ஷாஹித்திடம் தன் மனதில் பட்ட அனைத்தையும் பேசிவிட்டு வந்த ஆஷிக், அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை நினைத்து ஒருவித நெருடலில் இருந்தாலும், அவனது மனம் முழுவதையும் ஜியாவின் நினைவுகளே ஆக்கிரமைத்துக் கொண்டிருந்தன.
ஜியாவைப் பற்றி நினைக்க நினைக்க, அவனது கண்களில் இருந்து கண்ணீர் அவனையும் மீறி உருண்டோடின. பால்கனியில் நின்று கொண்டு வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை இருக்கரங்கள் தழுவ,
“ஜியா!” என்றவாறே சட்டென்று திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம் காத்திருந்தது.
“ஜியா இல்லபா, நான் உன் அம்மா.” என்ற ஹாஜராவை, அழுதுகொண்டே கட்டி அணைத்துக்கொண்டான். இறுகிப்போய் இருந்தவன் மனதுக்கு அந்த இதமான அணைப்பு மிகவும் தேவைப்பட்டது. தன் தாயின் அணைப்பில் இருந்து விடுபட்டவன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,
“நீங்க ஏன் இங்க வந்தீங்க, நான் பண்ணின காரியத்துக்கு உங்க மூஞ்சில முழிக்கக் கூட எனக்குத் தகுதி இல்லை.” என்று தொண்டை விம்பக் கூறியவனின் கரம் புடித்துத் தன் அருகில் இருந்த சோபாவில் உட்காரவைத்த ஹாஜரா,
“ஆஷிக், இங்க பாரு.”
“சாரிமா, எனக்கு அந்த நேரம் என்ன பண்ணணும்னே தெரியலை. நான் பண்ணினதெல்லாம் தப்புதான். ஆனா என்னை ஒதுக்கிராதீங்க.” என்று தன் மடியில் தலை சாய்த்து ஏங்கிக்கொண்டிருக்கும் மகனின் சிகையை ஆதரவாகக் கோதியபடி,
“அம்மாக்கு எப்படிடா உன்னைப் புடிக்காம போகும்? நீ என் பையன்டா… ஆயிஷா மேல நீ எவ்வளவு அன்பு வச்சுருக்கனு நீ எனக்கு நிரூபிச்சுட்ட, எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு.” என்றதும் அவரது மடியில் இருந்து சட்டென்று எழும்பியவன்,
“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று ஆச்சரியமாய் கேட்க,
“சமீரோட அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்தாங்க. கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்னு கேட்டாங்க. நான் என்ன சொன்னேன்னு கேட்க மாட்டியா?” என்றவரிடம்,
“என்னமா?” என்றவனிடம்,
“என் பெரிய பையனோட கல்யாணம் முடிஞ்ச கையோட ஆயிஷாவோட கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னேன். சொல்லு எப்போ என் மருமகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு வர போற?” என்று அவர் கூறவும், ஆஷிக்கின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. சந்தோஷத்தில் வார்த்தைகள் எதுவும் வராமல் தடுமாறியவனிடம்,
ஹாஜரா, “அம்மாவை மன்னிச்சுருப்பா, உன் விருப்பம் தெரியாம அவரு சொன்ன எல்லாத்துக்கும் உன்னைச் சம்மதிக்க வச்சு, அம்மா உனக்கு அநியாயம் பண்ண பார்த்தேன். நீ ஜியாவை விரும்புற விஷயம் தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா அன்னைக்கே சமீர் குடும்பத்துக்கிட்ட சொல்லிருப்பேன்.”
“அம்மா ப்ளீஸ் நீங்க, என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு ப்ளீஸ்மா…”
“இல்லைபா, நானும் அவர்கூடச் சேர்ந்துட்டு உனக்கு விருப்பம் இல்லாத ஒரு கல்யாணத்தை உனக்குப் பண்ண பார்த்தேன். இனிமே அப்படி நடக்காது, என்ன நடந்தாலும் பரவாயில்லை. நீ முதல்ல போய் ஜியாகிட்ட பேசு, அம்மா உன் கூடவே இருக்கேன்.”
“அம்மா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.”
“நீ எதுவும் சொல்ல வேண்டாம், ஆதர்ஷ் எனக்கு எல்லாத்தையும் சொல்லிட்டான். ஜியா உன் மேல கோபமா இருக்கிறதா சொன்னான். அது என்ன கோபமா இருந்தாலும், சரி பண்ண வேண்டியது உன்னோட பொறுப்பு.”
“மா ஆயிஷா என்ன சொன்னா?”
“ஆயிஷா நீ வீட்டை விட்டு போனதுல இருந்து எதுவும் சாப்பிடல. நான்தான் சமாதானம் படுத்திச் சாப்பிட வச்சேன். உன்னையும் ஜியாவையும் பார்க்கணும்னு சொன்னா. நீ எதைப் பத்தியும் யோசிக்காம நேரா போய் ஜியாவை பாரு, அவளோட கையில கால்ல விழுந்தாவது அவளைச் சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வா, இது என்னோட ஆர்டர்.” என்று அன்போடு கண்டித்தவரிடம், சந்தோஷமாக விடை பெற்றுக்கொண்டு ஆதர்ஷுடன் ஜியாவைக் காண சென்றான்.
ஆஷிக் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்க, ஜியாவோ அவளது அறைக்குள் தன்னைச் சிறைவைத்துக் கொண்டு, தன் விதியை நினைத்துக் கடவுளிடம், “நான் என்ன தப்பு பண்ணினேன்? நீயே சொல்லு, எனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது? சின்ன வயசுல என் அப்பா அம்மாவை என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட, நான் ஒன்னும் சொல்லல.
அப்புறம் ஆஷிக் எனக்குக் கிடைச்சான், உண்மையா காதலிச்சேன். அவனும் எனக்குத் துரோகம் பண்ணிட்டான். அப்போ கூட நான் ஒன்னும் சொல்லல. ஆனா அதுக்கப்புறம் நீ எனக்குக் குடுத்த வலி இருக்கே, அது எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாதது. என்னை ஏன் இன்னும் விட்டு வச்சுருக்க? மொத்தமா சாகடிச்சுட வேண்டியது தானே?
இப்போ இந்தக் கல்யாணம் எனக்குத் தேவையா? ஒன்னு எனக்கு நிம்மதியான வாழ்க்கையைக் குடு, இல்லனா என்னை சாக விடு. எனக்குத் தெரியும், நீ எனக்கு அந்த நிம்மதிய கூடக் குடுக்க மாட்டனு. நீ தந்த வர போதும் நானே எடுத்துக்கிறேன். இனிமே இந்த உலகத்துல வாழ்றதுக்கு எனக்குத் தகுதியே இல்லை. சித்தப்பா, சித்தி, சரண்யா என்னை எல்லாரும் மன்னிச்சுருங்க. செத்து போறத தவிர எனக்கு வேற வழியில்லை.” என்று மனம் உடைந்து அழுதவள், தனது அறையில் கொசுவை கொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் திரவத்தை எடுத்துக் கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் வாயில் சரித்தாள். ஜியா உட்கொண்ட சில நொடியில் உள்ளே வந்த சரண்யா,
“அக்கா உங்கள எல்லாரும் வர சொன்னாங்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க வாங்க.” என்று கூறி அழைக்க, அழுது வடிந்த முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு, சரண்யாவுடன் ஹாலுக்கு வந்தாள்.
முகமெல்லாம் வியர்த்து கொட்ட, அழுது அழுது வீங்கி போயிருந்த அவளது விழிகளைப் பார்த்து மாப்பிள்ளை வீட்டார், “என்னாச்சு பொண்ணோட முகம் ரொம்ப வாடி போய் இருக்கு?” என்று விசாரிக்க,
அதற்குள் அவளது சித்தி, “அட அப்படியா இருக்கு? அது வேற ஒன்னும் இல்லை, ஜியாக்கு அவங்க சித்தப்பானா உயிரு. அவரு இந்த நேரம் பார்த்து வெளியூர் போயிருக்காருல, அதான் கொஞ்சம் வாட்டமா இருக்கா, வேற எதுவும் இல்லை.” என்று சமாளித்தார்.
பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, ஜியாவிற்கு நெஞ்சில் படபடப்பு அதிகமாகிக்கொண்டே போனது. அவசரத்தில் இப்படிச் செய்துவிட்டாள், ஆனால் நேரம் போகப் போகச் சாவின் பயம் அவளுக்குள் குடிகொண்டது.
முகமெல்லாம் வியர்த்து கொட்ட, மூச்சு விடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள், அதை வெளிகாட்டாமல் பொய்யாய் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாப்பிள்ளையின் தந்தை, “அப்புறம் என்ன, அதான் எல்லாம் பேசியாச்சே, ஆரம்பிக்கலாமா?” என்று கேட்கவும்,
திவ்யா, “ஆமா” என்று கூற, காப்பு போடுவதற்கான சடங்கு இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கும் நிலையில் இருக்க, ஜியாவோ எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்கிற அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தாள்.
ஒருவழியாக ஜியாவின் இல்லத்தை அடைந்த ஆஷிக், “என்னடா, வீட்ல எதோ விஷேசம் மாதிரி இருக்கு.”
“ஆமாடா ஆஷிக், இந்த நேரத்துல நீ உள்ள போறது சரியா இருக்குமா?”
“இருக்காதுதான், அஞ்சு மணிக்கு என்ன விஷேசம்டா வைக்கப் போறாங்க? எதுக்கும் உள்ளே போறேன், ஜியாகிட்ட பேசியே ஆகணும்டா.”
“சரி அவசரப்படாம, கோபப்படாம, பொறுமையா பேசு சரியா? நான் வெளியில வெயிட் பண்றேன்.” என்ற ஆதர்ஷிடம் விடைபெற்றுக் கொண்டு உள்ளே சென்றான்.
ஜியா பட்டு புடவை கட்டி மணப்பெண் போல் நின்றுகொண்டிருந்த தோற்றம் கண்டு மிகவும் அதிர்ந்து போனான். அவனது விழிகளில் தீயின் ஜுவாலை தெறித்தது. ஜியாவின் கையில் மாப்பிள்ளை வளையல் அணிவிக்கும் நேரம் பார்த்து, வேகமாக வந்து ஜியாவின் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவன் ஜியாவை கோபமாகப் பார்க்க, அவையில் இருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் ஏதேதோ பேச ஆரம்பித்தனர்.
அப்பொழுது அவளது சித்தி ஆஷிக்கிடம், “நீ ஏன்டா இங்க வந்த? முதல்ல வெளியில போ.” என்று கூற, அவன் அவருக்குத் தன் பார்வையை மட்டும் பதிலாகக் கூற, அதைப் பார்த்தவர் விழிகளில் கலவரம் ஒட்டிக்கொள்ள ஓரடி அவனை விட்டு தள்ளி நிற்க,
வெண்பனி போல இருந்த வதனம் அழுது அழுது சிவந்து போய் இருந்ததைக் கூடக் கவனிக்காது, ஆஷிக் ஆக்ரோஷத்தோடு ஜியாவின் கரங்களைப் பற்றி, “உனக்கு என்ன சொன்னாலும் புரியாதுல? உன்னை நினைச்சு நான் அழுதுட்டு இருக்கேன், நீ என்னனா நல்லா அலங்காரம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டு இருக்க. ஏன்டி என்னை சாகடிக்கிற?” என்றவனின் கைப்பிடியில் இருந்து தன்னை விடுவித்தவள் தடுமாறும் குரலில்,
“இங்கிருந்து, போ உன்னைப் பார்க்கவே புடிக்கலை, துரோகி!” என்று கூற, தன் நிதானத்தை இழந்தவன் அவளது கரம் பிடித்து வேகமாகத் தன் பக்கம் இழுத்து கோபம், வருத்தம், வலி என்று உணர்ச்சி பொங்க,
“என்னைப் புடிக்கலையா? நான் துரோகிதான்! அப்படியே இருந்துட்டு போறேன். ஆனா நீ எனக்கு வேணும், உன்னால முடிஞ்சது பார்த்துக்கோ. என்னோட காதலை இத்தனை பேர் முன்னாடிதான் நிரூபிக்கணும்னா அதுக்கும் நான் தயார்.” என்றவன் அவளது இதழை நோக்கி குனிய, அவளது மூக்கில் இருந்து கசிந்த ரத்தத் துளிகள் அவனது கையில் பட அதிர்ச்சியில் உறைந்து போனான். நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்க்க, அவளோ மூச்சு வாங்க முடியாமல் இமை மூடியவாறு நொடியில் அவன் மார்போடு சாய்ந்தாள்.
***
