ஜனனம் – 2

ஊதுபத்தியின் நறுமணமும், பூக்களின் வாசனையும், சாம்பிராணி புகையும் பரவியிருந்த பூஜை அறையில், வெள்ளை வேஷ்டி, கருப்பு சட்டை அணிந்து கையில் ஆரத்தி தட்டோடு நின்றான் துருபதன்.

சூடத்தை ஏற்றியவனோ அங்கிருந்த குலதெய்வம், மற்ற தெய்வம் தங்களின் முன்னோர்கள் அனைவருக்கும் ஆரத்தி சுற்றி மணியோசை ஒலிக்க விட்டு அவர்களின் ஆசிப் பெற்றான்.

அங்கிருந்த திருநீரை எடுத்து பூசி நெற்றியில் வைத்தவன், தன் ஆறடி கட்டுமஸ்தான உடலை தரையில் சரிய வைத்து வணங்கி எழுந்து, இதயத்துடிப்பின் அருகே தன் கரங்களை வைத்தான்.

“அப்பனே ! சுடலை மாடசாமி. இன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடக்கணும் “ என்ற வேண்டுதலை கூறி விழி திறந்து புன்னகை முகமாக அறையை விட்டு வெளியேறினான்.

மணியோ காலை ஆறெனக் காட்ட, அவனின் அன்னை வரலட்சுமி எதிரே வந்து சூடான காஃபியை மணக்க மணக்க கொடுக்க வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். அன்றைய செய்தித்தாள் அப்போது தான் வந்திருக்க, இன்னும் யாருமே பிரிக்காது இருந்தனர்.

அதனை எடுத்து காஃபி அருந்தும் வரை மட்டுமே படித்தவனோ பின் எழுந்து நின்று, “அம்மா ! நான் போய்ட்டு வரேன் “ என்று சமையலறைப் பார்த்து குரல் கொடுக்க,

“சரிடா ! சாப்பாட்டுக்கு வெள்ளன வந்திரு “ என உள்ளிருந்து அவரோ குரலிட, கேட்டுக் கொண்டு வெளியேறினான்.

அவனுக்காக வார் செருப்பு வாசலில் காத்துக் கொண்டிருக்க அதனை அணிந்து தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு விரைந்தான் துருபதன்.

அடுத்த பத்து நிமிடப் பயணத்திற்கு பிறகு அவன் உருவாக்கிய ஒருங்கிணைந்த பண்ணைக்கு வர, அவனைக் கண்டதுமே வாயில்லா ஜீவராசிகள் அனைத்துமே வரவேற்றது.

தினமும் அந்த பண்ணைக்கு இரு பெண்களும் நான்கு ஆண்களும் வேலை வந்து விடுவார்கள். இரவில் ஒரு ஆண் மட்டும் அங்கே தங்குவார். துருபதனின் பெரும்பாலான நேரங்கள் எல்லாம் இங்கு தான்.

சொல்லப் போனால் காதலெனும் சூறாவளியில் சிக்கி மனக்காயங்களோடு இந்த ஊருக்கு வந்துச் சேர்ந்தவனுக்கு உயிர் கொடுத்தது என்றால் அது இந்த ஜீவன்கள் தான். ஆம் அவனின் மனதில் இருந்த வேதனைகள் எல்லாம் இவர்களிடம் தான் கொட்டுவான்.

அவன் புல்லட் ஓசைக் கேட்டதுமே நான்கு  எட்டு பாய்ச்சலில் அசூர வேகத்தோடு வந்த சிப்பிப்பாறை நாய்கள்,  இறங்கிய அடுத்த நொடியே அவனைச் சுற்றி வளைத்து.

ஒன்றா, இரண்டா எட்டு பேர் அவனை நகர விட்டது தங்களின் பாசத்தை பொழிந்தனர்.

இதே இவனை தவிர மற்றவர்கள் வந்திருந்தால் இந்த நொடி அவர்களின் உயிர் எமலோகம் தான் சென்றிருக்கும். கடித்து குதறி துவம்சம் செய்து ரத்தத்தில் அந்த இடமே நனைந்திருக்கும்.

ஆனால் வந்தவனோ அந்த ஜீவனுக்கு உயிர் கொடுத்து உணவு கொடுத்து இருப்பிடம் கொடுத்தவன் அல்லவா. அதை விட பாசத்தையும் பகிர்ந்துக் கொடுத்தவனாயிற்றே !

அதில் வீரா என்ற ஒருவன் அவனின் மீது மற்றவர்களை முந்திக் கொண்டு தாவ, “டேய் ! வீரா, போதும்டா போதும். விடு “ என்று நெஞ்சில் மிதித்து தன்னை நுகர்ந்தவனைக் கண்டு பாசமோடு தலை தடவிக் கூறிய பின்னே கீழே இறங்கியது.

முன்னே குனிந்து கால்களை மடித்து தலையையும், வாலையும் ஆட்டி தன் நேசத்தையும், அன்பையும் தன்னை வளர்த்தவனுக்கு காட்டவே, நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தான் துருபதன்.

அதனைக் கண்டு மற்றவர்கள் டைசன்,டிராகன், டாமி, கருப்பன், சிம்பா, வெள்ளை அனைத்துமே அவனை இடிக்க, அனைவரையும் தடவி முத்தம் வைத்தே விலகினான்.

பின் அங்கிருந்து உள்ளே நடக்க, அவன் பின்னே வீரா மட்டுமில்ல அவன் வளர்த்த அனைத்து வகையான கோழிகளும் சுற்றி வந்தது.

“வாங்க தம்பி !” என்று அங்கு இரவு தங்கியிருந்த கந்தசாமி கூற,

“நீங்க போய்ட்டு வாங்க அண்ணே ! நான் பார்த்துக்குறேன் “ என்றதும், சரியெனக் கூறி தான் இரவுக் கொண்டு வந்த சாப்பாட்டு பையை எடுத்துக் கொண்டு அவரோச் சென்று விட்டார்.

தன் வேஷ்டியை தூக்கி மடித்து கட்டியவனோ, அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு அங்கிருந்த பண்ணை வீட்டுக்குள் நுழைந்தான்.

அடுத்தநொடியே கையில் ஒரு பையோடு வந்து அதிலிருந்த தானியங்களை எடுத்து நாட்டுக்கோழி, கின்னிக்கோழி, வான்கோழி, கருங்கோழி அனைத்திற்கும் வீசிவிட உணவு உண்ண ஆரம்பித்தது. அதன் குஞ்சுகளை பத்திரமாக கூண்டுக்குள்ளே வைத்து உணவளித்து விட்டுப் போட்டிருந்த முட்டைகளையும் எடுத்து தனியே வைத்தான்.

அதனைத் தொடர்ந்து குட்டை நீருக்குள் நீந்திக் கொண்டிருந்த வாத்துக்களும் அதிலிருந்து வெளியே அவனை நோக்கி ஓடி வரவே, அதற்க்காக முந்தின நாட்களே ஊறவைத்த உணவினை தண்ணீர் அருகே கொண்டு வந்து வைத்தான்.

சந்தோஷமாக வெளியே இருந்தவர்கள் அவனுக்கு நன்றியை கூறி உண்ண, ஓரமாக இருந்த ஒரு அறைக்குச் சென்று கதவினை திறக்க, படபடவென சத்தத்தோடு அறை முழுவதும் பறந்தது புறாக்கள்.

அதன் குஞ்சுகளோ இரை வேணுமென்று கீச்..கீச்யென கத்த, கையோடுக் கொண்டு வந்த தானியங்களை அதற்கு போட்டு விட்டவன், சிறிதை கையில் வைத்து நீட்டினான்.

பறந்து வந்த வெள்ளை நிற மயில் புறா ஒன்று தனக்கு பிடித்த பொறிகடலை உணவை அவனின் கையில் நின்றவாறு உண்ண, அதனை மென்மையாக வருடி விட்டான்.

“என்னலே ! உனக்கு கோதுமை, கம்பு எல்லாம் பிடிக்காதோ. பொறிகடலை தான் பிடிக்குமோ ?” கேட்கவே, பதில் கொடுப்பதுப் போன்று இறகை இரண்டையும் ஆட்டிக் காட்டியது.

பின் அசை போட்டுக் கொள்ள நினைத்து முழுமையாக முழுங்க, “மெல்ல சாப்பிட்டுலே தங்கம் !” என்று தன் கரங்களில் இருந்த உணவு முடியும் வரை உண்ண வைத்தே கையை இறக்கினான்.

வெளியே ஆடுகள், மாடுகள் சத்தம் கேட்கவே, ஒவ்வொரு புறா கூண்டினையும் பார்வையிட்டு அதற்கு தண்ணீர் வைத்தப் பின்னே அந்த கூரையிட்ட அறையை பூட்டு விட்டு வெளியே வந்தான்.

பக்கவாட்டு பகுதிக்குச் செல்ல, ஒரு புறம் மாடுகள் அனைத்தும் கட்டு தரையில் எழுந்து நின்று அவனைப் பார்த்து கத்த, இன்னொரு புறம் பரண் மீதிருந்த ஆடுகள் அனைத்தும் தங்களின் குட்டி இன்னும் தங்களிடம் வந்துச் சேரவில்லை என்று கத்தியது.

ஆட்டுக்குட்டிகள் அனைத்தையும் திறந்து விட, குதித்துக் கொண்டு தங்களின் அன்னையை தேடி ஓடி பாலினைப் பருகவே, பைக் சத்தம் கேட்டது.

பால் பீச்சுவதற்கு வழக்கமாக வருபவன் வந்து விட்டான் என்பது புரிந்தது.

கன்றுக் குட்டிகளை அவிழ்த்து விடவே அன்னையிடம் சென்று முண்ட ஆரம்பித்தது.

மணியோசையும் சத்தமும் எழுப்ப, மிரள வைக்கும் திமிலைக் கொண்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்று யாருக்குமே அடங்காது அவனை அழைத்தது. அவனின் பாசத்துக்கும் கை சுகத்துக்கும் மட்டுமே எப்போதும் அடங்கும். மேய்ச்சலுக்கு கூட அதனை யாராலையும் அவிழ்க்க முடியாது கட்டுத்தரலையிலே தான் இருக்கும். வேலைக்கு எத்தனை ஆட்கள் வந்தாலும் அதற்கு உணவு கொடுத்து, தண்ணீர் காட்டி, குளிக்க வைத்து ஏன் அதன் இடத்தினை சுத்தம் செய்வது கூட அவன் தான்.

“என்ன சுப்பையா கொஞ்சம் சீக்கிரம் வர பாரேன். கன்னுக்குட்டி பசி தாங்க மாட்டிக்கிது “ என்க,

“உங்க பண்ணைக்கு வந்து தானே தம்பி முதல்ல பாலை பீச்சுறேன். சாயங்காலம் வர்றேன்னு சொன்னா வேண்டாம் ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் கறக்க சொல்லிட்டீங்க ? இப்போ தானே மணியே ஏழாகுது தம்பி “

“உங்களுக்கே தெரியும் நான் பணத்துக்காக இதை எல்லாம் வளர்க்கலை. ரெண்டு தடவை பாலைக் கறந்து அதை உறிஞ்சி எடுத்திட்டா அதுக்கு எப்படி பலம் இருக்கும். ஏற்கனவே கோடை நேரமா இருக்குல அண்ணே ! மழைக்காலம் வரட்டும் பார்த்துக்கலாம் “ என்க, அவரோ சரியெனக் கூறி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

அதற்குள் இவன் சென்று கொம்பனுக்கும் (காளை ) முயல்களுக்கு தீனியிட்டு வர, சரியாக பால் கறந்து முடித்தார் வந்தவர். அவரிடமிருந்து பண்ணைக்கு தேவையான பாலினை வாங்கிவிட்டு மீதி பாலினைக் கொடுக்க, வாங்கிக் கொண்டு சென்றார்.

“சிட்டு, எங்க போனே நீ கண்ணாம் பூச்சி விளையாடுறியா, ஒழுங்கா வந்திரு அப்போ தான் உனக்கு பால் கிடைக்கும் “ என்ற நொடி, அவனின் காலை யாரோ உரசியது.

கீழே குனிந்துக் காண, ‘மியாவ் ! மியாவ் !’ என சத்தமிட்டு செல்லபிராணியான பூனைக்குட்டி சிட்டு கத்தவே, கையிலிருந்த பாலினை அதன் பாத்திரத்தில் ஊற்றினான்.

ஏற்கனவே நன்றாக உண்டு விட்டேன் என்பதுப் போல் அதன் வயிறோ பெரிதாக இருக்கவே, தடவிக் கொண்டே, “இன்னைக்கு என்ன எலியா ! இல்லை பல்லி,பாச்சானா !” கேட்டான்.

அதுவே திரும்பி ஒரு இடத்தைக் காட்ட, அங்கே அரைகுறையாக தின்றுப் போட்ட எலி ஒன்று கிடக்கவே, “ஓ அதுனால தான் இவ்வளோ நேரம் ஆளைக் காணோம்மோ ! அது சரி தான் “ என்க, தன் கைபேசி ஓசை எழுப்பியது.

அவனின் தந்தையிடமிருந்து அழைப்பு வரவே, “சொல்லுங்க அப்பா ! “ என்றான்.

“எங்கடா இருக்கே ?”

“பண்ணையில தான் இருக்கேன் “

“நல்லாதா போச்சு. நேத்து நம்ம கதிரேசன் மகன் கீழே விழுந்துட்டான் போல. மாவுக்கட்டு போட நாட்டுக்கோழி முட்டை கேட்டாங்களாம். வரும் போது எடுத்திட்டு வந்திரு. அப்பறம் இன்னைக்கு அறுவடை முடியுது. ஆளுங்க வந்ததுமே ஆட்டையும், மாட்டையும் பத்திக்கிட்டு நம்ம வயலு பக்கம் வந்து மேய்க்கச் சொல்லு சரியா “ என்க,

“சரிப்பா வரும் போது எடுத்திட்டு வந்துறேன். கோழிச்சாறு குடிச்சா உடம்புக்கு கேட்டும். வேணும்ன்னா சொல்ல சொல்லுங்க அதையும் பிடிச்சிட்டு வரேன் “

“பொடிப்பையன் தானே கைக்கட்டு சரியானதும் கொடுக்கலாம். வீட்டுக்கு வரும் போது நாராயணன் பணம் தருவான். வாங்கிட்டு வந்திரு. நான் இன்னைக்கு சீக்கிரமே வயல்காட்டுக்கு கிளம்புறேன் “

“சரிங்கப்பா. ஆளுங்க வந்ததும் சொல்லிட்டு கிளம்புறேன் “ எனக் கூறி கைபேசியை வைத்தவனோ கொம்பனிடம் சென்றான்.

மற்ற வேலைகளை ஆட்கள் பார்த்து விடுவார்கள் என்பதால் கொம்பன் இருக்கும் இடத்தினை சுத்தம் செய்து சாப்பிட்டு போட்ட மீதியை எடுத்து தனியாகப் போட்டு கஞ்சித் தண்ணீர் காட்டி அதற்க்கான வேலையை முடிக்க சரியாக எட்டு மணிக்கு ஆட்களும் வந்துச் சேர்ந்தார்கள்.

“என்ன தம்பி ! கொம்பன் என்னைக்கு தான் எங்க பேச்சை கேட்க போறான்னோ தெரியல “ என்க, கர்வமோடு புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

“தம்பி, சினைக்கு போட ஆளுங்க ஆசைப்பட்டு நம்ம கொம்பனை கேட்குறாங்க. கொடுப்போம்மா ஆளுங்களை வரச் சொல்லட்டுமா ?”

“வேண்டாண்ணே ! அதோ கருப்பன் வளரட்டும். அவனை வச்சி பார்த்துக்கலாம். கொம்பனை நம்ம பேர் சொல்ல ஜல்லிக்கட்டு மட்டுமே வளர்த்தது அண்ணே ! அதுனால இணைச்சேர்க்கைக்கு வேண்டாம். மூனு வருஷமாச்சு இந்த வருஷம் இவனை ஜல்லிக்கட்டு தயார்ப்படுத்த போறேன் “

“சரிங்க தம்பி !”

“நல்லா ஆளுங்க இருந்தா வர சொல்லுங்க, கொம்பை சீவி விடணும் “ என்கவே, அவரும் சரியெனக் கேட்டுக் கொண்டு தன் வேலையை பார்க்கச் சென்றார்.

பின் சுத்தம் செய்ய வந்த பெண்களிடம், “அக்கா ! புறா கூண்டுல நல்லா சுத்தம் பண்ணுங்க. திறந்ததுமே கெட்ட வாசனை வருது “ என்க,

“சரிங்க தம்பி. நாங்க பார்த்துக்குறோம் “

“வீட்டுக்குள்ள பால் வச்சிருக்கேன். எல்லாரும் காஃபி போட்டு குடிச்சிக்கோங்க. வேற ஏதாவது தேவையா அக்கா ?”

“இந்த கறிக்கடைகாரன் கறியை வேற லேட்டாவே வந்து கொடுக்குறான். நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க தம்பி. அவன் கொடுத்தது அப்பறம் சமைச்சி இவனுங்களுக்கு சாப்பாடு போட ரெண்டு மணியாகுது “

“நான் போகும் போது ஒரு வார்த்தை சொல்லிறேன் “ என்றவனோ இதன் பின் அவர்களை கவனிக்கும் அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து விட்டு தன் புல்லட்டை நோக்கிச் சென்றான்.

உடன் வந்து வளர்ப்பு பிராணிகள் வழியனுப்பி வைக்க, அங்கிருந்துச் சென்றவனோ இதன் பின் என்னென்ன வேலைகள் என்பதை மனதில் குறிப்பிட ஆரம்பித்தான்.

( துருபதன் இவனின் கடந்த கால கசந்த வாழ்க்கையைப் பற்றி அறிந்துக் கொள்ள மோகத்தீ அணையுமாடி கதையின் முதல் பதினைந்து பாகங்களை படித்தால் போதும் )

திருப்பதி வரலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகன் தான் துருபதன். மூத்தவன் திருமுகில், இளையவள் நிலா.

திருமுகிலுக்கு தன் மாமன் மகளோடு திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆக ஆறு வயதில் ஆதவன் என்ற ஒரு மகன் இருக்கிறான். ஆரம்பத்தில் தந்தையோடு அவரின் தொழிலை கவனித்து வந்தவனுக்கு உள்ளூரிலே கூட்டுறவு வங்கியில் அரசாங்க வேலை கிடைக்க அதனைச் செய்து வருகிறான். ஒவ்வொரு நாளும் மனைவியோடு எலியும், பூனையுமாக தான் இவனின் வாழ்க்கைச் செல்லும்.

துருபதன் சென்னையிலிருந்து படித்து அங்கே வேலைப் பார்த்து மனம் வெந்து இங்கே வந்து பண்ணை ஒன்று ஆரம்பித்தான். தந்தையின் தொழில் முழுமையாக கவனித்து வருகிறான். எங்கே ஒரு நொடி நின்றால் கூட அச்சில்லா வண்டி தடம் புரண்டு விடுவதுப் போல் மனமும் சென்று விடவே, அதனை மாற்றவே எந்த நேரம் வேலையைப் பார்த்து வந்தான். இவன் வந்த பிறகே பெற்றவர்கள் இருவரும் நிம்மதியாக இருக்க நினைக்க, எங்கே அந்த விதி அவர்களை விட்டது. முப்பத்தியொரு வயதாகியும் திருமணமே வேண்டாமென்று இருப்பவனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனையில் தான் பெற்றவர்கள் மருகினர்.

ஊர்க்கார்களும், சொந்தகளும் கேட்கும் நிலைக்கு பெற்றவர்களை துருபதன் தள்ளி விட, ஒரு வழியாக தங்கைக்கு திருமணம் முடியட்டும் தான் செய்துக் கொள்கிறேன் என்று வார்த்தையை விட்டு பெற்றவர்களின் மனதினை குளிர வைத்தான்.

இரண்டு அண்ணன்களின் பாசத்தையும் ஒன்றாக தனியாளாக இருந்து அனுபவிக்கும் நிலா அந்த வீட்டுக்கே இளவரசி. போன வருடம் தான் படிப்பு முடித்திருக்க, அவளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்திருந்தனர்.

இரவு நேரம் போல் தன் மகனோடு அமர்ந்து இதழினி விளையாடிக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்தான் திருமுகில். இதழினி அந்த வீட்டுக்கு மருமகள் என்று தான் பெயரே தவிர ஒரு நாளும் அப்படி நடந்ததில்லை. வந்தவர்களை கவனிப்பது முதல் வீட்டின் வரவு,செலவு வரை அனைத்தையும் வரலட்சுமியே பார்க்க சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல் வாழ்ந்து வந்தாள். யார் என்ன சொன்னாலும் கண்டு கொள்வதில்லை.

அவள் இப்படி இருக்க காரணம் ஒன்று இவர்களை விட செல்வ செழிப்போடு பிறந்த வீட்டில் வாழ்ந்தது. இரண்டாவது சொந்த அத்தையின் வீட்டில் வாக்கப்பட்டு வந்து தன்னையே அவர்கள் எதுவும் பேச விடாது செய்து வைத்த காரியம் தான்.

இவளின் தந்தையான கனகராஜ், மாமியாரான வரலட்சுமி இருவருமே உடன் பிறந்தவர்கள். ஒன்றாக இருந்த குடும்பம் இவர்களின் திருமணத்திற்கு பின்னே பிரிந்தது.

“என்னடி, நேத்து உங்க அப்பன் வீட்டுக்கு போனே எதுவும் நல்ல தகவல் வந்ததா ?” என்று நல்ல எண்ணமோடு திருமுகில் கேட்க, கேட்டது ஒரு குத்தம் என்று கட்டிய கணவனை பிடித்துக் கொண்டாள்.

“ஏன் ! நல்லது நடந்து அதை கெடுக்க எதுவும் நினைக்கிறீங்களோ ? உங்களுக்கு தான் எங்க வீட்டுல விசேஷம் வந்தாலே பிடிக்காதே ?”

“அப்படி நீயா நினைச்சிக்கிட்டா நாங்க என்ன பண்ண முடியும் ?”

“என்னது நானா நினைச்சேன்னா ? அப்போ எதுக்கு என் அப்பாவை அவமானப்படுத்துனீங்க ? என்னால அதை என்னைக்கும் மறக்க முடியாது சொல்லிப்புட்டேன். சும்மா என் வாயை கிளறாதீங்க ? எங்க அப்பாவை எதிர்த்த பாவத்துக்கு தான் இன்னும் உங்க தம்பி ஒண்டி கட்டையாவே கிடக்காரு “  என்க,

“தேவையில்லாம எதுக்கு இப்போ என் தம்பியை பேசுற ?”

“அப்படி தான் நான் பேசுவேன். உங்களால என்ன பண்ண முடியும் “ என்று புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு அவனை நோக்கி வந்தாள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page