சூரியன் கண்விழிக்க பொழுது எப்படித்தான் உருண்டோடியதோ? மயக்கும் மாலை பகலை மையம் கொள்ள, அனைவரும் ஆஷிக், ஜியாவின் ரிசப்ஷன் ஏற்பாட்டில் கவனமாய் இருந்தனர்.
எப்பொழுதும் இரவு நேரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த நட்சத்திர விடுதி, இன்று மகுடத்திற்கு மகுடம் சேர்ப்பது போலப் பல விலையுயர்ந்த அலங்கார விளக்குகளால், மிகவும் பிரம்மாண்டமாய் காட்சியளித்தது.
அஸாத் வேலையாட்களைத் தன் பாணியில் அதட்டிக்கொண்டிருக்க, அவரது பணியாட்களும் அவருக்கு ஆமாம் போட்டவாறு, அவர் சொன்ன திருத்தங்களைச் சரி செய்து கொண்டிருந்தனர்.
அஸாத் தன் மேனேஜரிடம், “என்ன வேலை பாக்குறாங்க, நான் போய் சொல்ல வேண்டியதா இருக்கு. நீங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? கெஸ்ட் எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க. ஐ டோன்’ட் வாண்ட் எனி சார்ட் ஆஃப் இன் கன்வீனியன்ஸ்.” என்று கடுகடுக்க,
மேனேஜர் மோகனும் வழக்கம் போல எந்தச் சலனமும் இல்லாமல், “எஸ் சார், அரேன்ஞ்மென்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு. நீங்க வந்து ஒரு தடவை க்ராஸ் செக் பண்ணிட்டீங்கனா, ஆல் செட் சார்.” என்று கூற, அதுவரை டென்க்ஷனாக இருந்த அஸாத், மோகனின் பதிலில் திருப்தி அடைய இதர ஏற்பாடுகளைக் காண சென்றார்.
சந்தன நிறத்திற்கும் தங்க நிறத்திற்கும் பொதுவாக உள்ள நிறத்தாலான லெஹங்காவில், வேறு எந்த அணிகலன்களும் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் ஜன்னலின் கம்பியை இறுக்கி பிடித்துக் கொண்டு, அந்த பால் நிலவைப் பார்த்தவாறு குழப்பத்தில் மூழ்கிருந்தாள் ஜியா.
சமீர் பேசிய பின்பு ஒரு வகையாகத் தன் மனதை தேற்றி கொண்டாலும், நெஞ்சு குழியின் ஓரத்தில் எதோ ஒரு வலி ஜியாவை துரத்திக் கொண்டுதான் இருந்தது. சொல்ல முடியாத வலி… வாழ்ந்து ஆஷிக்கை கஷ்டப்படுத்தாமல் இறந்து விடலாம் என்று ஒரு மனம் யோசிக்க, இறந்தால் மட்டும் ஆஷிக்கை அது கஷ்டப்படுத்தாதா? அவனது அளவில்லாத காதலைக் கண்டுமா இப்படி யோசிக்கிறாய்? என்று இன்னொரு மனம் கேள்வி கேட்க, குழப்பமும் வேதனையும் ஒன்று சேர்ந்து அவளது மூளையில் மின்னலை போல வெட்டி வெட்டி பாய்ந்ததில், நெற்றி சுருங்கியவாறு கண்களை இறுக்க மூடி இருந்த அவளது வதனத்தை, இரு கரங்கள் மென்மையாய் பிடித்து மிதமாய் அழுத்த அழுத்த,
பேயலையெனத் தன்னைப் புரட்டி போட்டுக் கொண்டிருந்த மன அழுத்தம் எல்லாம், மெல்ல மெல்ல தன்னிடம் இருந்து விலகியதை உணர்ந்தவளின் விழிகளில் அப்படி ஒரு நிம்மதி. விழிகளை மூடியவாறே,
“தாங்க் யு ஆஷிக், பீலிங் பெட்டர்.” என்றவள் அப்படியே தன்னவனின் மார்பில் தன் பின்னந்தலையை வைத்து சாய்ந்தவாறு, தன் வலக்கரத்தால் அவனது கழுத்தை வளைத்துப் பிடிக்க,
எதிர்பார்க்காத நேரத்தில் விழிமூடியவாறே தன் மீது சாய்ந்த தன் காதல் மனைவியை மார்பில் ஏந்தியவன், தன் இருக்கரங்களால் அவளை வளைத்துப் பிடித்துக்கொண்டு அவளது செவிகளோடு உறவாடியவாறு,
“பிடிக்காம விட்ருந்தேன்னா ம்ம்… அவ்வளவு நம்பிக்கையா என் மேல?” என்று கிசுகிசுக்க,
தன் இதழை இசைத்தவாறே, “ஆமா” என்று மீண்டும் தொடர்ந்தவள்,
“என் உயிரை விட…” என்று கூறி விழி மலர்ந்த தன் மனைவியை இமைதட்டாமல் ரசித்தான்.
“என்ன புதுசா பாக்குற மாதிரி அப்படிப் பாக்குற?” என்று தன் இதழ் மலர ஜியா கேட்க,
“அப்படியா இருக்கு, நீ சரியா கவனிக்கலனு நினைக்கிறேன், நான் எப்போதும் உன்னை இப்படித்தான் பார்க்குறேன்.” என்ற மறுநொடி ஜியாவின் முகம் குங்குமமாய் சிவக்க,
“ஷப்பா! என் கண்ணையே என்னால நம்ப முடியலை. எவ்வளவு நாள் கழிச்சு நீ இப்படி வெட்கப்பட்ருக்க தெரியுமா?” என்று அவன் புன்னகைத்ததும்.
மேலும் கன்னம் சிவந்தவள் நாண மிகுதியால் முகத்தை லேசாகத் திருப்ப, அதைக் கண்டு இதழ் மலர்ந்தவன் அவள் சற்றும் எதிர்பார்ப்பதற்குள் நொடிப்பொழுதில், சிவந்திருந்த அவளது கன்னத்தில் தன் இதழ் என்னும் தூரிகை கொண்டு ஓவியம் வரைந்தவன், அப்படியே தன் அலைபேசியில் படம் எடுத்தான்.
இதைச் சற்றும் எதிரிபார்க்காத ஜியா, வெட்கத்தில் வார்த்தை ஏதுமின்றி, “ஆஷ்… ஷிக்…” என்று தடுமாற,
“ஆஷிக்தான்…” என்று சல்லாபமாய் அவளது அருகில் நெருங்கி செல்ல, அவனைத் தன் மென் கரங்களால் தள்ளிவிட்டவள்,
“என்ன வேணும் உனக்கு?” என்று செல்லமாய் முறைத்தவாறே கேட்க,
“என்ன கேட்டாலும் தருவியா?”
“தரேன்.”
“என்ன கேட்டாலுமா?” என்று விஷம புன்னகையோடு தன்னை நோக்கி இன்னும் நெருங்கி வந்தவனின் மார்பை தன் கரங்களால் தள்ளியவாறே,
“ஆமா, என்ன கேட்டாலும்…” என்று செல்ல சிணுங்கலுடன் கூற, தன் மார்பில் பதிந்த தன்னவளின் கரத்தை மென்மையாக பற்றி இதழ் பதித்தவன்,
“என்ன கேட்டாலும் தரேன்னு சொன்ன, இப்போ தள்ளிவிடுற?” என்று நெருங்கி வந்து அவளது மூக்கை உரசிக்கொண்டே கூற,
“சொன்னா தானே தெரியும்?” என்று அவள் சிணுங்கியதும்,
“சொல்லிதான் தெரியணுமா?” என்று சல்லாபமாய் கூறியவன் மென்மையாய் அவளது இமைகளில் தன் அதரத்தைப் பதித்தான்.
மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனவளின் விழிகள் பொழிந்த ஊடல் பார்வை அவனது உயிர் வரை ஊடுருவி செல்ல, எல்லை இல்லாத உவகையை அடைந்தான்.
அடித்த குளிர் காற்றையும் தாண்டி அவனது தேகம் தனலாய் எரிய, நூலளவு கூட இடைவெளி கூட இல்லாது தன் காதல் மனைவியைத் தன் வலிய கரங்களால் அருகில் இழுத்து அணைத்தவன், அவளது செந்நிற அதரத்தை நோக்கி குனிய,
“நாங்க எதையும் பார்க்கல…” என்று தன் உதட்டைக் கடித்தவாறே ஆயிஷாவும் சமீரும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வர,
“சாரி கைஸ், டிஸ்டர்ப் பண்ணிட்டோம். நாங்க அப்புறம் வரோம்.” என்ற சமீரைத் தடுத்த ஆஷிக்,
“ஏய் சமீர் சொல்லுங்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை.” என்று ஜியாவை அணைத்தவாறே கூற,
சமீர் ஆஷிக்கிடம், “டைம் ஆகிடுச்சு, கொஞ்சம் லேட் பண்ணாம சீக்கிரமா வந்துருங்க.” என்று தன் கைக்கடிகாரத்தை உயர்த்திக் காட்டினான்.
“ஓகே சமீர் கிவ் அஸ் டென் மினிட்ஸ்.” என்றதும் ஆயிஷா சிரித்தவாறே,
“சீக்கிரம் அண்ணா, நைட் பங்ஷன்கு இன்னும் டைம் இருக்கு.” என்று கண்சிமிட்டிவிட்டு சமீருடன் கீழே சென்றதுதான் தாமதம்,
ஆஷிக் தன் பிடியை இன்னும் அதிகமாக்கி விலக முனைந்த தன் மனைவியைச் செல்லமாய், “ப்ளீஸ்டி ஒன்னே ஒன்னு…” என்று கெஞ்சியவாறே அவளது அதரத்தை நெருங்கிய மறுநொடி,
“மச்சான் எங்கடா இருக்க?” என்று அழைத்தவாறே ஆதர்ஷும் ரோஹித்தும் வர,
கடுப்பான ஆஷிக், “நான் இங்க இல்லடா.” என்று கோபமாய் கூறியவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்த ஜியா, அவனது பிடியில் இருந்து சற்று விலகி நிற்கவும் உள்ளே வந்தவர்கள்,
“என்னடா இன்னும் ரெடி ஆகலையா? சீக்கிரம், இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு, என்ன பண்ணிட்டு இருக்க?”
“எங்க, விட்டாத்தானே ஏதாவது பண்ண முடியும்?” என்று ஆஷிக் கடிந்துகொள்ள,
அவர்கள் அது எதையும் காதில் வாங்காது, “ஜியா நீயும் சீக்கிரம் ரெடி ஆகுமா.” என்று ஜியாவிடம் கூறிவிட்டு, ஆஷிக்கை கையோடு அழைத்துச் செல்ல,
அவனோ, “டேய், கொஞ்ச நேரம் நீங்க போங்க, நான் பின்னாலே வந்திடுறேன்.” என்று நழுவ பார்க்க,
“நேரம் இல்லை.” என்றவாறு அவர்கள் அவனது கையை இழுத்துக் கொண்டு செல்ல, ஆஷிக்கோ முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு ஜியாவையேப் பார்க்க, அவளுக்கு அவனது நிலையை எண்ணி சிரிப்பாய் இருந்தது.
தனக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கோட் சூட்டில் வழக்கத்தை விட மிக அழகாகவும் கம்பீரமாகவும் தயாராகி, தன் நண்பர்களுடன் தன் அறையை விட்டு வெளியே வந்த ஆஷிக், வேகமாக சென்று தன் தாயை கட்டி அணைத்து முத்தமிட, இதை அனைத்தையும் சற்று தள்ளி இருந்து கவனித்த அஸாத்துக்கு உள்ளுக்குள் எதோ ஒரு அழுத்தம் பிறந்தது.
எதோ ஒரு வலி கண்களில் வந்து பிறந்தது. ஆனால் அதை எதையும் வெளியே காட்டிகொள்ளாதவர், தன் கோட்டின் பாக்கெட்டுக்குள் தன் இரு கரங்களையும் நுழைத்தவாறே, தன் தலையை உலுக்கிக்கொண்டு ஆஷிக்கின் அருகில் வந்தவர், அவனைத் தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்து,
இன்னும் அருகே நெருங்கி வந்து, “எல்லாம் ஓகே, ஆனா இன்னும் உனக்கு டை மட்டும் ஒழுங்கா கட்ட தெரியலை.” என்று கூறியவாறே அவனது டையை சரி செய்தவர், “நவ் இட்ஸ் பெர்ஃபெக்ட்!” என்று கூறி புன்னகைக்க, முகத்தில் எந்தவித சலனமும் கொள்ளாத ஆஷிக்,
“தாங்க் யு, காஸ்ட்யும் நல்லா இருக்கு.” என்று கூறிவிட்டு வேறெங்கோ பார்க்க, அவனது தோள்களைத் தட்டி புன்னகைத்த அஸாத்,
“தாங்க் யு அப்பானு சொன்னா ஒன்னும் குறைஞ்சி போயிற மாட்ட ஆஷிக்.” என்று தன்மையாய் எந்தவித அகங்காரமும் இல்லாமல் கூறிவிட்டு அஸாத் அங்கிருந்து செல்ல போக,
“அப்பா… அது ரொம்ப பெரிய வார்த்தை. சும்மா எல்லாம் சொல்லிற முடியாது மிஸ்டர் அஸாத். இதெல்லாம் வாங்கிக் குடுத்துட்டா மட்டும் அப்பா ஆகிற முடியாது. முதல்ல எங்க அம்மாக்கு நல்ல கணவனா இருங்க. அப்புறம் நல்ல மகன் எப்படி இருக்கணும்னு நான் காட்டுறேன்.” என்றவாறு அவன் அவரது முகத்தைக் கூடப் பார்க்காது வேகமாய் அங்கிருந்து செல்ல,
சுருக்கென்று அவன் கூறிய வார்த்தைகள் முதல் முதலாய் அஸாத்தின் நெஞ்சுக்குள் முள்ளாய் குத்தி அழுத்தத்தைக் கொடுக்க, பதில் பேசாமல் அவர் அப்படியே நின்றார்.
***
