மதுமதி பார்க்கும் பொழுது ஆதித்யா முகத்தை மூடி இருந்ததால் அவள் அவனது கண்களை மட்டுமே பார்த்திருக்க, ஆக இப்பொழுது யாரால் தனக்கு ஆபத்து? யாரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவனது மார்புக்கூட்டுக்குள்ளே சின்னஞ்சிறு பறவை போல முட்டி மோதியபடி, உதவி கேட்டுக் கொண்டிருக்க, மதுவை பார்த்து ஆதித்யாவுக்கு லேசாக சிரிப்பு வந்தாலும். அவளது பயம் ஏனோ அவனை உறுத்தியது .
” ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நீங்க என்கிட்ட பத்திரமா தான் இருக்கீங்க. நான் இருக்கேன் ” – பொறுமையுடன் கூறி ஆதரவாக அவள் பின்னந்தலையைத் தடவிக் கொடுத்தான்.
அப்பொழுது அங்கு வந்த தன் பாதுகாவலர்களை தன் கண்களாலே அங்கிருந்து போகுமாறு ஆதித்யா கட்டளையிட, நாகாவை தவிர அனைவரும் கார்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விலகிச் சென்று, தூரத்திலிருந்து அவர்களை கண்காணித்தனர்.
ஏற்கனவே பயத்தில் இருக்கும் இவள், ஆயுதம் ஏந்திய தன் ஆட்களை கண்டதும் மேலும் பதற்றமடையக் கூடாது என்பதற்காக அவர்களை விலகச் சொன்னான் ஆதித்யா.
ஆனால் நாகாவின் பார்வையில் இருந்தே அவனுக்கு ஆதித்யா அப்படி செய்ததில் விருப்பமில்லை என்பது தெளிவாய் தெரிய, அதை புரிந்து கொண்ட ஆதித்யாவோ நாகாவை ஒரு கணம் பார்த்துவிட்டு மதுமதி மீது தன் கவனத்தை செலுத்தினான்.
நொடிகள் கடந்த பிறகே தான் பயத்தில் ஒரு அந்நிய ஆடவனை அணைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த மதுமதி, உடனே அவனிடம் இருந்து விலகியவள், தயக்கத்துடன் ஆதித்யாவை பார்த்து,
” சாரி பயத்துல நான் உங்கள தெரியாம ஹக் பண்ணிட்டேன்” கருவிழிகள் உருள கூறினாள்.
“பரவாயில்லை” என்ற ஆதித்யாவிடம்,
நாகாவை சுற்றிக்காட்டி,
” இவங்க யாரு ” – என்று வினவினாள் மதுமதி.
” பயப்பட வேண்டாம் என் ஃப்ரண்ட் தான் ” சற்று முன் அத்தனை பேரையும் துடிக்க துடிக்க வேட்டையாடிய ஆதித்யாவா இது, என்று நாகாவே வியக்கும் அளவிற்கு மிகவும் தன்மையாக கூறினான்.
” சரி இப்ப ஏன் இவ்வளவு பயப்படுறீங்க? காப்பாத்த சொல்லி கேட்டீங்க என்ன ஆச்சு? யார்கிட்ட இருந்து உங்கள காப்பாத்தணும்” எதுவுமே தெரியாதது போல ஆதித்யா கேட்டான்.
ஆதித்யா அவ்வாறு கேட்டதும், அருகில் இருக்கும் நாகாவை கண்காட்டிவிட்டு, ஆதித்யாவை நோக்கி மெல்ல குனிந்தவள், ” நான் ஒன்னு சொல்லுவேன் அதை பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்லிடாதீங்க” என்று மருண்ட பார்வையுடன் கேட்டாள்.
பெண்ணவளின் அருகாமையிலும்,, விழி அழகிலும் தன்னை மறந்த ஆதித்யாவோ சரி என்பதாய் தலையசைத்த மறுகணம், சட்டென்று எம்பி அவன் காதில், தனது துடிக்கும் ஈர இதழ்கள் உரசுவதை கூட உணராது,
“நான் ஒரு கொலைய பார்த்தேன்” என்று படபடப்புடன் கூறிவிட்டு, தன்னிடம் இருக்கும் அதே பதற்றத்தை எதிர்பார்த்து அவன் முகம் பார்த்தாள்.
பட்டும் படாமலும் அவனது செவியை தீண்டிய பெண்ணவளின் இதழது ஈரத்தின் குளுமை ஆணவனுக்குள் வேகமாக பரவி அவனை தடுமாறச் செய்ய, அவனோ கால்கள் வேரூன்ற சிலையென நின்றுவிட்டான்.
அவனது தவிப்பை பயமென்று கருதிக்கொண்ட பெண்ணவளோ, “பாருங்க பயத்துல உங்க முகம் கூட ஒரு மாதிரி ஆயிடுச்சு, ரொம்ப பயமா இருக்குல?” விழிகள் சுருக்கி அவள் கேட்ட அழகில் இங்கே ஆறடி ஆண்மகனின் இரும்பு இதயம் மெல்ல மெல்ல உருக துவங்க, இமைக்க மறந்து பெண்ணவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யாவோ மதுமதி ,
“சார், உங்களைத்தான்” என்று இரண்டு முறை கூறிய பின் சுயம் பெற்றவன்,
” என்ன கேட்ட? ” என்றான்.
அவளோ, ” கொலைன்னு சொன்னதும் உங்களுக்கும் பயமா இருக்குலன்னு கேட்டேன் ” என்க, வேகமாக துடித்துக் கொண்டிருந்த தன் இதயத்தை தன் வல கரத்தால் அழுத்தி பிடித்துக் கொண்டவன் அவள் விழிகளை அழுத்தமாக பார்த்தபடி,
” ஆமா பயமா தான் இருக்கு” மறைமுகமாக அவளது அருகாமையில் தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பூகம்பத்தை பற்றி கூறினான். ஆனால் அது தெரியாத பெண்ணவளோ,
” பயப்படாதீங்க அதான் உங்க கூட நான் இருக்கேனே அப்புறம் உங்க ஃப்ரண்டும் இருக்கிறார்ல, உங்களுக்கு எதுவும் ஆக விடமாட்டோம்” என்க, அவள் சொன்ன தோரணையில் வந்த சிரிப்பை தன் கீழ் அதரத்தை மடித்து தனது பற்களால் அழுத்தி சிரிப்பை அடக்கிக்கொண்டான் ஆதித்யா.
“சார் வாங்க நாம இங்க இருக்கிறது நல்லது இல்லை. அவங்க எல்லாம் ரொம்ப பயங்கரமானவங்க நாம இங்க இருந்து உடனே போகணும். அவங்களால உங்களுக்கும் ஏதாவது ஆபத்து வரலாம் ” பயத்தில் தன் விழிகளை அகல விரித்து பேச ஆதித்யாவால் தன் பார்வையை அவளை விட்டு விலக்கவே முடியவில்லை.
“ஆஹாங் அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா ” அவளைப் பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே பொய்யான வியப்புடன் கேட்ட ஆதித்யாவின் பார்வை மதுமதியின் வதனத்தின் மீது கூர்மையாக படிந்திருந்தது!
” உங்களுக்கு நான் எப்படி புரியவைப்பேன் அவங்க மோசமானவங்க. இப்போ கூட என் கையெல்லாம் நடுங்குது. ப்ளீஸ் இங்க இருந்து போகலாம் ” உண்மையான பயத்துடன் கூறினாள்.
“என்னை காப்பாத்துவேன்னு சொன்னீங்க இப்ப இப்படி பயப்படுறீங்க ” என்று ஆதித்யா கேலியாக கேட்கவும்,
” அதெல்லாம் ஒரு ஃப்ளோவுல சொல்றது தான் பாஸ் வண்டியெடுங்க, துப்பாக்கி எல்லாம் வேற வச்சிருந்தான். நான் வேற அவன் கொலை பண்றதை பாத்துட்டேன் என்னை தேடி வந்துருவானோன்னு ரொம்ப பயமா இருக்கு, நான் சொல்ற இடத்துல என்னைப் பத்திரமா விட்டா போதும் சார்”
“இங்க பாருங்க பயப்பட வேண்டாம், அவன் உங்களை எதுவும் பண்ண மாட்டான், உங்களை ஏதும் பண்ணனும் நினைச்சிருந்தா இப்ப நீங்க உயிரோடவே இருந்துக்க மாட்டீங்க, நீங்க கொலையைப் பார்த்த அந்த நிமிஷமே உங்கள கொன்னு போட்டுட்டு போயிருப்பான் . எல்லாத்துக்கும் மேல நீங்க தான் அவன் முகத்தை பாக்கலல சோ கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க. ” – அவளின் பயத்தை போக்குவதற்காக அவளது மிரண்ட விழிகளை பார்த்தபடி பொறுமையாக கூறினான் ஆதித்யா.
” ஆமா நான் அவன் முகத்தை பார்க்கலன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று மதுமதி கேட்கவும்,
‘பரவால்ல அறிவு வேலை செய்து ‘ என்று தனக்குள் எண்ணிக் கொண்ட ஆதியோ,
” எப்படி தெரியும்னா நீங்கதான் சொன்னீங்க. பயத்துல சொன்னீங்கல்ல அதான் பதற்றத்ல மறந்திருப்பீங்க ” என்றவன் நாகாவுக்கு கண்ணை காட்டிவிட்டு காரில் வந்து ஏறிக்கொண்டான்.
ஆதித்யாவின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக்கொண்டிருந்த நாகாவோ ஆதித்யாவை ஆச்சரியமாய் பார்க்க, ஆதித்யாவின் இந்த பொறுமை நாகாவிற்கு வித்தியாசமாய் இருக்க, ஆதித்யாவும் தனக்குள் நடக்கும் மாற்றங்களை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
கார் ஆதித்யாவின் கைகளில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, ஆதித்யா சொன்ன பிறகு ஓரளவு தன் பயத்தை விடுத்து ஆசுவாசமடைந்திருந்த மதுமதி, ஆதித்யாவை பற்றி ஆதித்யாவிடமே கூறுகிறோம் என்பதை அறியாமல் நடந்த அனைத்தையும்
சொல்லிக்கொண்டே வர, அவனும் வந்த புன்னகையை அடர்ந்த தன் மீசைக்குள் அடக்கியபடி அவளையும் அவளது பேச்சையும் ரசித்துக் கொண்டே வந்தவன் , ” வந்தாச்சு ” பெண்ணவளின் விழிகளை பார்த்து கூறினான்.
” யாரு அவங்களா ” – மதுமதி அதிர்ச்சியுடன் கேட்டாள் .
” நோ நீங்க சொன்ன இடம் வந்தாச்சு” – புன்னகையுடன் கூறினான் .
” ஓ ” – நிம்மதி அடைந்த மது,
” ரொம்ப தேங்க்ஸ் சார் ” என்றவள் சீட் பெல்டை நீக்க முயற்சி செய்து கொண்டிருக்க, அப்பொழுது தனக்கு மிக அருகே,
” யு ஆர் வெல்கம்.” என்று கேட்ட ஆதித்யாவின் குரலில் நிமிர்ந்த மதுமதி, தனக்கு மிக அருகே சீட் பெல்டை நீக்க உதவி செய்து கொண்டிருந்த ஆதித்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ பெண்ணவளின் விழிகளை ஆழமாக ஊடுருவி,
” நீங்க இனிமேலாவது கொஞ்சம் கவனமா இருங்க. இந்த மாதிரி ராத்திரி நேரத்துல முன்ன பின்னத் தெரியாத ஆள நம்பி கார்ல வர்றது ரொம்ப ஆபத்தானது. எல்லாரும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க ” – என்றான்.
” உங்களைப் பார்த்தா எனக்கு தப்பானவர் மாதிரி தோணலை. நீங்க என்னை ஹெல்ப் பண்ணிருக்கீங்க. எப்படி எனக்கு முன்ன பின்ன தெரியாதவங்களா ஆகுவீங்க. இதுவரை எப்படியோ இனிமே நீங்க எனக்கு யாரோ கிடையாது ” – என்று சினேகமாக புன்னகைத்தாள்.
அதைக் கேட்ட ஆதித்யாவோ, “ஆஹான் அப்போ நான் உனக்கு யார் மதுமதி ” மதுமதி என்ற இறுதி வார்த்தையில் மதி என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து வினவினான்.
ஆதித்யாவின் இந்த நெருக்கமும், தனது வதனத்தை தீண்டிய அவனது சூடான மூச்சு காற்றும் மதுமதியை பதறச் செய்திருக்க, அது போதாது என்று அப்பொழுது பார்த்து அவள் புத்தியில் ஒரு விடயம் உரைக்கவும்,
” என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும் நான் தான் சொல்லவே இல்லையே” பதற்றத்துடன் வினவினாள்.
உடனே இன்னும் அவளை நெருங்கி வந்த ஆதித்யாவோ, ” இல்லையே சொன்னிங்களே மதுமதின்னு” இப்பொழுதும் அந்த மதி என்கிற வார்த்தையை மட்டும் அழுத்தி அவளது காதில் சொல்லிவிட்டு நிமிர்ந்து அவளது விழிகளை பார்க்க, மதி என்று அவன் அழுத்தி சொன்ன விதத்திலே பெண்ணவளுக்குள் புதுவித நடுக்கம் பிறக்க, அவளும் அவனது விழிகளை தான் பார்த்தாள்.
இருவரது விழிகளும் கலந்தது!
அரை நொடிப் பொழுது என்றாலும் வேங்கையவனின் கனல் விழிகள் அவளை அள்ளி தனக்குள் சுருட்டியிருக்க, மதுமதியும் பதற்றத்தை உள்வாங்கியவனோ மேலும் அவளை சங்கடப்படுத்த விரும்பாது, கண்களால் சீட் பெல்ட் நீக்கப்பட்டதை காட்டியவன் கதவையும் திறந்து விட, ஒருவித பதற்றத்துடனே இறங்கியவளோ பின்பு, பதற்றத்தை விடுத்து நிதானமாக ஆதித்யாவை பார்த்து,
” இவ்வளவு நேரம் பேசிட்டே இருந்திருக்கேன் ஆனா உங்க பேர கூட கேட்கல பாருங்க, உங்க பெயர் என்ன ??” புன்னகையுடன் வினவினாள்.
” மிஸ் மதி நீங்க எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு முன்ன பின்ன தெரியாதவர்களுக்கு என் பேரை சொல்ற பழக்கம் கிடையாது ” – என்றவன், அடுத்த கணம் புயலென அங்கிருந்து சென்றுவிட,
“இவ்வளவு நேரம் என்கிட்ட நல்லா பேசிட்டு பெயரை சொல்கிறதுக்கென்ன. மாட்டேன்னு சொல்லிட்டு போறான் ” என்ற மதிக்கோ ஆதித்யா புரியாத புதிராய் ஆனான்.
