கெட்டவன் 9

தன் காதோடு கிசுகிசுத்தவனின் குரலில் பயந்து போய், அவனின் திண்ணிய மார்பில் கை வைத்து அவனைப் பின்னால் தள்ளி விட அவள் முயற்சி செய்ய, அவனோ அசையாமல் நின்றிருந்தான்.

உடற்பயிற்சியே செய்யாமல் அவனின் உடல் முறுக்கேறி இருந்தது. அவனின் மார்பில் அவ்வளவு வலிமை. அவளின் பிஞ்சுக் கரங்கள் அவனைத் தள்ளி விட முயற்சி செய்து தோல்வியைத் தழுவியது.

அவனின் மார்போ விறைப்பாய் நின்றது, இன்னும் முயற்சி செய் என்பது போல்.

அனுவின் முகம் செவ்வானமாய் சிவந்து போனது. பயமா? இல்லை வெட்கமா? அவளுக்கே தெரியவில்லை.

ஆனால், வெற்றிக்குத் தெரிந்தது அந்தச் சிவப்பின் அர்த்தம். அவளின் நுனி மூக்கு குப்பென்று சிவந்து இருந்தது.

“ப்ளீஸ், தள்ளி நில்லுங்க.” வாய் விட்டே கேட்டு விட்டாள் அவனின் பூனைக் குட்டி.

“கேட்டதுக்குப் பதில் சொல்லு, தள்ளி நிற்கிறேன்,” என்றான் அவளின் விழிகளில் கலந்து.

அவன் கேட்டதை நினைவு கூர்ந்து பார்த்து, கீழ் இதழை அழுந்தக் கடித்து, “இல்லை” என்பது போல் தலை அசைத்தாள்.

அவன் புருவம் சுருக்கி அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். அவனின் பார்வையில் உடல் முழுதும் கூசிப் போய் நின்றிருந்தாள் அனு.

“பொய் சொல்ற நீ,” என்றான் இமை சிமிட்டி.

இவளின் இமைகள் படபடத்தது. “உண்மையைத்தான் சொல்றேன்,” என்றவள் தலை குனிந்து கொண்டாள். அவனின் விழிகளைப் பார்த்ததும் தனக்குள் உருவாகும் புது மாற்றம் கண்டு உடல் சிலிர்த்தாள்.

அவனின் புருவங்கள் ஏறி இறங்க, அவனின் நடு நெற்றியில் அழகாக இரண்டு முடிச்சுகள் உண்டானது.

“அடியே அன்னபூரணி!” அவளின் முழுப் பெயரை உச்சரித்தான்.

இவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். “எப்படித் தெரியும்?” என்பது போல் அவளின் பார்வை.

“தெரியும்,” என்பது போல் அவன் கண் சிமிட்டினான்.

இவள் மூச்சை இழுத்து விட்டு, “சாப்பிட வாங்க. உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வச்சிட்டு நான் உடனே வீட்டுக்குக் கிளம்புறேன்,” என்றாள்.

“சாப்பிடத்தான் பக்கத்துல வந்தேன். நீதான் தடுத்துட்ட டி,” என்று இரு பொருள்படக் கூறினான். அவனின் குரலில் மென்மையை விட மோகம் கூடுதலாக இருந்தது.

“உங்களைப் பார்க்க பயமா இருக்குது,” உதட்டைக் குவித்து அழுவது போல் அவள் கூற, அவளை விட்டு விலகி நின்றான் வெற்றி.

அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவனை விட்டு விலகிச் சென்ற அனு, ஹாலில் ஓரமாக இருந்த பாயை எடுத்துத் தரையில் விரித்தாள்.

அவன் மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டு வந்து பாயில் அமர்ந்தான்.

உடனே அவனுக்கு உணவைப் பரிமாறினாள்.

அவன் உணவு உண்ணும் நேரம், அறைக்குள்ளேயே அவளின் விழிகள் சென்று அலைந்தது.

அவள் எதைத் தேடுகிறாள் என்று புரிந்து கொண்டவனின் இதழ்களில் புன்னகை மட்டும் அவ்வப்பொழுது வந்து போனது.

ஹாலில் இருந்தே அவனின் அறையைத் துலாவி விட்டாள். சரக்கு பாட்டில் எதுவும் அறையில் இல்லை. “இந்தக் கெட்டவன் குடித்து விட்டு வேறு எங்காவது குவித்து வைத்திருப்பானோ?” என்று சிந்தித்துக் கொண்டே அங்கும் இங்கும் பார்வையை அலைபாய விட்டாள்.

“என்ன தேடுற?” என்று கேட்டான் வெற்றி.

“ஒண்ணும் இல்லை. சும்மாதான்,” என்றாள் தலை அசைத்து.

“என்னனு சொன்னா நானும் சேர்ந்து தேடித் தருவேன். அதான் கேட்டேன். இல்லைனா தனியா தேடி உனக்குக் களைப்பா இருக்கும்,” என்றான் நக்கல் தொனியில்.

இவள் மௌனமாக நின்றிருந்தாள். சரக்கு பாட்டிலைத் தேடுகிறேன் என்றா சொல்ல முடியும். அதனால், வாயைத் திறக்கவில்லை.

அவன் சாப்பிட்டதும் கொண்டு வந்த பாத்திரத்தைக் கிச்சனுக்கு எடுத்துச் சென்று சுத்தப்படுத்திவிட்டுத் திரும்ப, அவளைக் கைகாட்டி அழைத்தது குளிர்சாதனப் பெட்டி.

“இதுல சரக்கு பாட்டில் இருக்குமோ, ஆனால், இன்னைக்குக் கெட்டவன் குடிச்ச மாதிரி தெரியலையே!” குளிர்சாதனப் பெட்டியைத் திறக்க கையைக் கொண்டு போக, வெற்றியே வந்து திறந்து விட்டான்.

சரக்கு பாட்டில்கள் இவளின் கண்களைக் கூசச் செய்தது. வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் ஒன்று கூட இல்லை குளிர்சாதனப் பெட்டியில். அதற்கு மாறாகப் பார்க்கும் இடமெல்லாம் சரக்குகள்.

வித்தியாசமான பாட்டில்கள் அணி வகுத்து வீற்றிருந்தன.

“என்ன அனு, உனக்கும் வேணுமா?” கீழ் இதழைக் கடித்து அவன் கேட்ட விதம் அவளைச் சரிக்கப் பார்த்தது.

“இது எல்லாமே சரக்கு பாட்டிலா?” அதிர்ச்சியாக அவள் கேட்க, “எல்லாமே ஜூஸ் பாட்டில் அனு,” என்றான் வெற்றி.

அவன் சொன்ன விதமே இது ஜூஸ் பாட்டில்தான் என்று நம்பி விடுவாள் போலும். அப்படி அழகாக அவள் நம்பும்படியாகக் கூறினான் கெட்டவன்.

“உனக்கும் ஒரு கிளாஸ் ஊத்தவா?” கண்ணடித்து அவன் கேட்க, பயத்தில் எச்சில் விழுங்கி நின்றிருந்தாள் அனு.

“ஹேய் பூனைக் குட்டி, உண்மையைச் சொல்லு. நீ நைட் பீர் அடிச்சிட்டுத்தான் படுப்ப?” என்று அவளின் கன்னம் வருடிக் கேட்டான் வெற்றி.

“அப்… அப்படினா என்னது கெட்டவன் சார்?” குழந்தை போல் விழித்தவளிடம், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து நீட்டினான்.

“தினமும் நைட் இதை அடிச்சிட்டுத் தூங்குனதாலதான் உன் ஸ்கின் சாஃப்ட்டா இருக்குது. நடிக்காத டி பூனைக் குட்டி,” என்றான்.

“ஐயோ! எனக்கு இந்தப் பழக்கம் எல்லாம் இல்லை கெட்டவன் சார். என்னை விட்டுருங்க,” என்றவளின் கைகளைப் பிடித்தான்.

“ஹய்யோ! உன்னோட பிஞ்சுக் கை கூட மைதா மாவு மாதிரி இருக்குது. தினமும் நைட் எத்தனை பாட்டில் அடிப்ப?” என்று நக்கலாகக் கேட்டான்.

அவனின் நக்கல் புரியாமல், “நிஜமா இல்லை சார்,” என்று பதற்றமானாள்.

“நானும் தினமும் ரெண்டு பாட்டிலாவது முழுசா காலி பண்றேன். ஆனால், உன் ஸ்கின் மாதிரி எனக்கு வர மாட்டிக்குது. ப்ச், பீர் கூட பொண்ணுங்க பேச்சைத்தான் கேட்குது,” என்று நக்கலாக உதட்டைச் சுளித்தான்.

“தினமும் ரெண்டா?” என்று முணுமுணுத்தவளுக்கு முதன் முறை அவனை நினைத்துக் கவலை உண்டானது.

“தினமும் ஏன் சார் ட்ரிங்க்ஸ் பண்றீங்க? உடம்புக்கு எதாவது ஆச்சுன்னா என்ன பண்றது?” உண்மையான வருத்தத்தோடு கேட்டாள் அனு.

“என்னை நினைச்சி வருத்தப்பட யார் இருக்காங்க? எனக்கு ஒண்ணுனா கவலைப்பட்டுத் துடிக்க யார் இருக்காங்க? உடம்பு சரியில்லைனா குழந்தை மாதிரி பார்த்துக்க யார் இருக்காங்க?” என்றவனிடம், “நான் இருக்கிறேன்” என்று வாய் வரை வந்து வெளியில் வரத் துடித்த வார்த்தையை மென்று விழுங்கினாள் அனு.

அவன் ஒன்றும் அவளின் அன்பைப் பெறவோ, இல்லை அவளை மயக்குவதற்காக, அவளின் கரிசனைக்காகவோ சொல்லவில்லை. எதார்த்தமான நிஜத்தைச் சொன்னான் அவ்வளவுதான்.

“உங்க அம்மா எப்போ இறந்தாங்க கெட்டவன் சார்?” என்று கலங்கும் விழிகளோடு கேட்டாள்.

அதற்குள் அவன் ஒரு பாட்டில் சரக்கை வாயில் சரித்து இருந்தான்.

“எங்க அம்மா இறக்கும் போது எனக்கு எத்தனை வயசா இருந்திருக்கும்னு வளர்ந்த பிறகுதான் கணக்குப் பண்ணிப் பார்த்தேன். அப்போ எனக்கு ஒரு அஞ்சு வயசுதான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் பேபி க்ளாஸ்தான் போய்ட்டு இருந்தேன். அப்படி ஒரு நாள் ஸ்கூல் போய்ட்டு வீட்டுக்கு வந்தேன். எங்க அம்மா கடைசியா என்னை ஒரு தடவை அவங்க கண்ணால பார்த்துட்டுத் தூக்குல தொங்கிட்டாங்க,” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அனுவுக்கு உடம்பில் ரத்த ஓட்டம் நின்றது.

அவளின் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீர் கன்னத்தைத் தாண்டி வழிந்தது.

எப்பொழுதும் இரண்டு பாட்டிலுக்கு மேல் குடித்தாலும் கல்லாக நிற்பவனின் கால்கள் இன்று தளர்ந்தது போல் இருந்தது.

தடுமாறியவனைத் தாங்கிப் பிடித்தாள் அனு.

கிச்சனில் இருந்து ஹாலுக்குக் கொண்டு செல்வதற்குள் பெரும்பாடாக இருந்தது அவளுக்கு.

“பன்னி வெயிட் இருக்கான்யா இந்தக் கெட்டவன்,” அவனை இழுத்துக் கொண்டு சோஃபாவில் போட்டவளுக்கு மூச்சு வாங்கியது.

சோஃபாவில் சரிந்தவன், அவளின் இடுப்பைப் பற்றி இழுக்க, பூக்குவியல் போல் அவனின் பாறை நெஞ்சில் மோதி விழுந்தாள் அனு.

அவளின் வெண் பஞ்சு மேகங்கள் அவனின் பரந்த மார்பில் மோதி நின்றது.

“உன்னைப் பார்க்க எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?” என்று அவளின் மான் விழிகளில் மாண்டு போக நினைத்தான் கெட்டவன்.

“அவனின் அம்மாவின் பெயரே தனக்கும் இருப்பதால், அம்மாவைப் பார்ப்பது போல் இருக்கிறது” சொல்வான் என்று எதிர்பார்த்து ஆவலாக அவனின் தடித்த இதழ்களைப் பார்த்தாள்.

“நீ என்னோட…” பேச்சை நிறுத்தி அவளின் மான் விழிகளோடு சேர்த்து முகத்தையும் பார்த்தான்.

அவள் வாகாக அவனின் நெஞ்சிலேயே சரிந்து அவனின் பதிலை எதிர்பார்த்தாள்.

“நீ என்னோட பூனைக்குட்டி டி,” என்றான் கெட்டவன்.

இவளுக்கு வெட்கம் கொன்றது. முகம் முழுதும் மின்மினிப் பூச்சு போல் பளிச்சென்று மாறியது. வெட்கத்தில் குங்குமமாய் சிவந்தவள் அவனின் நெஞ்சிலிருந்து எழுந்தாள்.

அதற்குள் அவன் போதையின் பிடியில் கண்களை மூடியிருந்தான்.

இதயம் நிரம்பிய பரவசத்துடன் வீட்டுக்குச் சென்றாள்.

ஆனால், அங்கு சென்றதும் மனதை நிறைத்தது சோகம். அவன் தனிமையை நினைத்து அவனே கலங்கவில்லை, அவனுக்குப் பதில் இவள் கலங்கினாள்.

நள்ளிரவு வரை அவனை நினைத்தே தூக்கம் தொலைத்தவளை, பின்னர் நித்திரா தேவியே வந்து அவளைத் தன் பக்கம் இழுத்துச் சென்றார்.

****

அதே நள்ளிரவு நேரம் மெல்ல மெல்ல போதை தெளிந்தது கெட்டவனுக்கு.

கண் மணிகளை உருட்டி, கண்களைத் திறந்தான்.

“ஒரே பாட்டில்ல எப்படிக் கவுந்தேன்?” சத்தமாகப் புலம்பியவன், அறையில் சென்று கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்துப் பேசினான்.

அவனின் முகத்தில் அத்தனை இறுக்கம் தெரிந்தது. அழைப்பைத் துண்டித்து விட்டு, தனக்குப் பிடித்த கருப்பு நிறச் சட்டையை அணிந்து கொண்டு வேறொரு கருப்பு நிற வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான்.

சட்டை கையை மடக்கி விட்டவாறு, வீட்டை விட்டு வெளியே வந்து எங்கோ காரில் சென்றான்.

போதையில் அனுவுடன் பேசியது நினைவு வந்து மெல்லப் புன்னகைத்தும் கொண்டான்.

அவனிடம் கைபேசியில் பேசிய குண்டு குண்டு ரவுடிகள், அந்தக் குடிசை வீட்டின் கதவைத் தட்டினர்.

இரவு நேரத்தில் வெற்றியைத் தவிர அந்த வீட்டின் கதவை யாரும் தட்ட மாட்டார்கள். இப்பொழுது கதவைத் தட்டுவது வெற்றி போல் தெரியவில்லை. குடிசை வீட்டுக்குள் இருந்த ரேவதிக்குக் கை, கால்கள் எல்லாம் உதறியது.

“யோ… யாரோ கதவைத் தட்டுறாங்க. போய்ப் பாருய்யா.” ஒண்ணுக்கும் பயன்படாமல் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் கணவனைத் தட்டி எழுப்பினாள் ரேவதி.

“ஹேய்… போடி. பேசாமல் போய்ப் படுடி,” உளறலாக ரேவதியின் கணவன் இவ்வளவு பேசியதே பெரிது.

“என்னாச்சி டா, அவனைத் தூக்கிட்டிங்களா?” ரவுடிகளிடம் கேட்டான் வெற்றி.

அனுவைப் பார்த்த பின் ரேவதியின் வீட்டுக்கு வராதவன், இன்று வந்திருக்கிறான். ஆனால், எதற்கு?

“கதவே திறக்கலண்ணா,” என்றான் ஒரு ரவுடி.

இப்பொழுது கதவை வெற்றி தட்டினான். இரண்டாவது தட்டில் கதவைத் திறந்தாள் ரேவதி.

அவள் திறந்ததும் நான்கைந்து ரவுடிகள் வீட்டுக்குள் புகுந்து அவளின் கணவனைக் குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு சென்றனர்.

“அவரை எங்க தூக்கிட்டுப் போறாங்க வெற்றி சார்?” ஒன்றுக்கும் உதவாமல் வீட்டில் இருந்தாலும் கணவன் என்ற அன்பில் அவளின் கண்களில் தேங்கி நின்ற நீரோடு அழுகுரலில் கேட்டாள் ரேவதி.

“காலையில என் ஆபிஸ்க்கு வா,” என்று ஒற்றைப் பதிலோடு உரையாடலை முடித்துக் கொண்டு கிளம்பினான் வெற்றி. 

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா குட்டி ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ். 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!