மலர் 8

மலர்-8

‘அவன்தான் போனுல. கடவுளே காப்பாத்துன்னு கூட நான் வேண்டிக்க முடியாது’ நொந்து கொண்டான் அருண்.

வாய்க்குள் சிரித்தவள் “முதல்ல கால அட்டண்ட் பண்ணுங்க. இல்லனா அதுக்கும் சேர்த்து நீங்கதான் திட்டு வாங்கணும்.’

அருண் ஹலோ என்று ஆரம்பிப்பதற்குள்ளே அவன் ஆரம்பித்துவிட்டான்.

“ஏண்டா! நான் என்ன உங்க கிட்ட பிச்சையா எடுக்கறேன். ஒழுங்கா ஒரு ஆள் அனுப்ப முடியாது?”

“என்னடா அதான் ஆள் வரங்களேடா ?” அருண் சமாளித்தான்.

“என்ன தெரியாத மாதிரி நடிக்கிறியா ?” பாய்ந்தான் ஆனந்த் .

“நைட்டுக்குதான் சரியா ஆள் வரங்களேடா? மார்னிங்க்கு மட்டும்  வேற ஆள் பார்த்துட்டுத்தான்டா இருக்கோம்”

“டேய் அருண்? என்ன கொலை வெறி ஆக்காத . அப்புறம் நான்  பிரண்டுன்னு கூட பார்க்க மாட்டேன்”

“டேய் நாங்களும் அந்த ஏஜென்சி கிட்ட பேசிக்கிட்டு தாண்டா  இருக்கோம்” விளக்கமளித்தான் அருண்.

“அவங்க சரியா வரலைனா வேற பாக்க வேண்டியதுதானே ? நான் ஒன்னும் ஓசில கேக்கலையே? பணம் குடுக்கறேன்தானே?”

அருண் காதில் வைத்து பேசிக் கொண்டிருந்தாலும் அவன்  பேசியதில் இருந்து  இவளுக்கு நன்றாகவே  புரிந்தது. அதில் தலையிட விரும்பாதவள் அமைதியாக வெளியில் வந்தாள் . அப்போது புதிய நம்பரில் இருந்து இவளுக்கு அழைப்பு வந்தது.

“ஹலோ யாரு ? ”

“நான் கதிரேசன்”

“சொல்லுங்க தாத்தா. பாட்டி எப்படி இருக்காங்க?”

“நீ நாளைக்கு காலைல இங்க வந்துடனும் அமிர்தா. இத நான் முதலாளியா சொல்லல. உன்னோட தாத்தாவா சொல்லறேன்” அந்த உன்னோட என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் இருந்தது. 

 ஏனோ அவராலும் அவர் மனைவியாலும் இவளை யாரோ ஒரு பெண் என்று கடந்து போக முடியவில்லை. அவளிடம் ஏதோ ஒரு நீண்ட நெடிய பந்தம் இருந்தது போலவே உணர்ந்தார்கள். அதனாலேயே கணவன் மனைவி இருவரும் அவளிடம் சற்று அதிகமாகவே உரிமை எடுத்துக் கொண்டார்கள்.

 அன்று மனைவி கூறியதில் இருந்து கதிரேசனுக்கும் இவளை மாதிரி ஓர் நல்ல பெண் தன் பேரனுக்கு வாய்க்க மாட்டாளா என்ற ஏக்கமும் இருந்தது. அதே சமயம் பேரனின் குணம் தெரியும். அவனுக்கு இந்த உலகத்தில் எல்லாமே பணம் தான். பணத்தையும் தாண்டி இவ்வுலகத்தில் பல விஷயங்கள் உள்ளன என்பதை இவர்களால் அவனிடம் எடுத்துக் கூற முடியாது. புரிந்தும் புரியாத அந்த பன்னிரண்டு வயதில் அவனுக்கு விழுந்த அடி அவனை அப்படி யோசிக்க வைத்தது. அதிலும் ஏழைப் பெண்கள் அல்லது சுமாரான பெண்களை என்றால் அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். அதுக்கும் ஒரு படி மேலே போய்  இவளிடம் நெருப்பை கொட்டுகிறான். 

எது எப்படி இருந்தாலும் அவருக்கு இந்த உலகத்தில் வெகு முக்கியம் மனைவி. அவள் உடல் நிலை,மன நிலை. அதற்காக பேரனனின்  எந்த பிடிவாதத்தையும் சமாளிக்க அவர் தயார். அதனாலேயே அமிர்தாவுக்கு அவர் போனில் அழைத்தார்.

“இல்ல தாத்தா..” அவள் ஆரம்பித்ததும்,

“எனக்கு நீதான் தேவை. உன்னோட மறுப்போ சமாதானமோ  இல்ல. நாளைக்கு வந்து பாட்டியை  பாரு. அப்புறம் முடிவு பண்ணு . காலைல உனக்காக காத்திருப்பேன்” சொல்லி விட்டு போனை வைத்து விட்டார். தன் மனையாளைளுக்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்றாகவேத் தெரியும். 

மறு  நாள் காலை ,

பிடிக்காமலே  அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் . அவள் நுழையும்போதே முத்துவும் வைரனும்  ஓடி வந்து மேலே விழுந்து கொஞ்சினார்கள். ஒரே ஒரு முறை தான் பார்த்தாள் . ஒரே ஒரு முறை தான் உணவளித்தாள் . அவைகளுக்குத்  தான் எத்தனை அன்பு. ஆச்சர்யமாகத்தான் இருந்தது அவளுக்கு. முதல் நாள் வீட்ல நடந்தது சொன்னதும் அனைவரும் ஒற்றுமையாக பாட்டிக்கு சப்போர்ட் செய்து இவளை  இங்கு அனுப்பி விட்டார்கள். அதற்கு இன்னொரு காரணம் இவள் ஆனந்தை  பற்றி முழுமையாக சொல்லாததுதான். அவனின் அசிங்கமான பேச்சுக்களை அவளால் எப்படி வீட்டில் சொல்ல முடியும்? அவளுக்கே உடல் கூசியது. 

அவருக்கு ஏனோ என்னைக் கண்டாலே  வெறுப்பாக இருக்கிறது என்று மட்டுமே சொல்லி இருந்தாள் .ஒருவேளை அம்மா இருந்திருந்தால் ஆனந்திற்கு  மற்ற பெண்களை பார்த்து இத்தகைய மட்டமான சிந்தனை வந்திருக்காதோ? அவன் அன்னையையை பற்றி இவளுக்கு என்ன யோசனை? காலம் எதையும் எப்போதும் காரணம் இல்லாமல் செய்யாது.  

 இதோ இப்போது இங்கு நிற்கிறாள். முத்து  சாதாரணமாக கொஞ்சினாலும் வைரன் மேலே விழுந்து அவளை கீழே தள்ளி கொஞ்சியதில் அவள் பின் குத்தியிருந்த துப்பட்டாவும் சட்டையும் சேர்ந்து லேசாக  ஒரு பகுதியில் கிழிந்து விட்டது. 

“போதும்! போதும்!” என்று அவர்களை தடவிக் கொடுத்துவிட்டு , கிழிந்த பகுதியை மறைத்து பின் குத்திக் கொண்டே வந்தவள்  தவறுதலாக ஆனந்தின் அறைக்குள் நுழைந்துவிட்டாள் . அப்போது தான் குளித்து விட்டு உடை மாற்ற அலமாரியில் இருந்து துணிகளை எடுத்துக் கொண்டிருந்தவன் இவளை பார்த்து விட்டான். அவன் தான் பார்த்தான், இவள் அவனை பார்க்கவில்லை. அவனுக்கு வந்த கோபத்தில் அவளுக்கு பளீரென கன்னத்தில் ஒரு அறை  விட்டான். 

“கெட் அவுட்” அவன் சொன்னதும்தான் அவள் சுய நினைவிற்கே வந்தாள். அவன் அறைந்த இடம் எரிந்தது. அதை விட மனதின் வலி சொல்ல முடியாதது. ஏதோ தன்னை விபச்சாரி போல நடத்துவது போல அருவருப்பாக இருந்தது. வந்த கோபத்தில் கைப் பையை எடுத்து கிளம்ப போனவள் கையை இழுத்துக் கொண்டு தாத்தா அவன் அறைக்கு சென்றார். அவன் அதற்குள் ஓரளவு ரெடியாகி இருந்தான். 

“இவள எதுக்குடா அடிச்ச என்று கேட்கப் போகிறாரா ?” அவர் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால்  அவர் எதுவுமே பேசவில்லை.  கை கட்டி  பேரனை அழுத்தமாக பார்த்தார். அதிலேயே பேரன் மிரண்டுதான் போனான்.

பல நேரங்களில் பேச்சை விட மௌனம் அதை விட அழுத்தமாக நம் சிந்தனைகளை தேவைகளை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. இது தாத்தாவிடம் இருந்து அவள் கற்றுக் கொள்ளும் பாடம். 

“என்ன இவ உங்ககிட்ட வந்து போட்டுக்குடுத்தாளா?”

“அவ கன்னத்துல இருக்கற உன்னோட கை  ரேகையே சொல்லும்போது நான் எதுக்குபா  அவகிட்ட கேட்கணும்?” சத்தமில்லாமல் அழுத்தமாக கேட்டார்.

“எனக்கு இவளை பார்த்தாலே புடிக்கல. இவ எதுக்கு இங்க நம்ம வீட்டுக்கு வந்து வந்து நிக்கறா ?”

அவனும் மூத்தவரைப்  போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் தான் கேட்டான்.

“நான் ஒன்னும் இவளை  உனக்கு கல்யாணத்துக்கு பாக்கல. உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா அத பத்தி கவலை இல்ல. என்னோட பொண்டாட்டிக்கு நர்சாதான் அவளை  வர சொல்லி இருக்கேன். என்னோட மனைவிக்கு இவளோட துணை தேவை. திரும்பி அவளை பார்த்தவர், “நீ உள்ள போய்  பாட்டிய பாரு” அதிகாரமாகத்தான் சொன்னார். அதில் அமிர்தா  கொஞ்சம் ஆடித்தான் போனாள் .

“இங்க பாரு ஆனந்த்! நீ பிசினஸ் பண்ணறவன். உனக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. வீட்டுல வேலை செய்றவங்களுக்கு நாம குடுக்க வேண்டிய மரியாதையை  கொடுத்துதான் ஆகணும். ஒரு தடவ அவ கிட்ட சாரி சொல்லிடு.” வெகு சாதாரணாமாக சொல்லி விட்டார் .

 “அவ வரப்போற கொஞ்ச நாளைக்கு நீ அவ பக்கம் வராத” தோளில்  தட்டி  விட்டு சென்றார். 

எந்த தவறுக்கும் மன்னிப்பு என்பது அவன் வாயில் இருந்து வராது. அதற்கும் காரணம் அவன் மன இறுக்கம். வருங்காலத்தில் அவன் எத்தனை சாரி சொன்னாலும் சரி செய்ய முடியாத ஒரு முக்கியமான தவற்றை அவன் செய்து கொண்டிருக்கிறான். அவன் மட்டும் இல்லை. பெரியவர்களும்தான். 

.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!