கெட்டவன் 4

நான் எப்போ சார் உங்ககிட்ட பணம் கேட்டேன்? பதற்றமாகி விட்டாள் அனு.

“இதோ, இப்போ காலேஜ் போய்ட்டு வந்ததும் என்னோட ஆபிஸ்க்குள்ள வந்து பணம் கேட்டியே. டேய் ரவி, இந்த பொண்ணு வீட்டுக்கு தெரியாமல் என்கிட்ட பணம் வாங்கதான வந்துருக்கு!” என்று தன் உதவியாளனை பார்த்தான் வெற்றி.

“ஆமா சார். நான்தான் நீங்க வர்ற வரை வெயிட் பண்ண சொல்லி உட்கார வச்சேன்!” என்ற ரவியை பார்த்து, புருவங்களை ஏற்றி இறக்கி முறைத்தாள் அனு.

அனு அவனை முறைப்பதை பார்த்த வெற்றி, “ரவி, சாமி நாதனுக்கு போன் போடு. என்னனு கேட்டுட்டு பணம் கொடுப்போம்!” என்றான்.

“வேணாம், ரவி அண்ணே! அப்பாக்கு சொல்லாதீங்க!” என்று உதட்டை குவித்து, சிறு பிள்ளை போல் பாவமாக அழுதாள் அனு.

“சரி பாப்பா, அண்ணே சொல்ல மாட்டேன்!” என்று உடனே அண்ணன் போல் உருகிய ரவியை, வெற்றி தீயாக முறைத்தான்.

இவளின் அழுகை நின்றது. “நான் வீட்டுக்கு போறேன்!” என்று வெற்றியை பார்த்து கூறிவிட்டு அவள் செல்ல, “நில்லு!” என்றான் வெற்றி.

அவள் பயத்தை வெளிக் காட்டாமல், “என்ன சார்? இன்னும் ஒரு வாரத்துல உங்க பணம் உங்க கைக்கே வந்துரும் சார்!” என்றாள் சலிப்பாக.

“நான்தான உன்னை இங்கே அழைச்சிட்டு வந்தேன். நீ என்னோட வா. நானே உங்க அப்பாகிட்ட சொல்லி உன்னை பத்திரமா வீட்டுல விட்டுறேன்!” என்றான். “பத்திரமா” என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கூறியிருந்தான்.

“வேணாம், தனியா போய்க்கிறேன். உங்க கூட வர பயமா இருக்குது!” வாய் விட்டே அவளின் பயத்தை கூறி விட்டாள்.

இவன் கீழ் இதழை அழுந்தக் கடித்து விட்டு, “பாதி காசு தராமல் ஏமாத்திரலாம்னு பார்க்குறியா?” என்று கேட்டான்.

“நான் என்ன சொல்றேன், இவர் என்ன சொல்றாரு பாரு!” என்று தன்னையே நொந்து கொண்டாள் அனு.

“என்ன, சைலண்டா இருக்க? கால்ல வெள்ளி கொலுசு இருக்க போய் கழட்டுன. மீதி ஐயாயிரத்துக்கு கழட்டி தர, வேற ஒண்ணும் இல்லை உன்கிட்ட!” என்றான் கிண்டலாக.

தன் வறுமையை கிண்டல் செய்வது போல் அவன் பேசியது, இவளுக்கு தன்னுடைய தன்மானத்தை சுரண்டியது போல் இருந்தது. அவனை தீயாக முறைத்து பார்த்தவள், “இன்னும் ஒரு வாரத்துல உங்க பணம் உங்க கைக்கு வரலைனா, என்னை ஏண்டினு கேளுங்க!” என்று நுனி மூக்கு சிவக்க, அவனின் முகத்தில் கத்தினாள் அனு.

“கண்டிப்பா கேட்கதான போறேன்!” என்றான் வெற்றி.

அவளின் விழிகளில் தெரிந்த திமிரும் தைரியமும் இவனை கவர்ந்தது.

“உன்னால பணத்தை கொடுக்க முடியலைன்னா?” வேண்டுமென்றே சீண்டினான்.

“கண்டிப்பா கொடுத்துருவேன்!” உறுதியாக கூறினாள்.

இருவரின் வாக்குவாதத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ரவி, வெற்றியை மட்டும் ஆழமாக பார்த்தான்.

“இந்த அளவு வெற்றிக்கு பேச வருமா?” என்று யோசித்தான். இன்றுதான் அவன் அதிகம் உரையாடி ரவி பார்க்கிறான்.

அனுவின் கண்களை மட்டுமே பார்த்த வெற்றி, அவள் கைகளை பிடித்து இழுத்து சென்று காரில் தள்ளினான்.

“அதான் தனியா போறேன்னு சொன்னேன்ல! இப்படி இழுத்துட்டு வரீங்க!” அவனின் செய்கையில் மீண்டும் புது கோபம் அவளிடம்.

“ஒரு வாரத்துல பணத்தை திருப்பி தருவேன்னு உறுதியா சொல்ற. என்னால உன்னை நம்ப முடியலயே. உங்க வீட்டுல எதாவது காரணம் சொல்லிட்டு, சொந்தக்காரங்க வீட்டுல போய் தலைமறைவாயிட்டா, நான் என்ன பண்றது?” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

இவள் கைகளை இறுக்கிக் கொண்டு, தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இவன் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

மெல்ல இருள் சூழ தொடங்கி விட்டது.

அவள் சாலையை வெறித்த வண்ணம் அமைதியாக வந்தாள். ஆனால், அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

“நீ உன்னோட பாய் ஃப்ரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து வெளியே ஊர் சுற்றுனதை உங்க அப்பாகிட்ட சொல்லவா?” என்று கேட்டான்.

இவளுக்கு நெஞ்சில் திகில் பரவியது. “பாய் ஃப்ரெண்ட்ஸ்…ஸா?” திக்கி திணறி கேட்டாள்.

“ஆமா, பாய் ஃப்ரெண்ட்ஸ்தான்! டைரிமில்க் விளம்பரம், அந்த ரமேஷ்ஷும் சுரேஷ்ஷும்!” என்றான்.

“அவங்க எனக்கு அண்ணனுங்க மாதிரி!” என்றாள் அனு.

“அப்படியா? சரி, அந்த அண்ணனுங்க அவங்க காதலிகளோடு காதலர் தினத்துக்கு ஊர் சுற்ற போகும் போது, நீ ஏன் அவங்ககூட போன?” என்று கேட்டான்.

“காலேஜ் கட் அடிச்சிட்டு பசங்களோட அவுட்டிங் போனது வீட்டுக்கு தெரிஞ்சா, அவங்கள காலேஜ்க்கு திருப்பி படிக்க அனுப்பி வைக்க மாட்டாங்க. அதான் நானும் அவங்களோட சேர்ந்து அவுட்டிங் போனேன். எங்க வீட்டுல என் ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து வெளியே போறதா மட்டும் சொல்லிட்டு போனேன்!” என்றாள் அனு.

“காதலர்கள் ஒண்ணா கையை பிடிச்சிட்டு ஜோடியா சுற்றும் போது, அங்கே போய் நீ என்ன செஞ்ச?” என்று கேட்டான்.

“பணம் வாங்குனதுக்காக என்னல்லாம் பொறுத்து போக வேண்டியதிருக்கு!” என்று தன்னையே நொந்து கொண்டவள், “அவங்களுக்கு போட்டோவும் வீடியோவும் எடுத்து கொடுத்தேன்!” என்றாள்.

இவன் அவளை கண்கள் சுருக்கி பார்த்து விட்டு, பின் பக்கென்று சிரித்தான்.

அவன் சிரிப்பை பார்த்து பயந்தவள், “ப்ளீஸ், அப்பாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க!” என்று கெஞ்சினாள்.

“இப்போ சொல்ல மாட்டேன். இன்னும் ஒரு வாரம் டைம் இருக்குது!” என்றவன், சாலையில் கவனத்தை பதித்தான்.

அவன் சொல்ல மாட்டேன் என்று கூறியதும், சற்று நிம்மதி அடைந்து அவனின் முகத்தை பார்த்து விட்டு, அவனின் கையை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.

அவன் ஒரு கையால் தன் கரிய கேசத்தை கோதி விட்டு, மற்றொரு கையால் காரை ஓட்டினான்.

ஸ்டியரிங்கில் இருந்த அவனின் கையை பார்த்தவள், “உங்க கையில பச்சை குத்திருக்கிங்க!” என்று திக்கி திணற,

“உன் பேர்தான் அனு. உனக்காகதான் உன் பேரை என் கையில பச்சை குத்தி இருக்கேன். அதுவும் தமிழ் பாண்ட், எவ்ளோ அழகா இருக்கு பார்த்தியா!” என்றான்.

இவள் தன் நெஞ்சில் கை வைத்து, சீட்டில் சாய்ந்து விட்டாள். அவளுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.

“என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்? இது வரைக்கும் நான் உங்ககிட்ட என் பேரை சொல்லவே இல்லையே?” மூச்சு முட்டியது அவளுக்கு.

“என்கிட்ட கை நீட்டி காசு வாங்குறவங்க வரலாறே எனக்கு தெரியும், உன் பேர் தெரியாதா?” என்று கேட்டான். அவனின் விழிகள் இவளின் விழிகளை மேய்ந்தது.

அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாதவள், இமைகளை தாழ்த்திக் கொண்டாள்.

“ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் இன்னும் உன்னை பற்றி சரியா தெரியல!” என்றவனை, இப்பொழுது சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் அனு.

அவளுக்கு பட படப்பாக இருந்தது. அடுத்த பேச்சு வரவில்லை.

“அது என்னனா….?” என்று கேட்க வந்தவன், “அதையும் நானே தெரிஞ்சிப்பேன்!” என்றான்.

அதற்குள் வீடு வந்து விட்டது. வேகமாக அவனின் காரிலிருந்து அனு இறங்கிக் கொள்ள, சுபத்ரா நின்றிருந்தார் வாசலில்.

“தேங்க்ஸ் தம்பி!” என்றார் வெற்றியை பார்த்து.

பதிலுக்கு அந்த கெட்டவனோ, நல்லவன் போல் புன்னகைத்தான் தலை அசைத்து.

இவள் புரியாமல் சுபத்ராவை பார்த்தாள்.

“நீ வீட்டுக்கு வர லேட் ஆயிடுச்சு. பஸ்ஸை விட்டுட்டியோனு நான்தான் வெற்றி தம்பிக்கு போன் போட்டு, உன்னை அழைச்சிட்டு வர சொன்னேன்!” என்றார் சுபத்ரா.

இவள் புருவம் இடுங்க, தாயை பார்த்து விட்டு, “நீங்க எப்போ அவரோட போன் நம்பர் வாங்குனீங்க?” என்று கேட்டாள்.

“நான் வாங்கல, தம்பியேதான் தந்துச்சு. எதாவதுனா எனக்கு போன் பண்ணுங்க அக்கானு உரிமையா சொல்லிச்சு!” என்றார் சுபத்ரா.

“சுத்தம்!” என்று நினைத்துக் கொண்டு, மெல்ல அடி எடுத்து வீட்டுக்குள் நுழைந்தவரை தடுத்தார் சுபத்ரா.

“அனு, உன் கால்ல இருந்த கொலுசை எங்க டி?” என்று கேட்டார்.

“அ.. அது… அம்மா, ஒரு கால் கொலுசு தொலஞ்சி போச்சி. அதான் இன்னொரு கால் கொலுசை கழட்டி, என்னோட பேக்ல வச்சிருக்கேன்!” என்று சமாளித்தாள்.

“என்ன டி? இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடி வாங்கிக் கொடுத்த புது கொலுசு டி அது. அதை போய் தொலைச்சிட்டு வந்து நிக்கிறியே!” என்று சத்தம் போட்டார் சுபத்ரா.

இவள் மௌனமாக உள்ளே சென்று விட்டாள். சுபத்ராவும் அதன் பிறகு எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.

இரவு உணவை முடித்து விட்டு, தனியறைக்கு வந்தவளின் எண்ணம் முழுதும் வெற்றியை பற்றிதான் இருந்தது.

“அந்த கெட்டவனுக்கு எப்படி என்னோட பேர் தெரியும்?” என்று வெகு தீவிரமாக யோசித்தாள்.

“அம்மாடி அனு….!” இரவு வேலை முடிந்து வந்த தந்தையின் குரலில், அவளின் மூளையில் மின்னல் வெட்டியது.

“இந்த வீட்டுக்கு குடி வரும் போது, அப்பா என் பேரை சொல்லிதான அவனுக்கு என்னை அறிமுகப் படுத்தி வச்சாரு!” என்று ஞாபகம் வந்தது அவளுக்கு.

“அம்மாடி அனு…!” அவள் சத்தம் தராததால், அறைக்குள்ளேயே வந்து விட்டார் சாமி நாதன்.

“இந்தா டா செல்லம், உனக்காக அப்பா பால்கோவா வாங்கிட்டு வந்துருக்கேன்!” என்று அவளிடம் தந்து விட்டு சென்றார்.

எப்பொழுதும் பால்கோவா என்றால் சந்தோஷமாக துள்ளிக் கொண்டு வாங்குபவள், இன்று ஒன்றும் சொல்லாமல் வாங்கியதும், “என்ன டா ஆச்சி?” என்று கேட்டார் அக்கறையாக.

“ஆஹ்… ஒண்ணும் இல்லைப்பா, பால்கோவா நான் சாப்பிட்டுக்கிறேன்ப்பா!” என்றாள்.

“அம்மா எதாவது சொன்னாளா டா?” அவளின் முகத்தை நிமிர்த்தி கேட்டார் கொஞ்சலாக.

“உங்க பொண்ணு உம்முன்னு இருந்தா உடனே என்னை காரணம் சொல்லாதீங்க. அவள் காலை பாருங்க, கொலுசை தொலைச்சிட்டு வந்து நிக்குறா. அதை உங்ககிட்ட எப்படி சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருந்திருப்பா!” என்று கணவனிடம் மல்லுக்கு வந்தார் சுபத்ரா.

“அப்படியா டா?” மென்மையாக கேட்ட தந்தையின் முகத்தை பார்த்தவளுக்கு, மனம் வலித்தது.

“ஆமா ப்பா!” என்றாள் விழியில் வழியும் நீரோடு.

“விடு டா, கொலுசுதான. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க, அப்பா புதுசா வேற ஒண்ணு வாங்கி தரேன்!” என்றார்.

“ம்ம்ம், சரிப்பா!” என்றவள், அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

*****

மறு நாள் காலை கண் விழித்தவள், எழுந்து வர அவளின் கால்களில் கொலுசு சிணுங்கியது.

“நேற்று ராத்திரிதான் வெற்றி தம்பி கொலுசு கிடைச்சிடுச்சுனு வந்து கொடுத்துட்டு போனான். சரி, காலையில உன் கால்ல போட்டு விடலாம்னு நான் அதை உன் பக்கத்துல வச்சிட்டேன். காலையில எழுந்ததும் நீயே அதை எடுத்து போட்டுக்கிட்டியா?” என்று கேட்ட சுபத்ராவை, அதிர்ச்சியாக பார்த்தாள் அனு.

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா குட்டி ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ். 

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!