அனைவரும் செல்ல தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியிடம், “போமா, கெஸ்ட் எல்லாரையும் ரிஸீவ் பண்ணு. டைம் ஆச்சுல போ.” என்றவர் ஹாஜரா முன்பு எதையும் காட்டிக்கொள்ளாமல், இயல்பாய் இருப்பது போல தன் அலைபேசியில் யாரிடமோ பேசியவாறு அங்கிருந்து செல்ல,
எப்பொழுதும் தன்னை வெட்டி விடுவது போல பேசும் தன் கணவர், முப்பது வருடங்களுக்குப் பிறகு தன்னிடம் கனிவாகப் பேசியது, தனலாய் கொதித்துக்கொண்டிருந்த அவரது மனதிற்குள் ஒரு துளி பனித்துளியைத் தெளித்தது போல இருந்தது.
நெருப்பால் சூடு பட்டால் பட்டதுதான், அதை மாற்ற முடியாது. தழும்பு தடம் மாறாமல் அப்படியேதான் இருக்கும். ஆனாலும் மருந்திடாமலா போய்விடுவோம்?
சில மணி நிமிடத்தில் ஜியாவும் தன்னை அலங்கரித்துக் கொண்டு கீழே வர ஆஷிக், ஜியாவின் ரிசப்ஷன் பங்க்ஷன், அஸாத் எதிர்பார்த்தது போல அனைவரும் வியக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடந்தேறிக்கொண்டிருந்தது.
விருந்தினர்கள் வருவதும் தங்களின் வாழ்த்துகளைக் கூறுவதும் ஒரு பக்கம் நடக்க, தன் காரியமே கண் என்று வழக்கம் போல ஆஷிக் தன் விழிகளினாலே தன் காதல் மனைவியை அள்ளி பருக, வெட்கத்தில் ஜியாவின் முகம் குங்குமமாய் சிவக்க என்று இருவரும் தங்களின் பார்வையினாலே காதலை பரிமாறி கொண்டனர்.
அவர்களுடன் புதிதாய் பூத்த காதல் ஜோடி ஆதர்ஷ், நடாஷாவும் சேர்ந்து, தங்களின் காதல் காவியத்தையும் அரங்கேற்றி கொண்டிருந்தனர். வந்திருந்த அனைத்து விருந்தனருக்கும் பஃபே முறைப்படி உணவு வழங்கப்பட,
ஆஷிக் தன் பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்துகொள்ள, தனியே நின்று கொண்டிருந்த ஜியாவின் அருகில் வந்த சமீர் தன் முகம் மலர,
“இப்படி ஒரு சந்தோஷத்தை விட்டுட்டுதான் சாகப் போனியா நீ? உங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதுக்கு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?” என்றதும் ஜியா வெட்கத்தில் முகம் தாழ்த்திக்கொள்ள,
“உனக்கு வெட்கப்படக் கூடத் தெரியுமா ஜியா?” என்று சமீர் ஆச்சரியமாய் கேட்க,
“சமீர் இதென்ன கேள்வி?”
“கேட்காம என்ன பண்றது? பெங்களூர்ல நீ எப்படி இருப்ப தெரியுமா? எப்பவும் நிமிர்ந்துதான் பார்ப்ப, பார்வையில எப்பவும் ஒரு திமிரு இருக்கும். என்ன நடை சான்ஸே இல்லை. உனக்குப் பயந்துட்டு எத்தனை பசங்க உன்கிட்ட பேசாம போயிருக்காங்க தெரியுமா? செம போல்டா இருப்ப.”
“அவ்வளவு போல்டா இருந்தும் நான் என் லைஃப்ல பார்க்க கூடாத நிறையக் கஷ்டங்களைப் பார்த்துட்டேனே சமீர்.” என்று விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகள் அவனைக் கஷ்டப்படுத்த,
“ஜியா இப்போதான் சந்தோஷமா பேசிட்டு இருந்தோம், அதுக்குள்ள நீ சோக மோட்கு போயிட்ட?”
“எவ்வளவு சந்தோஷம் எனக்குக் கிடைச்சாலும் என்னால பழசை எப்பவுமே மறக்க முடியாது சமீர்.” என்று ஜியா கண்கலங்கியதும் பதறிய சமீர்,
“ஜியா ப்ளீஸ்… அழாத ப்ளீஸ்… யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிரும்.” என்று ஜியாவை ஒரு வழியாகச் சமாதானம் செய்தவன் மேலும் தொடர்ந்து, “ஜியா இதெல்லாம் சரிபட்டு வராது. நீ இப்படியே இருந்தா எதாவது யோசிச்சுட்டுதான் இருப்ப, நீ மறுபடியும் சர்ஜரி பண்ணணும்.”
“சர்ஜரியா? அதுக்கான தகுதியை நான் என்னைக்கோ இழந்துட்டேன் சமீர்.”
“பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம் மாதிரி இருக்கு. தப்பு அவங்க செஞ்சாங்க, தண்டனைய நீ அனுபவிக்கிற. என்ன ஜியா இது?”
“சமீர் நான் இன்னும் டாக்டரா வொர்க் பண்றதே என் ஃபேமிலிக்காகத்தான். என் தங்கச்சிய நல்லபடியா படிக்க வச்சு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணும். சித்தி, சித்தப்பாக்கு நிரந்தரமா ஒரு வருமானம் வர்ற மாதிரி பேங்க்ல கொஞ்சம் அமௌன்ட் போட்டு வைக்கணும். இந்த ரெண்டு கடமையும் முடிஞ்ச அடுத்த நிமிஷம் டாக்டர் வேலையையே நான் விட்ருவேன்.
குற்ற உணர்ச்சி கொல்லுது. என் பேஷண்ட பாதுக்காக்க வேண்டிய கடமை எனக்குத் தானே இருக்கு. அந்தப் பொண்ணு என்னை நம்புனா சமீர்…” என்று சொல்லும் பொழுதே ஜியாவின் கண்களில் இருந்து கண்ணீர் கரை புரண்டு ஓட, கண்ணீரை துடைத்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை டேபிளில் வைத்தவள் அங்கிருந்து வேகமாகச் செல்ல, சமீரும் அவளைச் சமாதானம் செய்ய அவள் பின்னாலே சென்றான்.
விருந்தினர்கள் வருவதும் போவதுமாய் இருக்க, அப்பொழுது வெள்ளை நிற பென்ஸ் கார் ஒன்று ரிசப்ஷன் ஹாலுக்குள் கம்பீரமாக நுழைந்தது.
காரின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தவனின் கண்களில் ஆஷிக், ஜியாவின் பெயர் போட்டு அலங்கரிக்கப்பட்ட ஃப்ளக்ஸ் போர்ட் பட, ஜியாவின் பெயரைப் பார்த்தவனின் உதட்டில் திருப்தியான புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள,
தன் கோர்ட்டின் பொத்தானை மாட்டிக்கொண்டு தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறே, தன் கையில் ஒரு பொக்கேவுடன் உள்ளே நுழைந்தான். உள்ளே நுழைந்த நொடி முதல் அவனது விழிகள் யாரையோ தீவிரமாகத் தேடி கொண்டிருந்தது.
தன் விழிகளை சுழற்றியவாறே முன்னேறியவன் எதிரில் ஆள் வருவது தெரியாமல் மோத, அப்பொழுது எதிர்முனையில் வேகமாய் வந்த ஆஷிக்கின் கையில் இருந்த குளிர்பானம் தவறுதலாய் அவன் மீது சிந்திய மறுநொடி, “பார்த்து வர கூடாதா?” என்று சிடுசிடுத்தவாறு நிமிர்ந்தவனிடம்,
“சாரி… ஐயம் ரியலி சாரி…” என்று கனிவுடன் ஆஷிக் கூற,
சற்று அமைதி அடைந்தவன், “இட்ஸ் ஓகே!” என்று கூறி அங்கிருந்து செல்ல முனைந்த நேரம்,
“எக்ஸ்கியுஸ் மீ…” என்று தடுத்த ஆஷிக் கீழே குனிந்து அந்த நபரின் பூச்செண்டில் இருந்து தவறுதலாய் விழுந்த வாழ்த்து அட்டையை எடுத்து அவனிடம் நீட்டி,
“இது உங்களோடு தானே?” என்றவாறு கொடுத்ததும்,
சட்டென்று ஆஷிக்கின் கரத்தில் இருந்து வாங்கியவன், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆஷிக்கிடம், “தேங்க்ஸ்” என்று சொல்ல,
பதிலுக்கு, “யு ஆர் வெல்கம்!” என்ற ஆஷிக் மேலும் தொடர்ந்து, “உங்களோட ஷர்ட் கரையாடுச்சு, ஐயம் ரியலி சாரி. இஃப் யு வாண்ட் ஐ கேன் ஹெல்ப் யு…” என்று கேட்கவும்,
“இட்ஸ் ஓகே, ஐ வில் மேனேஜ்.” என்றவன் தன் கையில் இருந்த அட்டையைச் சுட்டிக்காட்டி, “உனக்குத்தான் நான் கடமை பட்ருக்கேன்.” என்பது போல, “தாங்க் யு.” என்று அழுத்தமாய் கூற,
புன்னகைத்த ஆஷிக், “இட்ஸ் ஓகே, அண்ட் பை த வே ஐயம் ஆஷிக்!” என்று தன் கரங்களை நீட்டி தன்னை அறிமுகப்படுத்த,
சில நொடிகள் ஆஷிக்கை உற்று கவனித்தவனின் கண்முன் ‘ஆஷிக், ஜியா’ என்கின்ற பெயர் பலகை வந்து மறைய, அவ்வளவு நேரம் முகத்தில் தொனித்த ஒருவித இறுக்கம் மறைந்து போக இதழோரம் தோன்றிய புன்னகையோடு, “சுஜித்… சுஜித் குமார்.” என்று தன்னை அறிமுகம் செய்தான் அவன்.
கீழே விழுந்த அட்டையை ஆஷிக் ஒருமுறை திருப்பிப் பார்த்திருக்கலாமோ? பார்த்திருந்தால் இனிமேல் நடக்கவிருக்கும் விளைவுகளைத் தடுத்திருக்கலாமோ?
‘கம் டூ த பார்க்கிங் லாட் வித் இன் டென் மினிட்ஸ். பை சுஜித் குமார்.’ இதைப் படித்த மாத்திரமே ஜியாவின் முகத்தில் காரிருள் சூழ்ந்து கொண்டது.
ஜீவாவைப் பார்க்கும் போது அவள் அடைந்த அதே பயம் மீண்டும் அவளது உள்ளத்தைத் தன் வசமாக்க, பதில் ஏதும் பேசாமல் சிலையென நின்றவளின், கரத்தில் இருந்த அட்டையை வாங்கிப் படித்த மறுநொடி சமீரின் முகத்தில் உச்சகட்ட கோபம் வெளிப்பட்டது. புருவங்களோடு சேர்த்து வதனமும் சுருங்க, கைகளை முறுக்கியவாறு நின்று கொண்டிருந்தவன்,
உறுதியற்று, முகத்தில் கலையிழந்து விரக்தியே கதியென நின்றிருந்தவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு தனியே அழைத்து வந்து,
“ஜியா…” என்று பலமுறை அழைத்தற்குப் பிறகு நிமிர்ந்தவள் தன் உதடுகள் நடுங்க,
“நான்தான் சொன்னேன்ல, என்னை அவங்க யாரும் சந்தோஷமா இருக்க விடமாட்டாங்கனு, நான் வாழ்றதே வேஸ்ட்.” என்று தொண்டை விம்ப கூறியவளைப் பார்த்து சமீர் தன் கண்களில் கோபம் தெறிக்க,
“ஷட் அப் ஜியா! முதல்ல இப்படிப் பேசுறத நிறுத்து. நார்மலா இரு, நான் இருக்கேன்ல. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். இந்தப் பொக்கேவ யாரு கொடுத்தது?” என்று கோபமாய் கேட்க,
“வெயிட்டர் வந்து குடுத்தாரு.”
“சரி டென்க்ஷனா இருக்காத, நான் பார்த்துக்கிறேன். ஆஷிக் இங்கதான் வாரான், அவன் முன்னாடி சுஜித் பத்தி எதுவும் உளறிட்டு இருக்காத.” என்று அழுத்தமாய் கூறியவன்,
ஆஷிக் தங்களின் பக்கம் நெருங்கியதும் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள, ஜியாவுக்கு ஆஷிக்கை எதிர்கொள்ளவதே மிகவும் கஷ்டமாக இருந்தது.
“என்னப்பா நீங்க ரெண்டு பேரும் இங்க தனியா வந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எங்க எல்லாம் தேடுனேன் தெரியுமா?” என்ற ஆஷிக்கிடம்,
“ஓ சாரி ஆஷிக், ஜியா தனியா நின்னுட்டு இருந்தா, அதான் கம்பெனி குடுத்தேன்.”
“இட்ஸ் ஓகே, நீங்களும் வாங்க சமீர். என் ஃப்ரண்ட்ஸ நீங்க இன்னும் பார்க்கலைல, நான் உங்களுக்கு அவங்களை இன்ட்ரோ பண்றேன்.”
“அது ஆஷிக், எனக்கு முக்கியமான ஒரு கால் பண்ணணும். ஜியாவை அழைச்சுட்டு போங்க, நான் இப்போ வந்திடுறேன்.” என்று ஆஷிக்கை சமாளித்தவன் தன்னைப் பயத்துடன் பார்த்த ஜியாவிற்கு,
‘நான் பார்த்துக்கிறேன்.’ என்பது போல தன் இமைகளை அசைக்க, ஜியாவோ சமீரை திரும்பி திரும்பி பார்த்தவாறு ஆஷிக்குடன் அவனது நண்பர்களைக் காண சென்றாள்.
தன் கையில் இருந்த அட்டையையே வெறித்துப் பார்த்த சமீர், ‘சுஜி… த்… குமார்…” என்று தன் மனதிற்குள் கர்ஜித்தவாறே அங்கிருந்து சென்றான்.
கார் பார்க்கிங் ஏரியாவில் தன் காரின் மீது சாய்ந்தவாறு தன் கைக்கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுஜித், யாரோ தன்னை நெருங்குவது அறிந்து திரும்பி பார்க்க, தன் எதிரே ஜியாவிற்குப் பதிலாய் சமீரைக் கண்டதும் குழப்பம் அடைந்தவன், ‘சமீர் இங்க எப்படி’ என்கின்ற கேள்வியில் அவனையே பார்க்க, ரௌத்திரம் பொங்க சுஜித்தை நெருங்கிய சமீர்,
“என்ன மிஸ்டர் சுஜித் குமார் எதோ பத்து நிமிஷத்துல வரணும்னு கண்டிஷன் எல்லாம் போடீங்க போல? வந்தாச்சு, ஜியாலாம் வரமாட்டா. என்ன பேசணுமோ என்கிட்ட பேசு.” என்று கர்ஜிக்க,
‘இதை நீ பண்ணிருக்கக் கூடாது ஜி… யா…’ என்றவாறு தனக்குள் கனன்று வந்த கோபத்தோடு சமீரை எதிர்கொண்டான் சுஜித்.
ஜியா, சுஜித்தை சந்தித்திருந்தால் விளைய போகும் வினையை விளையும் முன்பே தடுத்திருக்கலாமோ?
ரிசப்ஷன் எந்தவித சிக்கலும் இன்றி நல்லபடியாக முடிய, வெளியூரில் இருந்து வந்த அனைத்து சொந்தங்களும் கிளம்பி சென்ற பிறகு, ஆஷிக்கின் இல்லத்தில் ஹாஜரா, ரஸ்மீன், திவ்யா மூவரும் அமர்ந்து தங்களுக்குள் எதையோ பேசி சிரித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஷாஹித், ஷங்கர் இருவரும் ஓர் இடத்தில அமர்ந்து பேசிக்கொண்டிருக்க,
“ஹலோ ஷாஹித் சார், ரிசப்ஷன் பிஸில உங்கள கவனிக்க முடியல.” என்ற அஸாத்திடம்,
“அதனால என்னபா, ஷங்கர் சார் எனக்கு நல்லாவே கம்பெனி குடுத்தாரு. பேசுனதுல எனக்கு டைம் போனதே தெரியலை. பேசி பார்க்கும் போதுதான் தெரியுது, இவங்க அப்பா எனக்கு ரொம்ப வேண்டபட்டவங்கனு. அட நம்ம பழைய டெபுட்டி கலெக்டர் ராதா கிருஷ்ணன் சார். இவரு அப்பாதானாம். ரொம்ப நேர்மையான மனுஷன். இங்க இருந்தவரைக்கும் நல்ல பழக்கம். நான் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம் டச் விட்டு போச்சு.” என்ற ஷாஹித்துக்கு லேசாகப் புன்னகைத்த அஸாத், வேண்டா வெறுப்பாக அவர்களது சம்பாஷணையில் கலந்து கொண்டார்.
மறுபக்கம் ஆஷிக் தன் நண்பர்களின் கேலி பேச்சிற்கு பதிலளித்தவாறு சிரித்துக் கொண்டிருக்க,
‘நான் பார்த்துக்கிறேன்’ என்று கூறிவிட்டு சுஜித்தைக் காண சென்ற சமீர், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவனுக்கு என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்கின்ற கவலையில் ஜியா பதற்றத்தோடு விழிகளை மூடிய நிலையில், தோட்டத்தில் இருந்த ஓர் நாற்காலியில் அமர்ந்திருக்க,
அப்பொழுது சமீர், “ஜியா!” என்று அழைத்ததில்,
“வந்துட்டியா சமீர்?” என்று நிம்மதி பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள், சமீர் இருந்த கோலத்தைப் பார்த்து தன்னையும் அறியாமல் நீர் கோர்த்தது.
***
