பழைய அரண்மனையைப் புதுப்பித்ததுப் போன்று இருந்த வீட்டின் முன்னே புதிதாக மூன்று கார்கள் நின்றது. உள்ளே பலரின் பேச்சு சத்தம் சந்தோஷமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
சமையலறைலிருந்து டீயின் நறுமணம் அந்த வீதியெங்கும் நாசியை நுகர வைத்து இழுக்கும் வண்ணம் இருந்தது. பின்னே தங்களின் இரண்டாவது மகளைப் பெண் பார்க்க இன்று வந்திருக்கிறார்கள் என்றால் மணக்க மணக்க கொடுக்க வேண்டாமா ?
“இதை நான் போய் அவுங்களுக்கு கொடுத்துட்டு வாரேன். நீ சீக்கிரம் அடுத்து ஊத்தி வை “ என்று வேலைக்காரியிடம் கூறிய சுபராணி அதனை எடுத்துக் கொண்டு முற்றத்திற்கு வந்தார்.
பிரம்மாண்ட ஹாலில் வனவிலங்குகளின் தலைகள், கொம்புகள் ஆங்காங்கு பதிக்கப்பட்டிருக்க பேன், ஏசி இல்லாமலே குளிமை தரும் வீடாக இருந்தது.
ஆண்கள் அனைவருக்கும் தேக்கு மரத்தால் உற்பத்தி செய்யப்பட்டு அமர்வதற்காக இளவம் பஞ்சை அதன் மீது பயன்படுத்தி மெத்மெத்தென வடிவமைக்கப்பட்ட சோபாவில் அமர்ந்திருந்தனர்.
பெண்களோ கீழே பட்டு கம்பளத்தில் அமர்ந்திருக்க, அனைவருக்கும் கொண்டு வந்து டீயைக் கொடுத்தார் சுபராணி.
“இருங்க இதோ எடுத்திட்டு வந்துறேன் “ இன்னும் சிலருக்கு எடுப்பதற்கு உள்ளேச் சென்று விட,
“தாத்தா ! இவங்க எல்லாரும் எதுக்கு இங்கே வந்திருக்காங்க ?” சந்தேகமாய் நிமிர்ந்து தாத்தாவின் மடியில் அமர்ந்திருந்த ஆதவன் கேட்டான்.
“உன்னோட சித்தியை இன்னைக்கு பொண்ணு பார்க்க வந்திருக்காங்கடா ராஜா !” என்றதும்,
“அப்படின்னா ?” என்று தன் சந்தேகம் தீர்ந்தே ஆக வேண்டும் என்பதுப் போல் மீண்டும் துருவிக் கேட்க,
“இவன் எப்பவும் இப்படி தான் துருதுருன்னு கேள்வியா கேட்பான். அமைதியா இரு ஆதவன் “ என்று தந்தையின் அருகில் அமர்ந்திருந்த அந்த வீட்டின் மூத்த இளவரசி அவனின் அன்னை இதழினி அதட்டினாள்.
“எனக்கு தெரிஞ்சே ஆகணும் ? சொல்லு தாத்தா சொல்லு “ என பிடிவாதமாக தன் தாத்தாவின் சட்டையை இழுத்துக் கொண்டுக் கேட்கவே,
“சித்திக்கு கல்யாணம் பண்ணுறதுக்குடா “
“கல்யாணம் எதுக்கு பண்ணுறாங்க ?”
“சந்தோஷமா இருக்க தான் “ என்க,
“ஓ அதான் சித்தி எப்போ பார்த்தாலும் கவலையாவே இருக்கா ? அப்போ இந்த கல்யாணம் முடிஞ்சா சித்தி சந்தோஷமா இருப்பாங்களா ?” என தன் தாடையின் கை வைத்துக் கொண்டு கேட்க, அங்கிருந்த அனைவரும் அந்த சிறுவனின் கேள்வியில் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“அவன் ஏதோ விளையாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கான். நான் போய் என் தங்கச்சியை கூட்டிட்டு வரேன் “ எனக் கூறிய இதழினி,
“நீ வாடா முதல “ என்றவாறு தன் மகனை அங்கிருந்து தூக்கிக் கொண்டுச் சென்றாள்.
தங்கையின் அறை நோக்கிச் செல்லும் வழியிலே மகனை அடித்தவாறே, “பெரியவங்க பேசும் போது பேசக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன் ஏன்டா கேட்க மாட்டிக்கே ? “ என தன் ஆறு வயது ஒற்ற மகனை அடித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.
அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டே வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்த இதழ்யா திரும்ப, உடன் பிறந்தவள் வருவதைக் கண்டாள்.
பட்டுடுத்தி, மல்லிகைச்சூடி, நகையணிந்து வந்தவர்களுக்கு காட்சிக் கொடுக்கத் தயாராகி நின்றாலும் மனம் முழுவதும் வெறுமை. எப்படி அவளால் அவர்களின் முன்னேச் சென்று சந்தோஷமாக நிற்க முடியும் ? நெஞ்சத்தில் அழியா உருவமாக பதிந்து விட்டவனை ஒரு நொடியும் பெண்ணவளால் உதறி விட முடியாதே ?
என்று அவனின் மீது தான் காதல் கொண்டோமோ அன்றே அவளின் மகிழ்ச்சியும், சிரிப்பும் பறிப்போனது. காதலில் விழுந்தால் புதிதாக நாணம் பிறக்கும், மேனியில் உணர்ச்சிகள் எல்லாம் வித்தியாசமாக முளைக்கும் என்றெல்லாம் கேள்வி தான் பட்டாள் இதழ்யா. அவளால் அதனை அனுபவிக்க முடியவில்லை என்பது விதியின் சதியோ என்னவோ !
“கிளம்பிட்டையா, வா உனக்காக தான் காத்துக்கிட்டு இருக்காங்க “ என்க,
எழுந்து நின்றவளின் முகத்தில் வெட்கம், தயக்கம், படபடப்பு எதுவுமேமில்லை. யாரோ எதற்கோ வந்திருக்கிறார்கள் என்பது போல் அக்காவோடு செல்லத் தயாரானாள்.
“ஹேய் ! என்னடி உன் பிரச்சனை ? எதுக்கு இப்படி இருக்கே இதழ் ? இவன் கூட அங்க சபையில வச்சி சித்தி சந்தோஷமாவே இல்லைன்னு சொல்லுறான். இவனுக்கு தெரியற அளவுக்கு தான் நீ இருக்கே ?” என்று அதட்டலாய் அக்கா விசாரிக்க,
“இது என்ன எனக்கு முதல் தடவையா பொண்ணு பார்க்க வாராங்க சொல்லு “ சலிப்போடுக் கேட்டாள்.
“நீ முதல்ல விருப்பத்தோட இருந்தா தான் எல்லாம் நல்லா அமையும். ஒழுங்கா சிரிச்ச முகமா இரு. உன் மாமா என்னை பொண்ணு பார்க்க வரும் போது எனக்கு கால் தரையில நிக்கவே இல்லை தெரியுமா ? அப்படியே என்னவோ பண்ணுற மாதிரி ஒரு படபடப்பு “ என்று வழக்கமாக அவள் கூறுவதையே கூற, ஒவ்வொரு முறையும் இதை தான் கேட்டுக் கொண்டிருந்தாள் இதழ்யா.
இவளுக்கு இந்த கடவுள் இதனை தெரிந்து செய்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இவளை பெண் பார்த்துச் சென்ற பின்னும் சரி பார்க்க வரும் போது சரி ஏதாவது ஒரு தடங்கல் வந்து நின்று விடும். இப்போது பெண் பார்க்க வந்திருப்பது கூட பத்தோ பதினொன்னோ தான்!
சபையின் முன் வந்து நின்றவளோ அனைவரையும் கண்டு கரம் குவித்து வணங்க, அங்கிருந்த ஆண்களுக்கு மத்தியில் தான், மாப்பிள்ளையான கேசவனும் அமர்ந்திருந்தான்.
“பொண்ணு போட்டோல பார்த்ததை விட நேர்ல அம்சமா தான் இருக்கு “ என்க, தனக்கு மனைவியாக வரப் போற பெண்ணையே கண்டவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
அவளின் விழிகளில் ஒரு வெளிச்சமே இல்லாததுப் போல் தோன்றவே, “என்னப்பா உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா ? உனக்கு சம்மதம் தானா ?” என்று உடன் வந்த பெரியவர் அவனின் பார்வையை வைத்துக் கேட்டார்.
“எனக்கு சம்மதம் தான். ஆனா பொண்ணு ஏன் ஏதோ விருப்பமே இல்லாத மாதிரி இருக்கு “ என நேராகவே வந்தவர்கள் முன்னிலையில் அவன் கேட்க, அவளோ குரல் வந்த திசையைக் கூட பார்க்கவில்லை.
“என்னம்மா உனக்கு எங்க வீட்டு பையனை பிடிக்கலையா ?” கேட்ட நொடி, அப்போது தான் ஆண்கள் அமர்ந்திருந்த புறமே திரும்பினாள்.
“இதுல யார் மாப்பிள்ளை ?” கேட்க, அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சி.
“என்ன கனகராஜ் பொண்ணு இப்படி கேட்குது ? போட்டோ காட்டலையா ?” என்று அவளின் தந்தையிடம் கேட்கவே, அவரோ மகளை முறைத்துவிட்டு சமாளிக்க முடியாது திணறி யோசித்தார்.
“அவர் என் கிட்ட கொடுத்தாரு. நான் தான் பார்க்கல. நேர்ல பார்த்துக்கலாம்ன்னு நினைச்சேன் “ என தந்தையை அவளே அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றி விட, மாப்பிள்ளை யார் எனக் கூறினார்கள்.
மனம் முழுவதுமே தன்னவனே நிறைந்திருக்க ஏனோ அவனிடம் தான் சென்று சேர்வேன் என்ற ஒரு துளி நம்பிக்கை இன்னும் நெஞ்சில் ஓட்டிக் கொண்டு இருக்கவே, சம்மதம் கூறினாள்.
அதன் பின்னே அவளின் பெற்றோரும், உடன் பிறந்தவளும், வந்தவர்களும் நிம்மதிக் கொண்டனர்.
“அப்பறம் என்ன பேச வேண்டியதை பத்தி பேசிரலாம் “ என்க, அங்கே பொம்மையாக நின்றாலே தவிர என்ன பேசுகிறார்கள் என்பதை இதழ்யா கேட்கவில்லை.
சீர்வரிசை, நகை அனைத்தையும் பேசி நல்ல நாள் குறித்து விடலாம் என கூறி வந்தவர்கள் கரம் குவித்து மகிழ்ச்சியோடு கிளம்பினர்.
வந்தவர்களை வழியனுப்பி வைத்து உள்ளே வர, இதழ்யாவோ தன்னறைக்குச் செல்லத் திரும்ப, அவளைத் தடுத்தார் தந்தை கனகராஜ்.
“உனக்கு பிடிச்சிருக்கு தானே ?” தன் செல்ல மகளிடம் அவரும் ஒரு முறை விருப்பத்தை அறிந்துக் கொள்ள கேட்க,
“என்னை என்ன சொல்ல சொல்லுறீங்கப்பா ? ஒவ்வொரு தடவையும் வர்ற எல்லாருக்கும் பொம்மையா இருந்து என்னை நானே வெறுக்க ஆரம்பிடிச்சிட்டேன். உங்களுக்கு ஏன்ப்பா என் மனசு புரிய மாட்டிங்குது. இது தான் கடைசி தடவை இதுக்கு மேல யாரையும் கூட்டிட்டு வந்து என்னை காட்சி பொருளா நிக்க வைக்காதீங்க ? முடியலப்பா ” வேதனையோடு கூறியவளோ அங்கிருந்துச் சென்று விட்டாள்.
“அவ கிடைக்கா விடுங்கப்பா ? இந்த தடவை எல்லாம் நல்லதாவே நடக்கும் “ மூத்தவள் கூற,
“உன் தங்கச்சி மனசுல வேற எதுவும் இருக்கும்மாம்மா ?” சந்தேகமாய் தந்தைக் கேட்கவே, மூத்தவளோ கோவம் கொண்டாள்.
“நாங்க நீங்க பெத்து வளர்த்து பொண்ணு. தப்பான வழில போக மாட்டோம். எங்களையே ஏன்ப்பா நீங்க சந்தேகப்படுறீங்க ? இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சா கூட கொஞ்சம் தான் வருத்தப்படுவா ? அவ ஏதோ ஒவ்வொரு தடவையும் வந்து பார்த்திட்டு போறாங்களே தவிர நல்லது நடக்கலையே தவிச்சிக்கிட்டு இருக்கா, நீங்க அதை போய் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க ?” என்று இதழினி தவறாகப் புரிந்துக் கொண்டு தான் கூறியது சரியென தந்தைக்கு புரிய வைக்க முயற்சிச் செய்தாள்.
“என் பொண்ணு மேல யார் கண் பட்டதோ தெரியல அவளுக்கு மட்டும் ஒரு நல்லதும் நடக்க மாட்டிங்குது “ என்ற புலம்பலோடு கனகராஜ் அமரவே,
“வாயை கழுவுங்க முதல்ல “ திட்டிக் கொண்டு அங்கிருந்த டம்ளரை எடுத்துச் சென்றார் சுபராணி.
அந்த நொடி சரியாக இதழினியின் கணவன் திருமுகில் அழைக்கவே அழைப்பினை எடுத்தாள்.
“சொல்லுங்க அத்தான் ?” என்க,
“ராத்திரி எப்படி வீட்டுக்கு வர்றதா உத்சேசமா ? இல்லை உன் அப்பன் வீட்டுலையே தங்க போறையா ?” என்று எடுத்ததுமே கேட்க,
“அங்க வந்தனாப்புல நீங்க என்னத்த கிழிக்க போறீங்க ? நான் வரணும் அவ்வளோ தானே வந்து தொலையுறேன். என் அப்பன் வீட்டுல இருந்தா தான் உங்க வீட்டுல யாருக்கும் பொறுக்காதே “ என வெறுப்போடு பேசிக் கொண்டிருக்கும் நொடியே அழைப்பு துண்டித்தது.
“என்னாச்சும்மா ? மாப்பிள்ளை வரச் சொல்லுறாரா ?”
“அந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லை. வீடாப்பா அது. அங்க இருக்கவே கடுப்பா இருக்கு. நானும் போன புதுசா எப்படியாவது இவரை பிரிச்சி தனியா கூட்டிட்டு வந்திரலாம் பார்த்தா ஏழு வருஷம் ஆகப் போகுது ஒன்னும் முடியல. அப்பன், ஆத்தா சொல்லுறது தான் வேதவாக்கு, அவங்களே தெய்வம்ன்னு இருக்காரு. சொந்தம் விட்டு போக கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்க ? ஆனா அவங்க நினைச்சாங்களா சொல்லுங்க“ என்று தந்தையிடம் புலம்பவே,
“விட்டு பிடிம்மா. ஆனா என்னைக்கும் விட்டிராதே ?” என்க, சரியென்று பக்கத்து ஊரில் இருக்கும் தன் மாமியார் வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தாள்.
கனகராஜ், சுபராணி தம்பதியருக்கு இரண்டுமே பெண் பிள்ளைகள். மூத்தவள் இதழினி, இரண்டாவது மகள் இதழ்யா. மூத்தவளுக்கு இளங்கலை பட்டம் முடித்ததுமே தன் தங்கை மகனான திருமுகிலுக்கு திருமணம் முடித்து வைத்தார். சிறியவளையும் அவர்களின் வீட்டிலே கொடுக்க நினைக்க அப்போது ஆரம்பித்தது இரு குடும்பத்துக்குமான பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. பிறந்த வீட்டினை என்றுமே தான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்ற வைராக்கியத்தோடு இருந்தாள் இதழினி.
இதழ்யாவிற்கு அவளின் அக்காவிற்கு நான்கு வயது வித்தியாசம். இளங்கலை முடித்தவளோ முதுகலை படிக்க வேண்டுமென கூற, சரியென்று படிக்க வைத்தனர். எப்போதுமே அவர்களின் கிராமத்தில் பெண்கள் அதிகம் படித்தது இளங்கலை மட்டுமே ! இவள் ஒருத்தி மட்டுமே மேலும் இரண்டு வருடம் படித்து முடிக்க வேலைக்கு அனுப்பாது வீட்டிலே வைத்துக் கொண்டார் கனகராஜ்.
வேலைக்கு அனுப்பினால் ஊராரின் பேச்சினை யார் கேட்பார் ? அதை விட மகள் எதுவும் காதல்,கீதல் என்று தவறான பாதையில் சென்று விட்டால் தங்களின் மானமே போய் விடுமே அதனாலே வீட்டோடு வைத்துக் கொண்டார்.
படித்து முடித்ததுமே பெண் பார்க்க ஆரம்பிக்க, ஒவ்வொரு வரானாக ஏதாவது ஒரு காரணத்தை வைத்து தடங்கலாகிக் கொண்டே இருந்தது. முதலில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே இருந்தனர்.
“எனக்கு கல்யாணமே வேண்டாம் என்னை விட்டிருங்க. என்னால முடியலை “ என்று தன்னவனை மனதில் நினைத்து இதழ்யா கூற,
“ஏன் யாரையாவது விரும்புறையா என்ன ? அப்படி மட்டும் பண்ணு அடுத்த நிமிசமே பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம வெட்டி போட்டிருவேன் “ என தந்தை மிரட்ட, பெண்னவளால் தைரியம் கொண்டு அதற்கு மேல் தந்தையிடம் பேச முடியவில்லை.
‘எப்படி அவளால் பேச முடியும் ? அவள் கொண்ட நேசம் தான் ஒரு தலையானதே ?’
“காட்சி பொருளா நிக்க பிடிக்கலை அதான் சொன்னேன் “ எனக் கூறிச் சென்று விட, எப்படியாவது மகளுக்கு திருமணத்தை முடித்து விட வேண்டுமென உறுதியாக இருந்தார்.
அதனாலே மகள் கூறியதையும் கூட கேட்காதவர் மீண்டும் மாப்பிள்ளை எனக் கூறி அழைத்து வந்துக் கொண்டே இருக்க, தடங்கலும் வந்தவாறே இருந்து இரண்டு வருடங்களைக் கடந்து விட்டது.
கனகராஜ் இவ்வளோ தீவிரமாக இருக்க முக்கிய காரணம் எப்படியாவது இரண்டாவது மகளுக்கு திருமணத்தை முடித்து தன் உடன் பிறந்த தங்கையின் முகத்தில் கரியைப் பூசி விட வேண்டுமென என்ற எண்ணம் தான்.
மறுநாள் அவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமென காத்திருக்க, அழைப்பு வராதுப் போக மன நெருடல் கொண்ட கனகராஜ் நேற்று வந்த மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்தார்.
“என்னாச்சு சம்மந்தி நேத்து வந்து பார்த்திட்டு போனீங்க ? எந்த தகவலும் சொல்லலை “ என்று ஆர்வமோடுக் கேட்க,
“இல்லைங்க. நீங்க வேற மாப்பிள்ளை பார்த்துக்கோங்க “
“ஏன் என்னாச்சு ? எதுக்கு இப்படி சொல்லுறீங்க ?” அதிர்வோடு கனகராஜ் கேட்க, அவரின் சத்தம் கேட்டு, அன்னை மகள் இருவருமே முற்றத்துக்கு வந்து விட்டனர்.
“நேத்து நாங்க அங்கே வந்த நேரமோ என்னவோ தெரியல என் பொண்டாட்டி திடீருன்னு நெஞ்சு வலின்னு படுத்துட்டா. அதுவுமில்லாம ஊருக்குள்ள விசாரிக்கும் போது பொண்ணுக்கு எதுவும் தோஷம் இருக்குற மாதிரி கேள்விப்பட்டேன் “ என்ற நொடி,
“போதும் நிறுத்துங்க. வேண்டான்னா வைங்க. தேவையில்லாத பேசாதீங்க ?” என்றவரோ அழைப்பினை துண்டிக்க, இது மாதிரி பலமுறைச் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறார் கனகராஜ்.
ஆனால் அவரைப் பொறுத்தவரை மூத்தவளை விட இளையவள் ராசிக்காரி. என்ன சுபநிகழ்வோ, தொழிலோ எது தொடங்கினாலும் இளையவளை முன் நிற்க வைத்தே தொடங்குவார். அதில் அவருக்கு அதீத விருத்தியும் கிட்டும். அப்படி இருக்க இவர்கள் இவ்வாறு கூறினால் எந்த தந்தையால் தான் தாங்க முடியும் ?
“என்னாச்சுங்க ? எதுக்கு இவ்வளோ கோவம் ?” கணவரின் அருகில் வந்த சுபராணி கேட்க,
“வேண்டாம்ன்னா வேண்டாம்ன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான். என் பொண்ணுக்கு தான் ஏதோ தோஷம், குறைன்னு சொல்லிட்டு. எல்லாம் என் தப்பு இவனை மாதிரி ஆளுங்க வர வச்சிருக்கவே கூடாது “ என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி ஆத்திரம் தீரக் கத்தவே, அங்கிருந்து அமைதியாகச் சென்றாள் இதழ்யா.
மகளின் சத்தம் கேட்டு பெற்றவர்கள் இருவருமே காண மௌனமோடு கதவினை மூடும் மகளைத் தான் கண்டனர்.
அறைக்குள் நுழைந்த இதழ்யா தன் கப்போர்டை திறக்க அங்கே சிறிய பூஜை அறை ஒன்றை வைத்திருந்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ் முருகா ! இந்த உதவியை பண்ணுற நீங்க நான் கேட்டதை மட்டும் ஏன் செய்ய மாட்டிக்கீங்க ? நாள் நெருங்க நெருங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னை விட்டு அவர் போயிட்டா என்னால ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க முடியாது. எப்படியாவது என்னை அவர் கிட்ட சேர்த்திருங்க “ என்று வேதனையோடு கண்ணீர் மல்க வேண்டியவளின் நெஞ்சத்தின் துருபதனின் பிம்பம் தான்.
