தன்னை தாக்கியவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து விட்டு குழலி தன்னுடன் இருப்பதால் அவன் சென்னைக்கு செல்லாமல் வேலூரை நோக்கி பயணப்பட்டான்.
அவர்கள் சென்றவுடன் கர்ணா கண் விழிக்கும் போது அவர்களின் வண்டி வேலூர் பக்கம் திரும்புவதை பார்த்தவன் சேகருக்கு அழைத்து அவர்களின் வரவை குறித்து அறிவித்தான்
அவனும் வாலாஜாவில் அவனுக்காக காத்திருந்தான்.
இங்கு வண்டியில் ஏறியவர்களோ அமைதியாக இருக்க, “ஏங்க உங்க பசங்க எப்படி அவங்களோட வந்தாங்க ” என்றாள்.
“எனக்கே தெரியல அவனுக்கு ரெண்டு பேரும் ஃபாரின்ல தான் இருந்தானுங்க கர்ணாக்கு மட்டும் தான் அவங்க எங்க இருக்காங்க என்ன பண்றாங்க அவங்களோட காண்டாக்ட் எல்லாம் அவங்கிட்ட தான் இருந்தது. எனக்கு தெரிஞ்சு அவன் தான் வர வெச்சு இருப்பான்னு நினைக்கிறேன் ஏன்னா நான் அன்னைக்கு அவன் உன்னை தப்பா பாக்கறான்னு சொல்லி கொஞ்சம் மிரட்டி விட்டேன் அதுல ஏதோ கடுப்பாகி அவனுங்கள வர வச்சிருக்கான் போல ஆனா அவனுக்கு ஒன்னு தெரியல யாரு என்ன பண்ணாலும் என்னையும் என்னை சார்ந்தவங்களையும் ஒன்னும் பண்ண முடியாது அதனால் நீ ரிலாக்சா வா” என்றான்.
“அதை நான் இப்போ கண் கூடவே பார்த்துட்டேன் ஆனால், உங்க மனைவி எங்க போனாங்க உங்களுக்கு அவங்களை பிடிக்காதா? இல்லை நீங்க இப்படி கொலைகாரனாய் இருக்கிறதுனால உங்க கூட இருக்க மாட்டேன்னு பயந்து உங்களை விட்டுட்டு போயிட்டாங்களா! ஏன்னா உங்க பசங்களே இப்படி உங்களை கத்தி எடுத்து குத்துற அளவுக்கு நீங்க அவ்வளவு மோசமானவரா இருந்து இருக்கீங்களா!”என்று கேட்டு தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
அவள் கேட்ட அடுத்த நொடி வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு வேகமாக அவள் புறம் திரும்பி, ” கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப பேசுற பாரு இது தான் நீ அடுத்தவங்க வாழ்க்கையில என்ன நடந்தது என்று தெரியாம இப்படி வார்த்தையை விடாதே! உன் உயிரை நான் காப்பாத்தி இருக்கேன் அதுவும் இல்லாம ஏதோ ஒரு வகையில நீ இந்த நிலைமையில் இருப்பதற்கு நானும் ஒரு காரணமா இருந்திருக்கேன் எனக்கு துரோகம் பண்ணவங்கள மட்டும் தான் எனக்கு கொல்ல தெரியும் எனக்கு துரோகம் பண்ண தெரியாது இதையெல்லாம் கேட்கவும் உனக்கு எந்த உரிமையும் இல்லை ஸ்டே இன் யுவர் லிமிட்” என்று முகத்தில் அடித்தார் போல சொன்னான்.
அதை கேட்டவளுக்கு ஒரு மாதிரியாகி போக அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பிக்கொண்டாள்.
அவனும் அதன் பிறகு எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான்.
அவளுக்குத்தான் மனது ஆறாமல், ‘ நமக்குத்தான் நம்ம அப்பா அம்மா சரி இல்லைன்னு பார்த்தா இவருக்கு பிள்ளைகளே சரியில்லையே அது சரி இவரும் சரியா இருந்திருக்க மாட்டாரோ என்னவோ நான் அப்படி என்ன கேட்டேன் உங்க வைஃப் எங்க இருக்காங்கன்னு தானே கேட்டேன் அதுக்கு ஏன் இவர் இந்த பேச்சு பேசறாரு இவர் கொலைகாரனா இருக்க போய் தானே அவங்க வைப் பிரிஞ்சு இருப்பாங்க போல ஆனாலும் யாருமே இல்லாம இருக்கிறது எவ்வளவு வலியோ அதே மாதிரி எல்லாரும் இருந்தும் இல்லாம இருக்குறதும் வலிதான் பெத்த பசங்களே தன்னை குத்துற அளவுக்கு இருக்கிறது எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும் அதை எல்லாம் பெருசா எடுத்துக்காம இவர் பாட்டுக்கு அடுத்து என்னனு யோசித்து போயிட்டே இருக்காரு சரியான கல்நெஞ்சுக்காரரா இருப்பாரு போல’ என்று கூட யோசித்தாள்.
அவள் யோசனை கலைக்கும் விதமாக “ஆமாம் இப்படி யாராவது வந்து நான்தான் கொலை பண்ணனு கேட்டா நீ மாட்டிவிட்டுடுவியா” என்றான்.
“அவங்க உங்களை விட்டுறேன்னு சொன்னதுனால தான் நான் சொன்னேன். இல்லன்னா நான் சொல்லி இருக்க மாட்டேன் ஆனாலும் நான் ஒன்னும் பொய் சொல்லலையே உண்மைய தானே சொன்னேன்” என்றாள்.
“அது சரி இவங்க பெரிய உண்மை விளம்பி தான் உங்கிட்ட இப்ப கேட்டாங்க பாரு, ” என்றான்.
“அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றீங்களா நீங்க பண்ணது தானே நான் சொன்னேன்.” என்றாள்
“நீ உண்மையை தான் சொன்ன யாரு இல்லன்னு சொன்னா ஆனா அது சொல்ல வேண்டிய இடம், ஆளுன்னு ஒன்னு இருக்குல்ல நீ சொல்ற உண்மை உன்னையும், உன்னை சேர்ந்தவங்களையும் படுகுழியில் தள்ளிடக் கூடாது”
“அப்போ பொய் சொன்னா தப்பில்லைன்னு சொல்லுறீங்க அப்படித்தானே”
“நன்மைக்கு சொல்லும் பொய்களும் அழகு”
“அது என்னங்க நன்மைக்கு சொல்லும் பொய்களும் அழகு”
“சில நேரத்தில் சொல்ற பொய்னால யாருக்கும் எந்த பாதிப்பும் அதே சமயம் நன்மையும் நடக்கும்னா அப்போ பொய் சொல்லலாம்” என்றான்.
“நீங்க எல்லாம் ரொம்ப படிச்சவங்க என்னென்னவோ சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல அப்போ அந்த நேரத்துல உங்க உயிரை காப்பாத்துறது தான் எனக்கு பெருசா தெரிஞ்சது அதனால தான் உண்மைய சொன்னேன் விடுங்க” என்றாள்.
“அது சரி உன் கிட்ட போய் எல்லாத்தையும் விலக்கிட்டு இருக்கேன் பாரு என்ன சொல்லணும் என்று அவன் சொல்லும்போது அவன் வயிற்றில் லேசாக வலி எடுக்க முகம் சுருங்கி அஹ ” என்றான்.
முன்பு அவன் பேசியதெல்லாம் அவளுக்கு பெரிதாக தெரியாமல் அவன் முகம் வலியில் முகம் சுருங்கியது ஒரு மாதிரியாக போக பதறி “என்னாச்சுங்க” என்றாள்.
“ஏய் ஒன்னும் இல்லை பயப்படாத”
“எப்படிங்க பயப்படாம இருக்க முடியும் சரி இப்போ நம்ம எங்க போயிட்டு இருக்கோம்” என்றாள்.
“எனக்கு தெரியல இன்னும் கொஞ்ச தூரம் வாலாஜா வந்துடும், அங்க ஏதாவது ஹாஸ்பிடல் போய் அப்படியே அங்கே ஏதாவது தங்க முடியுமா?” என்று பார்க்கலாம் என்றான்.
“சரிங்க ”
இப்படியே பேசிக்கொண்டு வண்டி வாலாஜாவை நோக்கி வர, அங்கு இவர்களுக்காக காத்திருந்தவர்களோ அந்த வண்டியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து சேகருக்கு கோவம் வந்து தண்ணி எடுத்து முகத்தில் ஊற்றி எழுப்பி “டேய் வண்டி வர நேரத்துல எப்படி தூங்கிட்டு இருக்கீங்களே அறிவு இருக்கா” கத்தினான்.
அதற்கு அந்த கூட்டத்தில் ஒருத்தனோ “அண்ணா நட்ட நடு ராத்திரில கூட்டிட்டு வந்தா தூக்கம் தான் வரும்” என்றான்.
“அது சரி யார சம்பவம் செய்ய இங்க எங்களை கூட்டிட்டு வந்து இருக்கீங்க” என்றான் இன்னும் ஒருவன்,,
அதற்கு இன்னொருவனோ “அடப்பாவி யாரை செய்யணும்னு தெரியாம தான் நீயும் வந்து சும்மா போய்க்கொண்டிருந்த என்னையும் கூட்டிட்டு வந்து இங்க உட்கார வச்சிருக்கியா டா ” என்றான் பாவமாக!
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் “அண்ணே சொல்லு அண்ணே யார போட்டு தள்ளப் போறோம்” என்று கேட்டான்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சேகர் தலையை சொரிந்து கொண்டு “அதான் நம்ம வீட்ல ஒருத்தன் எல்லாரையும் அடிச்சு போட்டுட்டு குழலியை கூட்டிட்டு போனானே அவனைத்தான் செய்ய வந்திருக்கோம்” என்றான் சேகர்.
அதைக் கேட்ட அவன் அதிர்ச்சியாகி “அண்ணன் அவரைத்தான் சம்பவம் செய்ய வந்து இருக்கோம்ன்னு சொல்லி இருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன் அண்ணே!!”
‘நீ வரமாட்டேன்னு தெரிஞ்சு தான் சொல்லாம கூட்டிட்டு வந்தேன்’ என்று சேகர் மனதில் நினைத்துக் கொண்டு “டேய் அப்படி இல்லடா அவன் முன்ன எந்த அடியும் படாம இருந்தான் இப்ப நடந்த சம்பவமே வேற அவனே குத்து உயிரும் கொலையிருமா வந்துட்டு இருக்கா இந்த சமயத்துல நம்ம அவனை ஈஸியா செஞ்சு விடலாம்” நம்பிக்கையாக சொன்னான்.
“என்னவோ சொல்ற நானும் கேட்கிறேன் என் பொண்டாட்டிக்கு நான் பத்திரமா வீட்ட போய் சேரனும் பாத்துக்க… ” என்றான் அவன்!!
“நீ பத்திரமா வீட்டுக்கு போய் சேரனும் நான் இப்படி தூங்கிட்டு இருந்தா வண்டி ஓட்டும் போது பரலோகம் தான்டா போய் சேருவ” என்று சேகர் சொல்ல “சரி அண்ணா எனக்கு அப்போ ஒரு டீய வாங்கி கொடு டீய குடிச்சிட்டு வண்டிக்காக வெயிட் பண்ணுவோம் வந்த உடனே போட்டு தள்ளிடுவோம் ”
இங்கு அவனை எப்படியாவது இன்று கொலை செய்து விட வேண்டும் என்று வந்தவர்களின் நிலைமையோ அந்தோ பரிதாபமாகி போக எழுந்து மெல்ல தட்டு தடுமாறி நின்றனர்.
அவர்களில் கர்ணா முதலில் இப்போ “ஓகேவா மேடம்” என்றான்.
“நான் ஓகே இல்லை கர்ணா அவனை கொலை பண்ணி இருந்தா தான் நான் ஓகேவா இருந்து இருப்பேன் ஆனா இப்ப என்னால மனசு திருப்தி அடைய முடியலையே இன்னைக்கு அவன் மிஸ் ஆகிட்டா என் புருஷன் நாளைக்கு வந்து விடுவான் அவனை மீறி என்னால இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு வெளிய கூட வர முடியாது ” என்றாள்.
“நீங்க கவலைப்படாதீங்க மேடம் அதுக்கு தான் சேகரு அங்க வாலாஜாவில் இருக்கானே நாமளும் இப்ப அங்க போனோம்னா நம்ம ஆட்கள் கிட்டயிருந்து அவன் தப்பிக்கவே முடியாது.”
“தப்பிக்க முடியாதுன்னு இல்லை கர்ணா தப்பிக்க கூடாது வண்டியை எடுங்க” என்றாள்.
அதற்குள் அமுதனின் இரண்டு மகன்களும் “நீங்க போய் அவனை அங்க பாருங்க நாங்க வீட்டுக்கு போறோம் அவன் வீட்டுக்கு வந்தானா அங்க வச்சு அவனை முடிச்சு விட்ரலாம் எங்க போனாலும் ஒன்னும் பண்ண முடியாது நாம பாத்துக்கலாம்” என்று அவன் இரு மகன்களும் வண்டியை ஓட்ட முடியாமல் என்று தெரியாமல் தட்டு தடுமாறி வண்டியை நோக்கி நகர்ந்தனர்.
அவர்களுக்கும் அது சரி எனப்பட அப்படியே செய்தனர்.
இங்கு அவர்கள் மும்பரமாக டீ குடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அமுதனின் கார் அவர்களை தாண்டிச் சென்ற பின்பு தான் அவர்கள் அதை கவனித்தனர். சேகர் தன்னுடன் வந்தவர்களை கிளப்பிக்கொண்டு அவனை பின்தொடரந்தனர்.
அவர்கள் வருவதை கண்ணாடியில் பார்த்து தன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான் அமுதன்!!
ஆனால், அவன் காயங்களில் இருந்து ரத்தம் அதிகமாக கசிய, பயந்த குழலியை சமாதானம் செய்தான்.
அவனை பின்தொடர்ந்தவர்களோ “அண்ணா நேரா போனா வேலூர் நாம ஏன்? ராங் ரூட் பைபாஸ்ல போய் எதிர்ல வரக்கூடாது” என்று சொல்லி முன்னே வந்து அவர்கள் வண்டியை கவனித்தவன் சட்டென்று தனது வலது புறம் இருக்கும் ரோட்டில் வண்டியை திருப்பினான்.
அவர்களும் பின் தொடர்ந்து வர அமுதன் ஒரு இடத்தில் மயங்கி விட்டான்.
