அத்தியாயம் 2
ஏம்மா என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன?
கேசவ் உள்ளே வரும்போதே அவனின் பார்வையின் அர்த்தம் என்ன என்பது பைரவிக்கு நன்றாகவே புரிந்தது.
‘சரி, அவன் எவ்வளவு தூரம் தான் போறான்னு பார்ப்போமே’ என்று நினைத்து தான் எதையும் கண்டுகொள்ளாதது போல் பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் நேரம் ஆக ஆக அவனின் பார்வையும், வார்த்தைகளும் எல்லை மீறின. எப்போது தன்னையும் தன் கலையையும் சேர்த்து அவன் விலை பேச நினைத்தானோ, அப்போது கொதித்தெழுந்து விட்டாள் நம் அக்னி பைரவி!
அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டவள்,
“யூ இடியட்! என்னைப் பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது? பணம் வாங்கிட்டு கண்டவன் முன்னாடி ஆடுறவனு நினைச்சியா? நான் அக்னி பைரவிடா! என்னைப் பத்தியும் என்னோட கலையைப் பத்தியும் என்னடா தெரியும் உனக்கு? இது எம்பெருமான் ஈசன் எனக்குக் கொடுத்த வரம்! அப்படிப்பட்ட வரத்தை உன்ன மாதிரி ஒரு பொம்பளப் பொறுக்கி முன்னாடி ஆடி அசிங்கப்படுத்துவேன்னு நினைச்சியா? இன்னொரு தடவை என் கண்ணுல பட்ட… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது! ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போயிடு!” என்று கோபத்தில் கண்கள் சிவக்கப் பைரவி கூற,
“ஏய்… நான் யாருன்னு தெரியுமாடி? நான் கேச…” என்றவன் கூற வர,
“நீ யாரா இருந்த எனக்கு என்னடா? மொத இங்க இருந்து வெளிய போ…” என்றவள் அதீத கோபத்தோடு அந்த இடமே அதிரும்படி கத்தினாள். பெண்ணவளின் கோபம் கண்டு ஒரு நொடி பயந்து போன கேசவ்.
“என் மேலயே கை வெச்சுட்டாலே? உன்னை சும்மா விடமாட்டேன் டி. இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்ப, என்னைக்காவது ஒருநாள் உன்னை நான் அடைஞ்சே தீருவேண்டி! இன்னைக்கு முடியாதுனு சொன்ன நீயே என் கால்ல விழுந்து கெஞ்சுவ!” என்று அவன் அவளை வக்கிரத்தோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் அங்கிருந்து சென்றதுமே, தன் தோழியை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு தாரா,
“ஏய்… சூப்பர்டி பையூ! நானே அவன் கன்னத்துல ஓங்கி ஒன்னு வைக்கலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள நீயே அதை செஞ்சுட்ட! பொறுக்கி நாய்க்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பையூகிட்டயே இப்படி பேசுவான்? இந்த ஆதினு பேர் வச்சுருக்குற எல்லாரும் பொறுக்கிதான் போல…” என்று கோபத்தில் அவனைத் திட்டிக்கொண்டிருந்த தாராவைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தவள்,
“நீ அவனைத் திட்டுனது எல்லாம் போதும் வா… நேரமாகுது, வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று பைரவி கூறினாள். அப்போதே நேரத்தைப் பார்த்த தாரா தன் தலையில் அடித்துக்கொண்டு,
“அச்சச்சோ! ஆமாண்டி, ரொம்ப லேட் ஆயிடுச்சு… வா நாம வீட்டுக்குப் போகலாம்” என்று தாரா, பைரவியைத் தங்கள் வீட்டிற்கு அழைக்க,
“இல்லை தாரா, நீ போ… நான் என்னோட வீட்டுக்குப் போறேன்” என்று பைரவி தயக்கத்தோடு கூறினாள்.
“ஏய்… லூசாடி நீ? அது ஒன்னும் உன்னோட வீடு இல்லை, இதுதான் உன்னோட வீடு! நீ போகணும்னு சொல்றியே அது உனக்கு நரகம். ஆனா எப்படித்தான் நீ அங்கே இருக்கியோ? அத்தை உனக்குக் கலையைக் கத்துக் கொடுத்தாங்கனு நினைச்சு சந்தோஷப்படுறதா, இல்லை இப்படிப்பட்ட சாபத்தைக் கொடுத்துட்டாங்களேனு நினைச்சுக் கவலைப்படுறதான்னே எனக்குத் தெரியலைடி” என்று தாரா சோகத்தோடு கூறினாள்.
“நீ ஏண்டி அப்படி நினைக்கிற? அவங்களும் என்னோட குடும்பம்தான்டி” என்று பைரவி மென்மையாகக் கூற, அவளை முறைத்த தாரா,
“அது குடும்பம் இல்லைடி… குடும்ப ரூபத்துல இருக்குற குட்டிச் சாத்தானுங்க!” என்று கூற, பைரவியோ அவளை முறைத்தாள். அதைப்பார்த்த தாரா,
“உன்கிட்ட எவ்வளவு பேசினாலும் நீ திருந்தமாட்ட! உன்கிட்ட பேசுனா எனக்குத்தான் டென்ஷன் ஆகும். ஒழுங்கா நைட் நம்ம வீட்ல தங்கு, நாளைக்குக் காலையில அப்படியே ஆபீஸ் போறோம். போயிட்டு அப்படியே ஈவினிங் டான்ஸ் கிளாஸ் முடிச்சுட்டு, நாளைக்கு நைட் நீ உன்னோட வீட்டுக்குப் போ…” என்று தாரா உறுதியோடு கூறினாள்.
“இல்லைடி… நான் வீட்டுக்கு… வீட்டுக்குப் போறேன், அத்தை என்னைத் தேடுவாங்க” என்று பைரவி சற்று பயத்தோடு கூற,
“தேடுவாங்களா? யாரு, அவங்களா? தொல்லை எங்கேயோ போய் தொலைஞ்சிடுச்சுனு நினைச்சு சந்தோஷம்தான்டி படுவாங்க!” என்ற தாரா, “எல்லார்கிட்டயும் தைரியமா இருக்குற நீ, அவங்களைப் பார்த்து மட்டும் ஏண்டி இப்படி பயப்படுற?” என்று கோபத்தோடு கேட்டாள்.
“இது பயம் இல்லைடி… அவங்களுக்கு நான் கொடுக்குற மரியாதை, பண்ணிக் கொடுத்த சத்தியத்துக்குக் கொடுக்குற மரியாதை!” என்று கூறிய பைரவியின் கண்களில் வலி தெரிந்தன. அவளை முறைத்த தாரா,
“என்ன கருமாந்திரமோ போ…” என்றவள், அப்போதுதான் மீண்டும் நேரத்தைப் பார்த்தாள்.
“அச்சோ கடவுளே! சரி, பேச நேரம் இல்லை, கிளம்பு போகலாம்” என்று கூறிய தாரா, தங்களுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். இதற்கு மேல் அவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்த பைரவியும் தாராவுடன் செல்லத் தயாரானாள்.
இவ்வளவு நேரம் தேவலோகக் கன்னிகையைப் போல் அலங்காரம் செய்திருந்த பைரவி, தன் அலங்காரம் மொத்தத்தையும் கலைத்துவிட்டு, ஒரு மெல்லிய காட்டன் சேலை கட்டிக்கொண்டு, வில் போல் வளைந்திருந்த புருவங்களுக்கு இடையே ஒரு சிறு கருப்புப் பொட்டு வைத்து, கையிலும் கழுத்திலும் எந்தவொரு அணிகலனும் அணிந்துகொள்ளாமல், தன் கார்கூந்தலைத் தளர்வாகப் பின்னலிட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அவர்கள் கிளம்பி வெளியே வரவும், அங்கே சதாசிவம் அந்த மேனேஜரைப் பிடித்துத் திட்டிக்கொண்டிருக்கவும் சரியாக இருந்தது.
“உனக்கு அறிவில்லையா? எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இந்த மாதிரி யாராவது பைரவியைப் பார்க்கக் கேட்டா என்கிட்ட கேட்காம பார்க்க வைக்கக் கூடாதுனு? உனக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் புத்தி வராதாடா? இது சரிப்பட்டு வராது… இனி நீ வேலைக்கு வரத் தேவையில்லை, நீ உன் வீட்டுக்குக் கிளம்பு! நான் வேற ஆள் பார்த்துக்கிறேன்” என்று அவர் கோபத்தோடு கூற,
“சார், சாரி சார்! இனிமே இப்படி பண்ணமாட்டேன் சார்… அவரு என்னை ரொம்ப கம்பல் பண்ணாரு, அதனாலதான் நான் மேடத்தைப் பார்க்கக் கூட்டிட்டு போனேன். ப்ளீஸ் சார், என்னை மன்னிச்சிடுங்க சார்” என்று அவன் கெஞ்சினான்.
“மன்னிக்கிறதா? இதை நீ ஒன்னும் முதல் முறை பண்ணலை… இதோட நான் உன்னை எத்தனை தடவை வார்ன் பண்ணியிருக்கேன்? உன்னை அவ்வளவு தூரம் வார்ன் பண்ணியும் நீ பைரவியைப் பார்க்க அந்த ஆதிகேசவனைக் கூட்டிட்டு போயிருக்க? இவனுங்க மாதிரி ஆளுங்க எதுக்காக அவளைப் பார்க்க நினைக்கிறாங்கனு தெரிஞ்சும் நீ கூட்டிட்டு போறேன்னா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?” என்று அவர் கோபமாகக் கேட்க,
“சார், சத்தியமா நான் இனிமே இப்படி பண்ணமாட்டேன் சார்… தயவுசெஞ்சு இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க சார்” என்று அவன் கெஞ்சினான்.
“இல்லை இல்லை… இனி இது சரிவராது. இந்த இடத்தில் இனி ஒரு நிமிஷம் கூட நீ இருக்கக்கூடாது. நான் உன்னை இங்கே பார்க்குற இதான் கடைசியா இருக்கணும்” என்று கூறி அவனை வேலையை விட்டுத் துரத்திவிட்டுத் திரும்பியவர், அங்கே ஏற்கனவே நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்த பைரவியைக் கண்டார்.
“கிளம்பிட்டியாம்மா?” என்று அவர் அன்போடு அவளிடம் கேட்க,
“கிளம்பிட்டேன் அப்பா” என்று அவளும் அதே அன்போடு கூறினாள்.
“நான் வேணும்னா உங்களை டிராப் பண்ணவா?” என்று சதாசிவம் கேட்க,
“இல்லைப்பா வேணாம், நான் தாராக்கூட வீட்டுக்குத்தான் போறேன். ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று கூறிய பைரவி, அவரைப் பார்த்து லேசான ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
போகும் அவளைப் பார்த்தவரின் கண்களில் கண்ணீர் வழிய,
“எப்பா ஈசனே… உன்னை நாள்தோறும் மனம் உருக வேண்டி, உன் முன்னாடி தன்னை வருத்தி நடனமாடி உன்னை சந்தோஷப்படுத்துறவளோட வாழ்க்கையில எதுக்குப்பா இத்தனை சோதனை? இந்த வயசுல அந்தப் பொண்ணுக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை? மூணு கண்ணு வச்சிருக்கியே, ஏன் ஒரு கண்ணைக்கூட திறந்து உன்னால அவளைப் பார்க்க முடியலையா?” என்று அங்கிருந்த நடராஜர் சிலையிடம் புலம்பிய சதாசிவம், பைரவியின் நிலையை நினைத்து வருத்தத்தோடு அங்கிருந்து சென்றுவிட்டார்.
வெகு நாட்களுக்குப் பிறகு தனக்கான இடத்திற்கு வந்து சேர்ந்தது போல் அப்படி ஒரு உணர்வு பைரவிக்குள்!
தங்கள் வீட்டிற்கு வந்த பைரவி அந்த வீட்டைச் சுற்றிலும் பார்த்தாள். அந்த வீடு முழுக்க அவர்களின் குடும்பப் புகைப்படங்கள் ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்தன. அதிலும் ஹாலில் நடுநாயகமாக அவள் தாயின் புகைப்படம்! எவ்வளவு லட்சணமான முகம்… பார்க்கப் பார்க்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம், அப்படி ஒரு கலையான முகம்! அழகாக வெள்ளை நிறப் புடவையில் நாட்டியம் ஆடுவதற்குத் தேவையான அனைத்து அலங்காரத்துடனும், காலில் சலங்கை கட்டி, கண்களில் மையிட்டு, கால் பாதங்களிலும் கைகளிலும் மருதாணி வைத்து அவ்வளவு அழகாக நின்றிருந்தார். மெல்ல அவரின் புகைப்படத்தின் அருகே சென்று அதை வருடிக் கொடுத்தவளின் மனதிற்குள் ஏனோ சொல்ல முடியாத சோகம் அலைமோதியது.
“பைரவிம்மா…” என்று பின்னால் இருந்து ஓர் ஆணின் குரல் கேட்க, சட்டென்று சுயநினைவு வந்தது. தன் கண்களில் துளிர்த்த நீரை உள்ளிழுத்துக் கொண்டு, புன்னகை முகமாகத் திரும்பினாள்.
“மாமா… நீங்க இன்னும் தூங்கலையா?” என்று அவள் சகஜமாகப் பேச, அவளைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்த அவளின் மாமா நடேசன், அவளின் நிலை கண்டு,
“எங்கேம்மா… தூங்க! என் தூக்கம் போய்தான் 5 வருஷம் ஆச்சே” என்று அவர் பெருமூச்சோடு கூற, அது அவள் காதில் விழுந்தும் விழாதது போல்,
“என்ன மாமா சொன்னீங்க?” என்று அவள் கேட்க, அதில் சட்டென்று சுயநினைவுக்கு வந்தவர்,
“ஹான்… அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. நீ வருவேன்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். சரி வாங்க, சாப்பிட்டுப் போய் தூங்குங்க” என்று பைரவியையும் தன் மகள் தாராவையும் அவர் சாப்பிட அழைக்க,
“இல்லை மாமா, எனக்கு எதுவும் வேணாம், ரொம்ப டயர்டா இருக்கு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்” என்றவளின் குரலில் தான் எத்தனை சோர்வு! அவருக்குத்தான் அவளின் நிலை தெரியுமே.
“நீ போய் ரெஸ்ட் எடு… ஆனா, அதுக்கு முன்னாடி இந்த பாலைக் குடிச்சிட்டு போய் ரெஸ்ட் எடு” என்று அந்த வீட்டின் சமையலறையிலிருந்து தன் கையில் சூடாக இருந்த பாலை ஆற்றிக்கொண்டே அங்கே வந்தாள் அபிராமி.
“என்ன அத்தை இது? எனக்கு எதுவும் வேணாம், நான் போய் தூங்குறேன்” என்று அவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க,
“ஒழுங்கா வாய மூடிட்டு இந்த பாலைக் குடி! எனக்கு நல்லா தெரியும், நீ எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டனு.” என்றவர் அவள் முன் பால் கிளாஸை நீட்டினாள்.
“இல்ல அத்தை நான் சாப்பிட்டேன்.” என்றவள் பொய் சொல்ல
“என் பொண்ணை பத்தி எனக்கு நல்ல தெரியும்… கண்டிப்பா எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்ட, ஒழுங்கா இந்த பாலைக் குடிச்சிட்டு போய் தூங்கு, இல்ல அடி தான் வாங்குவே” என்று கண்டிப்பான குரலில் கூறிய அபிராமி, அவளிடம் பால் டம்ளரைத் திணித்துவிட்டு அவள் குடிக்கும் வரை அதே இடத்தில் நின்றார். அவள் குடித்து முடித்தவுடன் அவள் வாயைத் தன் சேலை முந்தானையால் துடைத்துவிட்டு, அவள் கையிலிருந்த டம்ளரை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட, போகும் தன் அத்தையைப் புன்னகையோடு பார்த்தாள்.
“அப்போ நான் இப்போ என் ரூமுக்கு போகலாமா, மிஸஸ் அபிராமி நடேசன்?” என்று அவள் சிறு புன்னகையோடு கேட்க,
“ஹான்… போகலாம் போகலாம்” என்று அப்போதும் சிறு சிடுசிடுப்போடு அவர் கூற, அதில் மேலும் அழகாகப் புன்னகைத்தவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அந்த அறையினுள் நுழைந்தவளுக்குச் சொல்ல முடியாத வேதனை தோன்றியது. அப்படியே அங்கிருந்த கட்டிலில் படுத்துக் கண் மூடியவளின் மனதில் ஏதேதோ நினைவுகள் வேகமாக வந்து சென்றன. அதில் அதிகம் அவள் தாயின் நினைவுகள்தான்!
“ஏம்மா என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன? உன் கூடவே என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமேம்மா… ஏன்மா என்னை விட்டுட்டு போன? நீ பட்ட அதே கஷ்டத்தை ஏன்மா எனக்கும் கொடுத்த? என்னைச் சுற்றி இவ்வளவு பேர் இருந்தாலும் ஏனோ நீ இல்லாத இந்த இடம் எனக்கு வெறுமையா இருக்கும்மா… தனிமையோட கொடுமை இவ்வளவு வலிக்கும்னு எனக்கு இப்போதான்மா புரியுது” என்றவளின் கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
அடுத்த நாள் காலை:
“என்னங்க… பைரவி ரூம்ல இல்லைங்க!” என்று அபிராமி சற்று பதற்றத்தோடு தன் கணவனிடம் கூற,
“நல்லா பாரும்மா, இங்கதான் எங்கேயாவது இருப்பா” என்று நடேசன் கூறினார்.
“இல்லைங்க, நானும் எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டேன், எங்கேயுமே இல்லை” என்று அவர் கூறி கொண்டிருக்கும்போதே, மேலே மாடியில் இருந்து சத்தம் கேட்டது. அதைக் கேட்டவுடன்,
“நான் தான் சொன்னேன்ல… பாரு, மாடியில தான் இருக்கா” என்று கூறியவருக்கு ஏதோ தோன்ற, கண்கள் விரியத் தன் மனைவியைப் பார்த்தார். அதேபோல்தான் அபிராமியும் தன் கணவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“அபி… அந்த சத்தம்… உனக்கும் கேட்டதா?” என்று அவர் கேட்க, அதற்கு அபிராமியும் ‘ஆம்’ என்று தலையசைக்க, அடுத்த நொடியே தன் மனைவியை அழைத்துக் கொண்டு வேகமாக மாடியை நோக்கி அவர் ஓடினார்.
மேலிருந்து கேட்ட சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து தாராவும் விழித்தாள். முதலில் கடுப்போடு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க முயன்றவள், மீண்டும் மீண்டும் கேட்ட சத்தத்தில் அவசர அவசரமாக எழுந்து அமர்ந்து, அது என்ன சத்தம் என்று உணர்ந்து தன் முகத்தைக் கழுவிவிட்டு வேகமாக அவளும் மாடியை நோக்கி ஓடினாள்.
அந்த வீட்டின் மாடியில் ஒரு நீண்ட வராண்டா அமைக்கப்பட்டிருந்தது. அதன் மத்தியில் ஒரு பெரிய நடராஜர் சிலை கம்பீரமாக வீற்றிருக்க, அதன் முன்பு வெள்ளை நிற ‘லாங் குர்த்தி’ அணிந்துகொண்டு காலில் சலங்கை கட்டிக்கொண்டிருந்த பைரவியின் கண்கள் கூசின. அதில் கண் மூடியவள், மெல்ல நிமிர்ந்து, பின் கண் திறந்து பார்க்க… அங்கே அவளின் எதிரே அந்த இருண்ட வானத்தில் இருந்து மெல்ல தன் ஒளிக்கதிர்களைப் பரப்பிக்கொண்டு, அடிவானத்தில் இருந்து செந்நிறக் கதிர்களோடு மேலே எழுந்தான் ஆதவன். தன் முன் இருந்த பைரவியைக் கண் சிமிட்டி ரசிக்க ஆரம்பித்தான்.
மெல்ல மெல்ல வானில் தன் கதிர்களைப் பரப்பிக்கொண்டு மேலே ஆதவன் எழ, அது அந்த நடராஜர் சிலையின் மீது பட்டு, அந்த சிலையின் நிழல் தரையில் விழுந்தது. சூரியனின் ஒளிக்கதிர்கள் அவ்வளவு அழகாக அந்த இடம் முழுவதும் பரவின. அந்த காட்சி பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது! அதை ஒரு புன்னகையோடு பார்த்த நம் அக்னி பைரவி, அங்கிருந்த மியூசிக் சிஸ்டத்தில் பாடலை ஒலிக்க விட்டுவிட்டு, முதலில் அங்கிருந்த நடராஜர் சிலைக்குத் தன் முதல் கண் வணக்கத்தைச் செலுத்தினாள். பின் அதன் அருகே இருந்த துர்க்கை தேவியின் சிலையின் முன்னும் வணங்கிவிட்டு, கண் மூடி தன்னை ஒரு நிமிடம் நிலைப்படுத்திக் கொண்டவள் தன் நடனத்தைத் தொடங்கினாள்.
ஜகதீஸ்வர தேவி புவனேஸ்வரி
சதுர்வேதி பரிபூரண கலைவாணி
கருணாகரி அகிலாண்டரூபி
தீம்தான தீம்தீம்தான நிரந்தரி
நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி
ஆதி நீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ
சரணாகதி அருளும் நாத வினோதனி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே
தன் நடனத்தின் வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, தன்னையும் தன்னைச் சுற்றி இருந்த சூழ்நிலையையும், தன் மனபாரங்களையும் மறந்து, தன்னை மறந்து இந்த உலகையே மறந்து ஆடத் தொடங்கினாள் அக்னி பைரவி!
அப்போது சரியாக அடிபிடித்துக்கொண்டு இவளின் இந்த நடனத்தைப் பார்க்க அங்கு வந்தனர் நடேசன், அபிராமி, தாரா மூவரும்…
நீயே வழிகாட்டவா
தீயோடு வேகின்ற வேருக்கு நீராகவா
நீயே கரை சேர்க்கவா
ஆறாத காயங்கள் சாய்கின்ற தோளாகவா
யார் பிழையோ யார் சதியோ யார் இங்கு கூற
யாதுமென ஆனவளே வா துயர் தீர
பாதையெல்லாம் பேரொளியாய் உன் துணை கூட
தீர்ந்திடும் கார் இருளே
தீம்தான தீம்தீம்தான நிரந்தரி
நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி
ஆதி நீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ
சரணாகதி அருளும் நாத வினோதனி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே
தீம்தான தீம்தான தோம்
தீம்தான தீம்தான தோம்
தீம்தான தீம்தான தோம்…
அவர்கள் மூவரின் முகத்திலும் அப்படி ஒரு புன்னகை! இவள் இதுபோன்று நடனமாடி எவ்வளவு நாட்கள்… இல்லை இல்லை, எவ்வளவு வருடங்கள் ஆகிறது! இவளின் இந்த நடனத்தைப் பார்த்த அபிராமி மற்றும் நடேசன் இருவருக்குமே சில வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில், இதேபோன்று சந்தோஷத்தோடு சிரித்த முகத்தோடு அக்னி பைரவியும் அவளது தாய் அருந்ததியும் இணைந்து நடனம் ஆடியது ஞாபகத்திற்கு வந்தது. அதுவே அவர்களது இறுதி நடனம்! அதன் பின்பு நடந்த அனைத்துமே அக்னியின் வாழ்க்கையில் வந்த சோகங்களே ஆகும். அதைப் பற்றி நினைத்த கணமே அவர்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.
அப்படி பைரவி என்ன சத்தியம் பண்ணிகொடுத்தால்? அவளின் தாய்க்கு அப்படி என்ன நடந்தது? பைரவியின் மனதில் இருக்கும் பாரம் தான் என்ன? அவள் வாழ்க்கையில் அப்படி என்ன தான் நடந்தது? இவளின் இந்த தனிமையை போக வருவானா நம் நாயகன்? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்….
தீராத காதல் தீயாக மோத….
