காதல்- 35

காதல்-35

அந்த காரின் நம்பரை வைத்து கீதா இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டனர்.

இன்பராஜாவிற்குள் சொல்ல முடியாத உணர்வுகள் நிகழ்வுகள் நடந்துக் கொண்டு இருந்தன.

தொலைத்தை பொக்கிஷத்தை மீண்டும் மீட்டெடுக்க துடித்துக் கொண்டு இருந்தான்.

சூரியாவோ “கீதா எங்கே இருக்கா தெரிஞ்சிடுச்சுடா. வா உடனே போய் அவளை அந்த துரோகி கிட்ட இருந்து மீட்டுட்டு வரலாம்” என்றவன் அருணிடம் திரும்பி “நீ போலீஸ அழைச்சுட்டு இந்த அட்ரஸ்க்கு வந்துடு” என்று தீவிரமாக கூறினான்.

அதை பார்த்துக் கொண்டு இருந்த ராமோ “டேய் சூர்யா, அப்போ நான் என்ன செய்யட்டும்” என கேட்க, 
சூர்யா அவனை குழப்பமாக பார்த்தான்.

“இல்ல மச்சி, நீ ராஜாவை கூட்டிட்டு கீதாவை அழைச்சிட்டு வர போற. இந்த பொடிப் பையனுக்கு கூட வேலை கொடுக்குற. ஆனா எனக்கு என்ன வேலை சொல்லவே இல்லையே.” என்று கூறிய ராமை பார்த்த சூர்யா தலையில் அடித்துக் கொண்டான்.

“கடவுளே இவனுக்கு மூளை ஒன்னு வச்சியா? இல்லையா?” என்று வானத்தை பார்த்து கேட்டான்.

அதற்குள் அருணோ காட்டமாக “சூர்யா, யாரை பார்த்து பொடிப்பையனு இவரு சொல்றாரு. கொஞ்சம் மரியாதை கொடுத்து பேச சொல்லுங்க. இல்லனா என்னாலயும் மரியாதை கொடுக்க முடியாது சொல்லிடுங்க. கண்டிப்பா இவருக்கு மூளைலாம் இல்ல.” என்றான்.

“டேய் யாரை பார்த்து” என ராம் பேச ஆரம்பிக்க,

“இப்போ இரண்டு பேரும் சும்மா இருக்கீங்களா”. என்று இன்பராஜா கத்தவும் இரண்டும் கப்சிப்னு என வாயை மூடிக் கொண்டன.

ராஜாவின் கோபத்தை பார்த்த சூரியா “மச்சி இப்ப எதுக்குடா டென்ஷன் ஆகுற. அதான் கீதாவை பார்த்துட்ட. கீதா இருக்கிற இடமும் தெரிஞ்சிடுச்சு அப்புறம் என்னடா.. என்று தோழனை சாந்தப்படுத்த முயன்றான்.

ராஜாவோ வெறுப்புடன் “அப்புறம் என்னவா? கீதா இருக்குற இடம் தெரிஞ்சா மட்டும் போதுமா? இல்ல நான் அவளை பார்த்தா மட்டும் போதுமா?” என்றான் கேள்வியுடன்.

சூரியாவோ குழப்பத்துடன் “இதுக்கு மேல வேற என்ன வேணும்டா?” என்றான்.

ராஜாவோ சோர்ந்து போய் “ஞாபகம், என் கீத்து ஞாபகங்கள்டா. அவளுக்கும் எனக்கும் இடையில் இருக்குற எங்களோட காதலின் நாட்கள் ஞாபகம் வேணும்டா. ஆனா, இது எதுவும் அவளுக்கு ஞாபகம் இல்லையே. அப்படி இருக்கும் போது என் கீத்து முன்னாடி நான் போய் நின்னா அவளுக்கு நான் யாரோ ஒரு ஆளுடா. அதுவும் நான் கோவிலில் வேற அவ கற்பனைனு நினைச்சு அந்த மாதிரி நடந்துக்கிட்டேன். இப்ப நான் அவள் முன்னாடி போனா அவ்வளவு தான். அவள் கண்ணுக்கு நான் கெட்டவனா தான் தெரிவேன்.” என்று  மனம் உடைந்து பேசினான்.

சூரியாவோ “மச்சி இப்ப என்ன பண்ண சொல்ற? அப்போ அவளை பார்க்க வேண்டாம்னு சொல்றீயா? அந்த பரத் கிட்டயே விட சொல்றீயா? அப்போ உங்க வாழ்க்கை? காதல்? என்னாகுறது” என இத்தனை கேள்வியுடன் ராஜாவை பார்த்தான்.

ராஜாவோ “நான் அப்படி சொல்லல சூர்யா. அந்த பரத் கிட்ட என் கீத்துவை விட நான் என்ன முட்டாளா? என்னிக்கு நான் அந்த துரோகிய பார்க்கிறேனோ அன்னிக்கு அவன் சாவு நிச்சயம்டா” என்றான் கோபத்துடன்.

அதை கேட்ட சூரியா “டேய் ராஜா நீ அவனை சாகடிச்சுட்டு ஜெயிலுக்கு போயிடுவ. அப்போ கீதா நிலைமைய நினைச்சு பார்த்தியா?” என்று சூரியாவின் கேள்வியில், இன்பா அமைதியாக நின்றான். இன்பாவின் அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் சூர்யா.

“ராஜா, இங்க பாரு! பாவம்டா கீதா அவள் வாழ்க்கையில படக்கூடாத கஷ்டத்தையெல்லாம் அனுபவிச்சுட்டா. இன்னமும் அவள் வேதனையை தான் அனுபவிக்கணுமா. நீயும் கீதாவும் சந்தோஷமா வாழ்க்கையை வாழணும்டா. கீதா இதுக்கு அப்புறமும் கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுடா,  அந்த பரத்துக்கு தண்டனையை கொடுக்கிற வேலையை போலீஸ் பார்த்துப்பாங்க. இனி மேல் கீதாவுக்கு பழைய ஞாபகம் எப்படி வர வைக்கிறதுனு தான் நம்ம யோசிக்கணும்” என்று அறிவுரை வழங்கினான்.

அருணும் “ஆமா சார், சூர்யா சொல்றது தான் சரி. நம்ம இனி ஏஞ்சலை.. ஐ மீன் கீதாவை பத்தி தான் யோசனை செய்ய வேண்டும். பரத்தை பத்தி இல்லை சார்” என்று சொல்ல,

ராம் மனதிலோ “என்னடா ஆளு ஆளுக்கு ஒன்னு ஒன்னு சொல்றாணுங்க. இந்த இடத்துல நம்ம எதுவும் சொல்லன்னா நமக்கு தானே மொக்கை. இந்த அருண் கூட சொல்றான் ஆனா நமக்கு தான் டக்குனு எதுவும் தோன மாட்டிங்குது. யோசி..ராம் யோசி, இந்த பொடிப்பையன் முன்னாடி மொக்கை வாங்காதடா. கருமம் கருமம் இந்த நேரத்துல எதுவும் தோன்ற மாட்டிங்குது.”என்று தன்னை தானே திட்டிக் கொண்டவன் “ஹாங்.. இதை சொன்னா கண்டிப்ப நம்மளை பத்தி உயர்வா நினைப்பாங்க” என்று அவன் யோசனையை சொல்ல வாய் திறக்க, இன்பா பேச ஆரம்பித்தான்,

“நீங்க இரண்டு பேர் சொல்றது தான் சரி. நான் தான் கோபத்துல கீதாவை பத்தி நினைக்கல. முதல அவளுக்கு என் ஞாபகத்தை கொண்டு வரணும். என்ன தான் பழசுலாம் மறந்தாலும் அவங்க அடி மனதில் ஏதோ ஒரு மூலையில அவங்க உயிரா நினைக்கிறவங்க ஞாபகம் ஒளிஞ்சு இருக்கும் தானே? அதை மட்டும் நம்ம வெளியே கொண்டு வந்துட்டோம்னா, அதுக்கு அப்புறம் கவலையே இல்ல சூர்யா” என்று நம்பிக்கையோடு பேசினான்.

இன்பராஜா பேசிக்கொண்டு இருக்கும் போதே ராம் அவன் சொல்ல வந்ததை சொல்ல முயற்சி செய்தான். பாவம் இன்பா தான் அவனை பேசவே விடவில்லையே, அதற்குள் சூர்யா பேச தொடங்கினான்.

“ஆமா மச்சி, நீ சொல்றதும் சரி தான். எப்படியாவது நம்ம இதை மட்டும் பண்ணிட்டோம், எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்டா. ஆனா நம்ம இப்ப என்ன செய்றதுனு தெரியலையே. கீதாவுக்கு எப்படி மச்சி பழைய ஞாபகத்தை வர வைக்கிறது?”

ராஜா மென் புன்னகையுடன் “காதல்” என்று சொல்ல, மூவரும் புரியாமல் பார்த்தனர்.

இன்பா சிரித்துவிட்டு “என்னங்கடா உங்களுக்கு புரியலயா. கீத்துவை எப்படி எல்லாம் நான் காதலிச்சேனோ, அதெல்லாம் திரும்பவும் அவ கண்ணு முன்னாடி வர வைக்க போறேன்” என அவன் திட்டத்தை சொல்ல ஆரம்பித்தான்.

அவங்க திட்டத்தை போடட்டும் வாங்க. நம்ம போய் அந்த மேடம் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம். ஆனா அவங்க யாருமே ராம் என்ன தான் சொல்ல வரான்னு கேட்கவே இல்லை

அங்கே “அம்முமா, ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க. காருல வரும் போதும் நீங்க யாரையோ திட்டிட்டு வந்திங்க. என்னாச்சுமா? யாராவது வம்பு பண்ணிட்டாங்களா?” என கார் ட்ரைவர் மணி கேட்டான்.

மணி ட்ரைவர் மட்டும் இல்லை அந்த வீட்டின் சமையல் வேலை முதல் வீட்டை சுத்தம் செய்வது தோட்டத்தை பார்த்துக் கொள்வது அம்முவுக்கு பாதுகாப்பாளன் கூட.

அவள் எங்கே வெளியே சென்றாலும் இவன் தான் அம்முவுக்கு காவலன். கோவிலுக்கு எப்போ அம்மு சென்றாலும் இவன் மட்டும் வண்டியிலே இருந்துவிடுவான். ரொம்ப நல்லவன் நியாயம் எதுவோ அதுக்கு துணை நிற்பவன்.

இரவு உணவை அம்முக்கு பரிமாறிக் கொண்டே தானும் சாப்பிட ஆரம்பித்து காலையில் இருந்து அமைதியாக இருந்தவளை மணியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அம்முவிடம் கேள்வி கேட்க அவளோ “எதுவும் கூறாமல் சாப்பிட்டு முடித்து விட்டு “தூக்கம் வருகிறது” என்று சொல்லிவிட்டு சென்றவளை அதிசயமாக பார்த்தான் மணி.

‘எப்போவும் பேசிகிட்டு இருக்கிறவங்க ஏன் இன்னிக்கு பேசவே இல்லை. ஏதோ சரியில்லை முதல இதை ஐயா கிட்ட சொல்லணும்’ என்று தன் போனை எடுத்து டயல் செய்தான்.

ஐயா “அம்மா என்னவோ மாதிரி இருக்காங்க.” என்று கூற, அந்த பக்கம் பதிலை கேட்டவன் 

“என்னனு கேட்டேன் எதுவும் சொல்லல” என்று பதில் அளித்தான்.

மீண்டும் எதிர்முனையில் பேசியதற்கு பணிவுடன்
“சரிங்க ஐயா, எப்போ வருவீங்க?” என்று கேட்க, அதன் பதிலையும் கேட்டவன்

“ம்ம்..சரிங்க ஐயா வச்சிடுறேன்” என்று போனை பேசி முடித்துவிட்டு வெளியே இருக்கும் ஒரு அறையில் தூங்க சென்றான்.

அந்த வீட்டில் அம்முவும் மணி மற்றும் அவன் மனைவியும் தவிர வேற யாரும் தங்க கூடாது என உத்தரவு போட்டு உள்ளான் அந்த வீட்டின் உரிமை உள்ளவன்.

என்ன தான் மணியும் அவன் சம்சாரம் ஆறு மாதமாக இங்கேயே இருந்தாலும் அவர்களுக்கு அந்த கடவுள் குழந்தை பாக்கியம் மட்டும் தர மறுத்துவிட்டார் போல.

எத்தனையோ தெய்வத்தை வேண்டியும் எதுவும் பலன் தரவில்லை. ஒரு வேலை மருத்துவரிடம் அழைத்து சென்றால் தீர்வு கிடைக்கும் என்று நண்பர்கள் சொல்ல அப்படியே செய்தார்கள் இருவரும்.

பின் இருவருக்கும் குறையில்லை ஆனால் ட்ரீட்மென்ட் கண்டிப்பா எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பணம் நிறைய செலவாகும் என்று டாக்டர் சொல்ல, வாடிப் போன முகத்துடன் வீடு வந்தவருக்கு, தன் நண்பன் முக்கியமான வேலலை இருக்கிறது அதை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என தெரிய வந்ததும் எதை பற்றியும் கவலைப்படாமல் சம்மதம் சொன்னான்.

பிறகு தான் அம்முவை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும் மற்ற வேலையை செய்யவும் சொல்ல முதலில் யோசித்தவன் பின் அம்மு இருந்த நிலைமையை பார்த்து ஒப்புக்கொண்டான்.

அம்மு இந்த கொடைக்கானலுக்கு வரும் போதே தான் யார்..?அப்பா, அம்மா யார்? என்று தன் பழைய ஞாபகத்தை இழந்து ஒரு சிறுப் பிள்ளை போல் இருந்தவளை பார்த்ததும் மணிக்கும் அவர் மனைவிக்கும் பிடித்து விட சரி என்று சொன்னார்.

அதுவரை அவனிடத்தில் தான் யார் தன் பெயர் என்ன என்று கேட்டு, உயிரை எடுத்தவள் மணியையும் அவன் மனைவியையும் பார்த்ததும் அவர்களிடம் ஒட்டிக் கொண்டாள்.

“உன் பெயர் என்ன” என்று கேட்ட போது, “அம்முன்னு சொன்னாங்க” என்று அவள் சொல்ல இருவரும் முழித்தனர்.

பின் தான் தெரியும் அம்முவுக்கு பழைய ஞாபகம் எதுவும் இல்லை என்று. அப்போ வாயை திறந்தவள் தான் இன்று காலை நடந்த நிகழ்வுற்கு முன் வரை கேள்விகளை கேட்டு அவர்களை திணற வைத்தாள்.

தினமும் கோவிலுக்கு போகும் பழக்கத்தை இங்க வந்ததுல இருந்து பழக்கப்படுத்திக் கொண்டாள். பாவம் அந்த கடவுளை கூட இவள் விட்டு வைக்கவில்லை.

“என்னை பற்றி எதுவும் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன். நீ நல்லா ஒய்யாரமா உட்கார்ந்துட்டு இருக்க. நான் யாரு.. எனக்கு என்னாச்சு ஏன் இப்படி இருக்கேன் எதுவும் தெரியல. என்னை பாதுக்காப்பா வச்சு இருக்கிறவன் கிட்ட கேட்டா என்ன என்னவோ சொல்றான். ஆனா அவன் சொல்ற எதுவும் என் மனசு ஏத்துக்க மாட்டிங்குது. ஏன் ஆண்டவா, என்னை இப்படி சோதிக்கிற நான் இங்கு வந்து ஆறு மாதம் கடந்துடுச்சு ஆனா என்னை பற்றின ஞாபகம் மட்டும் வர மாட்டிங்கிது,

எனக்காக யாரோ காத்திருக்காங்கனு மட்டும் என் உள்மனசு சொல்லிட்டு இருக்கு. ஆனா யாரு எதற்கு ஏன் என்னை தேடி வரல. இந்த கேள்விக்கு எப்போ தான் பதில் கிடைக்கும். என்னால ஏன் அவன் சொல்றத ஏத்துக்க முடியல, அவன் பொய் சொல்கிறான் என்று என் மனசு ஆணித்தரமா நினைக்குது. காரணம் அவன் எப்போது எல்லாம் என் கிட்ட பேசுறானோ அப்போ எல்லாம் என் முகத்தை பார்த்து பேச மாட்டிங்கிறான். தலையை மறுப்பக்கம் பார்த்து தான் பேசிகிறான்,

இதுல இருந்தே தெரியுது அவன் பொய் சொல்கிறான் என்று. இதுக்கு எல்லாம் எப்போ தான் முடிவுக்கட்ட போற கடவுளே” என்று தரிசனம் செய்து விட்டு காரை நோக்கி வெளியே வந்தவள் தன்னை நோக்கி வந்தவனை கவனிக்க தவறினாள். 
   
அதே சமயம் அம்முவை பாதுகாப்பாக வைத்து இருப்பவன் எண்ணங்களோ ஆறு மாத்ததிற்க்கு முன் நடந்ததை யோசித்து. கொண்டு இருந்தான்ன் 
காதலர்தினம் அன்று,

*********************************

தினேஷ் கீதாவை அழைத்துச் சென்று தன் காதலி தனுவை  அறிமுகம் செய்து வைத்தான். பின் கொஞ்ச நேரம் அவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துவிட்டு தன்னவனை பார்க்க  ஆசையோடு வந்தவளை வழிமறித்தான் பரத்.

பரத்தை பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள் பின் சுதாரித்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்ப நினைத்தாள். ஆனால் பரத்தோ அவளை போக விடாமல் தடுத்தான். “நில்லு கீதா” என்க. அவள் நிற்காமல் போகவும் அவள் கையை பிடித்து நிறுத்தினான்.

பரத் கையை பிடித்ததும் கோபம் கொண்டவள், சட்டென்று அவன் கண்ணத்தில் அறைந்தாள்.   

“கையை விடு உன்னை பார்க்கவே அருவெறுப்பா இருக்கு. என்ன தைரியம் இருந்தா என் கையை பிடிச்சு இருப்ப?. என் வாழ்க்கையை அழிச்சவன் தானடா நீ. உன்னை எல்லாம் பாவம்னு நினைத்து படிக்க வைத்து நண்பனாக நினைச்சு பழகுனான் என் இன்பா. அவனுக்கே நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு வெட்கமே இல்லாம என் கண்ணு முன்னாடி வந்து நிக்கிற. நீ என் கிட்ட லவ் சொல்லும் போதே உன்னை செருப்பால அடிச்சேன்ல. இன்னுமா உனக்கு புத்தி வரல என்று ஆவேசமாக பேசியவளை பார்த்து தன் இருக்கரத்தையும் மார்புக்கு நடுவே கட்டிக் கொண்டு ரசித்து சிரித்தான்.

அவன் பார்வை கீதாவுக்கு உடல் முழுதும் கூசியது. நெருப்பை அள்ளி தன் மேல் போட்டது போல் உணர்ந்தாள்.

ஆனால் பரத்தோ வெகு நிதானமாக “என்ன கீத்துமா, திட்டி முடிச்சிட்டியா? என் மேலே இருந்த கோபம் குறைந்ததா? என்று அவள் கேட்டான்.

கீதாவோ கடும்சினத்தோடு “ஏய், நாயே என்னை அப்படி கூப்பிடாத. இல்லனா செருப்பு பிஞ்சுடும்” 
கீதா பரத்தின் முகத்தை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்.

அவளின் செயலில் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு “இன்னும் எத்தனை நாளுக்கு அந்த ராஜாவ பத்தியே நினைச்சிட்டு இருப்ப? அவன் உன்னை பத்தி கவலை படவே இல்லை அப்படி கவலைப்பட்டு இருந்தானா கண்டிப்பா உன்னை தேடி வந்து இருப்பான். அட்லீஸ்ட் நீ, உயிரோட  இருக்கியா இல்லையானு விசாரிச்சு இருப்பான். இல்லையின்னா இத்தனை வருஷமா அவன் போன் பண்ணுவான்ற நம்பிக்கையில் உன் நம்பரை கூட மாத்தாம வச்சு இருந்தியே அவன் உனக்கு போன் பண்ணான்னா? அவன் உனக்கு போன் பண்ணுவான்னு நினைச்சு தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு உனக்கு வர போனை அட்டென்ட் செய்து அவனா தான் இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தியே. ஒரு நாளாவது அவன் கிட்ட கேட்டு இருப்பியா. அப்படி நீ கேட்டு இருந்தா அந்த போன் கால் யாரு பண்ணி இருப்பானு இந்நேரம் உனக்கு தெரிஞ்சி இருக்கும். ஏன்னா அவன் உன்னை மறந்துட்டான். அவனுக்கு நீ தேவை இல்லை.” என்று வேண்டுமென்றே அவளை கோபப்படுத்தினான் பரத்.

மீண்டும் அவன் கன்னத்தில் அறைந்தவள் “யாருக்குடா தேவை இல்லைன்னு சொல்ற. அவன் உயிரே நான் தான்டா, நீங்க எல்லாரும் சேர்ந்து, செய்த சதியால என் புருஷனை அன்னிக்கு தவிக்க விட்டு போனேன். என் இன்பா உயிர் முக்கியம் தான் என் காதலை அடகு வைக்க சொன்னீங்களே. த்தூ…நீயும் அவங்களோடு சேர்ந்து இப்படி உன் நண்பணுக்கே நம்பிக்கை துரோகம் செய்ய உனக்கு எப்படிடா மனசு வந்தது.” என்று பரத்தை திட்டிக் கொண்டு இருந்த இந்த சமயத்தில் தான் அருண்  கீதாவை வீடியோ எடுத்தான்.

அவன் அன்று மட்டும் கீதாவின் அருகில் சென்று நடந்ததை கேட்டு இருந்தால் இந்நேரம் கீதா இன்பாவின் அருகில் இருந்து இருப்பாள். பாவம் அருணுக்கு மட்டும் இது தெரிந்து இருக்கவா போகுது.

பரத்திற்கும் சட்டென்று கோபம் தோன்ற “துரோகம், துரோகம் துரோகம்.. நம்பிக்கை துரோகம் யாரு யாருக்கு செய்தா?. அவன் தான் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தான்” என்று அவன் கூறியதை புரியாமல் பரத்தை பார்த்தாள்.

அவன் தொடர்ந்தான் “உன்னை முதலில் பார்த்தது யாரு தெரியுமா? இன்பானு நினைக்கிறியா? இல்லவே இல்லை. நான் தான் உன்னை முதல் தடவை பார்த்தப்பவே உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். அது தெரியுமா உனக்கு. ஆனா காதல் சொல்றதுல எனக்கு முன்னாடி அவன் முந்திக்கிட்டான் என்று பரத் காதலை பற்றி சொல்ல ஆரம்பித்தான். 
 

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page