ஜீவாவின் அழைப்பை பார்த்த மறுநொடி ஜியாவின் உள்ளத்தில் காரிருள் சூழ்ந்து கொள்ள, கருவிழிகள் இரண்டும் விழிநீரில் மிதக்க, தேகம் நடுங்கினாள்.
தன்னைக் காதலாய் மையம் கொண்டிருந்த தன்னவனிடம் இருந்து வேகமாக விலகி, ஆஷிக் நடப்பதை கிரகிப்பதற்குள் தன் அலைபேசியோடு, சட்டென அறையின் கதவை வேகமாகத் திறந்து கொண்டு வெளியேறினாள்.
ஆஷிக், “ஜியா!” என்று அழைக்கவும், அவள் கதவை வேகமாகத் திறந்ததால் அது படார் என்று சுவற்றில் அடிக்கவும் சரியாக இருக்க,
அந்த நேரம் ஜியா சடாரென்று கதவை சாற்றிக்கொண்டு அவன் கூப்பிட கூப்பிட பதில் கூறாமல் அங்கிருந்து சென்ற விதம், ஏதோ அவன் தன் முகத்தில் பளார் என்று அறைந்தது போல உணர்ந்தான்.
ஜியா தன்னிடம் இருந்து விலகிய விதமும் அறையை விட்டு வெளியேறிய வேகமும், ஆஷிக்கிற்கு மிகவும் வேதனையை அளித்தது. அவனது உள்ளம் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல எதையெதையோ யோசிக்கத் தொடங்கியது.
அவள் அவனது முகம் பார்த்து எதாவது பேசியிருந்தால் கூட இப்படி வருத்தப்பட்டிருக்க மாட்டான். ஆனால் வெடுக்கென்று அவனை விட்டு விலகி வெறியேறிய விதம் அவனை மிகவும் காயப்படுத்தியது. அவளது செய்கையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவமானமாக உணர்ந்தான்.
‘ச்ச… என்னைத் தப்பா நினைச்சுட்டாளே! இதுக்காக அலையிறேன்னு தான் நினைச்சுருக்கா! கண்டிப்பா அதுவா தான் இருக்கும். அதான் இப்படி ஓடி போறா. நான் அவளோட ஆஷிக் தானே! எனக்கு என் மனைவிகிட்ட உரிமை இல்லையா? இல்லை ஜியாக்கு என் மேல விருப்பம் இல்ல. ‘நோ நோ’ நல்லா தானே இருந்தா. நான் ஒன்னும் அவகிட்ட என் விருப்பத்தைத் திணிக்கலையே.
நான் என்ன பண்றது, அவ மூலமா எனக்குள்ள வர்ற உணர்வுகளை அவகிட்ட தான் காட்ட முடியும். என்கிட்ட சொல்லிருக்கலாமே… இப்படி ஏன் பண்ணினா?
எதோ மூனாவது மனுஷன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுற மாதிரி போய்ட்டா, என் முகத்தைக் கூடப் பார்க்கல.
கண்டிப்பா என்னைத் தப்பா நினைச்சுட்டா, அதான் என் முகத்தைக் கூடப் பார்க்கல.’ என்று அவனது உள்ளம் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தது.
அலைபேசியில், “என்ன ஜியா, ஹஸ்பண்ட் கூடப் பிஸியா இருந்தியா?” என்று போதையில் தடுமாறிய ஜீவாவின் குரல், ஜியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த,
“அது…” என்று இழுத்தவளிடம்,
“சொல்லவே இல்லை, கல்யாணம் எல்லாம் பண்ணிகிட்ட.” என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அது அவளது காதில் இடி விழுந்தது போல இருந்தது.
“இப்போ எதுக்கு கால் பண்ணின?” என்று கனன்று வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு கேட்க,
“எதுக்கு கால் பண்ணினேன் ம்ம்… ஹான்! அன்னைக்கு நீ உன்னால என்ன பண்ண முடியும்னு கேட்டல. அதுக்கான பதில இப்போ குடுத்தா சரியா இருக்கும்னு நினைக்கிறேன். நீ என்ன டார்லிங் நினைக்கிற?” என்று விஷமமாய் புன்னகைக்க, அவன் கூறிய அர்த்தத்தை உணர்ந்து, திகைத்து போனவள் பதில் பேசாமல் சிலையென நின்றாள்.
“ஏதாவது சொன்னியா ஜியா, சாரி எனக்குக் கேட்கல.” என்று வேண்டும் என்றே அவளைச் சீண்ட,
“ஜீவா ப்ளீஸ்…”
“இது பதில் இல்லையே…”
“ஜீவா உன்னைக் கெஞ்சி கேட்குறேன்…”
“ம்ம்ம் கேளு… அதுக்கு முன்னாடி உன்னோட கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வேணும்னு டக்குன்னு சொல்லு.”
“ஜீவா நோ…”
“நான் என்ன நினைக்கிறேன்னா, உன் ஹஸ்பண்ட் உன்னோட வீடியோவை பார்த்தான்னா ரொம்பச் சந்தோஷப்படுவான்ல?”
“நோ ஜீவா ப்ளீஸ் வேண்டாம்… அன்னைக்கு நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, ஐயம் ரியலி சாரி ப்ளீஸ்…” என்று கண்ணீர் வடிக்க,
“ஐ வாண்ட் மோர்… நான் ஸ்டாப் சொல்ற வரைக்கும் சாரி ஜீவா சாரி ஜீவான்னு சொல்லிகிட்டே இரு. மனசு மாறுதானு பார்க்கலாம்.” என்றவன், “ம்ம் சத்தமா… கேட்கல.” என்று அவள் ஓய்ந்து போகும் அளவிற்கு அவளைத் துன்புறுத்தி வக்கிர புன்னகையோடு,
“மன்னிச்சுட்டேன் டார்லிங்!” என்று மொழிந்த வார்த்தைகள் அவளது காதில் அமிலத்தை வாரி இறைத்தது போல இருக்க, முகத்தைச் சுளித்தவள் திரண்டெழுந்த கோபத்தைத் தன் பல் இடுக்கில் அடக்கிக்கொண்டு,
“ஜீவா உனக்கும் மத்தவங்களுக்கு என்ன தான் வேணும்?”
“நீ… ஐ மீன் உன்னோட நிம்மதி. எனக்கு இது போதும், மத்தவங்களுக்கு என்ன வேணும்னு அவங்ககிட்ட தான் கேக்கணும்.”
“அதான் இல்லாம பண்ணிட்டீங்களே…”
“அப்படியா? ஆனா நீ கல்யாணம் எல்லாம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கிறத பார்த்தா…” என்று விஷமித்தான்
“நான்தான் உங்க பிரச்சனையே வேண்டாம்னு ஒதுங்கி போறேனே, அப்புறமும் ஏன் என்னை டிஸ்டர்ப் பண்றீங்க?”
“இப்போ ஒதுங்கி தான் போற, ஆனா மறுபடியும் எங்களை நீ மாட்டிவிட நினைச்சா நாங்க என்ன பண்றது? அதுக்குத் தான் அப்போ அப்போ உனக்குப் புரியவைக்கிறேன்.”
“ஜீவா சத்தியமா உங்களுக்கு எதிரா நான் எதுவும் பண்ண மாட்டேன். என்னையும் சமீரையும் விட்ருங்க.” என்றதும் விழுந்து விழுந்து சிரித்தவன்,
“உன்னையும் சமீரையும் நான் விடணுமா? ஜியா… ஜியா… லீவ் இட். சமீரை விடுறது இருக்கட்டும், உன்னை நான் எப்படி விடுறது? நீ விட்டுப் போன தடம் இன்னும் என் கன்னத்துல இருக்கே, அதுக்கு என்ன பண்றது?”
“ஜீவா ப்ளீஸ்… உன்னைக் கெஞ்சி கேக்குறேன், தயவு செஞ்சு வீடியோவை குடுத்திரு. நான் உங்க வழிக்கே வரல. என்ன கேட்டாலும் தரேன். ப்ளீஸ்…” என்று கெஞ்சியவளை ரசித்தவன்,
“என்… ன… கேட்டா… லும்… தருவி… யா?” என்று ஒவ்வொரு எழுத்துக்கும் அழுத்தம் கொடுத்து, ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்து பேச, அவனது வக்கிர மனதை புரிந்துகொண்ட ஜியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட,
வாய்விட்டு சிரித்து, “என்ன செல்லம், மௌனம் சம்மதமா?” என்றவன்,
“சரி டார்லிங், குட் நைட். உன் ஹஸ்பண்ட கேட்டதா சொல்லு.” என்று அலைபேசிக்கு விடுதலை கொடுத்தான்.
ஜீவாவை எண்ணிய பயத்தில் இருந்த ஜியாவை மேலும் பதறவைக்கும் விதமாய், “ஃபோன்ல யாரு?” என்ற ஆஷிக்கின் குரல் அவளை அதிர்ச்சியடையச் செய்ய, பதறியவள் விழிநீரை துடைத்துவிட்டு திரும்பி ஆஷிக்கைப் பார்க்க, அவனது ஊடுருவும் பார்வையில் தோன்றி மறைந்த கேள்விகளை அறிந்தவள், அவன் முகம் காணாது நிலம் நோக்க,
திரண்டு வந்த கோபத்தையும் எரிச்சலையம் அடக்கிக் கொண்டவன், “உன்கிட்ட தான்…” என்று அழுத்தமாய் கேட்க,
“ஃப்ரண்ட்…” என்ற அவளது பதிலில், திருப்தி அடையாதவன் இருந்தும் அவளிடம் அதைப் பற்றி இப்பொழுது பேச விரும்பாதவன்,
“என்கிட்ட சொல்லிருக்கலாம்.” என்று விரக்தியாகத் தன் கோபத்தை வெளிக்காட்டி, “சரி வெளியிலே ஏன் நிக்கிற, உள்ள வா.” என்று அவளது கரத்தைப் பற்றிக் கொள்ள, ஒருவித சங்கடத்தோடு தன் கரத்தை அவனது பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டவள்,
தலையில் கை வைத்தவாறு, “தலை வலிக்குது, ரெஸ்ட் எடுக்கணும்.” என்று அவனது முகத்தைப் பார்க்காமல் கூற, அதைக் கூடப் பொருட்படுத்தாதவன்,
“என்ன தலை வலிக்குதா? வாடா, நான் தைலம் தேச்சுவிடுறேன், ட்ராவெல்ல டயர்ட் ஆகிருப்ப.” என்று காதலோடு அவளது நெற்றியில் அவன் கை வைத்த மறுநொடி, ஒருவித சங்கோஜத்தோடு அவனிடம் இருந்து விலகியவள், “வேண்டாம், நான் தூங்கணும். ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும்.” என்று அவனது கையைக் கிட்டத்தட்ட தட்டிவிட்டவாறு அவனது முகத்திற்கு நேராகக் கூறிவிட்டு, அவனிடம் இருந்து விலகி சென்று படுக்கையின் ஒரு ஓரத்தில் அவனுக்கு முதுகாட்டி உடலை குறுக்கிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.
மிகவும் காயப்பட்டான், அவள் கூறிய விதமும் விலகிய விதமும் அவனைச் சுக்கு நூறாக உடைத்தது
‘எதோ என்கிட்ட இருந்து தப்பிச்சு போற மாதிரி ஓடுறா. நான் என்ன அவ்வளவு கேவலமானவனாவா தெரியுறேன்?’ என்று உள்ளுக்குள் பொறுமியவன், மனதில் கனன்று வந்த கோபத்தை அருகில் இருந்த மேசையின் மீது காட்டிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.
அதைத் தன் கண்கள் மூடியவாறு அவனுக்கே தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் சென்ற மறுநொடி,
“என்னை மன்னிச்சுருடா… என் மேல கொஞ்சம் கூடக் கபடமே இல்லாத அன்பை கொட்டி கொட்டி கொடுக்குற உனக்கு, துரோகம் பண்ண என்னால முடியாதுடா. ஒரு பொய்யோட நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை. உண்மை ரொம்ப வலிக்கும், சொன்னா நீ தாங்கிக்க மாட்ட.” என்று வாய்விட்டு கதறி அழுதாள்.
கோபத்தில் ஹாலுக்கு வந்தவன், ‘நீ என்னை விரும்புறன்னு எனக்குத் தெரியும், அப்போ ஏன் என்னை விட்டு விலகி போற? அப்படி என்ன விஷயம் உன்னை என்கிட்ட நெருங்க விடாம தடுக்குது ஜியா.
நீ வெடுக்குன்னு என்னை விட்டு போகும் பொழுது, உயிரே போற மாதிரி இருக்கு. சொன்னா தானே தெரியும். நான் உன் புருஷன் உன் பிரச்சனைய என்கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் உனக்காகத் தானே வாழ்ந்துட்டு இருக்கேன். என் கையை உதறும் பொழுது என்னையே நீ வேண்டாம்னு சொல்ற மாதிரி இருக்கு. எதுவா இருந்தாலும் சொல்லிரு ஜியா. சரி பண்ணலாம், ஆனா என்னை விட்டு விலகாத.’ என்று தனக்குள் வருந்தினான்.
இருவருக்கும் நெஞ்சுக்குழிக்குள் கனன்று வந்த வலி ஏதோ பாறாங்கல்லை வைத்தது போலக் கனத்தது.
நீண்ட நேரம் சிந்தனைகளின் இறுக்கத்தில் சிக்கிக்கொண்டு தவித்த ஆஷிக், வெகுநேரத்திற்குப் பிறகு தன்னை அறியாமலே ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான்.
இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் நேரம் ஆனது கூடத் தெரியாமல் ஆஷிக் தன்னை மறந்து உறங்க, அவனது அருகிலே மண்டியிட்டு அமர்ந்த ஜியா, கலைந்த தன்னவனது சிகையைக் கோதிவிட, மனைவியின் கரம்பட்ட ஸ்பரிசத்தில் லேசாகச் சிலிர்த்தவன் உறக்கத்திலும், “ஜியா!” என்று அழைத்தான்.
ஆழ்ந்த உறக்கத்திலும் தன்னவன் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான், என்பதை எண்ணி பார்க்கும் பொழுதே உள்ளம் நெகிழ்ந்தவள், தன் இமை விளிம்பில் எட்டிப்பார்த்த கண்ணீரை துடைத்தவாறு தன்னவனின் நெற்றியில் இதழ் பதிக்க, உறக்கம் கலைய பாதி உறக்கத்தில் ஒருவித எரிச்சலோடு, தன் மேல் இருந்த ஜியாவின் கரத்தை விருட்டென்று தட்டிவிட்டவாறு, “ப்ச்…” என்று முகம் சுளித்தபடி எழுந்து அமர்ந்தான்.
அவன் எழுந்து அமர்ந்த வேகமும் அவனது முகத்தில் குடியிருந்த எரிச்சலும், ஜியாவுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
அவளது வாடிய முகத்தைப் பார்த்த பிறகு தான், தன்னை அறியாமல் தான் அவளிடம் நடந்து கொண்ட விதம் நினைவுக்கு வர, “ச்ச… நீயா?” என்று தனக்குள் முணங்கியவன், வருத்தத்தோடு அவளிடம் மன்னிப்பு கேட்க முனைந்த நேரம், அவனது மூளை நேற்று இரவு நடந்தவற்றை அவனுக்கு நினைவுபடுத்த கோபம் கொண்டவன், இறுக்கமான பார்வையை அவள் மீது பாய்த்துவிட்டு தன் அறைக்குச் சென்று விட்டான்.
அவனது செய்கையில் உள்ளம் கலங்கியவள் பிறகு, ‘அவன் இன்னும் கோபமா தான் இருக்கான். எப்படிக் கோபப்படாம இருப்பான். இதுக்குத் தான் நான் உனக்கு வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன், நீ தான் கேட்கல ஆஷிக். என்னை மன்னிச்சுருடா, எனக்கே என்ன பண்றதுனே தெரியல. உன்கூடப் பொய்யா வாழ்க்கையைத் தொடங்குறதுல எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லைடா.’ என்று மனதிற்குள் வேதனை அடைந்தாள்.
குளித்து முடித்துவிட்டு தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே ஆஷிக் வேகமாகக் கீழே இறங்கி வர, அவன் முன்பு தன் சோகத்தைக் காட்டிகொள்ளாத ஜியா மிக இயல்பாக,
“வாவ் ஆஷிக் அதுக்குள்ள ரெடி ஆகிட்ட?” என்றவாறு அவனது கரத்தை பற்றி அழைத்துச் சென்று டைனிங் டேபிளில் அமரவைத்து,
“இன்னைக்கு எல்லாமே உனக்குப் புடிச்சது தான் சமைச்சுருக்கேன். முதல் தடவ பண்ணிருக்கேன்டா, டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு.” என்று ஆர்வமாய் மலர்ந்த முகத்துடன் தன் மென்கரத்தால் ஊட்டிவிட, அவளது செய்கையில் தன் இறுக்கத்தைத் தளர்த்தியவன், உணவில் உப்பும் காரமும் சரியான அளவில் இல்லாவிட்டாலும், காதலும் அன்பும் நிறைந்து வழிய, கேள்வியோடும் ஒருவித தயக்கத்தோடும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து, புன்னகைத்தவாறே சுவைத்தவன், ‘நல்லா இருக்கு’ என்பது போலத் தன் கரத்தை உயர்த்திக் காட்ட அவளது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“நல்லா இருக்கா? எப்படி இருக்குமோன்னு நினைச்சேன்.” என்றவாறு அடுத்தவாய் ஊட்டிவிடும் நேரம், அவளது கரத்தைப் பற்றியவன் தன் பக்கம் அழைத்து உட்கார வைத்து,
அவளது முகத்தையே சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து, “என்னை நேத்து சீப்பா நினைச்சுட்டல?” என்று கலக்கத்தோடு அவன் கேட்ட கேள்வியில் கலங்கிப் போனவள் உடனே மறுத்து,
“இல்லை, நிஜமா அப்படி இல்லை ஆஷிக்.”
“அப்போ ஏன் நேத்து அந்த மாதிரி நடந்துகிட்ட?”
“அதைப் பத்தி இப்போ பேச வேண்டாம்.” என்று தலை கவிழ்ந்தவளை நிமிர்த்தியவன்,
“இல்லை, பேசணும் அதுவும் இப்பவே…” பிடிவாதம் பிடித்தான். அவள் மௌனமாய் இருக்க மேலும் தொடர்ந்தவன்,
“நேத்து என்கிட்ட நீ அப்படி நடந்துகிட்ட. இப்போ அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி ரொம்ப இயல்பா இருக்க. இதை நான் எப்படி எடுத்துகிறது. மனசை விட்டு என்கிட்ட பேசுடா, உன் பாரம் குறையும். கஷ்டமா தான் இருக்கும், ஆனா இன்னும் அதையே எத்தனை நாளுக்கு நினைச்சுட்டு இருக்கப் போற? அதை விட்டு வெளியில வர்றது தானே புத்திசாலித்தனம். உன்னோட பிஹேவியர் என்னை ரொம்பக் குழப்புது.”
“ஆஷிக் நான் நல்லா தான் இருக்கேன், நீ நினைக்கிற மாதிரி இல்லை. நீ முதல்ல சாப்பிடு.” என்று ஜியா தடுமாறிய குரலில் கூற,
“இல்லை ஜியா, இன்னைக்கு நான் விடுறதா இல்லை. எனக்குப் பதில் வேணும்.”அழுத்தமாய் கூற, கண்ணீர் எப்பொழுது வேண்டுமானாலும் வழிய காத்திருப்பது போல விழிகளின் விளிம்பில் எட்டிப்பார்த்தபடி இருக்க,
“சொல்ல போறியா, இல்லையா? உன் அமைதி எனக்குள்ள சூறாவளிய ஏற்படுத்துது.” என்று சுள்ளென்று கத்த, அதிர்ந்தவளின் விழிகளில் இருந்து நீர் அனுமதி இன்றிப் பெருக்கெடுத்து ஓடியதில் எரிச்சல் அடைந்தவன்,
“ச்ச… இதே வேலையா போச்சு, நான் எதோ கொடுமைக்காரன் மாதிரி அழுதுட்டே இருக்க. புருஷன்டி… என்கிட்ட உனக்கு என்ன பயம்? நீ என்னைக் கொல்லாம கொன்னுட்டு இருக்க.”
“நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை ஆஷிக்.”
“ஷட் அப்!” என்று கர்ஜித்தவன் அவளது கையில் இருந்த சாப்பாடு தட்டை கோபத்தில் தட்டிவிட்டவாறு, கதவை வேகமாக அடித்துச் சாத்திவிட்டு தன் பணிக்குச் சென்றான்.
***
