டெல்லி நீதிமன்றம் என்றும் போலவே இன்றும் பரபரப்பாக இருந்தது. கருப்பு அங்கிக்குள் தங்களைப் புகுத்துக்கொண்டு வெறும் கருப்பு காகிதத்துகாக, தங்களின் மனசாட்சியை கொன்று அதர்மத்தை நிலைநாட்ட துடிக்கும் வழக்கறிஞர்கள் பாதி, வெள்ளை மனம் படைத்து எந்தச் சூழ்நிலையிலும் நீதி தவறாத வழக்கறிஞர்கள் மீதி என்று நீதிமன்றம், பலதரப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் மக்களால் நிரம்பி இருந்தது.
அன்றுதான் ஜியா, சமீர் மீது தொடுத்த கற்பழிப்பு வழக்கின் முதல் ஹியரிங்.
ஜியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சமீர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து நீதி மன்றத்தில் குற்றறிக்கை தாக்கல் செய்தனர். இன்றுதான் வழக்கின் முதல் நாள். டெல்லியையே பரபரப்பாக்கிய இந்தச் சம்பவம், அனைவரின் உள்ளத்திலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆஷிக், சமீரைத் தாக்குவது போல உள்ள வீடியோ, அதில் பதிவாகி இருந்த செய்தி, மக்களின் மனதில் சமீர் குற்றமற்றவன் என்றும், ஜியாதான் வேண்டும் என்றே தன் கள்ளக்காதலை மறைக்க, இந்த வழக்கைத் தொடர்ந்து உள்ளாள் என்றும் ஆழமாய் பதிய காரணமாகிவிட்டது.
இப்படி ஒரு தரப்பினர் சமீருக்கு ஆதரவாய் இருக்க, வேண்டுமென்றே ஏன் ஒரு பெண் தன்னைத் தானே இழிவு படுத்திக் கொள்ள வேண்டும்? நிச்சயம் சமீர்தான் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்று, சில பெண் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் ஜியாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிருந்தனர். இந்த வழக்கு மக்களின் மத்தியில் மட்டும் இல்லாமல், வக்கீல்கள் மத்தியிலும் பேரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
சமீரின் குடும்பத்தை விட, ஆஷிக்கின் குடும்பம் கூடுதல் வசதி படைத்திருப்பதால், சமீருக்கு மக்களின் மத்தியில் ஜியாவை விட அதிக ஆதரவு இருந்தது.
ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஜியாவின் நடத்தையைக் குறித்து, பல கேள்விகள் ஒரு பக்கம் எழுந்திருக்க,
சமீருக்கு எதிராய் எந்தத் தடயமும் இல்லாத இந்நிலையில், ஜியா நிஜமாகவே வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டாளா என்ற கேள்வி அனைவரின் உள்ளத்திலும் விருட்சம் போல முளைத்திருந்தது.
இப்போதைக்கு ஜியா கற்பழிக்கப்பட்டாள் என்பதை நிரூபிப்பதற்கு ஒரே ஆதாரம் என்றால், ஜியாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் விஷ்ணுப்ரியா தான்.
ஒரு வேகத்தில் ஜியா, சமீர் மீது வழக்கு தொடர்ந்து விட்டாலும், அவளுக்குள் தனக்கு வெற்றி கிடைக்குமா என்கின்ற பயம் உள்ளத்தில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருந்தது.
கார் நீதிமன்றத்தின் வாசலை வந்தடைய, தன் கண்களை மூடியவாறு கைகள் நடுங்க, காரிலே அமர்ந்திருந்த ஜியாவின் கரங்களை ஆஷிக் இறுக்கப் பற்றிக்கொண்டு, ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்ல, புது நம்பிக்கை பிறந்தவளாய் ஆஷிக்கின் கரத்தைப் பிடித்தவாறு, ஜியா நீதிமன்றத்துக்குள் ஆயிஷா, ஷங்கர், சரண்யா, ரோஹித், ஆதர்ஷ், நடாஷா, தியா, திவ்யா, ஹாஜராவுடன் நடந்து வந்தாள்.
கோர்ட் வாசலில் வக்கீல்கள் கொஞ்சம் பேர் குழுமி இருக்க, அப்பொழுது தன் காரில் இருந்து தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இறங்கி வந்த சமீரை, பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு,
“இத்தனை நாள் இவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு, உங்க தரப்புல இருந்து இன்னும் எந்தப் பதிலும் வரல. இன்னைக்கு உங்களோட முதல் ஹியரிங், இப்போவாது உங்களுக்கும் ஜியாவுக்கும் இடையில என்ன உறவு இருக்குன்னு தெளிவா சொல்லுவீங்களா?
மக்களோட ஆதரவு எல்லாம் உங்க பக்கம் தான் அதிகமா இருக்கு. நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு மக்கள் எல்லாரும் ஆர்வமாய் இருக்காங்க.” என்று தங்களின் கேள்வியைக் கேட்க,
“உண்மைய சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, ஆனா அது ஜியாவோட வாழ்க்கைய பாதிக்கக் கூடாதுனு தான், நான் என் மேல இவ்வளவு பெரிய பழி வந்த பிறகும் மௌனமா இருந்தேன். ஆனா ஜியாவே அதைப்பத்தி கவலை படாதப்போ நான் என்ன பண்றது?” என்று தன் எதிரே வந்த ஜியாவைப் பார்த்தவாறே கூறி விஷமமாய் சிரித்தான்.
ஜியாவைக் கண்ட பத்திரிக்கையாளார்கள் ஜியாவை சூழ்ந்து கொண்டு, சரமாரியான கேள்விகளை அவள் மீது குமிக்க, சற்று அரண்டு போன ஜியா, கைகள் சிறிதாய் உதற அவளது கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்ட ஆஷிக், பத்திரிக்கையாளர்களை ஒதுக்கிவிட்டு அவளை அழைத்துச் சென்றான்.
“நாம இப்போ எடுத்திருக்கிற முடிவு ஒன்னும் அவ்வளவு சுலபமானது இல்லை, நிச்சயமா உனக்கு நிறையச் சோதனை வரும். நீ உடைஞ்சி போற மாதிரியான சூழ்நிலை கண்டிப்பா வரும். ஏன் நியாயம் கிடைக்காம கூடப் போகலாம். என்ன ஆனாலும் நான் உன் கூட இருப்பேன், ஆனா எந்த நிலையிலும் உன் நம்பிக்கையையும் உன் தைரியத்தையும் என்னைக்கும் நீ கைவிடக் கூடாது. அதுதான் உனக்குப் பலம்.” என்று ஆஷிக் தன்னிடம் கூறியதை நினைவு படுத்தியவள், ஆஷிக்கின் கரத்தை விட்டுவிட்டு பத்திரிக்கையாளர்களின் அருகே நிமிர்ந்த நடையோடு சென்ற ஜியா, அவர்களின் கையில் இருந்த மைக்கை வாங்கி,
“என்கிட்ட ஆதாரம் வேணும்னா இல்லாம இருக்கலாம், ஆனா போராடுற தைரியம் இருக்கு. இந்தக் கொடூர மிருகத்துக்குத் தண்டனை வாங்கித் தர, நீங்க கேட்குற ஆதாரத்தை விட என் தைரியமே போதுமானது.” என்று சமீரின் கண் பார்த்து மிடுக்காகச் சொன்னவள், அதே நிமிர்ந்த நடையோடு ஆஷிக்கின் கரத்தைப் பற்றிக் கொண்டு அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க, “நியாயம் நிச்சயம் கிடைக்கும்.” தன் இதழ் இசைத்து தன் விழிகளை மூடி திறந்தான்.
ஜியாவுக்கு நியாயம் கிடைக்குமா? நீதி தேவதையின் கண் இம்முறையாவது திறக்கப்படுமா இல்லை, எப்பொழுதும் போல இன்றும் அவள் இருட்டிலே இருப்பாளா?
ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க முதிர்ச்சியோடு சேர்த்து அனுபவத்தையும் விவேகத்தையும் கொண்ட ஒரு பெண் கோர்ட்டின் உள்ளே வர, குழுமி இருந்த அனைவரும் எழும்பி நின்றனர். பின் உள்ளே வந்தவர் நேராகச் சென்று ஜட்ஜின் இருக்கையில் வந்து அமர, எழுந்திருந்த அனைவரும் தங்களின் இருக்கையில் அமர்ந்தனர்.
சமீர் குற்றவாளியின் கூண்டில் வந்து நிற்க நீதிபதி, ஜியா தரப்பில் வாதாட இருக்கும் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் சம்பத் மற்றும் சமீருக்கு ஆதரவாக வாதாட இருக்கும் டிபென்ஸ் லாயர் அருணா ஆகிய இருவரையும் பார்த்து, “யு கேன் ப்ரோசிட்.” என்று வாதாட அனுமதி அளிக்க,
குற்றவாளி கூண்டில் இருக்கும் சமீரிடம் ப்ராஸிக்யூட்டர் லாயர் சம்பத், “யுவர் ஹானர், குற்றவாளி கூண்டில் நிற்கும் குற்றவாளியான சமீர்…” என்று தொடர்வதற்குள், குறுக்கிட்ட டிபன்ஸ் லாயர் அருணா,
“ஐ அப்ஜக்ட் திஸ் மை ஹானர், எனது கட்சிக்காரர் சமீர் ஒன்றும் குற்றவாளி இல்லை, குற்றவாளியாகக் கருதப்பட்டுள்ளார். எனவே பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் அவரைக் குற்றவாளி என்று அழைப்பதை நான் எதிர்க்கிறேன். மேலும் அவர் சமூதாயத்தில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர். எனவே இந்த வழக்கு முடியும் வரை அவரை மரியாதையாக நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று வேண்டிக்கொள்ள,
நீதிபதி, “அப்ஜக்ஷன் சஸ்டேண்ட், தீர்ப்பு வரும் வரை அவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்க வேண்டாம்.” என்று ஆணையிட்டார்.
சம்பத், “எஸ் யுவர் ஹானர், குற்றம் சாட்டப்பட்ட சமீர், எனது கட்சிக்காரர் ஜியாவை மிரட்டி பலவிதமாக அடித்துத் துன்புறுத்தி வலுகட்டாயமாக அவரைப் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் இவர் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். எனவே எனது கட்சிக்காரர் ஒரு பெண் என்பதை மனதில் கருதி, இதுபோன்று இனிமேல் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் அனைவருக்கும், ஒரு பாடமாக அமையக்கூடிய தண்டனையை அளிக்க வேண்டும் என்று, கணம் கோர்ட்டாரிடம் மிகத் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.” என்று தன் தரப்பின் நியாயத்தை எடுத்து வைக்க,
நீதிபதி சம்பத் கூறியவற்றைக் குறிப்பெடுத்துவிட்டு அருணாவிடம், “நீங்க உங்க தரப்பில இருந்து எதாவது சொல்ல விரும்புறீங்களா?” என்று கேட்க,
“எஸ் யுவர் ஹானர், விக்ட்டிம் மிஸ்ஸஸ் ஜியாகிட்ட நான் கொஞ்சம் கேள்வி கேட்கணும்.”
“பெர்மிஷன் க்ராண்டட்.”
கிளார்க், “ஜியா! ஜியா! ஜியா!” என்றழைக்க, ஒருவித தயக்கமும் நடுக்கமும் சூழ்ந்துகொள்ள, ஜியா சாட்சி கூண்டின் பிடியை இறுக்கப் பிடித்துக் கொண்டவாறு, அகத்தில் தொனித்த பயத்தை முகத்தில் காட்டாது நின்றாள். ஜியாவின் அருகில் புன்னகைத்தவாறே வந்த அருணா, “ஹலோ ஜியா! ஐயம் சாரி, டாக்டர் ஜியா ஆஷிக்! அம் ஐ ரைட்?” என்று கேட்க,
ஆமாம் என்று ஜியா தலையசைக்க, “இதோ உங்க கண்ணு முன்னாடி நிக்கிற என் கட்சிக்காரர் டாக்டர் சமீரை உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“பெங்களூர் ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணும் பொழுது தெரியும்.”
“எத்தனை வருஷமா தெரியும்?”
“ஒரு வருஷமா.”
“உங்களோட பழக்கம் எது…” என்று தொடர்வதற்குள் அழுத்தமான குரலில், “வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்!” ஜியா கூற,
“நண்பர்னு சொல்றீங்க, அவர் ஏன் உங்கள ரேப் பண்ணணும்?”
“சமீரை என் நண்பனா தான் நான் நினைச்சி பழகினேன். ஆனா அவன் மனசுல என்னைப் பத்தி தப்பான எண்ணம் இருக்கும்னு நான் நினைக்கல.”
“மார்ச் எட்டாம் தேதி தானே சமீர் உங்கள் ரேப் பண்ணினதா புகார் குடுத்திருக்கீங்க?”
“ஆமா.”
“சரி அன்னைக்கு ரேப் நைட் நடந்ததா இல்லை, ரேப் காலையில நடந்ததா?”
“நைட்”
“எங்க வச்சு நடந்தது?” அருணாவின் கேள்வி ஜியாவை மீண்டும் அந்தக் காரிருளுக்குள் தள்ள,
“ஜீவா வீட்ல…” என்று தன் முகத்தைச் சுளித்தவாறே பதில் கூறினாள்.
“நீங்க ஜீவா வீட்டுக்குப் போனது உங்க கணவருக்குத் தெரியுமா?”
“இல்லை, அந்த நேரம் ஆஷிக் ஊர்ல இல்லை.”
“கணவர் ஊர்ல இல்லாத அந்த ராத்திரி நேரத்துல, ஒரு ஆம்பிளையை தனியா சந்திக்க வேண்டிய காரணம் என்ன? அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் தெளிவா சொல்ல முடியுமா?” என்ற அருணாவின் கேள்விக்கு நீண்ட மூச்சை இழுத்து விட்டவாறு, ஜியா அன்று இரவு ஜீவா வீட்டிற்குத் தான் சென்றதில் இருந்து அனைத்தையும் கூறினாள்.
ஜியாவிடம் அருணா, “சோ நீங்க சமீர் உங்கள ரேப் பண்ணினதை வருண், சுஜித், ஜீவா மூணு பேரும் பார்த்ததா சொல்றீங்க, அப்படித் தானே?”
“ஆமா”
“யுவர் ஹானர் வருண், சுஜித், ஜீவா மூணு பேரையும் விசாரிக்க எனக்கு அனுமதி கொடுங்க.”
“பெர்மிஷன் க்ராண்ட்டட்.”
“சொல்லுங்க, ஜியா சொல்றதெல்லாம் உண்மையா?”
இல்லை என்று மறுத்த சுஜித்தும் வருணும் தாங்கள் அந்த இடத்தில் இல்லேவே இல்லை என்று சுத்தமாக மறுத்து, தாங்கள் அந்நேரம் சினிமா தியேட்டரில் இருந்ததாகக் கூறி பொய்யான டிக்கெட்டை ஆதாரமாகக் காட்டினர். அவர்களைத் தொடர்ந்து ஜீவா,
“ஜியா சமீரை தேடி என் வீட்டுக்கு வந்தாங்க. சமீரை உடனே பார்க்கணும் சொன்னாங்க. நானும் சமீருக்கு கால் பண்ணி வர சொன்னேன்.”
“ஏன் பார்க்கணும்னு நீங்க அவங்ககிட்ட கேட்கலையா?”
“இல்லை, அவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறதுனாலே நான் கண்டுக்கல.”
“அப்புறம் என்ன நடந்தது?”
“சமீர் வந்தான், ஜியாவும் சமீர் கூடத் தனியா பேசணும்னு சொன்னா. நான் என் ரூமை எடுத்துக்கச் சொன்னேன். கொஞ்சம் நேரம் கழிச்சு ரெண்டு பேரும் வெளியிலே வந்தாங்க.”
“கொஞ்சம் நேரம்னா எவ்வளவு…?”
“சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்.”
“எப்படி இருந்தாங்க?”
“ஜியா டென்க்ஷனா இருந்தா. சமீர் கொஞ்சம் கோபமா இருந்தான்.”
“ஜியா சொல்ற மாதிரி கற்பழிப்பு நடந்ததுக்கான எந்தவித அறிகுறியும் இல்லையா?”
“இல்லை, அந்த மாதிரி எதுவும் இல்லை. சமீர், ஜியாகிட்ட கண்டிப்பா அந்த மாதிரி நடந்துக்க மாட்டான்.” என்று அழுத்தி சொன்னான்.
“சரி, ஜியா உங்க மேல ஒரு பழி சொல்றாங்களே, அதைப் பத்தி என்ன சொல்றீங்க?”
“என்கிட்ட அந்த மாதிரி எந்த வீடியோவும் இல்லை. அவங்க ஏன் அப்படிச் சொல்றங்கன்னு எனக்குச் சுத்தமா தெரியலை.” என்று ஜீவா கூற, “இல்லை…” என்று ஜியா மறுக்க,
“உங்களுக்கான வாய்ப்பு வர்ற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க.” என்ற நீதிபதி, அருணாவைத் தொடர சொன்னார்.
மேலும் தொடர்ந்த அருணா, “உங்களுக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷங்கள் ஆகுது?”
“மூணு மாசம் ஆகுது.”
“நைஸ்! உங்களுக்கும் உங்க கணவருக்குமான உறவு எப்படி?” என்று இரட்டை அர்த்தத்தில் கேட்க,
“எனக்குப் புரியல…”
“கம் ஆன் மிஸ்ஸஸ் ஜியா, வீ ஆர் அடல்ட்ஸ். என்னோட கேள்வி உங்களுக்குக் கண்டிப்பா புரிஞ்சிருக்கும்.”
“அது உங்களுக்குத் தேவை இல்லாதது.” என்ற ஜியாவைத் தொடர்ந்து சம்பத், “அப்ஜக்ஷன் யுவர் ஹானர், இது கேஸ்க்குச் சம்பந்தம் இல்லாதா ஒரு கேள்வி.”
“அருணா கேஸ்க்குச் சம்பந்தம் உள்ள கேள்விய மட்டும் கேளுங்க.”
“இல்லை யுவர் ஹானர், இது கேஸ்க்கு சம்பந்தம் உள்ள கேள்விதான்.”
“அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்!”
“தேங்க் யு யுவர் ஹானர், சொல்லுங்க ஜியா.”
“வீ ஆர் லீடிங் ஹேப்பி லைஃப்.”
“பொய்! நீங்க உங்க கல்யாண வாழ்க்கையில சந்தோஷமா இல்லை.”
“அப்படியெல்லாம் இல்லை…”
“அப்படி இல்லன்னா இதுக்கு என்ன அர்த்தம்?” என்றவாறு அருணா, ஜியாவும் சமீரும் பேசிய உரையாடல் ஒன்றை நீதிபதியிடம் கொடுக்க, அவர் அனைவருக்கும் முன்பாக அந்த ரெக்கார்டிங்கை ஓட விட அதில்,
“என்னால ஆஷிக் கூட ஒரு மனைவியா வாழ முடியாது சமீர்.”
“பழசு எல்லாத்தையும் மறந்துட்டு நீ ஆஷிக் கூட வாழ்ந்து தான் ஆகணும் ஜியா.”
“ஏன் என் நிலைமையில இருந்து யோசிக்க மாட்டிக்கிற சமீர்?”
“கொஞ்சம் மத்தவங்கள நினைச்சு பாரு, உண்மை தெரிஞ்சா உடைஞ்சு போயிருவாங்க. மனசை மாத்திக்கோ ஜியா.” இவ்வாறு ஜியா சமீரிடம் திருமணமான தொடக்கத்தில், டெல்லியில் ஒருநாள் ஆஷிக் கோபித்துக்கொண்டு சென்ற பொழுது உள்ள உரையாடலில் உள்ள, தனக்குச் சாதகமாக உள்ள பகுதியை மட்டும் சமீர் நவீன முறையில் எடிட் செய்து கோர்ட்டில் சமர்பித்தான்.
ஆனால் அந்த உரையாடலின் நோக்கம் ஆஷிக்கிடம், உண்மையை மறைத்து வாழ முடியவில்லை என்று ஜியா, பெங்களூர் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு கூறியதாகும். சமீர் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.
இந்த உரையாடலைக் கேட்ட அனைவருக்கும் ஏதோ ஜியா, ஆஷிக்கை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டது போலவும், அவளுக்குச் சமீர் மீது காதல் இருப்பது போலவும் அவனை, மறக்க முடியாமல் கஷ்டப்படுவது போலவும் சமீர், ஜியாவுக்கு நல்லதை எடுத்து சொல்வது போலவுமான அர்த்தத்தைக் கொடுத்தது.
இதைக் கேட்ட ஜியா பதறிப்போய், “இல்லை… இது பொய்…” என்று உணர்ச்சிவசப்பட,
அருணா, “இதுல இருக்கிறது உங்க குரல் தானே?”
“ஆமா”
“நீங்க தானே பேசுனீங்க?”
“ஆமா”
“அப்போ இதுல எது பொய்?”
“எல்லாம் உண்மை ஆனா, அதற்கான அர்த்தம் வேற. நான் ஆஷிக்கை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். அவன் கூட நான் சேர்ந்து வாழாததுக்குக் காரணம் வேற…”
“வேறன்னா? என்ன காரணம்னு சொல்லுங்க.” என்ற அருணாவிற்கு, ஜியா எந்தப் பதிலும் கூறாமல் தன் கைகளைப் பிசைந்தவாறே நிற்க,
“உங்ககிட்ட தான் ஜியா நான் கேட்குறேன், பதில் சொல்லுங்க.” என்று மீண்டும் தன் குரலை உயர்த்தியதில் தன் நிலைக்கு வந்தவள், சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தியவாறே பெங்களூரில் நடந்த அனைத்து சம்பவத்தையும் கூற,
தன் இரு கைகளையும் தட்டிய அருணா, “வாவ்! ஜியா ரொம்ப அழகான கதை. ஆனா சட்டத்துக்கு அழகான கதை தேவை இல்லை, உண்மை வேணும்.”
“இதுதான் உண்மை!” என்று ஜியா கதற,
“இல்லை, உண்மை என்னன்னு நான் சொல்றேன். நீங்களும் சமீரும் பெங்களூர்ல நட்பா பழகிருக்கீங்க. நட்பு நாளடைவில காதலா மாறிருக்கு. அந்த நேரத்துல உங்க பழைய காதலன் ஆஷிக்கப் பார்த்ததும், அவர் சமீரை விடப் பெட்டரா இருக்க அவரைச் சொத்துக்காகக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. ஆனாலும் உங்களுக்குச் சமீர் மேல உள்ள காதல் தீராம இருந்தனால, அவர் கூட உங்க கணவனுக்குத் தெரியாம ரிலேஷன்ஷிப்ல இருக்க முடிவு செஞ்சி அவரைச் சந்திச்சுருக்கீங்க.
ஆயிஷா கூட நிச்சயம் ஆனதுனால சமீர் உங்களுக்கு எடுத்து சொல்லி, உங்க கணவர் ஆஷிக் கூடச் சேர்ந்து வாழ சொல்லிருக்காரு. ஆனா நீங்க கேட்கல. மார்ச் எட்டாம் தேதி உங்க கணவர் இல்லாத நேரத்துல சமீர சந்திக்கத் திட்டம் போட்ருக்கீங்க. நீங்க கூப்பிட்டா அவர் வர மறுத்திருவார்னு, அவரோட நண்பர் ஜீவா வீட்டுக்கு போய் அவர் மூலமா சமீரை வர சொல்லிருக்கீங்க.” என்று அருணா கூறிய ஒவ்வொன்றையும் மறுத்த ஜியா கதறி அழ, மேலும் பேச வந்த அருணாவைக் குறுக்கிட்ட சம்பத்,
“அப்ஜக்ஷன் யுவர் ஹானர், டிபன்ஸ் லாயர் என் கட்சிக்காரரிடம் சம்பந்தம் இல்லாத கேள்வியைக் கேட்டு, அவரது மனதை காயப்படுத்துகிறார்.”
“நான் யாரையும் எதுவும் பண்ணல, சம்பந்தம் இல்லாத எந்தக் கேள்வியையும் நான் கேக்கல.”
“அருணா விக்ட்டிமிடம் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்ளுங்கள்.” என்று நீதிபதி கூற,
“எஸ் யுவர் ஹானர்! இங்க பாருங்க ஜியா, நீங்க அழுதா உண்மை மாறப் போறதில்லை. நான் சொல்ற எல்லாத்துக்கும் என்கிட்ட சாட்சி இருக்கு.” என்றவள் ஜீவாவை விசாரணைக்காக அழைத்தார்.
“ஜீவா நான் கேட்குற கேள்விக்குச் சரியான பதில சொல்லுங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதே கூண்டுல நீங்க நிற்கும் பொழுது, சமீருக்கும் ஜியாவுக்கும் பழக்கம் இருக்குன்னு சொன்னீங்க?”
“ஆமா”
“அவங்க பழக்கம் எப்படிப் பட்டது?”
“அடிக்கடி சந்திச்சு சிரிச்சு பேசிக்குவாங்க, ஒன்னா சாப்பிடுவாங்க, வெளியிலே போவாங்க.”
“அவங்களோட பழக்கம் வெறும் நட்பு மட்டும் தானா?”
“இல்லை.”
“சமீர், ஜீவாவை அப்படிக் கண்டிப்பா பண்ண மாட்டான்னு ரொம்ப உறுதியா சொன்னீங்க, ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“ஏன்னா சமீர், ஜியாவை ரொம்ப விரும்புனான். கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னான். ஆனா ஜியா, சமீரை விட்டுட்டு ஆஷிக்கை கல்யாணம் பண்ணுவாங்கன்னு நான் சத்தியமா நினைக்கல. ஆனா சமீர்கிட்ட ஜியாவ நம்ப வேண்டாம், அவ உனக்கு செட் ஆகமாட்டான்னு எவ்வளவோ சொன்னேன். சமீர்தான் நம்பி ஏமாந்துட்டான்.”
“ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“ஜியா, சமீர பணத்துக்காகத் தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தா. அவளுக்கு நிறைய ஆம்பளைங்க கூட லிங்க் இருந்தது. எப்பவும் பார்ட்டி, ட்ரின்க்ஸ்னு சுத்துவா. எல்லா ஆம்பளைங்க கூடயும் நெருக்கமா பழகுவா.”
“நீங்க போகலாம் ஜீவா, இப்போ என்ன சொல்றீங்க ஜியா? ஜீவா உங்களுக்கும் நண்பர் தானே?”
“இல்லை, தெரிஞ்சவர்…”
“உங்களுக்கும் சமீருக்கும் இடையே உள்ள உறவை பத்தி தெரிஞ்சவர் சரி?”
“தப்பு! ஜீவா முதல்ல நல்லவனே கிடையாது. அவன் ஏற்கனவே என்கிட்ட அடி வாங்கிருக்கான். அவன் எனக்கு எதிராதான் சொல்லுவான்.”
“ஜீவா கெட்டவர்னா ஏன் மார்ச் எட்டு அவரைப் பார்க்க போனீங்க?”
“நான் தான் சொன்னேனே…”
“கதையைக் கேக்கல, உண்மைய கேட்குறேன்.” என்ற அருணா, மார்ச் எட்டு சமீருக்கும் ஜியாவுக்கும் இடையில என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க, நீதிபதியிடம் சமீரை சாட்சி கூண்டுக்கு அழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள, சமீரிடம் அருணா விசாரணையைத் தொடங்கினார்.
“சொல்லுங்க சமீர், மார்ச் எட்டு என்ன நடந்தது? ஜியா சொல்ற மாதிரி நீங்க அவங்கள மானபங்க…” என்று தொடர்வதற்குள், திட்டமாக மறுத்த சமீர், “சத்தியமா இல்லை… என்னால எப்படி அப்படிப் பண்ண முடியும்? ஜியாவை நான் காதலிக்கிறேன்.” என்றவன் மேலும் தொடர்ந்து,
“ஜியாவுக்கும் எனக்கும் அன்னைக்கு நைட் ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் நடந்தது உண்மை தான். ஆனா ஜியா சொல்ற மாதிரி ரேப் இல்லை, ரெண்டு பேரோட சம்பந்தத்தோட தான் நடந்தது.” என்று சமீர் சலனம் இல்லாமல் பொய் உரைக்க, உறைந்து போனவள் சீற்றத்துடன் அவன் கூறியதை மறுத்து தன் தரப்பைக் கூற வர, அவளது தரப்பு வரும் வரை நீதிபதி காத்திருக்கக் கூறினார்.
ஆஷிக், ஜீவா மீதும் சமீர் மீதும் தனக்குள் கனன்று வந்த அடக்க முடியாத வெறியை, கடினப்பட்டு அடக்கியவாறு பற்களை நறநறத்தவாறு அமர்ந்திருந்தான்.
“மேல சொல்லுங்க சமீர்.” என்ற அருணாவிடம்,
“அன்னைக்கு ஜியாக்கும் எனக்கும் ஆர்க்யூமென்ட் நடந்தது. ஜியா ஒருகட்டத்துல என்னைப் பிரிய முடியலன்னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க காதலோடு என்கிட்ட நெருங்கும் பொழுது, என்னால தடுக்க முடியல, எங்களுக்குள்ள நடந்துருச்சு.
நான் ஆஷிக், ஆயிஷா நினைச்சு ரொம்பக் கில்ட்டியா ஃபீல் பண்ணினேன். சீக்கிரமா அவங்ககிட்ட உண்மைய சொல்ல சொன்னேன், அவ மறுத்தா, நான் கொஞ்சம் கோபமா கிளம்பிட்டேன். அப்படி இருக்கும் பொழுது தான் அவளோட ஆக்சிடென்ட் நியூஸ் கிடைச்சுது. அப்போ சந்திச்சு பேசுனேன். ஆஷிக்கிட்ட உண்மைய சொல்ல சொன்னேன்.
உன்னால முடியலைன்னா நான் சொல்றேன், ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வோம்னு சொன்னேன். இவ பொறுமையா இருக்கச் சொன்னா, நான் கண்டிப்பா சொல்லுவேன்னு சொன்னேன். உடனே அவங்க தப்ப மறைக்க ஆஷிக்கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லி, அவர் என்னை அடிக்க, எனக்கு அது மனசளவுல ரொம்பப் பாதிப்பை ஏற்படுத்திடுச்சு.” என்று கலக்கத்தோடு கூறினான்.
“இதுதான் உண்மை யுவர் ஹானர். என் கட்சிக்காரர் கலங்க மற்றவர். உண்மை குற்றவாளிகள் யாரோ, அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று அருணா டிபென்ஸ் தரப்பில் உள்ளதை கூறிவிட்டு, தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.
பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் தன் விசாரணையை ஜீவாவிடம் இருந்து தொடர்ந்தார்.
“மிஸ்டர் ஜீவா, சமீரும் ஜியாவும் ஒன்னா சாப்பிட்டது, வெளியில போனதை வச்சு இரண்டு பேரும் விரும்புறாங்கனு சொல்றீங்களா? இல்லை, ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க விரும்புற விஷயத்தை உங்ககிட்ட சொன்னாங்களா?” என்று கேட்க,
“சமீர் சொன்னான்.”
“சோ, ஜியா சொல்லல?”
“அது… அது…” என்று ஜீவா இழுக்க,
“சொன்னாங்களா, இல்லையா? ஐ ஜஸ்ட் நீட் அ அன்ஸர்.” என்று அழுத்தத்தோடு கேட்க,
“ஞாபகம் இல்லை.”
“ஞாபகம் இல்லையா, இல்லை இல்லையா?” என்று கூர்மையாகக் கேட்க,
“சரியா தெரியலை.”
“ஜீவா தெரியுமா, தெரியாதா?”
“தெரியாது.” என்றதும் நீதிபதியைப் பார்த்து, “நோட்ஸ் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்.” என்றவன் மேலும் தொடர்ந்து ஜீவாவிடம், “சோ ஜியா மனசுல என்ன இருக்கு, அவங்க சமீரை விரும்புறாங்களா இல்லையான்னு உங்களுக்குத் தெரியாது.
ஏன் இப்படி இருக்கக் கூடாது, ஜியா, சமீரை நண்பனா நினைச்சுதான் பழகிருக்காங்க. ஆனா சமீர் நட்பை காதலா நினைச்சு இருக்குறாரு. சந்தர்ப்ப சூழ்நிலையால ஜியாவுக்கும் சமீருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாம போக, ஒரு வருஷம் கழிச்சு ஆஷிக்கோட மனைவியா ஜியாவைப் பார்த்ததும் சமீரால தாங்கிக்க முடியல. அதனால சமீர் தன் வன் உணர்ச்சிக்கு ஜியாவை இரையாக்கிட்டாரு. அதுக்கு நீங்களும் உடந்தை.” என்று சம்பத் கூற,
அவரை இடைவெட்டிய அருணா, “நீங்க சொல்ற மாதிரி ஜியாவை ரேப் பண்ணினாங்கன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று கேட்க,
“டாக்டர் விஷ்ணு பிரியா! அவர்தான் ஜியாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர்.” என்றதும் அவரைச் சாட்சி கூண்டிற்கு அழைக்க, ஆஷிக் அவனது நண்பர்கள் அனைவரும் மிக எதிர்பார்ப்போடு அமர்ந்திருக்க சம்பத் வழக்கைத் தொடர்ந்தார்.
“ஜியாவை மார்ச் எட்டு அன்னைக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தது நீங்க தானா?” என்று கேட்க,
“ஆமா”
“அவங்களுக்கு என்ன ப்ராப்ளம்னு சொல்லி அட்மிட் பண்ணினாங்க?”
“ஆக்சிடெண்ட்னு சொல்லி தியா அவங்களோட ஃப்ரண்ட் தான்னு சொல்லி அட்மிட் பண்ணினாங்க. சிவியர் ப்ரெயின் அண்ட் லெக் இஞ்சூரி. கொஞ்சநாள் கோமாவுல இருந்தாங்க. அப்புறமா க்யூர் ஆகிட்டாங்க. இது அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணின மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்.” என்று விஷ்ணு பிரியா, தன் மனசாட்சியைக் கொன்றுவிட்டு கூறிய பொய்யில் ஆஷிக், ஆதர்ஷ், ரோஹித் அனைவரும் திகைத்து போய் இருக்க, ஜியா தனக்கு இருந்த ஒரு ஆதாரமும் தன்னை ஏமாற்றிவிட்டதை எண்ணி மிகவும் மனமுடைந்து போனாள்.
சமீர், டாக்டர் விஷ்ணு ப்ரியாவின் குழந்தையைக் கொன்று விடுவதாகக் கூறி, அவரைத் தன் பக்கம் வரவழைத்ததை எண்ணியவாறு ஜியாவை ஏளன பார்வை பார்த்தான்.
அவனது அந்தப் பார்வையிலே தான் மீண்டும் தோற்று போனதை உணர்ந்தவள், விழியோரமாய் நீர் வழிய எதுவும் கூறாமல் அமைதியாய் நின்றாள்.
ரிப்போர்ட்டை படித்துப் பார்த்த நீதிபதி, அருணாவிடம் சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டுமா என்று கேட்க,
அருணா மருத்துவரிடம், “அப்போ ஜியா தரப்புல சொல்ற மாதிரி அவங்கள யாரும் ரேப் பண்ணல?”
“இல்லை, அதுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இட் வாஸ் அ ஆக்சிடென்ட்.”
“தேங்க் யு விஷ்ணு ப்ரியா.” என்ற அருணா நீதிபதியிடம், “யுவர் ஹானர், இவங்க தரப்புல இருந்து வந்த சாட்சியே உண்மைய சொல்லிட்டு போய்டாங்க. ரிப்போர்ட்ஸ் உங்க பார்வையில இருக்கு. கேஸ் க்ளியரா இருக்கு.
எங்க சமீர் தனக்கும் அவருக்குமான ரிலேஷன்ஷிப்பை தன் கணவன் ஆஷிக்கிட்ட சொல்லிருவாரோ, ஒருவேளை சொன்னா எங்க இப்போ வாழ்ந்துட்டு இருக்குற லக்ஸுரி லைஃப்பை இழந்திருவோமோனு பயந்து போய் ஜியா, ஆஷிக்கிட்ட இருந்து தப்பிக்க என் கட்சிக்காரர் மேல போட்ட பிளான் தான் இந்தக் கற்பழிப்பு குற்றச்சாட்டு. ஆஷிக்கும் தன் மனைவியோட பேச்சு நம்பி சமீரை கொடூரமா தாக்கிட்டாரு.
இப்போ இந்தக் கேஸ் கூட வெளிப் பார்வைக்கு, தன்னை நிரபராதின்னு நிரூபிக்க இவங்க போட்ட தவறான குற்றச்சாட்டு. இது ஒரு கிறிஸ்டல் க்ளியர் ஓபன் ஷட் கேஸ் என்பதால், குற்றம் சுமத்தப்பட்ட என் கட்சிக்காரரை நிரபராதி என்று தீர்ப்பளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.” என்று அருணா தன் வாதத்தை முடித்தார்.
நீதிபதி ஜியாவிடம், “உங்க தரப்புல இருந்து நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?”
விழிகளை மூடி திறந்தவள் ஆழமான மூச்சை உள்ளே இழுத்தபடி, “எஸ் யுவர் ஹானர்! ஜீவா, சுஜித், வருண் இவங்க மூணு பேரையும் நான் தனி தனியா உங்க முன்னாடி விசாரிக்கணும். அதுக்கு எனக்கு அனுமதி வேணும்.” நேருக்கு நேராக ஜியா கேட்க, நீதிபதியால் மறுக்க முடியவில்லை.
“பெர்மிஷன் க்ரான்டட்!”
சாட்சி கூண்டிற்கு ஜீவா அழைக்கப்பட, ஜியா தன் விசாரணையைத் தொடங்கினாள்.
பயத்தில் தேகம் நடுக்கமுற்றாலும் அதை காட்டிக்கொள்ளாதவள், நேர் பார்வையோடு அவன் முன்பு வந்தாள். சற்று முன்பு தன் முன் கதறியவளின் விழிகளில் திடீரென்று அக்னி தெறிப்பதை ஆச்சரியமாய் பார்த்தான்.
“ஹலோ மிஸ்டர் ஜீவா ஆனந்த், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்குக் கேரக்டர் செர்டிபிகேட் குடுத்தீங்கள்ல, அதை கொஞ்சம் ரிப்பீட் பண்ண முடியுமா?”
“அது…” தடுமாறினான்.
“சமீர் என்னை நம்பி ஏமாந்தது, அந்தக் கதை தான். அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சமீரோட பணத்துக்காக நான் அவரை யூஸ் பண்ணிக்கிட்டேன். நிறைய ஆம்பளைங்க கூட எனக்கு லிங்க் இருந்தது. எப்பவும் பார்ட்டி ட்ரின்க்ஸ்னு சுத்துவேன். இப்படி நீங்க தானே சொன்னீங்க?”
“ஆமா, உண்மை தான். எங்களை மாதிரி பணக்கார பசங்க கூடப் பணத்துக்காகப் பழகுற ஒரு சில பொண்ணுங்க மாதிரி தான் நீயும். நேரத்துக்கு ஒருத்தர் கூட பார்ட்டி, ட்ரின்க்ஸ்னு சுத்துவ. உன்கிட்ட எப்படி நல்ல கேரக்டர் இருக்கும்? அதான் சமீர்கிட்ட எச்சரிக்கையா இருக்கச் சொன்னேன், அவன் ஏமாந்துட்டான். நான் பொய் ஒன்னும் சொல்லல.”
“நானும் நீங்க பொய் சொன்னீங்கனு சொல்லலையே டாக்டர் ஜீவா. ஒருசில பொண்ணுங்கன்னு சொன்னீங்களே, பொண்ணுங்க கூட நிறையப் பழக்கமோ? அதான் நான் சோ கால்ட் அந்த, ‘ஒரு சில’ பொண்ணுங்கள்ள ஒருத்தின்னு சரியா கண்டுபுடிச்சுட்டீங்க போல?” என்று அவள் விழிகளை விரித்துக் கேட்க குழம்பினான், பதில் தெரியவில்லை.
“என்கிட்ட நல்ல கேரக்டர் இல்லன்னு எதோ சொன்னீங்களே, எதை வச்சு சொன்னீங்க?”
“பல ஆண்களோட நெருக்கமா பார்ட்டி, ட்ரின்க்ஸ்னு சுத்துவீங்க, அதை வச்சு சொன்னேன்.”
“நெருக்கமான்னா எவ்வளவு நெருக்கமா ஜீவா?”
“அது…”
“நீங்க நெருக்கம்னு சொல்றது பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் பத்தி சொல்றீங்க சரியா?”
“ஆமா”
“என்னைக்காவது நான் யார்கூடயாவது மேக் அவுட் பண்றத பார்த்தீங்களா ஜீவா?” என்று பற்களைக் கடித்தவாறு அவள் கேட்க,
“அது… இல்லை…” வியர்த்துக் கொட்டியது.
“அப்போ எப்படி எனக்கு மத்த ஆம்பளைங்க கூடத் தொடர்பு இருக்குன்னு சொன்னீங்க?”
“எல்லாரும் பேசுறத வச்சு…”
“அப்போ எதையும் கண்ணால பார்க்கலை?”
“இல்லை.”
“நீங்க ஒரு டாக்டர், சுமார் எத்தனை பேஷண்ட்ஸ்க்கு ட்ரீட்மெண்ட் குடுத்திருப்பீங்க?”
“நூறுக்கு மேல…”
“இதுல பெண்களும் உண்டா?”
“ஆமா”
“நோயாளிகளை எல்லார் முன்னாடியும் பரிசோதனை பண்ணுவீங்களா, இல்லை ரூம்ல வச்சு பண்ணுவீங்களா?”
“இல்லை, ரூம்ல வச்சு தான் பண்ணுவேன்.”
“நான் கூட உங்கள கேரக்டர் லெஸ்னு சொல்லலாம்ல?” சுருக்கென்று அவள் கேட்ட கேள்வியில் வாயடைத்து நின்றான். வெறுமையாகப் புன்னகைத்தாள்.
“நீங்க சொன்னதை வச்சு பார்க்கும் பொழுது பார்ட்டி, ட்ரின்க்ஸ்னு போற பொண்ணுங்க எல்லாரும், கேரக்டர் சரி இல்லாத பொண்ணுங்க அப்படித் தானே?”
“அப்படின்னு இல்லை…”
“ஆனா நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே, ஆமா தானே?”
“ஆமா.”
“ஆமா, நான் பார்ட்டி, ட்ரிங்க்ஸ்னு சுத்துற கேரக்டர் லெஸ் பொண்ணு தான். ஆனா அதுக்காக என்னை உன் ஃப்ரண்ட் ரேப் பண்ணுவானா?” அமைதியோடு பற்களைக் கடிக்க,
“ஆனா… அது ஜியா…” அவள் கேட்ட கேள்வியை அவன் மறுக்கவில்லை. நெற்றியை நீவியபடி தடுமாறினான்.
“ட்ரின்க் பண்ற பழக்கம் உண்டா?”
“ஆமா”
“சோ நீங்க ட்ரின்க் பண்ணுவீங்க, ஆனா நாங்க ட்ரின்க் பண்ணினா ரேப் பண்ணுவீங்களா?” தனலை அள்ளி கொட்டியது போல் வாய் திறக்கவில்லை. சமீர் கடுமையாக முறைக்க, தலை கவிழ்ந்தான்.
“அப்ஜெக்ஷ்ன் யுவர் ஹானர்!” என்று அருணா குறுக்கிட,
“அப்ஜெக்ஷ்ன் ஓவர் ரூல்டு.” என்ற நீதிபதியைத் தொடர்ந்து,
ஜியா, “பதில் சொல்லுங்க ஜீவா, உங்க நண்பர் என்னை ரேப் பண்ணலாமா?”
“இல்லை, எனக்குத் தெரியாது.”
“என்ன தெரியாது.”
“சமீர் உன்னை என்ன பண்ணினான்னு எனக்குத் தெரியாது.”
“அப்போ அன்னைக்கு ரூம்ல என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம், ரேப் வேணும்னாலும்…”
“எனக்குத் தெரியாது.”
“நானும் நடந்திருக்கலாம்ன்னு தான் சொல்றேன்…”
“நடந்திருக்கலாம், நீங்க போகலாம்.” யாரையும் பார்க்காமல் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
