காதல் 30

ஜியா மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனவன் செய்வதறியாது திகைத்தான். 

“ஜியா என்னாச்சு? என்ன பண்ணுது?” என்று என்ன செய்வது என்று புரியாமல் அவளை அவன் மார்போடு சாய்த்த சில நொடியில் அவள் மயங்கி விழ, 

தன் உயிரே போனது போல் துடித்தவன், அவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றான். ஆதர்ஷ் வேகமாகக் காரை செலுத்த, அடுத்து பத்து நிமிடத்தில் அவர்கள் ஜியாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். 

வந்த சொந்தங்கள், மாப்பிள்ளை வீட்டார் என அனைவரும் தங்களின் வாய்க்கு வந்தது போல் ஏதேதோ கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, திவ்யாவும் சரண்யாவும் கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த நிகழ்வால் செய்வதறியாது திகைத்து நின்றனர். 

மருத்துவமனையில் ஜியாவிற்கு சிகிச்சை நடக்க, ஆஷிக் அறையின் கண்ணாடி வழியே பேச்சு மூச்சுன்றிச் சிலையென உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தன்னவளின் நிலையைக் கண்டு, நெருப்பில் பட்ட புழுவைப் போல் துடித்தான். அவளது இந்த நிலைக்குத் தான் மட்டுமே காரணம் என்று, ஆதர்ஷிடம் கதறி அழுதான்.

ஆதர்ஷ், ஆஷிக்கிற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்க, திவ்யாவும் சரண்யாவும் பதறிக்கொண்டு அங்கே வந்தனர். திவ்யா, ஆஷிக்கின் சட்டையைப் பற்றிக்கொண்டு, “உனக்கு இப்போ நிம்மதியா? நல்லா இருந்த பொண்ணை இப்படிக் கிடையில கிடத்திட்டியே? நீயெல்லாம் நல்லா இருப்பியா?” என்று பொரிந்து தள்ள, 

ஆதர்ஷ் அவர்களைக் குறுக்கிட்டு, “ஆன்ட்டி ப்ளீஸ்… இது ஹாஸ்பிடல். ஜியாக்கு ட்ரீட்மெண்ட் நடக்குது. இப்போ இதைப் பத்தி பேச வேண்டாம்.” என்று கூறி அவரைச் சமாதானம் செய்ய, 

திவ்யா கண்ணீர் மல்க, “கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னியே? நான் தானே புத்தி கெட்டுப் போய்த் தப்புப் பண்ணிட்டேன். அதுக்கு இப்படியாடி பண்ணுவ? உன் சித்தப்பாக்கு நான் என்ன பதில் சொல்ல? செத்து போறதுக்கா உன்னை வளர்த்தேன்?” என்று துக்கம் தொண்டையை அடைக்கப் புலம்பிய திவ்யாவை, சரண்யா சமாதானம் செய்தாள். 

என்னதான் திவ்யா, ஜியாவை திட்டிக்கொண்டே இருந்தாலும், ஜியாவை சிறுவயது முதலே தாய்க்கு தாயாய் இருந்து வளர்த்ததால் அவள் மீது அவருக்குப் பாசம் உண்டு. காலப்போக்கில் நடந்த சில நிகழ்வால் ஜியா தன் மகள் சரண்யாவை விட அதிகம் படித்திருப்பதால், பொறாமை என்னும் திரை அவரது கண்ணை மறைத்துவிட்டது. ஆனால் ஜியாவை இப்படிப் பார்ப்போம் என்று அவர் நினைக்கவில்லை. அவளை இந்த நிலையில் பார்த்ததால் அவரது உள்ளம் பதறியது. என்ன இருந்தாலும் அவரும் ஒரு தாய் தானே? பெற்றால்தான் பிள்ளையா?

***

ஆஷிக்கின் இல்லத்தில், “என்னமா இது ஜியாவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர ஆஷிக் போயிருக்கான்னு சொன்ன, ஆனா இன்னும் வரல மணி ரொம்ப ஆகிடுச்சே?”

“அதான்டி, எனக்கும் தெரியலை.”

“ஒருவேளை ஜியா இன்னும் கோபமா இருக்காளா?”

“அதான் நான் உன்னை பேச சொன்னேன்.”

“நான் எப்படிப் பேசுவேன்? ஏன்னா நான் அவ மேல கோபமா இருக்கேன்ல? ஒருவார்த்தை என்கிட்ட சொல்லல அந்த கள்ளி. வரட்டும் பார்த்துக்கிறேன்.”

“முதல்ல அவங்க வரட்டும், அப்புறம் நீ என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ.”

“ஆஷிக், ஜியா கல்யாணத்த சீக்கிரமா பண்ணிரலாம்.” என்று உள்ளம் நெகிழ ஆயிஷா கூற,

“நாளைக்கே பண்ணிருவோம்.” என்ற ஹாஜராவிடம்,

“உங்க பையனுக்கு இன்னைக்கே கல்யாணம்னு சொன்னாலும் ஓகேனுதான் சொல்லுவான்.” என்று கேலி பேச,

“உனக்கு வேற வேலையே இல்லை, அவனை எதாவது சொல்லிக்கிட்டு… கல்யாணம் என்ன, அவ்ளோ ஈஸியா? ஜியா வீட்ல பேசி சம்மதம் வாங்கணும், அவங்க இதுக்கு ஒத்துக்கணும். எல்லாத்துக்கும் மேல உங்க அப்பா ஏற்கனவே செம கோபத்துல இருக்காரு. அவர் என்ன சொல்றாரோ? எவ்வளவோ இருக்குடி, எல்லாத்துக்கும் மேல ஜியாவோட கோபம் எல்லாம் தனியனும். அது ரொம்ப முக்கியம்.”

“அதெல்லாம் உன் பையன் கால்ல விழுந்தே சரி பண்ணிருவான். அம்மா இதுக்கு மேல எனக்குப் பொறுமை இல்லை, அவனுக்குக் கால் பண்ணு.”

“ரொம்ப நேரமா ட்ரை பண்றேன், அட்டென்ட் பண்ண மாட்டிக்கிறான்டி.”

“அப்போ ஆதர்ஷ் அண்ணாக்கு கால் பண்ணு.”

“அவனும் ஃபோனை எடுக்க மாட்டிக்கிறான்.”

“அப்போ தியா அக்காக்கு கால் பண்ணு, அவங்களுக்குத் தெரியாம எப்படி இருக்கும்?”

“சரிடி கேட்குறேன்.” என்றவர், தியாவிற்கு அழைப்பு விடுக்க, ஆஷிக்கின் நினைப்பிலே மூழ்கிருந்த தியா, கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து, “ஹலோ ஆன்ட்டி!”

“தியாமா, ஆஷிக், ஜியா எங்க? உன் கூடயா இருக்காங்க?”

“ஆஷிக், ஜியாவா இல்லையே? ஏன் கேட்குறீங்க?”

“உனக்கு விஷயமே தெரியாதா? ஆஷிக் எதுவும் சொல்லலையா?”

“இல்லை ஆன்ட்டி.”

“ரெண்டு சந்தோஷமான விஷயம், ஒன்னு ஆயிஷாவோட கல்யாணம் மறுபடியும் நடக்கபோகுது.”

“அட ரொம்பச் சந்தோஷம், என்னோட வாழ்த்துகளைச் சொன்னேன்னு…” என்று அவள் சொல்வதற்குள் அவளைத் தடுத்தவர்,

“நில்லுமா, உன் சந்தோஷத்தையும் வாழ்த்துகளையும் அப்படியே சேர்த்து வச்சுக்கோ. ஏன்னா நீ ஆயிஷாவோட சேர்த்து ஆஷிக்குக்கும் விஷ் பண்ணவேண்டிருக்கும்.”

“என்ன ஆன்ட்டி சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலை.” குழப்பத்தில் கேட்க,

“அப்படியே அடி போட்டேன்னா… உனக்குப் புரியலை? ஜியாவும் ஆஷிக்கும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறத நீ ஏன் என்கிட்ட சொல்லல?”

“அதுவந்து ஆன்ட்டி…”

“சரி பரவாயில்ல, எல்லாம் நல்லதுக்குத்தான்.”

“என்ன சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரியலை.”

“ஆஷிக், ஜியாவை சமாதானம் பண்ணதான் போயிருக்கான். ஆதர்ஷும் கூடப் போயிருக்கான், ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் வரல. அதான் உனக்குத் தெரியும்னு நினைச்சு கேட்டேன்.”

“ஓ… எனக்குத் தெரியலை ஆன்ட்டி.” என்று உள்ளடக்கிய கோபத்தோடு கூறினாள். 

“சரிடா உனக்குத் தெரிஞ்சா சொல்லு.” என்று அவர் கூறுவதற்கு முன்பே கோபத்தில் ஃபோனை கட் செய்தவள், ஆஷிக், ஜியாவை தேடி சென்றுள்ளான் என்று ஹாஜரா கூறியது அவளுக்கு எரிச்சலூட்ட, ஃபோனை எறிய போனவள் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, ஆஷிக்கிற்குப் ஃபோன் செய்தாள். ரெண்டு முறை தாண்டி மூன்றாம் முறை அட்டென்ட் செய்தவனிடம், 

“ஆஷிக் நீ எங்க இருக்க?” என்று கோபமாகக் கேட்க, 

“என்னாச்சு தியா, ஏன் கோபமா இருக்க?”

“ஆதர்ஷ் நீயா? ஆஷிக் எங்க?”

“தியா ஒரு பெரிய பிரச்சனை.” என்று அனைத்தையும் கூறியவன், 

“நீ ஹாஸ்பிடல் வரும்பொழுது அம்மாவையும் ஆயிஷாவையும் கூடக் கூட்டிட்டு வந்திரு. இங்க வந்த டென்ஷன்ல நான் அவங்களுக்கு எதுவும் சொல்லல.”

“கண்டிப்பா ஆதர்ஷ்.” என்றவளது உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடியது.

அழைப்பை துண்டித்தவள், “ஜியா, உன்னைப் பார்க்கவே எனக்குப் புடிக்காது. இருந்தாலும் உன்னை இந்த நிலைமையில பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. இதுக்கப்புறம் உன்னைப் பார்க்க முடியாம கூடப் போகலாம்ல?” என்றவள், இனி ஆஷிக் தனக்குத்தான் என்ற ஆனந்த வெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள், ஜியாவைப் பிரிந்த இத்தனை வருஷத்தில் மாறாத ஆஷிக், இனிமேலா மாறப் போகிறான்? ஆஷிக்கின் மனதில் ஜியாவைத் தவிர வேற யாருக்கும் இடம் இல்லை என்பதைத் தியா இப்பொழுதாவது உணர்வாளா?

ஹாஸ்பிடலில் திடீரென்று ஜியா மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட, நர்ஸ் விரைந்து வந்து டாக்டரை அழைத்ததில் பதறியவன், அறைக்கு வெளியே நின்று ஜியா உயிருக்கு போராடி கொண்டிருப்பதைப் பார்த்து நிலை குலைந்து போனான். 

எதற்காகவும் பெரிதாய் கவலைப்படாதவன் இன்று மிகவும் உடைந்து போனான். எங்கே ஜியாவை இழந்து விடுவோமோ என்கின்ற பயத்தில் மிகவும் தவித்தான். 

“ஏன் ஜியா? எதுக்கு இப்படி ஒரு தண்டனைய எனக்குக் குடுத்த? எல்லாத்துக்கும் நான்தான் காரணம்.” என்று தன்னைத் தானே வெறுத்தான். 

சில நொடிகளுக்குப் பின் ஜியா இயல்பு நிலைக்கு வர, ICUவில் இருந்து வெளியே வந்த டாக்டரிடம் கண்ணீர் மல்க, ஆத்திரம் பொங்க அவரது சட்டையைப் பற்றாத குறையாக, “ஏன் இப்படி ஆச்சு? இத்தனை பேர் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” காட்டு கத்து கத்தியவனிடம்,

“லிஸன் மிஸ்டர் ஆஷிக், உங்க எமோஷன்ஸ் புரியுது. அதைக் காட்டுற நேரம் இது இல்லை. அவ்வளவு அக்கறை இருக்கிற நீங்க அவங்களை ஒழுங்கா பார்த்துக்க வேண்டியது தானே? உங்க மேல ப்ராப்ளம் வச்சுட்டு எங்ககிட்ட கத்துறீங்க. எங்களால முடிஞ்சத நாங்க பண்ணிட்டுதான் இருக்கிறோம். நாங்க மட்டும் முயற்சி பண்ணினா போதாது, அவங்களும் வாழணும்னு நினைக்கணும். 

நீங்க இங்க கத்துறது கூட உள்ள இருக்கிற பேஷண்ட்ட பாதிக்கும். இங்க மத்த பேஷண்ட்ஸும் இருக்காங்க. புரிஞ்சு நடந்துக்கோங்க.” என்றவர் ஆதர்ஷைப் பார்த்து, “கன்சோல் ஹிம்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்ற அடுத்த நொடி, ஹாஜரா, ஆயிஷா, தியா மூவரும் அங்கே வந்தனர். 

“என்னடா ஆஷிக், நீயும் ஜியாவும் சேர்ந்து ஒன்னா வீட்டுக்கு வருவீங்கனு சந்தோஷமா காத்துகிட்டு இருந்தேன். ஆனா ஜியாவை இப்படிப் பார்க்கணும்னு எழுதிருக்கே? என்னடா நடந்தது?” என்ற ஹாஜராவை இறுக்க அணைத்து கொண்டவன், 

“மா ஜியாவை பார்த்து பேசணும்னுதான் அங்க போனேன். ஆனா இவ இப்படிப் பண்ணுவானு நான் சத்தியமா நினைக்கல. ரொம்பப் பயமா இருக்கு.” என்று ஏங்கியவனை ஆறுதல்படுத்தியவர், திவ்யாவையும் சரண்யாவையும் பார்த்ததும் இது ஜியாவின் சித்தியும் தங்கையும்தான் என்று புரிந்து கொண்டார். அவர்களின் அருகில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அனைவரது பிரார்த்தனையும் ஜியாவை சுற்றியே இருக்க,

தியா ஆஷிக்கிடம், “ஆஷிக் நீ அழாத, எல்லாம் சரியாகிரும்.” என்று வெறும் வார்த்தைக்குக் கூற, ஆதர்ஷ் அவளைத் தனியாக அழைத்து அவளிடம், 

“தியா, நீ என்னவோ ஜியாக்கு இவன் மேல லவ் இல்லை, இவனை வேண்டாம்னு சொல்லிட்டா அப்படினு சொன்ன. இவனை விரும்பலைனா ஏன் இவ இப்படி ஒரு காரியம் பண்ணணும்? இவங்க வீட்ல பார்த்த பையனையே கல்யாணம் பண்ணிருக்கலாம்ல? அன்னைக்கு சரியா உனக்கும் ஜியாக்கும் என்னதான் நடந்தது? ஜியா என்னதான் சொன்னா? அந்த லெட்டர் ஜியா கொடுத்தது தானே?” என்று தன் மனதில் உள்ளதைக் கேட்டுவிட,

“என்ன ஆதர்ஷ் என்னையே சந்தேகப்படுறியா நீ?” என்று பொங்கிய பதற்றத்தை மறைத்தவாறே கேட்க,

“அப்படி இல்லை, ஏதும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா கூட இருக்கலாம்ல, அதான் கேட்டேன். நீ ஏன் பதற்றமா இருக்க?”

“போதும் ஆதர்ஷ், பாதில விட்டுட்டு போன ஒருத்திக்காக நீ என்கிட்ட சண்டைக்கு வர. இவ ஏன் இப்படிப் பண்ணினானு எனக்கு எப்படித் தெரியும்? சரிபா, நான் பொய் சொல்றேனே வச்சுக்குவோம், இவ உண்மையாவே ஆஷிக்க விரும்பிருந்தா ஏன் விட்டுட்டு போறா? இவ தப்பானவ, இப்போ கூட இதெல்லாம் ஆஷிக்கிட்ட சிம்பதிய கிரியேட் பண்ண இவ போடுற ட்ராமா மாதிரிதான் தெரியுது.” என்று ஜியாவைப் பற்றி தியா தாறுமாறாகக் கூற,

“யாரு டிராமா பண்றதா சொல்ற?” என்ற குரல் அவர்களின் பின்னால் இருந்து வர, 

திரும்பி பார்த்த தியா, “அது ஆஷிக்…” என்று விழிக்க,

“என்னாச்சு, ரெண்டு பேரும் சண்டை போட்ட மாதிரி இருக்கு.” என்ற ஆஷிக்கிடம், 

“ஆமாடா, இவன் என்கிட்ட சண்டை போடுறான். ஜியா இப்படிப் பண்ணினதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அவ ட்ராமா பண்ணிட்டு இருக்கா, ஆனா நீங்கதான் அது புரியாம அவளுக்காக இப்படி உருகிட்டு இருக்கீங்க. அவ ரொம்ப மோசமானவ ஆஷிக்.”

“ஸ்டாப் இட் தியா!” கோவத்தை உள்ளடக்கியவாறு அவன் கூற,

“ஆஷிக் நான் சொல்ல வர்றத…”

“போதும், இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத.” என்று உள்ளடக்கிய கோபம் முட்டிக்கொண்டு வெளியே வர,

“நீ என்ன சொன்னாலும் சரி, எனக்கு அவ டிராமா பண்ற மாதிரிதான் தெரியுது. அவ பண்ணின எதையும் நீ மறந்து மட்டும் போயிறாத. அப்படி மட்டும் மறந்தனா உன்னை விட ஒரு முட்டாள் இந்த உலகத்துல வேற யாரும் இருக்க முடியாது.” என்று பொரிந்தவள் வேறெதுவும் பேசாது அங்கிருந்து சென்றாள். 

“என்னடா இப்படிப் பேசிட்டு போறா?” என்று ஆஷிக் கவலையாகக் கேட்க,

ஆதர்ஷ், “விடுடா, அவ அப்படித்தான். ஆனா அடுத்த நிமிஷமே சரியாகிடுவா, இதெல்லாம் நீ யோசிக்காத. இப்போதைக்கு ஜியாவை பத்தி மட்டும் யோசி சரியா?” என்ற ஆதர்ஷுக்கு தன் தலையை மட்டும் லேசாக அசைத்தவன் கண்களில் கவலையோடு, 

“ஜியாக்கு வேற எதுவும் ஆகாதுல, பயமாவே இருக்குடா.” என்று தவிப்புடன் கேட்க, 

“அவ உனக்கானவ, உன்னைவிட்டு எங்கையும் போகமாட்டா. இதுக்குச் சாட்சிதான், இந்த ஆறு வருஷத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சந்திச்சுக்கிட்டது. அவ உன்னைவிட்டு போகணும்னா விதி ஏன் உங்களைச் சந்திக்க வைக்கணும்? தைரியமா இருடா.” என்று தன் நண்பன் கூறிய ஆறுதலில் சற்றுத் தேர்ச்சியுற்றான்.

தன் தாயும் தன் நண்பனும் எவ்வளவோ வற்புறுத்தியும் எதுவும் சாப்பிட மறுத்தவன், ஜியா இருக்கும் அறைக்குப் பக்கத்திலே தன் விழிகளை மூடி அமர்ந்தவாறு தன் கடந்தகால நினைவில் மூழ்கினான். 

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!