சந்திரன் வேலைக்குச் செல்வதற்காகக் காலையில் சமையலுக்குத் தயார் செய்து கொண்டிருந்தனர்.
நேத்ரா சமையலுக்குக் காய் வெட்டி கொண்டிருக்க
“எவ்ளோ நேரம் காய் வெட்டுவ நேத்ரா?”
“இன்னும் கொஞ்சம் தான் அத்தை இருக்கு. கட் பண்ணிடறேன்” என்று சொல்லியபடி கட் பண்ணி கொண்டிருந்தவள் சரியாக அவள் எழுந்திருக்கவும் கத்தி பறந்து வந்து அவள் துணியில் பட்டு நின்றது.
இதை எதிர்பார்க்காத நேத்ரா அதிர்ந்து போய் நின்றாள்.
“எவ்ளோ நேரமா கேட்கறேன்? கொஞ்சமாவது அவன் வேலைக்குப் போகணும்னு எண்ணம் இருக்கா உனக்கு?” என்று கேட்க நேத்ரா பேச வாய் வராமல் அமைதியாக நின்றாள்.
சரியாக அவள் தூக்கி எறியும் போது செங்கப்பன் வர அதைக் கவனித்த மைதிலியோ,
“சீக்கிரம் கட் பண்ணு நேத்ரா. அவனுக்கு டைம் ஆச்சில்ல” என்று தேன் தடவிய குரலில் சொல்ல அந்தக் குரலில் திகைத்து போய் மைதிலியை பார்க்க அவளோ செங்கப்பனிடம் பேசிக் கொண்டிருந்தவள் அவர் சென்ற உடன் திரும்பவும் திட்ட ஆரம்பித்தாள்.
“ஏதாவது ஒண்ணு சொல்லிட்டா உடனே அப்படியே நிப்பியே? போய்ச் சீக்கிரம் அடுத்த வேலைய பாரு” எனத் திட்ட சரி என்று தலையாட்டியபடி அங்கிருந்து சென்றாள்.
இவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது சரவணன் வர அவனுக்கு மைதிலி காஃபி போட்டு நேத்ராவிடம் கொடுத்தாள்.
நேத்ராவை பார்த்ததும் முறைத்த சரவணன் மைதிலியிடம்,
“ஏன் காலைலேயே கத்தறீங்க? நிம்மதியா தூங்க கூட முடியல”
“இல்லங்க. காய் கட் பண்ண சொன்னா லேட் பண்றா. அதான் திட்டினேன்” என்று விளக்கம் சொல்ல…
“எங்க குட்டிமா எத்தனை பேர் இருந்தாலும் அசராம சமைப்பா தெரியுமா?” என்று சரவணன் நேத்ராவிடம் பெருமை அடித்தான்.
‘நான் என்ன செய்ய மாட்டேனா சொன்னேன்? நார்மலா செய்யறதே வேணும்னே பக்கத்தில வந்து ஏதாவது சொல்லி குழப்பி விடுது. எங்க போய்க் கரெக்டா செய்யறது’ என்று மனதிற்குள் புலம்பினாள்.
பின் மைதிலி வேகமாகச் சமையல் வேலையை முடிக்க நேத்ரா பாத்திரங்களைக் கழுவி வைத்தவுடன் வீட்டினை சுத்தம் செய்தாள்.
நேத்ரா எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பாள். ஆனால் திட்டுகள் மட்டும் வாங்காமல் இருந்ததில்லை.
இந்நிலையில் தீபாவளிக்கு அழைக்க வர அமுதா போன் பண்ணினாள்.
“ஹலோ”
“அண்ணி தீபாவளிக்கு அழைக்க வரலாம்னு இருக்கோம். மாப்பிள்ளை லீவ் போடுவாரா?”
“நீங்க தீபாவளிக்கு அழைக்கறது இருக்கட்டும். உங்க புள்ள வேலை எல்லாம் செய்வானு சொன்னீங்க. காய் கட் பண்ணவே லேட் பண்றா?”
“இல்ல அண்ணி. அவ நல்லா செய்வா”
“அப்படியா… நான் அவகிட்ட கொடுக்கறேன். நீங்களே பேசுங்க” என்றவள் நேத்ராவிடம் போனை கொடுக்க
“என்னாச்சு நேத்ரா? என்ன பண்ண?” என்று அமுதா விசாரிக்க…
“அது ஒண்ணும் இல்லமா. காய் கட் பண்ண லேட்டாகிடுச்சு” என்று அவள் அம்மாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல மற்ற இருவரும் கடுப்பானார்கள்.
“ஏய்… வாயத் துறந்து பேச மாட்டியா? இப்படி தான் பேசுவியா? சத்தமா பேசு” என மைதிலி திட்ட நேத்ராவுக்கோ இன்னும் வார்த்தை வராமல் போனது.
அவளைப் பார்த்த மைதிலி அவளிடமிருந்து பிடுங்கி, “அவ சத்தமா பேசினா பேசுங்க. இல்லேன்னா நான் போன் கட் பண்ணிடுவேன்” என்றவள்…
“நான் லீவ் போட முடியுமானு அவன்கிட்ட கேட்டு சொல்றேன்” என்று மைதிலி சொல்லி போனை கட் செய்தாள்.
“நாங்க சொல்றோம் இல்ல. போன்ல சத்தமா பேசுனு. பேச மாட்டியா?” என்று சரவணன் கர்ஜிக்க
“அ… அப்படிலா இல்ல” என்று அவள் மிக மெல்லிய குரலில் சொல்ல
“நான் எவ்ளோ சத்தமா பேசறேன். சொல்றது கேட்க மாட்டியா?” என்று சரவணன் பேச நேத்ரா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினாள்.
“நான் பேசிட்டு இருக்கேன். உன்னால கேட்கறதுக்குக் கூடப் பதில் சொல்ல முடியாதா?”
“நேத்ரா மாமா இவ்ளோ நேரமா கேட்கறாங்க இல்ல? பதில் சொல்ல மாட்டியா?” என்று மைதிலி கேட்க அவள் மலங்க மலங்க விழித்தாள்.
“உனக்கு அவ்ளோ திமிராடி?” என்றபடி வந்த சரவணன் அவளை ஓங்கி அறைய அவள் பொறி கலங்கி நின்றாள்.
“பேசுவியா? மாட்டியா?” என்று சரவணன் கோபத்தில் அதட்ட
“பே… பேசுவேன்” என்று விசும்பியபடி பதில் கூறியவள்
“சரி. போ. இன்னொன்னு நியாபகம் வெச்சுக்கோ. நீ உங்க அம்மாட்ட போன்ல சத்தமா பேசலேனா உன்கிட்ட போனே குடுக்க மாட்டேன்” எனச் சொல்ல நேத்ரா அரண்டு போனாள்.
“என்ன பார்க்கற? சீக்கிரம் வேலையை முடி” என்று சொல்ல நேத்ரா அமைதியாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.
அன்று மாலை சந்திரன் வேலையில் இருந்து வரவும் நேத்ரா டீ போட்டுக் கொண்டிருக்க மைதிலி அவனிடம் அமுதா போன் செய்ததைப் பற்றிச் சொல்லி கொண்டிருந்தாள்.
“என்னங்க டீ” என்று நீட்ட மைதிலியோ நேத்ராவிடம்
“அவன்கிட்ட உங்கம்மா போன் பண்ணினது பத்தி சொன்னியா?”
“இல்லத்த”
“அவன் வந்தா ஒரு வார்த்த பேசறதில்ல. அவன்கிட்ட லஞ்ச் பேக் வாங்கிட்டு டீ கொடுத்தா உன் வேலை முடிஞ்சுடுது” என்று திட்ட நேத்ரா அமைதியாய் நின்றாள்.
‘ஆமா. நீ அப்படியே சொல்ல விட்டுட்டாலும். வந்தவுடனே நீ தான் அவன் கூட உக்காந்திருக்க. அப்புறம் போட்டு குடுக்கற. எங்க போய்ப் பேசறது?’ என நேத்ரா யோசித்துக் கொண்டிருக்க…
“காலைலயும் இப்படி தான் தம்பி. அப்பா கேட்கறாரு. பதிலே சொல்ல. அவரு டென்ஷனாகி அடிச்சாரு” எனச் சொல்ல சந்திரன் அவளை முறைக்க நேத்ராவுக்குச் சங்கடமாக இருந்தது.
அவனது பார்வையில் கூனிக் குறுகி நின்றாள்.
‘இன்னைக்கு இந்த விஷயத்த லேட்டா சொல்லிடுச்சு போல’ என்று நினைக்க
“ஏன் அப்பா கேட்டா பதில் சொல்ல மாட்டியா?” என்று சந்திரன் கோபமாகக் கேட்டான்.
“அப்படி இல்லைங்க” என்று கூற
“இதெல்லாம் வேணும்னே பண்றியா என்னனு தெரியல” எனக் கேட்க அவள் பதறி போய் அவனைப் பார்த்தாள்.
“சும்மா நடிக்காத. ஒரு டீ கூட உன்னால ஒழுங்கா போட முடியல. ஆனா ஒண்ணும் தெரியாத மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு நீ பண்றது எதுவும் சரியில்ல” என்று சொல்ல அவள் முகம் வெளிறினாள்.
ஓரிரு நிமிடங்கள் அங்கு நின்றவள் பின் உள்ளே வந்து வேலைகளை முடித்து விட்டுக் களைப்பில் அயர்ந்து உறங்கினாள்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் நேத்ரா சாப்பாடு வைக்கும் போது குக்கர் விசில் வராமல் போக விசிலை எடுத்து விட அவள் செல்லும் போது சாதம் வெளியே வந்து அவள் கைகளில் புண்ணானது.
ஏதோ சத்தம் கேட்டு உள்ளே வந்த மைதிலி நேத்ராவை பார்த்ததும் திகைத்தாள்.
“என்னாச்சு கைல? இதென்ன சாப்பாடு எல்லாம் சிந்தி கிடக்கு”
“குக்கர் விசில் வரலன்னு பக்கத்தில போனேன். தூக்கி அடிச்சிடுச்சி” என்று சொல்ல
“போ. போய் இதெல்லாம் கழுவு” என்று அவள் சொல்ல நேத்ரா பாத்ரூமில் போய்க் கழுவி விட்டு உள்ளே வர அங்கே நேத்ரா சுத்தம் செய்ய, நேத்ரா வலியை சட்டை செய்யாமல் அவளுடன் சேர்ந்து வேலை செய்தாள்.
அப்போதைக்கு ஒன்றும் வலியில்லாத மாதிரி தோன்றிய போதும் நேத்ராவுக்கு நேரம் ஆக ஆகக் கொப்புளங்களாகத் தோன்ற ஆரம்பித்தது.
இடது கையில் மேலிருந்து கீழ் வரை அங்காங்கே கொப்புளங்கள் இருக்க என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தவள் அமைதியாகப் படுத்தபடி இருந்தாள்.
பின் சந்திரன் வந்தவுடன் அவனிடம் சொன்ன மைதிலி, நேத்ராவை மருத்துவமனைக்குக் கூட்டி போகச் சொல்ல அவளும் சென்றாள்.
அவளைப் பரிசோதித்தவர் மருந்துகளைப் போட சொல்லி கொடுத்தார்.
இந்நிலையில் அன்றைய இரவு அமுதா போன் செய்து அடுத்த நாள் தீபாவளிக்கு அழைக்க வருவதாகப் போன் செய்ய அடுத்த நாள் அவர்களுக்கான விருந்தை தயார் செய்தனர்.
அடுத்த நாள் அமுதாவுடன் அவர்களது உறவினர்கள் சீர் தட்டுடனும், தீபாவளி ஜவுளிக்கான பணமும், ஒரு பவுனும் வைத்தனர்.
நேத்ரா வந்தவர்களை வரவேற்றவள் அனைவருடனும் உற்சாகமாகப் பேசி கொண்டிருந்தாள்.
தீபாவளி சீர் கொடுத்த போது சந்திரனும், நேத்ராவும் அமுதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று வாங்கிக் கொண்டனர்.
பின் அமுதாவை தனியாகக் கூப்பிட்ட நேத்ரா,
“எப்படி இருக்க நேத்ரா? சந்தோஷமா இருக்கியா?”
“நல்லா இருக்கேம்மா” என்றவளை பார்த்தவள்…
“இது என்னடி கைல காயம்?” என அதிர்ச்சியாகக் கேட்க நேத்ரா நேற்று நடந்ததை விவரித்தாள்.
“ஹாஸ்பிடல் போனீங்களா?”
“போனோம்மா. அவர் தான் கூட்டிட்டு போனாரு. மருந்து கொடுத்திருக்காங்க”
“நான் அவருகிட்ட ஒரு வார்த்த சொல்லட்டுமா? நல்லா பார்த்துக்கோங்கனு”
“ம்மா அதெல்லாம் ஒண்ணும் சொல்லாதம்மா” என அவள் பதற…
“நீ கம்முனு இருடி” என்றவள் சந்திரனிடம் போய்ப் பேச அடுத்தப் பிரச்சனை ஆரம்பமாகியது.
நேத்ராவின் உறவினர்கள் சென்றவுடன் மைதிலியின் அருகில் வந்த நேத்ரா…
“உங்க அம்மா பண்றது சரியில்ல” எனச் சொல்ல நேத்ரா அவளைப் புரியாமல் பார்த்தாள்.
“என்ன அப்படி பார்க்கற? உங்கம்மா உன்னைய நல்லா கவனிச்சிக்கோனு சொன்னாங்க. ஏன் அவனுக்கு நல்லா பார்த்துக்கத் தெரியாதா?”
‘எங்கம்மா என்னைய நல்லா பார்த்துக்கச் சொன்னதுல என்ன தப்பிருக்கு?’ என யோசிக்க
“உங்கம்மா உன்னய அவன்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்கறாங்க. உங்கம்மானால தான் உங்களுக்குள்ள பிரச்சனை வர போகுது” என்று சொன்னவளை அயர்ந்து போய்ப் பார்த்தாள்.
‘எங்கம்மா புண்ணோட இருக்கேனேனு சொன்னா இவ எங்க கொண்டு போறா? தெய்வமே’ என அதிர்ச்சியாகப் பார்க்க…
“அமைதியா இருந்தா அவனே உனக்கு எல்லாம் செய்வான். பார்த்து நடந்துக்கோ. தேவையில்லாம பிரச்சனைய வளர்த்துக்காத” எனச் சொல்லிவிட்டு செல்ல நேத்ரா உறைந்து போய் நின்றாள்.
‘எங்கம்மா சாதாரணமா தானே சொன்னாங்க. இதுவே பிரச்சனை பண்ணிவிடும் போல’ என்று யோசனையில் ஆழ்ந்தாள்.
இதற்கிடையில் அன்று இரவு தோசைக்குக் கொத்தமல்லி சட்னி மைதிலி செய்யச் சொல்ல அதைச் செய்து வைத்தவள் மைதிலி தோசை ஊற்றி கொடுக்கச் சரவணனுக்கு வைத்தாள்.
சட்னியை சாப்பிட்ட சரவணன்,
“யார் செஞ்சது?” எனக் கேட்க
“நான் தான் மாமா” எனச் சொல்ல அதில் கோபப்பட்டவன் நேத்ராவின் தலை மேல் சட்னியை ஊற்ற அவள் உறைந்து போய் நின்றாள்.
“என்ன சட்னி செஞ்சிருக்க? இவ்ளோ காரமா போடுவ?” எனக் கத்த நேத்ரா உணர்ச்சியற்றவள் போல் அமைதியாக நின்றாள்.
சரவணன் சத்தம் கேட்டு வந்த மைதிலி என்னவென்று பார்க்க நேத்ராவை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
“என்னாச்சுங்க?”
“சட்னில எவ்ளோ காரம் பார்த்தியா? நீ என்ன தான் பண்ற? இவளை எதுவும் செய்யச் சொல்லாத” எனச் சொல்லியவன் மேலேறி சென்று விட்டான்.
‘நான் அவ்ளோ காரம் போடலயே. எங்க வீட்ல போடற மாதிரி சுருக்குனு போட்டேன். அவ்ளோ தான’ என யோசிக்க
“என்னடி நிக்கற? போ… போய்க் குளிச்சிட்டு வா. எல்லாம் என் தலையெழுத்து. இந்த மனுசன் சாப்பிடாம வேற போய்ட்டாரு” என்று மைதிலி புலம்பச் சந்திரனோ அமைதியாகப் போனை நோண்டி கொண்டிருந்தான்.
அன்றைய இரவு படுத்த நேத்ராவுக்கோ இன்னும் எத்தனை நாட்கள் இதே மாதிரி செல்லும் எனப் பயமாக இருந்தது.
அடுத்த வாரத்தில் தீபாவளி வர நேத்ரா வீட்டிற்குப் போகும் முன்பே சசி அவள் வீட்டிற்கு வந்து விட்டாள்.
அவள் வந்தவுடன் இருவரும் அவளிடம் சொல்லி கொண்டு நேத்ராவின் வீட்டிற்குச் சென்றனர்.
இதே போல் அமுதா பொங்கலுக்கும் அழைக்க மைதிலியோ அங்கேயே தான் பொங்கல் கொண்டாட வேண்டும் சொல்ல அதனால் ஒரே நாளில் இருவரும் நேத்ராவின் வீட்டிற்குப் போய் வந்தனர்.
நேத்ரா அவள் வீட்டிற்குப் போன போது அவளுக்கு மன அழுத்தமாக இருந்தது.
ஏறக்குறைய ஆறேழு மாதங்களாக அவளை அடித்துத் துன்புறுத்த அவளோ யாரிடமும் எதுவும் சொல்லாமல் டிப்ரஸனாக உணர்ந்தாள்.
“என்னங்க மைன்ட் ஒரு மாதிரி இருக்கு”
“அதுக்கென்ன?”
“நான் அம்மா வீட்ல 2 நாள் இருந்துட்டு வரட்டுமா?” எனத் தயங்கியபடி கேட்க
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அம்மா கிளம்பச் சொன்னாங்க. கிளம்பு” என்று சொல்ல அவள் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினாள்.
அடுத்து வந்த ஓரிரு நாட்களில் மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் திணறியவள் அமுதா போன் செய்த போது அடித்ததைப் பற்றிச் சொல்ல அவள் பதறினாள்.
ஏனெனில் இவ்வளவு நாட்களாக அடித்தது அமுதாவுக்குக் கூட அவள் தெரியப்படுத்தவில்லை.
