காதல் 42

ராஜ உபச்சாரத்தோடு மாப்பிள்ளை வீட்டாரை ஆயிஷாவின் குடும்பத்தினர் உள்ளே அழைத்து வர ஷாஹித், சமீரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க, பதிலுக்குத் தனது அக்மார்க் கன்னக்குழி சிரிப்பை சிந்தியவன், இன்முகம் மாறாமல் மற்றவர்களின் கேள்விக்குப் பதில் கூறிக்கொண்டிருந்தான். 

ஆஷிக்கின் காதில் ஆதர்ஷ், “என்னடா இவன் சரியான சாம்பாரா இருப்பான் போலயே, அவங்க அப்பா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி பொம்மை மாதிரி தலைய மட்டும் ஆட்டிக்கிட்டே இருக்கான்.”

“ஆமாடா, அதான் மிஸ்டர் அஸாத் அன்னைக்கே இவனைப் பத்தி புகழ்ந்து தள்ளினாரே?”

“இந்த மாதிரி தொட நடுங்கி பசங்கள பார்த்தா செம காமெடியா இருக்கு.” என்று கூறும் பொழுது நடாஷா ஆதர்ஷைப் பார்த்து முறைத்தவாறே ஆஷிக்கிடம், “சமீர பார்த்தாலே செம கேரக்டரா தெரியுறாரு. அவருக்கு அழகும் இருக்கு, அறிவும் இருக்கு, தன்னடக்கமும் இருக்கு. பார்த்தவுடனே பிடிக்கக் கூடிய முகம். யுவர் சிஸ்டர் இஸ் ரியலி லக்கி. ரொம்பத் தன்மையா பேசுறாரு, ஆனா இதெல்லாம் சில பேருக்கு எங்க புரியப்போகுது?” என்றவள் ஓரக்கண்ணால் ஆதர்ஷை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல, 

குலுங்கி குலுங்கி சிரித்த ஆஷிக், “என்னடா இன்னும் உன் சண்டை ஒரு முடிவுக்கு வரலையா? சிஸ்டர் இன்னும் கோபமாவே இருக்காங்க.”

“டேய் என்ன பண்றதுனே தெரியலை, முறைச்சு முறைச்சு பார்குறா, எரிஞ்சு எரிஞ்சு விழுறா. நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது? இப்போ எப்படிச் சொல்லிட்டுப் போறா பாரு, டார்ச்சரா இருக்கு.”

“சாரி சொன்னியா?”

“நான் ஏன் சொல்லணும், அதான் நான் எல்லாத்தையும் மறந்துட்டு போய் பேசுறேனே?” என்றவனை ஏற இறங்க பார்த்த ஆஷிக், “அப்போ உனக்கு டார்ச்சராதான் இருக்கும்.” என்று புன்முறுவலோடு கூறி கேலி பேச, 

அப்பொழுது அங்கு வந்த திவ்யா, “தம்பி எப்படி இருக்கீங்க?” என்று ஆஷிக்கைப் பார்த்து கேட்க, 

அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்ற ஆஷிக், “அத்தை வாங்க, எப்போ வந்தீங்க, மாமா ஊருக்கு போறதா என்கிட்ட சொன்னாங்க, சரண்யா எங்க ஆளையே காணும்?”

“சரண்யாக்கு காய்ச்சல், அதான் நான் மட்டும் வந்தேன்.”

“ஹாஸ்பிடல் போனீங்களா?”

“இல்லை மருந்து கொடுத்திருக்கேன், இனிமேதான் பார்த்துட்டு கூட்டிட்டு போகணும்.”

“ஜியா எங்கபா?”

“ஜியா, ஆயிஷா கூட இருப்பா. நீங்க இருங்க, நான் கூட்டிட்டு வரேன்.” என்றவனைத் தடுத்த திவ்யா, “வேண்டாம்பா, நான் அப்புறம் பார்த்துகிறேன். சரி நான் அம்மாவை பார்த்துட்டு வரேன்.” என்றவர் அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு ஹாஜராவை காண சென்றார். 

பலவித உரையாடலுக்குப் பிறகு ஆயிஷாவை அவளது தோழிகள் அழைத்து வர, நிச்சயதார்த்தம் நடந்தேறும் நேரம் ஹாஜராவின் விழிகள் மட்டும் யாரையோ தீவிரமாய்த் தேடிக்கொண்டிருக்க, அப்பொழுது அஸாத் மெல்ல அவரது காதில் யாருக்கும் கேட்காதவாறு,

“என்ன உன் மருமகளைத் தேடுறியா?” என்று கடுகடுத்த குரலில் உதட்டில் சிரிப்பு மறையாமல் கேட்க, அதிர்ச்சியாகி நிமிர்ந்து தன் கணவரைப் பார்த்தவர், அவரது பார்வையிலே அனைத்தையும் புரிந்து கொண்டு, “பாவம்ங்க அந்தப் பொண்ணு.”

“அவளைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு, அதான் இங்க வர கூடாதுனு சொல்லிட்டேன். என்கேஜ்மென்ட் முடிஞ்சதும் வரட்டும்.”

“எல்லாரும் கேட்டாங்கன்னா…” என்றவருக்கு பதில் ஏதும் கூறாமல் இறுக்கமாகப் பார்க்க, இதற்கு மேல் பேசி பயனில்லை என்பது போல, அமைதியான ஹாஜராவின் உள்ளம் ஜியாவை எண்ணி கவலை கொள்ள மறக்கவில்லை. அந்த நேரம் அவரால் அதை மட்டும் தானே செய்ய முடியும். 

இறைவனின் துணையோடு அனைவரின் ஆசியோடு சமீர், ஆயிஷாவின் நிச்சயதார்த்தம் இஸ்லாமிய முறைப்படி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. 

பிறகு என்ன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விருந்தினர் அனைவருக்கும் பஃபே முறைப்படி உணவு மரிமாறப்பட, அனைவரும் தனித் தனியே அமர்ந்துகொண்டு உணவை அருந்தியவாறு தங்களுக்கு வேண்டியவர்களோடு அமர்ந்துகொண்டு உரையாடிக் கொண்டிருந்தனர். எப்பொழுது தனிமை கிடைக்கும் மனம் விட்டுப் பேசலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த சமீர், ஆயிஷாவுக்கு அவர்கள் எதிர்பார்த்தது போலவே சந்தர்ப்பம் அமைய, 

சமீரும் ஆயிஷாவும் தங்களின் காதல் அத்தியாயத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். 

ஒருபக்கம் ரோஹித், ஆஷிக் இருவரும் தனி அறையில் அமர்ந்து ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க, 

இன்னொரு பக்கம் ஆதர்ஷ், நடாஷாவை குட்டி போட்ட பூனையைப் போல வட்டமிட்டுக் கொண்டிருந்தான். 

இவ்வாறு அனைவரும் தங்கள் தங்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

ஆனால் ஜியா மட்டும் தனது அறையின் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீங்கி சிவந்திருந்த முகத்தில் வடிந்தோடிய கண்ணீர் தன் தடத்தை நன்கு பதித்திருக்க, வெட்டுண்ட கொடி போல உலர்ந்து காணப்பட்டாள். முகத்தில் ஆயிரம் கவலைகள் நீ, நான் என்று வரிசை கட்டி நின்றது. 

ஒன்றா, இரண்டா எதை எண்ணி கவலை கொள்வாள். எங்குச் சென்றாலும் உன்னை விட மாட்டேன் என்பது போல, தன்னைப் பின் தொடரும் பழைய நினைவுகளுக்காகவா? இல்லை தள்ளிருந்தே தன்னை வேட்டையாட துடிக்கும் அந்த அசுரர்களுக்காகவா? இல்லை என் பையனை மயக்கிட்ட என்று தன்னைத் தேளாய் கொட்டும் வார்த்தைகளுக்காகவா? 

எதை எண்ணி கவலை கொள்ளுவாள்? எதை எதிர்த்து போராடுவாள்? எதற்கெல்லாம் மிரண்டு ஓடுவாள்? துணையாய் இருக்க வேண்டிய கண்ணீர் கூட விட்டு விலக, தனிமையில் துணை தேடியவளின் பின்னால் இருந்து வந்த ஒரு குரல், 

“ஜியா, என்னமா அழுதுட்டு இருக்கியா?” அந்த குரலில் அத்தனை மென்மை. காயப்பட்ட தன் மனதிற்கு மருந்திட்டது போல ஒரு உணர்வு. அது யாருடையது என்பதை அவள் கிரகிக்கும் முன்பே, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரின் கரங்கள் அவளது தோள்களைத் தழுவ, சட்டென்று திரும்பியவளின் கண்களில் இருந்து திடீரென்று கண்ணீர் துளிகள் நிற்காமல் வழிந்தோட, தன் முன்னால் நின்று கொண்டிருந்த தன் அத்தை ஹாஜராவை இறுக்க அணைத்து கொண்டாள் ஜியா. 

அவரும் ஒரு தாய் தானே, அவர் முன்னால் அவளால் நடிக்க முடியவில்லை. ஓவென்று அழுதுவிட்டாள். 

மெல்ல அவளது முதுகை வருடி கொடுத்த ஹாஜரா, ஜியா அழுது முடிக்கும் வரை காத்திருந்தார். சிலபல நிமிடங்கள் கழிந்த பிறகு எதோ மனம் லேசான மாதிரி ஒரு உணர்வு, மெல் நிமிர்ந்தவள் எதோ பேச எத்தனிக்க அதற்குள் ஹாஜரா, 

“மன்னிச்சுருமா, உன்னைப் பார்த்தாலே தெரியுது அவர் உன்னை எவ்வளவு காயப்படுத்திருக்காருனு மன்னிச்சுருடா. எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியலை.” என்று தயங்கியவரின் கரங்களைப் பற்றிக் கொண்ட ஜியா அவரது மனதில் உள்ளதைப் புரிந்தவளாய், 

“இதைப் பத்தி நான் ஆஷிக்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்மா.” என்றதும் ஹாஜராவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட, அவரது கண்ணீரை துடைத்த ஜியா, “மா ப்ளீஸ் அழாதீங்க.”

“இல்லடா, இது ஆஷிக்குக்கு தெரிஞ்சா…” என்றவரை குறுக்கிட்ட ஜியா, 

“ஆஷிக்குக்குத் தெரிஞ்சா தேவை இல்லாம அப்பாகிட்ட கோபப்படுவான், அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் சண்டை வரும். இதைக் கூடப் புரிஞ்சிக்காதவளாமா நான்?” என்ற மறுநொடி ஜியாவை அணைத்து உச்சியில் முத்தமிட்டவர், அவளோடு இயல்பாகப் பேசி கொண்டே கீழே வர, அவர்கள் கலகலவெனச் சிரித்தபடி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதைக் கவனித்த ஆஷிக் அவர்களிடம், 

“உங்க ரெண்டு பேரையும் காணும்னு நான் தேடிட்டு இருக்கேன், நீங்க எங்க போனீங்க? சிரிப்புச் சத்தம் பலமா இருக்கு.” என்று கூறியவாறு, அவர்கள் இருவருக்கும் இடையில் சென்று இருவரது தோள்கள் மீதும் கை போட்டவன், கேலியாக அவர்களோடு பேசிக்கொண்டிருக்க அப்பொழுது அங்கே வந்த ஆயிஷா, 

“ஜியா இங்கையா இருக்க, உன்னை எங்க எல்லாம் தேடிட்டு இருக்கேன்? என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் சமீர்கிட்ட இன்ட்ரோ பண்ணிட்டேன் உன்னைத் தவிர. அவர்கிட்ட உங்க லவ் ஸ்டோரிய சொன்னேன், உடனே பார்க்கணும்னு சொன்னாரு. நீங்க ரெண்டு பேருமே வாங்க.” என்று ஜியாவோடு சேர்த்து ஆஷிக்கை அழைத்து இல்லை இழுத்துக்கொண்டு சென்றாள். 

நடாஷா சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் நேரம் பார்த்து, அவளது சல்வார் டேபிளில் சிக்கிக்கொள்ள, அதை எடுக்க அவள் திரும்புவதற்குள், 

“லெட் மீ ஹெல்ப் யு…” என்றவாறு சமீர் அவளுக்கு உதவி புரிய முன்வர, அப்பொழுது அங்கே வந்த ஆதர்ஷ், சமீரின் காதில், “பாஸ் இது என் ஆளு, நான் பார்த்துக்கிறேன், உங்க ஆளு உள்ளே வெயிட்டிங்.” என்று கூறி கண்சிமிட்ட, கன்னக்குழி ததும்பப் புன்னகைத்த சமீர், “எஸ் பாஸ், யு கேரி ஆன்.” என்று கூறி பதிலுக்குக் கண்சிமிட்டி தன்னிடம் நன்றி சொல்ல வந்த ஆதர்ஷிடம், “பாஸ் தேங்க்ஸ் அப்புறம், சிஸ்டர் வெயிட்டிங்.” என்றவாறு ஆதர்ஷின் தோளை நட்பாகத் தட்டிவிட்டு அங்கிருந்து சென்றான். 

“ஏய் நான் எடுக்குறேன்.” என்று கூறி நடாஷாவின் அருகில் வர, தன் கைகளை உயர்த்தி வேண்டாம் என்பது போலக் காட்டியவள், தானே எடுத்துவிட்டு ஆதர்ஷைப் பார்த்து தன் கண்கள் சிவக்க முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல, 

அவளது பார்வை அவனை எதோ செய்ய, அதுவரை தளர்ந்திருந்த அவனது முகம் அவளது ஒற்றைப் பார்வையிலே சருகாய் உலர்ந்து போனது. 

உணவு அருந்திய பின்பு அஸாத் தன்னைப் பேட்டியெடுக்க வந்த ப்ரெஸ் ரிப்போர்ட்டர்ஸ்களிடம் ஆயிஷா, சமீரின் திருமணம் மார்ச் 30, மூன்று மாத இடைவெளிக்கு பிறகு டெல்லியில் நடைபெறும் என்பதை அறிவித்து, மேலும் தொடர்ந்து தன் ஒரே மகன் ஆஷிக்கின் திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றதால், அனைவரையும் கூப்பிட முடியவில்லை. அதனால் வருகிற ஞாயிற்றுக் கிழமை பிரபல நட்சத்திர ஹோட்டலில் மிகவும் விமர்சசையாக அவர்களது திருமண வரவேற்பு விழா நடைபெறும். அனைவரும் வரவேண்டும் என்று அறிவித்துவிட்டு ரிப்போர்ட்டர்ஸ் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும், 

“ரிசெப்ஷன் அன்னைக்கு வந்து தெரிஞ்சிக்கோங்க, இப்போ பார்ட்டிய என்ஜாய் பண்ணுங்க.” என்று கூறி அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். 

இதைக் கவனித்த ஆஷிக், ‘என்னோட ரிசெப்ஷன அரேன்ஞ் பண்றதுக்கு இவர் யாரு?’ என்று எண்ணி கோபம் கொண்டவன், ஜியாவிடமும் ஆயிஷாவிடமும் இதோ வந்து விடுவேன் என்று கூறிவிட்டு அஸாத்தை நோக்கி சென்றான். 

ஆஷிக் சென்றதும் ஆயிஷா, “இந்த ஆஷிக் ஏன் இப்படிப் பண்ணிட்டு இருக்கான், சமீர மீட் பண்ணிட்டு எங்கையும் போக வேண்டியதுதானே?” என்று ஜியாவிடம் வசை பாட ஜியா ஆயிஷாவிடம், “விடு, அவனுக்கு எதாவது வேலை வந்திருக்கும், இப்போ உனக்குச் சமீர்கிட்ட என்னை இன்ட்ரோ குடுக்கணும், அப்படித் தானே?”

“ம்ம்”

“இதுக்கு ஏன் ஆஷிக் வரணும், நான் வரேன்.” என்று கூறி அவளைச் சமாதானம் செய்ய இருவரும் சமீரைக் காண சென்றனர். 

ஆஷிக், அஸாத்தை பார்த்து முறைத்தவாறு, “யாரை கேட்டு…” என்று ஆரம்பிக்கவும், 

அஸாத், ஆஷிக்கை ஒரு நொடி பார்த்துவிட்டு தன் மனைவி ஹாஜராவிடம், “இங்க பாரு ஹாஜரா, உன் பையன்கிட்ட சொல்லி வை, ஏற்கனவே அவன் பண்ணின காரியத்தால செம கோபத்துல இருக்கேன். அவனை எதுவும் பேசாம இருக்கச் சொல்லு. என் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் எல்லாரும் கேள்வியா கேட்குறாங்க, எரிச்சலா இருக்கு. அவனுங்க வாய அடைக்கத்தான் இந்த ரிசெப்ஷன் ஃபங்ஷன். 

இன்னும் ரெண்டு நாள்ல இவனுக்கும் ஜியாக்கும் ரிசெப்ஷன் பயங்கர க்ராண்டா நடக்கணும். வர்றவங்க எல்லாரும் கல்யாணத்தைப் பத்தி கேட்கவே கூடாது, அந்த அளவுக்கு க்ராண்டா இருக்கணும். எல்லா ஏற்பாடையும் நான் ஆரம்பிச்சுட்டேன், இவன் வாய மூடிட்டு நல்லபடியா இருந்தா போதும். வேற எதுவும் செய்ய வேண்டாம். அதை விட்டுட்டு எதாவது ஆர்ப்பாட்டம் பண்ணினான், எப்போதும் போலப் பொறுமையா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன். 

இந்த ரிசெப்ஷன்ல என்னோட மானம், மரியாதை எல்லாம் அடங்கிருக்கு, சொல்லி புரியவை.” என்று அவர் மூச்சு விடாமல் உறுதியாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

எதையோ பேச வாயெடுத்த ஆஷிக்கைப் பார்த்து முறைத்த ஹாஜரா, “பேசாத, நீ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிகிட்டல, அப்புறம் என்ன உனக்கு? அப்பா சொல்ற மாதிரி கேட்டு நட, உன்னைக் கெஞ்சி கேட்டுக்குறேன்.” என்று கெஞ்சிய தன் தாயைப் பார்த்து, 

“மா என்னமா நீங்க, அவரோட இமேஜ்காகப் பண்ணிட்டு இருக்காரு, அதுக்கு நீங்களும் சப்போர்ட் பண்றீங்க? அந்த ஆளு பேச்செல்லாம் என்னால கேட்க முடியாதுமா. அவரு யாரு, எனக்கு இதெல்லாம் பண்றதுக்கு?” என்ற மறுநொடி ஆஷிக்கைப் பார்த்துக் கை ஓங்கிய ஹாஜரா, சில நொடிகள் கழித்து ஓங்கிய கையைத் தளர்த்தியவாறு, 

“இங்க பாரு ஆஷிக், உனக்குப் புடிச்சுருந்தாலும் இல்லைனாலும் அவருதான் உன் அப்பா, இதை மாற்ற முடியாது. நீ கேட்டுதான் ஆகணும். என்னால முடியலை, உங்க சண்டைக்குப் பஞ்சாயத்து பண்ணி பண்ணி நான் ஒஞ்சி போய்ட்டேன். இதுவரைக்கும் வேற இப்போ புதுசா ஜியாவும் நம்ம வீட்ல ஒருத்தியா இருக்கா, அவ முன்னாடி தயவு செஞ்சி எதுவும் பண்ணாத. 

உன்னால எந்தப் பிரச்சனையும் வர கூடாது. மீறி வந்தது நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. உண்மையாவே உன் அம்மா மேல உனக்கு அன்பு இருந்தா, நான் சொல்றத கேளு.” என்றவர்,

ஆஷிக்கின் பக்கம் திரும்பி, “உன்னை நான் நம்புறேன். வருத்தப்படுற மாதிரி எதுவும் பண்ணாத. இங்க இருந்து நீ டெல்லி போற வரைக்கும் எந்தப் பிரச்சனையும் பண்ண கூடாது.” என்றவர் ஆஷிக்கின் பதிலுக்காகக் காத்திருக்க, தன் தாயின் அருகில் வந்த ஆஷிக், “நீங்க அழாதீங்க, நீங்க அழுதா மட்டும் என்னால தாங்கிக்க முடியாது. என் வாய்க்கு பெரிய ஜிப்பா போட்டுக்குறேன். அவர் பேச்சுக்கே வரமாட்டேன், எல்லாம் உங்களுக்காக.” என்று அவன் கூறவும், ஹாஜரா நிம்மதி அடைந்தவராய் தன் மகனின் தலையை மெல்ல வருடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

ஆஷிக்கின் கண்களில் இருந்த கோபம் மட்டும் இன்னும் நீங்காமல் அப்படியே இருந்தது. 

சமீர் யாருடனோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருக்க, “ஹாய் சமீர்!” என்றவாறு அவனது பின்னால் இருந்து ஆயிஷா அழைக்க, தன் அலைபேசியை ஹோல்டில் போட்டவன் ஆயிஷாவின் பக்கம் திரும்ப, 

“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று மெலிந்த குரலில் கேட்க,

“ஏய் இல்லை…” என்றவன் தன் மணிக்கட்டை உயர்த்திக் காட்டி, எப்படி இருக்கு என்று தன் புருவம் உயர்த்திக் கேட்க, 

“வாவ்! உங்க கைக்கு ரொம்ப அழகா இருக்கு, உங்களுக்குப் புடிச்சுருக்கா?” என்று தன் கண்கள் விரிய கேட்டவளைக் கண்டு தனது அக்மார்க் புன்னகையைச் சிந்தியவன், 

“என் லைஃப்லயே பெஸ்ட் கிஃப்ட்னா அது இதுதான்.” என்றவன் ஆயிஷாவைக் கட்டி அணைத்துக்கொள்ளத் தன் கைகளை விரிக்க, வெட்கப்பட்டவாறே விலகியவள்,

‘ஜியா ரூம்கு வெளியிலதான் நிக்கிறா.’ என்று தன் கைகளைக் காட்டி செய்கை செய்ய, ‘அச்சோ!’ என்று உதடு சுளித்தவன், 

“ஏன் வெளியில நிக்க வச்சுருக்க, முன்னாடியே சொல்ல மாட்டியா?”

“வர சொன்னேன், அவதான் நீ பார்த்துட்டு வா. நான் வெளியில வெயிட் பண்றேன்னு சொன்னா. நீங்க இப்படிப் பண்ணுவீங்கனு சுதாரிச்சுதான் என்னை மட்டும் அனுப்பிருக்கானு நினைக்கிறன்.” என்ற ஆயிஷாவைப் பார்த்து செல்லமாய் முறைத்தவன்,

தனது இடக்கரத்தை தன் கோட்டின் பாக்கெட்டில் நுழைத்து, வலது கரத்தால் தன் தலையைக் கோதியபடி அசடு வழிந்து புன்னகைக்க, அதைப் பார்த்து சிரித்தவாறே ஆயிஷா சமீருடன் ஜியாவிடம் சென்று, “இதுதான் ஜியா, என்னோட அண்ணி. அப்புறம் ஜியா, இதுதான் சமீர்.” இருவருக்கும் அறிமுகம் செய்த மறுநொடி,

அதுவரை மலர்ந்த முகத்துடன் இருந்த ஜியாவின் வதனம் வாடி வதங்கி போக, கண்களில் ஒருவித கலக்கம் சூழ்ந்துகொள்ள விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் நிற்காமல் வடிந்தோட, இதழ்கள் துடிக்க, கூனி குறுகி உடல் நடுங்க வார்த்தை வராமல், “ச… மீ… ர்…” என்று எழுத்துக்கள் குளறியபடி நின்றாள். 

ஜியாவின் முகத்தில் கலக்கம் என்றால், சமீருக்கோ அவனது ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு உணர்ச்சியை மாறி மாறி வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. 

வதனத்தில் இழந்ததை மீண்டும் பெற்ற மகிழ்ச்சி தெரிய, உதட்டில் ஒருவித புன்னகை அதன் அர்த்தத்தைக் கிரகிக்கும் முன்பே, அவனது கண்களில் ஒருவித கோபம் என்று மாறி மாறி அவன் வெளிப்படுத்திய உணர்வுகள் குழப்பத்தை அளித்தது.

“ஹலோ ஜியா, எப்படி இருக்க?” என்று அவன் வினவிய வார்த்தைகள் வேண்டுமானால் யதார்த்தமாய் இருக்கலாம். ஆனால் அவனது குரலில் தொனித்த ஒருவித கோபம் அதை ஜியா மட்டுமே அறிவாள். 

“சமீர் உங்களுக்கு ஜியாவை தெரியுமா?” என்று ஆச்சரியமாய் கேட்ட ஆயிஷாவிடம், ஒருவித அசட்டு புன்னகையோடு,

“தெரியும், எப்படித் தெரியாம இருக்கும்? ரெண்டு வருஷ நட்பாச்சே… சீக்கிரமா மறக்க முடியுமா என்ன?” என்றவன் ஜியாவைப் பார்த்து, “என்ன ஜியா நான் சரியா தானே சொல்றேன்.” என்று கூறி கண்களில் கோபம் தெறிக்க அவளைப் பார்க்க, 

சிலையென விறைத்து நின்றவளின் கண் முன்பு அவளைத் துரத்தும் நிகழ்வுகள் வரிசைக்கட்டி நிற்க, முகம் எல்லாம் வியர்த்து கொட்ட வெடவெடத்து போனவள்,

சமீரின் கேள்விக்குப் பதில் கூறாது முகமெல்லாம் வியர்த்து கொட்டியபடி மாடியில் இருந்து வேகமாக இறங்க, இறங்கிய வேகத்தில் ஆஷிக்கின் மீது மோதி நிற்க அவன், “என்ன ஜியா? ஏன் இப்படி ஓடி வர? என்னாச்சு?” என்று அவளது முகத்தில் தெரிந்த பயத்தை உணர்ந்து கேட்டான்.

அவனையே வெறித்துப் பார்த்தவள் மூக்கில் லேசாக ரத்தம் கசிய, கைகள் வெடவெடத்து ஆஷிக் சுதாரிப்பதற்குள் தரையில் சரிந்தாள்.

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!