காதல் 66

ஜீவாவைத் தொடர்ந்து வருணையும் சுஜித்தையும் விசாரிக்கத் தொடங்கினாள். 

“மார்ச் எட்டாம் தேதி நீங்க சினிமா தியேட்டர்ல இருந்தீங்க, சரி தானே? ஆமா, எந்த தியேட்டர்னு தெரிஞ்சிக்கலாமா?”

“பாரடைஸ்”

“என்ன மூவி?”

“ஆஷிக்கி டூ”

“நைஸ் பிக்சர். ஆனா மார்ச் எட்டு இன்டெர்நேஷனல் விமன்ஸ் டேல. அன்னைக்கு வேர்ல்டு லெவெல்ல உள்ள எல்லா தியட்டர்ஸ்லயும் அக்டர் மிஸ்ஸஸ் ஸ்ரீதேவியோட லாஸ்ட் பிலிம் ‘மாம்’தானே டெலிகாஸ்ட் பண்ணினாங்க?” புருவம் உயர்த்தினாள். வருண் சித்தமும் அடங்கி நிற்க, சுஜித் தன் கைகளைப் பிசைந்தவாறு, 

“ஆமா, ‘மாம்’ படம்தான் போட்டாங்க. அதாவது நாங்க ஆஷிக்கி டூனு நினைச்சு போனோம். அங்க அது போடாதனால நாங்க இன்டர்வெல்ல ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிட போய்ட்டோம். வருண் ஆஷிக்கி டூ ஞாபகத்துலயே தப்பா சொல்லிட்டான்.” என்று சுஜித் சமாளிக்க,

“நீங்க போங்க.” என்றவள் நீதிபதியிடம், “தட்ஸ் ஆல் யுவர் ஹானர்! எல்லாம் உங்க கண்ணு முன்னாடி இருக்கு. சமீரோட சாட்சி எல்லாமே பொய். அவங்க முன்னுக்கும் பின்னுக்கும் முரணா பேசுறதுல இருந்தே, அவங்க சொல்ற பொய் தெளிவா தெரியுது. எனவே என்னைச் சித்திரவதை பண்ணி கொடூரமா கற்பழிச்ச சமீருக்கு, தகுந்த தண்டனை கொடுங்க.” என்று ஜியா மனமுடைந்து அழ, 

ஜியாவை விசாரிப்பதற்காக அனுமதி வாங்கின அருணா அவளிடம், “நீங்க சொல்ற மாதிரியே சமீர் உங்கள ரேப் பண்ணினதாகவே இருக்கட்டும். அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு மிஸ்ஸஸ் ஜியா? சட்டத்துக்கு முன்னாடி ஆதாரம் தான் தேவை, உங்க கண்ணீர் இல்லை.

யுவர் ஹானர், இவங்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்ல தெளிவா ஆக்ஸிடெண்ட்னு இருக்கு. ஜியா சொல்றது பொய் என்பதுக்கு இதைவிடத் தகுந்த ஆதாரம் இருக்க வாய்ப்பில்லை. 

நூறு குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டாலும், ஒரு நிரபராதி கூடத் தண்டனை அடைய கூடாது, என்பதைக் கருத்தில் கொண்டு நிரபராதியான என் கட்சிக்காரரை விடுவித்து, அவர் மீது பொய் வழக்கு தொடுத்த மிஸ்ஸஸ் ஜியாவுக்குத் தகுந்த தண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அருணா, நீதிபதியிடம் வேண்டிக்கொள்ள,

நீதிபதி, சம்பத்திடம் ஆதாரம் பற்றிக் கேட்க, “ஜியா ஒரு பெண், அதுவும் ஒரு மருத்துவர். இப்படி ஊர் உலகத்துக்கு முன்னால் எந்தப் பெண்ணும் தவறான குற்றச்சாட்டு சுமத்தி, தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளமாட்டாள். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. தங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்.” என தாழ்மையுடன்  கேட்க, 

“ஜியா ஒரு பெண் என்பதாலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதால், பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணிற்கும் அநீதி இழைத்துவிடக்கூடாது என்னும் கருத்தை மனதில் கொண்டு, இன்னும் ஒரு வார கால அவகாசம் இந்த நீதிமன்றம் கொடுக்கிறது.” என்று நீதிபதி அடுத்த வாரத்துக்குத் தீர்ப்பை ஒத்திவைத்தார். 

“ஆயிரம் இருக்கட்டும், நைட்டு தனியா ஒரு ஆம்பளை வீட்டுக்கு போயிருக்கா.”

“அந்தப் பையன் கூடத் தொடர்பு இல்லாமலா அவ போயிருப்பா?”

“அதான் ஃபோன்ல இவ குரல் தெளிவா கேட்குதே?”

“இது கள்ளக்காதல் விவாகாரம் தான்!”

“நெருப்பில்லாம புகையாது?”

“அழகான புருஷன வச்சுட்டு இவளுக்கு ஏன் இந்த வேலை?”

“மனுஷங்க பொய் சொன்னாலும் ரிப்போர்ட் எப்படிப் பொய் சொல்லும்? அந்த பொண்ணு மேல தான் தப்பு.”

“இப்போ உள்ள பொண்ணுங்களை நம்பவா முடியுது?”

இப்படி ஜியாவை சுற்றிக்காட்டி ஒவ்வொருவரும் அமிலமாய் ஊற்றிய வார்த்தைகள் அவளது நெஞ்சை பொசுக்கிவிட, நீதிமன்றத்தில் இருந்த அனைவரின் பார்வையும் விஷப் பாம்பாய் ஜியாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சை ஏற்ற, அவமானத்தில் கூனி குறுகினாள். 

ஒரு வாரத்தில் சாட்சிக்கு எங்கே போவது? மனமுடைந்து கதறி அழுதவளை, எப்படித் தேற்றுவது என்று புரியாமல் ஆஷிக் தவித்தான். ஜியாவை என்ன சொல்லி சமாளிப்பது என்று அறியாமல் மிகவும் தவித்தான். 

***

ரிப்போர்ட்டர்ஸ் சமீரிடம் வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப் பட்டிருப்பதைப் பற்றிக் கேட்க, “இந்தியாவுல நீதி இன்னும் சாகலைன்னு நான் நம்புறேன்.” என்று ஒரே ஒரு வரியில், வெற்றி தன் பக்கம்தான் என்பது போலக் கூறிவிட்டு சென்றான் மிடுக்காக. 

தன் எதிரே உருக்குலைந்து போய் வந்த ஜியாவைப் பார்த்தவாறு அவள் முன் நடந்து வந்தவன், அவர்களைக் கடக்கும் நேரம் ஆஷிக்கின் காதில், 

“எப்படியும் தோத்துப் போகத் தானே போற, உன் ஆசை வொய்ஃப்ப என்கிட்ட விட்டுட்டு போ, நான் பார்த்துக்கறேன்.” என்று அருவெறுப்பான வார்த்தைகளைப் பேச, ஏற்கனவே அடக்கி வைத்திருந்த கோபம் அக்னி பிழம்பாய் வெகுண்டெழ, நீதிமன்றம் என்று கூடப் பார்க்காமல் அனைவரும் முன்னிலையில் ஆஷிக், சமீரிடம் வெறித்தனமாய் நடந்து கொண்டான். 

ஜியா, தன் நண்பர்கள் என்று யார் தடுத்தும் கேட்காமல் ஆஷிக், சமீரை புரட்டி எடுக்க இறுதியில் அவனைத் தடுக்க வந்த போலீசையும் கீழே தள்ளிவிட்டு சமீரைப் பார்த்து, “உன்னைக் கொல்லாம விட மாட்டேன். உன் சாவு என் கையில தான்!” என்று சீறிபாய, 

நீதிமன்றத்தில் முறைகேடாக நடந்து கொண்டதற்காக ஆஷிக்கை போலீசார் கைது செய்ய ஆதர்ஷ், ரோஹித் இருவரும் செய்வதறியாது அஸாத்துக்கு அழைப்பு விடுத்தனர். 

ஜியா போலீசாரிடம் எவ்வளவோ பேசி பார்த்தும் அவர்கள் ஆஷிக்கை போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்ல, கண்களில் கண்ணீர் பெருக பரிதாபமாக ஆஷிக்கின் பெயரை கூறியவாறு ஜியா தரையில் வீழ்ந்தவாறு கதறினாள். ஹாஜரா, ஆயிஷா, தியா, நடாஷா என்று யாருடைய சமாதானத்தையும் கேட்காதவள் கதறி கதறி தன் உடம்பில் உள்ள ஜீவனை இழந்து மயங்கி வீழ்ந்தாள். 

ஆஷிக், சமீரை பார்த்து ஆக்ரோஷமாக முழங்கிய காட்சி எல்லா சேனலிலும் காட்டுத் தீயை போலப் பயங்கரமாகப் பரவ, அதைப் பார்த்த சமீரின் முகம் புன்னகையில் விரிந்தது. 

ஆஷிக்கின் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்திய மகிழ்ச்சியில் சமீர்… அவனது மகிழ்ச்சி நீடிக்குமா இல்லை, அவன் ஏற்படுத்திய புயலில் அவனே சிக்கிக்கொள்வானா?

ஆஷிக்கை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும் முன்பே அஸாத் அங்கே வந்துவிட, நிமிடத்தில் அஸாத் தன் செல்வாக்கை பயன்படுத்தி ஆஷிக்கை வீட்டுக்கு அழைத்து வந்தார். 

காரில் வரும் வழியெல்லாம் இருவருக்கும் இடையே அமைதியே நிலவ, ஆஷிக்கின் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. 

எப்பொழுதும் தான் செய்யும் காரியத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்டி தன்னை மட்டம் தட்டும் அஸாத் அஹமத். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னிடம் உள்ள குறையைக் கண்டுபிடித்துத் தன்னை வசைபாடும் அஸாத் அஹமத். இப்பொழுது கொஞ்ச தினங்களாகத் தன்னிடம் மிகவும் பொறுமையாக நடந்து கொள்வது அவனை மிகவும் குழப்பியது. ஆஷிக்கிடம் எதைப் பற்றியும் பேச கூடாது என்று, தன் உணர்வுகளை உள்ளடக்கியவாறு காரை ஓட்டுவதிலே அஸாத் கவனமாக இருந்தார். 

அவரால் சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போக, ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் தன் காரை நிறுத்திய அஸாத் தன் மௌனத்தைக் கலைத்து,

“இதெல்லாம் தேவையா? ரொம்ப அசிங்கமா இருக்குடா, வெளியில தலை காட்ட முடியல. கண்டவன் எல்லாம் கேள்வி கேக்குறான். கோர்ட் கேஸ்ன்னா அவ்வளவு ஈஸியா போச்சா? முதல் ஹியரிங்க்கே மயங்கி விழுந்துட்டா.” என்று கூறிய மறுநொடி விழிகளில் பீதியோடு நிமிர்ந்து பார்த்த ஆஷிக்,

“என்னாச்சு ஜியாக்கு?” என்று பதற்றமடைய, 

“ஒன்னும் இல்லை, டாக்டர் செக் பண்ணிட்டாங்க. ஸ்ட்ரெஸ்தான், இப்போ ஓகேனு உங்க அம்மா சொன்னா.” என்று அவர் கூறிய பிறகும் சமாதானம் அடையாதவன், 

“நான் வீட்டுக்கு போகணும், ஜியாவை பார்க்கணும்.” என்றவனின் குரலில் கலக்கத்தோடு சேர்த்து ஒருவித படபடப்பும் தொற்றிக்கொள்ள, சட்டென்று தன் அலைபேசியை எடுத்தவர் அதில் தன் மனைவியின் நம்பரை டயல் செய்து, ஹாஜரா எடுத்ததும் அலைபேசியை ஆஷிக்கிடம் கொடுக்க, பதற்றத்தோடு வாங்கியவன் மூச்சை உள்ளே இழுத்தவாறு,

“ஜியா எப்படி இருக்கா, நல்லா இருக்காதானே?” என்று முகத்தில் கலவரம் தொனிக்கக் கேட்க, 

“நல்லா இருக்கா, நீ எங்க இருக்க?” என்று கேட்ட தாயின் கேள்வியைப் புறம் தள்ளியவன் முகத்தில் கலவரம் குறையாமல்,

“மூக்… மூக்குல… மறுபடியும் ப்ளட்… அது ரத்தம் வர்லல…?” என்று கேட்டவாறு தன் தாய் என்ன கூறுவாரா என்கின்ற பயத்தில் தன் கண்களை மூடிக்கொள்ள, 

“இல்லபா வர்ல, டாக்டர் செக் பண்ணிட்டு ஸ்ட்ரெஸ் ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு சொல்லி டேப்லெட் குடுத்துட்டு போயிருக்காங்க. நான் அவ பக்கத்துல தான் இருக்கேன், நல்லா தூங்கிட்டு இருக்கா.”

“நான் வர்ற வரைக்கும்…” என்று தொடரவும், 

“பக்கத்துலயே இருக்கேன், நீ கவலைப்படாத, சீக்கிரமா வீட்டுக்கு வா. அவர் எதுவும் சொன்னாலும் சண்டை போடாத.” என்று அவன் தாய் கூறிய எதுவும் அவன் காதில் விழவில்லை. ‘நல்லா தூங்கிட்டு இருக்கா, பக்கத்துலயே இருக்கேன்.’ என்ற வரிகளைக் கேட்ட பின்பே உள்ளே இழுத்த மூச்சை வெளியிட்டவன், கண் இமையோரம் கண்ணீர் வடிய விழி மூடிய நிலையிலே காரின் சீட்டில் சாய்ந்து கொண்டான். 

அவனது ஒவ்வொரு முக அசைவையும் கவனித்த அஸாத் ஆஷிக்கிடம், 

“இன்னும் எவ்வளவு தூரம் ஓட போறீங்க? எத்தனை பேருக்கு தான் பதில் சொல்ல போறீங்க? ஜியாவ அவ்வளவு விரும்புற, அவ கூட வேறே எங்கையாவது போய் புதுசா உன் வாழ்க்கைய ஆரம்பி. உனக்கு என்ன வேணும், சமீருக்குத் தண்டனை கிடைக்கணும் அப்படித் தானே? நீ கவலைய விடு, நான் சொல்றத கேட்டு ஜியாவோட வெளிநாடு கிளம்பு. 

சமீரை நீ என்ன பண்ணணும்னு நினைக்கிறியோ, அதை நான் பார்த்துக்கறேன். வேண்டிய ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க. இப்போதைக்கு நிலைமை சரியில்ல, கொஞ்ச நாள் அவனை விட்டு புடிச்சு அவன் கதைய முடிச்சுரலாம். கேஸே வராம நான் பார்த்துக்கறேன். சொன்னா கேளு, இப்பவும் என்னை உன் எதிரியாவே பார்க்காத.” என்ற அஸாத்திடம்,

வெறுமை கலந்த வேதனையோடு புன்னகைத்தவன் இயலாமையோடு அவரை நோக்கி, “நொறுங்கி போய் இருக்கா, சரியா கூடப் பேசமாட்டிக்கிறா. அப்போ அப்போ கத்துறா, என்னை விட்டு விலகி விலகி போறா. அவளை இந்த வேதனையில இருந்து வெளிய கொண்டுவர்றதுக்கு இதை விட்டா எனக்கு வழியில்லை. 

எங்க அவளை இழந்துருவேனோன்னு பயமா இருக்கு. அவ போனா எல்லாமே போயிரும்… என் சந்தோசம், என் வாழ்க்கை, நான்…  ஜியா எனக்கு வேணும்பா. ப்ளீஸ் அப்பா… உங்க கிட்டயும் சண்டை போட எனக்குத் தெம்பில்லை.” என்று விரக்தியுடன் வெளிப்பட்ட அவனது வார்த்தைகள் அவரது இதயத்தைக் கசக்கி பிழிந்தது. 

“ப்ளீஸ் அப்பா… உங்ககிட்டயும் சண்டை போட எனக்குத் தெம்பில்லை.” என்று ஆஷிக் கூறிய வரிகள் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும், ரண வேதனையை அவருக்குப் புரியவைத்தது. எவ்வளவு வலி உள்ளே இருந்திருந்தால், இப்படி ஒரு வார்த்தை அவனது வாயில் இருந்து வந்திருக்கும், கலங்கினார். 

‘ப்ளீஸ் அப்பா’ கேட்டு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும். சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு ஆஷிக் தன்னை அப்பா என்று அழைத்ததும், அவருக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு திரண்டு வந்தது. ‘எப்பொழுதும் தன் முன் மிடுக்காக நின்று கொண்டு திமிராகப் பேசுபவன், இன்று தன் முன் ஜீவன் அற்று உருக்குலைந்து இருப்பது அவரைக் காயப்படுத்தியது. மகனை அப்படி அவரால் காணயிலவில்லை. 

ஏன் சமீரை உருத்தெரியாமல் அழிக்க அவருக்கு வெகு நேரம் எடுக்காது. சமீரின் மொத்த குடும்பத்தையும் நடுத் தெருவில் நிறுத்த அவருக்கு வெகு நேரம் ஆகாது. ஏன், இந்த கேஸை ஒரே ஹியரிங்கில் முடித்திருக்க முடியும். அதெல்லாம் ஆஷிக், சமீரைத் தாக்கும் வீடியோ வெளியில் வரமால் இருந்திருந்தால். 

ஆனால் இப்பொழுது நிலைமையே வேறு. சமீரை என்ன செய்தாலும் அது ஜியா, ஆஷிக்கின் தலையில் தான் வந்து விழும். அதனால் தான் அவர் முடிந்த வரை பொறுமையாக இருக்கிறார். ஆனாலும் அவர் அமைதியாக இல்லை, இந்தப் பிரச்சனை ஆரம்பித்தத்தில் இருந்து தன்னால் முடிந்த முயற்சியை அவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் சமீர் இவர் கணித்ததை விட மிகவும் பயங்கரமானவனாக இருப்பதால், அவர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியையே சந்திக்கின்றன. சமீர் மக்களின் மத்தியில் நல்லவன் என்கின்ற பெயரை வாங்கியதால், தடாலடியான முடிவுகள் எதையும் அஸாத்தால் எடுக்க முடியவில்லை. 

ஆனால் தன் அனுபவத்தின் மூலமாகச் சமீர், ஆஷிக்கின் கோபத்தைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக மக்களிடையே அனுதாபத்தைச் சம்பாதிக்கிறான், என்பதை நன்கு புரிந்த கொண்ட அஸாத் தன் மனதிற்குள்,

‘என்னோட கணிப்பு சரியா இருந்தா இன்னைக்கு நடந்த பிரச்சனைய வச்சு சமீர் கண்டிப்பா புது டிராமா பண்ணுவான்.’ என்று எண்ணியவர், 

ஆஷிக்கிடம் இப்போதைக்கு இதைப் பற்றிக் கூறி மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், தளர்ந்து போய் இருந்த அவனது கரத்தை தன் கரத்துக்குள் மூடி வைத்துக்கொண்டு, “சரியாகிரும், டோன்’ட் லூஸ் யுவர் ஹோப்!” என்று தன்மையாக ஆறுதல் கூற, ஆஷிக்கும் மறுக்காமல் தன் தலையை லேசாய் அசைத்து ஏற்றுக்கொண்டான். அவன் இருக்கும் இந்த நிலைக்கு அந்த அரவணைப்பு மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!