அத்தியாயம்- 1
மெத்தையில் இருந்து கண்விழித்தவளுக்கு தலைவலி அதிகமாகவே இருந்தது.
எழுந்து அமர்ந்தவள் தலையை இருக்கரத்தாலும் தாங்கிக் கொண்டு இருக்கால்களிலும் கைகளை அழுத்தியபடி அப்படியே குனிந்து இருந்தவளுக்கு மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் சிந்தியது.
கலங்கிய நயனங்களோடு இமைகளை திறந்தவள் நேத்திரத்தில் முதலில் விழுந்தது என்னவோ அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த புது மஞ்சள் கயிற்றில் தான்.
அதை பார்க்க பார்க்க அவளுக்குள் ஆத்திரம் பல மடங்கு அதிகரித்தது.
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக அல்லவா அவள் கழுத்தில் இந்த தாலியை கட்டி இருக்கிறான் அவன்.
மறுக்க மறுக்க தன் கழுத்தில் ஏறிய தாலியை அறுத்து போட அவளுக்கு ஒரு கணம் போதும்.
ஆனால் அவளால் அதை செய்ய முடியவில்லை. தாலியில் கரத்தை வைத்தாலே கரங்கள் நடுக்கம் எடுக்கிறது அல்லவா. இல்லை இல்லை அவன் அல்லவா நடுக்கத்தை கொடுத்து இருந்தான்.
தாலியை அறுத்து போடும் எண்ணத்தையே மொத்தமாக அவன் அவள் மனதிலிருந்து நீக்கி இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
“என்னடா தாலி கட்டிட்டா வழக்கமான பொண்ணுங்க போல புல்லானாலும் புருஷன் கல்லானாலும் கணவன்னு இருப்பேன்னு நினைச்சியா? இது ஜஸ்ட் எனக்கு ஒரு கயிறு தான். அறுத்து போட ஒரு நிமிஷம் போதும்” என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் கயிற்றில் கையை வைத்தவளின் கரம் ஒரு கணம் அப்படியே உறைந்து போய் நின்றது அவள் கழுத்தில் அழுத்திக் கொண்டு இருந்த கத்தியின் கூர்மையால்.
ஆம் அவன் தான் அவள் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியபடி நின்று இருந்தான்.
அதிர்ந்த விழியோடு தன் முன்னே கனலோடு நின்று இருந்தவனை பார்த்ததுமே பெண்ணவளின் கரம் தானாக நடுக்கம் கொள்ள, நடுங்கிய கரத்தை பார்த்தவன் இளக்காரமாக புன்னகைத்து விட்டு,
“அந்த பயம் இருக்கணும். நீ எப்போ நான் கட்டின தாலியை அறுத்து போடுறீயோ. அப்போ நான் உன் கழுத்தை அறுத்து போட்டு போயிட்டே இருப்பேன்டி. போனா போகட்டும் இப்போ தானே தாலியை கட்டி இருக்கோம். கொஞ்சம் சாஃப்ட்டா நடந்துக்கலாம்னு நினைச்சி முடிக்கிறதுக்குள்ள அதெல்லாம் தப்புனு புரிய வச்சிட்ட” என்று கூறியவன் பிடித்து இருந்த கத்தியாலே தாலியில் இருந்த அவள் கரத்தை விலக்கி விட்டபடி,
“இங்க பாரு காவேரி. இப்போ இருந்து, நீ தான் எனக்கு பொண்டாட்டி. நான் தான் உனக்கு புருஷன். என் பொண்ணுக்கு நீதான் அம்மா. சோ அதுக்கு ஏத்தது போல நடந்துக்கணும். என்னை மீறி ஏதாவது பண்ணனும்னு நினைச்சேன்னு வை, இப்போ உன் கழுத்துல வச்ச கத்தியை” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவள் கழுத்தில் கத்தியை வைத்தவன் அடுத்த கணம், அங்கே அருகில் அதிர்ச்சியில் நின்று இருந்த அவள் தோழியின் கழுத்தில் அடுத்த நொடி கத்தியை மாற்றி பிடித்து அழுத்தி இருந்தான் விஜய்வர்மா.
தன் கழுத்தில் கத்தியை வைத்ததும் அவள் பேரதிர்ச்சியாக, அதிர்ந்த விழியோடு தன் தோழி காவேரியை தான் பார்த்தாள் இந்து.
அவளுக்கோ அதுவரை இருந்த தைரியம் குறைய, “விஜய்…” என்று சொல்லிக் கொண்டே ஒரு அடி முன்னே வர,
“என்னடி” என்று கேட்டபடி அவளை உறுத்து விழித்தான் விஜய்.
“விஜய் இது நல்லா இல்ல சொல்லிட்டேன். அவ ரொம்ப பாவம் அவளை விட்ரு. உனக்கு தேவை நான் தானே” என சொல்லியவளை இடைமறித்த விஜய்,
“ச்சே ச்சே… எனக்கு எதுக்குடி நீ தேவை? எனக்கு தேவைனா உன்னை விட ஆயிரம் அழகிங்க இருக்காங்க. பட் என் பொண்ணுக்கு தான் உன்னை ரொம்ப பிடிச்சி இருக்கு. அதான் வேற வழியே இல்லாம போயும் போயும் உன்னை கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சி” என்று சொன்னவனோ அங்கே இருந்த தன் ஆட்களிடம் இந்துவை தள்ளி விட்டு,
“இவளை அழைச்சிட்டு போய் நம்ம இடத்துல அடைச்சி வைங்க. காவேரி மேடம் ஏதாவது வம்பு பண்ணாங்கனா இந்துவை ஒரே போடா போட்டுடுங்க” என்று சொன்னதை கேட்டு “ஓகே பாஸ்” என்றவர்கள் காவேரியின் உயிர் தோழியான இந்துவை அங்கே இருந்து அழைத்துச் சென்றனர்.
இந்துவோ காவேரியை பயத்துடன் பார்த்தபடி அவர்கள் இழுப்புக்குச் சென்றாள்.
காவேரியோ தோழியின் பின்னால் ஓட எத்தனித்தவளின் மணிக்கட்டை கெட்டியாக பிடித்தவன் “எங்கடி செல்லம் போற. நீ இப்போ போக வேண்டியது இந்துவை தேடி இல்ல. என் பொண்ணை தேடி” என்று சொன்னவன் கோபத்தில் தீயாய் நின்று இருந்தவளை ஆழமாக பார்த்துக் கொண்டே “நம்ம வீட்டுக்கு போலாமா? உன் பொண்ணை தேடி” என்றவன் அவள் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டுச் சென்றான்.
அவளோ அவன் கரத்தை விடுவிக்க முயன்று தோற்று போக, அவளை காரினுள் தள்ளி காரை லாக் செய்தான்.
காவேரியோ காருக்குள் ஏறிய கணம் கார் கதவை திறக்க முயல. விஜயோ கார் கீயை தூக்கி காட்டி ஆட்டினான்.
அவனை வெறுப்பாக பார்த்த காவேரிக்கு நிலைக் கொள்ள முடியவில்லை. கனவில் கூட நினைத்து பார்க்காத அனைத்தும் இப்பொழுது அவள் வாழ்க்கையில் நடந்துக் கொண்டு அல்லவா இருக்கிறது.
அந்நேரம் அறைக்குள் அழுத்தமான காலடி சத்தம் கேட்க, நினைவுகள் தடைப்பட அந்த பாத சுவட்டின் சத்தத்திற்கு சொந்தமனவனை அமர்ந்து இருந்தபடியே ஏறிட்டு பார்த்தாள்.
பார்த்தவளின் கருவிழிகள் அதிர்ந்து விரிந்து சுருங்கியது.
பின்னே குளித்து முடித்து விட்டு ஈரம் சொட்ட சொட்ட இடுப்பில் வெறும் பூந்துவாலையை மட்டும் கட்டிக் கொண்டு வருபவனை பார்த்தால் அவளுக்கு அதிர்ச்சியாக தானே இருக்கும்.
சட்டென தலையை கவிழ்த்துக் கொண்டவளோ “கண்றாவி பிடிச்சவன் எப்படி வந்து நிக்கிறான் பாரு. என்னை பாரு என் அழகை பாருனு வந்து ஷோ காட்டிக்கிட்டு இருக்கான்” என்று வெளிப்படையாகவே முணுமுணுத்தவளோ கண்களை இறுக்க மூடிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
அவள் புலம்பியதை காதில் வாங்கிய விஜயோ “இதோ பாருடா” என்று நக்கலாக சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றவன் குனிந்து இருந்தவளின் முதுகில் தன் தலைமுடியிலிருந்து விழும் தண்ணீரை ஆட்டை போல் தலையை ஆட்டி பன்னீர் அபிஷேகம் செய்ய,
ஜாக்கெட்டின் மீது ஈரம் விழவும் பதறி போய் எழுந்த காவேரி தன் முன் விஜய் நிற்பதை கவனிக்காமல் அவன் வெற்று மார்பில் முட்டிக் கொண்டு அப்படியே பின்னால் சரிய போனவளின் இடையை பிடித்து தாங்கியவனோ,
“ஏன்டி நான் ஆணழகன் தானே? என்னோட இந்த பாடியை பார்த்து மயங்காத பொண்ணுங்க இல்லை. அதிலும் காலேஜ் டைம்ல” என்று சொல்லிக் கொண்டே போனவனின் காலில் பட்டென்று மிதித்தாள் காவேரி.
அதில் அவன் காவேரியை பிடித்து இருந்த பிடியை விட, அவளோ அப்படியே பின்னால் மெத்தையில் விழ, விஜயும் நிலைதடுமாறி அவள் மீதே விழுந்து இருந்தான்.
இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவன் மொத்த பாரத்தையும் தாங்கிய காவேரிக்கு மிகவும் சங்கடமாகி போய் விட, விஜயின் விழிகளை கெஞ்சுதலாக பார்த்தாள்.
விஜய்க்கோ சட்டென்று தன் உணர்வுகள் தட்டி எழும்ப, அவள் இதழ்களை பார்த்தபடி எச்சிலை கூட்டி முழுங்கியவன் கருவிழிகள் மெல்ல நகர்ந்து, படபடக்கும் மங்கையின் நயனங்களோடு பார்வையை கலக்க விட்டவன், அவளின் கெஞ்சுதல் அவனுக்குள் என்னவோ செய்ய, மெதுவாக அவளிடமிருந்து தள்ளி போனான்.
அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட காவேரி அடுத்த நொடி குளியலறைக்குள் நுழைந்து இருந்தாள்.
‘எருமைமாட்டு பையன். என்ன கனம் கனக்கிறான். ஒரு நிமிஷம் மூச்சே அடைச்சிக்கிச்சு’ என்று மனம் விஜய்க்கு திட்ட, மூளையோ ‘உண்மையை சொல்லு உனக்கு மூச்சு அடைச்சதற்கான காரணம் அவனோட எடையா இல்ல…’ என்று இழுத்து நிறுத்த,
மனமோ ‘ச்சீ தப்பு தப்பா யோசிக்காத’ என்று சொல்லிக் கொண்டது.
‘ஆளு பார்க்க குண்டாவும் இல்ல. ஆனா எப்படி இம்புட்டு கனமா இருக்கான். ஒரு நிமிஷம் என் பிராணமே போச்சி’ என்று புலம்பியது.
விஜயோ பெருமூச்சி ஒன்றை விட்டவன், “இப்படி விழுந்துட்டியேடா விஜய்” என்று தன் நெஞ்சின் மீது கையை வைத்து தடவியவனுக்கு அவள் மீது இருந்த வந்த புதுவிதமான வாசத்தை நினைவு கூர்ந்துக் கொண்டான்.
“பச்சைக்கிளி எங்கே போயிட போகுது. கூண்டுக்குள்ள தானே சிக்கிட்டு தவிக்க போகுது. அப்போ அந்த தவிப்பை அடக்கிடலாம்” என்று சொல்லிக் கொண்டே ஆயத்தமாகி விட்டு வெளியேச் சென்றான்.
கதவு மூடும் சத்தம் கேட்டதும் காவேரி மெதுவாக தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தவளுக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது.
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் அங்கே தன் உடை பெட்டி இருப்பதை பார்த்தவளுக்கு யோசனை தோன்ற, ‘எப்படியும் அந்த பைத்தியக்காரன் தான் எடுத்து வந்து வச்சி இருக்கணும்’ என்று நினைத்தவள் மாற்று உடையை எடுத்துக் கொண்டு மீண்டும் குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
குளித்து முடித்து தயாராகி இருந்தவளுக்கு இப்பொழுது வெளியே போவதா வேண்டாமா என்ற யோசனை.
