23.ராட்சசனின் காதல் பாவை

23. ராட்சசனின் காதல் பாவை.

போன பகுதியில்:

“என்ன சுனில், எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆளாயிட்டியா? இவ்வளவு சீக்கிரம் எல்லாம் விட்டுடுவேன்னு நீயும் நினைக்காத, அவளும் நினைக்கக் கூடாது. இந்தப் பிராப்ளம் மட்டும் முடியாம இந்த வீடியோ இன்னும் வைரல் ஆச்சுன்னா, இவளோட நிலைமை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. இதுக்கப்புறம் இவ வாழ்க்கையில் நிம்மதிங்கிறதே இருக்காது.” என்று சொன்னான் விதுரன்.

இனி…

“நாங்களும் இந்தப் பிராப்ளத்தைச் சீக்கிரமா முடிக்கணும்னுதான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம் பாஸ்.” என்று சொன்னான் சுனில்.

இவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, தீபக் வேகவேகமாக விதுரனின் கேபினுக்குள் நுழைந்தான்.

தீபக், விதுரன் இன்னும் வந்திருக்க மாட்டான் என்று நினைத்துத்தான் அழைப்பிற்காகக் காத்திருக்காமல் வேகமாக உள்ளே நுழைந்தான். ஆனால், உள்ளே நுழைந்தவனுக்கு அங்கு விதுரன் நின்றிருப்பதைக் கண்டதும், அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையைப் பார்த்ததும் மனதில் பக்பக் என்று இருந்தது. எப்பொழுது இவர் வந்தார் என்பது போல் விழி பிதுங்கி நின்றிருந்தான் தீபக்.

அவனைப் பார்த்த விதுரன்,

“என்ன தீபக், உள்ள வர்றதுக்கு முன்னாடி டக் பண்ணிட்டு வரணும்னு தெரியாதா?” என்று கோபமாகக் கேட்டான் விதுரன்.

“சாரி பாஸ், பிராப்ளம் ரொம்பப் பெருசாகிட்டே இருக்கு. அதனாலதான் நான் உள்ள வந்துட்டேன். ஐ அம் ரியலி சாரி பாஸ்.” என்று சொல்லியவன், அவன் முன்பு தலைகுனிந்து நின்றான் தீபக்.

“என்ன ஆச்சு தீபக்? சொல்லுங்க.” என்று கேட்டான் சுனில்.

“சார், இவ்வளவு நேரம் ஒரு ஐடியை க்ளோஸ் பண்ணா, இன்னொரு ஐடியில் இருந்து வந்துட்டு இருந்தது. இப்போ ஒரு ஐடியை க்ளோஸ் பண்ணா ரெண்டு ஐடி, ரெண்டு ஐடியை க்ளோஸ் பண்ணா மூணு ஐடி, நாலு ஐடின்னு வந்துட்டே இருக்கு. அதுவும் இல்லாம, அவங்க எங்கிருந்து பண்றாங்கன்னு லொகேஷனைக் கண்டுபிடிக்கவே முடியல. நம்மளால கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஹேக் பண்ணித்தான் இதைப் பண்ணிட்டு இருக்காங்கன்னு மட்டும் நல்லா புரியுது. நாங்களும் ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படி இருந்தாலும் கண்டுபிடிச்சிடுவேன். இதை உங்ககிட்ட சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன் சார். குட் மார்னிங் பாஸ். நான் போய் என்னோட வேலையைப் பார்க்கிறேன்.” என்று சொல்லியவன், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓடிவிட்டான் தீபக்.

தீபக் சொல்லியதைக் கேட்ட விதுரனுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வர, அவள் கழுத்தை இன்னும் இறுக்கமாகப் பிடித்து மேலே தூக்கினான். அதில் சுனில் பதறியவன்,

“பாஸ், இன்னும் கொஞ்ச நேரம் போச்சுன்னா அந்தப் பொண்ணு செத்துருவா பாஸ்.” என்று சொன்னான் சுனில்.

“எனக்கு இவ்வளவு பிரச்சனையைக் கொடுத்த இவளைச் சீக்கிரமா சாக விட்டுட மாட்டேன் சுனில். இவ அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கு.” என்று சொன்னவன், அவனுடைய பிடியை மெல்லத் தளர்த்தினான் விதுரன்.

இவன் மெல்ல அவனுடைய பிடியைத் தளர்த்திய நொடி, அவள் மயக்கத்திற்குச் சென்றிருந்தாள். இவன் மெல்லத் தன் கையை எடுக்க, அதில் அவள் அப்படியே சரிந்து கீழே விழுந்தாள் ஸ்ரீனா.

இதைப் பார்த்த சுனிலுக்கு அவளுக்கு என்ன ஆனதோ, ஏதானதோ என்று பதற்றம் வந்தது. அவளை நெருங்கி,

“ஸ்ரீ, கண்ணைத் திறந்து பாரு ஸ்ரீ.” என்று சொன்னான் சுனில்.

“அவ சாகல. இன்னும் உயிரோடதான் இருக்கா. ஆனா, அவ வாழறதும் சாகறதும் இப்போ அவ கைலதான் இருக்கு. ஒவ்வொரு வாட்டியும் பிரஸ் மீடியாவை அவாய்ட் பண்ண முடியாது. நான் அவாய்ட் பண்ணப் பண்ண அவங்க இஷ்டத்துக்கு எழுதுவாங்கன்னு உனக்கு நல்லாவே தெரியும். இந்தப் பிரச்சனை இவளாலதான் ஸ்டார்ட் ஆச்சு. இப்போ இவதான் முடிச்சு வைக்கணும். ஆனா, இவ இந்தப் பிரச்சனையை முடிக்கலன்னா, இவளை மொத்தமா நான் முடிச்சிடுவேன்.” என்று சொன்னான் விதுரன்.

அதைக் கேட்டு சுனில் பதறிப் போனான். என்னவோ ஏதோ தெரியவில்லை, அவள் ‘அண்ணா’ என்று அழைத்ததிலிருந்து அவள் மீது அவனுக்குத் தனிப் பிரியம் வந்திருந்தது. அதனால் வந்த பதற்றமோ என்னவோ, விதுரன் சொன்னதைக் கேட்டதும், தன் சொந்தத் தங்கையைப் பற்றிச் சொன்னது போல் பதறினான்.

“இல்ல பாஸ், எப்படியாவது இந்தப் பிரச்சனையைப் பெருசாகாம நான் முடிக்கிறேன் பாஸ்.” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்ட விதுரன், இவனை அனலாக முறைத்தவன்,

“நான் உன்னை முடிக்கச் சொல்லல. அவளை முடிக்கச் சொன்னேன்.” என்று சொன்னவன், தன் அறைக்குள் சென்று விட்டான்.

விதுரன் சொன்னதைக் கேட்ட சுனிலுக்கே உலகம் இருண்டது போல் இருந்தது. இவளால் இவ்வளவு பெரிய பிரச்சனையை எப்படி முடிக்க முடியும் என்று நினைத்தவன், அவளைப் பார்த்தான்.

அவளோ மூச்சுப் பேச்சில்லாமல் அமைதியாகப் படுத்துக் கிடக்க, அவளுடைய மூக்கின் அருகே விரலை வைத்துப் பார்த்தவனுக்கு அவளுடைய சுவாசக் காற்று உணர்ந்தது. அவள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாள் என்று புரிய, அதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

மெல்லக் கைதாங்கலாக அவளைப் பிடித்து அருகில் இருந்த சேரில் அமர வைத்தவன், உடனே தண்ணீர் எடுத்து அவள் மீது தெளித்தான். ஆனால், அவளுடைய கண்கள் அங்கும் இங்கும் அலைமோதியதே தவிர, அவள் கண்களைத் திறக்கவில்லை. அதில் மெல்ல அவளுக்குத் தண்ணீரைப் புகட்டியவன்,

“ஸ்ரீ, மெல்லக் கண்ணைத் திற. உன் அண்ணா நான் பக்கத்துலதான் இருக்கேன்.” என்று சொன்னான் சுனில்.

ஆனாலும் அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை. அவள் அப்படியே இருக்க, அவளுடைய வாய் மட்டும் ஏதோ ஏதோ முணுமுணுத்தது. அதை என்னவென்று அவன் உற்றுக் கவனிக்க,

“நான் வேணும்னு இது எதுவும் பண்ணல. என் மேல தப்பு இல்ல. ப்ளீஸ், என்னைப் புரிஞ்சுக்கோங்க.” என்று மீண்டும் மீண்டும் பிதற்றிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.

“ஸ்ரீ, ரிலாக்ஸ். உன் மேல தப்பு எதுவும் இல்லன்னு எனக்குப் புரியுது. கொஞ்சம் ரிலாக்ஸா இரு. டென்ஷனாகாத. உனக்கு எதுவும் ஆகல. நீ இப்போ நல்லாத்தான் இருக்க.” என்று சொன்னான் சுனில்.

இவனுடைய குரலைக் கேட்டதும் அவளுக்குக் கொஞ்சம் படபடப்பு அடங்கியது. மெல்லப் பிதற்றுவதை நிறுத்தியவள், ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க, மெல்லக் கண்களைத் திறந்தாள் ஸ்ரீனா.

அவள் கண்களைத் திறந்தவுடன் அந்த இடம் முழுவதும் அவளுடைய கண்கள் அலைபாய்ந்தன. அதைப் பார்த்த சுனில்,

“பயப்படாத ஸ்ரீ. அவர் இங்க இல்ல. அவரோட கேபினுக்குப் போயிட்டாரு. நீ ஓகேவா?” என்று கேட்டான் சுனில்.

மெல்லச் சுனிலைப் பார்த்தவள், பேச முடியாமல் தொண்டையைப் பிடித்துக் கொண்டு மெல்லத் திக்கித் திணறிக் கேட்டாள்.

“அ… அ… அண்… அண்ணா… எ… என… எனக்கு… கொ… கொஞ்சம்… தண்ணி… வேணும்.” என்று கேட்டாள் ஸ்ரீனா.

அவள் இப்படி தட்டுத் தடுமாறிப் பேசுவதைக் கண்டவனுக்கு அவளை நினைத்துக் கவலையாக இருந்தது. அவன் மனதிலோ, ‘நான் என்ன பண்ண முடியும்? உன்னைப் பார்த்துக் கவலைப்படத்தான் முடியும்’ என்று நினைத்தவன்,

“கொஞ்சம் இருமா, எடுத்துட்டு வரேன்.” என்று சொன்னான்.

தண்ணீரை எடுத்து வந்து அவளுக்குப் புகட்டினான் சுனில்.

அதை மெல்லமாகக் குடிக்கத் தொடங்கினாள். ஆனால், அவளுக்குத் தொண்டை மிகவும் வலிக்க, தண்ணீர் குடிப்பதற்குச் சிரமமாக இருந்தது. ஆனால், அவளுடைய நாக்கு வறண்டு இருக்க, வேறு வழியில்லாமல் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டு மெல்லத் தண்ணீரைப் பருகினாள்.

ஒரு அளவுக்குத் தண்ணீரைக் குடித்தவள், போதும் என்பது போல் சுனிலைப் பார்த்துத் தலையசைக்க, வாட்டர் பாட்டிலை டேபிள் மீது வைத்தவன்,

“ஏன் இப்படி பேசுற? ரொம்ப பெயினா இருக்கா?” என்று கேட்டான் சுனில்.

அதற்கு அவளும் ஆமாம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டியவள், மெல்ல அந்தச் சேரில் சாய்ந்து கண்களை மூடினாள்.

அவள் கண்களை மூடிய நொடி, அவளுடைய கண்களில் இருந்து நீர் வழிந்தது. அதைப் பார்த்துப் பதறிய சுனில்,

“ஸ்ரீ, என்ன ஆச்சு? எதுக்கு இப்படி அழுற?” என்று கேட்டான்.

ஆனால், அவளோ எந்தப் பதிலும் சொல்லாமல் சத்தமே இல்லாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து மனம் நொந்தவன்,

“ஸ்ரீ, இதை உங்க வீட்டுல சொன்னியா இல்லையா?” என்று கேட்டான் சுனில்.

அதில் மெல்லக் கண் திறந்து பார்த்தவள், ஒரு சின்ன சிரிப்பை மட்டும் உதிர்த்தாள். அதில் புரியாதவன்,

“ஏன் சிரிக்கிற ஸ்ரீ?” என்று கேட்டான் சுனில்.

“இல்ல அண்ணா, என்னை நினைச்சுச் சிரிச்சேன். அவ்வளவுதான், வேற ஒண்ணும் இல்ல.” என்று சொல்லியவள், அதன்பிறகு அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

அப்பொழுதுதான் விதுரன் சொன்னது சுனிலுக்கு ஞாபகம் வர, அதை ஸ்ரீனாவிடம் சொன்னான்.

“ஸ்ரீ, உன்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நம்ம பி.ஆர். டீம், போயிட்டிருக்கிற பிரச்சனையைச் சால்வ் பண்ணத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. அதே சமயம், இது அவ்வளவு சீக்கிரம் முடியுற பிரச்சனையா தெரியல. இதுக்கு ஒரே தீர்வு, நீயும் பாஸ் ரெண்டு பேருமே பிரஸ் மீட்டுக்குப் போறதுதான். அதுவும் பாஸ் அங்க எதுவுமே பேச மாட்டார். நீதான் பேசியாகணும். நீ பேசுறதால இந்தப் பிரச்சனை இதோட சால்வ் ஆகணும் ஸ்ரீ.” என்று சொன்னான் சுனில்.

“என்ன சொல்றீங்க? நான் எப்படி பேச முடியும்? அதுவும் இல்லாம அவர்கூடவா?” என்று மிகவும் சிரமப்பட்டு அவனுக்குப் பதிலளித்தாள் ஸ்ரீனா.

“வேற வழி இல்ல ஸ்ரீ. இதைப் பண்ணித்தான் ஆகணும். அதுவும் இல்லாம பாஸுக்கு உன் மேல இருக்கிற கோபம் குறைய வாய்ப்பிருக்கு. எப்படியாவது ஹேண்டில் பண்ணிடு. இன்னும் கொஞ்ச நேரத்துல பாஸ் வந்துருவாரு.” என்று சொன்னான் சுனில்.

இவன் சொல்லி முடிப்பதற்கும் விதுரனின் கேபின் திறப்பதற்கும் சரியாக இருந்தது. இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கு விதுரன்தான் இவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

அதில் அவளுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. அதைப் பார்த்தவன் எதையும் கண்டு கொள்ளாமல் சுனிலைப் பார்த்து,

“சுனில், இன்னும் பத்து நிமிஷத்துல பிரஸ் மீட்டுக்கு அரேஞ்ச் பண்ணு.” என்று சொன்னவன், மீண்டும் உள்ளே சென்று விட்டான் விதுரன்.

அதைக் கேட்ட சுனிலும் உடனே தன் போனை எடுத்தவன், கீழே இருக்கும் ரிசப்ஷனுக்குக் கால் செய்து விதுரன் சொன்னதை அவர்களிடம் சொல்ல, அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் சுனிலுக்குக் கால் வர, அதை அட்டென்ட் செய்தவனுக்கு பிரஸ் மீட் தயாராக இருக்கிறது என்று சொல்லப்பட்டது.

அதைக் கேட்டவன் வேகமாக விதுரனின் கேபினுக்குள் நுழைந்தான்.

“பாஸ், பிரஸ் மீட் ரெடியா இருக்கு. நீங்க வந்தா ஸ்டார்ட் பண்ணிடலாம்.” என்று சொன்னான் சுனில்.

காதல் பாவை தொடரும்…

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!