தன்னிடம் இருந்து தப்பித்து ஓடிய பகலை, உன்னை விடமாட்டேன் என்பதாய் விடாமல் துரத்தி பிடித்துத் தனக்குள் முழுவதுமாகச் சிறைவைத்திருந்த இரவு வேளை. அந்தப் பகலை போல ஜியாவும் தன்னை விடமாட்டேன் என்று துரத்துபவர்களிடம் இருந்து ஓடுகிறாள்.
“ஜியா ஓடு… நிற்காத…” என்று உயிர்போகும் வலியில் தடுமாறி கூறிய குரல்… மனம் கேட்கவில்லை, நீதியை நிலைநாட்ட வேறுவழியின்றி உயிருக்கு போராடி கொண்டிருந்த, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனை திரும்பி திரும்பி பார்த்தவாறு கண்களில் குற்ற உணர்வோடு ஓடினாள். எனக்கு உதவியதால் தானே உனக்கு இந்த நிலைமை என்று உள்ளம் ஒரு பக்கம் அழ,
“அவளை விடாதடா” என்று தன்னைத் துரத்தியவனை மேலும் துரிதப்படுத்த அவனது அரக்க கூட்டாளிகள் கூச்சலிட, மின்னலென வந்தவனிடம் இருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தில் வேறு வழியில்லாமல் மனதை கல்லாக்கிக்கொண்டு ஓடினாள்.
சூழ்ந்திருந்த அந்த இருட்டில் திசை அறியாமல் ஓடினாள். வெகு தூரம் ஓடியவள் எதிர்பாராத விதமாக ஒரு பாறையின் மீது மோதி கீழே விழுந்தாள்.
பலமான அடி, எழ முடியவில்லை. இருந்தும் எழுந்தாள், ஆனால் மீண்டும் ஓடுவதற்குள் நெருங்கினான் அந்தக் கொடியவன்.
சிறுத்தையுடன் மான் போட்டியிட முடியுமா? அகப்பட்டாள், அந்தக் கொடிய அசுரனின் கையில்.
அவளைத் தன் முழுப் பலத்துடன் இறுக்கி பிடித்தான். தன்னை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ளத் தன்னை இறுக்கி பிடித்த கரத்தை தன் பற்களுக்கு இரையாக்கினாள்.
விடுவானா! அவனது ரத்தம் கொதித்தது. குறைக்குப் போதை வேறு. அவனுக்குள் இருந்த கொஞ்ச மனிதனும் உறங்கிப்போக, உருமாறினான் நர மாமிசனாய். அவளது பற்கள் பதம் பார்த்த அதே கரத்தால், கொத்தாக அவளது முடியைப் பற்றித் தரதரவென்று இழுத்துச் சென்றான் தன் அறைக்கு.
பலவாறு முயற்சித்தும் அந்தக் கயவனின் கரத்தில் இருந்து விடுபட முடியவில்லை. பூமலரெனக் கெஞ்சியும் பார்த்தாள். வேங்கையயெனச் சீறியும் பார்த்தாள். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. தன் முழுபலத்தால் அவனைத் தள்ள வெகுண்டெழுந்தவன்,
அவளது கேசத்தை இன்னும் உறுதியாய் கைப்பற்றி இழுத்து, அவளை வேகமாகத் தரையில் வீசினான். கசங்கி எறிந்த மலரை போலச் சுருண்டு வீழ்ந்தாள் ஜியா. ஆனாலும் விடவில்லை, மீண்டும் தட்டி தட்டி எழுந்தாள் அதே உறுதி கண்களில் மிளிர. விடவில்லை அந்த மிருகம்.
ஓங்கியடித்தான் அவளது கன்னங்கள் அதிர. அரை மயக்கத்திற்குச் சென்றாள். “ப்ளீஸ்… என்னை விட்டுடு…” என்ற வரிகளை மட்டும் அவள் முணுமுணுக்க,
“ஷட் அப்!” என்றவன், போதை வெறியில் சுவற்றோடு ஓங்கி அவளைத் தள்ள, தலை சுவற்றில் மோதி ரத்தம் விடாமல் வழிந்தோடியது.
“சு… ஜி… த்… ப்ளீ…” என்றவாறு மூச்சு பேச்சு இல்லாமல் தரையில் வீழ்ந்தாள். முரட்டுக் கரத்தில் சிக்கிய கொடிமலர் போலச் சுருண்டு கிடந்தாள்.
“சுஜித் வேண்டாம்…” என்று பிதற்றியாவாறே தன் கனவு கலைய வெடுக்கென்று முகம் எல்லாம் வியர்த்து கொட்ட எழுந்தவளின் கண்கள் குளமாகியிருந்தது.
இன்று சமீர் தன்னிடம் ஜியாவைப் பற்றிக் கூறியதையும், டாக்டர் எவ்வாறு அவளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதையும், பற்றி தன் அறையின் பால்கனியில் நின்று யோசித்துக்கொண்டிருந்த ஆஷிக்கிற்கு, இன்று ஹாஸ்பிடலில் மருத்துவரோட நடந்த உரையாடல் நினைவிற்கு வந்தது.
ஜியா மயக்க நிலையில் இருந்த நேரம், ஆஷிக் பதற்றத்துடன் மருத்துவரிடம், “மூக்குல இருந்து ரத்தம் வந்திருக்கு, என்னாச்சு? என் ஜியா நல்லா தானே இருக்கா?” என்று படபடப்போடு கேட்க,
“இப்போதைக்கு நல்லா இருக்காங்க, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.” என்ற பிறகே சற்று நிம்மதி அடைந்தான்.
“அவளுக்கு என்னதான் ஆச்சு?”
“பேனிக் அட்டாக். மனசு முழுக்கப் பயம். வெளிய சொல்ல முடியாத எதோ ஒரு விஷயம் அவங்களோட மனசை பயங்கரமா பாதிச்சுருக்கு. அந்தப் பாதிப்புதான் இன்னைக்கு அவங்கள இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்ருக்கு. ரொம்ப டிப்ரெஷன்ல இருக்காங்க. சொல்ல போனா கிட்டத்தட்ட லாஸ்ட் ஸ்டேஜ் மாதிரிதான். டிப்ரெஷன்ல இருந்து அவங்க வெளிய வந்தே ஆகணும். மூக்குல இருந்து வந்த இரத்தம் கூட அதிகப்படியான இரத்த அழுத்தத்தாலதான்.
இதை இப்படியே விட்டா, உயிருக்கே ஆபத்தாகிரும். ரத்தத்துல அழுத்தம் குடுக்கக் குடுக்க, அந்த அழுத்தம் மூளைய பாதிக்கும். ஏன் மூளைக்குப் போற ரத்த நாளங்கள்ல கசிவு ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கு. மறுபடியும் அவங்களுக்கு பேனிக் அட்டாக் வரவே கூடாது.” என்று அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், ஆஷிக் மனதில் ஆணி அடித்தது போல வலித்தது. பயத்தில் முகம் வியர்த்துகொட்ட கலவரத்தோடு அமர்ந்திருந்தான்.
“இதுக்கு ட்ரீட்மெண்ட் கிடையாதா, சரி பண்ண முடியும் தானே?” என்று கேட்டான் மருத்துவரின் முகத்தைப் பார்த்தபடி.
“மறுபடியும் அவங்களுக்கு அட்டாக் வராம பார்த்துக்குறதுதான் ஒரே வழி. அதைக் கூட உங்களாலதான் செய்ய முடியும். அவங்க பயத்துல எதாவது உளறுனாலும், அது என்ன ஏதுனு கேட்டு டென்ஷன் பண்ணாதீங்க. அதெல்லாம் ஒன்னுமில்லை, நான் உன் கூடவே இருக்கேன்னு அவங்களைக் கம்ஃபோர்ட் பண்ணுங்க, போத் மெண்டலி அண்ட் பிசிக்கலி. அவங்களை நார்மல் ஸ்டேஜ்க்கு கொண்டுவாங்க.
நீங்க அவங்க பக்கத்துல இருந்தா, எல்லாம் ப்ராப்ளமும் அவங்களால ஃபேஸ் பண்ண முடியும்னு அவங்களை நம்ப வைங்க. இதெல்லாம் பண்ணணும்னா நீங்க தைரியமா இருக்கணும். அப்போதான் அவங்களோட பயத்தைப் போக்க முடியும். உங்களோட அரவணைப்புதான் அவங்களுக்குப் பெஸ்ட் ட்ரீட்மெண்ட் அண்ட் பெஸ்ட் மெடிசின்.” என்று மருத்துவர் கூறியதை மனதில் பதித்துக்கொண்டவன் அவரிடம்,
“சர்ஜெரி பண்ணும் பொழுது உயிர் போறது மெடிக்கல் ஃபீல்டுல நார்மலான விஷயம் தானே?” என்று சமீர் கூறியதைப் பற்றி கேட்க,
“நார்மலான விஷயம்தான், ஆனா அது சம்பந்தபட்ட நபர்களைப் பொறுத்தது. ஒரு டாக்டரா இருந்து ஒரு அம்மாவையும் குழந்தையையும் காப்பாத்த முடியாம போய்டேனு அவங்களுக்கு ஒருவித குற்ற உணர்வு. மிஸ்டர் சமீர் சொல்றத வச்சு பார்க்கும் பொழுது உங்க மனைவி, அவங்களோட வேலைய ரொம்ப நேசிச்சுருக்காங்க. பேஷண்ட்ஸ்கிட்ட அன்பா இருந்திருக்காங்க. இந்த மாதிரி சென்சிடிவ் டைப் பெர்சன்ஸ் இப்படி எமோஷனலா பிரேக் ஆகுறது நார்மல்தான்.
இந்த மாதிரி சென்சிடிவ் டைப் பெர்சன்ஸ் டிப்ரெஸ்ட் ஸ்டேட்ல இருக்கும் பொழுது அவங்கள ஹாண்டில் பண்றது ரொம்பக் கஷ்டம். அட்டாக் வரும் பொழுது அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு சொல்ல முடியாது. சம் டைம்ஸ் தற்கொலை பண்ணிக்கவும் சான்ஸ் இருக்கு. ஸோ நீங்க ரொம்பக் கவனமா இருக்கணும்.” என்று மருத்துவரின் அழுத்தமான வார்த்தைகள், அவனது இரத்த அழுத்தத்தை எக்கு தப்பாகக் கூட்டியது. ‘தற்கொலை பண்ணிக்கச் சான்ஸ் இருக்கு’ என்ற அவரது வார்த்தைகள் அவனை வதைத்தது. உறைந்து போய் அமர்ந்திருந்தான். அவனது முகபாவங்களை வைத்தே அவனது நிலைமையை உணர்ந்த மருத்துவர் அவனிடம்,
“மிஸ்டர் ஆஷிக் ஏன், எதுக்குனு யோசிக்காம எப்படி அவங்கள அந்தக் குற்ற உணர்வுல இருந்து, வெளியில கொண்டு வர்றதுனு யோசிங்க. கண்டிப்பா உங்களால முடியும்.” என்று அவர் நம்பிக்கை கொடுக்க,
“ஒரு ஹஸ்பண்டா என் மனைவியைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம இருந்திருக்கேன்னு நினைக்கும் பொழுது ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று மிகவும் வருந்தினான். இப்படி மருத்துவர் கூறியதை எண்ணி பார்த்து என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையைக் கலைக்கும் விதமாய், உள்ளே ஜியா அலறும் சத்தம் கேட்க பதறியடித்தபடி தன் அறைக்குள் சென்றவன்,
படுக்கையில் அரண்டு போய் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்து கலங்கி போனான். ஆனாலும் மருத்துவர் கூறியதை எண்ணி பார்த்தவன், தன்னை முதலில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் முகத்தில் எந்தவித சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல், படுக்கையில் இருந்து எழும்பி உட்கார்ந்து, தன் இரண்டு முழங்கால்களின் முட்டையும் மடக்கி, தன் குதிக்காலால் ஊன்றி தடதடவென ஆடிக்கொண்டிருந்த தன் கைகளால் வளைத்து இறுக்கி பிடித்தவாறு, தன் முகத்தை மறைத்து விசும்பி கொண்டிருந்த தன் மனைவியின் கேசத்தை மென்மையாக வருடியவாறே அவளது அருகில் வந்து அமர்ந்தான்.
இறுக்கி பிடித்தும் தடதடவென நடுங்கிய மென்மையான தன்னவளின் கரத்தை, மெதுவாக பற்றித் தன் கரங்களுக்குள் அடக்கிய மறுநொடி நிமிர்ந்த பார்த்த ஜியா மூச்சு வாங்க ஏங்கிக்கொண்டே,
“ஆஷிக்…” என்று ஆஷிக்கின் பெயரை திரும்பத் திரும்ப அழைத்தவாறே, “அங்… கநா… ன்… என… க்…” என்று வார்த்தைகள் எல்லாம் குளறியபடி எதையோ பிதற்றியவள், பின்பு எதையோ யோசித்தவளாய் தன் மேல் இருந்த அவனது கைகளைத் தட்டிவிட்டு, விசும்பி கொண்டே அவன் எதிர்பார்ப்பதற்குள் குளியல் அறைக்குச் சென்று கதவிற்குத் தாழிட்டுக்கொண்டாள்.
அவளது இந்தத் திடீர் செய்கையை எதிர்பாராதவன் பதறிப்போய் கதவை பலமுறை தட்டியும் எந்தப் பயனும் இல்லாமல் போக, வேறு வழியில்லாமல் தன் முழுப் புஜ பலத்தையும் கொண்டு பல முயற்சிகளுக்குப் பிறகு, குளியல் அறையின் கதவை உடைத்தவனுக்கு அப்பொழுதுதான் போன உயிர் மீண்டும் வந்தது.
எங்கே உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஏதும் விபரீத முடிவை எடுத்துவிடுவாளோ என்கின்ற பயத்தில், கதவை திறந்தவனுக்கு உள்ளே அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது ஒருவித நிம்மதியைத் தந்தாலும்,
அங்கே ஜியா உறைந்து போகும் அளவிற்கு ஷவரில் இருந்து கொட்டி கொண்டிருந்த தண்ணீரில், தொபு தொபு என்று நனைந்து குளிரில் நடுங்கியவாறு தரையில் அமர்ந்திருந்த கோலம் அவனைக் காயப்படுத்தியது.
காதல் மனைவியின் துன்பத்தை எவ்வாறு போக்குவது என்று விளங்காமல், அவன் தவித்த தவிப்பு அவனது இரு கண்களின் கண்ணீரின் வழியே வழிந்தோடியது.
இருந்தும் தன் வலியை மறைத்து கொண்டவன், தன் இதழில் புன்னகை தளும்பத் தன்னவளின் அருகில் சென்று ஷவரை அணைத்துவிட்டு, ஹாங்கரில் தொங்க விடப்பட்டிருந்த துண்டை எடுத்து, ஜியாவின் முன்பு முட்டிபோட்டு அமர்ந்து கொண்டு அவளது தலையைத் துவட்டிக்கொண்டே,
“ஜியா நீ இன்னும் மாறவே இல்லை, மழையில நனையிறது உனக்குப் புடிக்கும்தான். ஆனா இப்படியா நடுஜாமத்துல, அதுவும் அடிக்கிற பனிகாத்துல? தொட்டாலே உறைஞ்சி போயிருவோம் போல, இந்த தண்ணில குளிச்சுட்டு இருக்கிற?” என்று கூற, ஜியாவின் கண்களில் மட்டும் பயத்தின் அளவு குறைந்தபாடில்லை.
பழைய நினைவுகள் அவளது கண்முன் நல்ல பாம்பை போலப் படமெடுத்து அவளைக் கொத்தி தின்ன துடித்துக் கொண்டிருந்தன.
அவளது விழிகளில் இருந்து கண்ணீர் நின்றபாடில்லை. இருந்தும் ஆஷிக் விட்டுக்கொடுக்கத் தயாராகயில்லை. சரிந்த கேசத்தை மெல்ல காதோரத்தில் சொருகியவன், இறகு போல இருந்த தன் மனைவியைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டு, குளியல் அறையில் இருந்து வெளியே வந்து இறக்கி விட்டவாறு,
நான் என்றும் உன்னுடன் இருப்பேன் என்பது போல, தன்னவளின் விரல்களைத் தன் விரலோடு பிணைத்துக்கொள்ள, ஜியாவின் முகத்தில் எதோ சிறு மாற்றம் இந்த முறை. அவள் அவனது கரத்தை உதறவில்லை.
ஜில்லென்று காற்று வீசி கொண்டிருந்த, தன் அறையின் பால்கனி பக்கம் தன்னவளை அழைத்து வந்தவன், அங்கே இருந்த நாற்காலியில் அமரவைத்து, சொட்ட சொட்ட நீர் வழிய வீசிய குளிர்ந்த காற்றில் அலைபோலப் புரண்டு அங்கேயும் இங்கையேயுமாய் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிக்கொண்டிருந்த, தன்னவளின் கறுத்தடர்ந்த கேசத்தில் இருந்த சிக்கை அவளுக்குச் சிறிதும் உறுத்தாதவாறு மிகவும் மென்மையாகத் தன் ஐவிரல் கொண்டு அவிழ்த்தான்.
சில்லென்று வீசிய காற்று, ஏற்கனவே நனைந்து உறைந்து இருந்த தன் தேகத்தை மேலும் குளிரூட்டிக்கொண்டிருக்க, அதுபோதாது என்று இறகினும் மென்மையாய் தன்னவனின் வருடல், என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து கிடைத்ததில் ஓரளவு தெளிவு அடைந்தவள். “ஆஷிக்…” என்று மெல்லிய குரலில் அழைத்ததும்,
அவளது முகத்தைப் பார்க்காமலே தன் இரு கைகளால் அவளது விழிகளில் இருந்து வழிந்த நீரை அவன் துடைக்க, நெகிழ்ந்து போனாள்.
“எப்… படி ஆஷிக்… பார்க்காமலே நான் அழுறேன்னு நீ கண்டு…” என்று அவள் தொடர்வதற்குள்,
தன் வலக்கரத்தால் தன்னவளை வளைத்து பிடித்தவன், தன் இடக்கரத்தை தன்னவளின் வலகரத்தோடு கோர்த்து. மெல்ல தன் நாடியை அவளது உச்சந்தலையில் ஊன்றி, “உனக்கு ஞாபகம் இருக்கா ஜியா…” என்றவாறு புதைந்திருந்த தன் பழைய நினைவுகளைத் தூசி தட்டியவன் மேலும் தொடர்ந்தான்.
“ஒருநாள் பயங்கர மழை, மணி ஒரு பன்னிரெண்டு இருக்கும். உன் வீட்டு முன்னாடி கொட்டுற மழையில நான் சொட்ட சொட்ட உன்னை மாதிரி, அப்போ நானும் நனைஞ்சிட்டு நின்னேன். நான் நிக்கிறது உனக்குத் தெரியாது. நீ வருவனு எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனாலும் நான் நின்னுட்டு இருந்தேன். அப்போதான் நீ ஜன்னல் வழியா வந்து நின்ன. முதல் தடவையா முழுசா உன்னை எனக்குள்ள உணர்ந்தேன். என்னைப் பார்த்துட்டு பதறி போய் கொஞ்சம் கூட எதைப் பத்தியும் கவலைப்படாம, அந்த நடு ராத்திரியில கொட்டுற மழையில சொட்ட சொட்ட நீயும் நனைஞ்சிட்டே என்கிட்ட வந்த.
கொஞ்சம் நேரம் என் கண்ணையே பார்த்த. ஏன் வந்த? என்னாச்சு? இப்படிப் பல கேள்விகள் நீ கேட்பனு நான் எதிர்பார்த்தேன். ஆனா நீ அதெல்லாம் கேட்காம அந்தக் கொட்டுற மழையிலும் என் கண்ணுல வடிஞ்ச கண்ணீரை துடைச்சு இப்படி…” என்று பிணைக்கப்பட்ட தங்களின் கரத்தை உயர்த்திக் காட்டி இது போல என்பதாய்,
“என் கைய இறுக்கமா புடிச்சுகிட்டு என் கண்ணைப் பார்த்து, எதுவா இருந்தாலும் சரியாகிரும். நான் உன் கூடவே இருப்பேனு சொல்லி என்னை இறுக்கமா கட்டி புடிச்ச. அந்த இறுக்கம், அந்த அணைப்புதான் முதன் முதல்ல நான் காதலை உணர்ந்த நேரம்.
உன்னால அந்தக் கொட்டுற மழையிலும் என் கண்ணீரை உணர முடியும் போது, என்னால முடியாதா?” என்று அவன் கூறிய மறுநொடி, ஜியா ஆஷிக்கின் மார்பை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
அவளிடம் வேறெதுவும் கூறாதவன், “எல்லாம் சரியாகிரும்.” என்று மற்றும் கூறி, தஞ்சமமென்று வந்தவளை தன் மஞ்சம் என்னும் நெஞ்சத்தில் புதைத்துக்கொண்டான்.
***
