தீ 🔥 – 3

அத்தியாயம் 3

 

உனக்கு ஒரு நல்ல வரன் வந்து இருக்கும்மா…

 

தன் மனதில் இருந்த சோகத்தை மறந்து நடனமாடியவள், தன் நடனத்தை முடித்துவிட்டு புன்னகை முகத்தோடு திரும்பினாள். அங்கே இவளின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த மூவரையும் பார்த்து ஆச்சரியத்தோடு அவர்கள் அருகில் வர,

 

“பைரவி… அப்படியே உன் அம்மாவே இங்க இப்போ ஆடின மாதிரி இருந்துச்சுடா! அவ இந்த உலகத்தை விட்டு வேணா போயிருக்கலாம், ஆனா உன்னோட ரூபத்துல இன்னும் இந்த பூமியில வாழ்ந்துகிட்டு தான்டா இருக்கா. அந்த ஆண்டவன் தெரிஞ்சோ தெரியாமலையோ உங்க அம்மாவுக்கும் உனக்கும் ஒரே முக அமைப்பையும் கொடுத்துட்டான்” என்று அவள் கன்னம் தொட்டு கண் கலங்க அன்போடு கூறினார் நடேசன்.

 

“அது எனக்கு கிடைச்ச பாக்கியம் மாமா… அம்மா என்னை விட்டு போயிட்டாங்கன்னு நான் நினைக்கும்போதெல்லாம், ‘இல்லை, நான் உன்கூடதான் இருக்கேன்’னு இப்படி எதாவது ஒரு வழியா ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அவங்க உணர்த்திக்கிட்டே தான் இருப்பாங்க” என்று அவள் சிறு புன்னகையோடு கூறினாள். அவளின் அந்த புன்னகையில் இருந்த வலி அங்கிருந்த மூவருக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

 

“சரி, நீங்க மூணு பேரும் இங்க வந்து எதுக்கு நிக்கிறீங்க?” என்று தன் முகத்தில் தோன்றிய கவலையைச் சட்டென்று புன்னகையாக மாற்றி அவள் கேட்க,

 

“வந்து நிற்காம வேற என்ன பண்ண சொல்ற? எங்களோட பைரவி இத்தனை நாள் கழிச்சு இப்படி ஒரு டான்ஸ் ஆடும்போது நாங்க எப்படி வந்து பார்க்காம இருக்க முடியும்?” என்ற தாரா, அவள் தோள்களில் கை போட்டுக்கொண்டு,

 

“சும்மா சொல்லக் கூடாது, நானும் தான் டான்ஸ் ஆட ட்ரை பண்ணேன், ஆனா எனக்கு சுட்டு போட்டாலும் அது வரல. ஆனா நீ எப்படி இப்படி ஆடுறியோ! யூ ஆர் ஆல்வேஸ் அமேசிங். நான் எப்பவும் சொல்றேன்னு நினைச்சுக்காத, ஆனா நீ எப்ப டான்ஸ் ஆடினாலும் எனக்கு இதுதான் தோணும்… நான் மட்டும் ஒரு பையனா இருந்திருந்தா இந்நேரம் உன்னைக் கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணியிருப்பேன்” என்று கூறிய தாரா, அவளைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள்.

 

“ஏய்… சீச்சீ… என்னை விட்டு நகர்ந்து போ! நீ நினைக்கிற மாதிரி பொண்ணு ஒன்னும் நான் இல்லை” என்று பைரவி கூற, அதில் கடுப்பான தாரா அவளை அடிக்கத் துரத்த, பைரவியும் தாராவிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த இடத்தை சுற்றி ஓடினாள்.

 

அவள் கால்களில் கட்டியிருந்த சலங்கையின் ஒலி அந்த இடமெங்கும் ‘ஜல் ஜல் ஜல்’ என்று எதிரொலிக்க, இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடேசனின் கண்கள் கலங்கின.

அப்போது அவரின் தோளில் ஒரு கை பட, தன் கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தவரின் முன் கலங்கிய விழிகளோடு நின்றிருந்தார் அபிராமி.

 

 

“நாம கீழே போகலாம்! அவங்க கொஞ்ச நேரம் மனசு விட்டுப் பேசட்டும், அப்பவாது அவள் மனசுல இருக்குற பாரமெல்லாம் குறையட்டும்” என்று கூறிய அபிராமி, தன் கணவனை கீழே அழைத்துச் சென்றுவிட்டார். நடேசனும் ஒருமுறை திரும்பி பைரவியின் சிரித்த முகத்தைப் பார்த்துவிட்டு கீழே இறங்கி வந்தவர், அங்கே ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த தன் தங்கையின் புகைப்படத்தைப் பார்த்தார்.

 

“நீ பட்ட அதே கஷ்டத்தை உன் பொண்ணுக்கும் கொடுக்க உனக்கு எப்படிம்மா மனசு வந்துச்சு? அவ முகத்துல இருக்குற இந்தச் சிரிப்பைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா? நீதான் ‘எனக்கு என் பொண்ணு போதும், அவளோட அந்த சிரிச்ச முகத்தைப் பார்த்தே நான் என் வாழ்க்கையை வாழ்த்துக்குவேன்’னு சொன்ன. ஆனா இப்போ அவ முகத்துல அந்தச் சிரிப்பும் இல்லை, அதைப் பார்க்க இப்போ நீயும் உயிரோட இல்லை. உனக்காவது உன் வாழ்க்கையை வாழ ஒரு பிடிப்பா உன் பொண்ணு இருந்தா, ஆனா அவளுக்கு? அப்படி யாருமே இல்லையே?” என்று இன்று மட்டும் இல்லை, பைரவியை நினைத்து நினைத்து ஒவ்வொரு நாளும் இதேபோல் தான் தன் தங்கை அருந்ததியின் புகைப்படத்துக்கு முன் நின்று புலம்பிக்கொண்டிருப்பார் நடேசன்.

 

“ஏய்… லூசு, உன்னால தான்டி இன்னைக்கு லேட் ஆகிடுச்சு, வா சீக்கிரம் போகலாம்” என்று கூறியபடியே பைரவியும் தாராவும் குளித்து முடித்து தயாராகி கீழே வர, அங்கே இவர்களுக்காக அபிராமி டிபன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இருவரும் அவசர அவசரமாக வாசல் நோக்கி ஓட,

“ஏய்.. ரெண்டு பேரும் சாப்பிடாம எங்க போறீங்க? வாங்க, எல்லாம் ரெடி பண்ணிட்டேன், சாப்பிட்டுப் போங்க” என்று அபிராமி கூற,

 

“ம்மா… சாரி, எங்களுக்கு ஏற்கனவே ஆபீஸுக்கு லேட் ஆகிடுச்சு. அதுவும் இல்லாம இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் வேற இருக்குது” என்று கூறிய தாரா வாசலைக் கடக்க முற்பட,

 

“தாரா, பைரவி… சாப்பிட்டுப் போங்க!” என்று அவர்களின் பின்னிருந்து நடேசனின் குரல் கேட்க, அவ்வளவுதான்… இருவரும் அடுத்த நொடி டைனிங் டேபிளில் இருந்தனர்.

“எல்லாம் சொல்ல வேண்டியவங்க சொன்னாத் தானே நீங்க எல்லாம் கேட்பீங்க!” என்று கூறியபடியே மூவருக்கும் அபிராமி பரிமாற, தாராவும் பைரவியும் அவசர அவசரமாகச் சாப்பிட ஆரம்பித்தனர்.

 

பைரவி சாப்பிடும் வரை பொறுமையாகக் காத்திருந்த நடேசன், அவள் சாப்பிட்டு முடித்துவிட்டாள் என்பதை உணர்ந்து,

 

“பைரவி… நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்மா…” என்று அவர் கூற,

 

“ம்… சொல்லுங்க மாமா, என்ன?” என்று பைரவியும் தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டே கேட்க,

 

“உனக்கு ஒரு நல்ல வரன் வந்து இருக்கும்மா… இதோ, இதுலதான் மாப்பிள்ளை போட்டோ இருக்குது, பார்த்துட்டு உன் முடிவைச் சொல்லு” என்று நடேசன் கூறிய நொடி, அங்கிருந்த ஒரு ஃபிளவர் வாஸ் சுக்குநூறாக உடைந்து போனது.

 

அந்தச் சத்தத்தில் அங்கிருந்த அனைவரும் ஒரு நொடி பயந்து, தங்கள் முன் அதீத கோபத்தில் நிற்கும் அக்னி பைரவியைப் பார்த்தனர். அவளோ கண்கள் சிவக்க அங்கிருந்த அனைவரையும் முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

 

அந்த வீடே ஒரு நொடி மயான அமைதியானது. சாப்பிட்டுக் கொண்டிருந்த தாரா அதிர்ச்சியோடு நிமிர்ந்து பைரவியைப் பார்க்க, அதே அதிர்ச்சியோடு தான் அபிராமியும் நடேசனும் பைரவியைப் பார்த்தனர். அவளோ கண்கள் சிவக்கக் கோபத்தோடு,

“ உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது… இத பத்தி என்கிட்ட பேசாதீங்கன்னு? ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா மாமா? இங்க வந்தா ஏதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு தான் வரேன், ஆனா நீங்களும் இந்த மாதிரி ஏதாவது ஒன்னு பேசி ஏன் என் மனசை கஷ்டப்படுத்துறீங்க? நான் சந்தோஷமா இருக்கிறது உங்களுக்கு கூட பிடிக்கலையா மாமா?” என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, அதைத் தன் புறங்கையால் துடைத்தபடியே ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டாள்.

 

“ம்… கவலைப்படாதீங்க, இனிமே நான் உங்க யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. இனி நான் இங்க வரவே மாட்டேன்” என்று அவள் அங்கிருந்து போக முயற்சிக்க,

 

“ஏய்… பையூ… என்னடி பண்ற? ஒரு நிமிஷம் இரு, எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். வா… முதல்ல வந்து இங்க உட்காரு” என்று தாரா அவள் கையைப் பிடித்து இழுக்க,

 

“வேண்டாம் விடு தாரா… இதுக்குதான் நான் இங்க வர மாட்டேன்னு சொன்னேன். இப்போ பாரு… நீயும் என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்குற” என்று கூறி, பைரவி தாராவின் கையிலிருந்து தன் கையை விலக்கிக் கொண்டு அங்கிருந்து போக முயற்சிக்க,

 

“ஏய்… ஒரு நிமிஷம் நில்லுடி!” என்ற அபிராமியின் குரல் அந்த வீடெங்கும் ஒலிக்க, அதில் பைரவியும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றாள்.

 

“என்னதான் டி உன் மனசுல நினைச்சுகிட்டு இருக்க? நீ என்னடான்னா எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்ற; இவ என்னடான்னா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாம நான் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிற மாதிரி இல்லைனு சொல்றா; உன் மாமா என்னடான்னா என் தங்கச்சி பொண்ணு வாழ்க்கையை நல்லபடியா அமைச்சிட்டு தான் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றாரு!” என்று கோபமாக அபிராமி பேச,

 

“இப்போ அதுக்கு என்னை என்ன பண்ண சொல்றீங்க?” என்று இறுகிப்போன குரலில் ‘அக்னி’ கேட்க,

 

 

“வர வர உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு! இதெல்லாம் சரியா வராது. நீ என்னைக்கு கல்யாணம் பண்ணி, என் பொண்ணு நாங்க கல்யாண் பண்றது? அவ எப்ப சந்தோஷமா வாழறது? உன் அம்மாவும் சரி, நீயும் சரி… என் குடும்பத்தோட சந்தோஷத்தை மொத்தமா அழிக்கிறதுக்காகத் தான் வந்தீங்க. அப்போ உன் அம்மாக்காரி எங்கேயோ எவன்கிட்டயோ போய் ஏமாந்துட்டு வயித்துல புள்ளையோட வந்து நின்னா, இன்னைக்கு நீ…” என்று அபிராமி அடுத்த வார்த்தை கூறும் முன்பே, அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் நடேசன்.

இவ்வளவு நேரம் அபிராமி பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் கண்களில் கண்ணீரோடு நின்றிருந்த பைரவி, சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அங்கே அபிராமி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தார்.

 

“அப்பா, என்னப்பா பண்றீங்க?”

“அச்சோ… மாமா…” என்று இருவரும் ஒருசேர அவர்களின் அருகில் வர, நடேசனோ…

“ஏய்… உன் மனசுல என்னடி நினைச்சுக் கிட்டு இருக்க? எவ்வளவு தைரியம் இருந்தா என் பைரவியைப் பார்த்து இப்படி பேசுவ? இங்க பாரு, அவளுக்குப் போகத்தான் இங்க எல்லாமே! ஒரு விஷயத்தை மறந்துடாத… புள்ளை இல்லாம நீ எத்தனை வருஷம் புள்ள வரம் கேட்டு கோவில் கோவிலா ஏறி இறங்குன? அந்த நேரத்துல உன் கைக்கு வந்த முதல் குழந்தை, இதோ இப்போ நீ பேசுனியே… இவதான்! ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு? நீ என்ன சொன்னாலும் இல்லைன்னாலும், இவதான் நம்ம வீட்டோட முதல் பொண்ணு! அப்படிப்பட்டவளை எப்படி இப்படி நாக்கு கூசாம பேசுற? என்னை பொறுத்தவரைக்கும் தாரா எப்படியோ, அதே மாதிரிதான் பைரவியும். அவ பொறந்தது வேணா என் தங்கச்சி வயித்துலயா இருக்கலாம், ஆனா அவ முழுக்க முழுக்க என்னோட வளர்ப்பு! அப்ப நான் தானே அவ வாழ்க்கையை சரி பண்ணனும்? நானே என் பொண்ணு வாழ்க்கையை நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் துடிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா நீ இப்படி நாக்கு கூசாம பேசுற… உன்னை நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு!” என்று கூறிய நடேசன், மேஜையில் இருந்த சாப்பாட்டுத் தட்டைத் தட்டிவிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட, அபிராமியும் கலங்கிய கண்களோடு தன் முன் நின்றிருந்த தாராவையும் பைரவியையும் பார்த்துவிட்டு அழுகையோடு தன் அறைக்கு ஓடிவிட்டார்.

 

“அத்தை…” என்று பைரவி அவர் பின்னால் போக முயற்சிக்க,

 

“அடியே… என்ன பண்ண போற?” என்று தாரா பைரவியின் கைகளைப் பிடித்து இழுத்தாள் தாரா.

 

“அது… அத்தை அழுதுகிட்டே போறாங்க” என்று பைரவி கூற,

 

“அது எப்பயும் நடக்குறதுதான், அப்பா பார்த்துப்பார்; வா நாம கிளம்பலாம், நமக்கு ஆபீஸுக்கு லேட் ஆயிடுச்சு” என்று கூறிய தாரா, பைரவியை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

தன் அறையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த அபிராமியை உள்ளே வந்த நடேசன் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர் அருகே அமர்ந்து ஆறுதலாக அவரின் தோளில் கை வைத்தார். உடனே தன் கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டு,

“நான் என்ன வேணும்னேவா பேசுனேன்? உங்களை விட எனக்கு நல்லா தெரியும்… அவதான் என்னோட முதல் பொண்ணு, அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு எனக்கு ஆசை இல்லையாங்க? அவ சீக்கிரத்துல கல்யாணம் பண்ணி ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கணும்னு தானே நான் ஏங்கிக்கிட்டு இருக்கேன்? அவளை இந்த கோலத்துல பாக்குற ஒவ்வொரு நொடியும் நான் இங்க புழுவா செத்து செத்து துடிக்கிறேன்! அது ஏன் உங்களுக்கெல்லாம் தெரியல? இந்த மாதிரி பேசினாவாவது ஏதோ ரோஷப்பட்டு கல்யாணத்துக்கு சரின்னு சொல்வாணு தாங்க அப்படி பேசினேன்” என்று அபிராமி அழுகையோடு தன் கணவனின் மார்பில் சாய்ந்து புலம்ப, தன் மனைவியின் குணம் அறிந்த நடேசன் அவரை கட்டியணைத்துக் கொண்டு அவரின் முதுகை வருடியபடியே…

“எனக்கு தெரியும்மா… அதுக்காகத்தான் நீ அப்படி பேசுனேன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா நீ அருந்ததியப் பத்தி பேசுனதுல என்னால என் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியல, அதான் அப்படி…” என்றதும்,

 

“பரவாயில்லை, நீங்க என்ன வேணும்னா அடிச்சீங்க… அதை விடுங்க! நமக்கு இப்போ இருக்குற ஒரே கடமை, அவளை எப்படியாவது மனசு மாத்தி ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்குறது தான். பார்க்கலாம், அவ மனசு மாறுதான்னு! கூடிய சீக்கிரத்துல அவ மனசு மாறி நல்லபடியா அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்ங்க. அவளும் குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா வாழ்றதை என் கண்ணால பாக்கணும். என்ன இருந்தாலும் அவ என்னோட ஆருவோட பொண்ணுங்க! நான் குழந்தையே இல்லாம எத்தனையோ பேரோட ஏச்சுப் பேச்சைக் கேட்டு ஏங்கி, ‘போதும்டா இந்த வாழ்க்கை’னு என் வாழ்க்கையோட முடிவுக்கு வந்த நேரத்துல, தேவதையா என் கையில தவழ்ந்தவ பைரவி. அவ என்கிட்ட வந்ததுக்கு அப்புறம் தாங்க தாராவே நமக்கு கிடைச்சா! அப்படி இருக்கும் போது அவ வாழ்க்கை நல்லபடியா அமையணுமுங்க, அதுக்கு நாம ஏதாவது ஒரு வழி பண்ணனும்” என்று அபிராமி உறுதியோடு கூற,

 

“ஆமா அபி, அவ மனசுல என்ன இருக்குதுன்னு தெரியல. அவ வாயத் திறந்து ஏதாவது சொன்னாவாவது பரவாயில்லை, அவளும் தன் வாயத் திறந்து எதையும் சொல்ல மாட்டேங்குறா. அவ மனசுல என்னமோ இருக்கு, அதை சொன்னாத்தானே நாம அதுபடி பண்ண முடியும்?” என்று நடேசன் கூறினார்.

 

“சொல்லுவா, கண்டிப்பா ஒரு நாள் அவ வாழ்க்கை மாறும், எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று அபிராமியும் ஒரு உறுதியோடு கூறினார்.

 

அப்படி அருந்ததியினால் பைரவியின் வாழ்க்கையில் என்ன நடந்தது? கல்யாணம் என்றதும் ஏன் பைரவி கோபப்பட வேண்டும்? பைரவி ஏன் திருமணம் வேண்டாம் என்று கூறுகிறாள்? அபிராமி நல்லவரா அல்லது கெட்டவரா? நடேசன் மற்றும் அபிராமி நினைத்தது போல் பைரவியின் வாழ்க்கை மாறுமா? இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்…

தீராத காதல் தீயாக மோத…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!