அன்று…
கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1991 ஆம் ஆண்டில்,
“இந்த காயம் எப்படி வந்ததுன்னு சொல்ல போறியா இல்லையா டா” அதட்டினார் மதர் மெரி.
“கீழ விழுந்துட்டேன் மதர்” – மழலையின் குரல் கனிவாக குலைந்தபடி வந்தது.
“நான் உண்மைய கேக்குறேன்”
“நிஜமாவே கீழ விழுந்துட்டேன் ” – மீண்டும் அச்சிறுவன் பொய் சொல்ல,
“அப்படியா சரி. இன்னைக்கு ராத்திரிக்கு உனக்கு சாப்பாடு கிடையாது. நீ இன்னைக்கு வெளியில பனியில தான் நிக்கணும் உன் பொய்க்கு அதுதான் தண்டனை. உண்மையை சொன்னா உள்ள வரலாம்” – திட்டவட்டமாக கூறியவர் நாற்காலியில் இருந்து எழுந்து உள்ளே சென்றார்.
நேரம் கடந்து கொண்டே போக. அச்சிறுவனின் வயிறு, பசியில் அலறியது. ஆனாலும் அடித்த வாடைக்காற்றிலும், பொழிந்த பனி துளியிலும் நனைந்து கொண்டு குளிரில் நடுங்கியபடி நின்றவன், மறந்தும் உண்மையை கூறாமல் நிற்க, அச்சிறுவனின் பிடிவாதத்திற்கு முன்னால், கன்னியாஸ்திரி மேரி தான் தோற்று போனார்.
பிறந்தவுடன் தன் விரலை ஆறுதலாய் பற்றிக்கொண்ட அந்த பிஞ்சின் விரல்கள் இப்பொழுது குளிரில் நடுங்குவதை கண்டவரின் உள்ளம் பரிதவிக்க, அவனை தன்னுடன் அணைத்தபடி உள்ளே அழைத்து வந்தார். அச்சிறு வயதில் அவனுக்குள் இருந்த வைராக்கியம் அவருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
” பசியில கூட இருந்துக்குவ ஆனா உன்னை அடிச்சவங்க யாருன்னு மட்டும் சொல்ல மாட்ட அப்படி தானே, உண்மைய சொல்லிட்டு உள்ள வந்திருக்கலாம்ல ஏன் சொல்லல ?? தினமும் அவன் உன்னை அடிக்கிறான்ல உனக்கு கோபம் வரல ” அவனது விழிகளை பார்த்து கேட்டார்.
” யாருமே வேணும்னே நமக்கு தீமை செய்ய மாட்டாங்க, ஏதோ ஒரு சூழ்நிலை தான் அவங்களை அப்படி செய்ய வச்சிருக்கும். என்னைக்காவது ஒருநாள் அவங்க மாறுவாங்க. நம்மளையும் ஏத்துக்குவாங்க. இந்த உலகத்துல உறவுகளை உண்டாக்குறது தான் கஷ்டம் உடைக்கிறது ரொம்ப சுலபம், அதனால யாரையும் வெறுக்கமா கோபப்படாம எல்லார்கிட்டயும் நட்பு பாராட்டணும்ன்னு நீங்க தானே மதர் சொன்னீங்க.” – என்றான் அவன் நிதானமாக.
” நான் தான் சொன்னேன் ஆனாலும்.. ” என்றவருக்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை, அச்சிறுவனை பார்க்கும் பொழுது அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது.
மதர் மெரி அந்த மடத்தில் இதுவரை பல குழந்தைகளை சந்தித்துள்ளார், ஆனால் இவன் அனைவரையும் விட அவரது கண்ணுக்கு வித்யாசமானவனாய் தெரிந்தான்.
இன்று..
மும்பையில்,
ராம்குமார், “ப்ரீத்தா ப்ளீஸ் அழாத நீ அழும் பொழுது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அக்கா பேசுனத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ப்ளீஸ் பா அழாத” – கவலையுடன் கண்ணீர் வடிக்கும் மனைவியை சமாதானம் செய்தார்.
“மன்னிப்பா ! என் பாவத்துக்கே விடை தெரியாம நான் முழிச்சிட்டு இருக்கேன் உங்கள நான் எப்படி மன்னிக்க முடியும்”
“ ப்ரீத்தா பழசை மறந்திரு டா ”
” மறக்கணும் தான் நினைக்கிறன் முடியல பா ” – அழுதபடி தன் கணவனின் தோளில் சாய, ராம்குமாரோ கனிவுடன் அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறிய போதிலும், ராம்குமாரின் முகம் இறுக்கமாக இருந்தது.
அதேநேரம் மிருதுளாவோ தன் கணவன் அருள்நிதியை தன் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டிக்கொண்டிருந்தாள்.
” அங்க அத்தனை பேருக்கு முன்னாடி என்னை திட்டுறீங்க. ம்ம்ம் எங்க இருந்து வந்தது இந்த தைரியம் ??” – காளி அவதாரத்தில் கணவனை தன் வார்த்தையால் வதைத்து கொண்டிருந்தாள்.
அருள்நிதிக்கு ?? என்ன எல்லாம் பழக்கப்பட்டது தானே !! வழக்கம் போல ‘சரி மா சாரி மா ‘ தான்.
அப்பொழுது தடாரென்று அறையின் கதவை திறந்து கொண்டு வந்த ஜூவாலா கண்களில் நீருடன் ,
” நான் உங்க கிட்ட என்ன கேட்டேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” – என்று கத்தி அழுதாள்.
” என்னாச்சு மா ” – பதறி போன தாய் தந்தை இருவரும் தன் மகள் ஜுவாலாவை அணைத்துக்கொள்ள முயற்சிக்க. தன் கரம் உயர்த்தி தடுத்தவள்.
“ வேண்டாம் இதெல்லாம் என்னை சமாதானம் செய்ய முடியாது. எனக்கு அர்ஜுன் அத்தான் வேணும். அர்ஜுன் அத்தான் தான் வேணும். புரிஞ்சிக்கோங்க மா அவரு இல்லமா வாழ முடியாது. முதல்ல அத்தை மாமா கிட்ட இதை பத்தி பேசுங்க. அவரு மது மதுன்னு உருகும் போது கஷ்டமா இருக்கு”
” எல்லம் உங்க அண்ணன் பொண்ணால வந்தது ” – அருள்நிதியை பார்த்து மிருதுளா திட்ட,
” இதுல மது மேல என்ன தப்பு இருக்கு. அவளே பாவம். அவளை ஏதும் சொல்லாத நமக்கு ஜூவாலா எப்படியோ அப்படி தான் மதுவும் ” என்றார் அருள்நிதி.
” ஆமா வாங்க. மது ஒன்னும் என் பொண்ணு இல்லை உங்க அண்ணன் பொண்ணு. உங்க அண்ணன் பொண்ணால என் பொண்ணு அழுறா ” – உக்கிரமாய் கத்தினாள்.
” அம்மா கொஞ்சம் வாய மூடுங்க. ரெண்டு பேருக்கும் உங்க சண்டை தான் பெருசா இருக்கு ” – தன் பெற்றோரின் வாக்குவாதத்திற்குள் குறுக்கிட்டபடி கத்தினாள் ஜூவாலா.
” அப்படி இல்ல டா, எல்லாம் அந்த மதுவால நான் அவகிட்ட பேசிக்கிறேன்” – மிருதுளா சமாதானம் பேச ஆர்ம்பிக்கவும் தடுத்தவள்,
” என்ன பேசிட்டு இருக்கீங்க? மதுட்ட எதுவும் பேச வேண்டாம். மது ஹர்ட் ஆகிட கூடாது மது நல்லா இருக்கணும். எனக்கு உங்கள போல மது மேல எந்த கோபமும் இல்லை. எனக்கு அர்ஜுன் அத்தான் வேணும் அவ்வளவு தான். எனக்கு மதுவும் கஷ்டப்படக்கூடாது. அதேநேரம் அர்ஜுன் அத்தானும் வேணும் அதுக்கு என்ன பண்ண முடியுமோ அதை மட்டும் பண்ணுங்க. மாமா அத்தைட்ட பேசுங்க அவங்க சொன்னா எல்லாரும் கேப்பாங்க” – என்றவள் கதவை படாரென்று சாற்றிவிட்டு அங்கிருந்து செல்ல,
“நீ கவலைப்படாத ஜூவாலா அர்ஜுனை எப்படியாவது உன் கூட சேர்த்து வைப்பேன். இது என் மேல சத்தியம் “- மிருதுளாவின் மனம் வஞ்சகமாய் உறுதி கொண்டது.
ஜூவாலா இளமாறனின் தங்கை. அருள்நிதி மற்றும் மிருதுளாவின் செல்ல மகள். பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள். இவள் தன்னை விட அதிகம் நேசிப்பது யார் என்றால் அது அர்ஜுன் தான். அர்ஜுனையே தன் உலகமாக நினைத்து கனவில் அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
தனக்காக ஒரு பெண் நித்தமும் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை கூட அறியாத அர்ஜுனோ இளமாறனிடம்,
“மாறா மதுக்கு கால் பண்ணினேன் அவ எடுக்க மாட்டிக்கிறா. எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்திருக்கு நான் கண்டிப்பா போகணும். நீ கொஞ்சம் மதுவ டிராக் பண்ணிக்கோ அவ வந்தது மறக்காம எனக்கு மெசேஜ் பண்ணிடு ” – என்க,
அதற்கு மாறனோ, “திவ்யா கிட்ட தான் பேசிட்டு வரேன் இன்னைக்கு கொஞ்சம் லேட்டா தான் கிளம்பிருப்பாங்க போல சோ நீ போ அவ வந்திருவா டா” என்று சொல்லவும் நிம்மதியுடன்,
தன் வேலை விஷயமாக யாருக்கோ தன் அலைபேசியில் இருந்து குறுஞ்செய்தி ஒன்றை டைப் செய்தபடி அங்கிருந்து சென்றான் அர்ஜுன் .
” எங்க இருக்கீங்க ?” என்று குறுஞ்செய்தி அனுப்பினான் அர்ஜுன்.
” அங்க தான் சார் இருக்கோம். எல்லாம் பக்காவா இருக்கு நீங்க சொன்னீங்கன்னா அவங்களை அரெஸ்ட் பண்ணலாம் ” – என்று பதில் அனுப்பினார் எதிர் தரப்பில் இருந்தவர்.
உடனே அர்ஜுனோ,” நோ வெயிட், இது பத்தாது. நான் க்ளீயர் பண்ணிக்குறேன். என் ஆர்டர்க்காக காத்திருங்க ” – என்று பதில் அனுப்பினான் .
பிறகு அர்ஜுன் தன்னுடன் பணிபுரியும் தன் நண்பன் மதனுக்கு அலைபேசி மூலமாய் தொடர்பு கொண்டு,
” நான் சொன்னது என்னாச்சு ” என்று வினவினான்.
“ நீ சொன்னது சரிதான் டா. மிரட்டல் காலோட வாய்ஸும் நீ சொன்ன ஆளோட வாய்ஸும் மேட்ச் ஆகுது. ”
“ தட்ஸ் இட். நாம குற்றவாளிய நெருங்கிட்டோம் மதன் ”
“குற்றவாளி யார்ன்னு உனக்கு எப்படி டா தெரியும் ?”
“அவர பார்க்க தான் இப்போ போகப்போறோம் யார்ன்னு இன்னும் அரைமணி நேரத்துல உனக்குத் தெரியும்”
“ எவிடன்ஸ் சரியா இல்லாம எப்படி. ”
“ ஆதாரம் தானே அவனே சொல்லுவான் ”
“சரி இப்போ பிளான் என்ன ??”
” நீ நம்ம டீம்ல ஒரு அஞ்சு பேர மட்டும் ரெடி பண்ணி கோவிந்தன் தலைமையில நான் சொல்ற இடத்துக்கு அனுப்பி வை. வெளியவே இருக்கட்டும் என் ஆர்டர்க்காக வெயிட் பண்ண சொல்லு. உள்ள நம்ம ஆளுங்க ரெண்டு பேர் ஏற்கனவே இருக்காங்க. நான் சொல்லும் பொழுது உள்ள போனா போதும்.. என்கூட நீ மட்டும் வந்தா போதும். அட்ரஸ் மெசேஜ் பண்றேன் வந்திரு ” – என்றவன் கண்களில் குற்றவாளிகளை பிடிக்க போகும் ஆர்வம் மின்னியது.
அர்ஜுன் டிரைவிங் சீட்டில் அமர்ந்திருக்க, கார் ஒரு பங்களாவுக்கு முன் வந்து நின்றது.
-ராட்சசன் வருவான்.
