14.ராட்சசனின் காதல் பாவை

14. ராட்சசனின் காதல் பாவை…

போன பகுதியில்:

“முதல்ல வா, போலாம்!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

இனி…

“உன்னைத்தான், ஸ்ரீ! என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கன்னு கேட்டா, ‘வா, போலாம்’னு சொல்ற. அன்னைக்கு நைட்டும் நீ இப்படித்தான் பயந்து போய் வந்த. என்னன்னு கேட்டதுக்கு அப்பவும் சொல்லல. இப்போ கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கிற. ஏதாவது பிரச்சனையா? வேலையில ஏதாவது பிரச்சனைன்னு சொல்லிட்டாங்களா? சொல்லுடி, எனக்குப் பயமா இருக்கு!” என்று சொன்னாள் கவி.

“வேலையில எந்தப் பிரச்சனையும் இல்ல. வேலை எல்லாம் இருக்கு. வா, இப்போ வீட்டுக்குப் போகலாம்!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

இவள் இப்படியே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்த கவிக்கு, சரி, வீட்டுக்குச் சென்று கேட்டுக்கொள்ளலாம் என்று தோன்றியது.

இந்த ஸ்ரீனா யாருன்னுதானே யோசிக்கிறீங்க?

இவள்தான் நம் கதையின் நாயகி ஸ்ரீனா. மிகவும் அழகானவள்தான். ஆனால், தன்னுடைய அழகை மேலும் மெருகேற்றும்படி எதையும் செய்துகொள்ள மாட்டாள். இயற்கை அன்னை கொடுத்த அழகே, அவளைப் பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கும். அவளுடைய நிறமோ கோதுமை நிறத்தை ஒத்திருந்தது.

பிரம்மன் இவளைப் படைக்கும்போது என்ன நினைத்துப் படைத்தாரோ, அது அவருக்குத்தான் தெரியும். தன்னுடைய மொத்தக் கற்பனையையும் இவளிடமே இறக்கிவைத்ததுபோல், அழகை மொத்தமாக அவளுக்குக் கொடுத்திருந்தார்.

நிலவைப் பாதியாக வெட்டிவைத்ததுபோல் அவளுடைய நெற்றி இருக்க, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல அவளுடைய இரண்டு கண்களும் மின்னின. அந்த அர்ஜுனனின் கையில் இருக்கும் வில்லை வாங்கி, இவளுக்குப் புருவங்களாக வைத்திருப்பாரோ என்னவோ அந்தப் பிரம்மன்!

அவளுடைய இதழ்களோ சாயம் பூசாமலேயே சிவப்பு ரோஜாவின் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருந்தன. அவளுடைய கார்மேகக் கூந்தலோ இடையையும் தாண்டி, அவளுடைய பின்னழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.

மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவருக்கும் தங்கையாகக்கூட இவளைக் கூறலாம்.

ஆனால், பாவம்! இந்த ராட்சசனிடம் வந்து மாட்டிக்கொண்டாள் இந்தப் புள்ளிமான்!

ஓகே ஃப்ரெண்ட்ஸ், ஹீரோயின் பத்தி இன்ட்ரோ கொடுத்துட்டேன்!

கவி தன் தோழியிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தாள். ஆனால், ஸ்ரீனாவோ எதுவும் சொல்லாமல் வீட்டுக்குப் போகலாம் என்று மட்டும் சொல்லிவிட்டாள். வேறு வழியில்லாமல் இருவரும் அமைதியாக வீட்டை நோக்கிக் கிளம்பினார்கள்.

வீட்டில்…

“சொல்லு, ஸ்ரீ! ஏன் ஒரு மாதிரியா இருக்க? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள் கவி.

ஆனால், ஸ்ரீனாவோ அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

அவள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று கவிக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால், ஏதாவது பதில் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் அவளுடைய முகத்தையே கேள்வியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால், அவளுடைய முகத்திலோ எந்த மாற்றமும் இல்லை. சேர்மனைப் பார்த்துவிட்டு எப்படி வந்தாளோ, அதேபோலத்தான் இப்போதும் அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்த கவிக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது. அதனால், மறுபடியும் அவளிடம் கேட்டாள் கவி.

“இப்போ எதுக்கு இப்படியே உக்காந்திருக்க? என்ன ஆச்சுன்னு நான் உன்னைக் கேட்டுட்டே இருக்கேன். நீ எதுவுமே சொல்லலன்னா எனக்கு எப்படித் தெரியும்?” என்று சொன்னாள் கவி.

அப்போதும் ஸ்ரீனா அமைதியாகவே அமர்ந்திருந்தாள். அதில் கோபமடைந்தவள்,

“ஏய், ஸ்ரீ! உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க? இவ்வளவு நேரமா நான் கேட்டுட்டு இருக்கேன். எந்தப் பதிலும் சொல்லாம அமைதியா இருக்க!” என்று கோபமாகக் கேட்டாள் கவி.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள், கோபமாக நிற்கும் தன் தோழியைப் பார்த்தாள்.

தான் ஒரு ராட்சசனிடம் மாட்டிக்கொண்டேன் என்று எப்படிச் சொல்வது? என்று மனதிற்குள் நினைத்தவள், அங்கே நடந்த எதையும் தன் தோழியிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாள். உண்மையைத் தெரிந்துகொண்டால் அவளும் மனவேதனைப்படுவாள் என்று நினைத்தாள். அதுமட்டுமில்லாமல், கவி அங்கே சென்று ஏதாவது பிரச்சனை செய்தால் அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் அவளுக்குள் இருந்தது.

அதனால், தன் மனதிற்குள் அத்தனையையும் புதைத்துக்கொண்டவள், தோழியிடம் சமாதானமாகப் பேசத் தொடங்கினாள்.

“கவி, இப்போ மட்டும் என்ன? நம்ம ஆபீஸ்ல எப்பவுமே மீட் பண்ணிக்கலாம். உனக்கே தெரியும், நமக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம்னு! இதைவிட நல்ல கம்பெனி, நல்ல சேலரி நமக்குக் கிடைக்காது இல்ல? நீயே சொல்லு, நமக்கு இந்த வேலை முக்கியம்தானே? உனக்கு இந்த வேலை வேண்டாம்னா விட்டுட்டு வேற வேலை பார்க்கலாம்!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

தன் தோழி எப்படி யோசிப்பாள் என்பது அவளுக்குத் தெரியும். அதனால்தான் இப்படிச் சொன்னாள்.

இவள் சொன்னதைக் கேட்ட கவி சிறிது நேரம் யோசித்துக்கொண்டே இருந்தாள். ஆனால், ஸ்ரீனாவோ அவளுடைய முகத்தையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

கவி என்ன சொல்லப்போகிறாள் என்று ஒருபுறம் உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும், தான் சொன்ன விஷயம் தனக்குச் சாதகமாக முடியும் என்ற நம்பிக்கை தொண்ணூற்றொன்பது சதவீதம் அவளுக்கு இருந்தது. மீதமிருந்த ஒரு சதவீதப் பயமும் அவளை விடாமல் துரத்த, கவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நீ சொல்றதும் சரிதாண்டி. நமக்கு இந்த வேலை முக்கியம். இந்தக் கம்பெனியிலதான் சேலரி கொஞ்சம் அதிகமா தராங்க. சேலரி அதிகம்னு சொல்லிட்டு உன்னை விட்டுட்டு இருக்கணும்னு நான் நினைக்க மாட்டேன். நீ சொன்னதைக் கேட்டதும் எனக்குக் கஷ்டமா இருக்கு, டி!” என்று சொன்னாள் கவி.

“ஏய், லூசு! நீ என்ன பைத்தியமா? உன் கூட இருக்க முடியாதுன்னு சொன்னேனா? உன் கூட வீட்டுலதான் இருக்க முடியாது. ஆனா, கம்பெனியில உன் கூடத்தானே இருக்கப்போறேன்? ஆபீஸ்ல நாம அடிக்கடி மீட் பண்ணிக்கத்தானே போறோம்!” என்று சொல்லித் தன் தோழியைச் சமாளித்தாள் ஸ்ரீனா.

இவள் சொன்னதைக் கேட்டு ஒரு வழியாகச் சமாதானமான கவி,

“நீ சொல்றதெல்லாம் சரிதான். இருந்தாலும் எனக்குக் கஷ்டமா இருக்கு. நீ சொல்ற மாதிரியே டெய்லியும் என்னை மீட் பண்ணணும். என் கூட லஞ்ச் சாப்பிடணும். புரியுதா?” என்று சொன்னாள் கவி.

கவி சொன்னதைக் கேட்ட ஸ்ரீனா மனதிற்குள் தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.

அந்த ராட்சசன் என்ன பண்ணக் காத்துக்கிட்டு இருக்கான்னு எனக்கே தெரியல. முடிஞ்ச அளவுக்கு டெய்லியும் உன்னைப் பார்க்க முயற்சி பண்றேன், டி. உனக்கு நம்பிக்கை கொடுத்துட்டு உன்னை ஏமாத்த நான் விரும்பல.

என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.

“ஏண்டி, லூசு மாதிரி பேசுற? முடிஞ்ச அளவுக்கு உன்னை ஆபீஸ்ல பார்க்க முயற்சி பண்றேன். இப்போதானே சொன்னேன், நான் பாஸுக்கு பர்சனல் பி.ஏ.வா இருக்கணும். அவர் எங்கே போனாலும் அவர்கூடவே போகணும், வரணும். அப்படி அவர் பார்ட்னர்ஸோட லஞ்ச் சாப்பிடப் போனால்கூட நான் அவர்கூடப் போகணும்!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

அதைக் கேட்ட கவியின் முகம் கொஞ்சம் சுருங்கத்தான் செய்தது. இருந்தாலும், தன் தோழியின் நிலையைப் புரிந்துகொண்டவள்,

“சரிடி. ஆனா, முடிஞ்ச அளவுக்கு தினமும் என்னை ஒரு வாட்டியாவது பார்த்துட்டுப் போ. உனக்கே தெரியும் இல்ல, உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுன்னு!” என்று வேதனையாகச் சொன்னாள் கவி.

அவளுடைய வேதனையைப் பார்த்த ஸ்ரீனாவின் மனம் குற்றவுணர்ச்சியில் தவித்தது. தன் தோழியிடம் பொய் சொல்கிறோமே என்று நினைக்க நினைக்க அவளுடைய மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவளுடைய கண்களும் கலங்கத் தொடங்கின.

அதைக் கவனித்த கவி,

“ஏய், ஸ்ரீ! என்னடி ஆச்சு?” என்று பதற்றமாகக் கேட்டாள்.

“என்னைப் புரிஞ்சுக்கிட்ட இல்ல! அதனால சந்தோஷத்துல வந்த கண்ணீர் இது. சரி, வா! சமையல் பண்ணலாம்!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“நாளையிலிருந்து நீ என் கூட இருக்க மாட்ட இல்ல? நாம வெளியே போய் கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, வெளியே சாப்பிடலாம். அதுக்கப்புறம் நமக்கு இப்படி டைம் ஸ்பெண்ட் பண்ணக் கிடைக்குமான்னு தெரியாது. அதனால வாடி, வெளியே போலாம்!” என்று சொன்னாள் கவி.

அதைக் கேட்ட ஸ்ரீனாவும் சரி என்பதுபோல் தலையசைத்தாள்.

இருவரும் வெளியே கிளம்பினார்கள். தோழிகள் இருவரும் இன்றைய நாளைத் தங்களுக்குப் பிடித்த நாளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்றார்கள். இருவருக்கும் பிடித்த உணவுகளைச் சாப்பிட்டார்கள். இப்படியே அந்த நாளை மிகவும் சந்தோஷமாகச் செலவிட்டார்கள்.

இரவு மணி ஏழாகியிருந்தது. இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

“ஸ்ரீ, இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு இல்ல?” என்று கேட்டாள் கவி.

“ஆமாண்டி! எனக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

இருவரும் இப்படிப் பேசிக்கொண்டே உறங்கினார்கள்.

மறுநாள் காலை…

யாருக்காகவும் காத்திருக்காமல், நம் சூரிய பகவான் தன்னுடைய காதலியான பூமியைக் காண வந்துவிட்டார். அவருடைய சூரியக் கதிர்கள் அனைத்து இடங்களிலும் பரவின.

இரண்டு தோழிகளும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். சூரிய பகவானின் கதிர்கள் முகத்தில் பட்டதும், கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தார்கள்.

நேற்று வெளியே சென்று வந்த சோர்வின் காரணமாக இருவரும் வெகுநேரம் உறங்கியிருந்தார்கள்.

அதிலும் ஸ்ரீனா திரும்பி நேரத்தைப் பார்த்ததும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மணி எட்டரை என்று காட்டியது.

இன்னும் அரை மணி நேரத்தில் ஆபீஸுக்குச் சென்றிருக்க வேண்டும். அதை நினைத்தபோதே அவளுக்குக் கதி கலங்கியது. உடனே தன் தோழியை உலுக்கினாள்.

“கவி, டைம் பாரு! எட்டரை ஆயிடுச்சு!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

அதைக் கேட்ட கவியும் பதறியடித்துக்கொண்டு எழுந்தாள்.

“என்னடி சொன்ன? மணி எட்டரையா ஆயிடுச்சா?” என்று கேட்டாள் கவி.

“ஆமாண்டி, எருமை! சீக்கிரம் எழுந்திரு!” என்று அவசரப்படுத்தினாள் ஸ்ரீனா.

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்!

தொடரும்…

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!