15.ராட்சசனின் காதல் பாவை

15. ராட்சசனின் காதல் பாவை…

போன பகுதியில்:

“என்னடி சொன்ன? மணி எட்டரை ஆயிடுச்சா?” என்று கேட்டாள் கவி.

“ஆமாண்டி, எருமை! சீக்கிரம்!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

இனி…

குளியலறைக்குள் புகுந்தவள், தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள். இவள் வந்ததும் கவி உள்ளே நுழைந்தாள். அவளும் அடுத்த பத்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டாள்.

இருந்தும், இருவரும் நேரத்தைப் பார்த்தபோது மணி ஒன்பதைத் தொட இன்னும் மூன்று நிமிடங்களே இருந்தன. அதைப் பார்த்த இருவருக்கும், ஐயோ! என்றானது.

இருவரும் வேக வேகமாக ஆபீஸுக்குக் கிளம்பிச் சென்றார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது மணி பத்தாகியிருந்தது.

கவி சேல்ஸ் டிபார்ட்மென்டுக்குள் நுழைந்தாள். அங்கே அந்த டிபார்ட்மென்ட் மேனேஜர் அவளைப் பார்த்ததும்,

“வாம்மா! இதான் வர நேரமா? வேலைக்குச் சேர்ந்த முதல் வாரமே இவ்வளவு லேட்டா வர்ற! அப்போ, இனி வர்ற நாட்கள்ல எல்லாம் எப்படி வருவியோ?” என்று அவளை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்.

தன் மீதுதான் தவறு என்பதால் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள் கவி. அவளைத் திட்டித் தீர்த்தவர், ஒரு கட்டத்தில் அவளுக்கான வேலையைச் சொல்லி அனுப்பிவைத்தார்.

ஆனால், ஸ்ரீனாவோ வேகமாக லிஃப்ட்டுக்குள் நுழைந்தாள். கடைசித் தளத்திற்கான பட்டனை அழுத்திவிட்டு, மனதில் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில், லிஃப்ட் இருபத்தைந்தாவது தளத்தில் நிற்க, அதற்குள் இரண்டு பெண்கள் ஏறினார்கள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள்.

“இன்னைக்கு என்னன்னே தெரியலடி! பாஸ் ரொம்பக் கோபமா இருக்காரு. இன்னைக்கு மாட்டுறவங்க செத்தாங்க!” என்று ஒருத்தி சொன்னாள்.

“ஆமாண்டி! பாவம், செக்கிங் டிபார்ட்மென்ட் மேனேஜர் மாட்டிக்கிட்டு ரொம்ப முழிச்சுக்கிட்டு இருந்தாரு. அவரைப் பார்க்கும்போது எனக்கே பாவமா இருந்துச்சு!” என்று சொன்னாள் இன்னொருத்தி.

அவர்கள் பேசுவதைக் கேட்டவளுக்கு, ஐயோ! தன்னுடைய நிலை என்னவாக இருக்குமோ! என்று நினைக்கும்போதே பயம் நொடிக்கு நொடி அதிகரித்தது.

ஏனென்றால், அவனுடைய ருத்ர தாண்டவத்தை இவள் பார்த்திருக்கிறாளே! அதை நினைக்கும்போதே அவளுக்குப் பயம் இன்னும் அதிகமானது.

லிஃப்ட்டில் ஏறிய பெண்களும் முப்பதாவது தளத்தில் இறங்கிக்கொள்ள, ஸ்ரீனா மட்டும் மீண்டும் மேலே சென்றாள்.

அவள் லிஃப்ட்டிலிருந்து வெளியே வருவதற்கும், உள்ளே இருந்து விதுரனின் கோபமான குரல் கேட்பதற்கும் சரியாக இருந்தது.

“சுனில், உனக்கே தெரியும்! எனக்கு எல்லாமே கரெக்டான டைமுக்கு நடக்கணும். அப்படி இருக்கும்போது, இந்த மாதிரி பங்சுவாலிட்டி இல்லாம நடந்தா என்ன அர்த்தம்?” என்று கத்திக்கொண்டிருந்தான் விதுரன்.

அதைக் கேட்டுப் பயந்தவள், அப்படியே வெளியிலேயே நின்றுவிட்டாள். விதுரன் கோபமாகக் கத்திக்கொண்டிருப்பதைக் கேட்டவள், உள்ளே செல்லத் துணிவில்லாமல் பயத்தோடு நின்றுகொண்டிருந்தாள்.

“சாரி, பாஸ்! இனிமேல் இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துக்கிறேன்!” என்று சொன்னான் சுனில்.

அவன் சொல்வதைக் கேட்ட விதுரன், அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய கோபத்தைக் கண்ட சுனிலுக்கோ, தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை.

“பாஸ், இப்பவே இந்தப் பிரச்சினையை முடிச்சிடுறேன், பாஸ்!” என்று சொன்னான் சுனில்.

மீண்டும் அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் விதுரனின் பொறுமை எல்லை கடந்தது. மேசையிலிருந்த ஃபைல்கள் அனைத்தையும் அவன் மீது தூக்கி எறிந்தவன்,

“நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி நடக்கவே கூடாது. அப்படி நடந்தா, உன் உயிர் உனக்குச் சொந்தமா இருக்காது!” என்று சொன்னான் விதுரன்.

அதைக் கேட்ட சுனில் மனதிற்குள்,

ஐயோ, கடவுளே! இந்த மனுஷன் கிட்ட வேலைக்கு வந்ததிலிருந்து என் உயிருக்கு ஒவ்வொரு நாளும் உத்தரவாதம் இல்லாமப் போகுது. எப்படியாவது என்னைக் காப்பாத்து! என்று நினைத்துக்கொண்டான்.

“ஓகே, பாஸ்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.

அவன் வெளியே வருவதற்கும், உள்ளே நடந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டு ஸ்ரீனா பயத்துடன் நின்றுகொண்டிருப்பதற்கும் சரியாக இருந்தது.

அவளைப் பார்த்த சுனிலுக்குத்தான், அடடா! இவளும் ஒருத்தி இருக்காளே! என்று தோன்றியது.

அவளிடம் பேசுவதற்காக வாயைத் திறப்பதற்குள், பயத்தில் ஸ்ரீனா பேசத் தொடங்கினாள்.

“அண்ணா… ஐயோ, சாரி, சார்! அண்ணன்னு கூப்பிட்டுட்டேன். என் பாஸ் கோபமா இருக்காரு!” என்று பயத்தோடு கேட்டாள் ஸ்ரீனா.

“பாஸைப் பொறுத்தவரைக்கும் எல்லாமே பங்சுவலா நடக்கணும். பாஸ் சொல்ற டைமுக்கு எதுவா இருந்தாலும் நடந்து முடிஞ்சிருக்கணும். அப்படி இல்லன்னா, பாஸுக்குக் கோபம் வந்துடும்!” என்று சொன்னான் சுனில்.

அவன் தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் சொன்னதைக் கேட்டவளுக்குப் பயம் இன்னும் அதிகமானது.

தன் மீதுதான் அந்த ராட்சசன் கோபமாக இருக்கிறான் என்று நினைத்தவளுக்கு, தன்னை என்ன செய்யப்போகிறானோ என்று யோசிக்கும்போதே பயம் உச்சத்தைத் தொட்டது.

“என்ன சொல்றீங்க? அப்போ, நான் லேட்டா வந்ததுக்காகத்தான் இவரு கோபமா இருக்காரா?” என்று பயத்தோடு கேட்டாள் ஸ்ரீனா.

அப்போதுதான் சுனிலுக்கே அவள் லேட்டாக வந்தது நினைவுக்கு வந்தது.

இவ்வளவு நேரமும் மெட்டீரியல் சரியான நேரத்திற்குச் செல்லவில்லை என்றுதான் விதுரன் கத்திக்கொண்டிருந்தான். ஆனால், இப்போது ஸ்ரீனா தாமதமாக வந்ததை அவன் தெரிந்துகொண்டால் என்ன செய்வானோ என்று சுனிலுக்கே பயம் வந்துவிட்டது.

“இல்லம்மா, நீ லேட்டா வந்ததுக்காக இல்ல. மெட்டீரியல் போக வேண்டியதுக்கு ஒரு மணி நேரம் லேட் ஆயிடுச்சு. அதனாலதான் பாஸ் கோபமா இருந்தாரு. இப்போ நீ சொல்லும்போதுதான் எனக்கே தெரியுது, நீயும் லேட்டா வந்திருக்கேன்னு. இப்போ நீ பாஸ் முன்னாடிப் போய் நின்னா என்ன பண்ணுவாருன்னு எனக்கே தெரியல. அவருக்குக் கோபம் வந்தா என்ன பண்ணுவாருன்னு சொல்ல முடியாது. எப்படியாவது சமாளிச்சுக்கோ!” என்று சொன்னான் சுனில்.

அவன் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு ஸ்ரீனா அப்படியே பயத்தோடு நின்றுகொண்டிருந்தாள்.

இரண்டு அடி எடுத்து வைத்த சுனில், மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“நீ என்னை அண்ணான்னு கூப்பிட்டதுக்குச் சாரி சொல்லணும்னு அவசியம் இல்ல. அண்ணான்னே கூப்பிட்டுக்கோ!” என்று சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஆனால், ஸ்ரீனாவோ அவனுக்குச் சரி என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, அந்தக் கதவைப் பயத்தோடு பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்று அவளுக்குள் குழப்பம்.

அவளுடைய மனமோ, வேண்டாம், உள்ளே போகாதே! என்று சொன்னது.

ஆனால், அவளுடைய மூளையோ, எவ்வளவு நேரம்தான் இப்படியே நிற்க முடியும்? உள்ளே போய்த்தானே ஆகவேண்டும்! என்று உணர்த்தியது.

அது சரிதான் என்று அவளுக்கும் தோன்றியது.

இப்படியே பத்து நிமிடங்கள் கடந்தன. தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டவள், உள்ளே செல்லலாம் என்று முடிவெடுத்தாள். ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டாள்.

ஆனால், அவள் உள்ளே செல்வதற்குள், உள்ளிருந்து கர்ஜனையாக அவனுடைய குரல் வெளியே வந்தது.

“இன்னும் எவ்வளவு நேரம் வெளியே நிக்கப் போற?” என்று கேட்டான் விதுரன்.

அவனுடைய குரலில் திடுக்கிட்டுப்போனவள், எங்கேயாவது சென்று மறைந்துகொள்ளலாமா என்று கூட நினைத்தாள்.

ஆனால், அது முடியாது என்று அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

பயத்தோடு அந்த அறைக்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்தபோது, கால் மேல் கால் போட்டபடி சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்த விதுரன், அங்கும் இங்கும் திரும்பியபடியே அவளைத் தீப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து அவளுக்குள் பயம் இருந்தாலும், அதை அவனிடம் காட்டிவிடக் கூடாது என்று கொஞ்சம் தைரியமாகவே அவனைப் பார்த்தாள்.

அவளுடைய முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லாததைப் பார்த்த விதுரனின் புருவங்கள் சுருங்கின.

அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

“உன்னோட ஒர்க் என்ன?” என்று கேட்டான் விதுரன்.

அதைக் கேட்டவள் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“உன்னைத்தான் கேட்டேன்! உன்னோட ஒர்க் என்ன?” என்று மீண்டும் அவளைப் பார்த்துக் கர்ஜனையாகக் கேட்டான் விதுரன்.

அதில் திடுக்கிட்டவள்,

“உங்க பர்சனல் பி.ஏ.!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“ஓஓஓ… அது மேடத்துக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான் விதுரன்.

அவன் சொன்ன தோரணையில் அவனுடைய முகத்தையே பார்த்தாள் ஸ்ரீனா. ஆனால், அவன் அப்படிக் கேட்டதற்கான காரணம் அவளுக்குப் புரியவில்லை.

அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்பதைப் பார்த்த விதுரனுக்குக் கோபம் தலைக்கேறியது.

ஏற்கெனவே காலையிலிருந்து கோபத்தில் இருந்தவனுக்கு, இவள் தாமதமாக வந்தது வேறு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிலும், அவன் கேட்கும் கேள்விகளுக்கு எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக நிற்பதைப் பார்த்ததும் அவனுடைய கோபம் மேலும் அதிகரித்தது.

கோபத்தில் நாற்காலியைப் பின்னால் தள்ளிவிட்டு எழுந்தவன், அவளை நோக்கி நடந்தான்.

அவன் தன்னை நோக்கி வருகிறான் என்பதை உணரவே அவளுக்கு இரண்டு நிமிடங்கள் பிடித்தன. பயத்தில் பின்னோக்கி நடந்தாள் ஸ்ரீனா.

அவள் பின்னால் செல்லச் செல்ல, அவனும் அவளை நெருங்கிக்கொண்டே வந்தான்.

ஒரு கட்டத்தில், அவள் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள்.

அவளுக்கு முன்பாக வந்து நின்றவன்,

“நான் கேள்வி கேட்டா பதில் வரணும்!” என்று சொன்னான் விதுரன், அவளை நெருங்கி நின்றபடி.

அவனுடைய நெருக்கத்தில் பயந்தவள், நேற்று போலவே இன்றும் தன்னை அடித்துவிடுவானோ என்று நினைத்துத் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவள் கண்களை இறுக மூடி நிற்பதைப் பார்த்தவனுக்கு அதன் பிறகு என்ன தோன்றியதோ, ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

“என்ன பாரு!” என்று சொன்னான் விதுரன்.

அவனுடைய குரல் சற்றுத் தூரமாகக் கேட்டதை உணர்ந்தவள், மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள்.

ஆனால், அவனுடைய முகத்தில் இருந்த கோபமும் முறைப்பும் அப்படியேதான் இருந்தன.

அதைப் பார்த்த ஸ்ரீனா மனதிற்குள்,

இன்னைக்கு நம்ம அவ்வளவுதான்! என்று நினைத்துக்கொண்டாள்.

“பாஸ், இதுக்கப்புறம் லேட் ஆகாது, பாஸ். கரெக்ட்டான டைமுக்கு வந்துடுவேன், பாஸ்!” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“என்ன, கரெக்ட்டான டைமுக்கு வந்துடுவியா? உனக்குத்தான் டைமே கிடையாதே! அதை மறந்துடாத!” என்று சொன்னான் விதுரன்.

அதன்பிறகு, அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்று அவளுக்கென்று ஒரு கேபினை அமைத்திருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றான்.

அவனுடைய கேபினுக்குள் நுழைவதற்கு முன்பாக ஒரு காலியான வராண்டா இருக்கும். அதைத் தாண்டித்தான் அவனுடைய கேபினுக்குள் நுழைய முடியும். அந்தக் காலி இடத்தில்தான் ஸ்ரீனாவுக்கென்று ஒரு கேபின் அமைக்கப்பட்டிருந்தது.

அவள் வேலை செய்வதை அவன் தன்னுடைய கேபினிலிருந்தே பார்க்கும் வகையில் அந்த இடம் அமைந்திருந்தது.

அந்த இடத்திற்கு அழைத்து வந்தவன், அங்கிருந்த ஃபைல்களைக் காட்டி,

“இதுல இருக்கிற எல்லா ஃபைல்ஸையும் செக் பண்ணி, இன்னைக்குள்ள எல்லா ப்ராடக்ட்ஸும் கஸ்டமர்ஸுக்குப் போய்ச் சேர்ந்திருக்கணும்!” என்று சொன்னான்.

அதன்பிறகு அங்கிருந்து சென்றுவிட்டான் விதுரன்.

ஆனால், அங்கிருந்த அனைத்தையும் பார்த்த ஸ்ரீனாவுக்குத்தான் தலை சுற்றியது.

அங்கே ஒரு ஃபைல் அல்ல, இரண்டு ஃபைல்களும் அல்ல. அவள் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்குக் கிட்டத்தட்ட ஏராளமான ஃபைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவை அனைத்தையும் பார்த்தவளுக்குத் தலை சுற்றத் தொடங்கியது.

அவள் அப்படியே அந்த ஃபைல்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில், விதுரனிடம் கையெழுத்து வாங்குவதற்காக வந்த சுனில், ஸ்ரீனா அங்கே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான்.

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்!

தொடரும்…

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!