மும்பை மக்கள் அனைவரும் நித்திரைக்குள் தங்களை நுழைத்திருந்த நேரம். கறுத்து கொண்டிருந்த கார் மேகங்கள் மிரட்டும் இருட்டைப் பிரதிபலிக்க. சில்லென்று குத்தூசியைப் போல முதுகெலும்பை ஊடுருவும் குளிர்ந்த காற்று வீசும் இரவு வேளையில், ஆள் நடமாட்டமே இல்லாத அந்த தெருவில் சில்வண்டுகளின் ரீங்காரத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. ஹெட்செட்டில் இளையராஜாவின் இசையை தனக்குத் துணைக்கு அழைத்தபடி அந்த சாலையின் வழியே நடந்துகொண்டிருந்தாள் மதுமதி.
இடியும் மின்னலும் மட்டும் அவளை வெகுவாக அச்சுறுத்தியது. எப்பொழுதும் நடந்து வரும் சாலை தான் இன்று நேரம் கடந்து வந்ததால் ஆள் நடமாட்டம் இல்லாமல் நிசப்தமாய் காணப்பட்டது. எந்த நேரத்திலும் மழை கொட்டிவிடும் போல மேகம் கறுத்திருக்க. இது எதையும் பற்றிக் கவலைகொள்ளாது, தனிமையிலும் இனிமை காண முடியுமா என்பதைப் போல சில்லென்று வீசிய குளிர்ந்த காற்றை ரசித்தபடி மெதுவாய் நடந்துகொண்டிருந்தாள். அப்பொழுது கையில் இருந்த அலைபேசி ஒலித்தது. வீட்டுக்கு வரத் தாமதமானதால் அர்ஜுன் தான் அழைத்திருந்தான்.
“மது மா எங்க இருக்க? நான் வேணும்னா கூப்பிட வரவா, உனக்கு வேலை முடிஞ்சிட்டா, நேரம் ஆகும்ன்னா நான் வேணும்ன்னா மாறனை அனுப்பவா” கனிவுடன் வினவினான்.
“இல்லை இல்லை வேண்டாம் நானே வந்திடுவேன்” உடனே மறுத்தாள்.
“சரி கவனமா வா. எதும்ன்னா உடனே கால் பண்ணு”
“சரி” – என்றவள் அர்ஜுனுக்கு பதிலளித்துவிட்டு அழைப்பிற்கு விடுதலை கொடுக்கவும், மழை தூவ துவங்கியது.
ஒருவேளை அர்ஜுனை வரச்சொல்லிருந்தால் இனிமேல் அவள் வாழ்க்கையில் நடக்கப் போகும் சம்பவங்களைத் தடுத்திருக்கலாமோ ???
லேசான தூறல் நொடிகள் கடக்கக் கடக்க வளமாகவும் கொஞ்சம் வேகமாகவும் தூவ. இதற்கு மேல் நடப்பது சாத்தியமற்றதாக உணர்ந்தவள் சற்று அருகில் தெரிந்த கட்டிடத்திற்குள் சென்று ஒதுங்கிவிட்டு மழையின் வேகம் குறைந்ததும் செல்லலாம் என்று முடிவெடுத்தாள்.
பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த கட்டிடத்தில் ஒரு ஓரமாகச் சென்று தஞ்சம் அடைந்தவள். விடாமல் தூவிய மழைத்துளியை தன் கையில் ஏந்தியபடி ரசித்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது கட்டிடத்தின் நுழைவாயிலின் முன் வந்து நின்ற கருப்பு நிற காரை பின்தொடர்ந்து , இரண்டு மூன்று கார்கள் வந்து நின்றன.
கருப்பு நிற காரில் இருந்து நல்ல வாட்ட சாட்டமான, அடர்ந்த தாடிகொண்ட, நடுத்தற வயதை தாண்டிய ஒருவன் இறங்க , அவனை சுற்றி அவனுக்கு பாதுகாப்பாக மற்ற கார்களில் இருந்து ஆயுதம் ஏந்திய அடியாட்களும் இறங்கினர். அவனை வரவேற்க உள்ளே இருந்து , கழுத்து நிறைய தங்க சங்கிலிகளை அடுக்கியவாறு ஒரு நாற்பது வயதை கொண்ட ஒருவன். தன் கரங்கள் கூப்பியபடி ,
“வாங்கோ சூரஜ் பாய் ,உங்களுக்காக தான் நான் காத்து கிட்டு இருந்தேன்” என்று சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர் .
“எப்படி இருக்கீங்க கஷ்யப் சார் , டீலிங் எல்லாம் பக்கா தானே ” மீசையை முறுக்கினான் சூரஜ்.
“ஆமா ஜி , க்ளையண்ட் இப்போ வந்திருவாரு. வாங்க உள்ள போகலாம்” என்று கஷ்யப் கூறிய பின், சூரஜ்ஜின் அடியாட்கள் கொஞ்சம் பேர் வெளியே காவலுக்கு நிற்க, பாதி பேர் மட்டும் சூரஜின் பாதுகாப்புக்காக உள்ளே சென்றனர்.
இதை மறைவான ஓர் இடத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த மதுவுக்குக் கர்ஜிக்கும் வானம் மற்றும் இருளின் ஆதிக்கம் என்று இந்த இரண்டையும் தாண்டி, இப்பொழுது வந்தவர்களின் தோற்றம் மிகுந்த அச்சத்தைக் கொடுக்க, வழக்கத்துக்கு மாறாக இன்று அவளது இதயம் தாறுமாறாய் துடித்தது.
அங்கே இருக்கவும் பயமாக இருந்தது. சரி அங்கிருந்து செல்லலாம் என்றால் அந்த அடியாட்களைத் தாண்டி தான் செல்ல வேண்டும். தாடி மீசை என்று முரட்டுத் தனமாய் காட்சியளிக்கும் அவர்களைப் பார்த்தாலே அச்சம் தொற்றிக்கொள்ள, அவர்களின் கண்ணில் படாமல் இங்கேயே மறைந்து இருந்து அவர்கள் சென்றதும் செல்லலாம் என்று முடிவெடுத்தவள் எதுவும் பேசாமல் அங்கே நடப்பதை கவனித்துக்கொண்டிருந்தாள்.
கட்டிடத்தில் இருக்கும் உட்புற அறையில் மதுபானத்தை தன் வாயில் சரித்தபடி சூரஜ்,
“இப்போ தான் போன நிம்மதி திரும்ப வந்தமாதிரி இருக்கு. அவன் நமக்கு எவ்வளவு ஆட்டம் காட்டிட்டான். கொஞ்ச குடைச்சலா கொடுத்தான். அவன் கதையை முடிச்சதுக்கு அப்புறம் தான் நிம்மதியே வந்திருக்கு. புதுசு புதுசா முளைக்கிறானுங்க” சூரஜின் முகத்தில் ஆக்ரோஷம் தெறித்தது
” சரியா சொன்னீங்க பாய் ” என்ற கஷ்யபிடம் தொழில் பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்த சூரஜ்,
“ என்ன கஷ்யப் உங்க க்ளையண்ட் எப்போ வருவாரு ”
“ சூரஜ் பாய், இப்போது வந்திருவாரு ”
“வெளியில் ஏதோ சத்தம் கேக்குற மாதிரி இல்ல ”
” அதுவந்து சூரஜ் பாய் ” என்று கஷ்யப் சமாளிக்க, சூரஜ் தன் ஆளுங்களை வெளியே என்ன நடக்கின்றது என்று பார்த்துவிட்டு வரக் கட்டளையிட, அடுத்த நொடி அவர்கள் இருந்த அறைக்கதவை உடைத்துக்கொண்டு ஆறடி உயரம், ட்ரிம் செய்ய பட்ட தாடி என்று கம்பீரமான தோற்றம் கொண்ட ஒரு இளைஞன், தன் முகத்தை மூடிக்கொண்டு, வேட்டையாடும் சிங்கத்தின் தீராத தாகத்தை விழிகளில் தெறிக்கவிட்டபடி சூரஜின் முன் வந்து நின்றான் .
அப்பொழுது சூரஜ்ஜின் ஆட்கள் அவனை தாக்க துப்பாக்கி எடுத்த மறுநொடி , அந்த இளைஞன் உடன் வந்த ஆட்கள் சூரஜ்ஜின் ஆட்களை சுட்டு மண்ணில் வீழ்த்தினர்.
” யாருடா நீ ” திடீரென்று நடந்த தாக்குதலில் தன் பயத்தை மறைத்துக் கொண்டு சூரஜ் பற்களை கடித்தான்.
கபட புன்னகையுடன் சூரஜின் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்ட அந்த புதியவன், தன்னை முறைத்து பார்த்துக்கொண்டிருந்த சூரஜை பார்த்து,
” பயப்படுறியே சூரஜ் ” என்று கேலியாக சிரிக்க,
ரௌத்திரத்துடன் சூரஜ் தன் ஜிப்பாவில் இருந்த துப்பாக்கியை எடுப்பதற்குள், அவனது கட்டை விரல் குருதி வழிய தரையில் வீழ்ந்தது.
” ஆ…. ” என்று சூரஜ் வான்பிளக்க கத்தினான்..
” பேசிட்டு இருக்கிறேன் துப்பாக்கிய எடுக்கிற. ச்ச ச்ச என்ன பாய்..பாரு கத்தியெல்லாம் கரையாகிடுச்சு ” இயல்பாய் தன் நெற்றியை நீவியவன்,
சூரஜ் தன் எதிரில் இருப்பவன் யார் என்பதை கணிப்பதற்குள் சூரஜின் கால்களை பிடித்து ஒரே இழுப்பில் தன் பக்கம் இழுத்து. தன் வலது காலை அவனது நெஞ்சின் மீது வைத்து அழுத்தியபடி. நாற்காலியில் ஒய்யாரமாய் சாய்ந்தமர்ந்தான்.
முகமெல்லாம் வியர்வை வழிய. விழிகளில் தொனித்த பயத்துடன்,
” நான் யார்ன்னு தெரியாம விளையாடுற. நான் நினைச்சேன் உன்னை உரு தெரியாம அழிச்சிருவேன். ” பயத்தை மறைத்து கடுமையாக எச்சரித்த சூரஜின் குரல் அறையில் எதிரொலிக்க.
” ம்ம்ம் அப்புறம் ” அந்த புதியவனோ பொறுமையாக புருவம் உயர்த்த, நிலைகுலைந்தான் சூரஜ்.
” நீ தைரியமானவனா இருந்தா முதல்ல உன் முகத்தை காட்டு டா.. ” மீண்டும் சீறினான் சூரஜ்
காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு அந்த புதியவனின் சிரிப்பொலி எக்காளமாய் எதிரொலிக்க,
பின்பு சூரஜின் விழிகளை தன் பார்வையாலே ஆழ துளைத்த அந்த புதியவன், “காட்ட நான் தயாரா இருக்கேன் பார்க்க உனக்கு தைரியம் இருகாடா ” இடியை போல முழங்கியவனின் குரல். சூரஜின் பயத்தை மேலும் அதிகரித்தது.
” கோ.. கோன். ஹே து ??? யா.யார் நீ. என்கிட்ட இருந்து என்ன வேணும் ” வார்த்தைகள் தடுமாறியபடி உளறினான் சூரஜ்.
” துமாரா அந்த். உன்னுடைய அழிவு ” அந்த புதியவனின் விழிகள் சிரித்தபடி நெருப்பை கக்க, நொடி பொழுது தாமதிக்காமல் அவன் தன் முகத்திரையை அகற்ற. நாடி நரம்பெல்லாம் அடங்கிப்போக வார்த்தைகள் இன்றி ” நீ நீ .. ” என்றபடி சூரஜ் தடுமாறினான்.
” நான்… தான். உன் எமன் டா ” பற்களை நறநறத்தபடி. சூரஜின் மார்பில் ஓங்கி மிதித்தான் அந்த மர்ம இளைஞன்.
உள்ளே நடப்பதையும் வெளியே நடந்த துப்பாக்கி தாக்குதலையும் பார்த்த மதுவின் இதயம் ‘ திடுக் திடுக் ‘ என்று அடித்துக்கொண்டது.
‘ கடவுளே என்ன மனிதர்கள் இவர்கள் ?? எங்கே வந்து எப்படி மாட்டிக்கொண்டோம் ?? ‘ அவளது இருதயம் எகிறிக் குதித்தது.
அவள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே துப்பாக்கியை சூரஜின் நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தினான் அந்த மர்ம இளைஞன் அவ்வளவு தான்
‘ டுமீல் ‘ என்கின்ற சத்தத்துடன் சூரஜின் மண்டையோட்டைத் துளைத்துச் சென்றதுக் குண்டு .
இதைச் சற்றும் எதிர்பார்க்காத மது பயத்தில் ‘ ஆ ‘ என்று சத்தமிட. அவ்வளவு தான் அந்த இளைஞன் மற்றும் அவனுடன் இருந்த அடியாட்கள் அனைவரின் பார்வையும் ஜன்னல் பக்கம் திரும்பியது.
மதுமதி மிரண்டு போனாள். போதாக்குறைக்கு இடியும் மின்னலும் மிரட்ட அவளுக்கு இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டிருந்தது.
அவளோ தன் வாயைக் கைவைத்து மூடியபடி அசையாமல் விதிர் விதிர்த்து போய் நின்றிருக்க, அவனோ ரத்தமெனச் சிவக்கச் சூரிய புத்திரன் போல அனலாய் எரிந்து கொண்டிருந்தான்..
அவனோ ஒரு நொடிப் பொழுதில் ஜன்னல் வழியே வந்த மின்னல் ஒலியில். தெளிவாய் தெரிந்த மதியின் மதி முகத்தை தன் மனதில் ஆழமாய் பதித்து கொண்டான்.
அதேநேரம் ஒரு நொடி கூட தாமதிக்காது உடனே அங்கிருந்து கிளம்பவேண்டும் என்று எண்ணிய மதுமதி , செயல்படும் முன். அவள் முன்பு நின்றிருந்தான் அந்த மர்ம இளைஞன், அவளை ஆக்ரோஷத்துடன் பார்த்தான்.
மறைக்கப்பட்டிருந்த முகத்தில் இருந்து தெரிந்த உணர்ச்சியற்ற அவன் விழிகள் பார்ப்பதற்குப் படுபயங்கரமாய் இருந்தது. அவனது கூர்மையான பார்வையில் அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது. அவளுக்குள் ஊடுருவும் அவனது பார்வையைச் சந்திக்கத் தைரியம் இல்லாமல் தடுமாறினாள் மதுமதி.
அவள் கையில் அகப்பட்டிருந்த அலைபேசி அர்ஜுனிடம் இருந்து வந்த அழைப்பால் தன் இருப்பிடத்தைக் காட்டியது. அந்த அதிர்வில் அவளது உடல் மேலும் வெடவெடவென்று நடுங்கியது.
அவன் அவளை நெருங்கினான். அவள் உடல் வியர்வையில் குளித்தது.
இதய ஓட்டம் அதிகமாக அவளது கால்கள் அனிச்சையாய் பின்னோக்கி சென்றது.
இப்பொழுது அவனது கனல் பார்வையை இவளது மிரண்ட விழிகள் சந்தித்தது. ரத்த வெறி பிடித்த மிருகத்தின் பார்வை என்று அவள் உள்ளம் அழுதது.
அப்பொழுது அவன் தன் கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்த. மூச்சடைத்து போனவளின் விழிகளில் மரண பயம் அப்பட்டமாய் தெரிய, அவள் நடுங்கிக்கொண்டிருந்த அந்த நேரம் அவனது துப்பாக்கி மதுவைக் குறிபார்த்த மறுகணம் மிரட்சியில் மேலும் விரிந்திருந்த அவள் விழிகளில் இருந்து நீர் வழியத் துவங்கியது.
அப்பொழுது அடுத்த கணமே ‘ டுமீல் ‘ என்ற சத்தம் கேட்க. உடம்பில் தோட்டா பாய்ந்தது.
– ராட்சசன் வருவான்
