அன்று.…
கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் ஜனவரி 1 , 1986ஆம் ஆண்டில்
விடியல் நெருங்கியும் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்களை எப்படி எழுப்புவது என்ற தீவிர யோசனையுடன் உக்கிரமாக உதித்துக் கொண்டிருந்தான் ஆதவன், அவனது கதிரில் ஒன்று நேர் கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணவளின் மேடிட்ட வயிற்றில் சுள்ளென்று விழுந்தது.
“ஆ ஆ.ம்.மா” பெரிதாக ஒரு அலறல் ஒலி அப்பெண்ணிடம் இருந்து எழுந்தது.
“ஒண்ணுமில்லமா வலிக்கும் பொழுது மட்டும் புஷ் பண்ணுங்க. இன்னும் அஞ்சே நிமிஷம் தான் குழந்தை பிறந்திடும்” – அப்பெண்ணின் கைகளை ஆறுதலாய் பற்றினார் கன்னியாஸ்திரீயின் உடையிலிருந்த மருத்துவர்.
அவர் சொன்னது போலவே அதிகம் சிரமம் கொடுக்காது தன் தாயின் உயிரைப் பிளந்துகொண்டு இந்த பாவப்பட்ட உலகில் வந்து உதித்தான் அந்த அபலையின் மகன்.
“உனக்குப் பையன் பிறந்திருக்கிறான் மா. நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி உன் பையன் உன்னை கஷ்டப்படுத்தாமல் பிறந்துட்டான்” – மகிழ்ச்சியுடன் கூறினார் மருத்துவர். சிறிதளவு மகிழ்ச்சி கூட இல்லாது உணர்வற்று கிடந்தாள் அப்பெண். அவளது விழிகளில் கண்ணீர் மட்டும் விடாமல் வழிந்துகொண்டிருந்தது.
“எல்லாத்தையும் மறந்துட்டு உன் வாழ்க்கையை புதுசா ஆரம்பி டா” – அப்பெண்ணின் கையிலிருந்த குழந்தையை வாங்கி தன் மார்போடு அணைத்தபடி கூறினார் மருத்துவர். அவரிடம் இருந்து விடைபெற்றவள் தன்னை பார்த்துச் சிரித்தபடி வழியனுப்பிய தன் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்து கண்ணீர் வடித்தபடி அங்கிருந்து சென்றாள்.
இன்று.…
‘ஆட்டம் என்னுடையது நீ கேம் ஓவர்ன்னு சொல்ற. நான் இன்னும் ஆடவே இல்லை டா, கேம் இஸ் நாட் ஓவர். இட்ஸ் ஜஸ்ட் பிகினிங்’ – என்றவனின் இரு விழிகளும் திரையில் கனலாய் தகித்துக்கொண்டிருக்க,
அரங்கமே அதிரும் அளவிற்குக் கரகோஷத்தின் ஒலியுடன் திரைப்படம் முடிந்திருக்க,
இதைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணவளின் மருண்ட விழிகள் மட்டும் மிரட்சி குறையாது திரையரங்கத்தின் திரையிலே நிலைத்திருந்தது.
மும்பையில் மெட்ரோ சினிமாக்ஸ் என்னும் திரையரங்கத்தில் திரைப்படம் முடிந்த பின்பும் ரசிகர்களின் ஆரவாரம் சில நொடிகள் நீடித்திருக்க, இதை அனைத்தையும் தனக்கும் தன் குடும்பத்தினருக்காகவும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவனின் முகத்தில் சொல்ல முடியாத மகிழ்ச்சி.
அதை விட தன் அருகில் இருந்த பெண்ணவளின் அழகான விழிகள் மிரட்சி குறையாது திரையரங்கத்தின் திரையிலே நிலைத்திருந்ததை கண்டு சிரித்தவன் ‘ம்ஹும்’ தன் தொண்டையைச் சரி செய்தபடி பெண்ணவளை அழைத்தான்.
“டேய் அண்ணா நீயா இது” – அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் கேட்டாள் அவள்.
“இல்லை என் ஆவி” – தன் தங்கையின் தலையில் நறுக்கென்று கொட்டியபடி கூறினான் அவன்.
“ஆ அண்ணா அடிக்காத டா” – தலையைத் தடவியபடி கூறியவள் மேலும் தொடர்ந்து,
“என்னடா அண்ணா இப்படித் தெறிக்க விட்டிருக்க, சான்ஸே இல்லை பார்க்கப் பச்சை புள்ள மாதிரி இருந்துட்டு என்ன ஒரு வில்லத்தனம். கலக்கிட்ட, இது உன் முதல் படம்ன்னு யாருமே சொல்ல மாட்டாங்க. ஆக ஒருவழியா நீயும் நடிகனாகிட்ட. பெருமையா இருக்குது டா. உனக்கு கொடுத்த ரோலை செமையா பண்ணிருக்க மாறா”
அவனது தங்கையைத் தொடர்ந்து அவனது தாய் தந்தை மற்றும் அவனது அத்தை மாமா என்று அவனது மொத்த குடும்பமும் அவனைப் பாராட்டினர்.
இளமாறன் !
இருபத்தைந்து வயதைத் தொட்ட அழகான ஆண்மகன்!
வட இந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த புது வரவு !
தன் முதல் படத்திலே சிறிதும் தயக்கம் இல்லாமல் வில்லனின் கதாபாத்திரத்தை துணிச்சலுடன் எடுத்துச் சிறப்பாக நடித்து அனைவரின் மனதிலும் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவன் !
திரைத்துறையில் மட்டும் தான் வில்லன் நிஜத்தில் அவ்வளவு பொறுமை, குடும்பத்தினர் மீது அதீத அன்பு அதுவும் தங்கைகள் என்றால் அலாதி பிரியம்.
தன் சொந்த மாமா அத்தை இருவரும் ஒருகாலத்தில் வட இந்தியா திரைத்துறையில் கனவு நாயகன் மற்றும் கனவு நாயகியாக வளம் வந்தவர்களாக இருப்பினும், அவர்கள் யாருடைய உதவியையும் பெறாமல் தன் கடின முயற்சியால் முன்னேறத்துடிப்பவன்.
@@@
வீட்டில் அனைவரும் மேஜையில் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது, “அர்ஜுன் என்ன இன்னும் வீட்டுக்கு வரல” – சப்பாத்தியை வாயில் போட்டு அசைபோட்டபடி ஆரம்பித்தார் இளமாறனின் அன்பு தாய் மிருதுளா.
“வேலையா இருப்பான் அண்ணி” – மென்மையாய் கூறினார் அர்ஜுனின் தாய் ப்ரீத்தா.
“அப்படி என்ன தலை போற வேலை. இன்னைக்கு என் பையனுடைய முதல் படத்தோட முதல் ஷோ அவனும் அங்க வந்திருக்கணும்ல.”
“உங்களுக்குத் தான் தெரியுமே அவன் வேலைன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்திருவான்” – சமாளித்தார் ப்ரீத்தா.
“ஆமா மறந்திருவான், நல்லா உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணுங்க” – சீறினார் மிருதுளா.
“ஏய் அர்ஜுன் வரலைன்னா அவன் கிட்டப் போய் கேளு ஏன் என் தங்கச்சு கிட்டக் கத்திக்கிட்டு இருக்க” – சீரும் மனைவியை அடக்க முயன்றார் அருள் நிதி. ஆனால் மிருதுளாவின் ஒரு பார்வையிலே அடங்கிப்போனவர். அடுத்து எதுவும் பேசாமல் உணவு உன்ன துவங்க,
அடுத்த சப்பாத்தியை தன் வாயில் திணித்தபடி, “ஆமா இந்த மதுமதிய எங்க அந்த மகாராணியும் வரல” மீண்டும் தன் வேலையைத் துவங்கினார் மிருதுளா .
“யாரையாவது ஏதாவது சொல்லாம உன்னால இருக்கவே முடியாதா ம்மா. அவ வேலை முடிச்சிட்டு இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொல்லிட்டு தான் மா போனா.” என்றான் இளமாறன்.
“ஆமா அந்த அம்மா ஜில்லா கலெக்டரு. பாக்குறது டீச்சர் வேலை, அதுவும் ஒரு இத்துப்போன ஸ்கூல்ல. சம்பளமே இல்லாம நானும் டீச்சர் தான்னு ஊரை சுத்திட்டு இருக்கா. டீச்சருக்கு நைட்ல என்ன வேலை?? வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் வரவேண்டியது தான. உனக்கு இது எவ்வளவு முக்கியமான நாள் அவ வந்திருக்கணும்ல. சும்மா அண்ணன்னு பெருமை பேச தான் ஆவா. இதே நீ
அவளுடைய சொந்த அண்ணனா இருந்திருந்தா வந்திருப்பால. உன் மேல எல்லாம் அவளுக்குப் பாசமே கிடையாது டா” – நன்றாகக் கொளுத்திப்போட்டார்.
“மா நிம்மதியா சாப்பிட விடுமா சித்திரவதை பண்ற நீ” – என்று இளா தன் நெற்றியை நீவ.
அவனைத் திசை திருப்புவதற்காக,
“இளா சும்மா சொல்லக் கூடாது உன் மாமாவை விட நீ நல்லா நடிச்சிருக்க” – தன் கணவன் ராம்குமாரை வம்பிழுத்தபடி அவரது மனைவி ப்ரீத்தா இளமாறனை பாராட்டினார்.
“என்ன மாமா, அத்தை இப்படி சொல்றாங்க” சிரித்தபடி வினவினான் மாறன்.
“சும்மா சொல்றா டா என் நடிப்பைப் பார்த்து மயங்கித் தான் என்னை உன் அத்தை விரட்டி விரட்டி காதலிச்சா” – என்று ராம்குமார் கண்சிமிட்ட,
“அப்படியா இதுவரைக்கும் உங்க காதல் கதையைப் பத்தி நீங்கச் சொன்னதே இல்லையே, உங்க காதல் கதையை கொஞ்சம் சொல்லுங்களேன் ” மிருதுளாவின் இளைய மகளும் மாறனின் தங்கயுமான ஜூவாலா ஆர்வமாய் வினவினாள்.
“ஆமா அத்தை சொல்லுங்க” – தன் தங்கை ஜுவாலாவுடன் இளாவும் இணைந்துக் கொண்டான்.
“சொல்ற மாதிரி இருந்தா தானே சொல்லுவாங்க” – முகத்தைச் சுளித்தபடி ஏளனமாய் மிருதுளா சிரிக்க, கண்களில் நீர் கோர்த்தபடி அங்கிருந்து எழுந்து சென்றார் ப்ரீத்தா.
ப்ரீத்தா, ராம்குமாரின் அன்பு மனைவி !
வட இந்தியா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி. இளம் வயதிலே காதல் காட்சிகளில் இளசுகளின் மனதைக் கொள்ளை அடித்தவர்.
நடிக்கும் பொழுதே ராம்குமாரை காதலித்து ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார். பின்பு அர்ஜுன் பிறந்ததும் தன் நடிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டவர். கணவன் ,குழந்தை ,குடும்பம் என்று தன் வட்டத்தைச் சுருக்கிக்கொண்டார் .
பொறுமையின் சிகரம். யாரையும் தன் வார்த்தையால் கூட சங்கடப்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பார்.
ப்ரீத்தா சென்றதும் அனைவரின் பார்வையும் மிருதுளாவை துளைக்க, சுதாரித்துக்கொண்டவள்,
“என்ன எல்லாரும் என்னையே பாக்குறீங்க நான் விளையாட்டுக்குச் சொன்னேன் அவ கோச்சுட்டு போனா நான் என்ன பண்றது”
“உனக்கு அறிவே கிடையாது மா” என்றபடி தன் இருக்கையில் இருந்து எழுந்த இளா தன் அத்தை பிரீத்தாவை சமாதானம் செய்யக் கிளம்ப, அவனைத் தடுத்த ராம்குமார்,
“நான் பார்த்துக்கறேன் நீ சாப்பிடு” என்று கூறியவர் தன் அக்கா மிருதுளாவை பார்த்து பயங்கரமாய் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார். அந்த பார்வைக்கான அர்த்தம் மிருதுளா அருள்நிதி தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ராம்குமார் மிருதுளாவின் சொந்த தம்பி. அருள்நிதி ப்ரீதாவின் அண்ணன்.
மிருதுளாவுக்கு ப்ரீத்தா, மதுமதி என்றால் சுத்தமாக ஆகாது. முக்கியமாக அவர்கள் என்று வந்து விட்டால் கொஞ்சம் வஞ்சமும் நாக்கில் விஷமும் எப்பொழுதும் ஒதுக்கியே வைத்திருப்பார்.
மனிதர்களை காட்டிலும் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால், யார் மனதையும் புண்படுத்த அவர் ஒருநாளும் தயங்க மாட்டார்.
மிருதுளாவை பொறுத்தமட்டில் தான், தன் பிள்ளைகள், தன் கணவன் எல்லாரையும் விட சிறப்பாக வாழ வேண்டும். தன் தம்பி ராம்குமாரின் மீதும் அன்பு உண்டு, ஆனாலும் அதில் அதிகப்படியாக சுயநலம் கலந்திருக்கும்.
ஆதாயத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். விஷத்தையும் கக்குவார். கெட்டியும் அணைப்பார்.
அருள் நிதி இவருக்கு அப்படியே எதிர். மனைவியை அடக்கி ஆழத் தெரியாத மற்றும் முடியாத அட்டக்கத்தி. வெளியில் புலி வீட்டில் எலி. இவருக்கு தன் மனைவியின் சொல்லே மந்திரம். மிருதுளாவின் கட்டளைக்கு எந்திரம் போலச் செயல் படுவார்.
அருள்நிதி நடத்துவது அனைத்தும் நிதி நிறுவனங்கள். மக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை அதிக வட்டிக்கு விட்டு லாபம் பார்ப்பது தான் அவருடைய தொழில். அருள்நிதி, ராம்குமார் , மிருதுளா மற்றும் ப்ரீத்தா நால்வரும் இதில் பங்குதாரர்களாய் இருந்தாலும். மிருதுளா தான் கம்பெனியை முழுவதுமாய் வழிநடத்தி செல்பவர். அவர் சொல்லே அங்கே தாரக மந்திரம்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இளமாறன் மூத்தவன் ஜுவாலா இளையவள்.
தன் தமையன் ராம்குமார் பார்த்த பார்வையில் சூரியனின் வெப்பத்தை தன் மேல் உணர்ந்த மிருதுளா, மறுவார்த்தை பேசாது அங்கிருந்து செல்ல, அவரை தொடர்ந்து அருள்நிதியும் அங்கிருந்து சென்றார்.
அனைவரும் அங்கிருந்து சென்றிருக்க தன் அம்மாவை எண்ணி எரிச்சல் அடைந்தவன் தன் நெற்றியில் கைவைத்தபடி அமர்ந்திருக்க, அப்பொழுது அவன் தோள் மீது கைபோட்டபடி அங்கு வந்த அர்ஜுன்,
“கங்கிராட்ஸ் டா” என்றபடி இளமாறனை அணைத்துக்கொண்டான்.
“தேங்க்ஸ் அர்ஜுன்”
“சாரி டா வர முடியல வொர்க்ல நிறைய டென்ஷன்” – என்று அர்ஜுன் சலித்துக்கொள்ள. அர்ஜுன் வந்ததும் வேகமாய் எழுந்து அடுப்பறைக்குள் சென்ற ஜுவாலா. ஒரு கப் டீயுடன் அர்ஜுனின் அருகில் வந்து,
“அத்தான் இந்தாங்க உங்களுக்கு புடிச்ச லெமன் டீ, முதல்ல குடிச்சிட்டு பேசுங்க” – மலர்ந்த முகத்துடன் கூறினாள்.
புன்னகையுடன் வாங்கி அருந்தியவன், “உண்மைய சொல்றேன் ஜுவாலா , நீ போடுற இந்த டீல கிடைக்கிற சந்தோஷத்தை இந்த உலகத்தில் எனக்கு யாருமே கொடுக்க முடியாது” என்றதும் வெட்கத்தில் நாணியவளின் வதனம் அந்திவானமாய் சிவந்திருக்க. அதை கவனிக்காது மொத்த டீயையும் பருகியவன்,
“கொஞ்சம் மதுக்கும் சொல்லிக்கொடு” என்று கூற. இப்பொழுது ஜுவாலாவின் மலர்ந்திருந்த வதனம் வாடிவிட்டது.
ஏற்கனவே அவள் அதிக வருத்தம் கலந்த கோபத்தில் அமர்ந்திருக்க,
“அதனால் என்ன கல்யாணத்துக்கு அப்புறம் இங்க தானே இருப்பீங்க. மது மெல்ல கத்துக்கிட்டும். மது கத்துக்குற வரைக்கும் ஜுவாலாவே உனக்கு டீ போட்டுத் தரட்டும்” என்று விவரம் புரியாமல் இளமாறன் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றினான்.
அவளோ தன் கோபத்தை மறைத்தபடி மெலிதாய் புன்னகைத்தவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றாள்.
“அப்புறம் மாறன் எல்லாம் எப்படி பேச்சு ஆடியன்ஸோட ரெஸ்பான்ஸ் எப்படி இருந்துச்சு”
“மிகச்சிறப்பு” – ஒற்றை வார்த்தையில் மொத்த சந்தோஷத்தையும் கொட்டினான்.
“சூப்பர் டா நான் தான் மிஸ் பண்ணிட்டேன் ”
“நான் உன்னையும் மதுவையும் ரொம்ப மிஸ் பண்ணினேன் டா”
“மதுவையும்ன்னா மது வரலையா”
“இல்லை அவ ஸ்டுடென்ட்ஸ வேற ஸ்கூல்க்கு காம்ப்பெட்டிஷனுக்கு கூட்டிட்டு போகணுமாம் அதுக்காக புள்ளைங்களுக்கு ட்ரேனிங் குடுத்துட்டு லேட்டா வருவேன்னு சொன்னா, கூட திவியும் இருக்கா” என்றான்.
“அப்படியா தனியா வந்துருவாளா, எனக்கும் இப்போ உடனே கூப்பிடவும் போக முடியாது, அவளுக்கு எப்போ முடியும்ன்னு தெரியல, நான் உடனே ஆபீஸுக்கும் போக வேண்டியது இருக்கு”
“என்னாச்சு டா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப டென்ஷனா இருக்க”
“ஆதி அதான் ஆதித்யா பிஸ்னஸ் மேன். ஹீ இஸ் நோ மோர்” என்றான் அர்ஜுன்.
“யு மீன் ஆதி க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனியோட MD ”
“அவனே தான், இன்னைக்கு மார்னிங் அவன் ட்ரவல் பண்ணின அவனுடைய பிரைவேட் சாப்பர் க்ரஷ் ஆகிடுச்சு.
ஒரு பார்ட் கூட மிஞ்சல, இந்த நியூஸ் மார்னிங்கே வந்துருச்சு நம்ம ரெஸ்க்யூ டீம் எல்லாரும் ரொம்ப தேடி பார்த்தாங்க, ஆனா எதுவும் கிடைக்கல.
நியூஸ் மீடியாக்கு தெரியாம மறைச்சு வச்சிருந்தோம். ஈவினிங் தான் பிரஸ் மீட்ல சொன்னோம். அவன் கண்டிப்பா தப்பிச்சிருக்க முடியாது.
என்ன, இது ஆக்சிடெண்ட்டா இல்லை கொலையான்னு தான் தெரியலை.” – என்று அர்ஜுன் கூறிகொண்டிருக்கும் பொழுதே இளமாறனின் அலைபேசி விடாமல் சத்தமிட, இளா இதோ வந்து விடுவதாக தன் அலைபேசியை எடுத்தபடி அர்ஜுனிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
மாறன் சென்றதும் மதுவிற்கு அழைப்பு விடுத்தான் அர்ஜுன்.
