காதல்- 4

அத்தியாயம்- 4

அந்த அறையிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்த மோனிகாவை காணவே சங்கீதாவுக்கு திக்கென்று இருந்தது. 

அவளை எப்படி தடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தாள். 

பின்னே பார்க்கவே பத்ரகாளி போல் காட்சியளிப்பவள் அருகில் செல்ல அவளுக்கு பயமாக இருக்காதா? 

ஆனால் அப்படியே நிற்கவும் முடியாது அல்லவா. 

இவள் போடும் சத்தம் கேட்டு அனைவரும் மேலே வந்து விட்டால்!

தங்கையின் நல்லவள் என்ற பட்டம் ஒரு நொடியில் பறந்து போய் விடுமே என்று அஞ்சிய சங்கீதா அவசரமாக தன் தந்தை பரமசிவத்திற்கு அழைத்தாள். 

“சொல்லும்மா” என்று எதிர்முனையில் எடுத்தவுடன்,

“அப்பா இங்கே நம்ம ஜீவா” என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தவள் “இப்போ மோனியை சமாளிக்க முடியலப்பா. என்ன பண்றதுனு தெரியாம தான் உங்களுக்கு அழைச்சேன்” என சங்கீதா ஒரே மூச்சாக பேசி முடிக்க, 

“என்னது சின்ன மாப்பிள்ளை வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்காரா? அப்போ என் பொண்ணு வாழ்க்கை?” என்று அவரும் கொதித்து எழ, 

“அப்பா இவள் தான் இங்கே இப்படி பண்றானா… நீங்க இவளுக்கு மேல கத்துறீங்க. காது வலிக்குதுப்பா” என்று போனை காதிலிருந்து சிறு தூரம் தள்ளி வைத்து பேசியவள் மனமோ ‘இவருக்கு இவளே எவ்வளவோ மேல்’ என்று நினைத்துக் கொண்டது.

“நீ போனை வை ம்மா நான் வரேன்” என்று அழைப்பை வைத்தவர் மனைவியிடம் விஷயத்தை சொல்லி உடனே புறப்பட்டு இருந்தார். 

சங்கீதாவோ “ஏதே இங்கே வராரா?” என்று நெஞ்சில் கையை வைத்தவள் “ஏற்கனவே இங்கே ரணகளமா இருக்கு. இதுல இவர் வேற இங்க வந்தா இன்னும் ரணகோலமாகிடுமே” என்று தனக்கு தானே பேசியவளின் செவிகளில்,

“ஜீவா உன்னை சும்மா விட மாட்டேன்” என்று மோனிகாவின் குரல் ஓங்கி ஒலிக்க, 

அப்பொழுது தனது அறைக்குச் செல்ல மாடிப்படி ஏறி வந்துக் கொண்டு இருந்த ஜீவானந்தத்தை பார்த்த சங்கீதா,

“ஆத்தி” என்று அதிர்ந்தே விட்டாள் சங்கீதா. 

வேகமாக அறை வாசலிலிருந்து உள்ளே சென்றவள் கதவை தாழிட்டு தங்கை அருகில் சென்று அவள் வாயை பொற்றிக் கொண்டாள்.

மோனிகாவோ கோபத்துடன் அக்காவின் கையை தட்டி விட்டவள், “என்னடி உன் கொழுந்தனை சொன்னதும் கோபம் பொத்துக்கிட்டு வருதோ” என்று மோனிகா அதற்கும் கத்த,

“வாயை மூடுடி. ஜீவா தம்பி மேலே வராங்க” என்றாள் மெல்லிய குரலில். 

“வரட்டுமே எனக்கு என்ன பயம்” என்று வேண்டுமென்று மோனிகா கத்தி பேச, தங்கையின் வாயை மீண்டும் மூடிய சங்கீதா,

“உனக்கு பயமே இருக்காதும்மா. ஆனா இங்கே மருமகளா வாழுறது நான். நீ இல்ல” என்று பேசி விட, 

அதை கேட்டு மேலும் கொதித்த மோனிகா சங்கீதாவின் கரத்தை வேகமாக தட்டி விட்டு, “என்னடி சக்கரவர்த்தி குடும்பத்துல மருமகளா வாழுறனு குத்தி காட்டுறீயா?” என்று பேசிய தங்கையை அதிர்ந்து பார்த்த சங்கீதா,

“நான் எப்போடி அப்படி சொன்னேன். நான் சொல்ல வந்ததே வேற” என பேச வர,

சொடுக்கு போட்ட மோனிகாவோ “இப்படி சொடுக்கு போடுற நேரத்துல உன்னை இந்த குடும்பத்துல இருந்து பிரிச்சி வாழா வெட்டியா உட்கார வைக்க முடியும். பார்க்குறீயா?” என்று தங்கை மிரட்டியதை கேட்டு அதிர்ச்சியுடன் இருக்கரத்தாலும் வாயை பொற்றிக் கொண்ட சங்கீதா,

“ஏய் நான் உன் அக்காடி” என்றாள். 

“அந்த ஒரே காரணத்தால தான். உன்னை சும்மா விட்டு வச்சி இருக்கேன். இல்லனா என்னோட அழகு, படிப்பு, அறிவுனு இப்படி எதுக்குமே ஒரு கால் தூசி இல்லாத உன்னையெல்லாம் என் அக்கானு சொல்லிட்டு இங்க வந்து உட்கார்ந்துட்டு இருப்பேனா? இந்த வீட்ல நான் இருக்க ஒரே காரணம், இந்த சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியோட அடுத்த வாரிசு மருமகளா கெத்தா வெளியே வலம் வரணும்னு தான். இல்லனா நீ வந்த அதே குடும்பத்துக்கு வாக்கப்பட்டு வர நான் என்ன முட்டாளா?” என்று தன் உடன் பிறந்தவளின் மனதை உடைக்கிறோம் என்று தெரிந்தே பேசிக் கொண்டு இருந்தாள் மோனிகா. 

அச்சமயம் அந்த அறைக் கதவு தட்டப்பட, அவசரமாக வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட சங்கீதா, வலியுடன் தங்கையை ஏறிட்டு பார்த்தாள்.

‘ஆம் இவள் கூறுவது போல் தான் ஒன்றும் அவ்வளவு பெரிய அழகி இல்லையே. படிப்பும் குறைவு தான் அறிவு’ என்று நினைத்தவளுக்கு அவள் ஆரம்பித்த முதல் தொழில் படும் நஷ்டத்தில் மூழ்கியது நினைவு வர, மீண்டும் கதவு தட்டப்பட்டது. 

ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டு வழக்கம் போல் முகத்தில் படர விடும் புன்னகையை சிரமப்பட்டு படர விட்டு கதவை திறந்தாள். 

அங்கே பணிப்பெண் நின்று இருக்க, “என்னக்கா?” என்று கேட்டாள். 

“பெரிய அய்யா கீழே வர சொன்னாங்கம்மா. உங்க அப்பா அம்மா வந்து இருக்காங்க. அப்படியே மோனிகா மேடத்தையும் வர சொன்னாங்க” என்று கூற, 

“வாட்… நீ என்ன சொன்ன திரும்ப சொல்லு?” என்று ஆத்திரமாக கேட்டாள். 

மோனிகாவின் குரலில் அப்பணிப்பெண்ணுக்கு உடல் நடுங்க, “உங்க அப்பா” என்று மெதுவாக ஆரம்பிக்க, 

“அது இல்ல, அதுக்கு அப்புறம் மேடம்னு சொன்னீயே அது. இத்தனை நாளா இந்த வீட்டோட சின்னம்மா. இப்போ வேற ஒருத்தி வந்ததும் மேடமா ஆகிட்டேனா?” என்றாள் கோபமாக. 

பணிப்பெண்ணுக்கோ இப்பொழுது உடல் வேர்த்து போக, கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோனிகா அவரை நெருங்கி வந்தவள் ஓங்கி அவர் கன்னத்தில் அறைய போனாள். 

பணிப்பெண் பயத்தில் கண்களை இறுகி மூடிக் கொள்ள, “மோனிகா…” என்று ஜீவானந்தத்தின் குரல் அதிகாரமாக ஓங்கி ஒலித்தது. 

ஜீவாவின் குரலை கேட்டதுமே ஓங்கிய கரத்தை அப்படியே நிறுத்தியவள், கோபமான விழியோடு ஜீவாவை திரும்பி பார்த்தாள். 

சங்கீதாவிற்கோ ஜீவாவின் குரலை கேட்டதுமே பயத்தில் மூச்சு வாங்க ஆரம்பிக்க, அவர்கள் அருகில் வந்தவன் உயர்ந்து அந்தரத்தில் நின்று இருந்த கரத்தை அழுத்தமாக பார்த்தான். 

அவன் பார்த்த பார்வையிலே மோனிகாவின் கரம் கீழே இறங்க, “அவங்க கிட்ட மன்னிப்பு கேளு” என்றான் வெட்டி விடுவது போல். 

அதை கேட்டு அதிர்ந்தா மோனிகா “வாட்…” என்க,

“மன்னிப்பு கேட்க சொன்னேன்” என்றான் அதே அழுத்தமாக. 

“முடியாது ஜீவா” என்று ஆணவமாக சொன்ன மோனிகாவை பார்த்தவன், “இப்போ நீ மன்னிப்பு கேட்கலனா, அவங்களுக்கு நீ என்ன பண்ண நினைச்சியோ. அதை உன் அக்காவை விட்டு உனக்கு பண்ண வைப்பேன்” என்று கூறியவனின் பார்வை நக்கலாக மாற, 

சங்கீதாவோ வாயை பொற்றியவள் அவளையே முறைத்துக் கொண்டு இருந்த தங்கையை கண்டு இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.

“ஐயா அதெல்லாம் வேணாம்” என்று பணிப்பெண் மெதுவான குரலில் சொல்ல, அவரை சுட்டெரிக்கும் பார்வை பார்த்த மோனிகாவோ அங்கே இறுகி போய் நின்று இருந்த ஜீவானந்தத்தை பார்த்தாள். 

‘இவன் தான் எத்தனை அழகு. எவ்வளவு அறிவு… கம்பீரம், அள்ள அள்ள குறையாத சொத்துகளுக்கு பணக்காரன்’ என்று அந்நிலையிலும் அவனை ரசிக்க தொடங்கி இருந்தது அவள் விழிகள்.

அதை உணர்ந்த ஜீவாவோ “அண்ணி” என்றான் கம்பீரமாக.

“சொல்லுங்க தம்பி” என்று சங்கீதா முன்னே வர, 

“நம்ம வீட்ல வேலை செய்யறவங்களை வெளியாளுங்க மதிச்சி நடந்துக்கலனா நம்ம என்ன பண்ணுவோம்?” என்று மோனிகாவை அழுத்தமாக பார்த்துக் கொண்டே கேட்க, 

“அடிச்சி வெளியே துரத்தி விடுவோம்” என்று ஏதோ ஒரு நினைப்பில் சங்கீதா சொல்லி விட, 

சொன்ன பிறகு தான் புரிந்தது அது யாருக்கான பதில் என்று. 

அதிர்ச்சியுடன் மீண்டும் வாயை பொற்றிக் கொண்டவள் தங்கையை பார்த்து இல்லை என்று தலையை ஆட்டினாள். 

மோனிகாவோ அக்காவை கோபத் தீயுடன் முறைத்தவள், “என் மேல கையை வச்சா”

“வச்சா?” என்று ஜீவா தெனாவட்டாக கேட்க, 

அவனின் திமிரையும் ரசித்தபடி மோனிகா “உன்னோட புது மனைவியை” என்று அவள் ஆரம்பிக்க கூட இல்லை, அவள் கன்னத்தில் இடியாக இறங்கி இருந்தது ஜீவானந்தத்தின் கரம்.

“சாவடிச்சிடுவேன்… என்னோட மெல்லிசையை பத்தி நீ பேசுறது என்ன? அவளை பத்தி நினைக்கிறது கூட வைச்சுக்க கூடாது” என்று ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டியவன் “அண்ணி உங்க தங்கச்சி உயிர் உங்களுக்கு முக்கியம்ன்னா முதல இவளை இங்கே இருந்து துரத்தி விடுற வழியை பாருங்க. இல்ல இது போல தினமும் என் கிட்ட அடி வாங்கியே சாவா” என எச்சரித்து விட்டு கீழே சென்றான். 

ஜீவானந்தம் கீழே இறங்கியதுமே பெரும் அதிர்ச்சியில் நின்று இருந்த பணிப்பெண்ணோ மோனிகாவை பயத்துடன் பார்த்து விட்டு அவன் பின் செல்ல, சங்கீதாவோ பிளந்த வாய் மூடாமல் அப்படியே நின்று இருந்தாள்.

மோனிகாவுக்கு தான் தலையெல்லாம் கிறுகிறுவென சுத்தியது. அதிலும் அவன் அடித்த கன்னம் வேறு எரிச்சலை கொடுக்க, அவள் கன்னம் எரிந்தது போல் அவளின் இதயமும் எரிய ஆரம்பித்தது பழிக்கு பழி வாங்கும் எண்ணத்தில். 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page