29. ராட்சசனின் காதல் பாவை
போன பகுதியில்:
“செக்யூரிட்டியை டைட் பண்ணா, நம்ம கம்பெனில இருக்கிறவங்க இந்தத் தப்பைச் செய்றாங்களா, இல்ல வெளியிலிருந்து செய்றாங்களான்னு நம்ம கண்டுபிடிக்கலாம்” என்று சொன்னாள் ஸ்ரீனா.
இனி…
“இது நல்ல ஐடியாதான். உனக்குள்ள நிறைய திறமை வச்சிருக்க, ஸ்ரீனா. கீப் இட் அப்!” என்று சொன்னான் சுனில்.
ஸ்ரீனாவைப் பாராட்டிவிட்டு, அவள் சொன்ன ஐடியாவை தீபக்கிடம் சொல்வதற்காகப் போனை எடுக்கச் சென்றான். அப்போதுதான் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதைப் பார்த்து பதறியவன், உடனே சார்ஜரில் போட்டான்.
சார்ஜருடன் இணைக்கப்பட்டதும் போன் தானாகவே ஆன் ஆனது. போன் ஆன் ஆனதுதான் தாமதம், அடுத்தடுத்து என்று பல நோட்டிஃபிகேஷன்கள் நிறுத்தாமல் வந்துகொண்டே இருந்தன.
அதில் வந்த நோட்டிஃபிகேஷன்களைப் பார்த்தவனுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. பல அழைப்புகளையும் இன்னும் சில நோட்டிஃபிகேஷன்களையும் தவறவிட்டிருப்பது தெரிந்தது. அதிலும் விதுரனிடமிருந்து வந்த அழைப்புகளைத் தவறவிட்டதைப் பார்த்தவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.
எப்பொழுதும் விதுரன் ஒரு போன் செய்தாலே இவன் எடுத்துவிடுவான். ஆனால் இன்று இத்தனை அழைப்புகள் அவனிடமிருந்து வந்திருந்ததைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டான். அதிலும் தன்னுடைய போன் ஆஃப் ஆகியிருந்தது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
ஏனென்றால் விதுரனுக்கு வரும் பிசினஸ் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இவன்தான் முதலில் விசாரித்துவிட்டு, அதன் பிறகுதான் விதுரனிடம் கூறுவான். அதுவும் விதுரனிடமிருந்து கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தன.
அதைப் பார்த்ததும் இவனுடைய கை, கால்கள் நடுங்கத் தொடங்கின. அவன் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சுனிலின் போன் அடித்தது.
வேறு யாரும் இல்லை, நம் ராட்சசன்தான் அழைத்திருந்தான்.
கண்ணில் மிரட்சியோடு அதை அட்டென்ட் செய்தவன்,
“ஹலோ பாஸ்…” என்றான் சுனில்.
அவன் சொன்னதுதான் தாமதம்.
“ஏய் ஸ்டுப்பிட்! உன் போன் ஆஃப் ஆனதுகூட தெரியாம நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கத்தினான் விதுரன்.
முதலில் இங்கிலீஷில் தொடங்கியவன், அதன் பிறகு உலகத்தில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் இங்கிலீஷில் சொல்லித் திட்டினான்.
அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட சுனிலுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே சென்றால் காதிலேயே ரத்தம் வந்துவிடும் போல் இருந்தது.
“சாரி பாஸ்! அவங்களை விசாரிச்சுக்கிட்டு இருக்கிறதுல போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதைப் பார்க்கல. இப்பதான் பார்த்தேன். ஐ ஆம் வெரி சாரி பாஸ்” என்றான் சுனில்.
ஆனால் விதுரனுக்கோ கோபம் கொஞ்சம்கூட குறையவில்லை. மீண்டும் அவனைத் திட்டத் தொடங்கினான். இப்படியே ஒரு பத்து நிமிடங்கள் செல்ல, சுனில் அமைதியாக இருந்தான். இவனுடைய அமைதியைப் பார்த்ததும் விதுரனுக்கு இன்னும் கோபம் தலைக்கேறியது.
“நீ இன்னும் ரெண்டு நாள்ல சவுதியில இருக்கணும்” என்றான் விதுரன்.
அதைக் கேட்ட சுனிலுக்குத் தலையில் இடியே விழுந்தது போல் இருந்தது. அதில் அவனையும் அறியாமல்,
“என்னது… சவுதிக்கா?” என்று அலறியிருந்தான் சுனில்.
இவனுடைய அலறலில் ஸ்ரீனா என்ன என்பது போல் பார்த்தாள். அதே சமயம் போனில் இருந்த விதுரனும் இவனுடைய அலறலைக் கேட்டவன்,
“ஆமா, சவுதிக்குத்தான். உடனே டிக்கெட் போட்டு கிளம்பு” என்றான் மீண்டும் விதுரன்.
“பாஸ், நான் பண்ணது தப்புதான். அதுக்குன்னு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காதீங்க. அதுவும் இல்லாம இன்னும் ஒன் வீக்ல கவர்மெண்ட் டெண்டர் வேற இருக்கு” என்றான் சுனில்.
“சுனில், உன்னை சவுதிக்குக் கிளம்பச் சொன்னேன். உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணச் சொல்லல. இப்போ நீ கிளம்பினா என்னோட கோபம் குறையுற வரைக்கும் தான். அப்படி இல்ல, நானே உன்னை அனுப்பி வச்சேன்னா பெர்மனென்ட்டா அங்கேயே இருக்கணும். அப்படியும் இல்லாம நீ இன்னும் ஏதாவது சொல்லணும்னு நினைச்சா, வேலையை விட்டுப் போயிட்டே இருக்கலாம்” என்றான் விதுரன்.
“பாஸ், நான் இப்பவே டிக்கெட் போடுறேன் பாஸ்” என்றான் சுனில்.
“ம்ம்… ஓகே. என்னோட பி.ஏ-க்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடு. இனிமேல் என்னோட பி.ஏ.தான் எல்லாமே பார்க்கணும். தீபக் கிட்ட சொல்லி கம்பெனி போனை என்னோட பி.ஏ. கிட்ட கொடுக்கச் சொல்லு. இன்னும் அஞ்சு நிமிஷத்துல எனக்கு அந்த நம்பர் வரணும்” என்று சொன்னவன் போனை வைத்துவிட்டான்.
அவன் சொன்னதையெல்லாம் கேட்ட சுனிலுக்கு எங்கு சென்று முட்டிக்கொள்வது என்றே தெரியவில்லை. அப்படியே பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து, தன் தலையில் கை வைத்தபடி இருந்தான்.
அதைப் பார்த்த ஸ்ரீனா,
“என்ன ஆச்சு அண்ணா? எதுக்கு சவுதின்னு சொல்லிட்டு இருந்தீங்க?” என்று கேட்டாள்.
ஆனால் அவனுக்கோ, விதுரன் சவுதி என்று சொன்னதிலிருந்து மூளையே வேலை செய்யவில்லை. அவனுடைய மூளை முழுவதும் சவுதியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, இப்போது இவள் கேட்கும் எதுவும் அவன் காதில் விழவில்லை.
அதில் ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பானவள், அவனைப் பிடித்து உலுக்கத் தொடங்கினாள்.
“அண்ணா, என்ன இப்படி உட்கார்ந்திருக்கீங்க? உங்களைத்தான் கேட்டுக்கிட்டு இருக்கேன். ஏதாவது பதில் சொல்லுங்க” என்று உலுக்கினாள் ஸ்ரீ.
இவள் பிடித்து உலுக்கியதில் நினைவுக்கு வந்தவன்,
“ஆ… என்ன ஸ்ரீ?” என்று கேட்டான் சுனில்.
“அதைத்தான் கேட்டுக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கீங்க? ஏதோ சவுதின்னு பேசிட்டு இருந்தீங்களே, என்னது?” என்று கேட்டாள் ஸ்ரீனா.
“பாஸ் என்னை சவுதிக்குப் போகச் சொல்லிட்டாரு” என்றான் சுனில்.
“என்ன… சவுதிக்கா?” என்று இந்த முறை ஸ்ரீனாவுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
“ஆமா, சவுதிக்குத்தான். இனிமேல் என்னோட வேலை எல்லாம் நீ தான் பார்க்கணும். உனக்கு ஒரு கம்பெனி போன் கொடுப்பாங்க. அதைத்தான் இதுக்கு அப்புறம் நீ யூஸ் பண்ணணும்” என்றான் சுனில்.
“என்ன சொல்றீங்க? உங்களுடைய வேலை எல்லாம் நான்தான் செய்யணுமா? என்னால அது முடியவே முடியாது” என்றாள் ஸ்ரீனா.
“என்னாலயும் இங்க இருக்க முடியாது ஸ்ரீ. நான் போயாகணும். இல்லன்னா இந்த வேலையை விட்டுத்தான் ஆகணும். அதனால எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் நான் உனக்குச் சொல்லித் தரேன். முதல்ல தீபக்குக்கு கால் பண்ணிட்டு வரேன்” என்று சொன்னவன், உடனே தன் போனை எடுத்து தீபக்குக்கு அழைத்தான்.
இவர்கள் பேசியதையெல்லாம் அவனிடம் சொன்னதோடு மட்டுமில்லாமல், விதுரன் சொன்னது போல் ஒரு போனையும் கேட்டான்.
“ஓகே சார், ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. எடுத்துட்டு வரேன்” என்றான் தீபக்.
சுனில் போனில் பேசும் வரை அமைதியாக இருந்தவள், அவன் போனை வைத்தவுடன்,
“சரி, நீங்க சவுதிக்குப் போறீங்க. எனக்கு எதுக்கு போன்? என் கிட்ட ஆல்ரெடி போன் இருக்கு” என்று தன் கையில் இருந்த கீபேட் மொபைலை அவனிடம் காட்டினாள் ஸ்ரீனா.
அவள் காட்டிய போனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தவன்,
“எது? இது போனா? உங்க ஊர்ல நீ எங்க வேலை செய்றேன்னு ஞாபகம் இருக்கா? சரி, அதைக்கூட விடு. நீ இன்னும் எந்த டெக்னாலஜியும் இல்லாத ஊர்ல இருக்கிற மாதிரி இந்தக் கீபேட் மொபைலை வச்சிருக்க. அதுவும் இல்லாம, உனக்கு இந்தப் போனைத் தர்றதுக்குக் காரணம், இந்தப் போனை யாராலயுமே ஹேக் பண்ண முடியாது. சாரோட டீடெயில்ஸ் எல்லாமே உன் கிட்டதான் எப்பவுமே இருக்கும். அதனால இது நம்ம கம்பெனியே ரெடி பண்ணது. இதை ஹேக் பண்ணணும்னு நினைச்சா, அதைச் செய்றவங்க ரொம்பவே முட்டாளா இருக்கணும். இதுவே நார்மல் மொபைலா இருந்தா உடனே அவங்க ஹேக் பண்ணிடுவாங்க. அதனாலதான் உனக்குக் கம்பெனி மொபைல். தீபக் கிட்ட சொல்லி உனக்கு லேப்டாப்பும் கொடுக்கச் சொல்றேன். அதுல எல்லா டீடெயில்ஸும் இருக்கும். அதை ஃபாலோ பண்ணிக்கோ” என்றான் சுனில்.
அதைக் கேட்ட அவளுக்கு, இது வேறயா என்பது போல் இருந்தது.
ஏற்கனவே இவனிடம் பி.ஏ.வாக மாட்டிக்கொண்டது மட்டுமில்லாமல், அவனிடம் முழு நேரமும் இருக்கும் நிலைமை. இதில் இவரும் இல்லாமல் போனால் தன்னுடைய நிலைமை என்ன ஆகும் என்று மனதில் நினைத்தவளுக்கு, மனதுக்குள் சூறாவளி, சுனாமி, புயல் என்று மாறி மாறி அடித்துக் கொண்டே இருந்தது.
இப்படி அவள் எண்ண ஓட்டத்தில் இருக்க, தீபக் போனுடன் உள்ளே நுழைந்தான்.
அதை வாங்கிய சுனிலிடம் தீபக் அந்தப் போனுடன் ஒரு சிம் கார்டையும் கொடுத்தான். அதை அந்தப் போனில் போட்டவன்,
“இந்தா, இந்த நம்பர்தான் நீ யூஸ் பண்ணணும். எப்பவுமே உன்னோட மொபைலை ஆஃப் பண்ணாத அளவுக்குப் பார்த்துக்கோ. இதுல ஜி.பி.ஆர்.எஸ். வசதியும் இருக்கு” என்றான் சுனில்.
அவள் கையில் அந்த மொபைலைக் கொடுத்துவிட்டு, தீபக்கிடம் தான் சவுதி செல்வதையும் கூறியவன், தன் மொபைலை எடுத்து சவுதி செல்வதற்கான டிக்கெட்டை புக் செய்தான்.
டிக்கெட் நாளை மறுநாள் இருந்தது. அதை உடனே விதுரனுக்கு அனுப்பிவிட்டதோடு, ஸ்ரீனாவின் இரண்டு மொபைல் நம்பர்களையும் அனுப்பினான்.
“தீபக், எனக்கு டிக்கெட் நாளைக்கு மறுநாள் புக் ஆகியிருக்கு. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இன்னைக்கு ஈவினிங் குள்ள எனக்கு எல்லாமே நீங்க முடிச்சுக் கொடுத்துடுங்க. நான் எல்லாமே கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணிட்டு, இங்கிருந்து கிளம்பினா கரெக்ட்டா இருக்கும்” என்றான் சுனில்.
“ரிட்டர்ன் எப்போ சார்?” என்று கேட்டான் தீபக்.
“தெரியல தீபக். பாஸ் கிளம்பச் சொல்லிட்டாரு. இதுக்கு அப்புறம் அவர் சொல்லும்போதுதான் நான் இந்தியா வர முடியும். சோஷியல் மீடியால பாஸ் பத்தி எது வந்தாலும், இதுக்கப்புறம் நீங்கதான் ஹேண்டில் பண்ற மாதிரி இருக்கும். பார்த்துப் பண்ணுங்க. பாஸ் பத்தி எந்த இன்ஃபர்மேஷனும் வெளிய வரக்கூடாது. அவரோட பிரைவசிக்கு எந்தப் பிரச்சினையும் வராம செக்யூரிட்டியை இன்னும் டைட் பண்ணுங்க” என்றான் சுனில்.
“ஓகே சார்” என்ற தீபக் அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஸ்ரீனா அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
“ஸ்ரீ, சீக்கிரம் வா. எனக்கு டைம் கிடையாது. எல்லாத்தையும் நான் உனக்குச் சொல்லித் தரேன்” என்று சொன்னவன், சிஸ்டம் முன்பு அமர்ந்து அவளுக்கு ஒவ்வொன்றாகச் சொல்லித் தரத் தொடங்கினான்.
அதுமட்டுமில்லாமல், விதுரனின் அடுத்தடுத்த ஷெட்யூல்கள் அனைத்தையும் அவளிடம் விளக்கினான்.
இனிவரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்…
காதல் பாவை தொடரும்…
இப்படிக்கு உங்கள் அன்புத் தோழி…
