காதல் 70

நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்க ஒருநாள் காலையில் டெல்லியில் ஆங்காங்கே, சமீரின் ஆதரவாளர்கள் சமீருக்காகக் கொந்தளிப்பில் இருந்தனர். அதில் இப்பொழுது புதிதாக மனித நேய உறுப்பினரும் சேர்ந்து, அமைதி ஊர்வலம் நடத்திக்கொண்டிருக்க, அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் நிருபரிடம்,

“சமீருக்கு நியாயம் கிடைக்கணும். அவர் அந்தப் பொண்ணை உண்மையா காதலிச்சுருக்காரு. தப்பு அந்தப் பொண்ணு மேல, ஆஷிக் சமீருக்கு சப்போர்ட் பண்றத விட்டுட்டு, அவரோடு மனைவிக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு. இப்போ கொலை முயற்சி வர போயிருக்காரு. இதுக்கு அவருக்குத் தண்டனை கிடைச்சே ஆகணும். 

சமீர் மாதிரி எத்தனையோ ஆம்பளைங்க ஜியா மாதிரி பொண்ணுங்களால ஏமாந்துட்டு தான் இருக்காங்க. இப்போலாம் பெண்களுக்கு எதிரா நடக்கிற குற்றங்களை விட, ஆண்களுக்கு எதிரா நடக்கிற குற்றம்தான் அதிகம். 

பாலியல் வன்முறைங்கிற ஒரு விஷயத்தை வச்சுட்டு, பெண்கள் இப்படி ஆண்கள் மேல பொய்யான குற்றத்தை சுமத்திட்டு இருக்காங்க. சமீர் உயிருக்கு எந்தப் பிரச்சனையும் வராது, நீதி ஜெயிக்கும். ஆண்களுக்கு எதிரா தவறான குற்றத்தை சுமத்தும் எல்லாப் பெண்களுக்கும் நிச்சயம் இது ஒரு பாடமா இருக்கும்.” இவ்வாறு அந்த இளைஞன் அளித்த பேட்டி டிவி சேனலில் ஒளிபரப்பாக, அதைத் தனது ஹாஸ்பிடலில் தனக்கான ஸ்பெஷல் வார்டில் உள்ள பெட்டில், படுத்துக்கொண்டு கையில் மதுபானத்தோடு கால் மீது கால் போட்டவாறு சமீர் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். 

“சான்ஸே இல்லைடா, எப்படிடா!? பக்கா பிளான் பண்ணி ஆஷிக்கை உள்ள தள்ளிட்ட! அன்னைக்குக் கோர்ட்ல ஜியா கேட்ட கேள்வில என்ன ஆகுமோன்னு பயந்துட்டே இருந்தேன். இப்போ நாம தான் ஜெயிக்கப் போறோம்னு எனக்கு முழு நம்பிக்கை வந்துருச்சு.” என்ற வருணைத் தொடர்ந்து, 

ஜீவா, “நான் நாம மாட்டிக்கப் போறோம்னு நினைச்சேன், ஆனா சரியான நேரத்துல சரியா பிளான் பண்ணி எங்க எல்லாரையும் காப்பாத்திட்ட. அவ மாளவிகா கேஸ் பத்தி கோர்ட்ல வாயத் திறப்பானு நான் நினைச்சு கூடப் பார்க்கல. 

அது மட்டும் வெளிய தெரிஞ்சுது அவ்வளவு தான்! நம்ம ப்ரொஃபஷனே போய்டும். இன்னைக்கு ஆஷிக் ஒழிகனு சொல்றவங்க, உண்மை தெரிஞ்சா நம்மள கொன்னு கூடப் போட்ருவாங்க.” என்ற ஜீவாவைப் பார்த்து சமீர் தன் அருகில் வருமாறு செய்கை செய்ய, 

“என்னடா?” என்றவாறு அவனது அருகில் வந்த ஜீவாவின் முகத்தில், தன் கரத்தில் இருந்த மதுபானத்தைச் சமீர் ஊற்றினான். 

“முட்டாள்! இது எல்லாத்துக்கும் காரணமே நீதான்! உன்னால எல்லாரும் மாட்ட பார்த்தோம். எனக்குத் தெரியாம ஜியாவை வீட்டுக்கு வர வச்சுருக்க. இதுக்கே உன் கழுத்தை நான் நெரிச்சுருக்கணும்.” என்று கத்திய சமீர், வருணையும் ஜீவாவையும் பார்த்து,

“கேஸ் முடியிற வரைக்கும் உங்க சைட்ல இருந்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது. அந்த ஆஷிக் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான். இந்நேரம் கண்டிப்பா ஏதாவது யோசிச்சுட்டு இருப்பான். சுஜித் என்கூடத் தான் இருக்கான், ஸோ அவனால எனக்குப் பிரச்சனை இல்லை. நீங்க ஏதாவது…” என்பதற்குள்,

“உன்னை மீறி நாங்க எதுவும் பண்ண மாட்டோம்.” என்று இருவரும் பதற்றத்துடன் கூற, 

சமீர், ஜீவாவிடம், “ஜீவா உனக்கு முதல்ல சொன்னது தான், இப்பவும் என்னை மீறி தனியா ஏதாவது கேம் ஆடணும்னு நினைச்ச… அப்புறம் எல்லாரும் உன்னை நினைக்கிற மாதிரி ஆகிரும்!” என்றவனிடம் மறுப்பாக ஜீவா தன் தலையை அசைக்க, 

அப்பொழுது ஹாஸ்பிடலுக்கு சமீரின் உடல்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள வந்த சில நிருபர்களிடம், “சமீர் உடல்நிலை இன்னும் மோசமாதான் இருக்கு. கத்திக்குத்து ஆழமா இருக்கு. இப்போதைக்கு என்னால எதுவும் சொல்ல முடியாது. ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு.” என்று சுஜித் அளித்த பேட்டியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

“சுஜித் செமையா நடிக்கிறான்ல?” என்று சமீர் வாய்விட்டு சிரிக்க, அந்த நேரம் பார்த்து கதவை வேகமாகத் திறந்து கொண்டு வந்த சுஜித், அனைவரையும் பார்த்து முறைத்தவாறு வந்து அமர, அவனது கோபத்திற்கான காரணத்தை அறிந்த சமீர்,

“டேய் இன்னும் ரெண்டு நாள் தானே? இந்தக் கேஸ் முடிஞ்ச அடுத்த நிமிஷம் நான் யாரையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், ஜியாவையும் தான்…” என்று சுஜித்திடம் கூறியவன்,

‘எப்படி என்னால எல்லாத்தையும் விட முடியும்? கேஸ் முடியட்டும் ஆஷிக், ஆதர்ஷ், ரோஹித் இப்படி என் மேல கை வச்ச யாரையும் விட மாட்டேன். ஆஷிக்குக்கு இப்போ கொடுத்ததை விட அதிகமான தண்டனைய நான் குடுப்பேன். அவன் துடிப்பான். துடிக்கணும்…’ என்று மனதிற்குள் எண்ணியவனின் இதழ்கள் விஷமித்தது. 

அனைவரையும் பழிவாங்கவேண்டும் என்று எண்ணிய சமீர், தான் மூட்டிய நெருப்பே தன்னைப் பலியாக்க போகும் என்பதை அறியவில்லை!

ஊரே உறங்கிருக்கும் இரவு வேளையில் டெல்லியில் உள்ள, ‘நைட் கிளப்’ மட்டும் மது, மாது, ஆட்டம், பாட்டம் என்று கலை கட்டியது. 

அந்தக் கேளிக்கை விடுதியில் பலவிதமான மதுபானத்திற்கும் அழகான பெண்களுக்கும் பஞ்சமே இல்லை. மதுபானத்தைத் தேவைக்கு மீறி தன் வாயில் சரித்த ஜீவாவும் வருணும் வேறொரு உலகத்தில் தத்தளித்தனர். 

அவர்களைப் போலத்தான் அங்கு இருந்தவர்களும்… ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவரும் போதையில் மிதந்து கொண்டிருந்தனர். இப்படி அனைவரது விழிகளும் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க, 

இரண்டு விழிகளில் மட்டும் அனல் வீசியது. அதையெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் ஏது? அங்கே அலைமோதிய அழகிகளிடம் பணத்தை இறைத்துவிட்டு, தங்களின் ஆசை தீர பாதி இரவை இன்பமாய் கழித்தனர் இருவரும். மூச்சு முட்ட குடித்துவிட்டு அரை போதையுடன் வெளியேறினர். 

மிதந்து கொண்டிருந்த விழிகளால் அரைகுறையாகப் பார்த்தபடி காரை ஒட்டி சென்றனர். கேளிக்கை விடுதி ஊருக்கு சற்று ஒதுக்கப்புறமாக இருப்பதால், விடுதியில் இருந்து நகருக்குள் வருவதற்கு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத, ஹைவேஸை கடந்துதான் வரவேண்டும். 

அந்த ஹைவே சுற்றி காட்டுப்பகுதி என்பதாலும், அங்கே அடிக்கடி வழிப்பறி நடப்பதாலும், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அங்கே ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. எனவே அந்தச் சாலையில் வரும் வண்டிகள் அனைத்தும் எண்பது, தொண்ணூறில் பறக்கும். 

ஏற்கனவே போதையில் வேறு இருந்ததால், வருண் ஓட்டிச்சென்ற கார் ஹைவேயில் அதிவேகத்தில் பறந்தது. ஜீவாவும் வருணும் “ஓ… ஊ…” என்று போதையில் கத்தியபடியே பயணித்தனர். அதீத மகிழ்ச்சியில் தத்தளித்த இருவரும், தங்களை நிழல் போலத் தொடர்ந்த, தங்களின் காரின் பின் சீட்டில் இருந்த அழையா விருந்தாளியைக் கவனிக்க மறந்துவிட்டனர். 

சாலையின் ஓரமாகத் தன் விழிகளை மட்டும் காட்டியபடி புர்க்கா அணிந்து கொண்டு, கையசைத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்த மறுநொடி, அதீவேகமாகப் பறந்த வருணின் கார் சடன் பிரேக் அடித்து ஓரடி தள்ளி சென்று நின்றது. 

“ஏன்டா நிப்பாட்டிட்ட?” போதையில் உளறினான் ஜீவா. 

“ஒரு பொண்ணு லிஃப்ட் கேக்குறாடா…” அரைப் போதையிலும் விரிந்தது வருணின் போதை மிதக்கும் விழிகள். 

பெண் என்றால் பேயே இறங்கும். அப்படி இருக்க இந்த சதை வெறியர்கள் எம்மாத்திரம்? அருவெறுப்பான சிரிப்போடு காரை ரிவர்ஸில் கொண்டு சென்றனர். 

விஷத்தைக் கக்கியது அந்தப் பெண்ணின் விழிகள். தங்களின் எதிரில் நிற்பது தங்களின் உயிரைக் குடிக்க வந்த காலன் என்பதை அறியாது, காம பார்வை வீசினர் அந்த அறிவற்ற கயவர்கள். 

உயிரைக் குடிக்கும் வெறியோடு ஊடுருவி பார்த்தபடி, தன் முகத்திரையை விலக்கினாள் அந்தப் பெண். 

பார்த்த நொடியே பொறி கலங்கியது. நெஞ்சில் இருந்து எழுந்து வந்த பயம் தொண்டையை அடைத்தது. உடல் விறைத்து போக அமர்ந்திருந்தனர். 

ஸ்பெஷல் வார்டில் சமீர், மதுபானத்தைத் தன் வாயில் சரித்தவாறே சுஜித்திடம், “என்னடா ஜீவாவையும் வருணையும் இன்னும் காணும்?”

“நல்லா குடிச்சுருப்பானுங்க, அங்கிருந்து கிளம்புனானுங்களானே டவுட்தான்!”

“ஃபோன்க்கு ட்ரை பண்ணி பார்த்தியா?”

“ரிங் போகுது, அட்டென்ட் பண்ணல.”

“ஓ வருவானுங்க… ஆமா காலையில அப்பா வந்தாரே, எதாவது கேட்டாரா? நம்பியிருக்க மாட்டாரே?”

“இல்லை, சமாளிச்சுட்டேன். அம்மாவும் தாஹிராவும் தான் ரொம்ப அழுதாங்க.”

“ம்ம்ம்… பார்க்கணும்னு சொன்னாலும் உள்ள விட்றாத, எல்லாம் கெட்டு போயிரும்.” என்றவன், “நீ ட்ரிங்க்ஸ் சாப்பிடலல?” என்று கேட்க,

“இல்லை, வேண்டாம்…” என்றவனைப் பார்த்து தன் புருவம் உயர்த்தியவாறே மதுபானத்தைத் தன் வாயில் சரித்தான். 

தன் அலைபேசி சிணுங்கியதும் சுஜித், “வீட்ல இருந்து ஃபோன், பேசிட்டு வரேன்.” என்று வெளியே செல்ல, 

கையில் மதுபானத்தோடு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமீர் தன் அறையின் கதவு திறக்கப்பட்டதும். வெளியே பார்த்தவாறே,

“என்னடா, அதுக்குள்ள பேசிட்டியா என்ன?” என்று கேட்க, சுஜித்திடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவும், 

“கேட்டுட்டே இருக்கேன்…” என்று முழுப் பானத்தையும் தன் வாயில் சரித்தவாறு திரும்பிய சமீர், 

“ஆ… ஷி… க்… நீ எப்படி இங்க…?” என்று அதிர்ந்த மறுநொடி, 

ஜியா தன் கையில் இருந்த இரும்பு கம்பியால் ஓங்கி தலையில் அடிக்கவும், ரத்தம் வழிந்தோட சமீர் கீழே விழுந்தான். தலையே சுற்றியது. போதையின் காரணமாய் உடல் எழுந்து நிற்க மறுத்தது. மலங்க மலங்க விழித்தான்.

“என்ன சமீர், ஷாக் ஆயிட்டியா? நான் எப்படி இங்கனு யோசிக்கிறியா? நான் நினைச்சா நினைச்ச நேரம் எங்க வேணும்னாலும் போகலாம். ரொம்ப போர் அடிச்சது, அதான் நானும் ஜியாவும் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்துட்டோம்.” என்று விஷமமாய் சிரித்தவாறு ஆஷிக் அவனது அருகில் வந்து அமர்ந்தான். 

தன் தலையைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற சமீர், ஆஷிக்கைத் தாக்க முற்பட, 

அவனது முதுகெலும்பில் ஜியா ஓங்கி அடித்தாள். “ஆ…” என்றவாறு ஜியாவை முறைத்து பார்த்தவன்,

“ஹவ் டேர் யு…!?” என்று அரட்டியவாறு அவளது கழுத்தை நெறிக்க முயல, அவளது கரத்தில் இருந்த இரும்புகம்பி அவனது மணிக்கட்டைத் தாக்கியது. “ஆ…” என்று உதறி துடித்தவனை, இமைத்து பார்க்கும் நொடியில் பலமுறை தன் முழுபலத்தால் ஓங்கி ஓங்கி குருதி தன் முகத்தில் தெறிக்க அடித்தாள். 

“சுஜித்… ஜீவா…” என்று அலறினான். “ஹா… ஹா… இன்னும் சத்தமா…” எக்காளத்தோடு சிரித்தாள். 

அன்று தான் அடித்த ஒரே அடியில் நொறுங்கி கிடந்தவளா இவள்? என்று எண்ணியவன், அந்த நேரத்திலும் வியப்புடன் பார்த்தான். “என்னடா ஒரு மூலையில முடங்கிப் போய்க் கிடப்பேன்னு நினைச்சியா?” என்றவாறே மீண்டும் தாக்கினாள். 

மீண்டும், “சுஜித்… ஜீவா… வருண்…” என்று தன் தொண்டை கிழிய அலறினான். 

ஆஷிக்கும் ஜியாவும் ஏளனமாய் சிரித்தனர். கேள்வியாய் பார்த்தான்.

அவனைப் பார்த்து சிரித்தவாறே, ஜீவாவும் வருணும் தன் கண் முன்னே துடி துடித்து மாண்டு போனதை எண்ணினாள். 

காரில் உடல் விறைத்துப் போய் அமர்ந்திருந்த இருவரும், “ஜி… யா…” என்று உளறியபடி காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க, ஜியா சாவியைத் தன் வசம் ஆக்கினாள். அவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினார்கள். ஆனால் அவர்கள் தப்பிப்பதற்குள், 

பின் சீட்டில் இருந்த ஆஷிக் வேகமாக வெளியே வந்து, தன் இரு வலிய கரங்களால் அவர்களின் கழுத்தை மிகவும் அழுத்தமாக இறுக்கி பிடித்தான். 

உயிர் பயத்தால் அரைப் போதையிலும் போராடினார்கள். ஆஷிக்கின் தீராத வெறியோடு அவர்களால் போட்டியிட முடியவில்லை. 

விட்டு விடும்படி கெஞ்சினார்கள், அவன் காதில் விழவில்லை.  பழிவாங்கும் உணர்ச்சி கண்களில் தொனிக்க, ஜியா கோபமாக அவர்களைப் பார்த்தாள். பார்வையில் அனல் தெறித்தது. 

“ப்ளீஸ் ஜியா, நான் உன்னை என்ன பண்ணினேன்?” முடிந்த வரை மிஞ்சிய வருண் இறுதியில் கெஞ்சினான். 

“சமீர் சொல்லிதான் நான் உன்னை மிரட்டுனேன், ப்ளீஸ்…” ஜீவா தன் பங்கிற்குக் கெஞ்சினான்.

அவர்கள் கெஞ்ச கெஞ்ச ஆஷிக்கின் இறுக்கம் இன்னும் அதிகமானது, இருவருக்கும் மூச்சு முட்டியது. 

“நானும் இதே மாதிரி துடிச்சேனே… அப்போ எங்க போன வருண்?” என்றவள், “உன்னைப் பார்த்தாலே எனக்கு அருவெறுப்பா இருக்கு. தேவைப்பட்டா கால்ல கூட விழுவல? ‘அதான் எல்லாம் முடிச்சுட்டியே… இன்னும் ஏன் விட்டு வச்சுருக்க?’ கேட்டுச்சு ஜீவா. ஒவ்வொரு தடவையும் நீ என்னைப் பார்க்கும் பொழுது அப்படியே ஆசிட் ஊத்தின மாதிரி என் உடம்பெல்லாம் எரியும். நீ என்கிட்ட பேசும் பொழுது உடம்பெல்லாம் கூசும்.” முகத்தைச் சுளித்தபடி வெளிப்பட்டது வார்த்தைகள்.

“மன்னிச்சுரு ஜியா…” என்று இருவரும் மூச்சு விட சிரமப்பட்டவாறே கெஞ்ச, அவர்களைத் தன் ஆத்திரம் தீரும் வரை ஆஷிக் அடித்தான். 

“ஒரு பொண்ணுக்குக் கொடுமை நடக்கும் பொழுது கைக்கட்டி வேடிக்கை பார்க்கிற எந்த உயிருக்கும், இந்த உலகத்துல வாழறதுக்குத் தகுதியே கிடையாது.” முகத்தில் கோபம் தெறிக்க அவர்களைப் பார்க்க, 

இமைக்கும் நொடியில் ஆஷிக் இருவரது கழுத்தையும் ஒரே நொடியில் கீறினான். ஜியாவின் முகத்தில் குருதி தெறிக்க, ரத்த வெள்ளத்தில் தரையில் வீழ்ந்தவர்கள் துடிதுடித்து இறந்து போனார்கள். 

நினைவில் இருந்து திரும்பியவள், அடங்காத ஆத்திரம் தன் நெஞ்சை அடைக்க சமீரைப் பார்த்து,

“ஜீவாவும் வருணும் செத்து போய்ட்டாங்க. என் முன்னாடிதான் துடிதுடிச்சு செத்து போனாங்க.” என்று மிக இயல்பாகப் புன்னகையோடு கூற, சமீரின் முகத்தில் ஒருவித பயம் தொத்திக்கொண்டது. 

தரையில் இருந்து எழும்ப முயற்சித்த சமீரை மீண்டும் தலையில் ஓங்கி தாக்கினாள். 

கண்கள் சொருக தரையில் சரிந்தான். அவனது தலை மயிர்கால்களை இறுக்கமாகப் பற்றியவள், 

“உன்னைக் கொலை பண்ண மாட்டேன், ஆனா சாவ விடக் கொடூரமான தண்டனைய நான் உனக்குக் கொடுப்பேன்.” என்றவள் தன் மென் கரங்களால் வன்மையோடு அவனது கன்னத்தில், தன் ஐவிரலின் தடம் பதித்தாள். 

சுமார் இரண்டு மணிநேரம் கழித்துத் தன் கைகளும் கால்களும் கட்டிலில் பிணைக்கப் பட்டிருக்க, மூட துடித்த விழிகளைத் தட்டி தட்டி பார்த்தபடி விழித்த சமீருக்கு, 

ஒருவித சொல்ல முடியாத வலி, தன் எலும்புகளைத் துளைத்துக் கொண்டு செல்வது போல உணர்ந்தான். 

ஆனாலும் முழுமையாக விழித்துப் பார்க்க முடியவில்லை. நொடிகள் நகர நகர வலி உயிர் போனது. தன் நிலையை எண்ணி வான் பிளக்க கதறினான். அவனது கதறலில் அறையே அலறியது. கைகளையும் கால்களையும் அசைக்க முடியவில்லை. மிகவும் மோசமான வலி. வலியில் துடித்தவனைப் பார்த்து புன்னகைத்தவாறே நெருங்கி வந்த ஜியா, 

“ஆம்பளைன்னு சொன்னல, இப்போ நீ யாரு?” செருப்பால் அடித்தது போல அவள் கேட்ட கேள்வியில் கூனி குறுகினான். கண்ணீர் விழிகளில் வழிந்தது. 

“சதை வெறி புடிச்சவனே! ஒவ்வொரு நொடியும் நீ அணுஅணுவா துடிச்சு துடிச்சு சாகணும். இன்னும் நல்லா கத்து, அலறு…” என்றவள் அவன் அணுஅணுவாய் துடித்துக் கதறுவதைத் தன் காது குளிர கேட்டாள். 

அலறி துடித்தான் தாடைகளும் வாயும் கிழிந்து விடுவது போலக் கதறினான். அவனது கதறல்கள் எல்லாம் அவளது காதில் இன்ப கானமாய் ஒலித்தது. 

சமீரின் அருகில் சென்றவள் அவனது தலை முடியை இறுக்கப் பற்றி இழுத்தவாறு, “செத்து போகணும் போல இருக்கா?” என்றாள். 

வாயில் வார்த்தைகள் இல்லை, தலையை வேகமாக ஆட்டினான். அசட்டையாகச் சிரித்தவள்,

“நீ சாகக் கூடாது… நான் துடிச்சேன்ல? நீயும் துடிக்கணும். உனக்கும் வலிக்கணும். ஆனா நீ கத்த கூடாது. உன்னை எல்லாரும் அசிங்கப்படுத்தணும், ஆனா நீ சிலை மாதிரி உணர்ச்சி இல்லாம கிடக்கணும். நான் இருந்தனே, அதே மாதிரி…” என்றவள் மேலும் தொடர்ந்து, 

“உனக்குப் புதுப் புது மருந்த டெஸ்ட் பண்றதுன்னா ரொம்பப் புடிக்கும்ல…?” என்று விஷமமாய் சிரித்தவாறு, அவன் சுதாரிப்பதற்குள் அவனது நரம்பில் அவன் கதற கதற மயக்க ஊசியைச் செலுத்தினாள். 

நிமிடங்கள் கழிந்த நிலையில் உடல் விறைக்க, கண்களில் நீர்வழிய உணர்ச்சியற்ற பிணம் போலக் கிடந்தான். 

“என் மேனியில் அத்துமீறி

இச்சையோடு எச்சில் வடித்து

மிச்சம் இன்றி என்னை உண்டு

நான் ஆண் என்று மாரு தட்டிய

இரண்டு கால் மிருகமே கேள், 

பல ஆண்களோடு உறவாடும் பெண்

விலைமகள் என்றால்,

உன் விரகப் பசிக்கு என்னை இரையாக்கிய

நீயும் ஒரு விலைமகன் தான்!

பெண்மையை வன்மையாய் சிதைப்பதல்ல ஆண்மை,

பெண்மையை மென்மையாய் மதிப்பதே ஆண்மை.

அன்று என் ஊன் குடித்த அட்டை பூச்சியே!

இன்று நடைபிணமாய் கிடப்பதேன்? 

அன்று மாரு தட்டிய உன் ஆண்மை

இன்று வீணாய் போனதேன்? 

என் சதையைச் சிதைத்தால் சிதைந்து போவேன் என்று நினைத்தாயோ?

உன்னை வதைத்து புதைக்க வந்த வேள்வியடா நான்! 

ஆண்களே! பெண்களின் கருவறை ஒன்றும் நீங்கள்

வந்து வந்து போகும் கழிப்பறை இல்லை.

கொண்டவனாயினும் அனுமதி இன்றி நுழைந்தால் அவனது ஆண்மையை வெறுமையாக்கும் சக்தி பெண்ணுக்கு உண்டு.”

என்று அவளது தனல் விழிகள் நெருப்பைத் தெறித்து, கொழுந்து விட்டெறிந்த தன் வேதனை தீக்கு அவனது கதறலை பலி கொடுத்து குளிர்வித்தவாறு ஆஷிக்குடன் ஜியா அங்கிருந்து சென்றாள். 

அவர்களை எதிர்கொண்ட சுஜித், “இந்த வழியா வேண்டாம், பின் கேட் வழியா போயிருங்க.” என்று கூறிவிட்டுத் தன்னை வெறித்துப் பார்த்த ஜியாவிடம்,

“நானும் நல்லவன் இல்லைதான், ஆனா சத்தியமா உனக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல. முடிஞ்சா என்னை மன்னிச்சுரு…” என்று சொல்லி கூனி குறுகி நின்றவனைப் பார்த்து,

“எல்லாத் தப்புக்கும் மன்னிப்புக் கிடையாது சுஜித். கருவறையில இருக்கிற குழந்தையை அணுஅணுவா கொன்னுருக்க. மூச்சு முட்டி அது சாகும் பொழுது அவ்வளவு கதறிருக்கும். இப்போ நீ தப்ப ஒத்துக்கிட்டு எனக்கு உதவி பண்ணலாம். ஆனா இதை நீ அன்னைக்கே பண்ணிருந்தனா ஒரு கரு கலைஞ்சிருக்காது, ஒரு தாய் செத்திருக்க மாட்டா. நான் இப்படி…” என்று கூறும் பொழுதே ஜியாவின் தொண்டை அடைத்துக் கொள்ள, விழிகள் கலங்கியவள் மேலும் எதையும் பேசாது ஆஷிக்குடன் அங்கிருந்து சென்றாள். 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!