ஏங்கி ஏங்கி அழறா. எதோ மூணாவது மனுஷன்கிட்ட பயப்படுற மாதிரி பயப்படுறா. நான் என்ன கொடுமைக்காரனா? நேத்து என்னை விட்டு விலகி போய் கஷ்டப்படுத்துனா, இப்போ அவளாவே நெருங்கி வந்து கஷ்ட்டப்படுத்துறா. அவகிட்ட கோபப்பட்டா எனக்குத் தான் கஷ்டமா இருக்கு.’ என்று கடிவாளமிடாது தறிகெட்டு ஓடிய கற்பனை குதிரையோடு சேர்ந்து தானும் பயணிக்க, மனம் பாறாங்கல்லை விழுங்கியது போலக் கனத்தது. கவலையுடன் அலுவலகம் சென்றான்.
அவன் தட்டை தட்டிவிட்டது, கதவை அடித்துச் சாத்திய விதம் ஜியாவிற்கு இதயத்தில் பலமாக அடித்தது போல இருந்தது.
“இதுக்குத் தான் ஆஷிக் என்னை நீ கல்யாணம் பண்ணிக்காதனு சொன்னேன், நீ தான் கேக்கல. உண்மைய சொல்ல சொல்ற நீ, அதைத் தாங்கிக்குவியானு எனக்குத் தெரியலையேடா?” என்று வாய்விட்டு கதறினாள்.
அந்த நேரம் பார்த்து சமீரிடம் இருந்து அழைப்பு வர கண்ணீரைத் துடைத்தவாறு அட்டென்ட் செய்தவள், அவனுக்கும் சங்கடம் கொடுக்க விரும்பாமல், முடிந்த அளவுக்கு இயல்பாகப் பேச, அவளது கரகரத்த குரலிலும் விட்டு விட்டு வந்த வார்த்தையிலுமே அவள் அழுதிருப்பதைப் புரிந்து கொண்டவன், என்னவென்று விடாமல் கேட்டுக்கொண்டே இருக்க, இதற்கு மேல் வலியை அடக்கிக்கொள்ள முடியாதவள் ஏங்கி ஏங்கி அழுதவாறு,
“ஆஷிக்கிட்ட உண்மைய சொல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கு.”
“இன்னும் எத்தனை நாள் ஜியா அதையே பேசுவ? மறந்துட்டு புதுசா வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணு.”
“என்னால ஆஷிக் கூட ஒரு மனைவியா வாழ முடியாது சமீர்.”
“பழசு எல்லாத்தையும் மறந்துட்டு, நீ ஆஷிக் கூட வாழ்ந்து தான் ஆகணும் ஜியா.”
“ஏன், என் நிலைமையில இருந்து யோசிக்க மாட்டிக்கிற சமீர்?”
“கொஞ்சம் மத்தவங்கள நினைச்சு பாரு, உண்மை தெரிஞ்சா உடைஞ்சு போயிருவாங்க. மனசை மாத்திக்கோ ஜியா.”
“யாரும் என் நிலைமையில இருந்து யோசிக்கவே மாட்டிக்கிறீங்க.” என்று மீண்டும் அவள் ஏங்கி ஏங்கி அழ, அவளை எப்படிச் சமாதானம் செய்வதென்று புரியாமல் சமீர்,
“ஜியா ஏன் அழுதுட்டு இருக்க? ஆஷிக் எங்க இருக்கான், அவன்கிட்ட போன குடு.” என்று கேட்க, அவளிடம் இருந்து கண்ணீர் மட்டுமே பதிலாய் வர,
“நான் கிளம்பி வரேன்.” என்று தன் அழைப்புக்கு விடை கொடுத்தவன், சில மணி நேரத்தில் ஜியாவின் இல்லம் அடைந்தான்.
டைனிங் டேபிளில் தலை சாய்த்தவாறு அழுது கொண்டிருந்த ஜியாவின் அருகில் சென்றவன், கேள்வி எதுவும் கேட்காமல் ஒரு க்ளாசில் தண்ணீரை எடுத்து அருந்துமாறு கொடுக்க, முதலில் மறுத்தவள் பிறகு வாங்கிக்கொண்டாள்.
அவளாக எதுவும் சொல்லும் வரை தான் எதுவும் கேட்க வேண்டாம் என்று சமீர் முடிவு செய்திருக்க, தண்ணீர் அருந்திய பிறகு கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தவள், ஜீவாவின் அழைப்பு தொடங்கி அனைத்தையும் ஒருவித தயக்கத்தோடு கூறியவாறு மீண்டும் ஏங்கி ஏங்கி அழ,
மிகவும் கொந்தளித்தவன், “அந்த ஜீவாவ நான் சும்மா விடப் போறதில்ல, அவன் என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்? அவன் மேல கம்ப்ளெயிண்ட் குடுக்க ரொம்ப நேரம் ஆகாது. கோபத்துல அவன் எதாவது செஞ்சி அது உன் வாழ்க்கைய கேள்வி குறியாக்கிருமேன்னு தான் பொறுமையா இருக்கேன். ஆனா அவன் என் பொறுமைய ரொம்பச் சோதிக்கிறான்.
சரி ஜீவா தான் இப்படி இருக்கான்னா, அந்த ஆஷிக்குக்கு என்னாச்சு? அவன் ஏன் உன்னைக் கஷ்டப்படுத்துறான்? உன்னை அது இதுன்னு கேட்டு கஷ்ட்டப்படுத்தாம, சந்தோஷமா பார்த்துக்கோன்னு சொல்லியும் உன்னை அழவைக்கிறான்…” என்று வெடித்தவன்,
“நீ அழாத ஜியா, நான் நினைச்சா அந்த சுஜித், ஜீவா, வருண் அவனுங்க மூணு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பிடலாம். ஆனா அதுக்கப்புறம் உன்னோட நிலைமை அது ஒன்னு தான் என்னைத் தடுக்குது. அவங்க மேல உள்ள பயம் எல்லாம் எனக்கு எப்பவோ போயிட்டு. அவங்க என்னை ஏதாவது பண்ணிருவாங்களோன்னு எனக்குச் சுத்தமா பயம் இல்லை.
என் பயம் உனக்கு எதுவும் ஆகிற கூடாது. ஏற்கனவே அவங்களால உன் வாழ்க்கையில ஏகப்பட்ட பிரச்சனை. இப்போ தான் உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சுருக்கு, அது கெட்டு போறதில எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லை. ஜீவா மிரட்டுறது கூட சுஜித் சொல்லிதான் இருக்கும். எல்லாத்துக்கும் சுஜித்தான் மெயின் ரீசன். அவனுங்க எல்லாரும் சுஜித் சொல்றத கேட்டுட்டு, ஆடிட்டு இருக்காங்க.” என்று பொரிந்து தள்ள,
“எல்லாம் என் தலையெழுத்து…” என்று ஜியா வேதனை அடைய,
அவளுக்கு ஆறுதல் அளித்தவன் மேலும் தொடர்ந்து, “இவனுங்க இப்படிப் பண்றது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆஷிக் ஏன் புரிஞ்சிக்காம உன்னைக் கஷ்டப்படுத்துறான்? எனக்கு அவன் மேல கோபமா வருது.” என்று பல்லைக் கடித்தான்.
“இல்லை சமீர், என் ஆஷிக் ரொம்ப நல்லவன். அவனை மாதிரி ஒருத்தன இந்த உலகத்துல நாம பார்க்கவே முடியாது. தப்பெல்லாம் என்னுடையது. வாழ தகுதி இல்லாத எனக்கு எதுக்குக் கல்யாணம் சமீர்…” என்று ஆரம்பித்தவள் இறுதியில், வழக்கம் போலத் தன் மரணமே ஒரே தீர்வு என்று பிதற்ற,
அவள் மீது திரண்டெழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டவன், பல மணிநேர முயற்சிக்கு பிறகு அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தான்.
ஜியா கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பிருக்க, ஆஷிக்கின் நிலைமையோ படுமோசம். ஜியாவை கஷ்டப்படுத்திவிட்டு அவன் மட்டும் எப்படி இருப்பான்? வருத்தத்துடன் எங்கையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
ஏர்போர்ட்டில் அனைவரும் அவனுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு ஜியாவை பற்றிக் கேட்க, அனைவருக்கும் பதில் அளித்தவன், ஏர்போர்ட்டின் காஃபி ஷாப்பில் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து தனியாக அமர்ந்தவாறு, ஒவ்வொன்றாகச் சிந்திக்கத் தொடங்கினான்.
பலவாறு யோசித்த பிறகு, ‘ஜியா ஏன் என்னை ஒரு மூணாவது மனுஷன் மாதிரி ட்ரீட் பண்றா?’ என்று மனம் அதே இடத்தில் வந்து நிற்க, அவனது கோபம் இன்னும் அதிகம் தான் ஆனது. தன் மனைவியின் விலகலை எந்தக் கணவனால் தான் தாங்கிக்கொள்ள முடியும்? ஆஷிக்கும் விதிவிலகில்லையே? அவளது மனதில் உள்ளதை அறிய முடியாமல் தவித்தான். ஜியாவுக்குத் தன் மீது காதல் இருக்கிறதா என்கின்ற அளவுக்குக் கோபத்தில் தன் சிந்தனைகளைத் தாறுமாறாகப் படரவிட்டான். தலையும் மனமும் கனத்தது. நெற்றியை நீவியபடி அமர்ந்திருக்க,
“ஹாய் புது மாப்பிள்ளை!” என்று தோளை உலுக்கியவாறு அவனுக்கு எதிரே வந்து அமர்ந்த ரோஹித், ஆஷிக்கின் தகத் தகவென அனல் அடிக்கும் சிவந்த விழிகளைப் பார்த்த மாத்திரமே, நண்பன் கோபத்தில் அமர்ந்திருப்பதைப் புரிந்து கொண்டான்.
“என்னடா ஒருமாதிரியா இருக்க? ஜியாகூடச் சண்டை போட்டுட்டியா என்ன?” என்று கேட்க, கனன்று வந்த கோபத்தை நெற்றியில் தேக்கியவன், புருவத்தை நிமிர்த்தியபடி ரோஹித்தின் விழியை நேருக்கு நேராக நோக்கி,
“கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் ஆனதுக்கு அப்புறம், நீ உன் மனைவிகிட்ட ஆசையா நெருங்கி வரும் போது, அவ எதோ ஒரு பொறுக்கிக்கிட்ட இருந்து தப்பிச்சு போற மாதிரி, உன்கிட்ட இருந்து விலகி ஓடி போய் எதோ ஒரு மூணாவது மனுஷனை பார்க்கிற மாதிரி பார்த்தா நீ என்ன பண்ணுவ?” என்று விழிகளை விரித்துக் கேட்க,
“டேய் இதுக்கா டென்சனா இருக்க? பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி நேரத்துல இயல்பாவே வர்ற பயம்டா.”
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்…” என்று கடுப்பான ஆஷிக் மேலும் தொடர்ந்து,
“அதை என்கிட்ட சொன்னா நான் புரிஞ்சிக்க மாட்டேனா என்ன? எதோ அரக்கன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுற மாதிரி ஓடுறா. என்னன்னு கேட்டா அரண்டு போய்ப் பாக்குறா. கஷ்டமா இருக்குடா…” என்று ஆத்திரமாய் ஆரம்பித்த அவனது வாதம் இறுதியில் கலக்கத்தில் முடிய, அவனிடம் கேள்வி கேட்டு மேலும் கடுப்படிக்க விரும்பாத ரோஹித், நண்பனின் கரத்தை ஆறுதலாய் பற்றிக் கொண்டு,
“கஷ்டமா தான் இருக்கும் மச்சான். உன் இடத்துல நான், ஏன் யாரா இருந்தாலும் உன்னை விட அதிகமா ரியாக்ட் பண்ணுவாங்க. ஆனா ஜியாவோட நிலைமையையும் நீ கொஞ்சம் யோசிச்சு பாரு. டாக்டர் என்ன சொன்னாங்க, ஜியாவோட மனசை காயப்படுத்துற மாதிரி எந்தச் சம்பவமும் நடக்கக் கூடாது. அவளைக் கவனமா பார்த்துக்கோங்க, உங்க அன்பால மட்டும் தான் அவளைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வர முடியும். மறுபடியும் ப்பேனிக் (panic) அட்டாக் வந்தா அது அவளோட உயிருக்கே கூட ஆபத்தாகும்னு சொன்னாங்களா இல்லையா?” என்று அவன் கூறிய பிறகு, தன் மடத்தனத்தை எண்ணி விழிகளை இறுக்க மூடி திறந்தான்.
“ரொம்பக் கோபப்பட்டுட்டேன்டா, என்னடா பண்றது? பொறுமையை ரொம்பச் சோதிக்கிறா…” என்றவனிடம்,
“அவளுக்கு உன்னை விட்டா யாருடா இருக்காங்க? நீ தான்டா விட்டு கொடுத்து போகணும். நீ உடனே கிளம்பி போ, அவளைச் சமாதானப் படுத்தி எங்கையாவது வெளியில கூட்டிட்டு போ.” என்று ஆஷிக்கிற்கு ரோஹித் ஒரு நல்ல நண்பனாய் விஷயத்தை எடுத்து கூறி புரியவைத்தான்.
அலைபேசியில் இருக்கும் ஜியாவின் புகைப்படத்தைப் பார்த்து, “ரொம்பக் கோபப்பட்டுட்டேன்ல, சாரிடா!” என்றவாறு அதற்கு முத்தமிட்டவன்,
‘உன்னை எப்படிடி சமாதானம் படுத்த போறேன்? நீ அழ ஆரம்பிச்சா நிறுத்த மாட்டியே?’ என்று சிந்தித்தவன், ‘இப்போவே ஃபோன் பண்ணி சாரி கேட்கலாம், இல்லை இல்லை… சர்ப்ரைஸா வீட்டுக்கு போவோம்.’ என்று யோசிக்க அவனது மூளை, “உன் சர்ப்ரைஸ் நேத்து மண்ணைக் கவ்வுனது போதாதா? இன்னும் உனக்கு ஏன் இதெல்லாம்…” என்று எச்சரிக்க, நேரடியாக அலைபேசியில் அழைத்துவிடலாம் என்று முடிவெடுத்தவன், அவளுக்கு அழைப்பு விடுக்க அது கடைசி ரிங் வரை சென்று கட்டாகியது.
‘ஆக, சமாதானம் பண்றது ரொம்பக் கஷ்டமா இருக்கும் போலயே?’ என்று எண்ணியவாறே தன் இல்லம் வந்தடைந்தவன்,
தனது வீட்டின் வாசலில் இருக்கும் காரை பார்த்து, ‘எங்கோ பார்த்தது போல இருக்கே, யாரு வந்திருப்பாங்க?’ என்றவாறு வீட்டிற்குள் நுழையவும், அதுவரை மெளனமாகச் சமீர் கூறியதற்குத் தன் தலையை மட்டும் ஒப்புதலாய் ஆட்டிக்கொண்டிருந்தவள்,
அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், தன் சோகத்தை மறைத்து அவனிடம் மிகவும் இயல்பாகச் சிரித்துப் பேச, வாசலிலே நின்று கொண்டிருந்த ஆஷிக்கின் மனதிற்குள் மீண்டும் இருள் சூழ்ந்து கொண்டது.
‘நான் பேசுனாலே விலகி விலகி போற ஜியா. சமீர்கிட்ட மட்டும் இவ்வளவு இயல்பா பேசிட்டு இருக்கா? என்கிட்ட அழுதா, ஆனா சமீர்கிட்ட சிரிச்சுட்டு இருக்கா. அப்போ என்னோட கோபம் அவளைக் கொஞ்சம் கூடப் பாதிக்கலையா?’ என்று கடி நுண் பகழி போல அவனுக்குள் எழுந்த கேள்விகள் அவனது மனதை குத்தி கிழித்தது.
சிலையென அவன் அங்கே அசையாமல் நிற்க, சில நிமிடங்கள் கழித்து வாசல் அருகே பார்த்த ஜியாவின் கண்கள், ஆஷிக்கைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் மலர, “ஆஷிக்!” என்று அவள் அழைத்ததில் தன் நிலைக்கு வந்தவன், சமீரை பார்த்துக் கட்டாயப் புன்னகை சிந்தி அவர்களோடு அமர்ந்து இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தான்.
ஒவ்வொரு உரையாடலிலும் ஜியா, சமீருடன் மிக இயல்பாகவும் மிக மகிழ்வோடும் உரையாடுவது ஆஷிக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.
தன்னுடன் அவள் இப்படிச் சிரித்துப் பேசிய தருணங்களை, அதுவும் முக்கியமாகத் திருமணத்திற்குப் பிறகு நடந்த தருணங்களை எண்ணி பார்த்தவனுக்கு, அவள் தன்னுடன் சிரித்து இயல்பாகப் பேசிய தருணங்களை விட, தன்னை விட்டு விலகி சென்ற தருணங்களே அதிகமாக இருக்க, அவனது கோபம் இன்னும் அதிகமானது. உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தவன் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
பல மணிநேர உரையாடலுக்குப் பிறகு சமீர், அங்கிருந்து கிளம்பும் நேரம் ஆஷிக்கைத் தனியாக அழைத்து, “அன்னைக்கு ஜியாகிட்ட நான் எப்படி நடந்துக்கணும்னு சொன்னீங்க, ஆனா இன்னைக்கு நீங்க எப்படி நடந்துக்கிட்டிங்க ஆஷிக்?” என்று, இயல்பாகத் தனது அக்மார்க் கன்னக்குழி புன்னகையோடு வார்த்தையில் மட்டும் அழுத்தம் கொடுத்து கேட்க, ஆஷிக்கிற்குச் சுளீரென்று இருந்தது.
அவன் பதில் கூறுவதற்குள் மேலும் தொடர்ந்த சமீர், “உங்களோட பர்சனல்ல தலையிடுறேன்னு நினைக்காதீங்க. ஜியா அழும் பொழுது ஒரு நண்பனா எனக்குக் கஷ்டமா இருக்கு. ஜியாவ பார்த்துக்கோங்க.” என்று கிட்டத்தட்ட கண்டிப்புடன் கூடிய அறிவுரையோடு அங்கிருந்து சென்றான்.
‘என் மனைவிகிட்ட நான் எப்படி நடந்துக்கணும்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் போறான். டேய் அவ என் பொண்டாட்டிடா… அவகிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்றதுக்கு நீ யாருடா?’ என்று சமீரின் சட்டை காலரை பற்றிக் கொண்டு கேட்க வேண்டும் என்று அவனது நாவு போட்டியிட்ட அடுத்த நொடி,
அவனது மூளை, ‘அவன் ஜியாவோட ஃப்ரண்ட், அக்கறையில பேசிட்டுப் போறான். ஆனா ஜியா ஏன் அவன்கிட்ட எங்க ரெண்டு பேருக்குள்ள நடந்த ப்ரைவஸிய ஷேர் பண்ணினா? அவளை ஆறுதல் படுத்த நான் இல்லையா? நான் உரிமையா பக்கத்துல வர கூடாது, உரிமையா என்னன்னு கேட்க கூடாது. இப்போ கோபம் கூடப் படக் கூடாதா? திட்டினாலும் நான் தானே திட்டினேன், நானே சமாதானம் படுத்துற வரைக்கும் காத்துகிட்டு இருக்க மாட்டாளா? சமீர்கிட்ட சொல்லி அழுதிருக்கா.
அவன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்றா. ஆனா என்கிட்ட மட்டும் மனசை விட்டு பேச அவளால முடியலை.’ என்று காட்டுத்தீயை போல வேகமாக நொடிப்பொழுதில் கேள்விகள் அவனது மனதில் பரவ, அவனுக்குள் அடக்க முடியாத கோபம் பொங்கி எழுந்தது.
அதே கோபத்தோடு வீட்டிற்குள் நுழையவும், ” எனக்குத் தெரியும் ஆஷிக், நீ வருவன்னு…” என்றவாறு ஆஷிக் தோள்மீது சாய்ந்து கொண்ட ஜியாவை விருட்டென்று விலக்கிவிட்டவன், அவனது செய்கையை அவள் கிரகிப்பதற்குள்,
“உனக்கு நான் ஒரு பொருட்டே இல்லல?” என்று சுள்ளென்று கேட்ட கேள்வியில் பதறியவள், “ஏன் அப்படிச் சொல்ற? நீ எனக்கு ரொம்ப முக்கியம்.”
“நடிக்காத… உனக்காக நான் ஓடி ஓடி வந்தா, நீ எதுவுமே நடக்காத மாதிரி சமீர் கூடச் சிரிச்சு பேசிட்டு இருக்க. சமீர்கிட்ட ஃபோன் பண்ணி பேசுனல, ஒரு தடவ என்கிட்ட பேச உனக்குத் தோனுச்சா சொல்லு…” என்று அவளது மென் கரத்தை பற்றி உலுக்கியவன், “என்கிட்ட எப்படித் தோனும், நான் தான் உனக்கு வேண்டாதவனே?” மீண்டும் எய்தான் அம்பு போன்ற கூர்மையான வார்த்தைகளை.
“நீ எப்படிடா எனக்கு வேண்டாதவனா இருப்ப?”
“இல்லை, எனக்கு அப்படித் தான் தோனுது. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில நடந்த விஷயத்தை சமீர்கிட்ட சொல்லி அழுதுருக்க. நான் என்ன உன்னைக் கொடுமையா படுத்துறேன். அவன் என்னைக் கேள்வி கேட்டுட்டுப் போறான். அவன் அப்படிப் பேசுறான்னா நீ என்னைப் பத்தி தப்பா எதோ சொல்லிருக்க.”
“நீ தப்பா புரிஞ்சிருக்க ஆஷிக்…”
“இப்போ தான் சரியா புரிஞ்சிருக்கேன்.”
“அப்படி இல்ல…”
“அப்படித் தான்… இத்தனை நாள்ல ஒரு நாள் என்கிட்ட இயல்பா இருந்திருக்கியா? உன்கிட்ட ஒரு ஹஸ்பண்டா இருக்கிறத விட முதல்ல நல்ல நண்பனா இருக்கணும்னு, எவ்வளவோ முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஆனா நீ என்னை மனுஷனா கூட மதிக்கலை. இதுவரைக்கும் உன்கிட்ட நான் எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லாம தான் இருக்கேன். ஆனா நீ அப்படி இல்லை ஜியா. ஆனாலும் நீயா என்கிட்ட பிரச்சனைய சொல்லுவன்னு காத்துகிட்டு இருக்கேன். ஆனா கடைசி வரைக்கும் நான் காத்துகிட்டு தான் இருக்கனும்னு நினைக்கிறன்.”
“ஆஷிக் நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட…”
“கண்ணு முன்னாடி நடக்குது ஜியா, என்னால எல்லாத்தையும் பார்க்க முடியுது. சமீர்கிட்ட இருக்கிற மாதிரி நீ என்கிட்ட இயல்பா இருக்க மாட்டிக்கிற. அவன்கிட்ட சிரிச்சு பேசுற, அவன் கூட அவ்வளவு மனநிம்மதியோட இருக்க. ஆனா என்கிட்ட ஒருவித பயத்தோடு தான் இருக்க. உனக்கு நிஜமாவே என் மேல லவ் இருக்கான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு ஜியா. உள்ள வலிக்குது. நீ என்னை வேல்யூவே பண்ணலன்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு.
உன்னைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணி நான் தோத்து தான் போறேன். என்னை ஏன் நம்ப மாட்டிக்கிற? நீ என்னை விடச் சமீர்கூட கம்ஃபர்ட்டபுளா பழகுறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? நீ என்னோட மனைவி, ஆனா உன்னை எப்படிச் சிரிக்க வைக்கணும், உன்னை எப்படி ஆறுதல் படுத்தணும்னு என்னை விடச் சமீருக்கு தான் அதிகமா தெரிஞ்சிருக்கு.
ஏன், இப்போ வரை உன் பிரச்சனைய நீயா என்கிட்ட மனசை விட்டு இன்னும் சொல்லவே இல்லை. சமீர் சொல்லி தானே எனக்குத் தெரியும். ஐயோ இதெல்லாம் நினைக்கும் பொழுதே மூளை எல்லாம் சிதறி போற மாதிரி இருக்கு. சான்ஸ் குடுடி, என்னாலையும் உனக்கு நல்ல நண்பனா இருக்க முடியும். நீ என் ஜியா, உன்னைப் பத்தி நான் தான் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும். ஆனா நான் உன் லைஃப்ல ஒரு ஜடம் மாதிரி தான் இருக்கேன்.” என்றவன் விழிகள் கலங்கியபடி விரக்தியோடு ஜியா தடுக்கத் தடுக்க, அவளது கரத்தை தட்டி விட்டவாறு அவள் கூற வரும் எதையும் தன் காதில் வாங்கிக்கொள்ளாது அங்கிருந்து சென்றான். அவனது கலக்கம் இவளையும் கலங்கடித்தது.
“உன்னை எப்படிடா எனக்குப் புடிக்காம போகும்? வாழ்ந்துட்டு இருக்கிறதே உனக்காகத் தானே! உன் கூட இருக்கும் பொழுது கிடைக்கிற சந்தோஷம் வேற யார் கூடயும் எனக்கு என்னைக்கும் கிடைக்காது. எனக்கும் என் பிரச்சனை எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி உன் மடியில நிம்மதியா தலை சாய்ச்சிக்கணும்னு தான் ஆசை. உண்மைய சொன்னா வலி மட்டும் தான் மிஞ்சும். நீ தாங்கிக்க மாட்ட. ஒருவேளை நான் சொல்லி நீ என்னை வெறுத்துட்டா நான் என்னடா பண்றது.
தினம் தினம் செத்துட்டு இருக்கேன். எவ்வளவோ பார்த்துட்டேன், உன் வெறுப்பை மட்டும் என்னால தாங்கிக்க முடியலை.” என்று உடைந்து போய் தரையில் வீழ்ந்து அழுதாள்.
ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு சோதனை. எவ்வளவு கனவோடு லண்டல எம்எஸ் முடிச்சேன். சித்தி சொன்ன மாதிரி லண்டன்லயே இருந்திருக்கலாம்.
என் நாட்டுக்கு சேவை செய்யணும்னு தானே பெங்களூர் வந்தேன். ஏன் அதுவே எனக்கு நரகமா மாறுச்சு? என்று ஏங்கியவளை அவளது கடந்த கால நினைவுகள் பேய் அலையைப் போலத் தாக்க, தன்னை அடித்த அந்தப் பேய் அலையோடு அவளும் அடித்துச் செல்லப்பட்டாள்.
***
