சுபத்ரா கிச்சனுக்குச் சென்றதும், அனு வேகமாக வெளியே வந்தாள். வாசலில் ஏற்கனவே சுபத்ரா கோலம் போட்டு விட்டார். அதனால், அந்த வேலை இல்லை அவளுக்கு.
இவள் எதிர் வீட்டைப் பார்த்தாள். வெற்றி இன்றும் கைபேசியில் பேசிக் கொண்டு, அங்கும் இங்கும் நடந்தான். ஆனால், இன்று அவளைப் பார்க்கவில்லை. அவளின் பக்கம் தலையைத் திருப்பவில்லை.
நேற்று நடந்தது உண்மையா? இல்லை கனவா? குழப்பம் அதிகரித்தது அவளுக்கு.
உடனே வலது கையில் உள்ள காயத்தைப் பார்த்தாள். முன்பை விட வலி சற்று குறைந்திருந்தது. ஒரு முறை வெற்றியைப் பார்த்து விட்டு, மறுபடி அறைக்குள் ஓடினாள்.
அவன் அவளின் காயத்தில் வருடி விட்ட, மயில் தோகை அறையில் இல்லை. அறை முழுதும் உருண்டு பிரண்டு விட்டாள். ஆனால், மயில் தோகை கிடைக்கவில்லை.
நேற்று நடந்தது கனவுதான் போல. ரொம்ப பயந்துட்டேன், என்று நினைத்து விட்டு கல்லூரிக்குத் தயாரானாள்.
குளித்து விட்டு வந்து, நிலைக் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்தாள். எல்லாம் சரியாகதான் இருப்பது போல் இருந்தது. உதடுகளை மட்டும் குறிப்பாக ஆராய்ந்தாள். வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.
“கனவுதான்”, நெஞ்சில் கை வைத்து நிம்மதியாக மூச்சை வெளியிட்டாள்.
சுபத்ரா கையில் உணவோடு வந்தார். “காயம் சரியானதும் நீயே சாப்பிடு. இப்போ அம்மா ஊட்டி விடுறேன். காலேஜ்ல அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்க. மிச்சம் வச்சி கொண்டு வந்தா பிச்சிருவேன்”, என்று மிரட்டி உணவை ஊட்டி விட்டார்.
உணவை ஒரு வாய் வாங்கியவள், “ஆஹ்”, என்றாள்.
“சாப்பாட்டுல காரம் அதிகமா போடலையே டி? என்னாச்சி?”, என்று பதற்றமாகக் கேட்டார் சுபத்ரா.
“ஒண்ணும் இல்லைம்மா”, என்றவளுக்கு இப்பொழுது உதடுகள் எறிந்தது. கீழ் உதட்டின் உள் பக்கம் காயமாகி இருந்தது. அதுதான் எரிச்சலைக் கொடுத்தது.
அப்போ நேற்று நடந்தது உண்மைதானா? என்று மனதோடு கேள்விக் கேட்டு, சத்தமில்லாமல் உணவை வாங்கிக் கொண்டாள்.
“முதல் வாய் மட்டும் லேசா காரமா இருந்துச்சும்மா”, சிரிப்பாகக் கூறி தாயைச் சமாளித்து விட்டாள் அனு.
“ஹி ஹி, சாப்பிடுங்க”, கிண்டலாகக் கூறினார் சுபத்ரா.
இவள் அசடு வழிந்து விட்டு, சாப்பிட்டு முடித்தாள்.
இவள் கிளம்பி வெளியே வந்தாள். வெற்றி தீவிரமாக யாருடனோ கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் மறுபடியும். இவள் மெதுவாக நடந்தாள். அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். ஆனால், அவன் பார்க்கவில்லை.
அவன் பார்க்கவில்லை என்றதும், இவளுக்கு லேசாக மனம் உறுத்தியது. கண்கள் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. “ஏன் என் கண்கள் இன்று அவனின் பார்வைக்கு ஏங்குகிறது?”, அவளிடமே கேட்டுக் கொண்டாள். இந்த திடீர் மாற்றம் அவளுக்கே புரியவில்லை.
அவனையே நினைத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்தவளுக்கு, மனம் புத்தகத்தில் இல்லை. அவன் முத்தம் கொடுத்த சிலிர்ப்பு இன்னும் உதட்டில் குறு குறுவென்று இருந்தது. அவளின் உதட்டில் கெட்டவனின் பல் தடம். எரிச்சலாக இருந்தாலும், அந்த வலி சுகமாக இருந்தது.
“நேற்றும் எங்ககிட்ட பேசல. இன்னைக்கும் பேச மாட்டியா அனு?”, தோழிகளில் குரல் அவளின் செவியை எட்டவில்லை.
மாறாக, வெற்றியின் முகம் அவளின் கண்களுக்குள் நிறைந்து நின்றது.
“வீட்டு வாடகையை எனக்காகவா குறைத்தான் அந்த கெட்டவன்? பத்தாயிரம் கூட வேண்டாம் என்கிறான். எதற்காக? எனக்காகவா? ஏன் இதையெல்லாம் எனக்காக செய்கிறான்? அறைக்கு வந்து எப்படி தைரியமாக முத்தம் கொடுத்தான். அதுவும் அம்மா இருக்கும் பொழுதே!”, என்று ஏதேதோ எண்ணங்கள் அவளின் மூளையில் ஓடினாலும், கடைசியாக அவளுக்கு கிடைத்த ஒரே ஒரு பதில், உதட்டில் ஒளிர்ந்த புன்னகை மட்டுமே. லேசான வெட்கமும் முகத்தில் தவழ்ந்தது.
திடீரென்று புன்னகை மறைந்து போக, “இன்று ஏன் கெட்டவன் என் முகத்தை கூட பார்க்கவில்லை?”, வருத்தம் வந்து போனது அனுவுக்கு.
கல்லூரியில் இருக்க பிடிக்கவில்லை. கெட்டவனை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
“பூனைக்குட்டி”, என்று அவன் தன்னை தனித்துவமாக அழைத்ததை நினைத்து, கீழ் இதழைக் கடித்து இப்பொழுது வெட்கப்பட்டுக் கொண்டாள். வெட்கமும் வருத்தமும் மாறி மாறி வந்து அவளை இம்சை செய்தது.
அது ஒரு புது வித அனுபவமாக இருந்தது அவளுக்கு.
கல்லூரி முடிந்து வெளியே வந்தவளின் முன்னால், கருப்பு நிற கார் வந்து நின்றது. அவளை அழைத்து செல்ல, வெகு நேரம் காத்திருந்தது போல் இருந்தது.
காரின் கதவை திறந்து, அனுவை பார்த்தான் வெற்றி.
அனு அவனை திகைப்பாக பார்த்தாள்.
“அம்மா அழைச்சிட்டு வர சொன்னாங்க, அனு. கார்ல ஏறு”, என்றான் வெற்றி.
அவன் சொன்னதை கேட்டு, அவளின் இதயம் தாறுமாறான வேகத்தில் துடித்தது.
பயத்தில் அல்ல. வேறு எதோ ஒரு மாய உணர்வு அவளை சூழ்ந்து கொண்டது.
அவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன், ஸ்டைலாக தலையைக் கோதிக் கொண்டு, “வா அனு”, என்றான்.
இவள் மௌனமாக காரில் ஏறி அமர்ந்தாள்.
விஷாகாவும் நிஷாவும் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவள் அமைதியாக அவனுடன் காரில் ஏறி சென்றது, குழப்பமாக இருந்தது இருவருக்கும்.
“கார் ரொம்ப சில்லுனு இருக்குது. அப்போவே வந்து வெயிட் பன்றிங்களா?”, தலை குனிந்து, மெல்லிய குரலில் கேட்டாள் அனு.
அவனின் முகத்தை பார்க்க தயக்கமாக இருந்தது போலும். இவ்வளவு நேரமும் அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இப்பொழுது அருகில் பார்த்ததும், கை கால்கள் உதறியது.
“உனக்காகதான், அனு”, என்றான்.
இவளுக்கு மனம் முழுதும் சில்லென்ற உணர்வு.
தலை நிமிர்த்தி அவனை பார்த்தாள். அவன் இவளின் விழிகளில் கரைந்தான்.
அவன் விழிகளை பார்த்தவளுக்கு, தன் இதய துடிப்பின் சத்தம் வெளியே கேட்பது போல் தெரிந்தது.
“காயம் ஆறிருச்சா?”, என்று கேட்டான் வெற்றி.
“ம்ம், இப்போ கொஞ்சம் பெயின் பரவாயில்லை”, என்றாள் உள்ளங்கையை நினைத்து.
“நான் புது காயத்தை கேட்டேன்”, என்றவன் அவளின் உதடுகளை பார்த்தான்.
இவள் கீழ் இதழை அழுந்தக் கடித்து, சன்னல் வழியே பார்வையை சாலையில் பதித்தாள்.
“என்ன, பதில் சொல்லல?”, அவனின் குரலில் அத்தனை மென்மை.
“நீங்க ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க”, என்று அவனின் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கினாள்.
“வீடு வந்துருச்சு டி, பூனைக் குட்டி”, என்றான் வெற்றி.
இவளுக்கு சப்பென்று போனது. காரிலிருந்து உடனே இறங்கி, வீட்டுக்குள் ஓடி விட்டாள்.
*****
“என்ன டி, இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட?”, சுபத்ரா கேட்டதும் திரு திருவென்று விழித்தாள் அனு.
“நீதானம்மா கெட்டவன்கிட்ட சொல்லி என்னை அழைச்சிட்டு வர சொன்ன?”, என்று கேட்டாள்.
“நான் சொல்லலையே டி. தம்பியா வந்து உன்னை அழைச்சிட்டு வந்தாரு”, என்று கேள்வி கேட்ட சுபத்ராவை பார்த்து, குழந்தை போல் விழித்தாள் அனு.
“ஒரு வேலை நான்தான் சொன்னேனோ?”, என்று அவரே கேட்டுக் கொண்டார் குழப்பமாக.
“சொன்னிங்களா? இல்லையா?”, என்று முறைத்து பார்த்துக் கேட்டாள்.
சிறிது நேரம் யோசித்து விட்டு, “நான்தான் டி சொல்லிருப்பேன்”, என்றார் சுபத்ரா.
தாயின் பதிலைக் கேட்ட அனுவுக்கு புரிந்தது. தாய் தன்னை அழைத்து வர சொல்லி கெட்டவனிடம் சொல்லவில்லை. கெட்டவன்தான் என்னை பார்க்க வந்திருக்கிறான், என்று புரிந்து கொண்டாள்.
உடலில் ஏதேதோ மாற்றங்கள் உண்டாகி இருந்தது அவளுக்கு. அவனின் பெயரை சொல்லும் பொழுது மட்டும் இதயம் குளிர்ந்தது. உடல் லேசாக நடுங்கி அடங்கியது. உதடுகள் தானாக புன்னகைத்தது. அவனை பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் வெட்கம் வந்து போனது. இதழ்கள் தானாக விரிந்தது. அவனின் அருகாமையில் அவளின் மனம் உருகியது, என்று எண்ணற்ற மாற்றங்கள்.
வீட்டுக்கு வந்ததிலிருந்து அவள் படிக்கவில்லை. மாறாக, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிக் கொண்டிருந்தாள்.
“ஹய்யோ, புத்தகத்தை புரட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் கூட கெட்டவனின் முகம்தான் வந்து நின்றது”.
“என்ன இது? கெட்டவன் ஞாபகமா இருக்குது இன்னைக்கு?”, தலையை உலுக்கிக் கொண்டாள் அனு.
அனு, “தம்பி நைட் சாப்பாடு வேணும்னு கேட்டாரு. நீ போய் கொடுத்துட்டு வந்துரு”, என்று சுபத்ரா அவளிடம் உணவை கொடுக்க, விக்கித்து நின்றாள் அனு.
“நான் மட்டும் தனியாவாம்மா?”, பதற்றமாக கேட்டாள்.
“கொடுத்துட்டு வா டி. தம்பி பசியோட இருக்கும்”, என்று அனுப்பி வைத்தார்.
அவனின் ஞாபகமாக இருந்தாலும், தனியாக அவன் வீட்டுக்கு செல்ல பயமாகதான் இருந்தது.
அதை விட, அவன் முகம் பார்க்க ஆசையும் வந்தது. இப்பொழுது சிறிது நேரத்துக்கு முன்தானே அவனை பார்த்தாய், என்று உள் மனம் அவளிடம் கேட்ட கேள்விக்கு, “அந்த கெட்டவனை இன்னொரு முறை பார்க்க ஆசையாக இருக்கிறது”, என்று பதில் கூறிக் கொண்டாள்.
வீடு திறந்தே இருந்தது. ஹாலில் இருந்த சோஃபாவில் கொண்டு வந்த உணவை வைத்து விட்டு, “கெட்டவன் சார்”, என்று அவனை கூப்பிட்டாள்.
எந்த சத்தமும் இல்லை அவனிடம். மெல்ல அறையின் கதவை திறந்து உள்ளே சென்று, கட்டிலின் மறு பக்கம் பார்த்து விட்டு, பின்னால் திரும்ப, அவளின் முதுகை உரசிக் கொண்டு மிக நெருக்கத்தில் நின்றிருந்தான் வெற்றி.
இருவரின் முகமும் இரண்டு இன்ச் இடைவெளியில் இருந்தது.
“அம்மா சாப்பாடு கொடுத்து விட்டாங்க. அதான் கொண்டு வந்தேன்”, என்று நெஞ்சுக் குழி ஏறி இறங்கக் கூறினாள் அனு.
“அதுக்கு ஏன் ரூம்குள்ள வந்த?”, என்று கேட்டான்? அவனின் மூச்சு காற்று இவளின் முகத்தில் மோதி சென்றது.
“அ….அது, நான் கூப்பிட்டேன். நீங்க சத்தம் தரல. அதான் ரூம்ல இருக்கீங்களோனு நினச்சேன்”, என்றாள் தரையைப் பார்த்து.
“பொய் சொல்லாத? உன் வாய் எப்பவும் பொய் மட்டும்தான் அதிகமா சொல்லுது”, என்றான்.
அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவள் பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். ஓட்டப் பந்தயத்தில் ஓடுவது போல், பெரிய பெரிய மூச்சுக்களை வெளியே விட்டாள்.
அவளின் மூச்சு காற்று, அவனை தென்றலாய் தழுவி சென்றது.
அவளை பின்னால் இருந்த சுவற்றில் சாய்த்து நிறுத்தினான்.
“எ.. என்… என்ன பண்றிங்க, கெட்டவன் சார்?”, காற்றுக்கும் கேட்காத குரல், அவனின் செவிகளுக்கு மட்டும் கேட்டது.
அவளின் கழுத்தில் முகம் புதைத்தான் அந்த கெட்டவன். அவனின் மீசை ரோமங்கள், அவளின் பளிங்கு கழுத்தில் குத்தி, அவளுக்கு கூச்சத்தை ஏற்படுத்தியது. அவனை தடுக்க தோன்றாமல், அப்படியே நின்றிருந்தாள்.
“ஹேய், பூனைக் குட்டி, வயசுக்கு வந்துட்டியா டி நீ?”, அவளின் காதோரம் கிசு கிசுத்தவனை, நெஞ்சில் கை பதித்து தன்னை விட்டு விலக்கி நிறுத்தினாள் அனு.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த எபி பிடிச்சிருந்தா குட்டி ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்
