தன்னையே ஒரு முறை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள் அனு.
கையில்லாத, முட்டி வரை மட்டுமே நீண்டிருந்த உடுப்பு அணிந்திருந்தாள்.
அவள் இரவு நேரம் மட்டும் அணியும் உடை அது.
தன் கால்களில் இருந்த கொலுசை பார்த்தவளுக்கு, தலை சுற்றியது.
“என் கால்ல கொலுசு இருக்குறதே, இப்போதான் எனக்கு தெரியுது! அம்மாவும் போட்டு விடலனு சொல்றாங்க, அப்பாவும் போட்டு விடல. அப்போ யாரு போட்டு விட்டாங்க?” என்று யோசித்தவளின் நெஞ்சு, திக் திக் என்று அடித்துக் கொண்டது. “கெட்டவன்தான் போட்டு விட்டுருப்பானோ?” என்று நினைத்து பார்க்க கூட முடியவில்லை அவளால். உடல் நடுங்கியது.
“அம்மா, வாசல்ல தண்ணி தெளிச்சிட்டேன். நீ ட்ரெஸ் மாற்றிட்டு கோலம் போடு!” என்று அவளின் கைகளில் கோலப்பொடியை கொடுத்தார் சுபத்ரா.
“அவர் எப்போம்மா வந்து கொலுசு கொடுத்தாரு?” என்று சுபத்ராவை பார்த்து கேட்டாள். அவளின் இதயம் தாறு மாறாக துடித்தது.
“ஒரு பதினோரு மணி இருக்கும் டி. நீ நல்லா தூங்கிட்ட. வெற்றி தம்பி போன் போட்டு, ‘அக்கா, கொஞ்சம் கதவை திறங்க!’னு சொல்லிச்சு. நானும் போய் கதவை திறந்தால், கையில கொலுசோட நிக்குது தம்பி. ‘இது எப்படி உங்ககிட்ட?’னு கேட்டா, ‘காலேஜ் வாசல்ல விழுந்து கிடந்துச்சாம், நீங்க அனு பாப்பாவை திட்டாதீங்க!’னு சொல்லிட்டு, என் கையில கொலுசை கொடுத்துச்சு!” என்றார்.
“அவர் கொடுத்ததும் நீங்க வாங்கிட்டிங்களாமா?” என்று இவள் புருவம் சுருக்கி கேட்க, “இல்லை டி, அது உன் கொலுசுதானானு நல்லா செக் பண்ணிட்டுதான் அம்மா வாங்குனேன்!” என்றார் சுபத்ரா.
“ஏன் டி, அது உன் கொலுசுதான? சந்தேகமா கேட்கிற?” என்று கேள்வியை அவள் பக்கம் திருப்பினார்.
“என்னோட கொலுசுதான் ம்மா, என்னோடதுதான்!” என்று பதற்றத்தில் வேகமாக கூறினாள் அனு.
“கொலுசை கால்ல போடுறதுக்கு முன்னாடி கேட்கணும், போட்டுட்டு கேள்வி கேட்குற நீ. போடி, போய் கோலம் போடு டி!” என்று அவளை அதட்டி விட்டு சென்றார் சுபத்ரா.
இவள் உடை மாற்றி விட்டு, கோலப்பொடியோடு வாசலுக்கு சென்றாள்.
கோலம் போடுவதற்கு முன், ஒரு முறை எதிர் வீட்டை பார்த்தாள். “நல்லதா போச்சு, அந்த கெட்டவன் இல்லை!” என்று கோலம் போட தொடங்கினாள்.
இருபது நிமிடத்துக்கும் மேலாக அவள் குனிந்து கோலம் போட்டுவிட்டு எழுந்து நிற்க, எதிர் வீட்டில் நின்று யாருடனோ போனில் பேசுவது போல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.
இவளுக்கு திக்கென்று இருந்தது. “இவ்வளவு நேரம் கெட்டவன் இல்லையே!” என்று அவள் யோசிக்க, அவனின் பார்வை அவளை மேலிருந்து கீழ் வரை அளந்தது.
கழுத்திலிருந்து கெண்டை கால் வரையும் நீண்டிருந்த உடையை அணிந்திருந்தாள்.
அவளை முழுதாக பார்த்தவனின் உதடுகளில், குட்டி முறுவல் வந்து போனது.
இவளுக்கு பக்கென்று இருந்தது அந்த சிரிப்பை பார்த்து. இதை அவனிடம் சென்று கேட்கவும் முடியாது என்று தன்னையே நொந்து கொண்டவள், வீட்டுக்குள் காலெடுத்து வைக்கும் நேரம், “அக்கா!” என்று சத்தமாக அழைத்தான் வெற்றி.
அவனின் “அக்கா” என்ற அழைப்புக்கு, வீட்டுக்குள் இருந்து பறந்து வந்தார் சுபத்ரா.
“சொல்லுங்க தம்பி!” என்றார் அன்பாக.
“அய்யயோ, போச்சு போச்சு! கொலுசை நான்தான் அவன்கிட்ட கொடுத்தேன்னு சொல்ல போறான். எங்க அம்மா என்னை வெட்டிக் கொல்ல போறாங்க. உண்மை எல்லாம் தெரிய போகுது, கடவுளே!” என்று அவள் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்க,
“இன்னைக்கு என் அம்மாவோட நினைவு நாள். வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்யணும். நீங்க வேலையா இருந்தா, பாப்பாவை அனுப்பி வைங்க!” என்றான்.
“அப்படியா? அம்மா நினைவு நாளா தம்பி?” என்று உருகியவர், “அனு, நீ போய் சுத்தம் பண்ணி கொடுத்துட்டு வா. அம்மாக்கு சமையல் வேலை இருக்கு!” என்றார் அனுவிடம்.
“நான் போகல ம்மா, நீங்க போங்க!” என்று பாவமாக முகத்தை சுருக்கியவளிடம், “நேற்று உன்னை பத்திரமா வீட்ல கொண்டு வந்து விட்டுருக்காரு, உன் கொலுசை கண்டு பிடிச்சி கொடுத்துருக்காரு. அவருக்கு நீ இந்த சின்ன உதவி கூட செய்ய மாட்டியா அனு? அந்த தம்பி நம்மள பற்றி என்ன நினைப்பாரு? அவரோட வீட்லதான் நாம வாடகைக்கு இருக்கோம், அதை மறந்துராத. போ, போய் சுத்தம் பண்ணி கொடுத்துட்டு வா!” என்று அவளின் கைகளில் இருந்த கோலப்பொடியை வாங்கி விட்டு, வீட்டுக்குள் சென்று விட்டார் சுபத்ரா.
“ரொம்ப நல்லா அம்மாம்மா நீங்க!” என்று முணு முணுத்தவள், எதிர் வீட்டை நோக்கி நடந்தாள்.
வெற்றி அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் வெள்ளி கொலுசு எப்பொழுதும் போல், அவளின் கால்களில் சிணுங்கிக் கொண்டிருந்தது. அவளின் வெண் பிஞ்சு பாதங்களை பார்த்துக் கொண்டே,
அவளின் பின்னால் சென்றவன், “பரவாயில்லயே, உன் அப்பா ஒரு நைட்க்குள்ள உனக்கு கொலுசு வாங்கி தந்திருக்காரு!” என்று கிண்டலாக சொன்னான்.
இவள் உடனே திரும்பி அவனை பார்த்தாள்.
“கிண்டல் பண்ணாதீங்க சார்! நீங்கதான் கொலுசு கொடுத்துட்டு போனீங்கனு அம்மா சொன்னாங்க. ஏன் கொலுசை திருப்பி கொடுத்தீங்க சார்? அந்த கொலுசு உங்ககிட்ட இருந்ததால, பாக்கி ஐயாயிரம்தான் நான் உங்களுக்கு தர வேண்டியதிருந்து. இப்போ பத்தாயிரம் தரணும்!” என்றாள் பாவமாக.
“கொலுசு கொடுத்ததை மட்டும்தான் உன் அம்மா சொன்னாங்களா?” என்று கீழ் இதழைக் கடித்து கேட்டவனை, தயக்கமாக பார்த்தவள், “ஆமா!” என்றாள் தலை குனிந்து.
இவன் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான்.
லேசாக தலை நிமிர்த்தி அவனை பார்த்தவள், “நீங்கதான் கொலுசை போட்டு விட்டிங்களா?” திக்கி திணறி கேட்டாள்.
“உன் அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டியேனு பாவம் பார்த்து, கொலுசை கொடுத்துட்டு போக வந்தா, உனக்கு கொலுசை போட்டு வேற விடணுமா நான்?” என்றான் திமிராக.
இவளுக்கு கால்கள் இரண்டும் கிடு கிடுவென்று நடுங்கியது. “நானும் எடுத்து போட்டுக்கல, அம்மாவும் போட்டு விடல, அப்பாவும் போட்டு விடல. அப்போ வேற யாரோ வீட்டுக்குள்ள புகுந்துட்டாங்களா? சார், நீங்க எதிர் வீட்லதான இருக்கீங்க, அவனை பார்த்தீங்களா?” என்றாள் பதற்றமாக.
அவளின் பதற்றமும் பாவமான முகமும் இவனை என்னவோ செய்தது.
“என் வீட்டுக்குள்ள என்னை மீறி எவன் வருவான்?” என்று தில்லாக கூறியவன், தன்னுடைய கேசத்தை ஸ்டைலாக கோதிக் கொண்டான்.
இதற்கு மேல் ஒருவனால் சுற்றி வளைத்து பதில் கூற முடியுமா?
இவளுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது அவனின் பதில். “இவன்தான் என் கால்ல கொலுசு போட்டு விட்டுருக்கான், படுபாவி!” என்று அவனை மனதுக்குள் திட்டிவிட்டு, “வீட்டை சுத்தம் பண்ணி கொடுத்துட்டு போயிடுறேன் சார்!” என்று நாசுக்காக பேசி சமாளித்து விட்டு, ஓரமாக இருந்த துடைப்பத்தை கையில் எடுத்தாள்.
“பர்ஸ்ட் என் ரூம் சுத்தம் பண்ணிரு!” என்று கூறிவிட்டு, சோஃபாவில் அமர்ந்து கொண்டான் வெற்றி.
அவன் கண் முன்னால் நிற்காமல், அவனின் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டு, கதவிலேயே சாய்ந்து நின்று லேசாக விம்மினாள் அனு.
“கொலுசை போட்டு விடும் போது, அவனின் கை விரல்கள் அவளின் கால்களில் ஊர்வலம் சென்றது போல் கற்பனை வந்து போனது அவளுக்கு. பயத்தில் துடித்தாள். என்ன கற்பனை இது, கண்றாவியாக இருக்கிறதே? நான் சுயநினைவில் இல்லாத பொழுது, தன்னை இப்படிதான் தீண்டியிருப்பானோ! இவனிடம் வந்து சிக்கிக் கொண்டேனே!” என்று அவள் மனதுக்குள் புலுங்கிக் கொண்டிருக்க, “கதவை சாத்திட்டு என்ன பண்ற நீ?” கணீர் குரலில் பயந்து போய், கதவை திறந்து விட்டாள்.
“என் ரூம்குள்ள இருக்கும் போது, என்னை கேட்காமல் கதவை சாத்தக் கூடாது!” என்றான் கட்டளையாக.
இவளின் தலை சரி என்பது போல் அசைந்தது.
இப்பொழுதுதான் அறையை பார்த்தாள். அசிங்கமாக இருந்தது. பஞ்சு மெத்தையில் துணிகளை கடை பரப்பி வைத்திருந்தான். ஒன்று கூட கலர் சட்டை, கலர் வேஷ்டி இல்லை. அனைத்தும் கருப்பு நிற சட்டைகள். அனைத்தையும் எடுத்து, அதன் அதன் இடத்தில் வைத்தாள்.
அதற்கே நேரமானது. கல்லூரிக்கு வேறு செல்ல வேண்டும். இப்பொழுதே மணி ஏழாகி விட்டது. அவசர அவசரமாக வேலையை செய்தாள்.
திடீரென்று அறையில் துர்நாற்றம் வீசியது. துர்நாற்றம் எங்கே வருகிறது என்று பார்க்க, கட்டிலுக்கு மறு பக்கம் கண்ணாடி பாட்டில்கள் குவிந்து கிடந்தது. அதை பார்த்தவள், புருவத்தை ஏற்றி இறக்கினாள். “இது என்ன, இவ்ளோ பாட்டில் குவிஞ்சி கிடைக்குது? கெட்ட வாடை அடிக்குது, கெட்டவன் வீடுங்கிறதால கெட்ட வாடை வருதோ?” என்று நினைத்தவள், “கெட்டவன் சார்!” என்று அழைத்தாள் அவனை.
“கெட்டவனா?” என்று அவளின் அழைப்பில் அவனுக்கு கோபம் வந்தாலும், அந்த அழைப்பை ரசித்தான்.
“என்ன?” என்று முகத்தை மாற்றி, இறுக்கமாக அவளின் முன்னால் நின்றான்.
“சார், இங்கே பாருங்க, ஒரே கண்ணாடி பாட்டில்!” என்றாள்.
இவனின் புருவம் ஆச்சர்யத்தில் விரிந்தது அவளை பார்த்து.
“என்ன சார், வீட்டுக்குள்ள போய் பாட்டில் குவிச்சு போட்டுருக்கீங்க? ஏற்கனவே எனக்கு நேரமாயிடுச்சு, காலேஜ்க்கு வேற போகணும். இதுல இது வேறயா?” சலித்துக் கொண்டாள்.
“அது எல்லாம் சரக்கு பாட்டில், தூக்கி குப்பையில போட வேணாம். இரு, வரேன்!” என்றவன், ஒரு சாக்கு பையை அவளிடம் கொடுத்து, “எல்லாத்தையும் இதுல எடுத்து போட்டுரு!” என்றான்.
சரக்கு பாட்டில் என்றதற்கே, அவளின் முகம் அஷ்ட கோணலாக மாறி இருந்தது. “ச்சீ, இதை எல்லாம் நான் எடுக்க மாட்டேன்!” என்றாள்.
“இது சரக்கு பாட்டில்னு சொல்லாமல், எடுத்து பையில போட சொன்னா, எடுத்து போட்டுருப்பியோ?” என்று நக்கலாக கேட்டான்.
“இங்கே பாருங்க சார், இது எல்லாம் சரக்கு பாட்டில்னு எனக்கு தெரியவே தெரியாது. எங்க அப்பாக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஒரு வேலை, எனக்கு இது சரக்கு பாட்டில்னு தெரிஞ்சிருந்தா, நான் அதை தொட்டுருக்க மாட்டேன்!” என்றாள் நுனி மூக்கு சிவக்க. கோபம் வந்து விட்டதாம்.
“இப்போ தெரிஞ்சிருச்சுல்ல, எடுத்து இதுல வை. அப்பறமா வித்து காசாக்கிப்பேன்!” சாதாரணமாக கூறிவிட்டு சென்றான்.
“ஹய்யோ கடவுளே! இந்த கெட்டவனுக்கு இன்னும் என்னென்ன கெட்ட பழக்கம் இருக்கோ தெரியல. எத்தனை நாள் சேர்த்து வச்சி குடிச்சானோ, இவ்ளோ பாட்டில் குவிச்சு வச்சிருக்கான். இவன்கிட்ட போய் எங்க அம்மா தம்பி தம்பினு உருகுது!” என்று புலம்பி விட்டே, தன்னுடைய பிஞ்சு கரங்களால் அதையும் அகற்றினாள் அனு.
கடைசியாக, மொத்த வீட்டையும் சுத்தம் செய்து முடித்திருக்க, மணி ஒன்பதாகிவிட்டது.
“நான் கிளம்புறேன், கெட்டவன் சார்!” என்றவளை, செல்ல விடாமல் தடுத்தான்.
“இன்னும் என்ன சார்? லேட் ஆயிடுச்சு எனக்கு, பத்து மணிக்குள்ள காலேஜ்ல இருக்கணும்!” என்றாள். அவளின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள்.
அதையும் சேர்த்து ரசித்தவன், ஒரு போட்டோவை அவளின் கைகளில் கொடுத்தான்.
இவள் திரு திருவென்று விழித்தாள் போட்டோவை பார்த்து.
“இதையும் சுத்தம் பண்ணி, இதுக்கு மஞ்சள் குங்குமம் வச்சி விட்டுரு. நான் குளிச்சிட்டு வரேன்!” என்று அவளின் பதில் கேட்காமல் சென்றான்.
போட்டோவை பார்த்தாள். “அம்மாவின் நினைவு நாள் என்று சொன்னான், ஆனால், என் வயது உள்ள ஒரு பெண்ணின் போட்டோவை கைகளில் தந்து விட்டு செல்கிறானே!” என்ற கேள்வி வந்தாலும், அவன் சொன்னதை செய்து முடித்தாள்.
அவள் வேலையை முடிக்கவும், அவன் குளித்து விட்டு வந்தான். இப்பொழுதும் கருமை நிற சட்டைதான், அவனின் உடலை மறைத்திருந்தது.
அவள் கைகளில் இருந்த போட்டோவை வாங்கி, சுவற்றில் தொங்க விட்டான் வெற்றி.
“யார் சார் இவங்க?” ஆர்வத்தை அடக்க முடியாமல், அவனிடம் கேட்டு விட்டாள்.
“எங்க அம்மா, அன்னபூரணி!” என்றான் போட்டோவில் பார்வையை பதித்து.
அனுவின் விழிகள் பெரிதாக விரிந்தது அவனின் பதிலில். அவளும் போட்டோவை வெறித்து பார்த்தாள்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த எபி பிடிச்சிருந்தா ஒரு குட்டி ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.
