அத்தியாயம் -7

வேனலின் வெண்பூவே!

 

அத்தியாயம் 7

 

உன் தாமரை மலர்ச் சேலை
நெஞ்சை தண்டவாளம்போல் தடதடக்கச் செய்யுதடி!
மையிட்ட விழியின் பின்
மையலாய் மனம் போகுதடி!
     -ஆதி.

அந்த உணவகத்தில் சுற்றிலும் ஆட்கள் நடமாடிக் கொண்டிருக்க, அவள் மட்டும் உறைந்து போனது போன்ற தோற்றம். ஆட்கள் ஆங்காங்கே நகர்ந்து கொண்டிருக்க, மக்கள் பேச்சு சத்தமும் கேட்க, மனோவின் விழிகளைப் பார்த்தபடி உறைந்திருந்தாள் முகி.

“பத்மமுகி… முகி என்னாச்சு?”

“என்ன சொல்றீங்க? டேட்டிங்கா?”

“இல்லை. எனக்கு மேரேஜே ஓகேதான். ஆனால் உனக்கு என்னைப் பத்தி தெரியணும். தெரிஞ்சு மனசார நீ எனக்கு ஓகே சொல்லணும். அதுமட்டுமில்லாமல் பார்த்ததும் காதல்ல விழறதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஸ்லோவா ஸ்டெடியாகக் கன்டினியூஸா அந்தப் பான்ட் வளரணும். அப்பதான் நிலைக்கும்.”

உறவின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியவனின் மீது நல்ல எண்ணமே எழுந்தது முகிக்கு.

“என்னைப் பத்தி தெரிஞ்சுதான் கேட்கிறீங்களா? எனக்கு யா…”

அவள் பேச்சை இடைவெட்டியவன், “தெரியும். அதனால் சொல்ல வேண்டாம். இனி நான் இருக்கேன்ல.” என்றான்.

உறுதியான வார்த்தைகள், அவள் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அறியாமல் அவன் பேசினான்.

பத்மமுகி குடும்பத்தைச் சிறுவயதில் இழந்திருக்க, அவளுக்கு அது எவ்வளவு பெரிய வார்த்தையென எதிரில் இருந்தவனுக்குப் புரியவில்லை. இயல்பாகப் பேசினான்.

சிறுவயதில் தாய் தந்தை இல்லை என்றதும், ஆசிரமத்தில் வளர்பவள் என்றதும் சுற்றி இருந்தவர்கள் பரிதாபத்துடன் நடத்தினர். சிலர் இளக்காரத்துடன் பார்த்தனர். பள்ளியில் கேலி, கிண்டல்கள் எல்லாம் உண்டு. அவை எல்லாம் இன்னும் மனதில் ஆழப்பதிந்த கீறல்கள். அவன் இன்று பேசவும் அவை எல்லாம் நீருக்குள் அமிழ்த்திய பலூனாய் மேலே எழுந்து பத்மமுகியின் மனதினைப் புயலாய் தாக்கியது.

அவள் முக மாறுதலைக் கவனித்த ஆதி மனோகரன், “பத்மமுகி, ஆர் யூ ஓகே? என்னாச்சு? உன் முகம் இப்படி இருக்கு?” என்றான்.

“ஒன்னுமில்லை.”

“முதல்ல ஷாக்கிங்காதான் இருக்கும். ஆனால் என்னைப் ஃபிரண்டா மட்டும் இப்போதைக்கு நினைச்சுக்கோ. முதல்ல ஃபிரண்டா அப்ரோச் பண்ணி, அப்புறம் இதை வெளிப்படுத்துறது தப்போன்னு தோணுச்சு. அதான் முதல்லயே சொல்லிட்டேன். நான் எந்த இன்டன்ஷனில் உங்கிட்ட வந்துருக்கேன்னு தெரியணும்னு தோணுச்சு.”

தெளிவான பார்வை, நேர்மையான பேச்சு, அதைவிட அவனின் விழிகளில் அவள்மேல் கசியும் அன்பு அத்தனையும் பத்மமுகியின் மனதினைத் அசைத்துப் பார்த்தது.

ஆனால் இத்தனை வருடங்கள் தனியாய் இந்த உலகினை எதிர் கொண்ட பெண்ணாய் சட்டென்று அத்தனையும் நம்ப இயலவில்லை. இயல்பாகவே பெண்களுக்கு இருக்கும் ஜாக்கிரதை உணர்வு அவள் மனதையும் எச்சரிக்க, அவள் அலசி ஆராயாமல் முடிவைக் கூறவில்லை. அதனால் தன் மனதில் எழுந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவள் அமைதியாய் அவனைப் பார்த்தாள்.

“ஓகே, மீட் பண்ணிப் பேசலாம். ஆனால் எனக்குப் பிடிச்சிருந்தால் மட்டும்தான் ஓகே சொல்லுவேன். இல்லைன்னா என்னைக் கம்பெல் பண்ணக் கூடாது.” என மனதினை உரைத்தவளைப் பார்த்தும் புன்னகைதான் அவனுக்கு.

கைப்பேசி எண்களை அன்பை வளர்க்க இருவரும் பரிமாறிக் கொண்டனர். அடுத்து உணவுக்கு அவன் பணம் செலுத்த முயல, “இன்னும் நாம ஸ்டேரஞ்சர்ஸ்தான். ஃபிரண்ட்ஸ்கூட எப்பவும் பணம் ஷேர் செஞ்சுதான் பழக்கம்.” என அவள் உண்டதுக்குப் பாதி பணத்தை அவளே எடுத்து வைக்க, ஆதியும் வேறு வழியின்றி அவள் பணத்தையும் வாங்கிக் கொண்டு அவர்கள் உண்டதற்கான தொகையைச் செலுத்தினான்.

“நீங்க எங்க தங்கி இருக்கீங்க?”

“இவ்வளவு விசாரிச்சு வந்தவருக்கு இது தெரியலன்னா ஆச்சரியமாக இருக்கு.”

‘புத்திசாலிதான்’ என மனதில் மெச்சிக் கொண்டவன் அந்த இடத்தின் பெயரைச் சொல்ல, அவளும் புன்னகைத்தபடி மகிழுந்தில் ஏறி அமர்ந்தாள்.

மனம் முழுக்க ஏதோ இன்று இதழ் விரித்து, நறுமணமாய் பரவுவது போன்ற தோற்றம். இரவு படுக்கையில் விழுந்தவளுக்கு அவன் நினைவுகள் துணையாய்ச் சேர்ந்தே இருந்தது. புத்தம் புது உணர்வொன்று மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருந்த நேரம். படுக்கையில் படுத்தபடி மேலே நீல நிற இரவு விளக்கில் எழுந்த பிரகாசத்தில் மேற்சுவரைப் பார்த்தபடி படுத்திருந்தவள் கை நெஞ்சத்தில் கைப்பேசியைப் பிடித்தபடி இருந்தது. சற்று நேரத்திற்கு முன் அவன் அனுப்பி இருந்த ‘குட் நைட்’ மட்டுமே அவளின் இந்த நிலைக்குக் காரணம்.

ஒரு ஆண் விருப்பத்தைச் சொல்லும்போது அந்த ஆணைப் பொறுத்து ஒரு பெண்ணுக்குப் பிடித்தம் வரலாம். இல்லை எரிச்சல் வரலாம்.

ஒரு ஆணால் விரும்பப்படுவது முகிக்கு மகிழ்ச்சியை அளித்திருக்க, குழந்தைபோல் கைப்பேசியைப் பார்த்தவள் பதிலுக்கு இரவு வணக்கத்தை அனுப்பி வைத்தாள்.

பழையது சட்டென நினைவுக்கு வந்துவிட நினைவில் மூழ்கியவளை மெதுவாய் அழைத்தார் வழக்குரைஞர் அபிதா.

“லவ் மேரேஜா?” என்று அவர் கேட்ட கேள்விக்கு முகியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்று அவன் நினைவுகளை அசைபோட்டது.

“லவ் அண்ட் அரேஞ் மேம்.” எனத் தன் மொத்தக் கதையையும் கூறி முடித்தாள்.

“சரிம்மா இப்ப உனக்கு என்ன வேணும்? நிச்சயம் டிவோர்ஸ் வேணுமா? ஒரு தடவை நீ நடந்தது என்னன்னு கேட்டிருக்கலாம். நீ சொன்னதைப் பார்த்தால் உன்னோட ஹஸ்பண்ட் துரோகம் பண்ண மாதிரி தோணலை எனக்கு.”

“துரோகம் பண்ணது பண்ணலை இரண்டாவது பட்சம் மேம். நானே இங்க இரண்டவாது பட்சம் அப்படிங்கிறதுதான் என்னோட முக்கியமான பிரச்சினை. முடியலை மேம். நானும் இப்படி சொல்லிட்டேன். ஆனால் இரண்டு நாள் கழிச்சு இப்படியொரு துரோகம். ரொம்ப வலிக்குது. என்னால் இதுக்கு மேல் அந்த என்விரான்மெண்ட்டில் சர்வைவ் ஆக முடியலை. புதைச்சத தோண்டி எடுக்குற நானே அங்க ஒரு புதைக்கப்பட்ட பொருள் மாதிரி ஆகிடுவேன்னு இருக்கு.”

அவள் கைமீது தன் கையை ஆறுதலாக வைத்தவர், “சரிம்மா, நான் நோட்டீஸ் ஏற்பாடு பண்றேன். எப்படியும் கவுன்சிலிங் போடுவாங்க.”

“பார்த்துக்கலாம் மேம். எனக்கு நான் இனி நிம்மதியாக ஹெல்த்தியாக இருந்தால் போதும்.”

“ஓகே.”

“நான் வேண்டியதை ஏற்பாடு பண்றேன். நெய்தல் நிழலுக்கு வந்திருக்கீங்க. மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. உங்களை எப்படியும் காமினி தனியாக விடமாட்டாள்.”

காமினி என்றதும் பத்மமுகியின் முகத்தில் புன்னகை ஒன்று உதித்தது.

“யெஸ் மேம். தேங்க்ஸ்!”

“நாளைக்கு வாங்க. ரெடி பண்ணிடறேன். அப்புறம் அனுப்பிடலாம்.”

“ஓகே மேம். பீஸ்?”

“கேஸ் ஹியரிங் வரும்போது சொல்றேன்.”

“ஓகே. தேங்க்ஸ் மேம்!”

அபிதாவும் புன்னகைத்தபடியே எழுந்தார்.

அவரிடம் விடை பெற்றவள், விடுதிக்குச் சென்று காலை உணவினை முடித்தபின்னர் தன்னுடைய பணியிடத்திற்குப் புறப்பட்டாள்.

***

இரு நாட்களுக்குப் பிறகு, ருத்ரா விடுதியில் பணியாளர்கள் உணவு உண்ணும் இடத்தில் அமர்ந்து உணவை உண்டு கொண்டிருந்தான். அப்போதும் தானும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டு சிவகாமினியும் அவன் எதிரே அமர்ந்தாள்.

“குட் ஆப்டர் நூன் ருத்ரா.” எனப் புன்னகைத்தபடியே தன் அவன் எதிரில் அமர்ந்தாள்.

இன்று விடுதிப் பணியாளர்களான பெண்கள் அணியும் புடவையில் இருந்தாள். நீல நிற பார்டர் கொண்ட மெரூன் நிறப் புடவை, கூந்தலைக் கொண்டையாகப் போட்டிருந்தவள், கழுத்தில் ஒரு மெல்லிய தங்கச் செயின் சதிராடிக் கொண்டிருக்க, காதில் இருந்த தொங்கட்டான் அசைய அமர்ந்தவளைப் பார்த்தான்.

தான் எப்படி இருந்தாலும், அவளிடம் வெட்டிப் பேசினாலும் மீண்டும் தன் எதிரே புன்னகையுடன் நிற்பவளைப் பார்த்தான் ருத்ரா. அப்பாவி முகம், பார்ப்பவர்களுக்குப் பிடிப்பது போன்ற தோற்றம். புடவையில் குட்டி பொம்மை போல்தான் இருந்தாள்.

அவனுடைய அசிஸ்டெண்ட் சிலர் இவளை, “டால் மேம்” என அவர்களுக்குள் பேசுவதைக் கேட்டிருக்கிறான். உண்மையில் பொம்மை போல்தான் இருந்தாள்.

“குட் ஆப்டர் நூன்.”

“என்ன ருத்ரா யோசனை?” என அவன் முகம் யோசனையில் இருப்பதைப் பார்த்தவுடன் கேட்டாள் காமினி.

“ம்கூம். நத்திங்.”

“சேல்ஸ் ரெகார்ட் பார்த்தேன். உன்னோட பேஸ்ட்ரி அயிட்டம் எதுவும் மிச்சமில்லையாம். எல்லாமே சோல்ட் அவுட்.”

அவனும் இரண்டு நாட்களாகக் கவனித்துக் கொண்டிருந்தான். பேஸ்ட்ரி உணவு வகைக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது,

ஆனால் இந்தப் பக்கம் அவனுடைய அசிஸ்டெண்ட்கள் சிலர் சோர்ந்து காணப்பட்டனர். சமைப்பவருக்கு ஓய்வென்பது மிகுந்த அவசியம். வாழ்க்கை, வேலை இரண்டும் சமமாக இருக்க வேண்டும். வேலை என்று வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் அதிகம்.

“பார்ப்போம் காமினி.”

“நீ நினைச்சால் முடியும் ருத்ரா. நம்ம ஹோட்டலுக்கு ஃபாரீனர்ஸும் வராங்க. அவங்களுக்கு இங்க அவங்க நாட்டு சாப்பாட்டைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும்தானே!”

“ம்ம்ம்.”

“நான் வாரத்தில் எல்லா நாளுமே கேட்கலை. ஸ்டாக் தீர்ந்தால் மட்டும் செஞ்சுக்கலாம். லைக் வாரத்தில் மூணு நாள் மட்டும். அந்த நாள் மட்டும் சேலரியில் ஹவர்க்கு ஏத்திக் கொடுத்திடலாம். அதே மாதிரி கஷ்டமர்ஸ்கிட்ட இன்னும் கொஞ்சம் அமௌண்ட் ஏத்திடலாம்.”

“ஓகே பார்க்கலாம்.” என்பதோடு முடித்துக் கொண்டான்.

இன்னும் சாப்பிடாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி, “என்ன சிவகாமி வேணும்?” என்றான்.

“ஒன்னுமில்லை ருத்ரா.”

“சரி சாப்பிடு.” என்றதும் உணவில் கவனத்தை வைத்தவளுடன் வந்து சேர்ந்து கொண்டான் சிவகார்த்திக்.

“ஹாய் ப்ரோ.”

“ஹலோ கார்த்திக்.”

“அப்புறம் என்ன சொல்றாங்க என் அருமை அக்கா? உங்களை ஒத்துக்கச் சொல்லிப் பிரைன் வாஷ் பண்ணிருப்பாங்க.” என்றான். சிவகார்த்திக்கை அடிக்கண்ணால் முறைத்த காமினியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் சகோதரன்.

தன் உணவை உண்டு முடித்திருந்த ருத்ரா, “சரி, நீங்கச் சாப்பிடுங்க. நான் வீட்டுக்குப் போகணும்.” எனக் கூறினான்.

“ஓகே. பாய்.” என இருவரும் விடை கொடுத்தனர்.

அவன் செல்லும்போது சிவகாமினி தன் சகோதரனின் முதுகில் அடி வைக்கும் சத்தம் எழுந்தது. வழக்கம்போல் உடன் பிறப்புகள் தங்கள் சண்டையை ஆரம்பித்து விட்டனர் என நினைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் ருத்ரா.

***

கோயம்புத்தூர்.

மதிய வெயில் தன்னால் முடிந்த அளவு மக்களின் சக்தியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தது. நகரின் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் பெருநகரின் அந்த வீதி அமைதியாக இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மரங்களில் உள்ள பறவைகளின் சத்தமே எழுந்து கொண்டிருந்தது.

தபால்காரர் பதிவுத் தபால் கொண்டு வந்திருக்க, வீட்டில் இருக்கும் ஒரு நபர் கையெழுத்திட்டால் மட்டுமே பெற முடியும் என்பதால் வீட்டின் காவலாளி அந்த வீட்டின் முதலாளியம்மாளை அழைக்க, தபால்காரரை உள்ளே வரச் சொன்னார்.

காலில் மேல் கால் போட்டபடி பட்டுடுத்தி, அட்டிகையுடன் அமர்த்தலாக அமர்ந்திருந்தார் மாதவி.

தபால்காரர் ஆதி மனோகரன் பற்றி விசாரிக்க, “அவன் என் புள்ளைதான்.” என்றார்.

“கையெழுத்து போட்டு வாங்கிக்கம்மா.”

கையெழுத்துப் போட்டு வாங்கியவர் அதைத் திறந்துப் பார்க்க, அதில் விவகாரத்து நோட்டீஸ் இருந்தது. உடனே அவர் முகம் மலர்ந்து குரூரம் விழிகளில் ஜொலித்தது.

 

தொடரும்…

வணக்கம் டியர்ஸ். படிச்சு கமன்ட் போடுங்க. 🙏🙏🙏  இன்னும் ஸ்வீட் சர்பிரைஸ் இருக்கு‌.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page