ஆஷிக் தனது இரு கன்னத்தில் கை வைத்தவாறு கட்டில் மீது சம்பலம் போட்டு அமர்ந்துகொண்டு, வேண்டா வெறுப்பாய் டிவி சேனலை மாற்றிக் கொண்டிருக்க, விசில் அடித்தவாறே அவனது அறைக்குள் வந்த ஆதர்ஷ்,
“டேய் ஆஷிக் என்னடா இன்னும் ரெடி ஆகல?” என்று கேட்க, அவனிடம் எதையோ பறிகொடுத்தவன் போல, “ஏன் ஆகணும்?” என்று ஆஷிக் கேட்க, கடுப்பானவன் ஆஷிக் மீது தலையணையை எடுத்து அடித்தவாறே,
“ஏன்னா என்னடா அர்த்தம்? காலையிலே சொன்னேன்ல, மத்தியானம் ரெடியா இரு, ஷாப்பிங் பண்ண மாலுக்குப் போகணும்னு. அப்போ சரி சரினு சொல்லிட்டு இப்போ என்னனு கேட்குற?”
“சொன்னேனா?” என்றவன், ஆதர்ஷின் கையில் இருந்த தலையணையை வாங்கி அதன் மேல் குப்புற படுத்துக்கொள்ள, எரிச்சல் அடைந்த ஆதர்ஷ், ஆஷிக்கின் கரம் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி,
“இப்போ என் கூட ஷாப்பிங் வர போறியா, இல்லையா?” என்று முரண்டு பிடிக்க,
“மூடே இல்லடா, நீ போய்ட்டு வாயேன்…”
“டேய் தனியா போக எனக்கு மூட் இல்லைடா.”
“அப்போ வா, ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம்.” என்று கரம் பிடித்தவனை அடித்தவன்,
“உனக்கு என்னடா ஆச்சு?”
“எரிச்சலா இருக்குடா, ஜியாவ பார்க்கணும் போல இருக்கு. அவ கூடவே இருக்கணும் போல இருக்கு. ஆனா அம்மா அவங்க போய் ஜியா வீட்ல பேசுற வரைக்கும் என்னை அவளை மீட் பண்ணாதனு சொல்லிட்டாங்க. நீயும் ஜியாவை இப்போதைக்குப் பார்க்க போகாதனு சொல்லிட்ட. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு, எந்த ஒரு விஷயம் மேலயும் எனக்கு ஒரு விருப்பமே இல்லைடா. சரி பார்க்கதான் முடியலை, ஃபோன் பண்ணலாம்னா அவ எடுக்கவே மாட்டிக்கிறா.”
“ஹாஸ்பிடல்ல இருந்து இப்போதான் டிஸ்சார்ஜ் ஆகிருப்பாடா, ரெஸ்ட்ல இருக்கலாம்ல? ரெண்டு, மூணு நாள் கழிச்சு அவளே உன்கிட்ட பேசுவா. ஜியா உனக்குத்தான்னு முடிவாகிடுச்சு, உங்க வீட்ல எந்தப் பிரச்சனையும் இல்லை. ஜியா வீட்லையும் உங்க கல்யாண விஷயத்துக்கு ரொம்ப ஒன்னும் எதிர்ப்பு வரும்னு எனக்குத் தோனலை. ஸோ, நான் சொன்ன மாதிரி நீ கொஞ்சம் பொறுமையா இரு. எதுவும் கிறுக்குத்தனம் பண்ணி, எல்லாம் கூடி வரும் போது கெடுத்து விட்றாத.” என்ற ஆதர்ஷைப் பார்த்து ஆஷிக் முறைக்க,
“முறைச்சாலும் என் பதில் அதுதான்.” என்று கூற, சரி என்பதைப் போல் தலையை அசைத்தவன் மீண்டும், “அப்போ இதெல்லாத்தையும் சீக்கிரமா பண்ணினா என்ன? எதுக்குத் தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு…” என்று ஆரம்பித்தவனிடம், என்ன செய்வது என்று புரியாமல் ஆதர்ஷ்,
“உன்னை… இல்லை நான் தான்டா சுவற்றுல போய் முட்டிக்கணும்.” என்று கூற அதைக் கண்டு சிரித்த ஆஷிக், “டேய் டென்ஷன் ஆகிட்டியா என்ன? சும்மா உன்னைக் கடுப்பேத்த அப்படிச் சொன்னேன்.” என்றவாறு அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
“டேய் போடா, சீக்கிரமா கிளம்பு.” என்ற ஆதர்ஷின் கன்னத்தைக் கிள்ளியவாறே, “மூஞ்ச தூக்காத, பத்து நிமிஷத்துல ரெடி ஆகிருவேன்.” என்று அவன் கூறிய சில மணிநேரத்தில் இருவரும் தங்களின் காரில் மாலுக்குச் சென்றனர்.
தங்களுக்குள் தேவையான பொருட்களை வாங்கியபிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்ப அப்பொழுது ஆஷிக்,
“டேய் பார்த்தியா இவ்வளவு பெரிய மால்ல ஆம்பளைங்களுக்கு மூணே மூணு ஷாப்தான் இருக்கு. ஆனா இந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் வெரைட்டி வெரைட்டியா இருக்குல? சல்வார்க்கு தனி ஷாப்பு, பார்லர்லக்கு தனி, மேக் அப் ஐட்டம்ஸ்க்கு தனி, ஏன் செருப்புக்கு கூடத் தனியா?” என்றவன், தனக்கு எதிரே இருக்கும் ஒரு துணிக்கடையில் ஜியாவைக் கண்டு, “டேய் ஆதர்ஷ், அது ஜியா தானே?”
“ஆமா”
“ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கா? நீ நில்லு, நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்று ஆதர்ஷிடம் கூறிவிட்டு அவளை நோக்கி நடந்தான்.
அங்கே ஜியா பிங்க் நிற சல்வார் ஒன்றை எடுத்து தன் மேல் வைத்து பார்த்து, “இது என்ன சைஸ்?” என்று விற்பனை பிரிவில் உள்ள பெண் ஊழியரிடம் தன் கண்கள் மிளிர வினவ,
அவர், “இது எல் சைஸ் மேம்.” என்றதும் முகம் சுருங்கியவளாய்,
“ஓ…” என்றவள் தனக்கு மட்டும் கேட்குமாறு, “எனக்கு இது செட் ஆகுமா ஆகாதானு தெரியலையே? இது எனக்கு ரொம்பப் புடிச்சுருக்கு, ஆனா கண்டிப்பா செட் ஆகாது. ம்ம்… கடவுளே எல் சைஸ்னா சின்னதாதான் இருக்கணுமா? ஏன் என் சைஸ்க்குச் செட் ஆகுற மாதிரி எல் சைஸ டிசைன் பண்ண கூடாதா?” என்று அந்த ஆடையைத் தன் மேல் வைத்தவாறு, கண்ணாடியின் முன்பு நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பின்னால் வந்து நின்ற ஆஷிக் தன் நாடியை அவளது தோளில் வைத்தவாறு, “பேபி இது உனக்குச் செட் ஆகாதுடா, ஹிப் பக்கம் கொஞ்சம் வெயிட் போட்ருக்கடா.” என்று கூறி கண்ணடிக்க, அருகில் உள்ள பெண் ஊழியர் அவன் கூறியதைக் கேட்டு சிரிக்க, கோபமுற்ற ஜியா, ஆஷிக்கை பார்த்து முறைத்தவாறே அந்தப் பெண்ணையும் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல,
“ஜியா நில்லு, எங்க போற?” என்றவாறு பின்னாலே ஆஷிக் செல்ல, எரிச்சல் அடைந்த ஜியா அவன் புறம் திரும்பி,
“எதுக்கு இப்போ ஜியா ஜியானு ஏலம் விடுற?”
“முதல் தடவ கூப்பிடும் பொழுதே நீ என்னனு கேட்ருக்கலாம்ல?”
“என்ன?” என்று கோபமாய் கூறியவளைப் பார்த்து ஆஷிக்,
“ஷப்பா! என்ன கோபம்? சரி ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ற?”
“ம்ம் தூங்கிட்டு இருக்கேன்.”
“ஓ தூங்கிட்டியா?” என்ற ஆஷிக்கைப் பார்த்து முறைத்த ஜியா அங்கிருந்து கிளம்பப் போக, “ஏய் ஜியா சாரி சாரி…” என்றவன்,
“ஹெல்த் எப்படி இருக்கு?” என்பதற்குள்,
“அக்கா!” என்று அழைத்துக் கொண்டே வந்த சரண்யா,
“எனக்கு அந்தக் கடையில உள்ள மேக் அப் கிட் வேணும்.” என்று கேட்க, “அதெல்லாம் ஏதும் வேண்டாம் ஜியா, ஏற்கனவே வீட்ல இருக்கிறத யூஸ் பண்ணினா அதுவே போதும்.” என்று சரண்யாவின் பின்னால் வந்த ஜியாவின் சித்தி ஆஷிக்கைப் பார்த்ததும் புன்னகைக்க,
பதிலுக்குப் புன்னகைத்தவன், “வணக்கம் சித்தி, எப்படி இருக்கீங்க?” என்ற ஆஷிக் சரண்யாவிடம், “ஹாய் சரண்யா, எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன்” என்று பதிலுக்குப் புன்னகையோடு கூறியவளிடம்,
“ஏய் உனக்கு அந்த மேக் அப் கிட் வேணுமா? நாம போய் வாங்கலாமா?” என்று கூறி யாருடைய சம்மதமும் கிடைக்கும் முன்பே சரண்யாவை அழைத்துக் கொண்டு கடைக்குள் செல்ல, சரண்யாவோ ஆஷிக்கிற்கு எந்த மறுப்பும் கூற முடியாமல் தன் தாயும் அக்காவும் என்ன கூறுவார்களோ என்ற பயத்தில் விழித்துக் கொண்டிருக்க, சடசடவென்று மேக் அப் பாக்ஸை வாங்கியவன், அதற்கான காசை கொடுத்துவிட்டு பொருளை சரண்யாவிடம் கொடுக்க, அவளோ பாதித் தூரம் கையை நீட்டிவிட்டு அவனிடம் இருந்து வாங்க தயங்கிக் கொண்டிருந்தாள்.
“வாங்கிக்கோ சரண்யா.” என்று ஆஷிக் கூற, சரண்யாவை கரம் பற்றித் தன் பக்கம் இழுத்த ஜியா, “சரண்யா வாங்க மாட்டா.” என்று கூற,
“ஏன் வாங்க மாட்டா, சரண்யா வாங்குவா.” என்றவன் புன்னகையுடன் சரண்யாவிடம் கொடுக்க, ஜியா முறைப்பதை பார்த்துச் சரண்யா பயப்பட ஆஷிக் ஜியாவிடம், “ஏய் ஏன்டி இப்படிக் கண்ணை உருட்டிட்டு இருக்க, எனக்கே பயமா இருக்கு. சின்னப் பொண்ணு, பயப்பட மாட்டா?” என்றவனைப் பார்த்து சரண்யாவும் சித்தியும் சிரிக்க,
“வாவ்! சரண்யா உங்க ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கே?” என்றவன் அவளிடம் மேக் அப் கிட்டை கொடுக்க,
“இதெல்லாம் வேண்டாம்பா” என்ற திவ்யாவிடம்,
“இப்போ நீங்களா? இதுல என்ன இருக்கு, நான் குடுக்கக் கூடாதா?” என்றவனைப் பார்த்து ஜியா, “குடுக்கக் கூடாது” என்று கூற,
“உனக்கு என்ன ஆச்சு ஜியா? ஏன் இப்படிப் பேசுற? உன் தங்கச்சி எனக்கும் தங்கச்சி மாதிரி தானே, அவளுக்கு வாங்கிக் கொடுக்கிற உரிமை எனக்கில்லையா?”
“இல்லை, உனக்கு எந்த உரிமையும் இல்லை.” என்று ஜியா கோபமுற தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஆதர்ஷுக்கு எதோ பிரச்சனை என்று மட்டும் புரிய அவனும் அங்கே வந்தான்.
ஜியாவின் சித்தி, “ஜியா விடுடா, ஏன் கோபமா பேசுற?”
“சித்தி ப்ளீஸ், நீங்க இதுல தலையிடாதீங்க.” என்றவள்,
“என்ன அப்படிப் பார்த்துட்டு இருக்க, பதில் கிடைச்சுருச்சா? இங்க இருந்து கிளம்பு” என்று கூற கோபமுற்ற ஆஷிக்,
“என்னடி பதில் கிடைச்சுருச்சா?” என்று ஜியாவின் கரத்தை கோபமாகப் பற்றிகொள்ள, அவனைத் தடுத்த ஆதர்ஷைப் பார்த்து உரிமையாய் முறைத்தவன் ஜியாவை நோக்கி,
“உரிமை இல்லாமதான் எனக்காக விஷம் சாப்ட்டியா?” என்று கேட்க,
“உனக்காக யாரு விஷம் சாப்பிட்டா? நீயா எதாவது நினைச்சுகிட்டா என்னால எதுவும் பண்ணமுடியாது.” என்று தனலாய் வார்த்தைகளைக் கொட்ட, வெடுக்கென்று பற்றிய கரத்தை விடுவித்தான்.
***
