காதல் 69

விஷயம் அறிந்த அஸாத் அலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொண்டு, “என்னய்யா எல்லாரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்கிட்ட வாங்குனதெல்லாம் மறந்துபோச்சா? எந்த வழி மறந்தாலும் வந்த வழி மறக்க கூடாது. நான் நினைச்சேன், ஒரே நாள்… உங்கள ரோட்டுக்குக் கொண்டு வர ரொம்ப நேரம் ஆகாது. 

அந்த இன்ஸ்பெக்டர் சொல்ல சொல்ல கேக்காம, என் பையனை அரெஸ்ட் பண்ணியே தீருவேன்னு ஒத்தக்கால்ல நின்னு அரெஸ்ட் பண்ணிட்டு போயிருக்கான்.” மிரட்டும் தோரணையில் அதிகாரத்தோடு அவர் பேச, தடுமாற்றத்தோடு எதிர்முனையில் இருந்த நபர்,

“அஸாத் சார், நாங்க அப்படி நினைப்போமா? பிரச்சனை கைய மீறி போகுது. எங்களுக்குத் தெரியுறதுக்கு முன்னாடி மீடியாக்கு வந்திருது. இப்போ கூட ஆஷிக்கை அரெஸ்ட் பண்ண சொல்லி ஸ்டேக்ஷன் முன்னாடி பெரிய போராட்டமே நடந்தது. சமாதானம் பண்ணி கூட்டத்தைக் கலைச்சுருக்கேன். 

இப்போ ஆஷிக்கை அரெஸ்ட் பண்றது கூட எல்லாரையும் அமைதி படுத்தத்தான். சமீர் ஹாஸ்பிட்டல்ல இருக்கான், அதான் பிரச்சனை இவ்வளவு தூரம் வந்துட்டு. சமீர், ஆஷிக் மேல போட்ட கேஸ் ரொம்ப நாள் நிக்காது.”

“நாளா? இப்போ என் பையனை விடுன்னு சொல்லிட்டு இருக்கேன், என்ன கதை பேசிட்டு இருக்க?”

“அது முடியாது சார், இன்னும் ஒரு வாரத்துக்குக் கோர்ட் லீவ். கவர்ன்மென்ட் ஹாலிடே…” இயலாமையோடு கூறினார்.

“அப்போ என் பையன் ஒருவாரம் ஜெயில்ல இருக்கணுமா?” ஆக்ரோஷமாக கேட்டார். 

“சார், உங்க பையன் வீட்ல எப்படி இருப்பானோ அதே மாதிரி ராஜ மரியாதையோடு இருப்பான், நான் உங்களுக்கு வாக்கு குடுக்குறேன். இந்த அரெஸ்ட் எல்லாம் எல்லாரோட பார்வைக்குத் தான். பிரச்சனை மீடியா, பப்ளிக்னு போகுது, அதனால தான் என்னால எதுவும் பண்ண முடியலை. என்னை நம்புங்க, அவனை நான் பார்த்துக்கறேன்.”

“நீ சொன்னதை மீறி எதாவது நடந்தது…” மீண்டும் எச்சரித்தார். 

“நடக்காது!” உறுதியோடு வெளிப்பட்ட குரலில் நம்பிக்கையுற்ற அஸாத், 

“போலீஸ் ஜீப்ல என் பையனை கூட்டிட்டு போயிருக்கான், அந்த இன்ஸ்பெக்டர் அவன் யாரு?”

“வேலைக்குப் புதுசு, அதான் அவனுக்கு உங்களைப் பத்தி தெரியாது. நான் வார்ன் பண்ணிட்டேன்.”

“நான் அங்க வரும்பொழுது அந்த இன்ஸ்பெக்டர் அங்க இருக்கக் கூடாது.” கண்டிப்புடன் கூற, 

“இருக்க மாட்டாரு, நீங்க வாங்க நாம பேசிக்கலாம்.” என்றவரிடம், தான் உடனே வருவதாகக் கூறிவிட்டு தன் அழைப்பைத் துண்டித்தார். 

கவலையோடு தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹாஜராவிடம், “ஜியா எங்க?”

“ஆயிஷா கூட இருக்கா.”

“சமீர் இவனைக் கரெக்டா ட்ரிகர் பண்ணி, நேரம் பார்த்து பிளே பண்றான். நேத்து காலையில கோர்ட்ல ஆஷிக், சமீர பார்த்து, ‘உன் சாவு என் கையில தான்னு’ சொன்னதை எப்படித் தனக்குச் சாதகமா எப்படிப் பயன்படுத்திருக்கான் பாரு?”

“என்னங்க ஆகும், எனக்குப் பயமா இருக்கு. ஆஷிக்கை நீங்க கூட்டிட்டு வந்திருவீங்கல்ல?”

“இல்லை…”

“ஏங்க? அந்த ஆள விசாரிச்சா ஆஷிக் மேல தப்பில்லை, சமீர் தான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரிஞ்சிரும்ல?”

“போலீஸ் எவ்வளவு அடிச்சாலும் ஆஷிக்கோட பேரை சொல்லணும்னு தான் சமீர் அந்த ஆளுக்குக் காசே குடுத்திருப்பான். இப்படி கூலிக்கு வேலை செய்றவனுக்கு ஜெயில் அடி எல்லாம் புதுசா? அந்த ஆள விசாரிக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது. 

ஒரு இன்ஜெக்ஷன் போட்டா போதும், எவ்வளவு அடிச்சு சித்திரவதை செஞ்சாலும் அசராம உக்கார்ந்துட்டு இருப்பானுங்க. சமீரோட டார்கெட் ஆஷிக் இல்லை, ஜியாதான். ஆஷிக் ஜெயிலுக்குப் போய்ட்டா அதிகமா கஷ்ட்டபடப் போறது ஜியா தானே அதான். 

எங்க நாம பெயில் வாங்கிருவோம்னு சரியா காத்திருந்து கோர்ட் வேலை செய்யாத நாளா பார்த்து, அதுவும் ஜியா கேஸ் அடுத்த வாரம் வர்ற நேரம் பார்த்து இப்படிப் பண்ணிருக்கான்.” என்று சமீரின் மனவோட்டத்தை அப்படியே கணித்துக் கூறினார். 

“எனக்குப் பயமா இருக்கு…”

“இதைத் தவிர வேற எதுவும் சொல்லிறாத…” கடுகடுத்தவர் பின்பு எதையோ யோசித்தவராய்,

“துவா செய், அதுதான் இப்போதைக்கு ஒரே வழி. ஆஷிக்குக்கு எதுவும் ஆகாது, யார்கிட்ட பேசணுமோ பேசிட்டேன். நான் அவனைத் தான் பார்க்க போறேன். நீ எதையும் நினைச்சு கவலைப்படாத.” என்றவர், ஆஷிக்கை காண ஸ்டேஷனுக்குச் சென்றார். 

போலீஸ் ஸ்டேஷனில் கமிஷ்னரின் அறையில் நின்று கொண்டிருந்த ஆஷிக்கிடம் ஆதர்ஷ், ரோஹித், அஸாத் மூவரும் மாறி மாறி கேள்விகேட்க, ஒருவித எரிச்சலுடன் தன் நெற்றியை நீவியபடி நின்றவன்,

தன்னையே ஊடுருவி பார்த்துக் கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரின் பார்வையை வைத்தே, அவர்களின் எண்ணத்தை உணர்ந்து,

“இவ்வளவு சொல்லிட்டேன், இன்னும் நீங்க நம்பலையா?” என்று தன் தலையில் கை வைத்தவாறு நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான். 

“ஐயோ! அப்படிப் பார்க்காதீங்க… நான் அவனை ஒன்னும் பண்ணலை…” என்று சிடுசிடுக்க,

“கோபப்படாத ஆஷிக், ராத்திரி கோபமா கிளம்பி போன. லேட்டா வந்த உன்னைக் காணும்னு நாங்க எல்லாரும் எப்படிப் பதறி போய்ட்டோம் தெரியுமா? எத்தனை தடவ ஃபோன் பண்ணிருப்போம்…” என்று ஆதர்ஷ் ஆதங்கப்பட, 

ஆஷிக்கிடம் அஸாத், “கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, யார்கிட்டயும் பப்ளிக்கா உன் கோபத்தைக் காட்டாத. உனக்கு எங்க அடிச்சா வலிக்கும்னு சமீர் நல்லா தெரிஞ்சி வச்சுருக்கான். உன்னை ப்ரோவோக் பண்ணி பண்ணி அவன் தன்னோட காரியத்தைச் சாதிச்சுக்கிட்டு இருக்கான். 

ஹேவ் சம் சென்ஸ்? உன்னைச் சுத்தி நடக்குற விஷயங்களைக் கண்ணைத் திறந்து பாரு. ஸோ, அவன் பேச்ச கேட்டு நீ டென்ஷன் ஆகாத. கொஞ்ச நாள் பல்ல கடிச்சுக்கிட்டு இரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்.” என்றவரிடம் ஒப்புதலாய் தலையை அசைத்தான். 

“வாயத் திறந்தும் கூடச் ‘சரி’ சொல்லலாம் ஆஷிக்…” அழுத்தமாய் கூறியவரிடம், 

“சரி, ஆனா…” என்று கோபத்தோடு தொடர்ந்தவனிடம்,

“ஆனான்னு சொன்னா சரின்னு சொல்றதுக்கு அர்த்தம் இல்லாம போயிரும் ஆஷிக். உன்னுடைய கோபம்தான் உன்னை இங்க நிக்க வச்சுருக்கு. உன் ஃபோனை எப்பவும் ஆன்லயே வச்சுக்கோ. சொன்னதை மறந்திராத…” என்று ஆஷிக்கிடம் அவர் பேசிக்கொண்டிருந்த நேரம் பார்த்து, ஆயிஷாவின் அழைப்பு வர அட்டென்ட் செய்த அஸாத், 

“என்னமா சரி, இதோ கொடுக்கிறேன்…” என்றவர் ஆஷிக்கிடம் அலைபேசியைக் குடுக்க, 

“என்னாச்சு ஆயிஷா? நீ பயப்படாத, நான் நல்லா இருக்கேன், ஜியா எப்படி இருக்கா?”

“நீ ஜியாகிட்ட பேசு, அழுதுட்டே இருக்கா… உன்னைப் பார்க்கணும்னு ஒரே கலாட்டா…” என்ற ஆயிஷா, ஜியாவிடம் அலைபேசியைக் கொடுக்க வேகமாக வாங்கியவள்,

ஆஷிக்கின் பெயரை உச்சரித்தவாறே ஏங்கி ஏங்கி அழ, ஆஷிக் மிகவும் சிரமப்பட்டுப் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அவளை அமைதி படுத்தினான். 

ஆஷிக்கின் கவலைகள் ஜியாவை சுற்றியே இருக்க, ஜியாவின் நிலைமையும் அப்படித்தான். தன்னால் தான் அவனுக்கு இந்த நிலைமை என்று எண்ணியவளின் உள்ளம் கனத்தது. 

நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தவளின் மனம், எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் தான் என்று, பழியைத் தன் மீது எடுத்துக்கொள்ள மிகவும் கலங்கினாள். 

அடி மீது அடி… நிமிர்ந்து நின்ற மறுகணமே விழும் ஒவ்வொரு அடியும், அவளை மேலும் மேலும் நிலை குலைய செய்தது. கண்ணீர் விடாமல் கசிய, துடைக்கும் கரங்கள் தன் அருகில் இல்லை, கசந்தது நொடிகள். 

தன்னால்… தனக்காக… தன்னவன் இன்று ஜெயிலில் இருக்கிறான். குற்ற உணர்வுகள் காயப்பட்ட நெஞ்சை மீண்டும் குத்தி கிழித்தது. இதயத்தோடு சேர்த்து கண்களும் கசிந்தது. அந்த இரவு, அதே கொடிய இரவு, நஞ்சு கொடிபோல மீண்டும் அவளது கழுத்தை இறுக்கி சுற்றிக் கொண்டது. அன்று அனுபவித்த ஒவ்வொரு ரண வேதனையும் கண் முன்னே தோன்ற, மூச்சு முட்டியது. கண்களை மிகவும் இறுக்கமாக மூடிக்கொண்டாள். 

தேகம் முழுவதும் வியர்வையால் நனைந்தது. விழிகள் மூடிய பின்பும் கூட அவளால் அதை எண்ணாமல் இருக்க முடியவில்லை. தன்னை அணுஅணுவாய் சிதைத்த ஒவ்வொரு நொடியையும் நினைத்து நினைத்து கதறி துடித்தாள். முழங்காலில் முகத்தைப் புதைத்தவாறு அழுதாள். 

குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக வலம் வருகிறார்கள், பாவம் அறியாத தான் மட்டும் பழியோடு மூலையில் முடங்கிக் கிடப்பதை எண்ணி கோபம் கொண்டாள். அப்படி என்றால் குற்றம் செய்தவனுக்குத் தண்டனையே கிடையாதா? உள்ளம் குமுறியது. தன்னை அவர்கள் வஞ்சகமாய் ஏமாற்றிய ஒவ்வொரு சம்பவத்தையும் எண்ணி பார்த்தாள். ரத்தம் உலையென கொதித்தது. 

அக்கயவர்களது எக்காள சிரிப்பும் ஏளன பார்வையும் ஆத்திரத்தைக் கூட்டியது. 

‘சட்டமும் நீதியும் ஊனமாகி போனால், நான் ஏன் முடங்கிக்கிடக்க வேண்டும்?

பாவத்தை ஏன் நான் சுமக்க வேண்டும்? அப்பாவிக்கு நீதி வழங்க இயலாத சட்டம் சுமக்கட்டும்!

பழியை ஏன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்?’ கேட்டது மனம்! “நான் கதறும் பொழுது உறங்கிக்கொண்டிருந்த இந்தச் சட்டம் சுமக்கட்டும்.” என்றாள் கோபம் விழிகளில் திமிர. 

“ஆண்மையே வன்மையை நீ மட்டும் தான் அறிவாயா என்ன? ஒரு ஆணுக்கு உயிர் கொடுக்கத் தெரிந்த பெண்ணுக்கு, உயிரை சிதைக்க எத்தனை நொடி எடுக்கும்? ரௌத்திரமாக வெளிவந்தது வார்த்தைகள்.

“வஞ்சகனே! உன்னை வஞ்சித்துத் தான் வதைக்க வேண்டும் என்றால், வஞ்சனை இல்லாமல் வதைக்க நான் தயார். கொடிய மிருகமே! உன்னைக் கொன்று தான் புதைக்கவேண்டும் என்றால் கொலை வெறியோடு கொன்று புதைக்கவும் நான் தயார். கதறி சிதறி அழிந்து போகத் தயாராய் இரு.” ஆக்ரோஷமாக முழங்கினாள். 

ஆனாலும் விழிநீர் தன் கன்னங்களை நனைக்க மறக்கவில்லை. கோபமும் ஆத்திரமும் திரண்டு வந்தாலும், ‘என்ன செய்யப் போகிறாய்?’ என்று மனம் கேள்வி கேட்க, பதில் இல்லை. 

தவறு செய்ய ஒருவரும் யோசிப்பது இல்லை, ஆனால் தண்டனை கொடுக்க எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கிறது? உள்ளம் கலங்கியது. மீண்டும் விழிகள் கசிய, இந்த முறை விழிகளைத் துடைத்தது இரு கரங்கள். ஆம்! தான் தேடிய அதே கரங்கள். 

நிமிர்ந்து பார்த்தாள், தன் முன்னே நின்று கொண்டிருந்த தன்னவனைப் பார்த்தவளின் உள்ளத்தில், ‘கனவோ…?’ என்கின்ற கேள்வி எழ, தன்னவனது மார்பை தொட்டு பார்த்தாள். அசையாமல் புன்னகைத்தான்.

இந்த முறை மறையவில்லை, கனவில்லை, நிஜம்தான்! விழிகள் மலர்ந்தது. வேகமாய் தன் கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள். குலுங்கி குலுங்கி அழுதாள், ஆதரவாய் சிகையைக் கோதினான். 

“நான்தான் வந்துட்டேன்ல, பாரு உன்னைப் பார்க்கணும்னு சொன்னேன், கமிஷ்னரே வீடு வர வந்து விட்டுட்டு போனாரு. விடியற்காலம் கிளம்புனா போதும்.”

“போகணுமா?” கவலையோடு கேட்டாள். 

“கொஞ்ச நாள்… இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. உனக்கு நியாயம் வாங்கித் தருவேன். யாரெல்லாம் உன்னைத் தப்பா பேசுனாங்களோ, அவங்க தலை குனிஞ்சு உன்கிட்ட மன்னிப்பு கேட்ப்பாங்க.” உறுதியாய் கூறினான். 

“நம்பிக்கையை இழந்துட்டேன் ஆஷிக்.”

“என்னை இழக்கலல?” இதைவிட அவளுக்கு வேறு என்ன வேண்டும்? மார்போடு சாய்ந்து கொண்டாள்! 

“எந்த நேரத்துலயும் நம்பிக்கையை விட்றாத, தைரியமா இரு. உனக்கு அநியாயம் நடந்திருக்கு, நீ கீழ விழுந்தாலும் முட்டி மோதி மேல வந்துதான் ஆகணும். யு ஹேவ் டு ஃபைட் யுவர் பேட்டில். இது உன்னோட யுத்தம்! நீதான் சண்டை போடணும். சண்டை போட சொல்லிதான் தர முடியும். உனக்கான சண்டைய நீதான் போடணும்.” என்று சோர்ந்து போன அவளது மனதைத் திடப்படுத்தினான். 

திடீரென்று ஆஷிக்கின் அலைபேசி சிணுங்கியது. அட்டென்ட் செய்தான், “என்னைத் தேடியா? ஓகே, நான் பார்த்துக்கிறேன்.” என்று ஆஷிக் தன் அழைப்பைத் துண்டித்தான். ஜியாவின் முகத்தில் தொனித்த கேள்வியை அறிந்துகொண்ட ஆஷிக் அலைபேசியில் நடந்த உரையாடலைப் பற்றிக் கூற, 

“ஏன், அவன் ஏன் உன்னைப் பார்க்க வந்திருக்கான், எனக்குப் பயமா இருக்கு.” பதறினாள், ஆறுதல் அளித்தான். 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!