மாயோன் – 2
கார்த்திக் எப்பொழுதும் கிரீன் டீ இனிப்பு எதுவும் கலக்காமல் அப்படியேதான் குடிப்பான் .ஆனால் அபிஷேக் வேண்டுமென்றே தேன் கலந்துக் கொடுக்கவும் கார்த்திக் அதை குடித்தவன் கத்தினான்.
அப்போதுதான் தனது சிறிய மகன் போட்ட காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்த கல்பனா தேவி பெரிய மகன் போட்ட சத்தத்தில் வேகமாக கார்த்திக்கின் அறைக்கு சென்றார் .
“அம்மா அவன் என்ன செய்து வச்சிருக்கான் பாருங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா கிரீன் டீ போடுங்க .இல்லையா நானே போட்டுக்கறேன்” என்று கார்த்திக் மீண்டும் சத்தம் போட்டான்.
இதில் நொந்து நூடுல்ஸான கல்பனா ‘காலையில் ஒரு காபியை கூட நிம்மதியாக குடிக்க விட மாட்றானுங்களே?’ என்று நினைத்து பெரிய மகனை சமாதானம் செய்தவர் டீ கப்புடன் கீழே வந்தார்.
அங்கே அபிஷேக் காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருக்க அவனைப்பார்த்து முறைத்தார் கல்பனா..
“என்னமா எதுக்கு இப்போ முறைக்கிறீங்க. நான் என்ன உங்க பெரிய மகன் மாதிரி காலையில் எழுந்து காச்சு மூச்சு சொல்லி கத்திக்கிட்டா இருக்கேன்.நல்ல பிள்ளையா லட்சணமா அவனுக்கு கிரீன் டீ தானே போட்டுக் கொடுத்தேன்”என்று ஒன்றும் அறியா சிறு பிள்ளை போல பேசியவனை
காதைப் பிடித்து திருகியவர்,
“டேய் ஏண்டா இப்படி படுத்தற .உங்க இரண்டு பேரிடமும் பெரிய போராட்டமா இருக்குடா”என்றவர் சமையலறைக்குள் சென்றார்.
சரவணராஜன் கையில் கிரீன் டீயுடன் வந்தவர் ,”கல்பனா நீ டென்ஷனாகாத மா .
இதை எடுத்துட்டு போய் அவன்கிட்ட கொடு . உன் சின்ன மகன் அவன் கத்தும் போதே என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்” என்றதும் கல்பனா இருவரையும் பார்த்த முறைத்தார்.
இப்பொழுது அப்பாவும் ,பிள்ளையும் சேர்ந்து சிரிக்கவும் கல்பனா இருவரையும் திட்டித் தீர்த்தவர் மீண்டும் தன் பெரிய மகனுக்கு கிரீன் டீயை எடுத்துக் கொண்டு சென்றார்.
இனியா அந்த உருவத்தை பார்த்தவள் பயந்து நடுங்கினாள். இதுவரை சாதாரணமாக இருந்த அந்த நபரின் முகம் இப்பொழுது தீயில் கருகி சதையெல்லாம் தொங்கி கோரமாக காட்சியளித்தது.
அந்த உருவம் தனது உண்மையான முகத்தை அவளுக்கு காண்பித்து சத்தமாக சிரிக்க அதில் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த இனியா பயத்தில் அங்கேயே மயங்கினாள்.
அப்போது அங்கே வந்த வேறொருவன் தண்ணீர்
தெளித்து அவளை எழுப்பினான் .
இனியா கண் விழித்து பார்த்தவள் அங்கே இருப்பவனை கண்டதும் முகம் மலர அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அவனோ அவளின் முதுகை நீவி விட்டவன், ” அழாதே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? தனியா இப்படி வராதேன்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.அவன்தான் உன்னைத் தொடர்ந்து வரானே.? நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே சரி வா வீட்டுக்கு போகலாம்”என்றான்.
“இல்ல நானே போய்க்கிறேன் உங்களுக்கு எதுக்கு தொந்தரவு “என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு கூறியவள் எழுந்து நிற்க முடியாதவளாய் மீண்டும் கீழே விழப் போக, “இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல “என்ற மாயோன் அவளை கைத்தாங்கலாக பிடித்து நிற்க வைத்தான்.
திடீரென்று அந்த மாயோன் காணாமல் போக மீண்டும் அந்த உருவம் அவளின் முன் வந்து நின்றது .அந்த உருவத்தைக் கண்டு மீண்டும் அலறிய இனியா அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்.
ஓட ஆரம்பித்தவள் யார் மீதோ மோதி நிற்க மறுபடியும் அந்த மாயோன் அவள் எதிரில் காட்சி தந்தான்.
“என்னை விட்டுட்டு எங்க போனீங்க நீங்க .மறுபடியும் அந்த ஆள் வந்துட்டான் தெரியுமா?” என்ற இனியா அவனை அணைத்துக்கொள்ள அவனும் அணைத்தவன் அவள் முகத்தை நிமிர்த்த அந்த மாயோனை பார்த்தவள் மீண்டும் அலறியவள் அங்கிருந்து ஓடினாள்.
” என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க “என்று அலறியவள் அங்கே குட்டையாக இருந்த நீரை கவனிக்காமல் அதில் கால் தடுக்கி கீழே விழுந்தாள் இனியா.
“இனியா எந்திரி இன்னைக்கும் ஆரம்பிச்சிட்டியா ?ஏன்டி இப்படி பண்ற “என்று அவளின் அம்மா அவளை உலுக்க அதில் தன்னிலை அடைந்தவள் அதாவது தூக்கம் கலைந்த இனியா தன்மீது ஈரமாக இருப்பதை உணர்ந்தவள்,” அம்மா என்ன இது? இப்போ எதுக்கு என் மேல தண்ணி ஊத்தினீங்கமா “என்று கத்தினாள்.
“அடியேய் நான் ஏன்டி உன் மேல தேவையில்லாம தண்ணி ஊத்தப்போறேன் . நானும் இவ்வளவு நேரமா உன்னை எழுப்பிட்டே இருக்கேன்.கத்தறியேத் தவிர கண்விழிக்க மாட்டேங்கற.ஏன்டி இப்படி நடுராத்திரில கத்தினா நான் எப்படி தூங்கறது.ஏன்டி இப்படி பண்ற மறுபடியும் ஃப்ரண்ட்ஸ் கூட ஊர்சுத்தினியா? கண்ட நேரத்தில் வெளியே போகாத காத்து ,கருப்பு அடிச்சிடும் சொன்னா நீ கேட்கவே மாட்டியா ?பெண்பிள்ளையா லட்சணமா இருடி .உன்னை கட்டிக்க போறவன் என்ன பாடுபடப் போறானோ தெரியலையே?”என்று சத்தம் போட்டார்.
(ஹ ஹ ஹ அது அவனின் தலையெழுத்து )
“அச்சோ அம்மா அப்போ இதெல்லாம் கனவா .நான் கூட உண்மையோ நினைச்சு பயந்துட்டேன் “என்றவள் ‘அந்த மாயோன் உண்மையாகவே என் வாழ்க்கையில் இருக்கக் கூடாதா’ என்று நினைத்தவள் சரி சரி நான் தூங்கறேன் .என்னை தொந்தரவு பண்ணாத” என்று இனியா மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
இனியாவின் அம்மா லக்ஷ்மி,’தன் மகள் தினமும் இப்படி கனவு காணறா .ஏன் தெரியலையே ?’என்று பயந்தவர் தூக்கத்தை தொலைத்தார்.
லட்சுமி காலையில் எழுந்தவர் தன் கணவரை அழைத்து இரவு நடந்த விஷயத்தை கூற ,”என்ன சொல்ற லட்சுமி”
“ஆமாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு ,இதுக்கு முன்னாடி எப்போதாவது ஒரு தடவைதான் இப்படி கனவு கண்டு அலறுவாஇப்போ அடிக்கடி இப்படி நடக்குது.”
“சரி சரி விடு லட்சுமி அவ வயசு பொண்ணு தானே.? பேய் படம் பார்த்திருப்பா
இல்லை யாராவது அந்த மாதிரி கதை சொல்லியிருப்பாங்க.அதனாலதான் இப்படி அவளுக்கு கனவு வருது .
நான் அவகிட்ட விசாரிக்கிறேன்
இப்போ எதுவும் அவளை தொந்தரவு பண்ணாதே அவ காலேஜ்க்கு போயிட்டு வரட்டும்” என்றார் சிவக்குமார்.
சென்னையில் மிகப் பிரபலமான கல்லூரி இனியா தனது இருசக்கர வாகனத்தில் தேவதை போல அங்கே சென்று இறங்கினாள். அவளுக்காக ஒரு பெரிய கூட்டமே அங்கு காத்திருந்தது.
இனிய பார்க்கிங் ஏரியாவில் தனது வண்டியை விட்டவள் வேகமாக ஓடிச் சென்று அங்கிருந்தவனின் தோளில் உரிமையாய் சாய்ந்தவள், ” டேய் எனக்கு ஃநைட் மறுபடியும் அந்தக் கனவு வந்துச்சு .எனக்கு ரொம்ப பயமா இருக்குடா” என்றாள்.
“ஏய் என்னடி சொல்ற மறுபடியுமா
நீ ஒண்ணு பண்ணுடி ரௌடி பேபி அம்மா அடிக்கடி சொல்லுவாங்க நைட் படுக்கப் போறதுக்கு முன்னாடி சாமி கும்பிட்டு படுக்கச் சொல்வாங்க. நீ அதை இன்னைக்கு செய்து பாரு. மறுபடியும் கனவு வந்தால் என்ன செய்யலாம்னு பார்க்கலாம் சரியா. என் ரௌடி பேபி இதுக்கெல்லாம் பயப்படுவாளா என்ன?”
“அப்படியா சொல்ற எனக்குதான் சாமி கும்பிடறது கஷ்டமாச்சேடா.”
என்றவள் ஹி ஹி ஹி என்று இளித்தாள்.
“அடியேய் வாலு என்னடி இப்படி பேசற. மனசார மனமுருகி அந்த முருகனை வேண்டிக்கோ உனக்கு எந்த கனவும் வராது”
“ஓகேடா ஓகே ஓகே நீ சொல்றத செய்யறேன் .மறுபடியும் உன் புராணத்தை ஆரம்பிச்சிடாத.”
“ஏய் குட்டிப்பிசாசு உனக்கு இருக்க வாய் இருக்கு பாரு ,இந்த மாதிரி வாய் பேசினதால் தான் என் அண்ணா உன்னை திட்டிட்டே இருக்கான். உன்னால நானும் சேர்ந்து திட்டுவாங்கறேன்”
“என்னடா இது அநியாயமா இருக்கு ,ஏன்டா உங்க அண்ணாவை நான் இதுவரை பார்த்ததுகூட கிடையாது .அவர் ஏன் என்னை திட்றார்?”
“ஏய் பைத்தியம் அம்மா பிறந்தநாளுக்கு நீ அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தியே
அப்போ அவன் பக்கத்து ரூம்ல தான் இருந்தான். நீ பண்ண அட்டகாசத்தில் அவன் வெளியே வந்திருக்கான் .
அப்போ தான் நீ நம்ம வானரங்கள் கூட சண்டை போட்டுட்டு இருந்தியே . அதை பார்த்ததிலிருந்து உன்னை திட்டிட்டே இருக்கான் .அவனை பொறுத்தவரைக்கும் பெண் பிள்ளைங்க அமைதியா இருக்கனும் ,எதுவும் தேவை இல்லாம பேசக் கூடாது. அதே நேரத்துல அவங்க வாழ்க்கையிலே முன்னேறனும்.நல்லா படிக்கனும் ,தைரியமா இருக்கனும் ,அப்படின்னு சொல்லிட்டே இருப்பான்”
“ஏன்டா அபி உன் கூடப்பிறந்துட்டு அந்த சிடுமூஞ்சி ,ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஏன்டா இப்படி இருக்கார்”என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தை கேட்டாள் இனியா.
“அதை ஏன் டி என்கிட்ட கேட்கற. அவங்கிட்டயே கேளு”என்று சிரித்துக் கொண்டே கூறினான் அபிஷேக் ராஜன்.
“ஏன்டா டேய் எருமை .நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா? மீ பாவம் டா..அந்த ஸ்டிரிக்ட் ஆபிஸரை நான் பார்க்க கூட விரும்பல எங்கிருந்து பேசறது. ஆளை விடு சாமி”
“இனியா அவரை இப்படி பேசாத.. அவர் சரியாதான் சொல்றாரு அன்னைக்கு நீ ஓவரா வாய் பேசின”என்று அங்கே வந்தாள் தீபா.
தீபா இவள் இனியா, அபிஷேக்குடன் படிப்பவள்.
தீபாவிற்கு இவர்களை பார்த்தாலே எப்பவும் பொறாமை தான்.
“ஆமாண்டா வந்துட்டா கார்த்திக் ராஜன் நாமத்தை சொல்லிட்டே இருக்கும் இந்த பைத்தியம். சரி உன்னை யார் இப்போ இங்கே அழைச்சா. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் “என்றான் அன்பு.
“டேய் ஓவரா பேசாதடா .அவர் சரியாதான் சொல்றாரு .நாம அன்னைக்கு பண்ணது ரொம்ப அதிகம். மத்தவங்க வீட்டுக்கு போய்ட்டு அப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணா யார் தான் சும்மா இருப்பாங்க”என்றாள் தீபா.
“அபி இங்க பாருடா. விட்டா இவள் உனக்கு அண்ணியா வந்துடுவா போலிருக்கே கவனமாக இருடா “என்றான் பாலாஜி.
அபிஷேக் ,”ஏய் இரண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க டா என்றவன் விடு தீபா அவங்க விளையாட்டுக்கு பேசுறாங்க கோச்சுக்காத”என்றான் அபிஷேக்ராஜன்.
“சரி அபிஷேக் இவங்களைப் பத்தி எனக்கு தெரியாதா?” என்றவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
இனியா ,”என்னடா இவள் வேகமா ஓடுறத பார்த்தா நம்ம ஸ்ருதி வந்துட்டு இருக்கா போல”என்றாள்.
“அதில் உனக்கு என்ன சந்தேகம் இனியா. நம்ம ஸ்ருதி தான் வரா”
என்றான் பாலாஜி.
அனைவரும் தீபாவை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அங்கே வந்த ஸ்ருதி,” என்னடா அந்த பிசாசு இங்க வந்துட்டு போகுது”
“ஸ்ருதி என்ற பேய் வந்ததால அந்த பிசாசு இங்கேயிருந்து ஓடிப்போச்சு” என்ற அன்புவை வெளுத்து வாங்கினாள் ஸ்ருதி.
அபிஷேக்,”இனியா இங்க பாரு நான் சொல்றதெல்லாம் உனக்கு புரியுது தானே?இன்னொரு நாள் நான் உனக்கு அண்ணாவை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.அவன் இதுக்கு கண்டிப்பா ஒரு சொல்யூஷன் சொல்வான்” என்றான்.
“ஓகே டா உன் அண்ணன் புராணத்தை நிறுத்து போலாம் வா “என்றாள் இனியா.
இவர்கள் ஐவர் குழு எப்பொழுதும் எங்கே சென்றாலும் ஒன்றாக சுற்றி வருவது மட்டுமே இவர்களின் தலையாய கடமை. அதேநேரம் அனைவருமே படிப்பில் சுட்டி .
அபிஷேக் ராஜன் ,இனியா ,ஸ்ருதி ,பாலாஜி ,அன்பு இவர்கள் அனைவரும் தாங்க அந்த ஐவர் படை.
அபிஷேக் இவனுக்கு தன் நண்பர்களை யாராவது ஏதாவது சொன்னா அவர்களிடம் சண்டைக்குப் போவான் .இது கார்த்திக் ராஜனின் காதுக்கு எப்படியும் எட்டி விடும் .
கார்த்திக் ராஜனின் உயிர் நண்பன் புவனேஷ் அபிஷேக்ராஜனின் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறான் .அவன் அனைத்தையும் சொல்லி விடுவான்.
பிறகு என்னங்க இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் கார்த்திக் ராஜன் அவனுக்கு அட்வைஸ் பண்றேன்னு ஒரு வழி பண்ணிடுவான்..
இது எப்பவும் அந்த குடும்பத்தில் நடப்பது தாங்க .இவங்க இரண்டு பேரின் நடுவில் மத்தளமாய் மாட்டிக்கிட்டு முழிப்பது கல்பனா தேவிதான்.
