காதல் 8

காலை பொழுது நன்றாய் விடிந்திருக்க, டெல்லி விமான நிலையம் வழக்கம் போல மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

ஏர்போர்ட்டின் கேன்டீனில் சில ஆண் பைலட்கள் மற்றும் அவர்களோடு சில ஏர்ஹோஸ்டர்ஸ்களும் அமர்ந்து காலை உணவை அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருக்க, ஆஷிக், தியா இருவரும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டனர். 

ஆஷிக் வழக்கம் போலக் கலாட்டாவாகப் பேச அனைவரும் சிரித்தனர். அப்பொழுது அவர்களுள் ஒருவனின் பார்வை மட்டும் வேறெங்கோ இருக்க, அவனது பார்வை சென்ற இடத்திற்கே தன் பார்வையையும் சுழல விட்டவனின் கண்களில், ஜியா தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறே உள்ளே வருவது தெரிந்தது. 

மில்க் ஷேக்கை அருந்தியவாறே ஆஷிக் அவனிடம், “என்னடா சேனலை மாத்திட்ட போல?” என்று கேட்க,

சட்டென்று திரும்பியவன் பதற்றத்தோடு, “என்னடா ஆஷிக்?” என்று வினவ,

“இல்ல ரொம்ப நேரமா அவளையே பார்த்துட்டு இருக்கியே, அதான் கேர்ள் ஃப்ரெண்ட மாத்திட்டியானு கேட்டேன்.”

“அதெல்லாம் இல்லடா, சும்மாதான் பார்த்தேன். இவ எல்லாம் நம்ம டைப் கிடையாது. அன்னைக்கு நான் கொஞ்சம் சிரிச்சு பேசுனதுக்கே எரிக்கிற மாதிரி பார்த்தா. ஆனாலும் என்னடா பண்ண, பார்க்காம இருக்க முடியல. அழகா, ஹாட்டா இருக்காளே… கமிட் ஆகிருப்பானு நினைக்கிறேன்.” என்று கூற, 

தியா அவனிடம், “ஏய் இவ ஹாட்டா? இதுக்கு முன்னாடி நீ ஹாட்டான பொண்ணுங்களைப் பார்த்ததே இல்லையா? அவ சரியான நாட்டுப்புறம். ஒரு காலத்துல எப்படி இருந்தானு எனக்குத்தான் தெரியும், என்ன ஆஷிக் நான் சொல்றது?”

“ஹண்ட்ரட் ப்ரசண்ட் ட்ரு. இவளை எல்லாம் மனுஷன் பார்ப்பானா?” என்றவனின் கண்கள், அவளையே அங்குலம் அங்குலமாய் அளவெடுக்க, அதைக் கண்ட அந்த பைலட் ஒருமுறை ஆஷிக்கை ஏற இறங்க பார்த்துவிட்டு, 

“மனுஷன் பார்ப்பானானு சொல்லிட்டு, நீ அவளையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க?” என்று கூற,

தியாவோ ஆஷிக்கைப் பார்த்து முறைக்க, அங்கே இருந்து தப்பித்தால் போதும் என்று ஆஷிக், “நான் கிளம்புறேன், ஃப்ளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு.” என்று கூறிவிட்டு ஓடாத குறையாகச் சென்றான். 

ஃப்ளைட்டில் ஏறி காக்பிட்டுக்குள் வந்து அமர்ந்தவனைக் கண்டு ஆதர்ஷ் புன்னகைக்க, பதிலுக்குப் புன்னகைத்தவன் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து, “லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் திஸ் இஸ் கேப்டன் ஸ்பீக்கிங். யு ஆர் ஆன் தீ போர்ட் ஃப்ளைட் Cj 345 டெல்லி டு ஜெய்ப்பூர் வீ ஆர் ரெடி டு டேக் ஆப். சீட் பெல்ட்ஸ் சைன் ஆர் ஆன், நவ் வீ ரெக்யூஸ்ட் தட் யு கீப் யுவர் சீட் பெல்ட்ஸ் பாஸ்டென், சிட் பக் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய் தி ரெஸ்ட் ஆப் யுவர் ஃப்ளைட் தங்க் யு.” என்று ஃப்ளைட் கிளம்புவதற்கான அறிவிப்பை தன் பாணியில் பயணிகளுக்கு மிகவும் அழகாகக் கூறினான். 

அவனிடம் இருந்து அறிவிப்பு வந்ததும் விமானப் பணிப்பெண்கள் அனைவரும், பயணிகள் அனைவரையும் சீட்பெல்ட் அணிய வலியுறுத்திவிட்டு, தங்களின் இருக்கையில் சென்று அமர்ந்துகொள்ள, ஃப்ளைட் ரன்வேயில் இருந்து மேல்நோக்கி ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு பறந்தது. ஃப்ளையிட் ஒரு நிலையில் பறக்க தொடங்கியதும் வழக்கம் போல ஆஷிக்,

“குட் மார்னிங், ஐயம் யுவர் கேப்டன் ஆஷிக் அலாங் வித் கேப்டன் ஆதர்ஷ். வீ ஹோப் யு ஆர் ஹாவிங் பிளசண்ட் ஃப்ளைட், வீ ஆர் ஃப்ளையிங் இன் தீ அல்டியுட் ஆப் 37000 ஃபீட் அண்ட் வீ வில் ரீச் ஜெய்ப்பூர் இன் டூ ஹார்ஸ். 

சீட் பெல்ட்ஸ் சையின் ஹஸ் ஆஃப்ட் பை அஸ், ஸோ ஐ சஜஸ்ட் யு டு சிட் பக் ரிலாக்ஸ் அண்ட் எஞ்சாய் தி ஜர்னி அண்ட் வீ ஆல்ஸோ தாங்க் யு ஃபார் சூஸிங் ‘கோ ஆன் ஏர்'”

பயணிகளை சீட் பெல்ட்டை கழட்டிக் கொண்டு ஓய்வு எடுக்குமாறு அறிவிப்பு விடுத்தான். 

ஃப்ளைட்டில் பயணிகளுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு கொடுத்துக்கொண்டிருக்க, ஆதர்ஷும் ஆஷிக்கும் எப்பொழுதும் போலப் பேசிக்கொண்டாலும், அவர்களது கவனத்தைச் சிதறவிடாமல் விமானத்தைச் செலுத்தினார்கள். 

நேஹா வரிசையாகப் பயணிகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்க, அப்பொழுது வயது முதிர்ந்த பெண் ஒருவர் அவளிடம் தன் அருகில் வருமாறு கூற, அவள் தன் ட்ரேயில் உள்ள உணவு தீர்ந்து விட்டதாகவும் உணவு எடுத்துக்கொண்டு வருவதாகப் பதிலளிக்க, அதற்குள் அந்தப் பெண் நேஹாவைப் பார்த்து, 

“ஃப்ளைட்ல வேலை செய்யிற சாதாரணப் பொண்ணு நீ, உனக்கு அவ்வளவு திமிரா? ஃப்ளைட்ல ஏறி உட்கார்ந்ததுல இருந்து தண்ணி வேணும்னு கேட்டுகிட்டு இருக்கேன், ஒருத்தரும் ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்லை. வேலை செய்றீங்களா, இல்லை அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்களா? 

அது சரி, குட்டை ட்ரெஸ் போட்டுட்டு முகத்துக்கு மேக்கப் பண்ணவே உங்களுக்கு நேரம் பத்தாது, உங்க தொழிலை பத்தி தெரியாதா என்ன?” என்று அந்தப் பெண்மணி தன் வாய்க்கு வந்தது போல ஏதேதோ கூற,

பயணிகள் அனைவரும் நேஹாவை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர். மிகவும் சங்கடப்பட்ட நேஹா அந்தப் பெண்மனிக்கு குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு, “மேடம் உங்களுக்குத் தண்ணி வேணும்னா முதல்லயே சொல்லிருக்கலாமே?” என்று கேட்க,

“ம்ம் வேலைய பாரு… ***” என்று நேஹாவுக்கு மட்டும் கேட்குமாறு அந்தப் பெண்மணி தகாத வார்த்தையில் நேஹாவை திட்ட, தன் பொறுமையை இழந்த நேஹா அந்தப் பெண்மனியிடம் கத்தாமல், கோபத்தைத் தன் கண்களில் வைத்துக்கொண்டு மிகவும் அழுத்தமாக, 

“நீங்க இப்படிப் பேசி என்னை இல்லை உங்களை நீங்களே தாழ்த்திக்கிறீங்க. உங்களோட வார்த்தைகள்ல இருந்தே உங்களோட கேரக்டர் நல்லா தெரியுது.” என்று கூறிவிட்டு,

பின்பு மிகவும் இயல்புடன் கலந்த புன்னகையோடு, “உங்களுக்கு வேற எதாவது வேணும்னா என்னைக் கண்டிப்பா கூப்பிடுங்க.” என்று தன் வார்த்தையால் அந்தப் பெண்மனியை அறைந்துவிட்டு அங்கிருந்து செல்ல, அந்தப் பெண்மணி மற்ற பயணிகளைப் பார்க்க அவர்களது பார்வை எல்லாம் தன்னை மேலும் சாட்டையால் அடிப்பது போல இருக்க, தன் தவறை அறிந்து வெட்கத்தில் தலை குனிந்தார். 

நேஹா நடந்ததைத் தன் சக பணியாளர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது பார்த்துப் பிஸ்னஸ் க்ளாசில் இருந்து யாரோ கத்துவது போலச் சத்தம் கேட்க, எல்லா ஏர் ஹோஸ்டர்ஸும் அங்கே சென்று என்னவென்று பார்க்க, அங்கே நடாஷா எவ்வளவோ சமாதானம் செய்தும் ஜியா கேட்காமல் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபனின் சட்டையைப் பற்றிக்கொண்டு அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்து, 

“என்னடா பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா? எவ்வளவு தைரியம் இருந்தா அப்படிப் பேசுவ? பொண்ணுங்கனா என்ன வேணும்னாலும் பேசுவீங்க, அவங்க அமைதியா இருக்கணும் அப்படித் தானே? ஷார்ட் ட்ரெஸ் போட்டா அசிங்கமா பேசுவியா?

ஏர் ஹோஸ்டர்ஸ்னா உனக்கு அவ்வளவு எகத்தாளமா? கொஞ்சம் நேரம் கூட உட்காராம பன்னிரெண்டு மணிநேரம் கால் கடுக்க நின்னுகிட்டு, இதுக்கு இடையில உன்னை மாதிரி ஆளுங்க பண்ற வேலைய கோபம் வந்தாலும் சிரிச்சுட்டே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, அவங்க படுற கஷ்டம் எல்லாம் சொன்னா தெரியாது, அனுபவிச்சாதான் தெரியும். 

உன் அம்மாக்கும் தங்கச்சிக்கும் இருக்கிறதுதான் எங்களுக்கும் இருக்கு, உன் அம்மா, தங்கச்சிகிட்ட இப்படிப் பேசுவியாடா?” என்று ஜியா தன்னை மறந்து கோபமாக அவனைத் தன் வார்த்தையால் வதைத்துக் கொண்டிருக்க, நேஹா நிலைமை கையை மீறி போய்விடுமோ என்று பயந்து, கேப்டன்களுக்குத் தொடர்புகொள்ள, ஃபோனை அட்டென்ட் செய்த ஆதர்ஷ் உடனே வருவதாகக் கூறிவிட்டு சம்பவ இடத்துக்கு வரவும், 

நடாஷா சூழ்நிலையை ஒருவகையாகச் சாமாளித்து அந்த நபருக்கு வேறு இடம் மாற்றிக் கொடுத்து, ஜியாவை ஆசுவாசப்படுத்த ஜியாவுக்கோ கோபம் குறைந்தபாடில்லை, 

“ஜியா மேம், ப்ளீஸ் காம் டவுன்!”

“நடாஷா இவங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் நாம சும்மா விடக் கூடாது, நீ என்னை ஏன் சமாதானப்படுத்திட்டு இருக்க? அவனை…” என்றவளைத் தடுத்த நடாஷா,

“அவனுக்கு உரிய தண்டனை அவனுக்குக் கிடைக்கும், இதைப் பொறுமையா ஹேண்டில் பண்ணணும் மேம். நீங்க ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க, பிரச்சனைய என்கிட்ட விடுங்க. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்.” என்று கூறிக்கொண்டிருக்க, 

“என்ன பிரச்சனை?” என்றவாறு வந்த ஆதர்ஷிடம் நடாஷா, 

“கேப்டன் அது ஒன்னும் இல்லை, ஒரு பேசஞ்சர் என்கிட்ட தகராறு பண்ணினாரு, அதான் ஜியா மேடம் டென்ஷன் ஆகிட்டாங்க.”

“என்ன தகராறு?”

“இப்போ எதுவும் இல்லை சார், லெட் மீ ஹேண்டில் திஸ்.” என்று அவள் கூறவும், அவனால் வேற எதுவும் பேச முடியாமல் போக, 

“ஓகே” இதுக்கு மேல உன் இஷ்டம் என்பது போலத் தன் புருவத்தை உயர்த்திவிட்டு அங்கிருந்து சென்றான். 

காக்பிட்டுக்குள் வந்த ஆதர்ஷிடம் ஆஷிக், “என்னடா பிரச்சனை?” என்று கேட்க, அவன் நடாஷா கூறியதைக் கூற, 

“என்ன ஜியா டென்ஷன் ஆனாளா? யார் அவன்? நீ அவனை எதுவும் பண்ணாமலா விட்ட? நான் போய் என்னனு பார்த்துட்டு வரேன்.” என்று ஆஷிக் உணர்ச்சிவசப்பட,

அவனைத் தடுத்த ஆதர்ஷ், “டேய், போய் அவமானப்பட்டு வரப்போறியா? என்னனு கேட்டதுக்கு லெட் மீ ஹேண்டில் திஸ்னு நடுமண்டையில் ஆணி அடிச்ச மாதிரி அந்த நடாஷா சொன்னா. அதுக்கு ‘என் வேலைய நான் பார்த்துக்குறேன் நீ மூடிட்டு போ’ன்னு அர்த்தம்.

நடாஷாவே இப்படிச் சொல்றானா ஜியா இதை விடக் கேவலமா சொல்லுவா. ஸோ நீ அமைதியா உட்காரு. இந்த பொண்ணுங்களுக்கு ஜான்சிராணினு நினைப்பு.” என்றவனிடம் ஆஷிக், 

“அது மச்சான், நீ முதல் தடவை ஒரு பொண்ணுகிட்ட மொக்கை வாங்கிருக்கல்ல, அதான் உனக்கு எரிச்சலா வருது. போகப் போகப் பழகிடும்.” என்று சிரிக்க, ஆதர்ஷ் எதுவும் பேசாமல் முறைத்தவாறே அமர்ந்திருந்தான். 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!