தன் முழுக்கை சட்டையைத் தன் முழங்கை வரை மடக்கி விட்டவாறே அவன் புறம் திரும்பி, 

“சமீர் வீட்டுக்கு”

“டேய் இப்போவேவா? ஒரு ரெண்டு நாள் போகட்டும்…”

“இல்லை, இன்னைக்கே பேசியாகணும்.”

“சரி, நானும் வரேன்.”

“வேண்டாம் மச்சான், நான் பார்த்துக்கிறேன்.”

“டேய், அவரு கோபத்துல உன்னை எதாவது பேச, நீ பதில் பேச பிரச்சனை எதுவும் ஆகிற போகுதுடா.”

“என் தங்கச்சியோட வாழ்க்கைடா, என்ன நடந்தாலும் பொறுமையா இருப்பேன்.” என்று முதன்முறை ஆயிஷாவை தன் தங்கை என்று உரிமையாய் கூறிய ஆஷிக்கைப் பார்த்து புன்னகைத்த ஆதர்ஷ்,

“சரிடா, ஆல் த பெஸ்ட். ஏதும்னா ஃபோன் பண்ணு சரியா?” என்று ஆதரவாக அவனது தோளில் தட்டி வழியனுப்பி வைத்தான். 

ஆதர்ஷிடம் விடைபெற்ற ஆஷிக் ஒரு சில மணி நேரத்தில் சமீரின் இல்லம் அடைந்தான். கதவு திறந்திருப்பினும் காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஆஷிக் வாசலில் நின்று கொண்டிருந்தான். 

ஷாஹித் டைனிங் டேபிளில் தன் வீட்டாருடன் சாப்பிட்டுகொண்டிருக்க, யாராக இருக்கும் என்று வெளியே சென்று பார்த்த ரஸ்மின், 

“எப்படிப்பா இருக்க, என்ன விஷயம்?” என்று கேட்க, அவரைப் பார்த்து லேசாகத் தன் தலையை அசைத்தவன், “ஷாஹித் ஸார பார்க்கணும்.” என்று கூற, அதற்குள் வீட்டினுள் இருந்து ஷாஹித், “ரஸ்மின் யாரு வந்திருக்காங்க?” என்று கேட்க,

“அதுங்க…” என்றவர் தயக்கத்துடன் ஆஷிக்கை, உள்ளே வருமாறு செய்கை செய்ய,

தன் காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே வந்த ஆஷிக்கைப் பார்த்த ஷாஹித் கோபமுற்று, 

“இங்க எதுக்கு வந்த, உன்னை யாரு உள்ள விட்டது?” என்று கடுமையாய் பேச,

வந்த கோபத்தைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டவன், மிகவும் பொறுமையாக அவரிடம், 

“சார் நேற்று நடந்ததைப் பத்தி, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

“என்ன பேச போற? அதான் மொத்தமா எங்களைக் கேவலப் படுத்திட்டியே?” என்று எரிச்சலுடன் கூற,

“என்னால புரிஞ்சிக்க முடியுது, கனவுகள் உடையும் பொழுது அது எவ்வளவு கஷ்டம் குடுக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். நடந்த எதையும் நான் நியாயப்படுத்த விரும்பலை. அது தப்புதான், ஆனா அது எந்த அளவுக்குத் தப்போ, அந்த அளவுக்கு உண்மை, நான் நினைச்சுருந்தா என் தங்கச்சிக்காக, விருப்பமே இல்லாம உங்க பொண்ண கல்யாணம் பண்ணிருக்கலாம். அப்படி நான் பண்ணிருந்தா, அது நான் உங்க பொண்ணுக்கு பண்ற பெரிய துரோகமா இருந்திருக்கும். 

சரி எல்லாம் போகட்டும், உங்ககிட்ட ஒன்னு கேட்கிறேன் உங்களுக்கு என்னைப் பத்தி என்ன சார் தெரியும்? என் அப்பா பெரிய பிஸ்னஸ் மேன்னா, உங்க பொண்ணை எனக்குக் குடுத்திருவீங்களா? நான் யாரு என்னனு தெரிஞ்சிக்க மாட்டீங்களா? 

நான் அதிகமாகப் பொண்ணுங்க கூடத்தான் பேசுவேன். மோஸ்ட்டா நைட் பப்ல நீங்க என்னை பார்க்கலாம். வீக்கெண்ட்ல பியர் இல்லாம இருக்க முடியாது. பார்ட்டி, பியர், ஃப்ரண்ட்ஸ் இதுதான் ஆஷிக், இதுதான் என்னோட ரொட்டின் லைஃப். இப்படித்தான் டெல்லியில வாழ்ந்துட்டு இருக்கேன். 

ஆனா இப்படிப்பட்ட ஆஷிக்குள்ள இருக்கிற ஒரு அழகான காதல்தான் ஜியா. என் காதலை உங்ககிட்ட சொல்லலாமானு கூட எனக்குத் தெரியலை, ஆனாலும் சொல்றேன். 

எங்களோட லவ் அட்ஜஸ்ட்மெண்ட்ல போகல, அண்டர்ஸ்டாண்டிங்ல போகுது. எங்களுக்குள்ள எதுவமே ஒத்து வராது. ஆனாலும் அவ எனக்கு, நான் அவளுக்குனு வாழ்ந்துட்டு இருக்கோம். அஞ்சி வருஷமா லவ் பண்ணி, சண்டை போட்டு பிரிஞ்சி ஆறு வருஷம் ஆச்சு, இத்தனை நாள்ல ஒரு பொண்ண கூட என்னால ஜியாவோட இடத்துல வச்சு பார்க்க முடியலை. அவளைத் தவிர என்னால இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது. 

இந்த விஷயத்தை நான் அன்னைக்கே சொல்லிருக்கணும். ஆனா என்னால எதுவும் சொல்ல முடியலை. எங்க வீட்ல யாருக்கும் இது தெரியாது, எல்லார் முன்னாடியும் சட்டுனு சொல்ல முடியலை. யாரும் என்கிட்ட இந்த கல்யாணத்துல விருப்பமானு கூடக் கேட்கலை. உங்களைத் தனியா சந்திச்சாவது பேசிருக்கணும், அதைச் செய்யாதது என் தப்புதான். 

ஜியா, அம்மா, தங்கச்சினு யோசிச்சேன், ஆனா உங்க பொண்ணைப் பத்தி யோசிக்காம போய்ட்டேன். தப்பெல்லாம் என்னோடது, இதுல என் தங்கச்சிக்குத் தண்டனை குடுக்காதீங்க. என்ன தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன், எனக்குக் குடுங்க. என் தங்கச்சி பாவம், அவ அழும் பொழுது கஷ்டமா இருக்கு. 

இதுவரைக்கும் நான் என்னைப் பத்தி சொன்னது எல்லாமே உண்மை. நான் இவ்ளோ பேசுனதுக்கு அப்புறமும் உங்களுக்கு என் மேல உள்ள கோபம் போகலைனா பரவாயில்லை. என்னை மன்னிக்க கூட வேண்டாம், நீங்க என்னை எவ்வளவு திட்டணும்னாலும் திட்டுங்க. ஏன் உங்க முகத்துலையே நான் முழிக்கலை, நான் போயிடுறேன். 

என் தங்கச்சி பாவம், அவளைத் தயவு செஞ்சி ஏத்துக்கோங்க. உங்க எல்லார் மனசையும் ரொம்பக் காயப்படுத்திட்டேன், முடிஞ்சா என்னை மன்னிச்சுருங்க.” என்றவன் தாஹிராவின் பக்கம் திரும்பி, 

“யம் ரியலி சாரி.” என்று மூச்சு விடாமல் தன் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

***

ஜியாவின் வீட்டில், “அட வாங்க அக்கா, என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்.” என்று திவ்யா அந்தப் பெண்மணியை முக மலர்ச்சியோடு உள்ளே அழைக்க, 

அதைப் பொருட்படுத்தாத அந்தப் பெண்மணி, “இப்போ என்ன முடிவு பண்ணிருக்க?” என்று கேட்க விஷயம் புரியாமல் குழம்பியவர், 

“எதைப் பத்தி அக்கா கேட்குறீங்க?” என்று கேட்க, 

“எதைப் பத்தியா? உனக்கு விஷயம் தெரியுமா இல்லையா?” என்று ஆரம்பித்தவர், முகத்தில் பாவனைகளுக்குக் குறைவின்றிக் கூறி முடித்து, திவ்யாவின் பதிலுக்காகக் காத்திருக்க, அவர் எதிர்பார்த்தது போலவே அதிர்ச்சியடைந்த திவ்யா முகத்தில் கோபம் ததும்ப,

“என்ன அக்கா சொல்றீங்க, ஜியா பிரச்சனைனு சொன்னா, இதை பத்தி மூச்சு விடல அக்கா.”

“நீ இப்படி ஏமாளியா இரு, ஊரு முழுக்க இந்தப் பேச்சுதான். அந்தப் பெரிய வீட்ல வேலை பார்க்குற வேலைக்காரி மூலமா எனக்குத் தெரியும்.”

“அவளை என்ன பண்றேன்னு பாருங்க.” என்ற திவ்யாவைத் தடுத்த அந்தப் பெண்மணி, “ஏய் ஆத்திரப்பட்டு என்ன ஆகப் போகுது. போன மானம் போனது தானே? புத்தியோட யோசி, இவளுக்கு ஒரு வரனை பாரு. இவ விஷயம் தெரிஞ்சா சரண்யாவோட வாழ்க்கைக்குத் தான் பிரச்சனை.”

“அது சரி, இவ்வளவு தெரிஞ்சதுக்கு அப்புறம் யாரு ஜியாவ கல்யாணம் பண்ணுவாங்க?”

“அதுக்கெல்லாம் ஏற்பாடு இல்லாமலா வருவேன். நீ சரி சொன்னா நாளைக்கே தட்டு மாத்திக்கலாம்.”

“அப்படியா?”

“ஆமா, பையன் வெளிநாட்ல வேலை பார்க்குறேன். வீட்ல ரொம்ப வசதி, வரதட்சணை எதுவும் வேண்டாம், பொண்ணு அழகா இருந்தா போதும்னு சொல்லிட்டாங்க, உனக்கு ஒரு செலவு இல்லை.”

“வெளிநாட்ல வேலையா? பையன் எப்படி?”

“அதெல்லாம் விசாரிக்காம சொல்லுவேனா? பையன் ரொம்ப நல்லவன், என்ன சொல்ற?”

“அவரு ஊர்ல இல்லை, நாளை மறுநாள்தான் வருவாரு. அவர் வந்ததும் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்.”

“ஆனா அவங்க நாளைக்கே உறுதி பண்ணணும்னு சொல்றாங்களே?”

“நாளைக்கா? அவர் இல்லாம எப்படி அக்கா?”

“பையன் ஊருக்கு வந்திருக்கான், நாளைக்கு நைட் ஊருக்குக் கிளம்பிருவான். போனா ரெண்டு மாசம் கழிச்சுதான் வருவான், அதான் உடனே உறுதி பண்ணினா நல்லா இருக்கும்னு அவங்க வீட்ல நினைக்கிறாங்க.”

“அவர் கேட்டா என்ன சொல்றது?”

“நீ என்ன ஜியாக்குக் கெட்டதா செய்யிற? நல்ல விஷயம் தானே, வந்ததும் சொல்லு புரிஞ்சுக்குவாரு. யோசிக்காத திவ்யா.”

“இல்லை அக்கா, அவரு இல்லாம… மனசுக்கு நெருடலா இருக்கு.” என்றவரிடம், “உனக்கு சரண்யாவை பத்தி கவலை இருக்கா? இல்லையா? இவ எதுவும் ஏடா கூடமா பண்ணிட்டா, சரண்யாவை யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்க? இப்போ என்ன கல்யாணமா நடக்கப் போகுது? கையில காப்பு கட்டி உறுதி பண்ண போறாங்க அவ்வளவு தானே. இவ பண்ணின காரியத்துக்கு இப்படிப்பட்ட சம்பந்தம் கிடைக்கிறது பெரிய விஷயம். விட்டா இதை மாதிரி அமையாது. 

சரண்யாவோட வாழ்க்கை உனக்கு முக்கியம்னா இதுக்குச் சரி சொல்லு.” என்று அவர் அழுத்தமாய் கூற, 

சரண்யாவின் பெயரை அந்தப் பெண்மணி கூறியதும், பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கூட யோசிக்காத திவ்யா, “பையன் நல்லவன்னு சொல்றீங்க, உங்களை நம்பி சரினு சொல்றேன்.” என்று இருமனதாய் கூற,

“அப்படிச் சொல்லு, நாளைக்குக் கொஞ்சம் பேரு மட்டும் கூப்பிட்டு உறுதி பண்ணிக்குவோம்.” என்றவர், தான் சென்று வருவதாகக் கூறி அங்கிருந்து செல்ல,

அவர் சென்றதும், “யாருக்கு உறுதி பண்ணணும்.” என்றவாறு வந்த ஜியாவை பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த திவ்யா பிறகு அவளது முகத்தைக் கூடப் பார்க்காது, 

“உனக்குத்தான்.” என்று எரிச்சலோடு கூற, 

“சித்தி எனக்குக் கல்யாணம் வேண்டாம்.” என்று கெஞ்சி கேட்டவளிடம்,

“வேண்டாம்னா என்னடி அர்த்தம்? சொல்ல சொல்ல கேக்காம அந்தப் பையன் வீட்டுக்கு போய், வம்ப விலை குடுத்து வாங்கிட்டு இப்போ என்ன வேண்டாம். அங்க நடந்த எல்லாத்தையும் மறைச்சுட்டு, ஓங்கி ஒன்னு போட்டேன்னா? வாய் பேசிறாத. 

இங்க பாரு நல்லா கேட்டுக்கோ, நாளைக்கு நான் சொல்ற மாதிரி கேட்டு ஒழுங்கா நடந்துக்கணும். இல்லைனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. கொஞ்சம் சரண்யாவையும் நினைச்சு பாரு, உன்னால அவ வாழ்க்கை வீண் ஆகணுமா? அப்புறம் உன் சித்தப்பாக்கு சொல்லலாம்னு எதாவது திட்டம் போட்ட, என் சாவதான் பார்ப்ப.” என்றவர் வார்த்தைகளை விஷத்தை போல அவளிடம் கொட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். 

ஜியா மிகவும் மன வேதனை அடைந்தாள். தன் நிலையை நினைத்து மிகவும் நொந்து கொண்டாள். 

“ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது? என் வாழ்க்கையில வலி வேதனையைத் தவிர வேற எதுவமே கிடையாதா?” என்று கண்ணீர் மல்க கதறினாள். துக்கம் பொங்க கண்ணீரில் கரைந்தாள். 

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!