28.ராட்சசனின் காதல் பாவை

28. ராட்சசனின் காதல் பாவை**

போன பகுதியில்:**

“ஆரம்பத்திலேயே நம்ம சொன்னது தானே, நீயும் நானும் மட்டும்தான். இப்போ என்ன புதுசா வேற யாரையாவது தங்க வைக்கிறேன்னு சொல்றாரு? அதைக் கேட்டு வந்து என் கிட்ட சொல்ற!” என்று கோபமாகக் கேட்டாள் கவி.

**இனி…**

“ஏய் லூசு, நான் சொல்றதைப் பொறுமையா கேளு. அவர் ஒண்ணும் தப்பா எதுவும் சொல்லல. நீ மட்டும் தான் இருப்பேன்னு நான் சொன்னதுக்கு, ‘நீ மட்டும் எப்படி தனியா இருப்ப? கூட யாரையாவது தங்க வச்சுக்க சொல்லலாமே’ன்னு கேட்டார். எனக்கும் அது சரின்னு பட்டது. சரி, நான் உன்னைக் கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்” என்றாள் ஸ்ரீனா.

“இல்ல ஸ்ரீ, இது சரிப்பட்டு வராது. அவரு ஹாஸ்டல் பசங்கன்னு சொல்றாரு. அப்பவே உனக்குப் புரிஞ்சிருக்க வேண்டாமா? ஆல்ரெடி நம்ம கூட தங்க வைக்கிறதா தான் பிளான் பண்ணியிருக்காரு. நீ இப்படி சொல்லவும் அவரு இதான் சமயம்னு உன் கிட்ட சொல்லியிருக்காரு” என்றாள் கவி.

“அது எனக்குத் தெரியலடி. சரி, நீ தனியா இருக்கே, உனக்குத் துணைக்கு ஆள் இருப்பாங்கன்னு தான் நானுமே யோசிச்சேன். நீ என்ன சொல்ற?” என்று கேட்டாள் ஸ்ரீ.

“இல்லடி, இப்ப நீயும் வரமாட்டேன்னு சொல்ற. எதுக்கு வீடு எடுத்து இருக்கணும்? நான் ஹாஸ்டல்லயே தங்கிக்கிறேன்” என்றாள் கவி.

“ஹாஸ்டல் நமக்குச் செட்டாகாதுன்னு தானே வீடு எடுத்தோம். இப்ப என்ன நீ ஹாஸ்டலுக்குப் போறேன்னு சொல்ற?” என்று கேட்டாள் ஸ்ரீ.

“இப்ப நீ சொல்ற மாதிரி நான் அங்கே இருந்தேன்னு வச்சுக்கோ. வர்றவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியாது. நீ ஒரு நாள் சமைப்ப, நான் ஒரு நாள் சமைப்பேன். அப்படி இருக்கிறவங்களுக்கு என்னால சமைச்சுக்கிட்டே இருக்க முடியாது. அதனாலதான் பேசாம ஹாஸ்டலுக்கே போயிடலாம்னு நினைக்கிறேன்” என்றாள் கவி.

அதைக் கேட்டவளுக்கு அதுவும் சரிதான் என்பது போல் தோன்றினாலும், தன் தோழி ஹாஸ்டலுக்குச் செல்வதில் அவளுக்கு விருப்பமில்லை.

“இல்ல கவி, நீ ஹாஸ்டல் போக வேண்டாம். நீ தனியா இருப்பியா?” என்று கேட்டாள் ஸ்ரீ.

“எனக்கு என்னடி பயம் தனியா இருக்கிறதுக்கு? என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா?” என்று கேட்டாள் கவி.

“தெரிஞ்சதனாலதான் கபோதி கேட்கிறேன். சொல்லு, தனியா இருப்பியா?” என்று கேட்டாள் ஸ்ரீ.

அவள் திட்டியதில் அவளை ஒரு முறை முறைத்த கவி,

“அதெல்லாம் எங்களுக்குத் தனியா இருக்கத் தெரியும்” என்று முகத்தைத் தூக்கி வைத்தபடி சொன்னாள்.

“சரி, நீ ஹாஸ்டல் எல்லாம் போக வேண்டாம். நீ அங்கேயே இரு. நான் ஹவுஸ் ஓனர் கிட்ட பேசிக்கிறேன். அவருக்கு எக்ஸ்ட்ராவா வேணும்னா காசு கொடுக்கலாம்” என்றாள் ஸ்ரீனா.

அதைக் கேட்ட கவி, மறுப்பாக வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள். ஸ்ரீனா பிடிவாதமாக நின்றதால், கவி வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டாள்.

“மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கோ! இனிமேல் நாளைக்கு எனக்கு லீவுன்னு சொன்னா, நீயும் நானும் ஒண்ணா இருக்கலாம் இல்லையா? அப்போ நீ ஹாஸ்டல்ல இருந்தா, நான் லீவுக்கு எங்க போறது? அதனால நீ வீட்டிலேயே இரு. ஹாஸ்டல் போக வேண்டாம்” என்றாள் ஸ்ரீனா.

“சரி, நீ உடம்பைப் பார்த்துக்கோ. ஒரு போன் ஆவது பண்ணுடி. நேத்துல இருந்து ஒரு போன் கூட இல்லை” என்றாள் கவி.

அவள் சொல்லிய பின்புதான் நேற்றிலிருந்து இப்போது வரை தன் தோழிக்கு ஒரு போன் கால் கூட செய்யவில்லை என்பது ஸ்ரீனாவுக்கு ஞாபகம் வந்தது. அதில் தலையில் அடித்துக்கொண்டவள்,

“சாரிடி” என்றாள்.

“ஓ… சாரி எல்லாம் நீயே வச்சுக்கோ. எனக்கு டெய்லியும் ஒரு போன் பண்ணு. லீவு விட்டா கண்டிப்பா நீ வரணும். புரியுதா? சரி, நான் கிளம்புறேன். நீ வேலையைப் பாரு” என்று சொன்னவள் அங்கிருந்து கிளம்பினாள் கவி.

இவ்வளவு நேரம் இவர்களின் உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு தோழிக்காக இவ்வளவு மெனக்கெடுவார்களா என்பது போல் இருந்தது அவனுக்கு. ஆனால், இவர்கள் வீடு, ஹாஸ்டல் என்று பேசிக்கொண்டது மட்டும் அவனுக்குப் புரியவில்லை.

அதே நேரம், இவனுடைய போனுக்கு விதுரன் அழைத்து அழைத்து மிகவும் கோபத்தில் அமர்ந்திருந்தான். அதை அறியாமல் இவர்களின் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்தான் சுனில்.

*(டேய், நீ யாரு பெத்த புள்ள டா? சிங்கத்திடம் மாட்டிக்கிட்டு இப்படி உனக்கு ரசனை தேவையா? உனக்கு நாளைக்கு வைக்கப் போறான் பாரு, பெரிய ஆப்பு!)*

கவியும் அங்கிருந்து சென்றுவிட, அப்போது வேகமாக தீபக் விதுரனின் அறைக்கு வந்தான். முன்பு போல் விதுரன் உள்ளே இருக்கிறானோ என்று நினைத்தவன், அழைப்புக்காகக் காத்திருந்தான். இவனின் வருகையைப் பார்த்த சுனில்,

“வாங்க தீபக்” என்றான்.

சுனிலின் குரலைக் கேட்டவனுக்கு விதுரன் இல்லாதது நன்றாகப் புரிந்தது. வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன்,

“சார், நீங்க கேட்ட மாதிரி ஸ்டாஃபோட எல்லா டீடெயில்ஸும் எடுத்தாச்சு. ஐடி கார்டு மட்டும் நைட் ஆகிடும் சார்” என்று சொல்லியவன், தன் கையில் இருந்த சில லிஸ்ட்களை தீபக் சுனிலிடம் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்தவனுக்கு கிட்டத்தட்ட இருபது பேர் இருந்தது தெரிய வந்தது. அதை புருவ முடிச்சுடன் பார்த்தவன்,

“என்ன தீபக், இத்தனை பேரா இருக்கு?” என்று கேள்வியாகக் கேட்டான் சுனில்.

“ஆமா சார். இவங்களோட டாக்குமெண்ட்ல இருக்கிற அட்ரஸ் வேறயா இருக்கு. இவங்க கரண்ட் ஐடியில் வேற அட்ரஸ் இருக்கு. அதுல ஒரு சில பேர் இப்பதான் ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி வீடு சேஞ்ச் ஆகியிருக்காங்க” என்றான் தீபக்.

“சரி தீபக், இந்த லிஸ்ட்ல இருக்கிறவங்களை நம்ம ஆளுங்க கிட்ட கொடுத்து விசாரிக்கச் சொல்லுங்க. அதுல சந்தேகப்படுற மாதிரி யாராவது இருந்தா, உடனே அவங்களை விசாரிக்கச் சொல்லுங்க. அவங்க சொல்ற ரீசன் கரெக்ட்டாவும் வேலிடாவும் இருந்தா எந்த டவுட்டும் இல்லாம விட்டுடுங்க. ஏதாவது சந்தேகமா இருந்தா அவங்களோட குடும்பத்தை நம்ம கஸ்டடிக்கு எடுக்கச் சொல்லுங்க” என்றான் சுனில்.

“ஓகே சார், நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன். ஐடி கார்டு ப்ராசஸ் போயிட்டிருக்கு. அப்புறம் உங்க மெயில் இப்பதான் பார்த்தேன். எல்லா ஃப்ளோருக்கும் நீங்க பாஸ்வேர்ட் மாற்றச் சொல்லியிருக்கீங்க. அதை உடனே ஆக்டிவேட் பண்ணிடுறேன்” என்றான் தீபக்.

அதைக் கேட்டதும் சரி என்பது போல் தலையாட்டினான் சுனில். அவனும் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

இவ்வளவு நேரம் இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ,

“என்னாச்சு? எதுக்கு எல்லாரோட டீடெயில்ஸையும் விசாரிக்கிறீங்க? அதுவும் இல்லாம எதுக்கு ஐடி கார்டு வேற மாத்தணும்?” என்று கேட்டாள்.

“இதுவரைக்கும் இந்த ஆபீஸ்ல எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. இதான் ஃபர்ஸ்ட் டைம். அதுவும் முக்கியமான டாக்குமெண்ட் மிஸ் ஆகிற அளவுக்கு இந்த ஆபீஸ்ல மிஸ்டேக் நடந்திருக்குன்னா, அது நம்ம ஸ்டாஃப் கிட்ட இருந்துதான் ஆரம்பிச்சிருக்கணும். நமக்கு ஆப்போசிட்டா இருக்கிறவங்க, நம்ம கிட்ட வேலை செய்றவங்களுக்கு பணம் கொடுத்து வாங்கியிருக்கலாம். இல்ல, அவங்களுக்கு நம்பகமான ஆள வேலைக்கு வச்சிருக்கலாம். அதனாலதான் எல்லாரோட டீடெயிலையும் கலெக்ட் பண்ணச் சொன்னேன். அதுல யார் மேல சந்தேகமா இருக்கோ, அவங்களோட டீடெயில் மட்டும் கேட்டிருந்தேன். அதுவும் நாம ஏதாவது ஒரு ஐடி கார்டை சேஞ்ச் பண்ணிட்டா, எப்படி மிஸ்டேக் ஆகுதுன்னு பார்க்கலாம் இல்லையா?” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்டவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

“இப்போ அவரு சொல்லிட்டுப் போறாரு இல்ல, அந்த ஐடி கார்டுல என்னென்ன பெனிஃபிட் இருக்கு?” என்று கேட்டாள் ஸ்ரீ.

“ஐடி கார்டுல என்ன பெனிஃபிட் இருக்கும் ஸ்ரீ? அவங்களோட போட்டோ, மொபைல் நம்பர், அட்ரஸ், கம்பெனியோட அட்ரஸ்… இவ்வளவுதான்” என்றான் சுனில்.

“அதைத்தான் கேட்கிறேன். எப்பவுமே இருக்கிற ஐடி கார்டு தானே? இதுல என்ன புது மாற்றம்? வேற ஏதாவது புதுசா இருந்தா பரவாயில்ல” என்று கேட்டாள் ஸ்ரீ.

“ஐடி கார்டுல என்ன புதுசா இருக்கும்? இதுதானே இருக்கும். எல்லா கம்பெனியிலும் இதைத்தான் கொடுப்பாங்க” என்றான் சுனில்.

“அதைத்தான் நான் சொல்றேன். எல்லா கம்பெனியும் கொடுக்கிற மாதிரியே நாமளும் கொடுக்க வேண்டாம். ஒரு புது விதமான கார்டு கொடுக்கலாமே!” என்றாள் ஸ்ரீனா.

“புது விதமாகவா? என்ன சொல்ல வர? கொஞ்சம் தெளிவா சொல்லு” என்றான் சுனில்.

அதைக் கேட்டவள் அவனிடம் தனக்குத் தோன்றியதை ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினாள். அதைக் கேட்கக் கேட்க அவனுக்கும் அது பிடித்திருந்தது. அவள் சொன்னதை முழுமையாகக் கேட்டவன்,

“சூப்பரா இருக்கு! இதன் மூலமா நமக்கும் பெனிஃபிட், நம்ம ஸ்டாஃபுக்கும் பெனிஃபிட். பெனிஃபிட்னு சொல்றதைவிட, அவங்களை நம்ம பாதுகாப்பாவும் பார்த்துக்க முடியும் இல்லையா? உன்னுடைய யோசனை நல்லா இருக்கு” என்றான் சுனில்.

“ஆமா, அப்படின்னு சொல்லலாம். என்ன, நமக்கு யார் மேல சந்தேகம் இருக்கோ, அவங்களை வாட்ச் பண்ணிக்கலாம்” என்றாள் ஸ்ரீனா.

“இந்த யோசனை நல்லாத்தான் இருக்கு. நான் உடனே தீபக் கிட்ட சொல்றேன். பாஸ்வேர்டு கூடவே இதையும் ஆட் பண்ணி முடிக்கச் சொல்லுறேன்” என்றான் சுனில்.

“என்ன பாஸ்வேர்டு?” என்று கேட்டாள் ஸ்ரீனா.

அதைக் கேட்டவன் அவளிடம் அனைத்தையும் சொன்னான். அவனுடைய சந்தேகத்தையும் சொன்னான். அதைக் கேட்டவளுக்கு இன்னொரு யோசனையும் தோன்றியது. அதை அவனிடம் சொன்னாள் ஸ்ரீனா.

“நீங்க சொல்றது ஓகே. ஸ்டாஃப்ஸ் வரும்போது ஆட்டோமேட்டிக்கா ஓபன் ஆகுற மாதிரி செட் பண்ணச் சொல்லியிருக்கீங்க. ஆனா, இதுல நம்ம இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணலாம்” என்றாள்.

“அது எப்படி?” என்று கேட்டான் சுனில்.

“அது ஒண்ணும் பெரிய விஷயம் கிடையாது. இந்த சிஸ்டம் வெளிநாட்டுல எல்லாம் இருக்கு. ஒர்க்கிங் டைம்ல மட்டும் அவங்களோட ஐடி கார்டை வச்சி ஆட்டோமேட்டிக்கா ஓபன் பண்ணிக்கலாம். ஆனா, ஒர்க்கிங் டைம் முடிஞ்சதுக்கப்புறம் அதை யாராவது ஓபன் பண்ணணும்னு நினைச்சா, நம்ம கிட்ட இருக்கிற பாஸ்வேர்டு இல்லாம ஓபன் பண்ண முடியாது. அந்த மாதிரி நம்ம செக்யூரிட்டியை டைட் பண்ணா, நம்ம கம்பெனில இருக்கிறவங்க இந்தத் தப்பைச் செய்றாங்களா, இல்ல வெளியிலிருந்து யாராவது செய்றாங்களான்னு நம்ம கண்டுபிடிக்கலாம்” என்றாள் ஸ்ரீனா.

அதைக் கேட்டவனுக்கு அவளுடைய ஐடியா மிகவும் பிடித்துவிட்டது.

**இனிவரும் அத்தியாயத்தைப் படியுங்கள்…**

**காதல் பாவை தொடரும்…**

இப்படிக்கு உங்கள் அன்புத் தோழி…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!