காதல்- 5

அத்தியாயம்- 5

அந்த மிகப் பெரிய முன்னறையில் இருந்த சோபாவில் கோபத்துடன் அமர்ந்து இருந்தனர் பரமசிவமும் அவரின் மனைவி தேவியும்.

அவர்களின் எதிரே என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதியுடன் அமர்ந்து இருந்தார் கோவிந்தராஜ். 

பூங்கோதையோ மகனின் வருகைக்காக மாடிப்படியே பார்த்துக் கொண்டு நிற்க, அவரை காக்க வைக்காமல் கோபமான முகத்தோடு கீழே இறங்கி வந்தான் ஜீவானந்தம்.

“வாடா நம்ம மருமக சங்கீதாவோட அப்பா அம்மா வந்து இருக்காங்க” என்று சொன்ன தாயை மெச்சிதலாகவே பார்த்தான். 

இத்தனை நாள் வரை நம்ம வீட்டு மருமகளுங்க அப்பா அம்மா என்று கூறிய தாய், இன்று தன் மனைவி வேறு ஒருத்தி என்று வந்ததும் மோனிகாவை இந்த வீட்டின் மருமகள் என்ற பட்டத்திலிருந்து விலகி வைத்தது புரிய, இத்தனை நேரம் இருந்த கோபம் சற்று தணிந்து மென்புன்னகை உண்டாக, 

“ம்” என்று தாயுடன் நடந்தான். 

“வாங்கப்பா பெரிய மனுஷரே வாங்க” என்று பரமசிவம் படும் நக்கலாக ஜீவானந்தத்தை அழைக்க, அருகில் அமர்ந்து இருந்த தேவியோ,

“என்னங்க” என்று கணவனை அடக்க முயன்றார். 

அவருக்கு மோனிகாவை விட, இந்த வீட்டில் மருமகளாக வாழும் தன் மூத்த மகள் சங்கீதாவின் வாழ்க்கையை எண்ணி தான் கவலையாக இருந்தது. 

அவரை ஒரு மார்க்கமாக பார்த்த ஜீவா “சொல்லுங்க அங்கிள் வந்துட்டேன்” என்று அவருக்கு சற்றும் குறையாத நக்கலான குரலில் பேசியவன் அமர்ந்து இருந்த தந்தையின் பின்னால் கைகளை கட்டிக் கொண்டு நின்றான். 

“ஜீவா” என்று அதட்டினார் கோவிந்தராஜ். 

“சொல்லுங்க ப்பா” என்று மரியாதையுடன் ஜீவானந்தம் தலை குனிந்து தந்தையை காண, அவரோ பார்வையாலே ‘ஏன்டா’ என்பது போல் கேட்டார். 

அதே பார்வையாலே ‘நான் இல்லப்பா. அவர் தான் முதல ஆரம்பிச்சாரு’ என்று சொன்ன மகனை கண்டு சலிப்பாக தலையை ஆட்டியவர் இருக்கும் உறவை கெடுத்துக் கொள்ள விரும்பாதவர் தானே பேச முடிவு செய்து,

“இங்கே பாருங்க சம்பந்தி, அவன் ஆசைப்பட்ட பொண்ணை திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்.” என பேச ஆரமபித்தவரை இடைமறித்து

“அப்போ உங்க பையன் மேல பைத்தியக்கார தனமா ஆசை வச்சி இருந்த என் பொண்ணு மோனிகா?” என்று பரமசிவம் கொதிக்க ஆரம்பிக்க, 

அவரை போல் உலையில் கொதிக்கும் நீர் போல் கோவிந்தராஜ் கொதிக்காமல் அமைதியாக “எங்களுக்கும் என்ன சொல்றதுனு தெரியல சம்பந்தி” என்றார் வருத்தமான குரலில். 

“தெரியலனா என்ன அர்த்தம் மிஸ்டர் கோவிந்தராஜ். உங்க இரண்டாவது பையனுக்கும் என் இரண்டாவது பொண்ணுக்கும் நிச்சயம் நடக்க வேண்டிய நேரம் இது. இப்போ ஊர் பேர் தெரியாத ஒருத்தி வந்ததும். என் பொண்ணை கழட்டி விட பார்க்குறீங்களா?” என்று சம்பந்தி என்ற வார்த்தை மாறி அவர் பெயரை சொல்லி இருந்தார் கோபமாக பரமசிவம். 

“அங்கிள் அப்பா கிட்ட சத்தம் போடாம பேசுங்க. இல்லனா நடக்குறதே வேற, அதான் நீங்களே பைத்தியம்னு சொல்லிட்டீங்களே அங்கிள் ஒரு பைத்தியத்தை கல்யாணம் பண்ணிட்டு லைஃப் லாங் வரை நான் வைத்தியம் பார்க்கணுமா அங்கிள்ள்ள்…” என்று கடைசியில் அந்த அங்கிளை இழுத்து நக்கலாக பேசியவனை கண்டு கோபத்துடன் எழுந்தே நின்று விட்டார் பரமசிவம். 

மகனை அடக்கினார் கோவிந்தராஜ்.

“கோவிந்தராஜ் என்ன இதெல்லாம். உங்க பையன் என் பொண்ணை பைத்தியம்னு சொல்றான்.” என கோபமாக அவர் கத்த, கோவிந்தராஜூம் எழுந்து நிற்க,

பூங்கோதையோ மகனை ‘ஆ…’ என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டு மகன் அருகில் நின்றார்.

அவர் மட்டுமா? அங்கே பரமசிவம் அருகில் நின்ற தேவி கூட ‘இது ஜீவா தம்பி தானா?’ என்று ஆச்சர்யமாக பார்த்து வைக்க,

அதற்குள் ஜீவா “அட அங்கிள் நான் எங்க சொன்னேன். நீங்க தான் முதல சொன்னீங்க. உங்க ஆருயிர் ஆசை மகள் ஒரு பைத்தியம்னு. சரி பெத்த அப்பாவுக்கு தான் பொண்ணு பைத்தியம் தெரிஞ்சு இருக்கேனு” என்று மேலும் பேச போன மகனை தடுத்த கோவிந்தராஜ், 

“அதுக்காக என் புள்ளையை நம்பி இந்த வீட்டுக்கு மருமகளா வந்த பொண்ணை அம்போனு விட முடியாது பரமசிவம். நல்லதோ கெட்டதோ இனி ஜீவாவோட மனைவி அவன் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்த இந்த வீட்டோட இரண்டாவது மருமகள் மெல்லிசை தான்” என்று கோவிந்தராஜும் சம்பந்தியை கத்தரித்து விட்டு பெயரை சொல்ல, அதில் மேலும் கோபம் கொண்டு பேச போக, 

“டாட்” என்று மோனிகாவின் குரல் சத்தமாக வந்தது. 

“வந்துட்டா ஸ்பீக்கருக்கு பிறந்தவ” என்று சுண்டு விரலை காதில் வைத்து குடைந்தபடி முணுமுணுத்த மகனின் கரத்தில் வலிக்காமல் கிள்ளிய பூங்கோதை,

“யார்டா உனக்கு இப்படி எல்லாம் பேச சொல்லிக் கொடுத்தது” என்று மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவர் கேட்க,

“ஹான் பொண்டாட்டி” என்றானே பார்க்கலாம். இவர்களின் உரையாடலை முன் நின்று கேட்டுக் கொண்டு இருந்த கோவிந்தராஜ் உதடு ஏனோ மெல்லிய புன்னகையை வீசியது. 

பூங்கோதையோ “என்னது” என்று வாயில் கையை வைத்தவர், “அம்மா அவள் பேசுறதை கேட்டு பாருங்க. அப்புறம் நீங்களும் அவளை போல மாறிடுவீங்க” என்று மனைவியை பற்றி பெருமையாக இவன் பேசிக் கொண்டு இருக்க, 

அங்கேயோ, மகளின் குரலை கேட்டு திரும்பி பார்த்த பரமசிவம், படியிலிருந்து இறங்கி வந்த மகளை கண்டதும் அவள் அருகில் சென்றவர் “அம்மாடி” என்று மகளை அணைத்துக் கொண்டார். 

“அப்பா” என்று மோனிகா கண்ணீரை வடிக்க,

தங்கையின் பின்னால் வந்த சங்கீதாவுக்கோ கஷ்டமாகி போனது. 

தந்தை இது போல் தன்னையும் அணைக்க மாட்டாரா என்று. 

ஒரு மகளின் ஏக்கத்தை சொல்லாமலே புரிந்துக் கொண்ட தந்தைக்கு, இன்னொரு மகள் தன் ஏக்கத்தை புரிய வைக்க போராடுவதை புரிந்துக் கொள்ள கூட விரும்பாமல் இருப்பது ஏனோ!

தேவியோ சங்கீதாவின் முகத்தை கண்டதும், அவளை நோக்கிச் சென்று அவளை அணைத்துக் கொள்ள, தாயின் அணைப்பு கிடைத்தாலும் தந்தையின் அணைப்புக்காக தான் ஏங்கியது மகளின் மனம். 

இவர்களின் பாசப்போரட்டதை பார்த்தபடி இருந்த ஜீவாவுக்கு சலிப்பாக இருக்க, நேரத்தை பார்த்தான். 

அதுவோ மதியம் மூன்று மணிக்கு மேல் காட்ட, 

அதிர்ச்சியான குரலில் “அம்மா…” என்று அழைத்தான். 

இம்முறை காதை குடைவது தாயின் முறையாகி போனது. 

“ஏன்டா நான் பக்கத்துல தானே நிக்கிறேன். எதுக்கு கத்துற?” என்று கேட்டார். 

ஜீவானந்தத்தின் கத்தலில் அங்கே நிற்பவர்கள் கூட இல்லை… வேலை செய்யும் பணியாட்களும் நின்று என்னவென்று நோக்க, 

அவனோ “பின்ன கத்தாம” என்றவன் “நேரத்தை பார்த்தீங்களா?” என்று கேட்டான். 

பூங்கோதையோ திரும்பி அங்கே மாட்டி இருந்த மணிக்கூண்டை பார்த்தவர் “ம் பார்த்தேன்” என்று சாவகாசமாக சொல்ல,

அவரின் மகனோ “என்னம்மா சாவகாசமா சொல்றீங்க. டைம் த்ரீக்கு மேல ஆகுதும்மா”

“ஆமாடா அதுக்கு என்ன?” என்று பூங்கோதை ஒன்றும் விளங்காமல் கேட்டவர் கணவனை நோக்கி புரியாமல் பார்த்தார். 

கோவிந்தராஜூக்கும் மகனின் இந்த தவிப்பு எதற்கு என்று தெரியாமல் குழப்பத்தோடு நிற்க,

பாசப்போராட்டத்தில் இருந்த பரமசிவம் குடும்பம் கூட என்னவென்று விளங்காமல் தாங்கள் அழுதுக் கொண்டு இருக்கிறோம் என்று கூட மறந்து ஜீவாவை நோக்கினர். 

ஜீவாவோ தலையில் அடித்துக் கொண்டு “அட போம்மா… மணி மூனாகுது என் பொண்டாட்டி அங்க சாப்பிடாம பசில இருப்பா. உங்களுக்கு எங்கேயாச்சியும் பொறுப்பு இருக்கா. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு பசிக்குமே. சாப்பாடு ஊட்டி விடணும்னு” என்று அவன் கவலையோடு சொல்லிக் கொண்டே போக,

“ஊட்டி விடணுமா?” என்று அதிர்ந்து கேட்டார் பூங்கோதை. 

“அய்யோ டங்கு சில்ப் ஆகிடுச்சிம்மா” என்று சொன்ன ஜீவா, “சாப்பாடு கொடுக்கணும்னு தோனலையா?” என்று கேட்டவன் தாயின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் தானே மனைவி தங்கி இருந்த அறையை நோக்கிச் சென்றான். 

அவன் போவதை வியப்புடன் பார்த்த பூங்கோதை, “ஏங்க இவன் நம்ம ஜீவா தானே?” என்று கேட்டார். 

கோவிந்தராஜூக்குமே மகனின் இந்த புதிய வடிவம் புதியதாகவே தோன்றியது. 

பூங்கோதை விழி நீர் திரண்ட “இப்போ இவனை பார்க்க, நம்ம பழைய ஜீவா போல இருக்குலங்க. எப்போ தொழிலை கையில் எடுத்தானோ அப்போவே இறுக்கமானவனா மாறிட்டான். ஆனா இன்னிக்கு நம்ம மருமக வந்ததும் நம்ம பழைய குறும்புக்கார ஜீவாவை பார்க்கிற மாதிரியே இருக்குங்க” என்று பூங்கோதை சொல்ல,

ஏனோ கோவிந்தராஜூக்குமே அப்படி தான் இருந்தது. 

இப்பொழுது மகனை காண சிறு வயதில் பார்த்தது போலவே அவருக்கு காட்சிகள் வர, மகனின் உண்மையான இயல்பை வெளிக் கொண்டு வந்த புதிய மருமகளின் மீது தனி பாசம் துளிர்க்க ஆரம்பித்தது கோவிந்தராஜூக்கு. 

அந்நேரம் “என்ன கோவிந்தராஜ் இதெல்லாம்?” என்று மகளை அழைத்துக் கொண்டு அவரின் முன் வந்த பரமசிவம் கேட்க, 

“என்னதுன்னா என்ன பரமசிவம். அவன் மனைவி சாப்பிடலனு அழைச்சி வர போறான். அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்?” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசிய மாமனாரை பார்த்து குழம்பி தான் போனான் சங்கீதா.

“மாமா” என்று சங்கீதா ஏதோ பேச வர, மூத்த மருமகளை பார்த்த கோவிந்தராஜோ “நீ கூட இன்னும் சாப்பிடாம தான் இருக்கலம்மா” என்று பாசமாக கேட்டார். 

அக்கேள்வியில் அவளுக்கு சட்டென்று விக்கல் வந்து விட, “கோதை மருமகளுக்கு தண்ணீ எடுத்து கொடு” என்றார் கோவிந்தராஜ். 

பூங்கோதையும் தண்ணீர் கொடுக்க, தேவி மகளின் முதுகை தடவிக் கொடுத்தார். 

பரமசிவமோ மூத்த மகளை முறைத்து பார்க்க, தண்ணீரை குடித்து முடித்து விட்டு தந்தையின் அனல் பார்வையை தாங்க முடியாமல் தலையை குனிந்துக் கொண்டாள் சங்கீதா. 

மோனிகாவோ “அங்கிள் நீங்க செய்யுறதெல்லாம் நல்லாவே இல்லை” என்று கூற,

“எதும்மா விக்கிக்கிட்டு இருந்த எங்க வீட்டு மருமகளுக்கு தண்ணீ கொடுத்ததா?” என்று அந்த எங்க வீட்டு மருமகளில் அழுத்தத்தை கொடுத்து அவர் பேச, 

“கோவிந்தராஜ்” என்றார் பரமசிவம். 

அப்பொழுது அறையிலிருந்து மனைவியை சாப்பிட அழைத்து வந்த ஜீவானந்தம் அங்கே இருந்த ஒரு பூஜாடியை வேண்டுமென்றே தூக்கி போட்டு உடைக்க, அதில் அருகில் இருந்த மெல்லிசை உடலில் சிறு அதிர்வு உண்டாது. 

அனைவரும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க,

“என்… அப்பா… கிட்ட… இந்த குரலை எல்லாம் உயர்த்தி பேச கூடாதுனு சொன்னது போல ஞாபகம் அங்கிள்” என்று நிறுத்தி நிதானமாக அழுத்தத்துடன் சொன்னான் ஜீவானந்தம்.

பரமசிவமோ ஜீவாவின் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்று இருக்க, அவரின் கோபத்திற்கு சொந்தமானவனோ மனைவியின் கரத்தை பிடித்துக் கொண்டு “நீ வா நம்ம சாப்பிட போகலாம்” என்று டைனிங் டேபிளை நோக்கி அழைத்துச் சென்றான். 

பூங்கோதைக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் கணவனை காண, அவரோ கண்சாடை செய்து போகும்படி சொல்ல, பூங்கோதை உணவு மேசையை நோக்கிச் சென்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த பரமசிவத்திற்கும் மோனிகாவிற்கும் அவமானமாக இருக்க, “நீங்க செய்யுறது எதுவுமே சரியில்ல கோவிந்தராஜ். கண்டிப்பா இதுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகணும்” என்று குதித்தார்.

ஜீவாவோ மேசையில் அமர்ந்துக் கொண்டு “அங்கிள் என்ன சரியில்ல, எல்லா சாப்பாடும் பார்க்கவே அவ்வளவு நல்லா இருக்கு. சாப்பிட்டு பார்க்காமலே இதுல எது சரியில்லனு எப்படி சொல்றீங்க?” என்று படும் நக்கலாக ஜீவா கேட்க, மெல்லிசை சட்டென்று சிரித்து விட்டாள். 

உணவை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த பூங்கோதைக்கு கூட புன்னகை தோன்றி விட, நாகரீகம் கருதி சிரிப்பை அடக்கிக் கொண்டார். 

மோனிகாவோ தந்தை அவமானப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் “அங்கிள் என்ன அங்கிள் இதெல்லாம்?” என்று ஆதங்கமாக கேட்க,

“ஹான் வத்தக்குழம்பும்… அரிசி வத்தலும்” என்று ஜீவானந்தம் அதே நக்கலான குரலில் சொல்ல, இம்முறை சங்கீதாவிற்கே சிரிப்பு வந்து விட்டது.

ஆனாலும் தந்தையின் கோபத்தை அறிந்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு பாவமாக முகத்தை வைத்தபடி நின்று இருந்தாள். 

கோவிந்தராஜோ “ஜீவா போதும் சாப்பிடு” என்றவர் “இங்க பாரும்மா எல்லாத்துக்கும் இதெல்லாம் என்ன அங்கிள் கேட்டுக்கிட்டே இருந்தா என்னம்மா அர்த்தம். அதான் அவன் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டானே. இனி நம்மளால என்ன பண்ண முடியும் நீயே சொல்லு? தப்பு தான் உன்னை நிச்சயம் பண்றோம்னு சொல்லிட்டு இப்போ வேற பொண்ணு வந்ததும் இப்படி பேசுறதெல்லாம் தப்பு தான். ஆனா என்ன பண்றது என் பையனையும் எங்க குடும்பத்தையும் நம்பி வந்த பொண்ணை கழுத்தை பிடிச்சி வெளியேவா தள்ள முடியும். என்ன ஏதுனு விசாரிச்சி ஏத்துக்க தானே பார்க்கணும்.” என்று பேசிய கோவிந்தராஜை நோக்கி,

“அப்போ என் பொண்ணுக்கு நீங்க கொடுத்த வாக்கு?” என்று பரமசிவம் கேட்க,

அதில் மௌனமாகி போனார் கோவிந்தராஜ். 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page