அடுத்த நாள் நேத்ரா வேலை செய்து கொண்டிருக்கும் போது நேத்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவளது செல்லில் இருந்து அமுதாவுக்குப் போன் செய்தாள்.
“அம்மா”
“நேத்ரா என்ன பண்ற?”
“ம்மா அவங்க வெளிய போய் இருக்காங்க. அதான் போன் பண்ணேன்”
“வேலை எல்லாம் கரெக்டா செய்யறியா?”
“செய்யறேன் மா. அம்மா…” என இழுக்க
“என்னடி?”
“ம்மா இங்க அடிக்கறாங்கமா”
“என்ன சொல்ற நேத்ரா?”
“ம்மா உண்மைய தான்மா சொல்றேன். ஆறேழு மாசமா இப்படியே தான் பண்றாங்க”
“அத்தை கத்தி எடுத்து வீசறாங்க. மாமா சட்னி எடுத்து கொட்டறாங்க. இவரும் அடிக்கறாரு”
“என்ன சொல்ற?” என அமுதா பதறியபடி கேட்க.
“எத்தனை டைம் சொல்றது உனக்கு?” என நேத்ரா எரிச்சல்பட…
“அவங்க என்ன பண்ணாலும் நீ அமைதியா போ. கரெக்டா வேலை செய்” என அட்வைஸ் செய்ய…
“ஏம்மா உனக்கு அறிவில்ல? உன் புள்ளய அடிக்கறாங்கனு சொல்றேன். என்னனு கேட்க மாட்டியா?” என நேத்ரா கத்த…
“நீ சித்தப்பாட்ட சொல்லு நேத்ரா”
“அதெல்லாம் சொன்னேன். எனக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு பார்க்கறேனு சொல்றாங்க”
“ம்மா… என்னால சமாளிக்க முடியல மா. தயவு செய்து ஏதாவது பண்ணுங்க மா. இங்க யார் கிட்டயும் மனசு விட்டு கூடப் பேச முடியல. இப்படியே இருந்தா பைத்தியம் பிடிக்கும் போல” என நேத்ரா அழ…
“நான் என்னடி பண்ண முடியும்? அவங்க எவ்ளோ பெரிய ஆளுங்க”
“ச்சே… உன்கிட்ட சொன்னதே வேஸ்ட். வைம்மா போன” எனப் போனை கட் செய்தவள் அடுத்து என்ன வழி என்று புரியாமல் திணறினாள்.
அடுத்த இரண்டு நாட்களில் பத்மினியிடம் இருந்து மைதிலிக்கு போன் வந்தது.
“அம்மா நல்லா இருக்கீங்களா?”
“நான் நல்லாருக்கேன். நீங்க?”
“நல்லா இருக்கேன் மா. ஒடம்பு பரலால்லயா?”
“வயசாயிட்டா நம்ம ஒடம்பு பார்த்துக்கறதுல தானே இருக்கு” என்றவர் பொதுவாக எல்லாரையும் விசாரித்து விட்டு…
“நேத்ராவை அடிக்கறீங்கனு அமுதா சொன்னா. அவளை அடிக்காதீங்க” என்று மெல்ல சொல்ல…
“நீங்க உங்க பிள்ளைக்கு எதுவும் சொல்லி தராம இருப்பீங்க. ஏமாத்தி கல்யாணம் பண்ணுவீங்க. அடிக்கறது மட்டும் தப்பா?” என்று கேட்டவள்,
“தம்பி இங்க வா. பாட்டிமா பேசறாங்க. என்னனு கேளு. நம்ம நேத்ராவை அடிக்கக் கூடாதாம்” எனக் கோபமாய்ச் சொல்ல…
“நாங்க அடிக்கறோம்னு அவ சொன்னாளா? என்ன திமிரு அவளுக்கு?” என்று அவன் இறுகிய குரலில் கேட்க…
“இல்ல தம்பி. அவளை சின்ன வயசில இருந்தே செல்லமா வளர்த்துட்டோம். அடிக்கறீங்கனா ரொம்பக் கஷ்டமா இருக்கு”
“ஓ… அப்போ அவ பண்றது மட்டும் கரெக்டா? எந்த வேலையும் ஒழுங்கா செய்யறதில்ல” என்று கொஞ்சமும் வயதில் பெரியவர் என்றும் பார்க்காமல் எகிறினான்.
அவரோ “அவளுக்குச் சாப்பாடு போடலேனா கூடப் பரவால்ல. ஆனா அடிக்காதீங்க” என்று கெஞ்ச அவனோ மனசாட்சியே இல்லாமல் அவரைத் திட்டிக் கொண்டிருந்தான்.
“எந்த வேலையும் செய்ய மாட்டேங்கறா. திமிரு வேற பண்றா. ஒங்க பேத்திய அடிக்கக் கூடாதா?” என்று அவன் இன்னும் கத்தினான்.
மைதிலி சொல்லி கொடுக்க அவன் பேச என நீண்டு கொண்டே போனது.
நேத்ராவோ ‘இவர்கள் ஏன் சொன்னார்கள்?’ எனப் பயப்பட்டுக் கொண்டிருக்க அதைச் சொல்லி சொல்லியே அவளை அடித்தார்கள்.
அவள் வீடு சுத்தம் பண்ணிக் கொண்டிருக்கும் போது அதைப் பார்த்த சந்திரன் “அங்க பாரு அழுக்கா இருக்கு. ஒரு வேலை ஒழுங்கா செய்யத் தெரியல” என்று சொன்னவன் “நீ இப்படி வேலை செய்யறதுக்கு உன்னய அடிக்காம வேற இருக்கணுமா?” என்று திட்டினான்.
அந்தப் பக்கம் வந்த மைதிலியோ அவளை அறைந்து விட்டு, “உன்னை அடிக்கக் கூடாதாமாம். பெரியவங்கனு மரியாதை கொடுத்தா உங்க பாட்டி எப்படி பேசுது?” என்று அவள் பத்மினியையும் திட்டினாள்.
இப்படியே ஒவ்வொருவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டே அவள் வேலையைச் செய்து முடித்தாள்.
இரவு அவள் படுக்கும் போது அன்றைக்கு நடந்தது நியாபகம் வர, ‘இவங்க எவ்லாம் மனுசங்க தானா?’ என்று ரொம்பவும் வெறுப்பாய் உணர்ந்தாள்.
ஏதோ சத்தம் வர போனை எடுத்தவள் அதில் வந்த மெஸேஜை பார்த்து அதிர்ந்தாள்.
அவளுக்குப் போன முறை செக் அப் போன போது நடந்தது நியாபகம் வந்தது.
வழக்கம் போலச் செக் அப் முடிந்து சந்திரனுக்குப் போன் செய்யப் போனவள் பூபாலனின் மெஸேஜை பார்த்து அதிர்ந்தாள்.
ஏனெனில் அவள் புது நம்பர் யாரிடமும் கொடுக்கவில்லை.
‘எப்படித் தெரிந்திருக்கும்?’ என்ற யோசனையோடே சந்திரனுக்குப் போன் செய்தாள்.
“ஹலோ”
“என்னங்க நேத்ரா பேசறேன்”
“சொல்லு”
“ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துட்டோம்ங்க. டேப்ளட்ஸ் கொடுத்திருக்காங்க. அடுத்த மாசம் வர சொல்லி இருக்காங்க” என்றவள்
“சரி. கரெக்டா சாப்பிடு. நான் வெச்சிடறேன்” எனக் கட் செய்யப் போக
“என்னங்க ஒரு நிமிஷம்”
“என்ன?”
“உங்க பெரியப்பா திரும்ப மெஸேஜ் பண்றாங்க. நீங்க ஏதாவது நம்பர் கொடுத்திங்களா?” எனக் கேட்க
“நான் எந்த நம்பரும் குடுக்கல. மெஸெஜ கண்டுக்காத. நான் வெச்சிடறேன்” சொல்லி வைத்து விட்டான்.
இவளுக்குத் தான் இந்தப் பிரச்சனை எப்போது முடியும் என்று இருந்தது.
ஒரு எண்ணை பிளாக் செய்தால் இன்னொரு எண்ணிலிருந்து மெஸேஜ் செய்தான்.
இன்னொரு எண்ணை பிளாக் செய்தால் வேறொரு புதிய நம்பரிலிருந்து மெஸேஜ் செய்தான்.
முன்னாவது சந்திரனிடம் சொல்லி கொண்டிருந்தாள். ஆனால் இப்போது வீட்டில் நடக்கும் பிரச்சனையில் அவனிடமும் இப்போது இதைப் பகிர்வதில்லை.
‘எப்போ இந்தப் பிரச்சனை முடியும்? இவங்க கிட்ட இப்படியே அடி வாங்கிட்டு தான் இருக்கணுமா? பாட்டிமாவ கூட மதிச்சு பேச மாட்டேங்கறாளே’
இப்படியாக ஏதேதோ யோசித்தபடியே அவள் உறங்கி போனாள்.
இவ்வாறு இருக்கும் போது அடுத்த வாரத்தில் பூபாலனின் மகன் திருமணம் வந்தது.
அவன் நேத்ரா வீட்டிற்கும் தனது குடும்பச் சகிதமாகப் பத்திரிக்கை வைத்தான்.
அமுதாவுக்கு இஷ்டமில்லை என்றாலும் சம்பந்தி வீட்டிற்காகவாவது செல்ல வேண்டுமே என்று கிளம்பி வந்தாள்.
அத்தோடு கல்யாணத்திலிருந்து நேத்ராவை மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் பல்லை கடித்துக் கொண்டு அமுதா கிளம்பி வந்தாள்.
ஒரு வழியாகத் திருமணமும் நடைபெற்று அமுதாவுடன், நேத்ரா அங்கிருந்து கிளம்பிய பின் தான் அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.
சந்திரன் வீட்டினர் திட்டினால் அப்படியே ஒன்றும் பேசாமல் நிற்கிறாள் என்று நேத்ராவை குறை சொல்லி சமீப காலங்களில் அவளை மன நல மருத்துவரிடம் காண்பிக்கச் சொல்ல அங்கேயும் போய்க் கொண்டிருந்தார்கள்.
டாக்டரோ அதற்கு Anxiety என்று கூறினார். எப்போதும் பதட்டத்துடன் இருந்தால் தான் இப்படி இருக்கும் என்று சொன்னவர் அதற்கும் மருந்து கொடுக்க நேத்ரா தான் நொந்து போனாள்.
‘இப்படியே போனா பைத்தியம்னே சொல்லிடுவாங்களோ’ எனப் பயந்தாள்.
இவையெல்லாம் சேர்ந்து மனதை அழுத்த வீட்டிற்கு வந்தவள் என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தாள்.
“நேத்ரா நாளைக்கு ஊருக்கு போறப்ப இதெல்லாம் எடுத்துட்டு போறியா?” என அமுதா கேட்க அவளைப் பார்த்த நேத்ரா அவள் கைகளில் இருந்த இனிப்புகளைப் பார்த்து கடுப்பானாள்.
“இது எதுக்குமா?” என்று அவள் எரிச்சலுடன் கேட்க
“பின்ன ஊருக்கு போறப்ப சும்மாவா அனுப்ப சொல்ற?”
“ம்மா… நான் ஊருக்கு போகலமா” என நேத்ரா கத்த
“ஏன்டி உன்னை நாளைக்கு வர சொன்னாங்க தானே?”
“நான் போக மாட்டேன். அவ்ளோ தான்”
“உன்னோட ஒவ்வொரு முறையும் இதே ரோதனையா போச்சு”
“ம்மா… நான் போகல. எனக்கு யாரு கிட்டயும் சொல்ல முடியாம டிப்ரஸ்டா இருக்க மாதிரி இருக்கு. என்ன விட்ரு”
அப்போதைக்கு அமைதியாக இருந்த அமுதா அடுத்த நாள் நச்சரிக்க அவள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.
அதே போல அங்கிருந்து வரும் கால்களையும் பேசவில்லை.
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் அவளது பிறந்த நாள் வர கோவிலில் பூஜைக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்லி அவளைக் கிளம்பி வர சொல்ல அவர்கள் காரில் கிளம்பினார்கள்.
அவளுக்கு அங்குப் போவதில் துளி கூட இஷ்டமில்லை. அவள் மனம் அவர்கள் அடிப்பதை நினைத்துப் பயந்தது.
காரில் சிறிது தூரம் சென்றதும் “ம்மா… வாம்மா… வீட்டுக்குப் போகலாம்” என ஆரம்பித்தாள்.
“அவங்க பூஜைக்குச் சொல்லிருக்காங்கனு சொன்னாங்க தான நேத்ரா. அதனால போகணும் தானே?”
“ம்மா… அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. நம்ம வீட்டுக்கு போகலாமா?” எனச் சொல்ல அமுதா ஒருவாறு சமாதானப்படுத்தினாள்.
திரும்பவும் கொஞ்ச தூரம் செல்லவும் அப்போதும் நேத்ரா அதே சொல்ல திரும்ப அவள் சமாதானப்படுத்த என இந்தக் கதை தொடர்ந்தது.
ஆனால் நேத்ராவுக்குக் கோவை பக்கமாக வர வர அங்கிருந்து இறங்கி ஓடி விடலாம் போலத் தோன்றியது.
“ம்மா… வேணாம்மா… விட்ருமா. நம்ம வீட்டுக்கே போயிடலாம்”
“சொன்னா கேளு நேத்ரா”
“ம்மா… நான் சொல்றத கேளு. அண்ணா ப்ளீஸ்… வண்டிய திருப்புங்க”
“அமைதியா இரு நேத்ரா. சின்னக் குழந்தை மாதிரி ஏன் இப்படி பண்ற?”
“நீ என்னத்தையோ நினைச்சிக்கோ. நான் வர மாட்டேன். இல்லேனா இந்த வண்டில இருந்து குதிச்சிடுவேன்” என்று அழுது கொண்டே கூற இவர்கள் பேசியதில் டிரைவர் வண்டியை நிறுத்தினார்.
“நேத்ரா சொல்றத கேளு”
“ம்மா அவங்க அடிப்பாங்க. நான் போகல. ப்ளீஸ்மா…” எனக் கதற ஆரம்பித்தாள்.
“நாளைக்கு உனக்குப் பர்த்டேனு தான பூஜைக்குக் கொடுக்கறதா சொன்னாங்க”
“ம்மா… நான் பர்த்டே கொண்டாடற நிலைமைல இல்ல. புரிஞ்சிக்கோ”
“உங்க அண்ணி உனக்கு டிரஸ் எல்லாம் எடுத்திருக்காங்களாமே. நாளைக்குப் போடணும் இல்ல”
“ம்மா… உசுரே போகுதுனு சொல்றேன். இப்போ பிரியாணி சாப்பிடுனு சொல்ற. அவ ஆக்ட் பண்றா. வேணும்னே என் மேல வீண் பழிய போட்டு அடி வாங்க வெச்சா. நான் வரல மா”
“நீ அமைதியா வரியா? இல்லையா?” என்றவர் “இன்னைக்குக் கிளம்பி வரோம்னு சொல்லிருக்கோம். போயே ஆகணும். உன்கிட்ட பேசி எனக்கு நெஞ்சு வலி வந்துரும் போல” என்றவர் “நீங்க போங்க தம்பி. இவ இப்படி தான் பேசுவா. கொஞ்சம் கூடப் பெத்தவங்கள புரிஞ்சிக்கத் தெரியாது”
நேத்ராவிற்கு அந்தப் பயணம் முழுவதும் அழுகையிலையே முடிந்தது.
அவள் எவ்வளவு கதறியும் அவள் அம்மா கண்டு கொள்ளாமல் சந்திரன் வீட்டில் விட்டார்.
சந்திரன் வீட்டிற்குப் போனவுடன் அவர்களை வரவேற்ற சந்திரனின் குடும்பத்தார் அமுதா முன்னிலையில் நேத்ராவிடம் நல்ல விதமாகப் பேசினர்.
நேத்ரா வேலை செய்ய உள்ளே வந்த போது அவளிடம் வந்த மைதிலி,
“நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? போன் பண்ணா எடுக்க மாட்டியா? எப்படி வர வெச்சோம் பார்த்தியா?” என்றவள்…
“உங்க வீட்ல என்ன சொன்ன? அடிச்சோம்னு சொன்னியா? இனி ஒவ்வொரு முறையும் அடிக்கறப்ப எல்லாம் உங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்ல போறேன்” என எகத்தாளமாகக் கூற ஏற்கனவே ஏதாவது செய்யலாம் என்றிருந்தவளுக்கு இப்போது எப்படி அங்கிருந்து தப்பிப்பது என்ற யோசனை வந்தது.
அன்றைய இரவு முழுவதும் அவளது மனம் அமைதியின்றிக் கழிந்தது.
அடுத்த நாள் பிறந்த நாள் என்று புது உடை அணிந்து தயாராகி வந்த போது நேத்ராவை கவனித்த மைதிலி, அமுதா முன்பு நேத்ராவிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசியவள் நேத்ராவையும், அமுதாவையும் அவள் பூஜைக்குக் கொடுத்த கோயிலுக்குப் போகச் சொல்ல இருவரும் கோயிலுக்குக் கிளம்பினர்.
அங்கே கோயிலிலும் நேத்ரா எவ்வளவோ செல்ல அமுதா காதில் போட்டு கொள்ளவில்லை.
இதனால் வெறுத்து போன நேத்ரா கோயிலில் இருந்து வெளியே வந்து அமுதா பிறந்த நாளுக்கெனக் கொடுத்த பணத்தில் தனது ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏற அதைப் பார்த்த அமுதாவோ அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.
