ராட்சசன் 9

ஆதித்யாவின் செய்கை குழப்பமாக இருந்தாலும், நடந்த அந்த கோர சம்பவத்திலிருந்து எந்தவொரு பாதிப்புமின்றித் தப்பித்ததை எண்ணி நிம்மதி அடைந்தாள் மதுமதி.

 ஆதித்யாவைப் பற்றிய சிந்தனையைத் தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு, தன் உயரத்திற்குச் சற்றே குறைவாக இருந்த அந்தக் கதவை மெதுவாகத் தள்ளினாள். அது ‘கிரீச்’ என்ற சத்தத்துடன் அவளுக்கு வழிவிட்டது.

நேராக உள்ளே சென்றவள், காலிங் பெல்லை அழுத்தியபடி வாசலில் காத்திருந்தாள். வீட்டின் கதவுக்கு மேல் இருந்த சிறிய விளக்கு நொடிக்கு நொடி கண்ணடித்துக் கொண்டிருக்க,

 மெனிக்யூர் செய்யப்பட்டு அழகாய் செதுக்கப்பட்டிருந்த தன் நகங்களை, பதற்றத்தில் மிச்சமின்றிக் கடித்துத் துப்பியபடி, மீண்டும் ஒருமுறை காலிங் பெல்லை அழுத்தி யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மது.

ஆனால், உள்ளே இருந்து யாரும் வராமல் போகவே தன் அலைபேசியை எடுத்தாள். காதை மறைத்துக் காற்றில் அலைபாய்ந்த தன் கூந்தலுக்குள் அதை நுழைக்க, இறுதி ரிங்கில் தூக்கக் கலக்கத்துடன் அட்டென்ட் செய்தது எதிர்முனை.

“சொல்லுடி என்ன இந்த நேரத்துல?”  அரை தூக்கத்தில் வினவினாள் ஒரு பெண்.

“சந்தியா, சீக்கிரமா வந்து கதவைத் திறடி! நான் வெளியிலதான் இருக்கேன்.

 எவ்வளவு நேரமா காலிங் பெல் அடிக்கிறது? சீக்கிரம் வா!” மதுமதி படபடத்தாள்.

“என்ன, வெளியில இருக்கியா? என்னாச்சுடி?”

“சந்தியா! முதல்ல வந்து கதவைத் திற, அப்புறம் சொல்றேன்.”

“சரி சரி, பதற்றப்படாத இதோ வர்றேன்!” என்று சந்தியா சொன்ன பிறகும் மதுவின் பதற்றம் குறையவில்லை.

குளிர்ந்த தென்றல் வீசிய போதும், தன் உதடு, மூக்கின் நுனி மற்றும் நாடிப் பகுதியில் துளிர்த்த வியர்வையைத் துப்பட்டாவால் துடைத்துக் கொண்டிருந்தாள் மது. 

சில நொடிகள் கழித்து, அவளது வயதே ஒத்த, அவளை விடச் சற்றே உயரமான அழகான பெண் ஒருத்தி இரவு உடையில் கதவைத் திறந்தாள்.

“என்னடி மது ஏன் ஒரு மாதிரி இருக்க?” என மதுவின் கலைந்த கூந்தலையும், பதற்றம் நிறைந்த முகத்தையும் பார்த்து அதிர்ச்சியுடன் வினவினாள் சந்தியா.

ஆனால் மதுவோ, “உள்ள வா சொல்றேன்” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

“அங்கிள், ஆன்ட்டி இன்னும் ஊர்ல இருந்து வரலையா?”

“இல்லைடி, நாளைக்கு நைட் தான் அங்கிருந்து கிளம்புறாங்க. நீ இரு, நான் குடிக்கத் தண்ணி கொண்டு வர்றேன்,” என்றாள் சந்தியா.

@@

“அதுக்கு முதல்ல நான் கொஞ்சம் பிரெஷ் ஆகிக்கிறேன் சந்தியா,” என்றாள் மது சோர்வாக.

“சரிடி, டவல் பாத்ரூம்லதான் இருக்கு, நீ போ,” என்றாள் சந்தியா. அவளுக்காகக் காத்திருந்தாள். சில நிமிடங்கள் கழித்து, தன் கேசத்தை சரிசெய்துவிட்டு, முகத்தில் இருந்த நீர்த்துளிகளை வெள்ளை நிற டவலால் ஒற்றியெடுத்தபடி அங்கே வந்த மது,

சந்தியா கொடுத்த தண்ணீரைப் பருகிவிட்டு, இன்று தான் கண்ட அந்த கோரக் காட்சியையும், தனக்கு நடந்த அனைத்தையும் ஒன்றவிடாமல் கூறி முடித்தாள்.

மது கூறியதைக் கேட்ட சந்தியாவோ, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத் த்ரில்லர் படம் பார்த்தது போலக் கண்கள் விரிய அப்படியே உறைந்து அமர்ந்திருந்தாள்.

“என்னடி அப்படியே அமைதியா இருக்க?” எனச் சிலையென அமர்ந்திருந்த சந்தியாவைத் தோள் பிடித்து உலுக்கினாள் மது.

“ஹான்” எனப் பயத்துடன் மதுவை நோக்கிய சந்தியா, சட்டென்று மதுவின் கையில் இருந்த கிளாஸை வாங்கி, அதில் மிச்சமிருந்த தண்ணீரை வேகமாகத் தன் தொண்டைக்குள் இறக்கிவிட்டு, சிறு செருமலுடன் மதுவை ஏறிட்டாள்.

அப்பொழுது தன்னை விசித்திரமாகப் பார்த்த சந்தியாவிடம், “எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல சந்தியா. இப்பக்கூட மனசெல்லாம் ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. கண்ணெதிரே ஒரு கொலையை வேற பார்த்திருக்கேன் என்னை அவங்க சும்மா விட்டு வைப்பாங்களா?” என்று பயத்துடன் நடுங்கிய தன் தோழியின் கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் சந்தியா.

“நீ சொல்றதெல்லாம் கேட்கும்போது பயமாதான் இருக்கு மது. ஆனா, உன்னைக் கொலை பண்ணணும்னு அவங்க நினைச்சிருந்தா, உன்னை ஷூட் பண்ண வந்தவங்களையே அவன் ஏன் சுட்டு உன்னைக் காப்பாத்தப் போறான்? எல்லாத்துக்கும் மேல, அவனுக்கு உன்னைத் தீர்த்துக்கட்டணும்னு இருந்தா அந்த ஸ்பாட்லயே செஞ்சிருப்பான். சோ, அவனால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுன்னுதான் எனக்குத் தோணுது.”

“ம்ம் இதேதான் என்னை உன்கிட்ட கூட்டிட்டு வந்தானே, அவனும் சொன்னான்,” என்ற மது, சந்தியா பேசிய பிறகு கொஞ்சம் பயம் நீங்கி நிதானமடைந்தாள்.

 ஆனால் சந்தியா மட்டும் ஆழ்ந்த யோசனையிலேயே அமர்ந்திருப்பதை கண்டு,

“என்னாச்சு சந்தியா, என்ன யோசிச்சுட்டே இருக்க?” என்று கேட்டாள் மது.

அதற்கு அவளோ, “இல்ல மது உன்னைக் காப்பாத்தினான்ல, அவன் உன்னை எங்க பார்த்தானாம்? அந்தப் பில்டிங்லதான் அவனும் இருந்தானா? உன்னை எப்படி அவங்ககிட்ட இருந்து காப்பாத்தினான்? இதைப்பத்தி ஏதாவது உன்கிட்ட சொன்னானா?”

“இல்ல சந்தியா, அவன் எதுவுமே சொல்லல. நானும் இருந்த பதற்றத்துல இதைப் பத்தி எதுவும் கேட்கல.”

“மறுபடியும் என்னாச்சு? ஏன் யோசிக்கிற? இதனால எனக்கு ஏதாவது ப்ராப்ளம் வரும்னு தோணுதா?” தோழியின் தீவிர சிந்தனை மதுவுக்குள் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்த, பயத்துடன் வினவினாள்.

“ஏய், எனக்கு அப்படியெல்லாம் எதுவும் தோணலடி. ஆனா, உன்னைக் காப்பாத்தினவன் உனக்கு ஹெல்ப் பண்ணிட்டுத் தன் பேரைக்கூடச் சொல்லாமப் போயிருக்கான். எல்லாத்துக்கும் மேல, மயக்கமா இருந்த உன்னை எங்க பார்த்தான்? எப்படித் தூக்கிட்டு வந்தான்? எதையுமே உன்கிட்ட ஷேர் பண்ணல. இதையெல்லாம் யோசிக்கும் போது தான் கொஞ்சம் மர்மமா இருக்கு, மத்தபடி வேற எதுவும் இல்ல. நீ எதுக்கும் பயப்படாத எது எப்படியோ நீ சேஃபா வீட்டுக்கு வந்துட்ட, அதுவே போதும்.”

“எனக்கும் அவனோட செய்கை குழப்பமாதான் இருக்குடி. இப்ப நீ பேசினதுக்கு அப்புறம் இன்னுமே பயமா இருக்கு.”

“நாமளா இஷ்டத்துக்கு யோசிச்சுத் தேவையில்லாமப் பயப்பட வேண்டாம். உடனே இன்னைக்கு நடந்த எல்லாத்தையும் அர்ஜுன்கிட்ட சொல்லிடு, அவர் பார்த்துப்பார்,” என்றாள் சந்தியா.

“நோ வே! நான் சொல்ல மாட்டேன். அவன்கிட்ட சொல்லணும்னா நான் ஏன் உன் வீட்டுக்கு வர்றேன்? எனக்கு ஹெல்ப் பண்ணினவனை என் வீட்லயே டிராப் பண்ணச் சொல்லியிருப்பேனே! அப்படியே போனா வீட்ல இருக்கிறவங்க சந்தேகப்படுவாங்கன்னுதான், நான் உன் வீட்டுக்கு வந்து ஃப்ரெஷ் அப் ஆனேன்.”

“ஆனா மது, இது ரொம்பப் பெரிய விஷயம்டி அர்ஜுன்கிட்ட மறைக்காத. அட்லீஸ்ட் மாறன் கிட்டையாவது சொல்லலாம்”

“அவனுக்கு நான் அந்த ஸ்கூலுக்குப் போறதே பிடிக்கல சந்தியா. ப்ரீத்தா அத்தையோட சப்போர்ட்லதான் நான் போயிட்டு வர்றேன். இப்படி ஒரு ஆபத்தான பிரச்சனை நடந்திருக்குன்னு மட்டும் அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான், அர்ஜுன் என்னை இனிமே வெளியிலேயே அனுப்ப மாட்டான். எனக்கு இருக்கிற ஒரே மன ஆறுதலே அந்த ஸ்கூலும் அங்க இருக்குற குழந்தைகளும் மட்டும்தான், ப்ளீஸ் சந்தியா, புரிஞ்சுக்கோ,” என்று மது கெஞ்சினாள்.

அவளைச் சற்றே முறைத்துப் பார்த்த சந்தியா, “சரி, இந்த ஒரு தடவை மட்டும்தான்! தனியாப் போகும்போது ரொம்பக் கவனமா இரு. சின்னப் பிரச்சனைனாலும் ரிஸ்க் எடுக்காம உடனே வீட்ல சொல்லிடு, சரியா? நாளைக்கு நீ தனியா ஸ்கூலுக்குப் போக வேண்டாம், நானும் உன் கூட வர்றேன்,” என்றாள்.

அவளது அன்பில் நெகிழ்ந்து, தோழியை இறுக்கமாக அணைத்து விடுத்த மது, “சரி, நான் அர்ஜுனுக்குக் கால் பண்றேன்,” என்றபடி தன் அலைபேசியை எடுத்து, தான் சந்தியா வீட்டில் இருக்கும் தகவலை அவனுக்குச் சொன்னாள்.

பின்பு தோழிகள் இருவரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க, அப்பொழுது அர்ஜுனிடமிருந்து மதுவுக்கு அழைப்பு வந்தது. 

அதை ஏற்றவள்,

“வந்துட்டீயா? காலிங் பெல் ஒர்க் ஆகல, இதோ நான் வர்றேன்,” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு, சந்தியாவிடம் திரும்பினாள்.

“ஏய் சந்தியா, அர்ஜுன் வாசல்லதான் நிக்கிறான். நான் கிளம்புறேன்டி, நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம்,” என்றபடி தன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, அங்கிருந்து அர்ஜுனுடன் கிளம்பினாள் மதுமதி.

@@@

காரில் செல்லும் வழியெல்லாம் அர்ஜுன் அமைதியாகவே வர, இருவருக்கும் இடையே நீடித்த அந்த நிசப்தத்தை முதலில் உடைத்தது மதுமதிதான்.

“ஹ்ம்ம்கும்.” சிறு செருமலுடன் ஆரம்பித்தவள், “என்ன அர்ஜுன், எதுவுமே பேசாம வர்ற? கோபமா இருக்கியா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“ரொம்பவே கோபமா இருக்கேன்!”

“சாரிப்பா.”

“என்ன சாரி? மணி என்ன ஆகுது தெரியுமா? அம்மா அங்கே ரொம்பவே பயந்துட்டாங்க. நான் எவ்வளவு பதறிட்டேன் தெரியுமா? இதுல உன் போன் வேற நாட் ரீச்சபிள் கால் பண்ணா நீ அட்டென்ட்டும் பண்ணல. இன்னும் ஒரு ஐஞ்சு நிமிஷம் லேட் ஆகியிருந்தாலும் நான் மொத்த போலீஸ் ஃபோர்சையும் வச்சி தேட போயிருப்பேன்”

“கொஞ்சம் வேலை இருந்தது அர்ஜுன், அதான் வர லேட் ஆகிடுச்சு. நல்ல மழை வேற தொப்பலா நனைஞ்சுட்டேனா, அதான் பிரெஷ் ஆக சந்தியா வீட்டுக்கு போயிட்டேன்,” என்ற மது அடுத்த வார்த்தையைப் பேச வரும்பொழுது, தன் கரத்தை உயர்த்தி அவளைத் தடுத்தான் அர்ஜுன்.

“மது, எனக்கு இதெல்லாம் பிடிக்கல!” என்றான் கோபமாக.

“என்னையவா? இல்லை நனையவா?” சூழ்நிலையை மாற்றக் கேலியாகக் கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் அவளை முறைத்துப் பார்த்தான்.

“சரி சரி முறைக்காத சொல்லு, இப்போ உனக்கு என்ன பிடிக்கல?”

“ஏற்கனவே நாம பேசின அதே விஷயம்தான். நீ பார்க்குற வேலை, நீ பழகுற மனுஷங்க எதுவுமே எனக்குப் பிடிக்கல. அவங்க யாரும் நல்லவங்க கிடையாது மது. நீ நல்லது சொன்னவுடனே கேட்டு அவங்க திருந்திடப் போறதும் இல்லை. பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும்!”

“அர்ஜுன், ப்ளீஸ்.”

“மது, நீ பாடம் சொல்லிக் கொடுக்குற எல்லாரும் லோக்கல் கிரிமினல்ஸ், அப்புறம் விபச்சாரம் செய்யுறவங்களோட குழந்தைங்க. 

அவங்களுக்கு நீ என்னதான் நல்லது சொல்லிக் கொடுத்தாலும், வளர்ந்ததும் அவங்க அப்பா அம்மா செய்யுறதைத் தான் செய்யப் போறாங்க. தே ஆர் வெரி டேஞ்சரஸ்! அவங்களால உனக்குக் கண்டிப்பா ஆபத்து வர வாய்ப்பிருக்கு. இது எல்லாத்துக்கும் மேல, நமக்குன்னு சமுதாயத்துல ஒரு அந்தஸ்து இருக்கு. நீ அந்த மாதிரி லோக்கல் ஆளுங்க கூட நட்பா பழகுறது நம்ம ஸ்டேட்டஸ்க்கு நல்லா இல்லை. உனக்கு வேலைக்கு போகணும்னா நம்ம கம்பெனிக்கே போ, இல்லையா நானே ஒரு நல்ல அந்தஸ்தான வேலையை உனக்கு ஏற்பாடு பண்ணித் தர்றேன். இது வேண்டாம் என் பிரண்ட்ஸ் கிட்ட நீ பண்ற வேலையைப்பற்றி என்னால சொல்ல முடியல.”

“உன் வேலை எனக்குப் பெருமையா இருக்கும் பொழுது, என் வேலை மட்டும் உனக்கு அவமானமா இருக்குல்ல?” என வேதனையுடன் கேட்டாள் மது.

“நீ நம்ம ரெண்டு பேருடைய வேலையையும் சேர்த்து வச்சுப் பேசிட்டு இருக்க மது!” சற்றே உயர்ந்த குரலில் வினவினான் அர்ஜுன்.

“அதுல என்ன இருக்கு?”

“என்ன இருக்கா? மது, நான் ஒரு அசிஸ்டண்ட் கமிஷனர்! எந்தக் கிரிமினல்ஸ்க்கு நான் தண்டனை கொடுக்குறேனோ, அவங்களோட இடத்துக்கே போய் அவங்க குழந்தைங்களுக்கு நீ பாடம் சொல்லிக் கொடுத்துட்டு வர்ற. இப்போ சொல்லு, நீ பார்க்குற வேலையும் நான் பார்க்குற வேலையும் ஒண்ணா?”

“ஆமா, நீ சரியாத்தான் சொல்ற. நீ பண்றதும் நான் பண்றதும் ஒண்ணு இல்லைதான். ஏன்னா, நீ தப்பு பண்றவங்களுக்குத் தண்டனை கொடுக்குறதைப் பற்றி யோசிக்கிற, நான் இன்னொரு கிரிமினல் உருவாகக் கூடாதுன்னு யோசிக்கிறேன்! ரெண்டு பேர் பார்க்குற வேலையும் வேற வேறா இருந்தாலும், ரெண்டு பேருமே ஒரு நல்ல விஷயத்துக்காகத்தானே வேலை பண்றோம்? சோ, நீ யோசிக்கிறது சரின்னா, நான் யோசிக்கிறதும் சரிதான் அர்ஜுன்.”

“மது, இதெல்லாம் வாக்குவாதம் பண்றதுக்கு வேணும்னா நல்லா இருக்கும். ஆனா வாழ்க்கைக்கு ஒத்து வராது. நான் ஒரு போலீஸ், எனக்கு நிறைய எதிரிங்க இருப்பாங்க. அவங்க என்னை பழிவாங்குறதுக்காக உன்னை ஏதும் பண்ணிடக் கூடாதுங்கிற பயம்தான் எனக்கு.”

“கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நான் இதைச் பண்ணிட்டு இருக்கேன். இதுவரை நடக்காததா இனிமே நடந்திடப் போகுது? நீ ரொம்ப யோசிக்கிற அர்ஜுன். நீ இப்போதெல்லாம் என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ண நினைக்கிற என் விருப்பத்துக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடு.”

“என்ன மது இப்படியெல்லாம் பேசுற? நான் ஏன் உன்னை கண்ட்ரோல் பண்ண நினைக்கணும்? உன் மேல உள்ள அக்கறையிலதான் சொல்றேன், ஆனா உனக்கு அது புரியவே மாட்டேங்குது. நான் பார்க்குற வேலை அப்படி, எல்லாரையும் சந்தேகப்பட்டே பழகிடுச்சு. நான் இப்படித்தான்!” என்று அழுத்தமாக கூறியவன்  பிறகு சற்று நிதானித்து,

“உனக்கு இப்போ சமூக சேவைதான் பண்ணணும்னா அதுக்கு எத்தனையோ டீசண்டான வழிகள் இருக்கு. மாசம் மாசம் வேணும்னா ஏதாவது ஒரு ஹோமுக்கு பணம் கொடுக்கலாம். இல்லைன்னா நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்கிற ஹோம்ல உள்ள சிஸ்டர் கிட்ட பேசுறேன், நீ வேணும்னா அங்க போய் பாடம் சொல்லிக் கொடு. ஆனா, அந்த இடத்துக்கு வேண்டாம். அந்த இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமா வேற இருக்கு, அது சுத்தமா பாதுகாப்பே இல்லை. 

பாரு ஏழு வயசு பையன் அங்க தம் அடிக்கிறான், தண்ணி அடிக்கிறான், திருடுறான்,” சொல்லும் பொழுதே அர்ஜுன் முகம் சுளித்தான்.

“அர்ஜுன், நீ சொல்ற ஹோமிற்கு நான் வரணும்னு தேவையே இல்லை. அங்க பாடம் சொல்லிக் கொடுக்க நிறையப் பேர் இருக்காங்க. ஆனா, இந்த மக்களுக்கு யாரும் இல்லை. படிப்பறிவு இல்லாததாலதான் இவங்க தப்பான பழக்கத்துக்கு அடிமையாகுறாங்க. நாம மட்டும் இவங்களுக்குச் சரியா வழிகாட்டினா, இவங்க வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வருவாங்க. அந்தப் பிள்ளைங்க எல்லாம் எவ்வளவு அன்பான பிள்ளைங்க தெரியுமா?”

அர்ஜுன் பதில் பேசாமல் அமைதியாக இருக்க மது தொடர்ந்தாள்,

“அர்ஜுன், நம்மகிட்ட இருக்குறதை இல்லாதவங்களுக்குக் கொடுக்கணுமா இல்லை இருக்குறவங்களுக்கே கொடுக்கணுமா?”

மதுவை ஒரு கணம் திரும்பிப் பார்த்தவன்,

 “இல்லாதவங்களுக்குத்தான்,” என வேண்டா வெறுப்பாகக் கூறினான்.

“ம்ம்ம் அதேதான்! என்கிட்ட இருக்குற படிப்பை இல்லாதவங்களுக்கு என்னால முடிஞ்சவரை கொடுக்க நினைக்கிறேன். இது என் மனசுக்கு பிடிச்சு நான் பண்ணிக்கிட்டு இருக்கேன், ப்ளீஸ் தடுக்காத”அர்ஜுனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அவன் கண்களைப் பார்த்து உருகமாகக் கூறினாள் மதுமதி.

மீண்டும் அவளது விழிகளைச் சில நொடிகள் பார்த்தவன், 

“சரி ஆனா ஒரு கண்டிஷன்! இதனால உனக்கு எதாவது சின்னப் பிரச்சனை வந்தாலும், ஐயம் சாரி, நான் உன்னை அலோ பண்ண மாட்டேன். அப்போ என்கிட்ட நீ முரண்டு பிடிக்கக் கூடாது,” எனத் தன் முடிவைக் கூறினான்.

“அர்ஜுன்னா அர்ஜுன்தான்! தேங்க் யூ சோ மச்,” என்ற மது புத்துணர்ச்சியோடு புன்னகைத்தாள்.

“அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன எப்போ பாரு அர்ஜுன் அர்ஜுன்னு பேர் மட்டுமே சொல்லி கூப்பிடுற? அர்ஜுன்னு கூப்பிடும்போது அத்தான், மாமான்னு எதையாவது சேர்த்துகிட்டா நல்லா இருக்கும்ல?”

“எனக்கு அப்படி கூப்பிடவே வரமாட்டேங்குது, நான் என்ன பண்றது? சின்ன வயசுல இருந்தே பெயர் சொல்லி கூப்பிட்டே பழகிடுச்சு,” என்று அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும் அவன் உருகினான்.

“சரி சரி, அதெல்லாம் அப்புறமா கூப்பிடு அட்லீஸ்ட் ஒரு குட் நைட் கிஸ்ஸாவது இப்போ கொடு,” என்ற அர்ஜுன் மதுவை நெருங்கியபடி அவளது இதழை நோக்கி குனிந்தான். அந்த கணம், அவளது உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக நிமிர்ந்து அவளது முகம் பார்த்தான்.

 பெண்ணவளின் முகத்தில் தெரிந்த அசௌகரியம் கலந்த பதற்றத்தைக் கண்டு, சட்டென்று அவளை விட்டு விலகி அமர்ந்தான்.

இப்பொழுது மதுவுக்கு அவன் முகத்தைப் பார்க்கவே ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியாக ஆகிவிட்டது. 

என்னதான் அர்ஜுனைத் தன் அத்தை மகனாகப் பிடிக்கும் என்றாலும், அந்தப் பிடித்தம் என்பதைத் தாண்டி அவனுடன் உடலளவிலும் மனதளவிலும் நெருங்குவதற்கு மதுவுக்குள் ஏதோ ஒரு தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது.

“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல அர்ஜுன்?”

“யார் சொன்னா? அப்படி எல்லாம் எதுவும் இல்லை,” என்றான் அர்ஜுன் சற்றே ஏமாற்றத்துடன்.

“இப்பவும் டைம் இருக்கு கல்யாணத்தை வேணும்னா ஸ்டாப் பண்ணிடலாம்,” என்று மது சொன்ன மறுகணம், அவளை இறுக்கமாக முறைத்தான் அர்ஜுன்.

“என்ன பேசிட்டு இருக்க மது? இப்படியெல்லாம் பேசி என்னை கஷ்டப்படுத்தாதே. நீதான் எனக்குன்னு நான் எப்பவோ பிக்ஸ் பண்ணிட்டேன். இனிமே இப்படிப் பேசாத. இப்போ என்ன உனக்கு இப்போதைக்கு என் மேல லவ் இல்லை, அவ்ளோதானே? அதெல்லாம் கல்யாணம் ஆனா உரிமையும் காதலும் தானா வரும். ஊர் உலகத்துல அரேஞ்ச் மேரேஜ் நடக்கிறது இல்லையா? இல்லை அவங்கதான் ஹாப்பியா வாழ்றது இல்லையா? கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகும் மது. வேணும்னா பாரு, கல்யாணத்துக்கு அப்புறம் நீதான் என்னை ரொம்ப லவ் பண்ணப் போற!” எனக் கூறி அர்ஜுன் தன் விழிகளைச் சிமிட்டினான்.

பதிலுக்கு அவனுக்காகப் புன்னகைத்த மது, ‘நீங்க ரொம்ப நல்லவர் அர்ஜுன். எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும். சின்ன வயசுல இருந்து நீங்களும் அத்தையும் என் மேல காட்டுற அன்புக்கு என்னைக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன். கடவுள் எப்போதும் உங்களுக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுப்பார்,’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

அப்பொழுது அர்ஜுனின் கார் போர்டிகோவிற்குள் நுழையும் சத்தம் கேட்டு வெளியே வந்த ஜுவாலா, புன்னகை முகமாக நின்றிருந்த இருவரையும் சேர்த்துப் பார்த்துவிட, அவளது விழிகள் இப்பொழுது தானாகக் கலங்கின!

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!