இதயம் 16.1

 

நேத்ரா வீட்டில் அவளது பாட்டிமாவிற்குச் சாமி கும்பிட்டவுடன் நேத்ராவை மைதிலி கிளம்பச் சொல்ல… அவளோ, “நான் வீட்டுக்கு வர மாட்டேன்” என்று சொல்ல அமுதா உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

“ஏய் என்னடி சொல்ற?”

“நான் போக மாட்டேன்” என்றவள் அறைக்குள் போய்க் கதவை சாத்தி கொள்ள அமுதா என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் யோசித்தவள் சிறிது யோசித்து அப்போதைக்கு நேத்ராவை 2 நாட்கள் கழித்து அங்கு அனுப்புவதாகச் சொல்ல மைதிலியோ

“அவ கொஞ்சமாவது மரியாதையா பேசறாளா? இப்படி பண்ணா பொள்ளாச்சி பக்கமே எட்டி பார்க்க முடியாது. நியாபகம் வெச்சிக்கோங்க” என மிரட்ட அமுதா சரி என்று அவர்களை அனுப்பியவள் நேத்ராவிடம் சண்டையிட ஆரம்பித்தாள்.

“நேத்ரா என்ன நினைச்சிட்டு இருக்க? அங்க போகாம இங்க என்ன பண்ண போற?”

“இனி இங்க தான் இருக்கப் போறேன்” என்று நேத்ரா அழுத்தமாகச் சொல்ல

“உன்னை யார்டி இங்க இருக்கச் சொன்னா? முதல்ல கிளம்பு”

“நான் கிளம்ப மாட்டேன்மா”

“ஏன்டி இப்படி பேசற?”

“ஆமாமா. உனக்கு நான் வீட்டுக்குள்ள போனா போதும். அப்புறம் அங்க போய் நான் என்ன ஆனாலும் நீ கவலைப்படப் போறதில்ல” என நேத்ரா காட்டமாகச் சொல்ல

“அப்படி உன்னை விட்ருவேனா நேத்ரா? என்ன இப்படி பேசற?”

“அப்படித் தான்மா பேச முடியும். அவங்க அடிக்கறாங்கனு சொல்றேன். ஒன்னும் கண்டுக்க மாட்டேங்கற”

“ஏய் நான் மட்டும் என்ன பண்ண முடியும் நேத்ரா?”

“தெரியுது தானே. அப்போ அமைதியா இரு”

“எனக்குத் தெரியாது. நீ கண்டிப்பா போய்த் தான் ஆகணும்”

“என்ன அனுப்பிவிட்டு நீ என்ன பண்ண போற? அவங்க திட்றதுக்கெல்லாம் நீயும் நடுங்கி என்னயும் ஒரு வழி பண்ணி இது தான நீ சொல்ற?”

“நீ இங்க இருந்தா ஊரு தப்பா பேசும்”

“பேசினா பேசிட்டு போறாங்கமா. நான் இந்த விஷயத்தில யாரையும் நம்பற மாதிரி இல்ல. அவங்களா கல்யாணம் பண்ணி வைச்சாங்க. இல்ல இவ்ளோ கஷ்டப்பட்டேன்ல அவங்க தான் வந்து ஹெல்ப் பண்ணாங்களா? இல்ல தானே? அப்புறம் ஏன் கவலைப்படுற?”

“உனக்கு இவ்ளோ திமிரு வேணாம் நேத்ரா”

“இது திமிருனா நான் திமிராவே இருந்துட்டு போறேன்” என்றவள் ஒரு நிமிடம் இடைவெளி விட்டு “அப்படி நான் அங்க போகணும்னு ஆசப்பட்டா பொணமா தான் போவேன். அங்க போனா நான் செத்து தான் போவேன். அதை இங்கேயே பண்றேன்” என விரக்தியின் உச்சத்தில் அவள் கூறி விட்டு செல்ல அமுதா விக்கித்துப் போய் நின்றாள்.

கோவையில் இருந்து அடுத்த 2 நாட்களில் போன் வர நேத்ராவோ போக மாட்டேன் எனப் பிடிவாதமாக நின்றாள்.

கிட்டத்தட்ட ஓரிரு மாதங்கள் இதே நிலையில் செல்ல அன்று வீட்டின் காலிங்பெல் அடிக்க யாரோ எனக் கதவை திறந்த அமுதா, சந்திரன் குடும்பத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தவள் மலர்க்கொடிக்கு போன் செய்து அவளைக் கூப்பிட்டவள் வாசவனையும் வர சொன்னாள்.

அப்பொழுது நேத்ரா வெளியே சென்றிருக்க அவளையும் போன் செய்து வர சொன்னவள் அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் திணறினாள்.

“என்ன நினைச்சிட்டு இருக்கா உங்க பொண்ணு? எத்தனை முறை கூப்டாலும் வர மாட்டாளாமா?” என மைதிலி ஆரம்பிக்க

“இல்லைங்க. அவ பயப்படறா”

“யார்? அவ பயப்படுறாளா? நம்பற மாதிரி சொல்லுங்க. அத்தைனையும் நடிப்பு. ஒரு வேலை செய்யத் தெரியறதில்ல”

“ஏங்க இப்படிப் பேசறீங்க? நீங்க அடிக்கறீங்கனு தான் அவ வர மாட்டேங்குறா” என அமுதா சொல்ல

“லைட்டா ஒரு அடி வெச்சா உங்க பொண்ணு அடிக்கறோம்னு சொல்லுவாளா?” என மைதிலி சொல்ல அமுதாவும், நேத்ராவும் திகைத்துப் போய்ப் பார்த்தனர்.

‘ஓ… அடிக்கறதும் அடிச்சிட்டு இப்படி ஒரு விளக்கமா?’ என நேத்ரா யோசிக்க

“நீங்கதான் அடிக்க மாட்டோம்னு கோயில்ல சத்தியம் பண்ணீங்க. நீங்க அதுக்கு அப்புறம் அடிக்காமலா இருந்தீங்க?”

அமுதா மேற்கொண்டு ஏதோ சொல்ல வர, “ம்மா ஒரு நிமிஷம்” என்றவள் மைதிலியை பார்த்து

“நான் அங்க வர மாட்டேன்” என உறுதியாகச் சொல்ல

‘அங்க வாயே தொறக்க மாட்டா. இங்க அம்மா வீட்ல இருக்கோம்னு தைரியம் வந்துருச்சு போல’ என யோசிக்க

“ஏன் உன்னை கரெக்டா சாப்பிடுனு சொல்லி கவனிச்சிக்கிட்டேன் இல்ல? அதுக்காக இப்படி சொல்றியா?”

“விடு மீ. இவளுக்கு உடம்பு பூரா விஷம். இவகிட்ட ஏன் கெஞ்சிட்டு இருக்கீங்க?” எனச் சந்திரன் சொல்ல பொங்கி எழுந்தாள்.

“என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? என்னைக்காவது நீங்க எங்கிட்ட மனசு விட்டு பேசிருக்கீங்களா? பேச வந்தவளை தான் என்னனு கேட்டு இருக்கீங்களா?”

“தெரியாம தான் கேட்கறேன். இத்தனை நாளா உங்கம்மா பத்தி உங்ககிட்ட ஏதாவது சொல்லிருக்கேனா?”

“உங்க தங்கச்சி கிட்ட அன்னைக்கு டீ குடிக்க எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? நான் கேட்கறப்ப எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு நீங்க வந்ததுக்கு அப்புறம் அப்படியே ஆக்ட் பண்ணாங்க. இது ஏதாவது தெரியுமா உங்களுக்கு? சொல்ல தான் விட்டீங்களா?”

“ஃபர்ஸ்ட் எனக்கு ஒரு டவுட். உங்களுக்கு என் மேல் தான கோபம்? என்கிட்ட ஸ்ட்ரெயிட்டா பேச வேண்டியது தானே?”

“எப்போ பார்த்தாலும் இவங்க என்ன சொல்றாங்களோ அது படி தான் கேட்கறீங்க? நீங்க சுயமா யோசிக்க மாட்டிங்களா?”

“உங்கம்மா ரத்தம் வர அளவுக்கு அடிச்சாங்க தானே? அப்போ கூட வீட்ல சொன்னா பயந்துப்பாங்கனு அமைதியா தான இருந்தேன். தப்பு தான். அப்பயே போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தா நாங்க எவ்ளோ நிம்மதியா இருந்திருப்போம். நான் விஷம் தான்” எனச் சொல்ல அவர்கள் கோபம் இன்னும் அதிகமாகியது.

“பொய் சொல்லாத நேத்ரா. நீயா செவுத்துல போய் இடிச்சிகிட்டு என்ன சொல்றியா? இப்படி அபாண்டமா பழி போடறியே?” என மைதிலி அழ அவளது நடிப்பில் இவர்கள் திகைத்தனர்.

“யார் பொய் சொல்றா? பொய் சொல்றது, நடிக்கறதெல்லாம் உங்க குடும்பத்துக்குத் தான் வரும்” என்றவள் சந்திரனை பார்த்து

“நான் உங்ககிட்ட பர்த்டே அன்னைக்குச் சொல்லிட்டு போலன்னு தான் பிரச்சனை. நான் எப்படி இருக்கேன்னு ஒரு நிமிஷமாவது யோசிச்சீங்களா?”

“வருவீங்க. உங்க வீட்ல எல்லாருகிட்டயும் பேசுவீங்க. இத்தன நாள்ல நீங்க வீட்டு சம்பந்தமா ஒரு விஷயமாவது எங்கிட்ட பேசிருக்கீங்களா?”

“சும்மா பேசல பேசலன்னா. ஏதாவது என்கிட்ட கம்யூனிகேட் பண்ணிருக்கீங்களா? இல்ல என்னை எந்த விஷயத்தையும் சொல்ல விட்ருக்கீங்களா?”

“சும்மா எப்ப பார்த்தாலும் வேலை செய்யலேனு சொல்றீங்க? அதிகபட்சம் உங்களுக்குக் காலைல சாப்பாடு செஞ்சு கொடுத்ததில்லை. நைட் நான் தானே செஞ்சேன்?”

“மத்தபடி எல்லா வேலையும் ஸ்லோவா பண்ணா கூடச் செய்யாம இருந்ததில்ல”

“இப்போ ஆறேழு மாசம் தோபி வரலனு நானே தானே துவைச்சேன். என்ன வேலை செஞ்சாலும் தப்பு கண்டுபிடிக்கணும்னு மைன்ட்ல வச்சிட்டு இருந்தா என்னால ஒண்ணும் பண்ண முடியாது”

“ஏய் அவன் ஏதாவது தலைவலின்னு படுத்தா கூட ஒரு வார்த்த கேட்டது கிடையாது. நீ இவ்ளோ பேச்சு பேசுறியா?”

“ஆமா. நான் அப்படி தான் பேசுவேன். நார்மலா ஏதாவது அவரு பேசியிருந்தா எனக்கு அவருக்கு ஏதாவது பண்ணலாம்னு தோணியிருக்கும். அவர்கிட்ட சாதாரணமா 10 வார்த்த பேசலாம்னு போனா கூட 2 வார்த்தைலயே முடிஞ்சிடும்”

“எப்போ பார்த்தாலும் அவன்கிட்ட சிரிச்சு பேசுன்னா? உங்க பையன் என்னைக்காவது எனக்குப் போன் பண்ணியிருக்காங்களா?”

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page