இன்று சமீர் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகள், “உன் ஆசை வொய்ஃப்பை என்கிட்ட விட்டுட்டு போ நான் பார்த்துக்கறேன்.” தன்னை மூர்க்கனாக்கிய அதே வார்த்தைகள், ஜியாவுக்கு அவன் இழைத்த கொடுமைகள், ஜியாவின் கதறல்கள் என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆஷிக்கை மீண்டும் மிருகம் ஆக்க, ஆக்சிலேட்டரை ஆக்ரோஷமாக மிதித்தவாறு புயலாய் பறந்தான்.
‘இன்னைக்குத் தான் உனக்குக் கடைசி நாள் சமீர். உன்னை ஒரு தடவ இல்லை, நூறு தடவ என் கையாலே அடிச்சே சாகடிக்கப் போறேன்.’ என்று முழங்கியவாறே, ஆத்திரமும் கோபமும் போட்டியிட ஆக்சிலேட்டரை இன்னும் அழுத்தியவன், சாலையில் வேகமாகப் பறந்தான்.
இவன் சென்ற வேகம் வீட்டில் உள்ள அனைவரையும் கலங்கடிக்க, அவனது அலைபேசிக்கு விடமால் ரோஹித் தொடர்பு கொள்ள, எல்லா அழைப்பையும் துண்டித்தான். தன்னையும் மீறிய வேகத்தில் பயணித்தவன்,
ஜியா காலிங் என்று அலைபேசியின் தொடு திரையில் தெரியவும் ஒருவித நிதானத்துடன் அட்டென்ட் செய்தவன்,
“ஜியா…” என்று அழைப்பதற்குள்,
“நான் தியா பேசுறேன் ஆஷிக். நீ என்ன பண்ணினாலும் அது ஜியாவதான் பாதிக்கும். அவளுக்கு உன்னை விட்டா யாரு இருக்காங்க? ஸோ, எது பண்ணினாலும் ஜியாவ மனசுல வச்சுக்கிட்டு பண்ணு.” என்ற தியாவின் வார்த்தைகளில், தன் நிதானத்தை இழந்தவன் எதிரே வரும் வண்டியை கூடக் கவனிக்காது இருக்க,
பின் சுதாரித்துக் கொண்டவன், ‘ஜியாவை’ எண்ணியவாறு ஸ்டியரிங்கை திருப்பி, அவன் அடித்த பிரேக்கில் வண்டி நேராக இருந்த மரத்தில் மோதி நின்றது.
காரின் முன் பகுதி நொறுங்கி போய் இருக்க, என்றும் அணியாதவன் இன்று அணிந்த சீட் பெல்ட்டால் தலையில் மட்டும் சிறு காயம் ஏற்பட்டிருக்க, கணப் பொழுதில் உயிர் தப்பினான்.
“ஜியாக்கு உன்னை விட்டா யாரு இருக்காங்க? நீ என்ன பண்ணினாலும் அது ஜியாவதான் பாதிக்கும்.” என்று தியா சொன்ன வரிகள் கிளர்ந்தெழுந்திருந்த அவனது கோபத்தை மட்டுப்படுத்தியது. நெஞ்சைப் பிடித்தவாறு முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட ஸ்டியரிங் மீது சாய்ந்தான்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிய, கலைத்து போய் வீட்டிற்கு வந்தான். அவனைக் கண்ட பிறகுதான் அவனது நண்பர்களுக்கு உயிரே வந்தது. அவர்கள் எதுவும் கேட்கவில்லை, அவனாகவே நடந்ததைக் கூறினான்.
‘ஏன்டா இப்படிப் பண்ணின?’ என்று எந்தக் கேள்வியும் அவர்கள் கேட்கவில்லை. அனைவரின் முகத்திலும் அவன் போனது போலத் திரும்ப வந்த நிம்மதிதான் தெரிந்தது.
“இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, என்ன பண்றது? லாயர்கிட்ட பேசுனியா, என்ன சொன்னாரு?” என்றான் ரோஹித்.
“பெரிய பெரிய லாயர்ஸ்கிட்ட எல்லாம் பேசியாச்சு, எவிடென்ஸ் இல்லைனு சொன்னதையே சொல்றாங்க.” எரிச்சலோடு கூறினான்.
இதற்கு மேல கேள்வி கேட்டு அவனைச் சங்கடப்படுத்த விரும்பாது, “ரெஸ்ட் எடு” என்ற அவனது நண்பர்கள் அவனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு சென்றனர்.
முகம் முழுவதும் வியர்வை துளிகள். இதயத் துடிப்பு எகிற, நெஞ்சை அழுத்தி பிடித்தவாறு உறக்க கலக்கத்திலே விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். அதே கனவு! தினமும் இரவு, பகல் என்று பாராது தன்னைத் துரத்தும் அதே கனவு. விழிகளில் நீர் சுரந்தது.
படுக்கையில் இருந்து தன் வலுவிழந்த கால்களை மெல்ல தரையில் ஊன்றினாள். பாதம் சரியாகத் தரையில் பதியாமல் தடுமாறியது. கட்டிலின் கால்களைப் பிடித்தவாறு எழுந்து நின்றாள். தட்டு தடுமாறி நடந்தாள், மருந்தின் வீரியம் தடுமாற வைக்கத் தாங்கிப் பிடித்தான் அவளது கணவன். மெதுவாகக் குளியல் அறைக்கு அழைத்துச் சென்றான். அவள் வெளியில் வரும் வரை காத்திருந்தான்.
குளியல் அறையை விட்டு வெளியே வந்த தன் மனைவியை, கைத்தாங்கலாக பற்றிக்கொண்டு மெத்தையில் அமர வைத்தான். கலைந்திருந்த கேசத்தைச் சரி செய்தவாறே, “சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். நான் உனக்கு ஊட்டிவிடுவேன், நீ எல்லாத்தையும் ஒன்னு விடாம சாப்பிடணும் சரியா?” என்றான்.
“ஏன் என்னை எழுப்பலை?” சம்பந்தம் இல்லாமல் வெளிப்பட்டது கேள்வி.
அந்த நிகழ்வுக்குப் பிறகு ஜியா இப்படித் தான் சில நேரங்களில் சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ கேட்பாள். ஆனால் அதை எல்லாவற்றையும் இப்பொழுதும் போல ஆஷிக் புன்னகையோடு சமாளிப்பான்.
“அது நீ நல்லா தூங்கிட்டு இருந்த, அதான் எழுப்பலை.” என்று செல்லமாக அவளது கன்னத்தைத் தட்டியவன்,
“சரி வாயத் திற, சீக்கிரமா சாப்பிடு, மாத்திரை வேற போடணும்…” என்றவனைத் தன் விழிகளை அகற்றாமல் ஜியா அப்படியே பார்த்துக் கொண்டிருக்க,
“என்னாச்சுமா, ஏன் அப்படிப் பார்க்குற?” என்று ஆஷிக் ஆச்சரியமாய் கேட்க,
மெல்ல அவனது நெற்றியில் இருந்த சிகையை ஒதுக்கியவள், பின்பு தன் பிஞ்சு விரலால் மென்மையாய் தன்னவனது நுதலில் இருந்த காயத்தைத் தடவி விட்டாள். அவளது கண்கள் கரித்தது.
“எப்படி அடி பட்டது? ஏன் என்கிட்ட சொல்லல, வலிக்குதா?” என்று தவிப்போடு கேட்டவளை ஆச்சரியமாய் பார்த்தவன்,
“உனக்குச் சத்தியமா ஞாபகம் இல்லையா?” என்று கேட்க, இல்லை என்பதாய் தன் தலையைக் குறுக்கே அசைத்தவள் மீண்டும் அவனது காயத்தை வருட,
“உங்க மனைவி இப்போ லாஸ்ட் ஸ்டேஜ்ல இருக்காங்க. அட்டாக் வரும்பொழுது அவங்க என்ன பண்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. இப்படியே போன ஷி வில்…” என்ற வரிகள் அவனது செவியில் விழ,
விழிகள் தானாகக் கலங்க வருடி கொண்டிருந்த அவளது மென்கரத்தை பற்றித் தன் கண்களில் ஒற்றி எடுத்தவன், ஜியா சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளைத் தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். சில நிமிடங்கள் கழித்துக் கலங்கிய தன் கண்களைத் துடைத்து கொண்டவன் அவளையே உற்று பார்க்க,
“என்னாச்சு ஆஷிக்?” என்றவளுக்கு ஒன்றுமில்லை என்பதாய் தன் தலையை மட்டும் குறுக்க அசைத்து சிகையை வருடி கொடுத்தான்.
ஜியாவுக்கு உணவு கொடுத்துவிட்டு தன் வீட்டின் தோட்டத்தில் அவளது கரம்கோர்த்து, ஏதேதோ பேசியவாறு நடந்து கொண்டிருந்தவனின் அலைபேசி அழைத்ததும் அட்டென்ட் செய்தவன்,
“வாட்! என்ன ரோஹித் சொல்ற?”
“ஆமா, கேள்வி கேட்காம உடனே நீ கிளம்பி நடாஷா வீட்டுக்கு போயிரு, நானும் ஆதர்ஷும் அங்க வந்திடுறோம்.”
“டேய், நான் என்ன தப்பு பண்ணினேன்?”
“போலீஸ் இப்போ உன்னைத் தேடி தான் வருவாங்க…” என்று ரோஹித் கூறும் பொழுதே, போலீஸ் அதிகாரி ஒருவர் காவலாளிகளுடன் தன் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தவன் ரோஹித்திடம்,
“வந்துட்டாங்க.” என்ற ஆஷிக் தன் அலைபேசியைத் துண்டித்துவிட்டு தன் வீட்டிற்குள் நுழையவும்,
அந்த அதிகாரி ஹாஜராவிடம், “உங்க பையன் ஆஷிக், அவரை வர சொல்லுங்க, அவரை அரெஸ்ட் பண்றதுக்கு என்கிட்ட வாரண்ட் இருக்கு. ஆஷிக் எங்க இருக்காருன்னு சொல்லுங்க.” என்று கூறவும்,
“நான் இங்கதான் இருக்கேன், எதுக்கு அரெஸ்ட் பண்ணணும்?” என்று கேட்டவாறே வீட்டிற்குள் நுழைந்தான்.
இன்ஸ்பெக்டரிடம் என்ன விஷயம் என்று கேட்கவும், “மிஸ்டர் சமீர்…” என்று அவர் தொடர்வதற்குள் குறுக்கிட்ட ஆஷிக்,
“என்ன செத்து போயிட்டானா? ஆனா நான் கொலை பண்ணல.” என்று எந்தவித சலனமும் இல்லாமல் அவரிடம் பதிலளிக்க,
“நீங்க பண்ணல, ஆனா ஆள ஏற்பாடு பண்ணி அவர் மேல தாக்குதல் நடத்திருக்கீங்க. இப்போ அவரு ஹாஸ்பிட்டல்ல ஆபத்தான நிலையில இருக்காரு.”
“வாட்!?”
“அவரைத் தாக்குனவனைக் கண்டு புடிச்சாச்சு. விசாரிக்கும் பொழுது அவன் உங்க பேரை தான் சொல்றான். ஸோ உங்களை நாங்க அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம். கேள்வி கேட்காம வர்றீங்களா?” என்ற அதிகாரியைப் பார்த்து வெறுமையோடு சிரித்தவன்,
“நான்… நான் அந்தப் பொறுக்கிய ஆள் வச்சு கொலை பண்ண பார்த்தேனா? அவனைக் கொலை பண்ண என்னோட இந்த இரண்டு விரலே போதும். ஒரு நிமிஷம் அழுத்தினேன்னா பொட்டுன்னு போயிருவான். நான் பண்ணல, அவன் செத்தெல்லாம் போயிருக்க மாட்டான். ஹாஸ்பிடல்ல போய்ப் பாருங்க, நல்லா காலாட்டிட்டு படுத்திருப்பான். இதெல்லாம் அவனோட செட் அப்!” என்று ஆஷிக் சிடுசிடுக்க,
“அதெல்லாத்தையும் கோர்ட்ல போய் சொல்லுங்க. இப்போ என்னோட கடமையைச் செய்ய விடுங்க, நீங்களா வந்தா நல்லது…”
“வரலைன்னா என்ன பண்ணுவீங்க? ம்ம்ம்…” என்று ஆஷிக் எகிற,
அதிகாரி, “என் கடமையைச் செய்ய விடாம தடுக்குறீங்கன்னு உங்க மேல இன்னொரு கேஸ் போட வேண்டியிருக்கும்.”
“என்ன அவன்கிட்ட காசை வாங்கிட்டு இங்க வந்து மிரட்டுறீங்களா? வாங்குற சம்பளத்துக்குக் கொஞ்சமாவது உண்மையா இருங்க. செய்யலன்னு சொல்லிட்டு இருக்கேன், வேணும்னா இப்போ அவன்கிட்ட என்னைக் கூட்டிட்டு போங்க. உங்க முன்னாடியே அவனைக் கொன்னு போடுறேன். அப்போ உங்க கடமையைச் செய்யுங்க.” என்று ஆஷிக் எரிச்சலோடு கடுகடுக்க,
ஆஷிக்கின் அலட்சிய பேச்சு அதிகாரியின் கோபத்தைக் கிளறியது.
“விஷயம் என்னன்னு சொல்லிட்டேன், கொலை முயற்சி பண்ணினவன் உங்களைத்தான் சொல்றான். சமீரும் உங்க மேல தான் கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காரு. அரெஸ்ட் வாரண்ட் கையில இருக்கு. எது பேசணுமோ அதை ஸ்டேஷனுக்கு வந்து பேசுங்க. படிச்சவர்னு மரியாதையா நடத்தினது என் தப்பு…” என்றவர் ஆஷிக்கின் கையில் விலங்கு மாட்ட முயன்ற நேரம் அவரைக் குறுக்கிட்ட ஜியா,
“இல்லை, ஆஷிக்க எங்கையும் அழைச்சுட்டு போக முடியாது. அவன் எதுவும் பண்ணிருக்க மாட்டான்.” என்று பதற்றத்துடன் அந்த அதிகாரியிடம் பேச,
“மேடம் ப்ளீஸ்… எதுவா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்கோங்க.” என்றவர் ஜியா மற்றும் ஹாஜராவின் எதிர்ப்பை மீறி அவனது கரத்தில் விலங்கிட,
துடித்துப் போன ஜியா, ஆஷிக்கை பிடித்துக்கொண்டு கதற, “பயப்படாத ஜியா, எனக்கு ஒன்னும் இல்லை. போன வேகத்துல நான் வீட்டுக்கு வந்துருவேன். நீ தைரியமா இரு, அம்மா பார்த்துக்கோங்க. ரோஹித், ஆதர்ஷ்க்கு ஃபோன் பண்ணுங்க.” என்றவன், தன்னை விடமாட்டேன் என்று இறுக்கமாக பற்றிக்கொண்ட ஜியாவின் கரத்தை விலக்கி விட்டவாறு, இன்ஸ்பெக்டருடன் ஆஷிக்… ஆஷிக்… என்று கதறிய தன் மனைவியைப் பார்த்தவாறே தவிப்புடன் சென்றான்.
***
