காதல் 64

ஆஷிக் என்ன பண்ற? அவனை விடு…” என்று தடுத்த ஹாஜராவை ஒரு பார்வையிலே அடக்கியவன், கீழே விழுந்து கிடந்த சமீரை காலரை பற்றித் தூக்கி நிறுத்தி, “உனக்கு எவ்வளவு தைரியம்டா? பொறுக்கி ராஸ்கல்!” என்று மீண்டும் அடித்தான்.

ஜீவா பதிலுக்கு ஆஷிக்கைத் தாக்க, ரோஹித் கொடுத்த ஒரு அறையில் கீழே விழுந்தவன், ஆஷிக் அனைத்தையும் அறிந்து கொண்டான் என்று புரிந்தவனாய் கன்னத்தைப் பற்றியவாறு ஒதுங்க, 

சுஜித், வருண் இருவரும் தள்ளியே நின்றனர். ரோஹித், ஆதர்ஷ் இருவரும் ஆஷிக்கோடு இணைந்து கொண்டு, தங்களின் பங்கிற்குச் சமீரை துவம்சம் செய்ய, அவர்கள் கொடுத்த ஒவ்வொரு அடியையும் சலிக்காமல் வாங்கிக் கொண்ட சமீர், தன் விழிகளினாலே ஜீவாவிடம் எதோ கூற, எல்லாம் புரிந்தவனாய் ஜீவா தன் அலைபேசியோடு அங்கிருந்து சென்றான். 

“யாராவது தடுத்து நிறுத்துங்க…” என்று ரஸ்மீன் தன் தலையில் அடித்தவாறு கதற, ஆஷிக்கின் ஆக்ரோஷம் யாரையும் அவனிடம் நெருங்க விடாமல் தடுத்தது. 

ஆஷிக்கின் ஒவ்வொரு அடியையும் சமீர் எந்தவித உணர்வும் இல்லாமல், ஒரு வகையான அலட்சிய பார்வையோடு ஏற்றுக்கொண்ட விதம், அஸாத்துக்குக் குழப்பமாக இருந்தது. ஆஷிக்கைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த அஸாத், எதோ தவறு நடந்திருப்பதைப் புரிந்தவராய் மகனைத் தடுக்காமல் அமைதியாய் இருந்தார். 

இதற்கிடையில் ஆதர்ஷும் ரோஹித்தும் சேர்ந்து சமீரைத் தாக்கியது அவருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஹாஜரா, அஸாத்திடம் அவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கெஞ்சி கொண்டிருக்க, 

அந்த நேரம் அங்கு வந்த ஷாஹித், தன் மகன் சமீரை ஆஷிக் ரத்தம் வர தாறுமாறாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மிகவும் கொந்தளித்து, ஆஷிக்கைத் தடுத்து நிறுத்தி கோபத்தில் அவனது கன்னத்தில் அறைவதற்காகத் தன் கையை ஒங்க, 

ஓங்கிய அவரது கரத்தைப் பிடித்துக் கொண்ட அஸாத், “நோ…” என்றவாறு தன் விரலை உயர்த்தி அசைக்க, 

ஷாஹித்தைத் தள்ளிவிட்ட ஆஷிக், சமீரை மீண்டும் தாக்க முற்பட்டான். ஆனால் இந்த முறை அவனைப் பின்னால் இருந்து பிடித்துக்கொண்ட அஸாத்,

“ரிலாக்ஸ் ஆஷிக்!” என்றவாறு அவனது கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தார். 

ஷாஹித் கீழே விழுந்து கிடந்த தன் மகனை கை கொடுத்து தூக்கி நிறுத்தி, “என்ன அஸாத் சார், உங்க பையனும் அவனோட ஃப்ரண்ட்ஸும் என் பையனை இப்படி அடிக்கிறாங்க. நீங்க கை கட்டி வேடிக்கை பார்க்கிறீங்க? என்ன எங்களை அவமானப்படுத்திறீங்களா? என் பையன் என்ன தப்புப் பண்ணினான்?” என்று ஆவேசமாய் கேட்க, 

தன் கரத்தில் இருந்து திமிறிக் கொண்டிருந்த தன் மகனை இறுக்கப் பிடித்தவாறே, “அதை உங்க பையன்கிட்ட கூடக் கேட்கலாமே? அவர் ஆஷிக்கை அப்போஸே பண்ணலையே? ஐ நோ அபௌட் மை சன். சமீர் வாயே திறக்காம அமைதியாவே இருக்காரே?” என்று சமீரைக் குற்றம் சாற்ற, 

ஒருவித தெம்போடு ஆஷிக்கின் முன்னே வந்த சமீர், “என்னடா சும்மா ஸ்கூல் பையன் மாதிரி உன் அப்பாகிட்ட ஒளிஞ்சிட்டு இருக்க? ரெண்டு பேரோட வந்து அடிச்சா, நீ என்ன பெரிய ஆம்பளையா? உண்மையான ஆம்பளைனா ஒன் டு ஒன் வா, நீ ஆம்பளை தானே?” சமீர் ரெட்டை அர்த்தத்தில் அதிகாரமாய் கேட்க, ஆஷிக்கின் கோபம் எல்லையைக் கடந்தது.

அஸாத்தின் பிடியில் இருந்தவாறு திமிறிய ஆஷிக்கின் சட்டையைப் பிடித்து, தன் பக்கம் இழுத்தவன் அவனது காதில் யாருக்கும் கேட்காதவாறு,

“என்னடா உன் பொண்டாட்டி என் கூட *** தெரிஞ்சி போச்சா?” என்று அருவெறுப்பாகக் கேட்டு, அவனைச் சீண்டிவிட்டு தன் கண்ணைச் சிமிட்டியவாறு விஷ புன்னகை சிந்த, அவன் கூறிய வார்த்தையில் வெறி புடித்தவன் போல மாறிய ஆஷிக், தன் காலால் அவனை எட்டி உதைத்தான். 

ஆழிப்பேரலைக்கு அணை கட்ட முடியுமா? “என்னடா சொன்ன?” என்று மிகவும் ஆக்ரோஷமாக, அஸாத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஆஷிக், கீழே விழுந்து கிடந்த சமீரைத் தன் காலாலே சரமாரியாக உதைத்தான். அவனது கழுத்தை பிடித்துத் தூக்கி நிறுத்திய ஆஷிக், தன் காலால் சமீரின் அடிவயிற்றில் எட்டி உதைக்க, 

தன் ஜீவனைப் பாதி இழந்த நிலையிலும் சமீர் ஆஷிக்கின் காதில், “நீ எவ்வளவு அடிச்சாலும் உன் பொண்டாட்டி என்னைக் கூப்பிட்டது உண்மை தான்…” என்று ஜியாவைத் தகாத வார்த்தையால் பேசி ஆஷிக்கின் கோபத்தை மேலும் தூண்டி விட, “சமீர்!” என்று தன் தனல் விழிகளைப் பிதிக்கியவாறு, தன் உதடுகளும் தாடைகளும் ஆடும் அளவிற்குக் கர்ஜித்த ஆஷிக், அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து, 

“எல்லாத் தப்பையும் நீ பண்ணிட்டு என் ஜியா மேல பழி போடுறியா? பாவம்டா, அவளை ஏன்டா அப்படிப் பண்ணின? உன்னை நம்புனாளே! எவ்வளவு துடிச்சுருப்பா? அதெல்லாத்துக்கும் நீ பதில் சொல்லியே ஆகணும்…” என்று மீண்டும் அவனைத் தாக்க, ஆஷிக்கைத் தடுத்த அஸாத் உட்பட அனைவரும்,

“சமீர் என்ன தான் பண்ணினான்?” என்று திரும்பத் திரும்பக் கேட்க தன் பொறுமையை இழந்த ஆஷிக்,

“திஸ் ப்ளடி ராஸ்கல் ஹேஸ் ரேப்ட் மை வொய்ஃப்…” என்று இடியை போல முழங்கியதில், அனைவரும் உணர்ச்சி அற்ற சிலையைப் போல அசையாமல் நின்றனர். 

அதே முழக்கத்துடன் ஷாஹித், அஸாத் மற்றும் இதர ஆண்களைப் பார்த்து, “உங்க வொய்ஃப்பை யாரும் ரேப் பண்ணினா பொறுமையா இருப்பிங்களா, இல்லைல? சோ ஸ்டே அவே! குறுக்க வந்தீங்க…” என்று ஆக்ரோஷமாக அவன் கேட்ட கேள்வியில் அனைவரும் ஓரடி விலக, 

“யாரு ரேப் பண்ணினா? நான், உன் பொண்டாட்டியவா, இல்லை உன் பொண்டாட்டி என்னையா? அவளா கூப்பிட்டா, நான் தடுத்தேன். அவ கேட்கல, ஆம்பள நான் என்ன செய்வேன்? இங்க பாரு, நீ ஒழுங்கா இருந்தா அவ ஏன் என்னைத் தேடி வர போறா? முதல்ல உன்கிட்ட என்ன பிரச்சனை இருக்குன்னு பாரு. ஏன்டி என்னை விட்டுட்டு சமீர்கிட்ட போனன்னு உன் பொண்டாட்டிய கேளு சரியா?” என்று தரம் கெட்டு போய் அவன் பேசிய மறுநொடி,

ஆஷிக் கொடுத்த ஒரு குத்தில் சமீரின் நாசி குழாயில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. கொஞ்சமும் இடைவெளி இன்றி ஆஷிக் அவனது நெற்றியில் வேகமாக முட்ட, தலை கிறங்க சமீர் கீழே சரிந்தான். 

மறுநாள் காலை நியூஸ் பேப்பர், டிவி, இன்டர்நெட் என்று ஆஷிக், சமீரை அடித்தது தொடங்கி, சமீர் மயங்கி கீழே விழுந்தது வரை உள்ள வீடியோ ஜீவா மூலமாக காற்று தீயை போல வேகமாகப் பரவியது. 

பிரபல தொழிலதிபர் அஸாத்தின் இல்லத் திருமண விழா ரத்து. மாப்பிள்ளை சமீருக்கும் அஸாத்தின் மருமகள் ஜியாவுக்கும் கள்ளத் தொடர்பு. கோபம் தாங்காமல் ஆஷிக், சமீர் மீது சரமாரி தாக்குதல். என்று நியூஸ் பேப்பரில் ஒரு விதமான செய்தி வர, 

‘அஸாத்தின் மகன் ஆஷிக், சமீர் தன் மனைவியைக் கற்பழித்து விட்டதாகக் கூறி, சரமாரியாகத் தாக்கும் காட்சி சற்று முன் கிடைத்த வீடியோவில் பதிவாகி இருக்க, சமீர் தனக்கும் ஜியாவிற்கும் கள்ள தொடர்பு இருந்தது உண்மை தான், ஆனால் ஆஷிக் கூறுவது போல ஜியாவை தான் கற்பழிக்கவில்லை என்று அதை வன்மையாக மறுத்த காட்சியும் பதிவாகி உள்ளது.

இப்பொழுது சமீர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, யார் தரப்பில் உண்மை உள்ளது என்பது கூடிய விரைவில் தெரிய வரும், அதுவரை காத்திருங்கள்.’ என்று டிவி சேனல்கள் தங்களின் பங்கிற்கு வித விதமாகச் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருந்தனர். 

அஸாத் முடிந்தவரை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வதந்திகளைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். 

ஜியா சுயநினைவு அடைந்திருக்கும் இந்த நிலையில் ஆஷிக், ஜியாவிற்கு இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனையும், தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருந்தான். 

ஜியாவுக்கு நடந்த கொடுமையை தெரிந்த பிறகு வீடேக் கொந்தளித்துப் போய் இருந்தது. ஆயிஷாவுக்கு ஜியாவை சந்திக்கவே மிகவும் சங்கடமாக இருந்தது. 

பிரெஸ் ரிப்போர்ட்டர்ஸ் எல்லாரும் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து கொண்டே இருக்க, அவர்களால் ஜியாவிற்கு எந்தவித மனத்தாங்கல் வந்துவிடக் கூடாது என்று எண்ணியவன், ஜியாவை பத்திரமாகத் தன் இல்லத்திற்குக் கொண்டு வந்தான். வீட்டில் உள்ள அனைவரும் ஜியாவை காயப்படுத்துமாறு இருக்கும் எந்தச் செய்தியையும் அவளிடம் சொல்லாமல், அவள் தவறான எந்த முடிவையும் எடுத்துவிடாமல் இருக்க, அவளை எந்நேரமும் கவனமாகவும் அன்போடும் பார்த்துக் கொண்டனர். 

அனைவரும் அவள் முன்பு இயல்பாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும், ஜியா அந்தக் கோரமான சம்பவத்தில் இருந்து வெளிவர முடியாமல் அதிலே சிக்கிக்கொண்டு, பித்துப் பிடித்தவள் போல யாரிடமும் பேசாமல், எதையோ வெறித்துப் பார்த்தவாறே அமைதியாகவே இருந்தாள். 

இப்படி இருக்க, ஒருநாள் ஆஷிக்கின் வீட்டிற்கே வந்த ப்ரெஸ் ரிப்போர்ட்டர்கள் ஆஷிக்கிடம், “சமீர், ஜியாவை ரேப் பண்ணல, அவங்க ரெண்டு பேருக்குள்ள அஃபேர் இருந்ததுன்னு ஒத்துக்குறாரு. இதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?” என்று சரமாரியான கேள்விகளைக் கேட்க,

அஸாத் ஏற்கனவே கூறிய அறிவுரைபடி பல்லை கடித்துக் கொண்டு மிகவும் பொறுமையாக இருந்த ஆஷிக், அவர்களது கேள்வியைத் தவிர்த்தவாறு செக்யூரிட்டி கார்ட்ஸை அழைத்து, அவர்களை வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டு விட்டு வீட்டிற்குள் நுழையும் நேரம் ஒருவன்,

“அப்போ நீங்க, உங்க மனைவிக்கும் அவங்களோட நண்பர் டாக்டர் சமீருக்கும் தொடர்ப்பு இருந்ததுன்னு ஒத்துக்குறீங்களா?” என்று கேட்க,

தன் பொறுமையை இழந்த ஆஷிக், கேள்வி கேட்ட ரிப்போர்ட்டரை சரமாரியாகத் தாக்கி, அவனது கையில் இருந்த கேமராவை உடைத்து போட, இருவருக்கும் இடையே பெரிய தள்ளுமுள்ளே வந்தது. 

இந்தக் காட்சி டிவி சேனலில் டெலிகாஸ்ட் ஆக, இதை அனைத்தையும் கால் மீது கால் போட்டவாறு சமீர் ரசித்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது அவனது அறையின் கதவைத் திறந்து கொண்டு வேகமாக வந்த ஷாஹித் சமீரிடம், “ஆஷிக் சொல்றது உண்மையா?” என்று கேட்க, 

“என் மேல நம்பிக்கை இல்லையா?”

“எந்த ஒரு கணவனும் இந்த விஷயத்துல பொய் சொல்ல மாட்டான்.”

“அப்படியா? நான் ஏன் அவளை ரேப் பண்ண போறேன்? உங்களுக்கு எப்பவுமே என் மேல நம்பிக்கை இல்லை. தப்பு பண்ற ஆஷிக்குக்கு அவங்க அப்பா அவ்வளவு சப்போர்ட் பண்றாரு. ஆனா நீங்க என்னையே குறை சொல்றீங்க…” என்று கடுகடுத்தவாறு கடுமையாக மறுத்தவனிடம், 

“அப்போ அன்னைக்கு ஜியாகூட உனக்குச் சம்பந்தம் இருக்குன்னு சொன்னது…”

“அவ தான் வந்தா, நான் எவ்வளவு தான் விலகி விலகி போறது? நானும் ஆம்பளை தான், நடந்து போச்சு.” என்று சாதாரணமாகச் சொல்ல, அவனது கன்னத்தில் பளார் என்று திரும்பத் திரும்ப அறைந்தவர்,

“அந்தப் பொண்ணே வந்தாலும் உன் சுய கட்டுப்பாடு எங்க போச்சு” என்று கூர்மையாகப் பார்க்க, தன் கணவரைத் தடுத்த ரஸ்மீன், “அவன் எதோ தெரியாம பண்ணிட்டான், என்கிட்ட மன்னிப்பும் கேட்டான். இப்போ தான் ஹாஸ்ப்பிட்டல்ல இருந்து வந்திருக்கான், அவனை விடுங்க.” என்று தன் மகனுக்காகப் பரிந்து பேச, 

அவனை இறுக்கமாகப் பார்த்த ஷாஹித், “ஒன்னு சொல்லறேன் நல்லா கேட்டுக்கோ, இப்போ வர நான் அமைதியா இருக்கிறதுக்குக் காரணம், உன் மேல நான் வச்சுருக்க நம்பிக்கை. இது ஒரு பொண்ணோட மானம் சம்பந்தப்பட்ட விஷயம். தப்பு உன்மேல இருந்துச்சு, என்னை நீ வேற மாதிரி பார்ப்ப. உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, மறந்திராத!” என்று எச்சரித்தபடி அங்கிருந்து சென்றார். 

ஆஷிக் ரிப்போர்ட்டரை தாக்கிய விஷயம் போலீஸ் வரை பெரிய பிரச்சனையைக் கிளப்ப, அஸாத் தன் பணத்தின் மூலம் எந்தப் போலீசும் ஆஷிக்கை நெருங்காதவாறு பார்த்துக் கொண்டார். 

இப்படி இருக்க ஒரு நாள் ஆஷிக்கிடம் மிகவும் பொறுமையாக அஸாத், “இதுக்கு மேல நீயும் ஜியாவும் இங்க இருக்கிறது சரி இல்லை. விஷயம் எல்லாம் கை மீறி போயிட்டு இருக்கு. இதுல லண்டனுக்கு மூணு டிக்கெட் இருக்கு. நீ, ஜியா, ஆயிஷா மூணு பேரும் கொஞ்ச நாளைக்கு அங்க போங்க, ஜியாவுக்கும் நல்லா இருக்கும். 

இங்க எல்லா நிலைமையும் நான் சரி பண்ணினதும் மறுபடியும் வாங்க. இதை என் ஸ்டேடஸ்க்காகவோ, என் பிஸ்னஸ்க்காகவோ நான் சொல்லல. உனக்காக, உன் மனைவிக்காகச் சொல்றேன், இதையாவது கேளு.” என்று டிக்கெட்டை அவனிடம் நீட்ட, பலவிதமான யோசனைக்குப் பிறகு மறுக்காமல் வாங்கிக்கொண்டான். 

தனது அறைக்கு வந்தவன் ஜியாவின் அருகில் அமர்ந்து கொண்டு, ஆதரவாய் அவளது கேசத்தைத் தடவி கொடுத்தான். அப்பொழுது ஜியா தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவனிடம் இருந்து விலக முற்பட, அவளது முகத்தைத் தன் பக்கம் திருப்பியவன் மென் கரத்தை பற்றியவாறு,

“நீ என்னை விட்டு விலகவும் முடியாது, விலகவும் கூடாது, விலகவும் விட மாட்டேன்.” என்று மென்மையோடு உறுதியாய் கூற, அவளது கன்னங்களைக் கண்ணீர் துளிகள் நனைத்தது. 

ஒரு கட்டத்தில் அஸாத் கூறுவது சரி என்று உணர்ந்தவன், தன் மனைவி மட்டும் தங்கையுடன் லண்டனுக்குச் செல்ல புறப்பட்டான். லண்டனுக்குச் செல்ல ஏர்போர்ட்க்கு வந்தவர்கள் ஃப்ளைட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்த நேரம் டிவியில் ஓடிய செய்தியைப் பார்த்து,

ஜியாவை கை காட்டி ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருக்க, அவர்களின் செயலைக் கவனித்தவாறு டிவியில் உள்ளே நியூஸை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கிப் போனது ரிப்போர்ட்டர்கள் ஏர்போர்ட்டிற்கும் வந்துவிட, 

ஆயிஷாவும் ஆஷிக்கும் அவர்களை எவ்வளவோ தடுத்தும், அவர்கள் தங்களின் கேள்விகளால் ஜியாவின் காயப்பட்ட மனதை மேலும் குத்தி கிழித்தனர். அவர்களது கேள்வியில் நிலைகுலைந்தவள், பதில் ஏதும் பேசாமல் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றாள். 

வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் யார் கேட்கும் கேள்விக்கும் பதில் கூறாமல், தன் அறைக்குச் சென்று கதவிற்குத் தாழிட்டு கொண்டாள். 

“சமீருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தது உண்மையா?” என்ற ரிப்போர்ட்டரின் கேள்விகள் அவளை வேதனைப்படுத்த, விழிகளை அழுந்த மூடி அழுதாள். 

மனம் மீண்டும் தன்னை அந்தக் காரிருளுக்குள் அழைத்துச் செல்ல, நெருப்பில் பட்ட புழுவாய் வேதனையில் தவித்தாள். தன்னைத் தானே தன் நகங்களின் மூலம் காயப் படுத்திக்கொண்டவள் தற்கொலை முயற்சியில் ஈடுபட, சரியான நேரத்தில் அங்கு வந்த ஆஷிக், ஜியாவை தடுத்து நிறுத்தி ஆறுதல் படுத்த, 

வெகுண்டெழுந்த ஜியா, “தப்பு பண்ணினவன் சொல்றத நம்புறாங்க, பாதிக்கப்பட்ட எனக்கு எந்த நியாயமும் இல்லையா? சொல்லு ஆஷிக்… நீ கூட இவங்ககிட்ட இருந்து ஓடி ஒளியணும்னு தானே நினைக்கிற. ஆக எல்லாரும் சொல்ற மாதிரி நான் தப்பானவ இல்ல? 

“அப்படி இல்லைடா…”

“நான் உன்கூட இருக்கிறது உனக்குக் கேவலமா இருக்கா ஆஷிக்?” கரகரத்த குரலில் உடைந்து அழுதாள். 

நொறுங்கிப்போனான். “இல்லை ஜியா, என்னைக்கும் இல்லை…” என்று அவளைத் தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான். 

“என்னை விடு ஆஷிக், எனக்கு யாருடைய கரிசனமும் தேவை இல்லை.”

“நான் உன்கிட்ட கரிசனம் காட்டல, இது என்னோட அன்பு ஜியா.”

“வேண்டாம்… எனக்கு யாருடைய அன்பும் வேண்டாம் ஆஷிக். அன்பை அனுபவிக்கிறதுக்கு எனக்குத் தெம்பில்லை. எனக்குள்ள இருந்த உணர்ச்சி எல்லாம் செத்து போச்சு. நான் ஒரு நடைப்பிணம்.” வெகுண்டெழுந்து வந்தது உணர்ச்சியற்ற வார்த்தைகள்.

“அப்படிச் சொல்லாத, உன் வலிய என்னால புரிஞ்சிக்க முடியுது.” என்று கரம் பிடித்தவனை உதறியவள், 

“இல்லை… உன்னால முடியாது, உன்னால புரிஞ்சிக்க முடியாது. எனக்கு நடந்த கொடுமைய யாராலையும் உணர முடியாது. நீ போயிரு, நான் ஒரு அழுக்கு, குப்பை, அசிங்கம். வேண்டாம் போ… என்னை விடு.” என்று பித்துபிடித்தது போலக் கதறினாள். ஆஷிக் செய்வதறியாது திகைத்தான்.

“எப்படி எல்லாம் இருந்தேன், எல்லாமே போச்சே… நான் என்ன தப்பு பண்ணினேன்? எனக்கு ஏன் ஆஷிக் இப்படியெல்லாம் நடந்தது? செத்து செத்துப் பிழைக்கிறேன் ஆஷிக்…” நொடி பொழுதில் மாறி மாறி அவள் கொட்டிய உணர்ச்சிகளில் கலக்கமுற்றான். ‘எமோஷனல் அட்டாக் வர கூடாது, உயிருக்கு ஆபத்தாகும்’ மருத்துவரின் வார்த்தைகள் தேளாய் கொட்டியது. ஆறுதல்படுத்த முனைந்தான், உதறி தள்ளினாள். 

“நேர்மையா இருந்தா அவ்வளவு பெரிய தப்பா? பொண்ணா பிறக்குறது அவ்வளவு பெரிய பாவமா? எங்ககிட்ட அது மட்டும் தான் இருக்கா? சாகுறேன்டா! அருவெறுப்பா இருக்கு. கனவோடு டாக்டர் ஆனேன்…” என்று தன் இமைகளை இறுக்க மூடியவாறு திறந்தவள், மேலும் தொடர்ந்து பெங்களூரில் ஆரம்பித்து இப்பொழுது நடந்தவைகள் வரை, தனக்கு நடந்த அத்தனை அநியாயத்தையும் கூறி இதயம் வெடித்துத் தரையில் சாய்ந்து அழுதாள். 

ஜியாவுக்கு நேர்ந்த கொடூரத்தை அவளது வாயாலே கேட்டவனின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. புயலை அடக்கிய அமைதியோடு அவளது கண்ணீரைத் துடைத்தவன்,

“யாரும் இல்லன்னு என்னைக்கும் சொல்லாத, நான் இருக்கேன். உன் புருஷன் இன்னும் செத்து போகலை. உனக்கு என்ன வேணும் சொல்லு, எது உனக்கு நிம்மதிய தரும்? எது இருந்தா நீ நிம்மதியா இருப்ப?” என்று கேட்க, 

அவனைப் பார்த்தவாறே ஜியா, “எனக்கு நியாயம் வேணும். எந்த மீடியா முன்னாடி என்னை அசிங்கப்படுத்துறாங்களோ, அதே மீடியா முன்னாடி அவங்க தலை குனியணும். உன்னால முடியுமா?” என்று அழுத்தமாகக் கேட்டு, அவனது விழியைக் கூர்மையாகப் பார்த்தாள். 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!