ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க, இவங்கள போய் அம்மானு சொல்றீங்க? பட்டென்று கேட்டாள் அனு.
போட்டோவை செண்டிமெண்ட்டாக பார்த்துக் கொண்டிருந்தவன், திரும்பி பார்த்து அவளை முறைத்தான்.
என்ன முறைக்கிறான்? தலையை குனிந்து கொண்டாள் அனு.
ஏனோ அவளிடம் கூற வேண்டும் போலிருந்தது, அதனால் கூறினான்: என் அம்மா சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாங்க, என்றான் அவளை பார்த்து.
உதட்டை பிதுக்கி பாவமாக அவனை பார்த்தாள் அனு.
அவள் ஏதாவது ஆறுதல் கூறுவாள் என்று அவன் நினைத்திருக்க, அதற்கு மாறாக அவள் உதட்டை பிதுக்கி வருத்தப்படுவதை பார்த்தவனின் உதட்டில் மெல்லிய புன்னகை வந்து, நொடியில் மறைந்தும் போனது.
அவனின் அருகில் நெருங்கி வந்தாள் அனு.
இவன் புருவம் சுருக்கி அவளை பார்த்தான். அவள் அவனின் அருகில் மிக நெருக்கமாக வந்து நின்றாள், இருவருக்கும் இடையில் இரண்டு இன்ச் இடைவெளி மட்டுமே இருந்தது.
சார், என்றாள் மெல்லிய குரலில். அவன் புருவம் உயர்த்தினான்.
சார், நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே, என்றாள்.
என்ன கேட்ட? என்றவனின் விழிகள் அவளை பார்த்தது.
கொலுசு திருப்பி கொடுத்துட்டீங்க, அப்போ நான் பத்தாயிரம் உங்களுக்கு தரணுமா? என்று கேட்டாள்.
அவளின் மீன் விழிகளில் தன்னை தொலைப்பதை போல் ஒரு உணர்வு, அவளின் கண்களுக்குள் புதைந்து போக வேண்டும் என்ற எண்ணம் அந்த கெட்டவனுக்கு.
சார், என்று சத்தமான அழைப்பில், தன்னுடைய தாடியை தடவிக் கொண்டான் வெற்றி.
சொல்லுங்க சார், பத்தாயிரம் தரணுமா? இமைகள் படபடக்க கேட்டாள் அனு.
வேணாம், ஐயாயிரம் மட்டும் கொடு, மீதியை அப்பறம் பார்த்துக்கலாம், என்றான்.
அப்பறம் பார்த்துக்கலாமா? என்று புரியாதவளாய் அவள் கேட்க, ஆமா, ஐயாயிரம் நீ சொன்ன மாதிரி இந்த வாரத்துக்குள்ள என் கைக்கு வரணும், என்றான் மிரட்டலாக.
ஐயாயிரத்துக்கு எங்கே போக, இவனிடம் கடனை அடைக்க யாரிடம் பணம் வாங்க என்று யோசித்துக் கொண்டே அவள் சென்று விட்டாள்.
இவன் அவளின் முதுகை வெறித்து பார்த்து விட்டு, பின் திரும்பி தாயின் புகைப்படத்தை பார்த்தான்.
அந்த கெட்டவனின் விழிகளும் கலங்கியது. சிறு வயதில் தாயின் கை பிடித்து கடை தெருவுக்கு சென்றது நினைவு வந்தது. குட்டியாக இருக்கும் கெட்டவனுக்கு பள்ளி உடையை அணிவித்து பள்ளிக்கு அழைத்து சென்ற தாயின் ஞாபகம் வந்தது. தேங்கி நின்ற கண்ணீர் வழிந்தது கன்னத்தை தாண்டி.
உதடுகள் துடித்தது. அம்ம்மா, என்றான் வலியோடு. அவன் அழைத்தாலும், அவள் தாய் இனிமேல் வர போவதில்லை என்று தெரிந்தும், அவனின் உதடுகள் முணுமுணுத்தது.
இவ்வளவு நாளும் இந்த கண்ணீருக்கு பயந்துதான், தன் தாயின் புகைப்படத்தை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி வைத்திருந்தான்.
தாயின் நினைப்பு நாளுக்கு நாள் அதிகமாக, அன்னபூரணி என்ற பெயரை அனு என்று சுருக்கி, அவன் கைகளில் பச்சை குத்திக் கொண்டான். தாய் அவனோடு இருப்பது போல் எண்ணிக் கொண்டான்.
நினைவு நாளுக்கு கூட புகைப்படத்தை எடுத்ததில்லை அவன். பச்சை குத்திய கையை பார்த்து, தாயின் முகத்தை மனதுக்குள் எண்ணிக் கொள்வான்.
இன்று புகைப்படத்தை எடுத்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு தோன்றியது போல், அனுவின் கைகளால் அதை செய்தும் முடித்தான்.
இனிமே எப்பவும் உங்க போட்டோ இங்கே தான்மா இருக்கும், என்றான்.
இந்த இரும்பு மனிதனுக்குள்ளும், பூ போன்ற மனம் படைத்த நல்லவன் இருக்கின்றான் போலும்.
ஹேய் அனு, என்ற சுபத்ராவின் குரலில், தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு, முகத்தை கடுமையாக மாற்றிக் கொண்டு வெளியே வந்தான் வெற்றி.
என்ன கோபம் உனக்கு? சாப்பாடு கூட எடுத்து போக மாட்டியா நீ? கிட்டத்தட்ட வீட்டு வாசலில் நின்று கத்தினார் சுபத்ரா.
நீங்க செஞ்சி வச்சிருந்தா எடுத்துருப்பேன்மா. ஒரு ரெண்டு நிமிஷம் இரு, மூணு நிமிஷம் இருனு சொல்றீங்க, என்று தாய்க்கு நிகராக அவளும் கத்த, அது கோபமாக கத்துவது போலவே இல்லை. ஏனெனில், அவள் எவ்வளவுதான் குரலை உயர்த்தினாலும், சத்தம் வெளியே வராது. அவளின் குரல் மிக மிக மென்மையானது.
நான் ஒரு ஆளா இருந்து சமைக்கிறேன் டி, லேட்டாதான் ஆகும், என்று பேச்சு கொடுத்தே சாப்பாட்டை அவளின் பையில் திணித்தார் சுபத்ரா.
நீங்க ஒரு ஆள், மூணு பேருக்குதான்மா சமைக்கிறீங்க, ஊருக்கே சமைக்கிற மாதிரி பண்றீங்க, என்றாள் பற்களை கடித்து.
பார்ரா, பூனைக்குட்டிக்கு இன்னைக்கு ரொம்ப கோபம் வருது, என்று தன் தலையை கோதிக் கொண்டே அவர்களை வேடிக்கை பார்த்தான் வெற்றி.
இப்படி அடுத்த வீட்டில் நடப்பதை பார்க்கும் ரகம் அல்ல அவன். ஆனால், அவள் இருப்பதால், பார்க்க சொல்லி மனம் கூப்பாடு போட்டது.
மூணு பேருக்கு மட்டும் சமைக்கல டி, இன்னைக்கு வெற்றி தம்பிக்கும் சேர்த்து சமைச்சிருக்கேன். அவங்க அம்மா நினைவு நாள்னு சொன்னாரு, சாமிக்கு படைக்க சாப்பாடு செஞ்சிட்டு இருந்தேன், அதுக்கு உனக்கு கோபம் வந்துருச்சு, என்றார் சுபத்ரா.
அவர் என்ன உங்ககிட்ட வந்து சாப்பாடா கேட்டாரு? வீட்டை சுத்தம் பண்ண சொன்னாரு, பண்ணி கொடுத்தாச்சு. இங்கே பாருங்கம்மா என் கையை, என்று அவள் வலது கையை நீட்ட, அவளின் உள்ளங்கையில் சிறிய கீறல் இருந்தது.
ஐயோ, என்னடி இது? அவளின் உள்ளங்கையை பிடித்து வருடினார் சுபத்ரா.
கண்ணாடி பாட்டில் குத்திருச்சு மா, என்றாள்.
கண்ணாடி பாட்டிலா? வீட்டை தானடி சுத்தம் பண்ண போன? என்று கேட்டார்.
அ.. அது, சுத்தம் பண்ணிட்டு இருக்கும்போது கை பட்டு தெரியாமல் கண்ணாடி பாட்டில் கீழே விழுந்து உடைஞ்சிருச்சு, நானும் மறந்து போய் அதை வெறும் கையால எடுத்துட்டேன், என்று சமாளித்தாள்.
கெட்டவன் மேல் சுபத்ராவுக்கு ஒரு நன்மதிப்பு இருந்ததால், உடைந்த பாட்டில் சரக்கு பாட்டில் என்பதை கூறாமல் மறைத்து விட்டாள் அனு.
இரு டி, நான் ஸ்பூன் எடுத்துட்டு வரேன், கையில அடி பட்டிருக்குது, உன்னால சாப்பிட முடியாது. தாய் பாசம் அவரை தொல்லை செய்ய, உடனே சென்று ஸ்பூன் எடுத்து வந்து, அதையும் பையில் திணித்தார்.
ஸ்பூன் யூஸ் பண்ணியும் சாப்பிட முடியாதும்மா, பாருங்க, ஸ்பூன் பிடிக்க கூட என் கைக்கு தெம்பு இல்லை. சிறு பிள்ளை போல் உதட்டை பிதுக்கினாள் அனு.
எப்படியாவது அட்ஜெஸ்ட் பண்ணி சாப்பிட்டுரு அனுக்குட்டி, வீட்டுக்கு வந்ததும் அம்மா சாப்பாடு ஊட்டி விடுறேன், என்றார் சுபத்ரா.
சரிம்மா, அனு கிளம்பி விட்டாள். இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்த வெற்றி, சுபத்ராவை பார்த்தான். சுபத்ரா அவனை நெருங்கி வந்தார்.
தம்பி, படையல் போட்டு சாமி கும்பிடலாம், நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன், என்று உரிமையாக கூறிவிட்டு சென்றார்.
அரை மணி நேரத்தில், அன்னபூரணியின் புகைப்படத்தின் கீழ் படையல் போடப்பட்டிருந்தது.
தம்பி, நீங்க கொஞ்சம் முன்னாடி சொல்லிருந்தா, நான் அவரையும் இருக்க சொல்லிருப்பேன். அவர் வேலைக்கு போய்ட்டாரு, இப்போ போன் பண்ணாலும் எடுக்க மாட்டாரு, என்று சாமிநாதனை நினைத்து கூறினார் சுபத்ரா.
பரவாயில்லைக்கா, அதான் நீங்க இருக்கீங்களே, என்றவனுக்கு மறுபடியும் தாயின் புகைப்படத்தை பார்த்ததும் கண்ணீர் வந்தது.
அழாதீங்க தம்பி, உங்க அம்மா எப்பவும் உங்களோடதான் இருக்காங்க, என்றார் சுபத்ரா.
அழுறேனா, என்று கன்னத்தை தொட்டு பார்த்து விட்டு, உடலையும் மனதையும் இறுக்கமாக்கினான் வெற்றி.
****
அனு கல்லூரிக்கு இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்க, நடந்து வந்து கொண்டிருந்தாள்.
விஷாகாவையும் நிஷாவையும் கருப்பு நிற கார் கவர்ந்து சென்ற அந்த இடத்தை அவள் கிராஸ் செய்ய, இரண்டு டூ வீலர்கள் அவளின் வலது பக்கம் ஒன்றும், இடது பக்கம் ஒன்றுமாக வந்து நின்றது.
அவர்களின் பின்னால் விஷாகாவும் நிஷாவும் அமர்ந்திருந்தனர்.
அவளை கண்டதும், இருவரும் துள்ளி இறங்கினர்.
உன்கிட்ட நாங்க என்ன சொன்னோம் அனு? இன்னும் கொஞ்ச நாள் அந்த அண்ணாகிட்ட டைம் கேளுனு சொன்னோம், ஆனால், நீ அது கூட எங்களுக்காக செய்யல, என்றாள் நிஷா.
வீட்டுக்கு போனாதான என்னால அவர்கிட்ட பேசியிருக்க முடியும், ஆனால், நம்ம போறதுக்கு முன்னாடியே அவங்க நம்மள கடத்திட்டு போய்ட்டாங்க நிஷா, நானும் உங்களோடதான இருந்தேன், என்றாள் அனு.
அப்போ ஏன் அனு, உன்னை மட்டும் அந்த ஆள் அவரோட கார்ல அழைச்சிட்டு வந்தாரு? நீ சொகுசாதான் அனு வந்த, எங்களதான் குண்டு குண்டா இருக்குற ரவுண்டிங்க கடத்திட்டு போனாங்க, எனக்கு என்னவோ எல்லாம் நீ சொல்லிதான் நடக்குதோனு தோணுது, என்றாள் விஷாகா.
அனு இருவரையும் முறைத்து பார்த்தாள்.
அந்த ஆள் எங்கள டைரிமில்க் விளம்பரம்னு கிண்டல் பண்றான், நீ பார்த்துட்டு நிக்கிறியே அனு, என்றான் ரமேஷ்.
உங்க ஆளுங்க ரெண்டு பேருமே பார்த்துட்டுதான் இருந்தாங்க அண்ணா, என்றாள் அனு.
உண்மைய சொல்லு அனு, நீ எங்க ரெண்டு பேரையும் வீட்டுல மாட்டி விடதான பிளான் பண்ற, என்று கேட்டாள் விஷாகா.
உங்க ரெண்டு பேரையும் வீட்டுல மாட்டி விடணும்னு நினைச்சிருந்தா, எப்பவோ செஞ்சிருப்பேன். உங்க கடன் பத்தாயிரத்தை, நான் வாங்குன மாதிரி நான் டைம் கேட்டேன் பாருங்க, என்னை சொல்லணும்.
நீங்க பார்க்கதான செஞ்சீங்க, நான் என் கால்ல இருந்த கொலுசை கழட்டி கொடுத்தேன். ஆனால், நீங்க ரெண்டு பேரும் உங்க ஆளுங்கள கூப்பிட்டுட்டு வெளியே கிளம்பி போறீங்க, என்று கோபமாக கூறினாள்.
அனு பாப்பா, நீ கழட்டி கொடுத்த கொலுசு உன் கால்லயே இருக்குது, எப்படி ஒரு நைட்க்குள்ள புதுசு வாங்கி போட்டுக்கிட்டியோ, இல்லை அவனே வந்து திருப்பி தந்தானா? இதுக்கு என்ன பதில் சொல்ல போற, என்று கேட்டான் சுரேஷ்.
என்ன சொன்னாலும், அதை கேட்டுக்காம சந்தேகமாக கேள்வி கேட்கிற உங்ககிட்ட சொல்லி, என்னால புரிய வைக்க முடியாது, என்ற அனு தோழிகளை பார்த்தாள்.
நீங்க வாங்குன பத்தாயிரம், இவங்ககிட்ட இருந்திருந்தா, நீங்க ரெண்டு பேரும் அசிங்கப்பட்டு நின்னுருக்க மாட்டீங்க. இப்போ கூட டைம் இருக்கு, நல்லா யோசிங்க, நாளைக்கே உங்களுக்கு கல்யாணமானா, உங்க பிள்ளைக்கு பத்து ரூபாய் பால் பாக்கெட் வாங்கி தர, இவனுங்களுக்கு துப்பு இருக்கானு பார்த்துட்டு கல்யாணம் பண்ணுங்க, என்றவள் விறுவிறுவென்று நடந்தாள்.
ரமேஷ்ஷும் சுரேஷ்ஷும் அவளின் பேச்சில் அதிர்ந்து போய் நின்றனர் அதே இடத்தில்.
நிஷாவும் விஷாகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பின், ஹேய் அனு, நில்லு டி, என்று அவளின் பின்னால் ஓடினர்.
என்ன டா போறாளுங்க ரெண்டு பேரும், ரமேஷ் நெஞ்சை பிடித்துக் கொண்டு கேட்டான்.
அடியே அனு, அன்னபூரணி, உன்னை சும்மா விட மாட்டோம் டி ரெண்டு பேரும், என்று சுரேஷ் கண்கள் சிவக்க கூறினான்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த எபி பிடிச்சிருந்தா குட்டியா ஒரு ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.
